Sep 15, 2014

உணவு யுத்தம்!-34,35,36,37

உணவு யுத்தம்!-37

மேற்கத்திய உணவு வகைகளின் வருகையால் இந்திய உணவுப் பண்பாடு சீர்கெட்டுப் போய்விட்டது என்று சொல்கிறீர்களே, மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் என்ன சாப்பிட்டார்கள், சங்ககாலத் தமிழ் மக்கள் என்ன உணவு வகைகளை உட்கொண்டார்கள், அதைப்பற்றிச் சொல்லுங்கள் என்று ஒரு வாசகர் தொலைபேசியில் கேட்டார்.
அதைத் தெரிந்துகொள்வதில் ஏன் இத்தனை ஆர்வம்? என்றேன்.
”நான் படித்த வரலாற்றுப் புத்தகங்கள் எதிலும் எந்த மன்னரும் என்ன சாப்பிட்டார் எனக் குறிப்பிடப்படவில்லை. யுத்தகளத்தில் எப்படி உணவு சமைத்தார்கள், அக்பர் காலத்தில் அன்றாட உணவாக என்ன சாப்பிட்டார்… அசோகனின் காலை உணவு என்ன… அலெக்சாண்டர் இந்தியப் படை எடுப்பின்போது கிரேக்க உணவுகளைத்தான் சாப்பிட்டாரா… என எதுவும் தெரியாது. இவ்வளவு ஏன் தாஜ்மகாலை கட்டிய வேலையாட்கள் என்ன சாப்பிட்டார்கள், அவர்களுக்கு யார் சமைத்தவர் இப்படி எனக்குள் நிறைய கேள்விகள் இருக்கின்றன. பதில் தேடியும் கிடைக்கவில்லை” என்றார்.
உணவின் வரலாற்றை அறிந்துகொள்வதில் அவருக்கிருந்த ஆர்வம் எனக்கு சந்தோஷம் அளித்தது. பசிக்கு உணவு கிடைத்தால்போதும் என்ற நிலையில் இருந்து உணவின் அடிப்படை அம்சங்கள் குறித்தும், அதன் பண்பாட்டு வரலாறு குறித்து சிந்திப்பதும் அறிந்துகொள்ள நினைப்பதும் விழிப்பு உணர்வின் முதல் அடையாளங்கள் என்றே சொல்வேன்.
இந்திய சமூகம் உணவை ஒருபோதும் உடலை வளர்ப்பதற்கான காரணியாக மட்டும் கருதவில்லை. மாறாக உணவு இங்கே அன்பாக, அறமாக, அந்தஸ்தாக, அதிகாரமாக, அரசியலாக, புனிதமாக, சாதி, மத, இன அடையாளங்களாக, என பல்வேறு படிநிலைகளில் அறியப்பட்டிருந்தன. உணவை யார் எப்போது எப்படி எதை சாப்பிட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள், நியதிகள், ஒடுக்குமுறைகள் இருந்தன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றுபோல உணவு தரப்படவில்லை. எந்த உணவுகளைப் பெண்கள் விலக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருந்தன.
உணவில் விஷம் கலந்து தருவது, உணவைப் பறிப்பது, உணவு தரமறுப்பது தண்டனையாகக் கருதப்பட்டது. நோன்பிருத்தல், ருசிமிக்க உணவுகளை விலக்குதல், யாசித்து உணவு பெறுதல் முதலியன துறவிகளின் அடையாளமாகக் கருதப்பட்டன, நோயாளிகள், பிரசவித்த பெண்கள், தூரதேசம் போகிறவர்கள், குற்றவாளிகளுக்கு எனத் தனித்த உணவு வகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்திய உணவின் பண்பாடு அதன் சமூகக் கட்டமைப்புடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.
சிந்துவெளிப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றி உறுதியாக அறிந்து கொள்வதற்கான சான்றுகள் இன்றுவரை கிடைக்கவில்லை.
1922-ம் ஆண்டுவரை, வேத கால நாகரிகமே ‘இந்தியாவின் தொல் பழங்கால நாகரிகம்’ எனக் கூறப்பெற்று வந்தது. ஆனால், 1922-ம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறையினர் சிந்து மாநிலத்தில் மொகஞ்சதாரோ என்னும் இடத்தில் அகழ்வாராய்ச்சி நிகழ்த்தினர். அதன்வாயிலாக, புதையுண்டிருந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல மேற்குப் பஞ்சாப் மாநிலத்தில், ‘ஹரப்பா’ என்னும் நகரம் புதைந்து கிடப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.  இப்புதையுண்ட நகரங்களைப் பற்றிய செய்திகளை ஜான் மார்ஷல், சர்.மார்டிமர் வீலர் போன்ற தொல்லியல் அறிஞர்கள் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு சிந்துசமவெளி நாகரிகம் பற்றிய உண்மைகளை உலகம் அறியச் செய்தனர். ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலோ போன்ற அறிஞர்கள் சிந்துசமவெளி பற்றிய அறியப்படாத உண்மைகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
சிந்துவெளியில் காணப்படும் வீடுகளில் தனி சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறை முதலியன இடம் பெற்றிருந்தன. மொகஞ்சதாரோ, ஹரப்பா இரண்டிலும் மிகப்பெரிய தானிய சேமிப்புக் கூடங்கள் இருந்திருக்கின்றன, காற்றோட்டமான 27 தானிய சேமிப்புக் கிடங்குகள் மொகஞ்சதாரோவில் இருந்ததாகக் கூறுகிறார்கள்,
தானியங்களை ஏற்றிவந்த வண்டிகள் நேரடியாக சேமிப்புக் கூடங்களில் தானியங்களை கொட்டுவதற்கான மேடை போன்ற வசதிகளும் இருந்திருக்கின்றன, விளைச்சலின்போது தானியங்களை சேகரித்து வைத்துக் கொண்டு பின்னாளில் விநியோகம் செய்யும் முறை நடைமுறையில் இருந்திருக்கிறது என்பது வியக்கத்தக்க ஒன்றே.
இதுபோலவே ஹரப்பா நாகரிகத்தின் கடைசி அத்தியாயமாகக் கருதப்படும் லோத்தல் துறைமுகத்திலும் தானிய சேமிப்புக் கிடங்குகளும் காப்பறைகளும் இருந்திருக்கின்றன. அளவில் மிகப் பெரியதாக இருந்த இந்தக் கிடங்குகள் தீப்பற்றி எரிந்து போனதன் மீதமான அடையாளங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
இதுபோலவே தானியங்களை அரைக்கும் கல்திருகைகள் மொகஞ்சதாரோவில் கண்டறியப்பட்டுள்ளன. லோத்தலில் தந்தூரி அடுப்பு போன்ற சுடு அடுப்புகள் காணப்படுகின்றன. கலிம்பாங் பகுதியில் உள்ள விளைநிலங்களை ஆராயும்போது முதன்முதலாக இந்தியாவில் நிலத்தை உழுது விவசாயம் செய்திருப்பதை அறியமுடிகிறது.
மொகஞ்சதாரோவில், இன்று கிடைத்துள்ள சான்றுகளை வைத்துப்பார்க்கும்போது ஆடு, மாடு, மீன், கோழி, ஆமை, பறவை, ஆற்று நண்டு ஆகியவை உண்ணப்பட்டிருக்கின்றன.
கோதுமையும் பார்லியும் முக்கிய தானியங்களாக இருந்திருக்கின்றன, அரிசி லோத்தல் மற்றும் குஜராத்தின் சில இடங்களில் விளைவிக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. தினையும் சோளமும் குதிரைவாலியும் சில இடங்களில் விளைவிக்கப்பட்டிருக்கின்றன. பாசிப்பருப்பும் உளுந்தும் உணவுப் பொருள்களாக இருந்திருக்கின்றன. தாவர எண்ணெய்களும் மிருகங்களின் கொழுப்பில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பழங்களும் காய்கறிகளும் உணவில் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மொகஞ்சதாரோவில் நல்லெண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டதாக உணவியல் அறிஞர் கே.டி. ஆசயா குறிப்பிடுகிறார்.
ஹரப்பாவில் மண்பாத்திரங்கள் சமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வசதியானவர்கள் உலோகப் பாத்திரங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். அறுவடைக்கான விவசாயக் கருவிகள் சில அகழ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளன. மொகஞ்சதாரோ, ஹரப்பாவுக்கு அந்நிய நாடுகளுடன் வணிகரீதியான உறவு இருந்த காரணத்தால் கிரேக்கம் மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்தும் உணவுப் பொருட்கள் அறிமுகமாகியிருக்கின்றன. சுமேரியாவுக்கு இந்தியாவில் இருந்து எள் கொண்டுபோகப்பட்டிருக்கிறது.
பார்லி உலகில் ஐந்தாவது அதிகம் பயிரிடப்படும் தாவரமாகும். அதிக குளிர் தாங்கும் சக்தி இதற்கு உண்டு. நூறு கிராம் பார்லியில் 54.4 சதவிகிதம் நார்ச்சத்து உள்ளது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க இது உதவும். பார்லியில் உள்ள ‘பீட்டா குளுகான்’ எனும் நார்ப் பொருள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைப் பித்தநீருடன் கலந்து, கழிவுப் பொருட்களுடன் சேர்த்து அகற்றிவிடுகிறது. இந்தியாவில் பார்லி இன்று வரை முக்கிய உணவுப் பொருளாகவே இருந்து வருகிறது.
‘ராகி’ எனப்படும் கேழ்வரகின் தாயகம் உகாண்டா. ஆப்பிரிக்காவில் இருந்து மனித  இடப்பெயர்வின்போது ராகியை இந்தியாவுக்குக் கொண்டுவந்திருக்கக் கூடும் என்கிறார்கள். கி.மு 1800-ல் ராகி இந்தியாவில் உணவுதானியமாக இருந்திருப்பதை அகழ்வாய்வுகள் நிரூபணம் செய்கின்றன.
மொகஞ்சதாரோவில் கிடைத்துள்ள எலும்புக்கூடுகளின் பற்களைப் பரிசோதனை செய்து பார்க்கும்போது ஆண்களைவிடப் பெண்கள் மிகக் குறைவாக உணவு உட்கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளமுடிகிறது.
உணவுப் பண்பாடு என்ற கட்டுரையில் தமிழ் அறிஞர் அ.கா.பெருமாள் ஹரப்பா நாகரிக காலகட்ட உணவு வகைகள் பற்றித் தெளிவாக விளக்கிக் கூறியிருக்கிறார். இந்தியாவின் தொன்மையான ஹரப்பா நாகரிக காலத்திலிருந்தே உணவு பதப்படுத்தும் முறை ஆரம்பித்துவிட்டது. ஹரப்பா அகழாய்வில் களிமண் கருவிகளும் தானியங்களை அரைக்கும் கல் இயந்திரங்களும் அம்மி போன்ற அமைப்புடைய கல்கருவியும் கிடைத்துள்ளன. இந்தக் காலத்தில் மாதுளம்பழம் வழக்கத்தில் வந்துவிட்டது. ஆமை, மீன் போன்றவற்றையும் மாட்டிறைச்சியையும் உண்டிருக்கின்றனர். ஹரப்பாவின் ஆரம்பகால நாகரிகத்தை அடுத்த காலகட்டத்தில் பார்லி தானியம் பழக்கத்தில் வந்துவிட்டது.  குஜராத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கி.மு. 1000-த்தில் அரிசி பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
கர்நாடகா பிரம்மபுரிப் பகுதியில் உணவு தயாரிப்பதற்குரிய கருவிகள் கிடைத்துள்ளன. கி.மு.2000 அளவில் நாகார்ஜுனா பகுதியில் பால்பதப்படுத்தப்பட்டு உண்டதையும் இறைச்சி சமைக்கப்பட்டு உண்டதையும் அகழ்வாய்வு ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
‘ஆரம்ப காலத்தில் அரைகுறையாகச் சமைக்கப்பட்ட உணவுகள் ஊட்டச்சத்து மிக்கவை என்ற நம்பிக்கை இருந்தது.  பிற்காலத்தில் இதைக் குறிப்பதற்கான ‘சிக்கா’ என்ற சொல்லும் முழுதும் சமைக்கப்பட்டது என்பதைக் குறிக்க ‘பக்கா’ என்ற சொல்லும் பயன்பட்டன’ எனக் கூறுகிறார்
தமிழர் உணவுப் பண்பாடு பற்றி கூறும் தமிழறிஞர் தொ.பரமசிவன், சங்க இலக்கியத்தில் மிளகு, நெய், புளி, கீரை, இறைச்சி, கும்மாயம் பற்றிய உணவுக் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. பக்தி இயக்கத்தின் எழுச்சியோடு தமிழர் உணவு வகையில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. லட்டு, எள் உருண்டை, அப்பம் போன்றவற்றைப் பெரியாழ்வார் தம் பாடலில் குறிப்பிடுகிறார். சோழர் காலக் கல்வெட்டுக்களில் சர்க்கரைப் பொங்கல், பணியாரம் ஆகிய உணவு வகைகள் பேசப்படுகின்றன.
‘காய்கறி’ என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும். அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காகக் கறுப்பு மிளகினை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இறைச்சி உணவுக்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே ‘கறி ‘ எனப் பின்னர் வழங்கப்பட்டது.
‘நாயக்க மன்னர்களின் காலத்தில் அவர்களால் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட இந்தி பேசும் மக்கள் புதிய இனிப்பு வகைகளை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினர். அதன் அடையாளமாகவே லாலா, மிட்டாய் என்ற சொற்களை காணமுடிகிறது” என்கிறார்.
அ.தட்சிணாமூர்த்தி தனது ‘தமிழர் நாகரிகமும் பண்பாடும்’ என்ற நூலில் ‘பண்டைய தமிழரின் உணவு’ பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். பண்டைய தமிழகத்தில் ஊன் சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெய்ச்சோறு, புளிச்சோறு,  பாற்சோறு,  வெண்சோறு என பலவிதமாக சோறு உண்ணப்பட்டிருக்கிறது.
நெல் அரிசி, வரகு அரிசி, தினை அரிசி, புல் அரிசி, மூங்கில் அரிசி ஆகியவை உணவுக்காகப் பயன்படுத்தப்பட்டன. உடும்புக்கறி, விறால்மீன் குழம்பு, கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, மாதுளங்காய், மிளகுப்பொடி, கறிவேப்பிலை பொரியல், ஊறுகாய் எனப் பலதரப்பட்ட உணவு வகைகள் இருந்ததை இலக்கிய சான்றுகளோடு அ.தட்சிணாமூர்த்தி விவரிக்கிறார்.

உணவு யுத்தம்!-36

தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் சாலைகளில் பயணம் செய்யும்போது தரமான உணவகங்கள், அதுவும் குறைந்த விலையில் கிடைப்பதைக் கண்டிருக்கிறேன். கர்நாடகாவில் நான்கு பேர் பயணம் செய்தோம். காலை உணவுக்கு உடுப்பி அருகில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்றோம். தோசை, அடை, பொங்கல், வடை என சாப்பிட்டோம். நான்கு பேர்கள் சாப்பிட்ட மொத்த பில் 96 ரூபாய்.
ஓர் ஆளுக்கு காலை உணவுக்கு இருபத்தைந்து ரூபாய்கூட செலவில்லை. இதே உணவை சென்னையில் சாப்பிட்டிருந்தால் குறைந்த பட்சம் 600 ரூபாய் பில் வந்திருக்கும். இதே நிலைதான் வடஇந்தியாவிலும் காலை உணவுக்கு அதிகபட்சம் முப்பது ரூபாய்க்கு மேல் ஒருநாளும் செலவானதில்லை. அதே சமயம், வடமாநிலங்களில் உள்ள தென்னிந்திய உணவகங்களில் சாப்பிடப் போய்விட்டால் தமிழகத்தைப்போல இரண்டு மடங்கு வசூல் செய்துவிடுகிறார்கள். டெல்லியில் உள்ள பிரபல தென்னிந்திய உணவகத்தில் ஒரு தோசை விலை ரூ.300. அதற்கும் காத்துக்கிடக்க வேண்டும். உணவை விற்பதில் ஏன் இந்த பேதம், ஏமாற்றுத்தனம்.
தமிழக சாலையோரக் கடைகளில் தரமான உணவும் கிடைப்பதில்லை, விலையும் மிக அதிகம். குடும்பத்துடன் பயணம் செய்கிறவர்கள் சென்னையில் இருந்து மதுரை போய் சேருவதற்குள் 1500 ரூபாய் உணவுக்கு செலவிட வேண்டிய நிலை உள்ளது. பகல் பயணத்தில் உணவு கிடைப்பது ஒருவித கொள்ளை என்றால் இரவு பயணத்தில் கேள்வியே கிடையாது. அதுவும் புறவழிச் சாலைகளில் சைவ உணவகங்கள் இரவு பத்து மணியோடு மூடப்பட்டுவிடுகின்றன என்பதால், சாலையோர அசைவ உணவகங்களில் கொள்ளை விலையில் உணவை விற்கிறார்கள். அந்த உணவு சாப்பிட்ட அரைமணி நேரத்தில் வயிற்று வலியை உண்டாக்கக்கூடியது. குழந்தைகளால் அவற்றைச் சாப்பிடவே முடியாது.
இரவு பயணத்தில் சாலையோர பரோட்டாக்களைப் போல மனிதர்களை தண்டிக்கக் கூடிய உணவு எதுவுமில்லை, ஆனால், எதைப்பற்றியும் கவலையில்லாமல் மக்கள் பின்னிரவு மூன்று மணிக்கும் பரோட்டாவை பிய்த்துப்போட்டு கருஞ்சிவப்பு சால்னாவை ஊற்றி அள்ளி அப்புகிறார்கள். பசிதான் அதற்குக் காரணம் எனச் சொல்ல முடியாது.
‘ஒரு ஜான் வயிறே இல்லாட்டா…
இந்த உலகில் ஏது கலாட்டா?
உணவுப் பஞ்சமே வராட்டா…
நம்ம உயிரை வாங்குமா பரோட்டா?’ என்ற பாடலை 1951-ல் வெளியான ‘சிங்காரி’ படத்தில் காக்கா ராதாகிருஷ்ணன் – ராகினி ஜோடி ஆடிப்பாடுவார்கள். பாடலை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்பாக ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தில் தமிழகத்துக்கு மைதா மாவு அரசாங்கத்‌தால் அறிமுகம் செய்யப்பட்டு அதிலிருந்து பரோட்டா சாப்பிடும் பழக்கம் உருவானது என்கிறார்கள். இன்றைக்கு தமிழகத்தில் ஒருநாள் பரோட்டா கிடைப்பது நின்று போனால் பெரிய போராட்டங்களும் கொந்தளிப்புகளும் உருவாகிவிடும். எந்த ஊருக்குப் போனாலும் இரவு உணவகக் கடைகளில் பரோட்டா சக்கைப்போடு போடுகிறது. தமிழர்களின் முக்கிய இரவு உணவு இன்று பரோட்டாதான். நல்லவேளை அதை வீட்டில் தயாரிக்க இன்னமும் பழகவில்லை.
இந்தியா மட்டுமின்றி வங்காளதேசம் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, என எங்கும் பரோட்டா சாப்பிடும் பழக்கமிருக்கிறது. பரோட்டா சாப்பிட்டால், உடல் நலத்துக்குக் கேடு. சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என நோய்கள் வரக்கூடும் என்கிறார்கள் டயட்டீஷியன்கள். காரணம் பரோட்டா, முழுக்க முழுக்க மைதாவால் செய்யப்படும் உணவு. அத்துடன் அதற்குத் தொட்டுக்கொள்ளும் சால்னா, போன்ற கிரேவிகளில் அதிக காரம் மற்றும் மசாலா சேர்க்கப்படுகின்றன.
பொதுவாக, உடல் உழைப்பு அதிகம் இருப்பவர்கள் பரோட்டா சாப்பிடும்போது, எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், அறிவு உழைப்பாளிகளுக்கு பரோட்டா நல்லதல்ல. ஆசைக்காக எப்போதாவது சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு ஏற்றதன்று என்கிறார்கள். மைதா எப்படி உருவாக்கப்படுகிறது தெரியுமா? நன்றாக மாவாக அரைக்கப்பட்டக் கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை ‘பென்சாயில் பெரோசிடே’ என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். இதுதவிர, ‘அலாக்சின்’ என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. மேலும் செயற்கை நிறமூட்டிகளும் சேர்க்கப்படுகிறது. அலாக்சின், சோதனைக்கூடத்தில் எலிகளுக்குத் தரப்படும் பரிசோதனை ரசாயனமாகும். மைதாவில் நார்ச்சத்து கிடையாது. ஆகவே, அதில் செய்த உணவை சாப்பிடுவது  நமது ஜீரண சக்தியைக் குறைத்துவிடும்.
இதுபோலவே பயணத்தில் சாப்பிடக்கூடாத இன்னொரு உணவு சமோசா. எந்த எண்ணெய்யில் செய்திருக்கிறார்கள், எப்போது செய்தார்கள், சமோசாவுக்குள் எந்தப் பொருட்களைத் திணித்து வைத்திருக்கிறார்கள் என எதுவும் தெரியாது. இதை நாக்கு கண்டுபிடித்துவிடாமலிருக்க புதினா சட்னி கொடுத்துவிடுவார்கள். வட இந்தியாவில் தயாரிக்கப்படும் சமோசாவும் தமிழகத்தில் தயாரிக்கப்படும் சமோசாவுக்கும் பெயரும் வடிவமும் மட்டும்தான் ஒன்றுபோலிருக்கின்றன, சுவையும் தரமும் ஒப்பிடவே முடியாது. சமோசா மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அறிமுகமான உணவு. டெல்லியை ஆண்ட மொகலாயர்கள் காலத்தில் அறிமுகமாகியிருக்கிறது. தெற்காசிய நாடுகளில் பிரபலமான சிறு தீனியாக சமோசா உண்ணப்படுகிறது. அரபு உலகில் சமோசா விருப்பமான உணவாகும். 14-ம் நூற்றாண்டுக்குப் பிறகே இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது. கவி அமீர் குஸ்ரு சமோசா பற்றி ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். இதுபோலவே துக்ளக் ஆட்சியில் வந்த பயணியான இபின் பதூதாவும் சமோசாவில் மசித்த இறைச்சி வைக்கப்பட்டிருந்ததைக் குறிப்பிடுகிறார்.
அக்பர் காலத்தில் சமோசா விருப்ப உணவாக அரண்மனையில் இருந்திருக்கிறது என்பதை அயினி அக்பரி குறிப்பிடுகிறது. கோவாவில் வசித்த போர்த்துக்கீசியர்கள் சமோசாவில் சிக்கன், மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி போன்றவற்றைச் சேர்த்து உருவாக்கியிருக்கிறார்கள். அதன் பெயர் ‘சமுகாஸ்’.
‘குட்டி சமோசா’ ஹைதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஈரானிய உணவகங்களில் மட்டுமே ஆரம்ப காலங்களில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், வங்களாதேசம், பர்மா, மலேசியா என ஆசிய நாடுகளில் சமோசா விதவிதமான சுவைகளில் கிடைக்கின்றன. உகாண்டா, கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் சமோசா பிரபலமானது. உணவு வேளைகளுக்கு இடையில் ஏற்படும் பசியை போக்கிக்கொள்ள உழைப்பாளிகள் பலரும் சமோசாவைத்தான் முக்கிய உணவாகக் கருதுகிறார்கள். ஆனால் அதன் தரம் மற்றும் பயன்படுத்தப்படும் எண்ணெய் முதலியன மோசமான பின்விளைவுகளை உருவாக்குவதாகயிருக்கிறது.
உணவுப் பண்பாட்டில் நாம் பழங்குடி மக்களை பின்தங்கியவர்களாக நினைக்கிறோம். ஆனால், அவர்களிடம் துரித உணவுப் பழக்கமோ, இதுபோல சமோசா, பஜ்ஜி, நூடுல்ஸ் சாப்பிடும் பழக்கமோ கிடையாது. நான் மத்தியப் பிரதேச பைகா பழங்குடி மக்களில் சிலரை அறிவேன். ஒருமுறை அவர்களோடு இணைந்து போபாலில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள பயணம் செய்ய நேர்ந்தது. அந்தப் பயணத்தில் நான் அவர்களிடமிருந்த உணவுக் கட்டுப்பாட்டினைக் கண்டு வியந்து போனேன். பயண வழியில் தென்படும் எந்த உணவுப் பொருள்களையும் சாப்பிட அவர்கள் ஆசை கொள்வதேயில்லை. ஒருவேளை ஏதாவது ஓர் உணவை வாங்கிக் கொடுத்தால்கூட சாப்பிட மறுத்துவிடுகிறார்கள். சரியாக மதிய உணவை 12 மணிக்கு எடுத்துக் கொள்கிறார்கள். மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் இரவு உணவை முடித்துவிடுகிறார்கள். இரவு 12 மணிக்கு மேல் சிக்கன் நூடுல்ஸ் சாப்பிடுகிற ஓர் ஆதிவாசியை எங்கும் காண முடியாது. அதுபோலவே உணவைச் சாப்பிடும் போதும் அவசரப்படுத்துவதில்லை. மெதுவாக, நன்றாக அரைத்து மென்று விழுங்குகிறார்கள். சாப்பிடும்போது வேறு எந்த யோசனையுமில்லை, பேசிக் கொள்வதுமில்லை. வயிற்றில் கொஞ்சம் பசியிருக்கும்படியாக பார்த்துக்கொள்கிறார்கள். விழா நாட்களில் மட்டுமே முழுவயிறு சாப்பாடு. இவர்களின் உணவுக்கட்டுப்பாடும் பழக்கமும் ஏன் நமக்கு வராமல் போய்விட்டது.
இன்று நீண்டதூரப்பயணங்களுக்காகச் சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. அதிவேக ரயில்கள், பேருந்துகள் என முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கான உணவைப் பொறுத்தவரை அதே மோசமான நிலைதான். கூச்சம் பார்க்காமல் உடல் நலத்தில் அக்கறையுள்ளவர்கள் இனி வீட்டிலிருந்தே தேவையான உணவை கொண்டு போக வேண்டியதுதான். முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் என ஒரு நாளில் பல்லாயிரம் பேர் ரயிலில் பேருந்தில் பயணம் செய்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரின் ஒரே புகாராக இருப்பது உணவு சரியில்லை என்பதுதான். ஆனால், இந்தக் குரல் யாரை எட்ட வேண்டுமோ அவர்களுக்கு கேட்பதேயில்லை. ஒருவேளை அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு என ரயில்வேயில் தனி உணவு அளிக்கபடுகிறதா என்ன? ஒரேயொரு நாள் அவர்கள் ரயிலில் வழங்கபடும் உணவை, அல்லது நெடுஞ்சாலையோர உணவுகளை சாப்பிட்டுப்பார்க்கட்டும் அப்போது தெரியும் மக்களின் அவலநிலை.

உணவு யுத்தம்!-35

ரயில் பயணிகளுக்கு என்றே மோசமான உணவுகளைத் தயாரிக்கிறார்கள் போலும். இட்லி வாங்கினால் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க முடியாது. சட்னி, ஒரே உப்பாக இருக்கும். நாற்றம் அடிக்கும். தோசை 
என்றால் அது வளைந்து நெளிந்து உருண்டை போலாகியிருக்கும். காகிதம் போல சுவையே இல்லாமலிருக்கும். பூரியைப் பிய்த்துத் தின்பதை உடற்பயிற்சியாக மேற்கொள்ள வேண்டும். சாப்பாடு என்றால் அதற்கு தரப்படும் சோறு, சாம்பார், கூட்டு- பொறியல் வகைகள் வாயில் வைக்க முடியாது.

இவ்வளவு ஏன் ஒரு தேநீர் கூட சர்க்கரை பாகு போன்ற ஒன்றைத்தான் தருவார்கள். இத்தனை லட்சம் மக்கள் பயணம் செய்யும் ரயிலில் இவ்வளவு மோசமான உணவு தரப்படுவது ஏன்? ஒவ்வொரு முறையும் யாரோ சிலர் புகார் செய்யத்தான் செய்கிறார்கள், நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே சொல்கிறது. ஆனால், ரயில்வே உணவின் தரம் ஆண்டுக்கு ஆண்டு மோசமாகிக் கொண்டுதான் போகிறது.
ரயிலில் தரப்படும் உணவு வகைகளைக் கண்காணிப்பதற்கு என சுகாதார அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று இதுவரை யாருக்கும் தெரியாது.
உங்கள் வாழ்க்கையில் என்றைக்காவது ஏதாவது ஒரு ரயிலில் மதிய உணவில் என்ன காய்கறிகள் தரப்படும். என்ன உணவு வகைகள் எப்போது தயாரிக்கப்பட்டன என்ற பட்டியல் தரப்பட்டிருக்கிறதா, ரயிலில் யார் சமைக்கிறார்கள் என்று எப்போதாவது பார்த்திருக்கிறோமா? என்ன மாவு பயன்படுத்துகிறார்கள், என்ன எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என ஏதாவது தெரியுமா?
உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் வாயில்தான் உணவு வகைகளை சொல்கிறார்கள். விலையும் அவர்கள் சொல்வதுதான். பழைய காகிதம் ஒன்றில் உணவை பேக் செய்து, கொண்டுவந்து நீட்டுகிறார்கள். அல்லது நசுங்கிப்போன அலுமினியம் ஃபாயிலில் அடைத்துத் தருகிறார்கள்.
பேன்டரி கார் உள்ள ரயிலில் 20 நிமிஷங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு உணவுப் பொருளை விற்கக் கொண்டு வருகிறார்கள். அந்த உணவாவது சூடாக இருக்க வேண்டும் அல்லவா? நாமே கிச்சனுக்குப் போய் ஏன் இப்படி உணவு சவசவத்துப் போயிருக்கிறது; சட்னி சரியில்லை; சாம்பார் சரியில்லை எனப் புகார் சொன்னால் அதை யாரும் காது கொடுத்துக் கேட்பது இல்லை.
இவ்வளவுக்கும் பல ஊர்களில் ரயில் நிலையங்களில் உள்ள கேன்டீன்களில் மிகச் சிறந்த சைவ உணவு வகைகள் கிடைப்பதை நான் ருசித்திருக்கிறேன். ரயில் நிலைய கேன்டீன்களில் தரமான உணவு கிடைக்கும்போது பயணிகளுக்கு மட்டும் ஏன் இந்தக் கொடுமை?
‘அந்நியன்’ படத்தில் உணவு சரியில்லை என கான்ட்ராக்டரை கதாநாயகன் அடித்துக் கொல்லுவான். அந்தக் காட்சிக்கு தியேட்டரில் கிடைத்த கைதட்டு ரயில்வே மீது மக்கள் கொண்டுள்ள ஆதங்கத்தின் வெளிப்பாடே.
ஜூலை 23-ம் தேதி கொல்கத்தா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில் உணவில் கரப்பான் பூச்சி இருந்தது கண்டறியப்பட்டது. இதை அடுத்து, ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்துக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், சாப்பிட்டவர்கள் கதி? அப்பாவி மக்களுக்கு ஒரு நியாயமும் கிடையாது.
பஸ்ஸிம் எக்ஸ்பிரஸ், புஷ்பக் எக்ஸ்பிரஸ், மோதிஹரி எக்ஸ்பிரஸ், ஷிவ் கங்கா எக்ஸ்பிரஸ், கோல்டன் டெம்ப்பிள் மெயில், நேத்ராவதி எக்ஸ்பிரஸ், பஞ்சாப் மெயில், ஹெளரா அமிர்தசரஸ் மெயில், சண்டிகர் சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் சோதனை நடத்தப்பட்டு… தரமற்ற, கெட்டுப்போன, சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதற்காக ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே தவறு தொடர்ந்து ஐந்து முறை கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் கேட்டரிங் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அறிவித்திருக்கிறது.
இந்தநாள் வரை மோசமான உணவைச் சாப்பிட்ட மக்களுக்கு என்ன நஷ்டஈடு தரப் போகிறார்கள்? ஐந்து முறை மோசமான உணவு பரிமாறப்படும் வரை கேட்டரிங் செய்பவர்களை எதற்காக அனுமதிக்க வேண்டும்? நஷ்டஈடாக பணம் அபராதம் விதிப்பதால் அவர்கள் செய்த தவறு சரியாகிவிடுமா? இது அப்பட்டமான கண்துடைப்பு நாடகம்.
எனது பயணத்தில் இதுவரை ஒருமுறை கூட உணவு பரிசோதகர் ரயிலுக்கு வந்து உணவின் தரம் எப்படியிருக்கிறது என பயணிகளிடம் கேட்டது இல்லை. உணவு வகைகளை ருசி பார்த்ததில்லை. ஒரு பயணி குறைந்தபட்சம் ரயில் பயணத்தில் இருநூறு ரூபாய் உணவுக்குச் செலவு செய்கிறான். ஆனால், அதற்கான தகுதி அந்த உணவுக்கு கிடையாது. இதை நாம் சகித்துக்கொண்டு போவதுதான் ரயில்வே உணவின் தரம் மோசமானதற்கு முக்கியக் காரணம்.
1915-ம் ஆண்டு பெங்கால் நாக்பூர் ரயில்வே முதன்முறையாக மேற்கத்திய வகை உணவை ரயிலில் பயணிகளுக்காக வழங்க முன்வந்தது. அதற்கு முக்கியக் காரணம் வெள்ளைக்காரர்கள் ரயிலில் பயணம் செய்தது. அதுவே ரயிலில் உணவு வழங்குவதன் முதற்படி. அதைத் தொடர்ந்து 1920-களில் தென்னக ரயில்வே ரயில் பயணிகளுக்காக உணவு வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியது, 1954-ல் மத்திய அரசு அழகேசன் கமிட்டி என்ற குழுவை அமைத்து உணவின் தரம் மற்றும் விலை குறித்தது பரிசீலனை செய்து புதிய நடைமுறையை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து 1967-ம் ஆண்டு ரயில்வே துறை கேட்டரிங் கமிட்டி ஒன்றை உருவாக்கி அதற்கு ஒரு சேர்மனையும் நியமித்தது.
1979-ல் இந்த உணவு வழங்கும் துறை தனி அமைப்பாக செயல்படும் என அறிவித்தது ரயில்வே. அதை ஒரு நபர் கமிட்டி வழிநடத்தும் என்றார்கள். அதன்படி தனியார்களுக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டு உணவு வழங்குவது நடைமுறைக்கு வந்தது.
ரயில்வேயின் உணவுகுறித்த மக்களின் கருத்துக்கணிப்பில்  குறிப்பிடப்படும் முக்கியப் பிரச்னைகள் ஐந்து. முதலாவது உணவு தரமாக இல்லை; இரண்டாவது சரியான நேரத்தில் உணவு வழங்கப்படுவது இல்லை; மூன்றாவது உணவு சூடாக இல்லை; நான்காவது பேக்கேஜிங் சரி இல்லை; ஐந்தாவது உணவு வழங்கும் பணியாளர்களின் அலட்சியப்போக்கு. இந்திய ரயில்வே உலகிலே பெரிய நிறுவனம் என தன்னை பெருமை சொல்லிக் கொள்கிறது. உணவு வழங்குவதில் அதுதான் உலகின் மிக மோசமான நிறுவனம். ஜப்பானிய ரயில்களில் அவர்கள் தரும் உணவும் அதன் தரமும் இணையற்றது.
ஜப்பானிய ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் பென்டோ எனப்படும் வெளியில் சாப்பிடும் உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.. ரயிலில் விற்கப்படும் எகிபென் எனப்படும் உணவுப் பொட்டலங்களை விதவிதமான அளவுகளில், உணவு வகைகளில் அட்டைப் பெட்டிகளில் சூடு தாங்கும் காகிதம் சுற்றி அழகாக பேக் செய்திருக்கிறார்கள். அதில் எப்போது அந்த உணவு தயாரிக்கப்பட்டது என்ற நேரம் அச்சிடப்பட்டிருக்கும். எத்தனை மணி வரை அதைச் சாப்பிடலாம் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் ருசியும் தரமும் நிகரற்றது. விலையும் குறைவு. நேரம் கடந்துபோனால் அந்த உணவு பேக்குகளை விற்பனைசெய்ய மாட்டார்கள். கழிவுத் தொட்டியில் போட்டுவிடுகிறார்கள்.
ஐரோப்பிய ரயில்களில் வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் ரொட்டிகளையும் பழங்களையும் கேக் வகைகளையும்தான் பயணிகள் அதிகம் சாப்பிடுகிறார்கள். ரயிலில் விற்கப்படும் உணவின் விலை அதிகம் என்பது ஒரு காரணம்.
ரயில்களில் உள்ள உணவே தேவலை என சொல்ல வைப்பவை விமானத்தில் தரப்படும் உணவு வகைகள். இவ்வளவுக்கும் அவை நட்சத்திர உணவகங்களில் தயாரிக்கப்படுபவை. இரவு பனிரெண்டரை மணிக்குக் கிளம்பும் இந்திய விமானங்களில் சூடாக உப்புமாவும் பிய்க்க முடியாத வடையும் தருவார்கள். நள்ளிரவில் யார் உப்புமா சாப்பிடுவார்கள்? யாருக்கு இந்த யோசனை வந்தது? காலை பசியோடு விமானத்தில் ஏறினால் ரொட்டியும் சாம்பார் சாதமும் கொடுப்பார்கள். யார் இந்த உணவு வகைகளை தேர்வு செய்கிறார்கள், எதன் அடிப்படையில் தருகிறார்கள், ஒருவரும் கேட்டுக் கொள்வது இல்லை. குறைந்த கட்டண விமானங்களில் தண்ணீர் தருவதோடு சரி. வேறு எல்லாமும் காசுக்குத்தான். அவர்கள் பயணிகளின் பசியைப் பற்றிக் கண்டு கொள்வதே இல்லை.


90-களின் ஆரம்பத்தில்தான் பீட்சா இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. ‘பீட்சா’ ஒரு இத்தாலிய உணவு. லத்தீன் மொழி சொல்லான பின்சா என்பதிலிருந்து பீட்சா  வந்திருக்கலாம்.
எகிப்தியர்கள் மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில் வசித்த மக்கள் சுடுமண் அடுப்புகளில் சுடப்பட்ட கெட்டியான தட்டை ரொட்டியை உணவாக உண்டுவந்தனர். கிரேக்க, ரோமானிய மக்கள் இந்த ரொட்டிகளின் மீது ஆலிவ் எண்ணெய் மற்றும் மூலிகைகளைச் சேர்த்து சாப்பிட்டனர். கி.மு. 3-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ரோம சாம்ராஜ்ஜிய சரித்திரத்தில் இது போன்ற தட்டை ரொட்டியைச் சமைத்து சாப்பிடும் பழக்கம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.கி.மு. 6-ம் நூற்றாண்டில் பாரசீக மன்னர் மாவீரன் டாரியஸ்’ தனது படைவீரர்களுக்குத் தட்டை ரொட்டிகளின் மீது பாலடைக் கட்டிகளையும் பேரீச்சம் பழங்களையும் வைத்து தந்ததாகவும் அது ‘பீட்சா’வுக்கு முன்னோடி என்றும் கூறுகிறார்கள்.மார்கஸ் கேவியஸ் அபிசியஸ் எழுதிய நூலிலும் சிக்கன், பாலடைக்கட்டி,  மிளகு, எண்ணெய் போன்றவற்றை ரொட்டியின் மீது பரப்பி சுடப்பட்டது குறிப்பிடப்படுகிறது.தென்மேற்கு இத்தாலியில் உள்ள நேப்பிள் பிராந்தியத்தை சேர்ந்த மக்கள் கடுமையான உழைப்பாளிகள், அவர்கள் வறுமையான சூழலில் வாழ்ந்த காலத்தில் பசிதாங்கக் கூடிய உணவாக இந்தத் தட்டையான ரொட்டிகள் இருந்தன. ஆகவே, அவற்றை விரும்பி உண்டார்கள். அப்படித்தான் இத்தாலியில் பீட்சா பிரபலமாகத் தொடங்கியது.  1889-ல் நேப்பிள் நகருக்கு வருகை தந்த உம்பர்தோ அரசரும் அவரது மனைவி ராணி மார்கரீட்டாவும் பிரெஞ்சு உணவு வகைகளுக்கு பதிலாக ருசியான இத்தாலிய உணவு வகைகளை சமைத்து தரும்படியாக ஆணையிட்டனர்.சமையற்காரரான ‘ரஃபேல் எஸ்போசிடோ’ மன்னரை  மகிழ்விக்க எண்ணி மூன்றுவிதமான தட்டையான ரொட்டிகளை தயார் செய்தார். ஒன்றில் ரொட்டி மீது பன்றி இறைச்சியை பரவவிட்டிருந்தார். மற்றொன்றில் பாலாடைக்கட்டி, மற்றொன்றில் தக்காளி மற்றும் துளசி இலை. பாலாடைக்கட்டி சேர்ந்த கலவையைப் பரவவிட்டிருந்தார்இதில் தக்காளி மற்றும் பாலாடைகட்டி சேர்ந்த ரொட்டி மகாராணிக்கு மார்கரீட்டாவுக்குப் பெரிதும் பிடித்துப் போனது. ஆகவே, இது இத்தாலியில் பிரபலமாகத் தொடங்கியது. இன்றும் அந்த வகை பீட்சாவை  மார்கரீட்டா பீட்சா என்றே அழைக்கிறார்கள்.18-ம் நூற்றாண்டில் பீட்சாவில் தக்காளி சேர்க்கப்படவில்லை, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவாகவே இருந்தது. உணவகங்களில் பீட்சா தயாரிக்கப்பட்ட போதே தக்காளி இணைந்து கொண்டது என்றும் கூறுகிறார்கள். குறிப்பாக நேப்பிள் நகரில் வசித்த ஸ்பானிய ராணுவ வீரர்கள் பீட்சாவைத் தேடி வந்து சாப்பிட்டார்கள். அதற்காகவே உடனடியாக பீட்சா தயாரிக்கும் பழக்கம் உருவானது.

இது போலவே பீட்சா மரியானா என்ற உணவை மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது உடன் கொண்டு போயிருக்கிறார்கள். ஆரம்ப காலங்களில் வீதியில் விற்கப்படும் உணவாகவே பீட்சா இருந்திருக்கிறது. விலை ஒரு பென்னி. ஆகவே, அதை ஏழைகளின் உணவு என்று அழைத்திருக்கிறார்கள். இன்று ஏழைகளால் தொடமுடியாத உணவாக மாறியுள்ளது பீட்சா.

                     இரண்டாம் உலகப் போரின்போது சர்வாதிகாரி முசோலினி, ‘இத்தாலிய மக்கள் அதிகம் பீட்சா சாப்பிட வேண்டாம். அதனால் தானிய பஞ்சம் ஏற்பட்டுவிடும்’ என்றார். அத்துடன் பீட்சா தயாரிப்பதைக் குறைக்கும்படியாகவும் கட்டளைப் பிறப்பித்தார், ப்யூச்சரிஸ்ட் எனப்படும் ஒவியக் குழுவினர். பீட்சாவுக்கு எதிராக ஒவியங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இத்தாலியில் சண்டையிடுவதற்காக வந்த பிரிட்டிஷ் துருப்புகளுக்கு பீட்சா பிடித்துப்போய்விடவே அவர்கள் அதை தங்கள் நாட்டிலும் பிரபலப்படுத்தினர் எனக்கூறுகிறார்கள்.இன்று இத்தாலியில் ஒரு நாளைக்கு ஏழு மில்லியன் பீட்சா சாப்பிடப்படுகின்றன, வட இத்தாலியை சேர்ந்த பிரிவினைவாதம் பேசும் ஆயுதக் குழுக்கள் பீட்சாவை தென் இத்தாலிய உணவு என்று கூறி அதை கைவிடும்படியாக குரல் எழுப்புகிறார்கள். 1995-ல் பீட்சாவின் புகழை உலகம் அறியச்செய்யும்படியாக 10 நாட்கள் பீட்சா திருவிழாவை நேபிள்ஸ் நகரம் நடத்தியது. அதை பீட்சா ஒலிம்பிக் என்றார்கள்.போனில் ஆர்டர் செய்த 30 நிமிஷங்களுக்குள் வீட்டில் பீட்சா டெலிவரி செய்யும் பழக்கம் 1960-களில் அறிமுகமானது. 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த  இத்தாலியர்கள் அங்கே பீட்சாவை அறிமுகம் செய்தார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பீட்சா உலகம் முழுதும் பரவியது. இப்படிதான்  ‘பீட்சா’  உலகெங்கும் பிரபலமடைந்தது. எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாஸ் நேபிள் நகருக்கு விஜயம் செய்தபோது அங்கே பீட்சாவை விரும்பி சாப்பிட்டதாகத் தனது நூலில் எழுதியிருக்கிறார்.பீட்சாக்களை மட்டும் விற்கும் கடை ‘பிஸ்ஸாரியா’ என்று அழைக்கப்படுகிறது. தக்காளி, பூண்டு, துளசி மற்றும் ஆலிவ் எண்ணெய், பன்றி, மாடு, கோழி இறைச்சி மற்றும் முட்டையைக் கொண்ட மொஸெரெல்லா சீஸ் ஆகியவற்றைக் கொண்டு பல்வேறுவிதமான பீட்சாக்கள் தயாரிக்கப்படுகின்றன. சாபவுலோ நகரத்தை பீட்சாவின் தலைநகரம் என்கிறார்கள். அங்கே 6,000 பீட்சா கடைகள் இருக்கின்றன.  சாபவுலோவில் ஜுலை 10-ம் நாளை பீட்சா தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

                    பீட்சா என்ற சொல்லை மொழிபெயர்க்கத் தேவை இல்லை. உலகில் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அச்சொல்லை தெரிந்து வைத்திருக்கிறார்கள், தென்அமெரிக்காவில் பீட்சாவை தேசிய உணவாகவே ஏற்றுக் கொணடிருக்கிறார்கள். அங்கே பல்வேறு ருசிகளில், அளவுகளில் பீட்சா சாப்பிட கிடைக்கிறது.பிரேசலின் பீட்சா இத்தாலிய சுவையில் இருந்து பெரிதும் மாறுபட்டது. நார்வீஜியர்கள்தான் உலகில் அதிகம் பீட்சா சாப்பிடுகிறவர்கள். அடுத்த இடம் ஜெர்மானியருக்கு. பீட்சாவில் அதிகம் வெண்ணெய் சேர்க்கப்படுகிறது. உப்பும் கூடுதலாகச் சேர்க்கிறார்கள். அது உடலுக்குக் கெடுதி என்கிறார்கள். ஆனால் பீட்சா சாப்பிடும் தலைமுறையின் காதுகளில் இக்குரல் கேட்கவேயில்லை.இந்தியாவில் கடை விரித்துள்ள பீட்சா நிறுவனங்கள் தந்தூரி சிக்கன் மற்றும் பன்னீர் போன்ற பல இந்திய டாப்பிங்குகளுடன் பீட்சாவை தயாரித்து வழங்குகின்றனர். இத்தாலிய பீட்சாவோடு ஒப்பிடும்போது இந்திய பீட்சா கூடுதல் காரம் கொண்டது. 1996-ல் சென்னையில் பீட்சா கடை திறக்கப்பட்டது.கொரிய வகை பீட்சா சற்று கடினமானது. அவை சோளம், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, இறால் அல்லது நண்டு போன்றவற்றைக் கொண்டிருக்கின்றன. அதை இளைஞர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஜப்பானிய பீட்சாக்களில் அதிகம் கடலுணவுகள் சேர்க்கப்படுகின்றன. பிரேசில் பீட்சாவில் பழங்கள் கூடுதலாக சேர்த்துக் கொள்கிறார்கள்.

                 பர்கர் என்பதும் இரண்டு ரொட்டிகளுக்கிடையே நன்றாக அரைத்த இறைச்சி பொதுவாக மாட்டிறைச்சி, பன்றி, கோழி இறைச்சி அல்லது கலவை வைக்கப்படுகிறது.உலகளவில் பிட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற விரைவு உணவுகளை உண்பதன் மூலம், நான்கு கோடி குழந்தைகள், அதிக எடை கொண்டவர்களாக இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் பிரெட்டில் அதிக அளவில் சோடியம் இருப்பதால், இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்புண்டு.ஹாட் டாக் (சாஸேஜ்) எனப்படும் துரித உணவுவகை அமெரிக்கா போலவே இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.  ஹாட் டாக் ஜெர்மனியில் அறிமுகமான போதும் அது அமெரிக்காவில்தான் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது.18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு வந்த ஐரோப்பியர்கள் மூலம் இந்த உணவு அறிமுகமானது என்கிறார்கள். குறிப்பாக பேஸ்பால் போட்டிகளின் போது ரசிகர்கள் விரும்பி சாப்பிடுகிற உணவாக மாறியதால் ஹாட் டாக்குக்கு தனி மார்க்கெட் உருவானது. ஹாட் டாக் என்ற பெயர் கேலிக்கு சூட்டப்பட்ட ஒன்று. கேலிச்சித்திரம் ஒன்றில் குறிப்பிடப்பட்ட ஒரு வார்த்தையே இதன் பெயரானது என்றும் கூறுகிறார்கள்,நீரிழிவு நோயாளிகளின் கார்போஹைட்ரேட் அளவை பீட்சா அதிகப்படுத்திவிடுகிறது. அதிக வெண்ணெய் மற்றும் இறைச்சி காரணமாக கொழுப்பு கூடுகிறது, இதனால் ஒவ்வாமை மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது, சூப்பர் சைஸ் பீட்சா சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கிறது என்று அறிவிரை கூறுகிறார்கள் மருத்துவர்கள். ஆனால் யாரும் அதை கவனம் கொள்வதில்லை. துரித உணவு என்ற பெயரில் துரித மரணத்தை விலைக்கு வாங்குகிறோம்

உணவு யுத்தம்!-33


      எந்த ஒரு புதிய உணவுப் பொருளையும் மேல்தட்டு அல்லது அடித்தட்டு மக்களிடம் அறிமுகப்படுத்தி அங்கீகாரம் பெறுவது கடினமானது. ஆனால், மத்திய தர வர்க்கத்தில் அந்தப் பிரச்னையே இல்லை. அவர்கள் எந்தப் புதிய உணவையும் எளிதாக அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுவிடுவார்கள். ஆகவே, பன்னாட்டு உணவு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள 25 கோடி மத்தியதர வர்க்கத்தினரைத்தான் குறிவைக்கின்றன. இவர்களால்தான் பன்னாட்டு உணவு வகைகள் இந்தியாவில் அறிமுகமாகிக் காலூன்றின.ஆனால், மத்தியதர வர்க்கம் தங்களின் மரபான உணவு பழக்கத்தை கைவிட்டு புதிய புதிய உணவு வகைகளைத் தேடுகிறார்கள். ஆரோக்கியம் குறித்த கவலையின்றி துரித உணவுகளை ரசித்து சாப்பிடுகிறார்கள். அதன் விளைவுதான் துரித உணவுப் பழக்கம் சிற்றூர் வரை பரவியிருக்கிறது.
மத்தியதர வர்க்கத்தின் மாறிவரும் உணவுப் பழக்கமே சமகால உடல் நலப் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணி. அடித்தட்டு மக்கள் இன்னமும் தங்களின் மரபான உணவு வகைகளில் இருந்து பெரிதும் மாறிவிடவில்லை. தங்களின் உழைப்புக்கு ஏற்றார் போலவே உணவைத் தேர்வு செய்கிறார்கள். மேல்தட்டினர் உணவு என்பது சாப்பிடும் பொருள் இல்லை. அந்தஸ்து மற்றும் ஆடம்பரத்தின் அடையாளம் என்பதால் அவர்கள் சுவையைப் பிரதானப்படுத்துகிறார்கள். தேர்வு செய்து சாப்பிடுகிறார்கள்.

மத்தியதர வர்க்கம் ஏன் புதிய உணவு வகைகளின் மீது இத்தனை மோகம் கொண்டிருக்கிறது. முக்கியமான காரணம், அவர்கள் தங்கள் வாழ்க்கைச் சூழலை மாற்றிக் கொள்வதன் அடையாளமாக உணவைக் கருதுகிறார்கள்.  பன்னாட்டு உணவு வகைகளை ருசிப்பதன் மூலம் தங்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டதாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள்.
இன்னொரு பக்கம் இதே மிடில் கிளாஸ்தான் துரித உணவுகளைச் சாப்பிட்டு உடல் நலம் கெட்டுப்போய்​விட்டது என கூச்சலும் இடு​கிறார்கள். அவசர​மாக இயற்கை உணவுகளைத் தேடிப் போ​கிறார்கள். உணவுச் சந்தையின் போக்கைத் தீர்மானிப்பதில் இந்திய மத்திய தர வர்க்கமே முக்கியக் காரணியாக உள்ளது.
ஒரு புதிய உணவு வகையை விளம்பரப்படுத்தும்போது அது மத்திய தர வர்க்கத்துக்குப் பிடிக்கும்​படியாக உருவாக்கவே முயற்சிக்​கிறோம். காரணம், அவர்கள் அங்கீகரித்துவிட்டால் அன்றாட விற்பனையில் பிரச்னையிருக்காது. மத்தியதர வர்க்கம் விளம்பர மோகம் கொண்டது. எளிதாக அவர்களை கவர்ந்துவிடலாம் என்கிறார் உணவுப்பட விளம்பரங்களை எடுக்கும் சுபத்ரா முகர்ஜி.
பீட்சா, பர்கர், ஹாட் டாக், ஸ்பாஹெட்டி போன்ற பன்னாட்டு உணவு வகைகள் எந்த தானியத்தில் தயாரிக்கப்படுகின்றன என்றுகூட அதன் வாடிக்கையாளருக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் கூச்சப்படுவான். ஆகவே, விளம்பரங்கள்தான் ஒரே தூண்டில்.
வெறுமனே விளம்பரம் செய்வதுடன் 20 சதவித சலுகை, ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என கூப்பன்கள் தந்தால் வியாபாரம் எளிதாக விருத்தி அடையும். சலுகைக்காகவே மக்கள் உணவை வாங்க வருவார்கள்.  அன்றாடம் நாம் காணும் விளம்பரங்கள் இத்தகைய அழகிய பொய்களே. இந்தப் பொய்கள் நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடியவை. இதற்கு விலையாக நாம் மருத்துவர்களுக்குப் பல லட்சம் தரப் போகிறோம் என்ற அபாயத்தை உணரவில்லை.
இத்தனை காலமாக நாம் சாப்பிட்டு வருகிற இட்லிக்கு எப்போதாவது இப்படி விளம்பரம் செய்யப்படுகிறதா என்ன? அன்றாடம் நாம் சாப்பிடும் சோறு குறித்து எப்போதாவது டிவி-யில் விளம்பரம் வருகிறதா? உணவைப் பல கோடிகள் செலவழித்து விளம்பரப்படுத்துகிறார்கள் என்றாலே அதன் பின்னே கொள்ளை லாபம் அடிக்கும் வணிகநோக்கம் ஒளிந்திருக்கிறது என்றே அர்த்தம்.
இப்படி ஊடக விளம்பரங்களின் வழியே அறிமுகமாகி இன்று சிற்றூர் வரை விரிந்து பரவியிருக்கின்றன பீட்சா கடைகள். இரண்டாயிரத்தின் முன்பு வரை மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் கூட ஒன்றிரண்டு பீட்சா கடைகள் மட்டுமே இருந்தன. ஆனால் கடந்த 13 வருஷங்களில் ஒரு வீதியில் நான்கு கடைகள் இருக்கின்றன. சில வணிக வளாகங்களில் உள்ளூர் உணவு வகைகளே கிடையாது.
பீட்சா கடைகளில் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டியிருக்கிறது. பள்ளி மாணவர்கள் யூனிஃபார்மோடு பீட்சா சாப்பிட வந்து நிற்கிறார்கள். ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய்களுக்கு பீட்சா விற்பனையாகிறது என்கிறார்கள்.
உலகின் அனைத்து முன்னணி பீட்சா தயாரிப்பாளர்களும் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டார்கள். கன்னியாகுமரியில் தொடங்கி இமயமலையின் அடிவாரம் வரை அவர்களின் கடைகள் காணப்படுகின்றன. 30 நிமிஷங்களில் வீடு தேடி வந்து பீட்சா சப்ளை செய்கிறார்கள். பள்ளி – கல்லூரி மாணவர்கள், இளைஞர்களே பெருவாரியான வாடிக்கையாளர்கள்.
பீட்சாவும் பர்கரும் இப்போதே சாப்பிடப் பழகிக் கொண்டால் அமெரிக்காவுக்கு வேலை செய்யப்போனால் எளிதாக இருக்கும். அங்கே உணவுப் பிரச்னை வராது என்கிறார்கள். கணிப்பொறியியல் படிக்கும் மாணவர்கள், இப்படி ஒரு கற்பிதம் இவர்கள் மனதில் ஆழமாக வேர் ஊன்றப்பட்டுவிட்டது.
மத்திய தர வர்க்கம் தனது உணவை எப்படி தேர்வு செய்கிறது. ஒவ்வொரு மாதமும் தனது வருமானத்தில் பத்து சதவிகிதத்தைப் புதிய உணவு வகைகளை ருசித்துப் பார்க்க அவர்கள் ஒதுக்குகிறார்கள். ‘தங்களின் வருமானத்தைச் செலவு செய்வதில் உணவுக்கு அதிக முக்கியத்துவம் தருவது மிடில் கிளாஸ் இயல்பு’ என்கிறார் சமூக ஆய்வாளர் சதீஷ் தேஷ்பாண்டே.
மாறிவரும் இந்தியாவின் உணவுப் பண்பாடு என்ற கட்டுரையில் ஆஷிஷ் நந்தி, ‘மத்திய தர வர்க்க மக்கள் உணவை மாற்ற விரும்புகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்கள். உலகமயமாக்கலின் விளைவுகளில் இதுவும் ஒன்று. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்கென தனியே உணவுப் பண்பாடு இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் விசேஷமான உணவு வகைகள் இருக்கின்றன. அந்த அடையாளங்களை அழித்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரே உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தவே இந்த வணிக முயற்சிகள் செயல்படுகின்றன’ என்கிறார்.
இதை மறுத்து சித்ரா பானர்ஜி தனது இந்தியாவின் உணவுப் பண்பாடு என்ற நூலில், ‘எப்போதுமே இந்திய மக்கள் வெளியில் இருந்து வரும் உணவு வகைகளை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள். அரபு நாடுகளில் இருந்தும் ஐரோப்பியர்களிடம் இருந்தும் அறிமுகமான உணவு வகைகள் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இது இந்திய மக்களின் தாராள மனப்போக்கைக் காட்டக்கூடியது. அதே நேரம் ஒவ்வாத உணவு வகைகளை இந்தியா ஒரு போதும் ஏற்றுக்கொள்வது இல்லை. பன்னாட்டு உணவு வகைகள் இந்தியாவுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படுகின்றன. சைவம் மட்டுமே சாப்பிடும் ஜெயின் இனத்தவர்களுக்காக ஜெயின் பீட்சா என சைவ உணவு விற்கப்படுவது இந்த மாற்றத்தின் அடையாளமே’ என்கிறார்
இந்திய உணவுச் சந்தையில் அதிகம் விற்பனையாகும் சமையல் புத்தகங்களை பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையில் அர்ஜுன் அப்பாதுரை, ‘கடந்த 20 ஆண்டுகளாக சமையல் புத்தகங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் புதிய உணவு வகைகளை வீட்டில் எப்படி சமைப்பது என்ற தேடுதலே. குறிப்பாகப் பன்னாட்டு உணவகங்களில் விற்கப்படும் உணவுகளை வீட்டில் செய்யும் முறையை தெரிந்துகொள்ள பலரும் ஆசைப்படுகிறார்கள். முன்பு இது போன்ற தேடுதல் மேல்தட்டு வர்க்கத்தில் மட்டுமே காணப்படும், இன்று மத்தியதர வர்க்கமே சமையல் புத்தகங்களை அதிகம் வாங்குகிறார்கள். இது மாறிவரும் உணவுப் பண்பாட்டின் அடையாளமே’ என்கிறார்.
ஒரு பக்கம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் போராடி உணவைப் பெறக்கூடிய ஏழ்மையான சூழ்நிலை. மறுபக்கம் பீட்சா சாப்பிடலாமா அல்லது பர்கரா என யோசிக்கும் நிலை. இந்த முரண்தான் இன்றைய இந்தியாவின் அடையாளம்.

உணவு யுத்தம்!-32

உணவு யுத்தம்!-32

16-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கடல் பயணிகள் உருளைக்கிழங்கை பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தினர். 17-ம் நூற்றாண்டில் இந்தோனேஷியாவின் ஜாவா தீவுப் பகுதிகளில் அறிமுகமானது. அப்போதுதான் இந்தியாவுக்கும் உருளைக்கிழங்கு வந்து சேர்ந்தது.

உலகளவில் உருளைக்கிழங்கு உற்பத்தி 315 மில்லியன் மெட்ரிக் டன்கள். இதில் நான்கில் ஒரு பகுதி, அதாவது 79 மில்லியன் மெட்ரிக் டன்களை சீனா உற்பத்தி செய்கிறது. அடுத்த இடம் ரஷ்யாவுக்கு. இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
உருளைக்கிழங்கு உற்பத்தி மற்றும் விற்பனையை முறைப்படுத்துவதற்காக சர்வதேச மையம் ஒன்று பெரு நாட்டின் தலைநகர் லிமா நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கான ஆராய்ச்சி மையம் சிம்லாவில் உள்ளது.

வேகவைத்து உப்பும் நெய்யும் சேர்த்து தரப்படும் சால்ட் பொட்டேட்டோ நியூயார்க்கில் மிகவும் பிரபலம். பிரெஞ்சு ஃபிரைஸ் மற்றும் ஹாஷ் பிரௌன்ஸ்  அமெரிக்காவின் எல்லா உணவகங்களிலும் அதிகம் விற்பனையாகின்றன.
இத்தாலியில் இதனுடன் இறைச்சி சேர்த்து, உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. உருளைக்கிழங்கு ஆம்லெட் ஐரோப்பிய உணவு வகைகளில் சிறப்பானது. இங்கிலாந்தில் அவித்துக் கூழாக்கப்பட்ட உருளைக்கிழங்கும் மீனும் விரும்பி உண்ணப்படுகிறது. ரஷ்யா, போலந்து போன்ற நாடுகளில் முழுமையாக வேகவைத்து, பின்னர் மூலிகைப் பொருட்களை சேர்த்து உணவாகப் பயன்படுத்துகிறார்கள். தோல் நீக்கி வேகவைத்து அத்துடன் சீஸ் சேர்த்து தண்ணீருடன் கொதிக்க வைத்து, சூப்பாக குடிக்கிறார்கள் உக்ரேனியர்கள்.
நேரடியாக சமைத்து உண்ணப்படுவதைவிட, சிப்ஸாக விற்கப்படும் உருளைக்கிழங்கின் அளவு அதிகம் என்கிறார்கள். 1853-ல் ஜார்ஜ் கிரம் என்பவரே முதன்முறையாக சிப்ஸ் தயாரிக்க ஆரம்பித்தார். தனது வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்த அவர் உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி பொரித்துத் தந்தார். அதுவே சிப்ஸ் ஆக மாறியது.
1910-களின் பிறகே சிப்ஸ் விற்பனைப் பொருளாக மாறியிருக்கிறது. 1930-களில்தான் இயந்திரத்தின் உதவியால் சிப்ஸ் தயாரிப்பது ஆரம்பமாகியிருக்கிறது.
இன்று இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் பேருக்கும் மேலாக சிப்ஸ் வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். உலக அளவில் சிப்ஸ் தயாரிப்பில் புகழ்பெற்ற பத்து நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக விற்பனை செய்கின்றன.
உருளைக்கிழங்கு நல்லதா கெட்டதா என வாதப்பிரதிவாதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. உடல்பருமனை அதிகரிக்கிறது, வாயுத்தொல்லையை உருவாக்குகிறது, வயிற்று நோய்கள் உருவாகின்றன என இதன் விளைவுகள் பற்றி கூறுகிறார்கள். ஆனால், ‘உருளைக்கிழங்கு மருத்துவ குணம் கொண்டது. அதை வேகவைத்துச் சாப்பிடுங்கள். ரோஸ்ட், சிப்ஸ் என்று முழுவதுமாக எண்ணெய்யில் பொரித்தெடுத்து சாப்பிடாதீர்கள்’ என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
1845-ம் ஆண்டு மேற்கு அயர்லாந்து பகுதியில் ஏற்பட்ட பெரும் உணவுப் பஞ்சம்  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போது ஏறத்தாழ ஒரு மில்லியன் மக்கள் பட்டினியாலும் நோயாலும் இறந்தார்கள். பட்டினியில் இருந்து பிழைப்பதற்காக, வாழ்வு தேடி ஒரு மில்லியன்  மக்கள் தம் நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்குக் இடம்பெயர்ந்தனர்.
12-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க மதத் தலைவரான போப், பிரிட்டன் அரசுக்கு கொடையாக அளித்த நாடு அயர்லாந்து. இதனால், இங்கிலாந்தின் நிலப்பிரபுக்கள் அயர்லாந்தில் நிறைய நிலங்களை கைவசப்படுத்தி, பெரும் பண்ணைகளுக்கு உரிமையாளர்களாக மாறினார்கள். இவர்களின் பண்ணையில் வேலைசெய்யும் கூலிகளாக அயர்லாந்தின் விவசாயிகள் இருந்தார்கள். சிலர் குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் செய்தார்கள். சோளமும் உருளைக்கிழங்கும் முக்கியப் பயிர்கள். இவர்களிடம் இருந்து நிலப்பிரபுக்கள் விளைச்சலில் 80 சதவிகிதத்தைப் பறித்துக்கொண்டார்கள். ஆகவே, அவர்களுக்கு மிஞ்சியது எல்லாம் உருளைக்கிழங்கு மட்டுமே.
அயர்லாந்து மக்களுள் பெரும்பான்மையானவர்கள் கத்தோலிக்க சமயத்தைக் கடைப்பிடித்தவர்கள். ஆனால். போப்பின் தலைமையை ஏற்க மறுத்து தனியொரு சபையாக 15-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் தொடங்கப்பட்டது. சீர்திருத்தத் திருச்சபையை ஜான் விக்கிலிஃப், ஜேன் ஹஸ், மார்ட்டின் லூதர், ஜான் கால்வின் முதலியவர்கள் முன்நின்று நடத்தினர்.
பாவங்கள் செய்தவர்கள் பணம் கொடுத்து பாவ மன்னிப்பு செய்துகொள்ளலாம் என போப் அறிவித்தார். அதை சீர்திருத்தத் திருச்சபையினர் கண்டித்தனர். அதோடு மக்களிடம் போப் நன்கொடையாகப் பணம் வசூலிக்கக் கூடாது எனவும் போராடினார்கள். அவர்களின் எதிர்ப்புக்குரலை போப் கண்டுகொள்ளவே இல்லை. ஆகவே, மார்ட்டின் லூதர் தலைமையில் புதியதொரு பிரிவாக ப்ரோட்டஸ்டன்ட் என்கிற பெயரில் சீர்திருத்தசபை உருவானது. பைபிள் மட்டுமே புனிதமானது, போப்பின் ஆணைகள் பின்பற்றபட வேண்டியது இல்லை என இவர்கள் கருதினார்கள்.
17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து ப்ரோட்டஸ்ட்ன்ட் சபையைத் தழுவியதும், அயர்லாந்தில் வாழ்ந்த கத்தோலிக்கரின் உரிமைகள் பறிக்கப்பட்டன. அவர்கள் நிலத்தை உடைமையாகக் கொண்டிருக்க தடை விதிக்கப்பட்டது. நிலத்தை வாங்கினாலோ குத்தகைக்குக் கொடுத்தாலோ தண்டனை வழங்கப்பட்டது. இதனால், அயர்லாந்து நாட்டு விவசாயி கூலிகளாக மாறினர். கத்தோலிக்கருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. அவர்களுக்கு அரசு வேலைகள் கொடுக்கப்படவில்லை. புறநகர்ப் பகுதியில்தான் வசிக்க முடிந்தது. அவர்கள் கல்வி பெறவும் அனுமதிக்கபடவில்லை.
விவசாயம் தவிர வேறு வேலை வாய்ப்புகள் கத்தோலிக்கர்களுக்கு அளிக்கப்படவில்லை. இதனால் அயர்லாந்தில் தொழில் வளர்ச்சி தடைபட்டது. அயர்லாந்து முழுமையிலும் உருளைக்கிழங்குப் பயிரிடப்பட்டது. தினசரி உணவாகவே உருளைக்கிழங்கு உண்ணப்பட்டது. அயர்லாந்தில் உள்ள காடுகளை ப்ரோட்டஸ்டன்ட்டுகள் அழித்து, மரங்களை வெட்டி லண்டன் கொண்டுசென்றனர்.
காடுகள் அழிந்துபோனதால் குளிர்காலத்தில் உருவாகும் மூடுபனி உருளைக்கிழங்கு பயிர்கள் மீது படிந்தது. இதனால், பூஞ்சணை நோய்கள் உருவாக ஆரம்பித்தது. இதன் விளைவாக அயர்லாந்து முழுமையிலும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இத்துடன் காலரா, பரவியதால் சாவு எண்ணிக்கை அதிகமானது. கூட்டம் கூட்டமாக மக்கள் பஞ்சம் பிழைக்கப்போனார்கள். கிட்டத்தட்ட 20 லட்சம் ஐரிஷ் மக்கள் வட அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்திடும் நிலை. இந்தச் சம்பவம் அயர்லாந்தின் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இதன் பின்னணியில் உருளைக்கிழங்கு இருந்திருக்கிறது.
பொரித்த உருளைக்கிழங்கு, சிப்ஸ் விற்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் விற்பனையைப் பெருக்கிக்கொள்ள தாங்களே இந்தியாவில் நேரடியாக உருளைக்கிழங்கு உற்பத்தியில் இறங்கியிருக்கிறார்கள். இதற்காக குஜராத்திலும் பீகாரிலும் நிலத்தைக் கையகப்படுத்தி உள்ளூர் விவசாயிகளைக் கொண்டு தங்களுக்குத் தேவையான உருளைக்கிழங்கை உற்பத்தி செய்ய முயன்றுவருகிறார்கள். இந்தியாவுக்கும் அந்த ஆபத்து வராது என சொல்ல முடியாது.
தமிழ்நாட்டில் திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு பகுதிகளில் இது விளைவிக்கப்படுகிறது. இதில் திண்டுக்கல் மற்றும் நீலகிரியில் 90 சதவிகிதம் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டுப்பாளையம்தான் இதன் முக்கிய சந்தை. தோண்டி எடுக்கப்பட்ட உருளைக்கிழங்கு குளிர்சாதன பெட்டகத்தில் ஆறு மாதங்கள் வரை பாதுகாக்கப்படுகின்றன.
ஃபேஸ்புக், ட்விட்டர் என பொழுதைப்போக்கும் இன்றைய வாழ்க்கை முறையை பொட்டேட்டோ சிப்ஸ் கல்ச்சர் என விமர்சகர்கள் அழைக்கிறார்கள். காரணம், எவ்வளவு சிப்ஸ் சாப்பிட்டாலும், சாப்பிட்ட திருப்தியே இருக்காது. அப்படித்தான் ஃபேஸ்புக்கில் நேரம் செலவழிப்பதும் திருப்தியே தராது என்கிறார்கள்.
‘சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளில் ஒன்று இது’ என அலட்சியமாகக்  கருத முடியாது. அது, உலகம் முழுவதுமான உணவுப் பண்பாட்டின் பிரதிநிதி!

Sep 1, 2014

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 சந்திப்பு

தமிழ்ப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அதே போல்..... 

மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டன... 

நாள் : அக்டோபர் 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம் : மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதியிலுள்ள கீதா நடனகோபால நாயகி மந்திர், மதுரை.

வாருங்கள் வலைப்பதிவர்களே... வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் பங்கேற்கும் பதிவர்கள் அனைவரும் கீழுள்ள படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பினால் போதும்... 

படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.10.2014 ஏதேனும் சந்தேகங்கள், விவரங்கள் தேவைப்பட்டால் :- திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com தமிழ்வாசி பிரகாஷ் -9080780981 - thaiprakash1@gmail.com

நூல் வெளியீடு : பதிவர்கள் தங்களின் நூல்களை இந்த மாபெரும் நிகழ்ச்சியில் வெளியிடலாம். அவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 10.10.2014 க்குள் விவரங்களை கீழ்கண்ட நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள். சீனா ஐயா (வலைச்சரம்) cheenakay@gmail.com திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com

அன்பளிப்பு : இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பதிவர்கள், திண்டுக்கல் தனபாலன் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்துத் தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும். 


மேலும் தகவல்கள் / விபரங்கள் அடுத்தப் பதிவில் வெளியாகும். பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. சந்திப்போம்.
வலைப்பதிவர் விழா நிர்வாகக் குழு - மதுரை
http://www.tamilvaasi.com/2014/08/261014.html

Aug 26, 2014

உணவு யுத்தம்!-31


உருளைக்கிழங்கு சாப்பிடப் பிடிக்கும் என்றால் உலகில் எந்த நாட்டுக்கும் நீங்கள் போய் வரலாம். எல்லா ஊர்களிலும் விதவிதமான சுவைகளில் உருளைக்கிழங்கில் செய்த உணவு கிடைக்கும். சாப்பாட்டுப் பிரச்னையை ஓரளவு சமாளித்துவிடலாம்’ என்கிறார் பிராட் ஜான்சன். இவர் ஒரு பயண எழுத்தாளர். உணவு பற்றி எழுதுவதற்காக நிறைய நாடுகளைச் சுற்றியிருக்கிறார்.
பிராட் சொல்வது உண்மை என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். விமானப் பயணத்தில் தரப்படும் பெரும்பான்மை உணவு வகைகளை வாயில் வைக்க முடியாது. அதிலும் ஐரோப்பிய பயணங்களில் தரப்படும் உணவு பெரும்பாலும் இத்தாலிய வகையாக இருக்கும். அவற்றை என்னால் சாப்பிட முடியாது. ஆகவே, வேகவைத்த உருளைக் கிழங்குடன் ஒரு துண்டு ரொட்டி. கடுங்காப்பி குடித்து பசியை தணித்துக்கொள்வேன்.

ஒரு காலத்தில் கைதிகளுக்கும் பன்றிகளுக்கும் மட்டுமே உணவாகப் போடப்பட்ட உருளைக்கிழங்கு, இன்று உலகில் அதிகம் சாப்பிடப்படும் பொருளாக மாறியிருக்கிறது. பைபிளில் உருளைக்கிழங்கு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால், அதை சாப்பிடக் கூடாது என்ற நம்பிக்கை மதவாதிகளிடம் இருக்கிறது. ஆனால், 16-ம் நூற்றாண்டுக்குப் பிறகு உருளைக்கிழங்கு புகழ்பெறத் தொடங்கி மக்களின் பஞ்சம் போக்கும் நிவாரணியாக மாறியது.
உருளைக்கிழங்கை நேரடியாகச் சாப்பிடுவதை விடவும் சிப்ஸாக, பிரெஞ்சு ஃபிரையாக சாப்பிடுவதையே இளம் தலைமுறையினர் விரும்புகிறார்கள். பாக்கெட்டுகளில், டின்களில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ் விற்பனை சக்கை போடு போடுகிறது. இந்தியாவில் ஒரு மனிதன் ஓர் ஆண்டில் 16 கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுகிறான்.
ஆண்டுக்கு சிப்ஸ் விற்பனை மட்டும் 2,500 கோடி ரூபாய் என்கிறார்கள். அதிகம் சிப்ஸ் சாப்பிடாதீர்கள், உடல் குண்டாகிவிடும். ஆரோக்கியக் கேடு என மருத்துவர்கள் ஆலோசனைகள் சொல்கிறார்கள். ஆனால், சிப்ஸ் விற்பனை குறையவே இல்லை. இதற்கான முக்கியக் காரணம் மரபான நமது சிற்றுண்டிகள், நொறுக்குத் தீனிகள் மறைந்து போனதே.
எந்த நாட்டு உணவகத்துக்குப் போனாலும் ஏதாவது ஒரு விதத்தில் உருளைக்கிழங்கு சாப்பிடக் கிடைக்கிறது. வேகவைத்த உருளைக்கிழங்கில் ஒரு சாதாரண வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்தைப்போல ஐந்தரை மடங்கு கூடுதல் நார்ச்சத்து உள்ளது. இதுபோலவே, புரதம் மற்றும் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. ஆகவே, விரும்பி உண்ணப்படுகிறது என்கிறார்கள்.
ஜெர்மனியில் உருளைக்கிழங்கின் நடுவில் துளையிட்டு அதில் வெண்ணைய்யை நிரப்பி அப்படியே பொரித்துத் தருகிறார்கள். வெண்ணெய் வழியும் இந்த முழு உருளைக்கிழங்குகளை ஆளுக்கு 15 முதல் 20 வரை சாப்பிடுகிறார்கள். ஜெர்மனியர்களுக்கு உருளைக்கிழங்கில் தோல் இருக்கக் கூடாது.
17-ம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களின் வருகையால்தான் இது இந்தியாவுக்கு அறிமுகமானது. சூரத் பகுதியில் முதன்முறையாக உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டது. மொகலாய சக்ரவர்த்தி ஜஹாங்கிர் ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் தூதுவராக இருந்த தாமஸ் ரோவின் மதகுருவான எட்வர் டெரி இதுகுறித்த நேரடி குறிப்பை எழுதியிருக்கிறார். வாரன்ஹேஸ்டிங் தனது ஆட்சிக் காலத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறார். அப்போதுதான் மலைகளில் இதைப் பயிரிடுவது தொடங்கியது.
போர்த்துகீசியர்களுக்கு முன்பாக சீனர்கள் வழியாக உருளைக்கிழங்கு இந்தியாவுக்கு அறிமுகமானது என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். நெல், கோதுமை, சோளம் இவற்றுக்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு உலகெங்கிலும் பரவலாகப் பயிரிடப்படுகிறது. அந்நிய செலாவணி ஈட்டித்தரும் முக்கிய வணிகப் பயிராகவும் விளங்குகிறது.
இப்போது அத்தியாவசிய உணவுப் பொருள் பட்டியலில் உருளைக்கிழங்கும் வெங்காயமும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரு தனிநபர் ஆண்டுக்கு 23.5 கிலோ உருளைக்கிழங்கைச் சாப்பிடுகிறார் என்கிறார்கள். உலகிலே அதிகம் இதைச் சாப்பிடுகிறவர்கள் பொலிவியர்கள். ஒருவரே ஆண்டுக்கு 90 கிலோ சாப்பிடுகிறார் என்கிறார்கள்.
மாறிவரும் உணவுச் சூழலில் பிரெஞ்சு ஃபிரை அல்லது சிப்ஸ் சாப்பிடுவதை இளையோர் விரும்புகிறார்கள். இதை சாப்பிடுவதற்காகவே பன்னாட்டு உணவகங்களைத் தேடிப் போகிறார்கள்.
பூரி புகழ்பெறத் தொடங்கிய பிறகே உருளைக்கிழங்கு தமிழகத்தில் பிரபலமானது. பூரி மசாலாவை தோசையில் வைத்து சுடப்படும் மசாலா தோசைகள் மைசூரில் இருந்தே தமிழகத்துக்கு அறிமுகமாகின.
உருளைக்கிழங்கு இன்னமும் கடவுளின் உணவாக மாறிவிடவில்லை. சாமிகள் இன்னமும் நாட்டுக் காய்கறிகள்தான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். மனுஷன்தான் மாறிவிட்டான்.
அமெரிக்க பயணத்தின்போது, ஒரு மெக்சிகன் உணவகத்தின் வாசலில், ‘உலகம் உருளைக் கிழங்கால் இணைக்கப்பட்டிருக்கிறது’ என அறிவிப்புப் பலகை ஒன்றைக் கண்டேன். உண்மை. நம் காலத்தில் உணவுதான் உலகை இணைக்கும் பாலம். நாம் சீன உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுவதுபோல சீனர்கள் இந்திய தோசையையும் வடையையும் சாப்பிட விரும்புகிறார்கள். இத்தாலிய உணவு வகைகள் நம் குழந்தைகளுக்குப் பிடித்துப் போயிருக்கிறது. இத்தாலியப் பெண்களுக்கு இந்திய மசாலா கோழிக்கறி பிடித்திருக்கிறது. எல்லைக்கோடுகள் போட்டு நாடுகள் பிரிக்கப்பட்டபோதும் உணவு வகைகள் அவற்றை அழித்து ஒன்றுசேர்த்துவிடுகின்றன. பசியோடு உள்ள மனிதன் எல்லா நாடுகளிலும் ஒன்றுபோலதான் இருக்கிறான்.
எண்ணெயிலிட்டு பொரித்த உருளைக்கிழங்கு பிரெஞ்சு ஃபிரைஸ் என அழைக்கப்பட்டபோதும் அதற்கும் பிரான்ஸுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அதை உருவாக்கியவர்கள் பெல்ஜியத்தைச் சேர்ந்தவர்கள். 1850-களில் இருந்தே அவர்கள் உருளைக்கிழங்கை எண்ணெய்யில் பொரித்து விரும்பி சாப்பிட்டிருக்கிறார்கள். மிக மெல்லியதாக வெட்டுவதற்குத்தான் ‘பிரெஞ்ச் கட்’ என்பார்கள். பெல்ஜியத்தில் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் அதிகம் என்பதால், மெலிதாக வெட்டப்பட்ட உருளைக்கிழங்குகளுக்கு பிரெஞ்சு ஃபிரைஸ் என பெயர் வந்துவிட்டது.
மெக்கேன் ஃபுட்ஸ் என்கிற கனடா நாட்டு நிறுவனம் மிக அதிகமான அளவில் பிரெஞ்சு ஃபிரைஸைத் தயாரிக்கிறது. உருளைக்கிழங்கைப் பதப்படுத்தும் 30 தொழிற்சாலைகள் இவர்கள் வசமுள்ளன.
உருளைக்கிழங்கின் தாயகம் என தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெருவை கூறுகிறார்கள். ஒரு உருளைக்கிழங்கு வேகுவதற்கு ஆகும் நேரத்தைக்கொண்டு, இன்கா இனமக்கள் தங்களின் காலக் கணக்கை உருவாக்குகிறார்கள். அந்த அளவு அவர்களின் முக்கிய உணவாக இருந்திருக்கிறது.
மிஷனரிகள் மலைவாழ் மக்களைத் தேடி பெருவின் அடர்ந்த காட்டுக்குள் போனபோது அவர்களுக்கு உணவாக அறிமுகமாகியிருக்கிறது உருளைக்கிழங்கு. அதைப் பயன்படுத்தி மாய மந்திரங்கள் செய்ய முடியும், அதன் வழியே சாத்தானை வசியப்படுத்த முடியும் என ஸ்பானிய ரசவாதிகள் நினைத்தார்கள்.
இன்றும் பெருவில் நவம்பர் 1-ம் நாள் பூமியில் உருளைக்கிழங்கு ஒன்றை விதைத்து பூமித் தாயின் கருணை வேண்டி விவசாயிகள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
ஆண்டிஸ் மலையில் வசிக்கும் குவாச்சா இனத்தவர்கள் 140-க்கும் மேற்பட்ட உருளைக் கிழங்கு ரகங்களை விவசாயம் செய்கிறார்கள். பெருவில் மட்டும் 2,800 விதமான உருளைக் கிழங்குகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் சில மருத்துவத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
குவாச்சா இனத்தில் பெண் பார்க்கப்போகும் போது உருளைக்கிழங்கை, பெண்ணை உரிக்கச் சொல்கிறார்கள். அவள் கச்சிதமாக உரித்திருந்தால்தான் நல்ல பெண் என தேர்வு செய்வார்களாம். அதுபோலவே உருளைக் கிழங்கு விவசாயம் செய்வதற்கு முன்பாக பூமிக்கு சாந்தி சடங்கு செய்து வணங்கியே விதைக்கத் தொடங்குவார்களாம்.
சில உருளைக்கிழங்கு வகைகளைப் பறித்து ஓடுகிற தண்ணீரில் நாலைந்து நாட்கள் ஊறப்போடுவார்களாம். அப்போதுதான் அது மிருது தன்மை அடையும் என்கிறார்கள். 15-ம் நூற்றாண்டில்தான் உருளைக்கிழங்கு ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
டார்வின் தனது கடற்பயணத்தின்போது இனிப்பு உருளைக்கிழங்குகள் சாப்பிடுவதைக் கண்டதாக எழுதுகிறார், சர் பிரான்சிஸ் ட்ரேன். தனது பயணக்குறிப்பில் இத்தாலியில் இருந்து இங்கிலாந்துக்கு உருளைக்கிழங்கு விவசாயம் கொண்டு போகப்பட்டிருக்கிறது என்ற தகவலைக் குறிப்பிடுகிறார். பவேரிய யுத்தகாலத்தில் போர்வீரர்கள் பசியைப் போக்கிக்கொள்ள உருளைக்கிழங்கை தோண்டி எடுத்து அவித்து சாப்பிட்டார்கள் என்ற தகவலைக் காணமுடிகிறது.
பிரான்ஸின் மருந்தியல் நிபுணரான ஏ.பர்மெண்டியர் ஜெர்மனில் கைதியாக இருந்த நாட்களில் உருளைக்கிழங்கு பற்றி அறிந்திருக்கிறார். விடுதலையான பிறகு அவர் பிரான்ஸுக்குச் சென்று பயிரிடத் தொடங்கினார் என மில்லேயின் நூல் குறிப்பிடுகிறது.
ரஷ்யாவின் பீட்டர் அரசன் உருளைக் கிழங்கு சாப்பிடுவதில் அதிக விருப்பம் கொண்டிருந்திருக்கிறான். ஆனால், மதத் துறவிகள் உருளைக்கிழங்கினை சாத்தானின் ஆப்பிள் என்றும் ஈடன் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனி என்றும் கூறி, அதை சாப்பிடுவதில் இருந்து தடுத்து வைத்திருந்தனர்.

Aug 19, 2014

உணவு யுத்தம்! -30

ஆம்லெட் திருவிழா!

பிராய்லர் கோழிகளைப் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையில் வழக்கறிஞர் சுந்தரராஜன் நிறைய தகவல்கள் தருகிறார். அதில் தமிழ் இலக்கியத்தில் சங்க இலக்கியம் முதல் சமீபத்திய திரைப்பட பாடல்கள் வரை கோழிகள் குறித்து நிறைய எழுதப்பட்டுள்ளன. மதம்கொண்ட யானையை சேவல் ஒன்று வென்றதாகக் கூறப்படும் தொன்மக் கதை ஒன்றின் விளைவாக உறையூருக்கு கோழியூர் என்ற பெயர் வந்ததாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுகிறார்.
பதார்த்த குணசிந்தாமணி நூலில், ‘கோழிக் கறியானது அதை உட்கொள்வோருக்கு உடல்சூட்டைக் கொடுக்கும். மந்தத்தைப் போக்கும். உடல் இளைக்கச் செய்யும். போகம் விளைவிக்கும்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது

பிராய்லர் கோழிகளுக்குப் பறக்கத் தெரியாது. குஞ்சுகளைக் காப்பாற்றத் தெரியாது. விடியலில் கூவத் தெரியாது. அதற்கான உணவை தேடிப் பெறத் தெரியாது. குஞ்சு பொரித்த நாளிலிருந்து கூண்டிலோ, மிகக் குறைவான இடவசதி கொண்ட பண்ணைகளிலோ வளர்க்கப்படுவதால் இந்தக் கோழிகளுக்கு, நாட்டுக் கோழிகளைப்போல்  நடக்கவும் ஓடவும்கூட தெரியாது ஆகவே, இவற்றை கோழி என்றே கூற முடியாது.
அமெரிக்காவின் டியூக்கேன் பல்கலைக்கழகத்தின் உயிர்ம வேதியியல் துறை பேராசிரியர் டாக்டர் பார்த்தா பாசு என்பவர் மேற்கொண்ட ஆய்வில், பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும் ரோக்ஸார்சோன் என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறார். இந்தத் தகவல்களை சுந்தரராஜன் கூறுகிறார்.
எப்படி உணவுத் தேவைக்காக மீன் உற்பத்தி செய்யப்படுகிறதோ, காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றனவோ, அதுபோலவே கோழிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகெங்கும் கோழிப் பண்ணைகள் முக்கியத் தொழிலாக வளர்ந்து விட்டிருக்கின்றன. இந்தியா கோழி உற்பத்தியில் ஐந்தாவது இடத்திலிருக்கிறது. முட்டை உற்பத்தியில் மூன்றாவது இடத்திலிருக்கிறது. ஆண்டுக்கு 55.64 பில்லியன் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 64,89,000 டன் கோழி இறைச்சி விற்பனையாகிறது. இந்தியாவில் 307.07 மில்லியன் கோழிகள் இருக்கின்றன. புரதச் சத்து கிடைப்பதற்குக் கோழிகளே உறுதுணை என்கிறார்கள் கோழி உற்பத்தியாளர்கள்.
பிராய்லர் கோழிகளின் வருகையால் நாட்டுக் கோழி இனங்கள் மெள்ள அழிந்து வருகின்றன. விவசாயம் பொய்த்துப் போனது இதற்கு இன்னொரு காரணம். நாட்டுக் கோழிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள் சூழலியல் அறிஞர்கள்.
ஒரு பக்கம் பிராய்லர் கோழிகள் உற்பத்தி பற்றி விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும்போது இன்னொரு பக்கம் கோழிக்கறியை விதவிதமான சுவைகளில் சுடச்சுட பரிமாறும் பன்னாட்டு உணவகங்கள் ஆடம்பரமான கடைகளாக பெருகி வருகின்றன.

இந்தியாவில், பொறித்த கோழிக்கறி மட்டும் விற்பனை செய்யும் வணிகத்தின் வழியே ஆண்டுக்கு 718 
கோடி ரூபாய் கிடைக்கிறது என்கிறார்கள். இந்த உணவுத் தயாரிப்பில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன, எந்த அளவில் சேர்க்கப்படுகின்றன என்பது ரகசியம். இதை அறிந்து கொள்ளாமல் சாப்பிடுவது அறியாமையில்லையா? உண்மையில் சுவையூட்டுவதற்காகவும் கோழிக்கறி கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைக்கப்படுவதற்கும் ஏகப்பட்ட ரசாயன உப்புகள் சேர்க்கப்படுகின்றன. அவை நம் உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள்.

எதிர்காலத்தில் கோழிக்கறி மட்டுமே தனித்த உணவாக சாப்பிடப்படும் சூழ்நிலை உருவாகும். அதுபோலவே கோழிக்கறியை பவுடர் செய்து விற்பனை செய்வார்கள். அதை தண்ணீரில் கலந்து குடித்துக்கொள்ள நேரிடும் என்கிறார் உணவியலாளர் மார்க்கெரட்.
கிராமப்புற வாழ்க்கையில் வீட்டைச் சுற்றி நிறைய புழுக்களும் பூச்சிகளும் இருக்கும். அவை வீட்டுக்குள் வந்துவிடாமல் தடுக்கவே வாசலில் கோழிகளை வளர்த்தார்கள். சின்னஞ்சிறு புழுக்களைக்கூட கவனமாக கோழி கொத்தி சாப்பிட்டுவிடும் என்பதால், அது மனிதர்களுடன் கூடவே வாழ்ந்தது. கோழி இடும் முட்டைகளை மனிதர்கள் முழுமையாகச் சாப்பிட்டுவிட மாட்டார்கள். அதை அடைகாக்க வைத்து குஞ்சு பொறிக்கச் செய்வார்கள்.
கோழி தன் குஞ்சுகளுடன் ஒன்றாக இரை எடுக்க சுற்றுவதும் பருந்தைக் கண்டால் குஞ்சை பாதுகாப்பதும் தாய்மையின் அடையாளம். கோழி வளர்ப்பு பண்பாட்டின் கூறாகவே இருந்து வந்திருக்கிறது. இன்று எல்லாமும் வணிகமயமாகிப் போனது போலவே கோழிகளும் வணிகப் பொருள் ஆகிவிட்டன. ‘கோழி எப்படி சப்தம் போடும் என்று இன்று நகரங்களிலுள்ள குழந்தைகளுக்குத் தெரியாது. அவர்கள் கோழியை உண்ணும் பொருளாக மட்டும்  பார்க்கிறார்கள். அது ஒரு பறவை என்பதேகூட ஆச்சர்யமாகத்தான் இருக்கும்’ என்கிறார் செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள்.
கோழியைப் போலவே முட்டையும் இந்த நூற்றாண்டின் முக்கியமான உணவுப் பொருளாகிவிட்டிருக்கிறது.
நாளன்றுக்கு சாலையோர புரோட்டா கடையில் 10 முதல் 15 தட்டுகள் வரையில் முட்டைகள் காலியாகின்றன. ஒரு தட்டில் 30 முட்டை இருக்கும். 15 தட்டு என்றால் 450 முட்டைகள் வரை சாதாரணமாக ஒரு புரோட்டா கடையில் காலியாகிறது. புரோட்டா சாப்பிட வருகிறவர்களில் ஆம்லெட், ஆஃப் பாயில் இல்லாமல் சாப்பிடுகிறவர்கள் குறைவு.
14-ம் நூற்றாண்டில் இஞ்சியும் மூலிகைகளையும் ஒன்றுசேர்த்து ஆம்லெட் செய்திருக்கிறார்கள். ஒருமுறை நெப்போலியன் தனது படையுடன் வரும்போது தெற்கு பிரான்ஸில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அவருக்கு இரவு உணவு கொடுத்திருக்கிறார்கள். அதில் ஆம்லெட் இடம்பெற்றிருக்கிறது. அதன் சுவையில் மயங்கிய நெப்போலியன் அந்த ஊரில் கிடைத்த ஒட்டுமொத்த முட்டைகளையும் சேர்த்து தனது படை வீரர்களுக்காகப் பெரிய ஆம்லெட் செய்து தரும்படி கட்டளை இட்டிருக்கிறார். அந்த பழக்கமே இன்றும் ஈஸ்டர் ஆம்லெட் என ஊர் ஒன்று கூடி ஆம்லெட் செய்து பகிர்ந்து உண்ணும் பழக்கமாக உருமாறியிருக்கிறது.
1651-ல் பிரான்ஸின் பியரே பிரான்கோஸ் என்பவர் முட்டைகளைக் கொண்டு 60 விதமான உணவுகளை எப்படி சமைப்பது என்றொரு புத்தகம் எழுதினார். அது பிரபலமாகியதன் காரணமாக முட்டை விற்பனை அதிகமாகியது.

1834-ல் சீனாவின் காண்டோன் துறைமுகத்துக்குள் அந்நிய நாட்டு கப்பல்கள் அனுமதிக்கப்பட்டன. இங்கிலீஷ் கப்பல் ஒன்று சரக்கு ஏற்றிக்கொண்டு காண்டோன் துறைமுகத்துக்கு வந்தது. அந்தக் கப்பல் திரும்பி வரும்போது விக்டோரியா மகாராணிக்குப் பரிசாகக் கோழிகள் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டன. அந்தக் கோழி இனம் அதன் முன்பு ஐரோப்பாவில் அறிமுகமாகாத ஒன்று. இங்கிலாந்தில் கண்காட்சியாக வைக்கப்பட்ட அந்தக் கோழியை, பல்லாயிரம் மக்கள் வேடிக்கை பார்த்துப் போனார்கள்.

கோழி வளர்ப்பில் முதல் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் சீனாவும் மூன்றாவது இடத்தில் பிரேசிலும் நான்காம் இடத்தில் மெக்சிகோவும் ஐந்தாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.
கூண்டில் அடைத்து கோழிகளை வளர்ப்பது தவறு என விலங்குநல வாரியம் எழுப்பிய குரலைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம், கூண்டு கோழி வளர்ப்பு முறையை தமது சார்பு நாடுகளில் தடைச் செய்திருக்கிறது. ஆஸ்திரியா 2004-ம் ஆண்டு முதல் கூண்டு கோழி வளர்ப்பு முறையைத் தடை செய்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
கோழி சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றாலும், அளவோடு அறிந்து சாப்பிட வேண்டும். இரவு இரண்டு மணிக்கு சாலையோரக் கடையில் கசட்டு எண்ணெய்யில் பொறித்து எடுத்த காரமான சிக்கனை சாப்பிட்டால் வயிறு உபாதை கட்டாயம் ஏற்படும். ஆனால், பலரும் அதைப்பற்றி யோசிப்பதே இல்லை. நாக்குக்கு அடிமையானவர்களைப் போலவே நடந்து கொள்கிறார்கள் என்பதே வருத்தப்பட வேண்டிய விஷயம்.

உணவு யுத்தம்!-29

வனராஜா, சோனாலி, தேவேந்திரா, விஷால், தன்ராஜா, உத்தம், ஸ்வேதா, பியர்ல், கிரிஷிப்ரோ, கிரிராஜா. சுவர்ணதாரா இவை எல்லாம் யாருடைய பெயர்கள் எனத் தெரிகிறதா? அத்தனையும் பிராய்லர் கோழி இனங்களின் பெயர்கள்.

சாலையோர தள்ளுவண்டி கடைகள் தொடங்கி ஸ்டார் ஹோட்டல்கள் வரை எங்கு சென்றாலும் சிக்கன்தான் முக்கிய உணவுப் பொருளாக இருக்கிறது.
கிரில் சிக்கன், ஃபிங்கர் சிக்கன், செட்டிநாடு சிக்கன், சிக்கன் 65, முந்திரி சிக்கன், சில்லி சிக்கன், போன்லெஸ். தந்தூரி, ஆப்கானி, சிக்கன் டிக்கா, சிக்கன் நக்கட்ஸ் நாட்டுக் கோழி வறுவல், சிக்கன் ஹலீம், சிக்கன் மொகல், கடாய் சிக்கன், அராப் சிக்கன்… என நூற்றுக்கணக்கான வகைகளில், ருசிகளில் கோழி இறைச்சி சமைத்து சாப்பிடப்படுகிறது. இந்தியாவில் கோழிக்கறி சாப்பிடுகிற பழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தபோதும், கடந்த 50 வருஷங்களுக்குள்தான் கோழி அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருளாக மாறியிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம், பிராய்லர் கோழிகளின் வருகை.

சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களில் கோழி இறைச்சி மட்டுமே சாப்பிடுவதற்காக நிறைய கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. அதில் இளைஞர்கள் அலைமோதுகிறார்கள். தட்டு நிறைய பொறித்த கோழியை வாங்கி வைத்துக்கொண்டு சாப்பிடுகிறார்கள். எண்ணெய்யில் பொறித்த கோழிக்கறி இன்று நொறுக்குத்தீனியாக மாறியிருக்கிறது. எந்த விருந்துக்குப் போனாலும் சிக்கன் பிரியாணி இடம்பெறுகிறது. குடிமக்களின் ஆதரவால் சிக்கன் விற்பனை பெரிதும் சூடுபிடித்திருக்கிறது.
சிக்கன் 65 என்ற உணவே சென்னையில்தான் அறிமுகம் ஆனது என்கிறார்கள். 65 நாட்கள் ஆன கோழியின் கறி என்பதால் இந்தப் பெயர் வந்தது எனவும், அப்படியில்லை ராணுவ வீரர்களின் உணவுப் பட்டியலில் 65 எண் இடப்பட்ட கோழிக்கறி என்பதால் இந்தப் பெயர் வந்தது என்றும் இரண்டு விதமாகக் கூறுகிறார்கள்.
தயிரும் மசாலாவும் சேர்ந்து செய்யப்படும் தந்தூரி சிக்கன், டெல்லியில் உள்ள மோதி மஹால் ஹோட்டலில்தான் முதலில் அறிமுகமாகியிருக்கிறது. இதை அறிமுகப்படுத்தியவர் குந்தன் லால் குஜ்ரால். இவர் பெஷாவரைச் சேர்ந்தவர். ரொட்டி சுடுவதற்கான தந்தூரி அடுப்பைப் பயன்படுத்தி இவர் கோழியைச் சமைத்திருக்கிறார். அதன் ருசி பிடித்துப்போகவே, தந்தூரி சிக்கன் தயாரிப்பதில் அவர் பிரபலமானார்.
இந்தியப் பிரிவினையின்போது இவர் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்துவிடவே, டெல்லியின் தரியாகஞ்ச் பகுதியில் ஒரு உணவகத்தைத் தொடங்கி தந்தூரி சிக்கனை விற்பனை செய்தார். நேரு, கென்னடி, நிக்ஸன் உள்ளிட்ட பிரபலங்கள் பலருக்கும் தந்தூரி சிக்கன் பிடித்துப் போகவே, டெல்லியில் பிரபலமான உணவாக மாறியது என்கிறார் மதுர் ஜாப்ரே. இதேபோல சிக்கனைச் சமைக்கும் முறை தார் பாலைவனத்தில் உள்ள பாத்தி இன மக்களிடமும் காணப்படுகிறது. இதன் மாறுபட்ட விதம் ஆர்மீனியாவிலும் உள்ளது என்கிறார்கள்.
கோழிக்கறியை சமைப்பதில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒருவிதம் இருக்கிறது. சீனர்கள் வேகவைத்த கோழி இறைச்சியைத்தான் விரும்புகிறார்கள். ஆப்பிரிக்க மக்கள் பாமாயிலில் பொறித்த கோழியை அதிகம் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் கோழி இறைச்சியில் மிளகுதான் சேர்க்கப்படுகிறது; மிளகாய் பயன்படுத்துவது இல்லை. தந்தூரி அடுப்பில் வாட்டிய கோழிகள், அரபு நாடுகளில் பிரபலம். ஸ்காட்லாந்தில் கொழுப்பில் வேகவிட்ட கோழி இறைச்சியே முக்கிய உணவு.
ஜப்பானியர்கள் கோழியை வேகவைத்து அந்தத் தண்ணீருடன் சோயா சாறு சேர்த்துச் சாப்பிடுகிறார்கள். பிலிப்பைன்ஸில் அன்னாசி பழங்களைச் சேர்த்து கோழி சமைப்பதைக் கண்டிருக்கிறேன். மலேசியாவில் தேங்காய் எண்ணெய்யில் பொறித்த கோழி கிடைக்கிறது. தைவானின் இரவு நேர உணவகங்களில் சமைக்கப்படும் கோழிகளில் மதுவகைகள் சேர்க்கிறார்கள். கொரிய கோழிக்கறியில் பூண்டும் துளசி இலைகளும் சேர்க்கப்படுகிறது. வட இந்தியாவில் கோழிக்கறியை சமைக்கிற விதமும் தென்னிந்திய சமையலும் முற்றிலும் வேறுபாடானது. அதிலும் குறிப்பாக மதுரையைச் சுற்றிய கிராமப்புறங்களில் சமைக்கப்படும் கோழிக் குழம்பின் சுவை நிகரற்றது.
கோழி எப்படி இந்த நூற்றாண்டின் மிக முக்கிய உணவாக மாறியது? உணவுச் சந்தையில் எந்தப் பொருளை உலகெங்கும் விற்க வேண்டும், எப்படி விற்க வேண்டும் என்பதற்கு அமெரிக்காவே முன்னோடி. சிக்கன் விற்பதும் அவர்கள் தொடங்கி வைத்த வணிகமே. அதை ஆஸ்திரேலியர்கள் அடுத்த கட்டத்துக்குச் கொண்டுசென்றார்கள். விளைவு… இன்று உலகெங்கும் ஃபிரைடு சிக்கன் கடைகள் தனிச் சந்தையாக வளர்ந்து நிற்கின்றன.
அன்று நாட்டுக் கோழிகள் மட்டுமே விரும்பி சாப்பிடப்பட்டன. அதிலும் நோயாளிகள் ஆரோக்கியம் பெறுதவற்கே கோழிச்சாறு கொடுப்பது வழக்கமாக இருந்தது. திடீரென விருந்தினர் வந்துவிட்டார்கள் என்றாலோ, வீட்டுக்கு மாப்பிள்ளை வந்திருக்கிறார் என்றாலோதான், கோழி அடித்து குழம்பு வைப்பார்கள். கோழியை இப்படி முழுமையாக எண்ணெய்யில் பொறித்து சாப்பிடுவதை எனது பால்யத்தில் நான் கண்டதே இல்லை. சாலையோரம் தள்ளுவண்டிகளில் சிக்கன் விற்கப்படுவது, கடந்த 10 ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட மாற்றமே.
இரண்டு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக கோழி சாப்பிட்டால் உடம்பு அதிக சூடாகிவிடும் என, வீட்டில் சமைக்க மாட்டார்கள். இன்று பேச்சிலர்களாக வாழும் பெரும்பான்மை இளைஞர்கள், அன்றாடம் கோழி இறைச்சி சாப்பிடுகிறார்கள். வீடுகளில்கூட வாரம் மூன்று நான்கு முறை சமைக்கப்படுகிறது.
நாட்டுக் கோழி, லெக்கான் கோழி என்ற இரண்டு விதங்கள்தான் ஆரம்ப காலங்களில் இருந்தன. கடைகளில் முட்டை வாங்கப் போகும்போது, லெக்கான் கோழி முட்டை என வெள்ளை வெளேர் எனத் தனியாக அடுக்கி வைத்திருப்பார்கள். விலையும் குறைவு. நாட்டுக் கோழி முட்டையின் நிறம் லேசாக மஞ்சள் படிந்திருக்கும். லெக்கான் கோழிகளைச் சாப்பிடுவது என்பது கௌரவக் குறைச்சலாகக் கருதப்பட்டது.
கோயில் விழாக்களில். விருந்துகளில் நாட்டுக் கோழி மட்டுமே சமைக்கப்பட்டது. லெக்கான் கோழிகள் நமது ஊரின் நாட்டுக் கோழிகளைவிட தளதளவென வளரக் கூடியவை. அவற்றின் கறி ருசிக்காது என்றே பெருவாரியான மக்கள் நம்பிவந்தார்கள். அந்த நாட்களில் லெக்கான் என்றால், இத்தாலியில் உள்ள ஒரு துறைமுகம் என கோழி சாப்பிட்ட ஒருவருக்கும் தெரிந்திருக்காது.
மத்திய இத்தாலியில் உள்ள லெக்கான் என்ற துறைமுகத்துக்கு 1828-ல் வந்து இறங்கிய கோழி ரகமே லெக்கான். இதன் பூர்வீகம் வட அமெரிக்கா. வெள்ளை நிறமான கோழி. இதனை 1870-களில் பிரிட்டனுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அதில் கலப்பினம் உருவாக்கப்பட்டு கறுப்பு, சிவப்பு வால் கொண்ட கறுப்பு, பிரௌன் நிற கோழிகள் என 10 வகைகள் உருவாக்கப்பட்டன. இந்தக் கோழிகள் ஆண்டுக்கு 280 முதல் 300 முட்டைகள் வரை இடக்கூடியது என்பதால், லெக்கான் கோழி வளர்ப்பில் பலரும் ஆர்வம் காட்டினார்கள்.
இரண்டாம் உலகப் போருககுப் பிந்தைய உணவுப் பஞ்சமே கோழிப் பண்ணைகள் உருவாக முக்கியக் காரணம் என்கிறார்கள். அதே நேரம் உணவுச் சந்தையில் கோழி ஒரு பிரதான உணவுப் பொருள் என்பதால், அதை முக்கியத் தொழிலாக வளர்த்து எடுப்பதன் வழியே கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியும் என வணிகர்கள் நம்பினார்கள்.
அமெரிக்காவில் இந்தக் கோழிப் பண்ணைகள் அமைக்க ஆரம்ப காலங்களில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அதை லாகவமாக சமாளித்து அனுமதி பெற்றார்கள். அதன் பிறகே கோழிப் பண்ணை பெரிய தொழிலாக அமெரிக்காவில் வளர ஆரம்பித்தது.
ஒரு நாட்டுக் கோழியின் வாழ்நாள் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள். பிராய்லரின் அதிகப்படியான வயது 72 வாரம். அதாவது, அது முட்டையில் இருந்து வெளிவந்து குஞ்சாக வளர்வது முதல் எட்டு வாரங்கள். அதன் பிறகு வரும் எட்டு வாரங்களை வளர்பருவம் என்கிறார்கள். கோழி 17-வது வாரத்தில் இருந்து தொடர்ந்து முட்டைகள் இட ஆரம்பிக்கும்.
பண்ணைகளில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள், நாட்டுக் கோழிகளைப் போல முட்டையில் இருந்து தாய்க் கோழியின் சூட்டினால் பொறித்து வருவது இல்லை. மின் உஷ்ணத்தால் பொறிக்கப்பட்டு, வளர்க்கப்படும் கோழிகளாகும். ஒரு கோழி 72 வாரத்தில் வரை சுமார் 300 முட்டைகள் வரை இடக்கூடும். ஒன்றரை கிலோ அளவு கோழி வளர்வதற்கு, முன்பு 98 நாட்கள் ஆகும். ஆனால் இப்போது 37 நாளில் வளர்ந்துவிடுகிறது. காரணம், அதற்குத் தரப்படும் உணவுகள் மற்றும் செயற்கை மருந்துகள்.
இவற்றை கோழி என்றே சொல்லக் கூடாது. இவை ரசாயன உரம் போட்டு வளர்க்கப்படும் ஒரு உணவுப் பொருள் அவ்வளவே!

நலம் '360 9,10,11,12,13,14

அலர்ஜி.. நலம்36*

லர்ஜி... சமீபமாக உடல்நலம் குறித்த உரையாடலில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயம்! 'எனக்குக் கத்திரிக்காய் அலர்ஜி... கருவாடு அலர்ஜி... கடலை அலர்ஜி...’ என ஆரம்பித்து, மாடிக் காற்று அலர்ஜி, பருவ மழை அலர்ஜி என ஒவ்வாமைக்கான காரணங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 'குழந்தைக்கு பால் அலர்ஜியாம். அதனால் நான் இப்போ தாய்ப்பால் கொடுக்கிறதே இல்லை..’ என்பது இந்தப் பட்டியலில் பதறவைக்கும் பயங்கரம். உலக அளவில் இந்த அலர்ஜி பிரச்னை குழந்தைகளை அதிகம்  படுத்துவதாக, குறிப்பாக வளர்ந்த நாடுகளான அமெரிக்க, ஐரோப்பிய தேசங்கள் புலம்புகின்றன.
சாதாரண மூக்கடைப்பு, தும்மல், கண்ணிமைக் கசக்கல் எனத் தொடங்கி, சில நேரங்களில் தடாலடியாக உதடு, முகம் வீங்குவது, சிறுநீர் தடைபடுவது, மூச்சிரைப்பு... என நபருடைய நோய் எதிர்ப்பாற்றலைப் பொறுத்தும், அவர் சாப்பிட்ட, முகர்ந்த பொருளைப் பொறுத்தும் அவதாரம் எடுக்கும் இந்த அலர்ஜி, சில நேரங்களில் Anaphylactic shock எனும் தடாலடி மரணத்தைக்கூட தரும் அபாயம் உடையது. இந்த ஒவ்வாமையால், பின்னாளில் ஆஸ்துமா, சைனசைடிஸ், எக்சிமா போன்ற பல நோய்களை வரவழைக்கும் வாய்ப்பும் உண்டு. ஒவ்வாமையால் வரும் தோல் நோயான ATOPIC DERMATITIS, வெளிநாட்டில் பிறக்கும் இந்தியக் குழந்தைகளை வாட்டும் மிக முக்கியமான தோல் அலர்ஜி தொந்தரவு. கடந்த 10 ஆண்டுகளில் இந்த நோய்க்கூட்டம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
துடைப்பத்தை வைத்துப் பெருக்கி, தூசி தட்டிய காலத்தில் இந்த அலர்ஜி பிரச்னை அவ்வளவாக இல்லை. 'குனியாமல் நிமிராமல் வீட்டுக் குப்பையை உறிஞ்சி சுத்தம் செய்யலாம்’ என மோட்டார் துடைப்பத்தை வாங்கிய பின், 'எங்க மிஸ் சொன்னாங்க’ என, குழந்தைகள் மணிக்கு ஒரு தடவை கைகளை சானிடைசர் வைத்துக் கழுவ ஆரம்பித்த பின், சாணம் கரைத்து முற்றம் கழுவித் துடைத்ததை மறந்து, தொலைக்காட்சி சேனல் விளம்பரங்கள் பரிந்துரைத்த கலர் கலர் ரசாயனக் கலவைகளால் தரையை மெழுகத் தொடங்கிய பின், 'நாங்க உலகத் தரக்கட்டுப்பாடுகளில் ஒன்றுவிடாமல் பின்பற்றுகிறோமாக்கும்’ என உதார்விட்டு விற்கப்படும் உணவுப் பண்டங்களால் சந்தையை நிரப்பிய பின்... 'அலர்ஜி’ அதீதப் பயம் காட்டுகிறது. ஏன்?
'சுத்தம் சோறு போடும்’ என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு 'அதிதீவிர சுத்தம் சொறி, சிரங்கை உண்டாக்கும்’ என்பதும் உண்மையோ என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறது மேலை நாட்டு அறிவியல். செயல்திறன் முடக்கப்பட்ட கிருமிகளை தடுப்பூசிகளாக உடலுக்குள் செலுத்தி, அதற்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை எப்படி உருவாக்குகிறார்களோ, அதேபோல நம்மைச் சுற்றி இருக்கும் நுண்ணுயிரிகளில் சேட்டைக்காரருக்கு எதிராக மட்டும் வேலி கட்டும் வேலையை, நம் உடல் தானாகவே செய்துவிடும். ஆனால், அது புரியாமல் நுண்ணுயிரிகளின் வாசம் படாமல், 'இன்குபேட்டர் கவனிப்பில்’ குழந்தைகளை வளர்க்கும்போது, அவர்களது நோய் எதிர்ப்பாற்றல், யார் எதிரி எனத் தெரியாமல் கன்னாபின்னாவென வாள் சுழற்றத் தொடங்குவதே அலர்ஜி பெருக்கத்துக்கான அடிப்படைக் காரணம். அதனால்தான், அமோனியாவைப் பார்த்தால் மூச்சை இறுக்கி அதனை உடம்புக்குள் நுழையாது தடுக்கவேண்டிய நோய் எதிர்ப்பாற்றல், ஆற்று மீனுக்கும், கடலை உருண்டைக்கும், காற்று, தூசிக்கும்கூட மூச்சை இறுக்கத் தொடங்குகிறது.
'அது சரி... 'அதிசுத்தமாக’ இல்லாதவர்களுக்கும் அலர்ஜி வருகிறதே’ என்று கேட்கிறீர்களா? சரிவிகித உணவு சரியாகக் கிடைக்காதவருக்கும், சாப்பிடாதவருக்கும் அலர்ஜி அட்டூழியம் அதிகம். அதற்கு மிக முக்கியமான காரணம், 'எங்கள் நாட்டுக் குப்பைகள், உங்கள் நாட்டின் ஏதேனும் ஒரு மூலையில் கொட்டப்படும்’ என வளரும் நாடுகளுடன் வளர்ந்த நாடுகள் போடும் வணிக ஒப்பந்தங்களும் ஒரு காரணம். சூழல் சிதைவைத் தரும் கண்ணாடி கம்பெனி, கார் கம்பெனி, கலர் கலரான சாயப்பூச்சைப் பயன்படுத்தும் உள்ளாடை தயாரிப்பு கம்பெனி, துருப்பிடிக்காமல் இருக்க இயந்திரங்களுக்குப் பூச்சு போடும் கம்பெனி, அணுவைப் பிளக்கும் கம்பெனி, அணுவை அளக்கும் கம்பெனி... என அத்தனை கம்பெனிகளையும், 'வேலைவாய்ப்பு வருது; அந்நிய செலாவணி வருது; அழகழகான கட்டடம் வருது’ என்று சொல்லி இங்கே செயல்பட அனுமதிப்பதும் பிரதான காரணம். விவசாய நிலங்களைப் பறித்து அவர்களுக்குக் கொடுத்து, 'இங்கே வரி கட்டாமல் நீங்க ஆட்டம் போடுங்க. காலத்துக்கும் உங்களுக்குக் கூலிக்கு வேலை பார்க்க அழுக்கு வேட்டிப் பாமரனில் இருந்து, ஆடி கார் அறிவாளி வரை நாங்கள் தருகிறோம்’ என்று சொல்லி சிவப்புக் கம்பளம் விரிக்கிறோம். அவர்களும் சத்தமே இல்லாமல் நம் தாய் மண்ணில், காற்றில், நீரில் நச்சுக்களைக் கலக்க, அது அலர்ஜியை பல வடிவங்களில் பரிசளிக்கிறது.

ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லியையும் அள்ளித் தெளித்ததில் உணவு, காய்-கனி கூட்டம் அத்தனையிலும் நச்சுத்துணுக்குகள். போதாக்குறைக்கு வாசம் தர, வேஷம் கட்ட, வணிகப் போட்டியில் பிற சின்ன வணிகர்களை நசுக்க என, ரசாயனம் கலந்த நச்சு உணவுகளை வீதிவீதியாக விற்கும் பன்னாட்டுத் துரித உணவகங்கள் வேறு. விளைவு..? அத்தனை காய்-கனிகளிலும் அலர்ஜி அளிக்கும் சாத்தான்கள்.
சூழல் அழுத்தத்தில் கடைசிக் குரங்கில் இருந்து முதல் மனிதன் வருவதற்கு, 1.2 மில்லியன் ஆண்டுகள் ஆனதாம். இத்தனைக்கும் இரண்டுக்கும் வித்தியாசம் 1 சதவிகிதத்துக்கும் குறைவான மரபணுக்களே. ஆனால், இன்று தவளையின் மரபணுவை தக்காளியிலும், விஷம் கக்கும் நுண்ணுயிரியின் மரபணுவை கத்திரியின் மரபணுவிலும் சில ஆண்டு ஆய்விலேயே ஒட்டி வெட்டி, 'புது ஜந்து’ படைக்கிறார்கள் கலியுக பிரம்மாக்கள். 'லேசாத்தான்யா அரிக்கும்... வேற ஒண்ணும் செய்யாது’ என எதிர்ப்பு எச்சரிக்கைகளையும் மீறி, 'ஓர் உலகம்... ஒரு கம்பெனி... ஒரே விதை’ என்ற கனவுடன் உழைக்கிறார்கள். வருங்காலத்தில் மரபணு பயிர்கள் என்னவிதமான அலர்ஜியைத் தரும் என்பதைப் பொறுத்திருந்து (இருந்தால்..?) கவனிக்க வேண்டும்.
இப்போதைக்கு அலர்ஜியின் பிடிகளில் இருந்து விலகி இருக்க ஒரே வழி, கொடூரத் தொழில்நுட்பத்தின் பிடியில் இருந்து கொஞ்சம் விலகி, இயற்கை விவசாயத்தில் விளையும் பயிர்களால் முடிந்த வரை பசியாற்றிக் கொள்வதுதான். எந்தக் காரணம்கொண்டும், லேபிளில் ஒட்டியிருக்கும் பெயர் தெரியாத ரசாயனப் பெயர்களைப் படித்துவிட்டு, 'டி.வி-யில இதைக் குடினு சொல்றவுக வெள்ளையா இருக்காங்க. சூட், கோட்லாம் போட்டிருக்காங்க. அவுக சொன்னா, சரியாத்தான் இருக்கும்’ என, பழக்கம் இல்லாத புதிய கலவை உணவை உள்ளே அனுப்பாதீர்கள். ரசாயனம் செறிந்த துரித உணவுகளும், கெமிக்கல் பூச்சுத் தெளிக்கப்பட்ட காய்-கனிகளும் குடலுக்குள் 'லைன் வீடு’ அமைத்து சந்தோஷமாகக் குடியிருக்கும் நுண்ணுயிர் கூட்டத்துக்குக் குண்டு வைக்கும். அதுவரை உடம்பின் பாதுகாவலனாக இருந்த அவை, குழம்பித் தெறித்து ஓடுவதில், ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் சில திடீரெனப் பல்கிப் பெருகும். அவை முகத்தின் எலும்புப் பதிவுகளில் கேம்ப் அடிக்கும்போது சைனசைடிஸ்; மூச்சுக்குழல் பாதையில் மணல் குன்றமைத்து குத்தவைக்கும்போது ஆஸ்துமா, தோலுக்கு அடியில் 'கொடி நடை’ நடத்தும்போது எக்சிமாவோ, அடோபிக் டெர்மடைடிஸோ?
காரத்துக்கு மிளகு இருந்த வரை, இனிப்புக்குப் பனை வெல்லமும் தேனும் இருந்த வரை, புளிப்புக்கு என நம் பாரம்பரியப் பழம்புளியான குடம் புளி இருந்த வரை அலர்ஜி இருந்ததாக மருத்துவ இலக்கியச் சான்றுகள் இல்லை. 'பத்து மிளகு இருந்தால், பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என மிளகைப் பாடியது அதன் நச்சு அகற்றும் உச்சவீரியத்தால்தான். எந்த அலர்ஜியாக இருந்தாலும் நம் முதல் தேடல் மிளகாகத்தான் இருக்க வேண்டும். அலர்ஜியை தடாலடியாக ஒருசில நிமிடங்களில் நசுக்கும் ஸ்டீராய்டுகள்போல் இல்லாமல், மிளகு மெள்ள மெள்ள நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். சீந்தில் கொடி, வரப்பு ஓரத்திலும் வேலியிலும் மிகச் சாதாரணமாக வளரும் கொடி. ஆனால், அசாதாரண அளவில் நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கி அலர்ஜி சைனசைடிஸை அறுத்தெரிகிறது என்று கண்டுபிடித்திருக்கிறது நவீன அறிவியல். அருகம்புல், நச்சு நீக்கி அலர்ஜியைப் போக்கும் எளிய புல். இது, கரப்பான் எனும் எக்சிமா நோய்க்கான சித்த மருத்துவத்தின் முதல் தேர்வு. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் இந்தப் புல்லின் சாற்றையும் சில மூலிகைகளையும் சேர்த்துக் காய்ச்சி எடுக்கப்படும் 'அருகன் தைலம்’ இந்திய மருத்துவ மருந்துகளில் மிகப் பிரபலமான மருந்து. ATOPIC DERMATITIS எனும் அலர்ஜியில் சருமத்தின் நிறம் மிகக் கறுத்து அதீத அரிப்பைத் தரும் தோல் நோய்க்கு அருகன் தைலம் இதம் அளிக்கும் இனிய மருந்து.
அலர்ஜி, அரிப்பு, தோல் நோய் உள்ளவர்கள் புளிப்பான உணவைக் குறைக்க வேண்டும். வத்தக்குழம்போ, வஞ்சிர மீன் குழம்போ ஆகாது. நார்ச்சத்தைக் நடுவில் குவித்து, விதவிதமான நிறமிச் சத்தை தோலில் சேகரித்து, சதைப்பற்றின் ஊடே சாமர்த்தியமாக பல உயிர்ச்சத்தை ஒளித்துவைத்திருக்கும் பழங்கள் அலர்ஜியில் கறுத்தத் தோலை மீட்கும் மீட்பர்கள். அதே சமயம் 
புளிப்பான ஆரஞ்சு, திராட்சையை தும்மல் உள்ளோர், கரப்பான் உள்ளோர் தவிர்க்கவும். நம் ஆயா அறிந்திராத சோயா, நம் பாட்டன் பார்த்திராத காளான் சில குழந்தைகளுக்கு அலர்ஜி தரக்கூடியன. அலர்ஜி உள்ளோர் இவற்றில் எச்சரிக்கையாக இருப்பது நலம். 'மிஸ் வேர்ல்டு’கள் மாறும்போதெல்லாம் குளிக்கும் சோப்பை மாற்றுவது உங்கள் சருமத்தின் இயல்பையும் மாற்றிவிடும்.
இன்றைக்கு சோயா, நிலக்கடலை, மீன், பால்கூட அலர்ஜியாகப் பார்க்கப்படுவதுபோல, நாளை நாம் அருந்தும் தண்ணீரும், சுவாசிக்கும் காற்றும்கூட அலர்ஜியாகக்கூடும். அப்போது தண்ணீர் தொட்டியை கையில் வைத்துக்கொண்டும், ஆக்சிஜன் புட்டியை முதுகில் கட்டிக்கொண்டும் திரியவேண்டி இருக்கும். அந்தத் தருணங்களில் கணக்குப் பார்த்து மூச்சுவிட முடியாது; காதல் களிப்பும் செய்ய முடியாது. 'இந்த உலகம் எனக்கானது மட்டுமல்ல. அனைத்து உயிர்களுக்குமானது. அவை அனைத்தையும் போற்றி மகிழவே மனிதனுக்கு ஆறாம் அறிவை இயற்கை வழங்கி இருக்கிறது’ என்ற சிந்தனையே ஒவ்வாமையை ஓரங்கட்டுவதற்கான முதல் செயல்!
- நலம் பரவும்...

சிறுதானியங்கள் அலர்ஜியை உண்டாக்குமா?
சிறுதானியங்களைச் சாப்பிட்டால் அலர்ஜி வருமா.. அரிப்பு வருமா.. தோல் நோய் தருமா? எனக் கேள்விகள் அதிகரிக்கின்றன.
சருமத்தில் உண்டாகும் ஒவ்வாமை நோயில் ஒரு வகையை 'கரப்பான்’ என்பார்கள். கரப்பான் இருந்தால் சோளம், கம்பு, திணை ஆகியவற்றை நோய் நீங்கும் வரை தவிர்க்கலாம். சித்த மருத்துவ நூல்கள்... சோளம், கம்பு, வரகு ஆகிய தானியங்களை, கரப்பான் நோய் உடையோரும், அரிப்பைத் தரும் பிற தோல் நோயினரும் தவிர்ப்பது நலம் என்கின்றன. நவீன உணவு அறிவியல், இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. நில உடைமைக்காரர்கள், 'புஞ்சை நில தானியம் உசத்தி கிடையாது’ என்று விதைத்த நெடுநாள் பொய்யை எடுத்துக்கொண்ட, இடைக்காலச் செய்தியாகவும்கூட இது இருக்கலாம். குளூட்டன் சத்து உள்ள கோதுமையையும் கோதுமை சேர்ந்த பேக்கரி உணவுகளையும் தோல் நோயினர் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.
அலர்ஜி பிரச்னை உள்ளோர் பொதுவாக புளிப்பு சுவை உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. முட்டை, மீன், கருவாடு, நண்டு, இறால் கூடாது. இறால், தடாலடி அலர்ஜியை சிலருக்கு வரவைக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் அப்படி ஓர் அலர்ஜி போக்கு இருந்தால், மேற்படி வகையறாக்களை அடுத்த தலைமுறை, கூடுதல் கவனத்துடன் நிறைய மிளகு தூவி பயன்படுத்திப் பழகலாம்.

அலர்ஜியைப் போக்க சில கைப்பக்குவங்கள்
 மேலுக்கு சோப்பு தேய்த்துக் குளிக்காமல், 'நலுங்கு மாவு’ தேய்த்துக் குளிப்பது சருமத்தை அலர்ஜியில் இருந்து காக்க உதவும்.
 வேப்பங்கொழுந்து (1 ஸ்பூன்), ஓமம் (1/4 ஸ்பூன்), மஞ்சள்தூள் (1/2 ஸ்பூன்), கருஞ்சீரகம் (1/2 ஸ்பூன்) சேர்த்து நீர்விட்டு அரைத்து உருட்டி, சுண்டைக்காய் அளவுக்கு, மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, வாரத்துக்கு ஓரு நாள் என மூன்று முறை கொடுக்க, வயிற்றுப் பூச்சி நீங்கி அரிப்பு குறையும்.
 அருகம்புல்லை (1 கைப்பிடி) ஒன்றிரண்டாக வெட்டி, 10 மிளகைப் பொடித்து, நான்கு வெற்றிலையைக் காம்பு நீக்கிக் கிழித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த மூன்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு குவளை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, அரை டம்ளராக வற்றவைத்து, பின் வடிகட்டி அந்தக் கஷாயத்தை இளஞ்சூட்டில் காலை, மாலை என 15 தினங்கள் பருகினால், 'அர்ட்டிகேரியா’ எனும் உடல் முழுக்க வரும் அரிப்பு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
( நன்றி-ஆனந்த விகடன்)

நலம் 360’ – 10

நலம் 360’ – 10

மருத்துவர் கு.சிவராமன்
 
தலைவலிக்கு 200-க்கும் மேற்பட்ட காரணங்கள். அதனால்தான் தலைவலிக்கான காரணம் தேடுவது, மருத்துவருக்கு தலைவலி தரும் விஷயம் என்பார்கள். ‘இளங்கலை மருத்துவப் படிப்புகளில் 4 மணி நேரம்தான் தலைவலியைப் பற்றி படிக்கிறார்கள். இன்னும் அதைப் பற்றி ஆழமாகப் படித்தால், உலகத்தில் 47 சதவிகிதம் பேருக்கு வருடத்தில் ஒருமுறையேனும் வதைக்கும் தலைவலியை விரட்ட உதவும். நண்பகல் 1 மணி ஷோவுக்குச் சென்று, செம போர் படம் பார்த்துவிட்டு வியர்வை கசிய, தியேட்டர் இருட்டில் இருந்து சுள்ளென அடிக்கும் வெயிலில் தலைகாட்டும்போது தலை வலிக்கும். கொஞ்சம் மோர் குடித்து ஒரு மணி நேரம் உறங்கினால், அந்தத் தலைவலி நீங்கும். ‘கொஞ்ச நாளாவே தலை வலிச்சுட்டே இருக்கு டாக்டர்’ என மருத்துவரிடம் சொன்னால், முழங்கையில் துணி கட்டி, பிரஷர் பார்ப்பார். அது லேசாக எகிறி இருக்க, அதற்குப் பின்னதான ரத்த சோதனையில் உப்புக்கள் ஓரவஞ்சனை காட்டியது புரியும். பிறகு, சிறுநீரக டாப்ளர் ஸ்கேன் செய்கையில் தலைவலிக்குக் காரணம், சிறுநீரகத்துக்குப் போகும் ரத்தக்குழாய் சுருக்கம் எனத் தெரியவரும். அப்போதுதான் நீண்ட மருத்துவம் அவசியப்படும்.

‘காதலிச்சப்போ ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ஜெனிலியா மாதிரி இருந்த பொண்ணு, இப்போ ‘முதல் மரியாதை’ வடிவுக்கரசி மாதிரி ஆகிட்டாளே’ என எப்போதும் மனைவி பற்றி பொருமுவார்கள் ஆண்கள். அதே சமயம், ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆர்யா மாதிரி நம்மைச் சுத்திச் சுத்திக் காதலிச்சானே… இப்போ

‘நான் கடவுள்’ ஆர்யா மாதிரி ஆகிட்டானே’ எனக் குழம்பிப் புலம்புவார்கள் மனைவிகள். ‘ஒண்ணு… உங்களுக்குக் கொடுத்த டார்கெட்டை முடிங்க. இல்லைனா பேப்பரைப் போட்டுட்டு ஒரேயடியாக் கிளம்புங்க!’ என்று அலுவலகத்தில் அல்லோலகல்லோலப்படுவார்கள் ஊழியர்கள், ‘அதுக்குள்ள ஒரு மாசம் ஆயிடுச்சா? இன்னும் ரெண்டு நாள்… வலியில செத்தேன்’ என மாதவிடாய் சமயத்தில் பதறும் பெண்கள்… என சமூகத்தின் பல தரப்புக்கும், தலைவலி என்பது அவர்களின் அன்றாடங்களைச் சிதைக்கும் பிரச்னை.

சாதாரண தலைவலிக்கு தேவை இல்லாமல் எடுக்கப்படும் சோதனைகள் இப்போது ஏராளம்.இது சாமான்யனின் புலம்பல் அல்ல. JAMA INTERNAL MEDICINE எனும் பிரபல மருத்துவ இதழும் இதே கருத்தைச் சொல்கிறது. தலைவலிக்காக எடுக்கப்படும் ஸ்கேன்களில் 13 சதவிகிதம் மட்டுமே, ஏதேனும் அசாதாரண முடிவுகளைக் காட்டுகின்றன. அந்த அசாதாரணங்களும்கூட பெரும்பாலும் மூளைக்கட்டி அல்லது மூளை ரத்தக்கசிவு போன்ற அபாயங்களைக் காட்டுவது இல்லை. சமயங்களில் தலைவலிக்குப் பார்த்த ஸ்கேனில், கொஞ்சம் சைனசைட்டிஸ் தெரியும். கொடுத்த காசுக்கு இதாவது தெரியவந்ததே எனத் திருப்தியடைகிறார்கள் அப்பாவிகள். விபத்துகளின்போது எடுக்கப்படும் மூளை ஸ்கேன்களைத் தவிர, தலைவலிக்கு என எடுக்கப்படும் ஸ்கேன்களால் பெரும்பாலும் பிரயோஜனம் கிடையாது.

‘தலைவலிக்கான காரணிகளைச் சரியாகக் கணித்து மருத்துவம் செய்ய வேண்டுமே தவிர, ஸ்கேனிங் செய்வது சரியான தீர்வு அல்ல’ என்கிறார் Headaches: Relieving and preventing migraine and other headachesஎனும் மருத்துவ நூலின் ஆசிரியரும் பிரபல நரம்பியல் மருத்துவருமான ஸ்பெய்ரிங்க்ஸ். ஆதலால், இனியேனும் ‘ஆடித் தள்ளுபடி விலையில் அட்டகாச ஸ்கேனிங்’ விளம்பரங்களுக்கு இரையாக வேண்டாம். உங்களை நன்கு அறிந்த குடும்ப மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே ஸ்கேன் செய்வது பற்றி தீர்மானியுங்கள். ஏனெனில், தேவையற்ற ஸ்கேன் விடும் எக்ஸ்ரே கதிர்கள் அநாவசியமாக மூளைக்குள் ஊடுருவது அவ்வளவு நல்லது அல்ல. ஒரு எக்ஸ்ரேயின் ஓரிரு விநாடி கதிர்வீச்சுக்கும், மூன்று நிமிட சி.டி ஸ்கேன் கதிர்வீச்சுக்கும் பெரும் அளவு வேறுபாடு உண்டு. உங்களைச் சுற்றி இருக்கும் மின்னணுப் பொருட்களின் மூலம் நீங்கள் இரண்டு வருட காலத்தில் சராசரியாக எதிர்கொள்ளும் கதிர்வீச்சின் அளவை, ஒற்றை சி.டி ஸ்கேன் தரக்கூடும்.

ரொம்பவே மூக்கு அடைத்து, தும்மலுடன், முகம் எல்லாம் நீர் கோத்து வரும் சைனசைட்டிஸ் தலைவலி சிறார்களுக்கும் யுவதிகளுக்கும் அதிகம். முக எலும்பின் சைனஸ் பகுதிகளில் நீர் கோத்து, கொஞ்ச நாளில் சீழ் கோத்து வரும் இந்த சைனசைடிஸ் தலைவலியைப் போக்க, நீர்க்கோர்வை மாத்திரையை நம்மவர்கள் பயன்படுத்திய வரலாறும் உண்டு. மஞ்சள், சுக்கு வகையறாக்களைச் சேர்த்து அரைத்து உருட்டிய அந்த மாத்திரையை நீரில் குழைத்து நெற்றியில், மூக்குத்தண்டில், கன்னக் கதுப்பில் தடவி, ஓர் இரவு தூங்கி எழுந்தால், தலைவலி காணாமல்போகும். கூடவே நொச்சித்தழை போட்டு ஆவி பிடிப்பது, இரவில் மிளகு கஷாயம் சாப்பிடுவது ஆகியவையும் தலைவலியைத் தீர்க்கும் வாழ்வியல் கலாசாரம். கூடவே, சீந்தில் சூரணம் முதலான சைனசைடிஸ் தலைவலியைப் போக்க சித்த மருந்துகள் ஏராளம் நம்மிடம் உண்டு. சீந்தில் கொடியை, சித்த மருத்துவத்தின் மகுடம் எனலாம். நீர்கோத்து, மூக்கு அடைத்து, முகம் வீங்கவைக்கும் சைனசைட்டிஸ் தலைவலிக்கு, சும்மாங்காட்டி அப்போதைக்கான வலி நீக்கும் மருந்தாக இல்லாமல், பித்தம் தணித்து மொத்தமாக தலைவலியை விரட்டும் அமிர்தவல்லி அது.

தலைவலி வராதிருக்க நம் வாழ்வியல் சொன்ன மிக முக்கியப் பக்குவம் எண்ணெய்க் குளியல். ‘அட… தலைக்குச் சும்மாவே குளிக்க முடியலை. இதுல எண்ணெய்க் குளியல் வேறயா?’ என்போருக்கு ஒரு சேதி. சைனசைட்டிஸோ, மைக்ரேனோ வாரம் இரு முறை சுக்கு தைலம் தேய்த்துக் குளித்துப் பாருங்கள். வலி மெள்ள மெள்ள மறைவது புரியும். பொதுவாக, வலிக்கு என மாத்திரைகள் அதிகம் எடுப்பது வயிற்றையும் குடலையும் புண்ணாக்கி, பின்னாளில் ஈரலும் சிறுநீரகமும் பாதிக்கும். குண்டூசியாகக் குத்தும் மைக்ரேன் தலைவலியைத் தீர்க்க முடியாமல் தற்கொலை வரை சிந்திப்போரும் உண்டு. அந்த நேரத்தில் வெளியில் கொஞ்சம் சத்தமாக அடிக்கும் ஹாரன், செல்லக் குழந்தையின் சின்னச் சிணுங்கல், கணவரின் அகஸ்மாத்தானக் கேள்வி, ஜன்னல் வழி பளீர் வெளிச்சம் எல்லாமே அவர்களை ஆங்கார ரூபி ஆக்கும்.

மைக்ரேன் எனும் இந்தப் பித்தத் தலைவலிக்கு இஞ்சி ஓர் அற்புத மருந்து. சில நேரங்களில் நவீன வலிநிவாரணிகளைக் காட்டிலும் சிறந்த தேர்வாக இருக்கும் இஞ்சி, மைக்ரேனைக் கொஞ்சிக் குணமாக்குகிறது என, பல மருத்துவக் கட்டுரைகள் சான்று அளிக்கின்றன. சனிக்கிழமையானால் சுக்கு வெந்நீர் சாப்பிட்டு வந்தவர்கள் நாம். இப்போது சனிக்கிழமையானால் புதுசாகத் திறந்த ஹோட்டலில், பழசாகச் செய்த உணவைத் தின்றுவிட்டு வருபவர்கள் ஆகிவிட்டோம். விளைவு… பித்தம் கூடி, அது மைக்ரேன் தலைவலியில் கொண்டுவிடுகிறது. இது வராதிருக்க சாதாரண இஞ்சித் தேனூறல், இஞ்சி ரசாயனம் என நம் பாட்டிகள் பேட்டன்ட் செய்யாத பொக்கிஷம் நம் கைவசம் இருக்கிறது! (செய்முறை விவரம் பெட்டிச் செய்தியில்)

மூன்று வயசு பாப்பா, ‘லைட்டா தலைவலிக்குது மிஸ்’ எனப் பள்ளியில் சொல்ல, அங்கு இருந்து வந்த தகவலில் அலுவலக வேலையைப் பாதியில் போட்டுவிட்டு அரக்கபரக்க ஓடி, குழந்தையை வீட்டுக்குக் கூட்டிவந்தால், ‘அப்பா… உன் செல்போன் குடு. கேம்ஸ் விளையாடணும்’ எனச் சொல்லும் குழந்தையைப் பார்க்கையில் நமக்கு தலைவலிக்கும். பொதுவாக குழந்தைகள் அன்பான அரவணைப்பை எதிர்பார்த்து தலைவலி, வயிற்றுவலி எனச் சாக்கு சொல்வதும் உண்டு. ‘அடடா… உன்னை தீம் பார்க் கூட்டிட்டுப் போகலாம்னு இருந்தேனே… தலை வலிச்சா வேண்டாம்’ எனச் சொல்லிப் பாருங்கள். குழந்தைகளின் தலைவலி சட்டெனக் காணாமல்போகும். ஆனால், இந்த மாதிரியான காரணங்கள் இல்லாமல் குழந்தைகளுக்கு அடிக்கடி தலை வலித்தால், பார்வைத்திறன், வயிற்றுப்பூச்சிகள், காது-தொண்டைப் பகுதிகளில் சளி என அவற்றை உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி சரிசெய்ய வேண்டியிருக்கும். இருசக்கர வாகனத்தில் அதிகம் பயணிக்கும் நபருக்கு, கழுத்து எலும்பின் தேய்வில் அல்லது அந்தப் பகுதி முதுகுத்தண்டுவடத் தட்டின் மிக லேசான விலகல் அல்லது வீக்கத்தில்கூட பின் மண்டை வலிக்கலாம். இதற்கு சரியான இயன்முறை சிகிச்சை, வர்ம சிகிச்சை, எண்ணெய்ப் பிழிச்சல் என்ற புற மருத்துவ முறைகளே போதும்.

வயதானவருக்கு வரும் நாள்பட்ட மைக்ரேன் தலைவலியை அலட்சியப்படுத்தக் கூடாது. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ரத்தக்கொழுப்பு பாதித்தவர்களுக்கு வரும் தலைவலி குறித்தும் கூடுதல் எச்சரிக்கை தேவை. மிகச் சாதாரணமாகத் தலைவலியை நாம் அலட்சியப்படுத்துவது, ரத்தக்கொதிப்பு நோயில்தான். காலையில் எழுந்தவுடன் தலை வலித்தால் ரத்த அழுத்த அளவைத்தான் முதலில் பரிசோதிக்க வேண்டும். நிறையப் பேர், வலியாகக் காட்டும் இந்த உடல்மொழியைக் கவனிக்கத் தவறவிட்டு, தடாலடியாக பக்கவாதம் வரும்போதோ, மாரடைப்பு தாக்கும்போதோதான், ‘அடடா… அப்போ அதுக்குத்தான் தலை வலிச்சதா?’ என யோசிப்பது உண்டு.

தூசி, புகை, காற்றோட்டம் இல்லாத புழுக்கம், அதிக வெளிச்சம், பசி, தண்ணீர் குறைவு, தாழ் சர்க்கரை, சோர்வு, சரியான இருக்கையில் உட்காரத் தவறுவது, மனப் பதற்றம், மன அழுத்தம், கவலை… என, தலைவலிக்குப் பல பின்னணிகள் உண்டு. ஆனால், அத்தனையும் பெரும்பாலும் முழுமையாகக் குணப்படுத்தக்கூடியவை. தலைவலி என்றவுடன் கூகுள் டாக்டரிடம் குசலம் விசாரித்தால், அது அஸ்ட்ரோசைட்டோமா, கிளையோமா போன்ற புற்றுத்தலைவலி விவரங்களைத் தந்து கலவரப்படுத்தும். பயப்படாதீர்கள். ‘போன மாசம் ப்ளஸ் டூ எழுதினானே பையன்… என்ன மார்க் வாங்கினான்? பொண்ணுக்கு எப்போ கல்யாணம்? வேலை… வேலைனு அலைஞ்சது போதும்… வீட்ல எல்லாரையும் கூட்டிட்டு நாலு ஊருக்குப் போயிட்டு வாங்க!’ எனக் கொஞ்சம் மருந்தோடு கூடுதல் கரிசனம் காட்டும் உங்களை நன்கு அறிந்த குடும்ப மருத்துவரிடம், வலியை விவரியுங்கள். உங்களின் எந்தத் தலைவலிக்கும் பூரண குணம் நிச்சயம்!

- நலம் பரவும்…

தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள்!

* 6-7 மணி நேரமாவது தடை இல்லா இரவு நேரத் தூக்கம் கிடைத்திடாதபோது…

* ‘இன்னைக்கு மதியம் 12 மணி முதல் சாயங்காலம் 6 மணி வரை தூங்குங்க. நாளைக்கு காலையில 6 மணி முதல் மதியம் 1 மணி வரை தூங்கலாம்’ என, பன்னாட் டுக் கணினி கம்பெனி சொல்பேச்சுக் கேட்டு, மாறி மாறித் தூங்கும் போது…

* காற்றோட்டமான வசிப்பிடம் இல்லாதபோது…

* தொல்பொருள் ஆய்வாளரிடம் சிக்கிய ஓலைச்சுவடிபோல, பர்ஸில் வைத்திருக்கும் 15 வருடங்களுக்கு முந்தைய பிரிஸ்கிரிப்ஷனை வைத்துக்கொண்டு, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடும்போது…

* சிங்கப்பூரில் சீப்பாகக் கிடைக்கும் என வாங்கிவந்து பரிசளிக்கப்பட்ட ‘சென்ட்’டை கக்கத்திலும் கைக்குட்டையிலும் விசிறிக்கொள்ளும்போது… 

* ஊட்டி, கொடைக்கானலில், ஊர்சுற்றலில், பொட்டிக்கடையில் விற்கும் குளிர் கண்ணாடிகளை வாங்கி மாட்டிக்கொண்டு உலவும்போது…

* பாராட்டாகக் கொஞ்சம் புன்னகை, பரவசப்படுத்தும் உச்சி முத்தம், பரிதவிப்பை ஆசுவாசப்படுத்தும் அரவணைப்பு… இவை எதுவும் எப்போதுமே இல்லாதபோது…

தலைவலிக்கான தீர்வுகள்…

*அடிக்கடி வரும் மைக்ரேன் தலைவலிக்கு, அதிமதுரம், பெருஞ்சீரகம் (சோம்பு), ஹைட்ரேஸ் சேர்க்காத நாட்டுச்சர்க்கரை கலந்த ஒரு டம்ளர் பால் உடனடித் தீர்வு தரும்.

* சீந்தில், சுக்கு, திப்பிலிப் பொடியை மூன்று சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து முகர்ந்தாலே தலைவலி போகும் என, ‘திருவள்ளுவ மாலை’ எனும் நூல் குறிப்பிடுகிறது. இந்த மூன்று பொருட்களும் சைனசைட்டிஸ், மைக்ரேன் மற்றும் மன அழுத்தத் தலைவலிக்கான தீர்வை உடையன என நவீன அறிவியல் சான்றையும் பெற்றவை. முகர்ந்தால் மட்டும் போதாது… சாப்பிடவும் செய்ய வேண்டும்.
* அஜீரணத் தலைவலி, இரவு எல்லாம் ‘மப்பேறி’ மறுநாள் வரும் ஹேங்-ஓவர் தலைவலிக்கு சுக்கு, தனியா, மிளகு போட்டு கஷாயம் வைத்து, பனைவெல்லம் கலந்து குடித்தால், தலைக்கு ஏறிய பித்தம் குறைந்து தலைவலி போகும்.

* இஞ்சியை மேல் தோல் சீவி சிறுதுண்டுகளாக்கி, தேனில் ஊறவைத்து தினமும் காலையில் அரை ஸ்பூன் சாப்பிட்டால், மைக்ரேனுக்குத் தடுப்பாக இருக்கும். இதுதான் இஞ்சித் தேனூறல்.

* இஞ்சி, சீரகம் இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து, அந்தக் கூட்டுக்குச் சம அளவு ஆர்கானிக் வெல்லம் கலந்தால், இஞ்சி ரசாயனம் தயார். சாப்பாட்டுக்குப் பின் இதை அரை ஸ்பூன் சாப்பிடுவது அஜீரணத் தலைவலியைத் தவிர்க்கும்!

நலம் 360’ – 11

போலா… உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் புதிய தொற்றுநோய். மரணித்த காட்டு வெளவால்களிடம் இருந்தும், சிம்பன்சி யிடம் இருந்தும் மனிதனுக்குள் எபோலா நுழைந்ததாகக் கருதப்படுகிறது. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் எனக் கடந்த சில வருடங்களில் கொத்துக்கொத்தாக மரணங்களைத் தந்துவிட்டுப்போன, தொற்றுநோய்களைப்போல இந்த வைரஸால் வரும் நோயும் அதிக மரணங்களைத் தரும் என, உலக சுகாதார நிறுவனம் கடுமையாக எச்சரிக்கிறது.
உலகை ஆள்வதாக நினைத்துக்கொண்டிருக்கும் மனிதனுக்கு, இதுபோன்ற தொற்றுநோய்கள்தான் அவ்வப்போது மரண பயத்தைக் காட்டிவிட்டுச் செல்கின்றன. இதற்கு முன் வரலாற்றின் பதிவுகளில் மிக மோசமாகப் பதிவுசெய்யப்பட்ட தொற்றுநோய் பிளேக். 14-ம் நூற்றாண்டின் மத்தியில் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையே 450 மில்லியனாக இருந்தபோது, 75 மில்லியன் சீன, ஐரோப்பிய மக்களை பிளேக் நோய் வாரிச்சுருட்டிக் கொண்டுபோனது. அதை ‘கறுப்பு மரணம்’ என்கின்றனர். அந்த பிளேக்தான், உலகில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய தொற்றுநோய். அதன் பிறகு காலரா, எய்ட்ஸ்… என ஏகப்பட்ட தொற்றுநோய்கள் மனிதனை மிரட்டிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும், மனிதன் அடங்குவதாக இல்லை.
சரி, வெடித்துக் கிளம்பினால் வீரியமாகப் பரவும் இந்தத் தொற்றுநோய்களை எப்படி எதிர்கொள்வது? அதை அந்தந்தச் சூழ்நிலைகள்தான் முடிவுசெய்யும் என்றாலும், பொதுவாக நமது உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை எப்போதும் உச்சத்திலேயே வைத்திருக்கவேண்டியது மிக அவசியம். சூழல் சிதைவு, மருந்து விற்பனை உத்திகள் என தொற்றுக்குப் பின்புறம் அரசியல், இன்னும் பிற இத்யாதிகள் இருக்கட்டும். நம் தினசரி வாழ்வியலையே உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை ‘ரீசார்ஜ்’ செய்தபடியே இருக்கும் வகையில் அமைத்துக்கொள்வதே நல்லது. பெருவாரியாக உடல் உழைப்பு குறைந்த நிலையில், ஒவ்வோர் உணவோடும் வணிக ரசாயனம் ஒட்டிக்கொண்ட இன்றைய நவீன வாழ்வியலில், நோய் எதிர்ப்பு ஆற்றல் வீரியம் இழக்கிறது என்பது ஊர்ஜிதமான உண்மை. அதை மீட்டு எடுக்க சில சின்னச் சின்ன அக்கறைகளே போதும்.

அனைவருக்குமான அக்கறை:
அறுசுவைகள் சேர்ந்த உணவு, அன்றாடம் அளவாக இருப்பது ஆரோக்கியத்தின் அடிப்படை. பாரம்பர்ய உணவு அப்படித்தான் பரிமாறப்பட்டது. காளமேகப் புலவர் பதிவில் வரும், ‘கரிக்காய் பெரித்தாள், கன்னிக்காய் வாட்டினாள், பரிக்காய் கூட்டினாள், அப்பக்காய் துவட்டினாள்’ என்ற செய்தியில் சொல்லப்பட்டவை வெறும் காய்கறிகள் பெயர் மட்டும் அல்ல. அன்றைய உணவில், துவர்ப்பான அத்தி, புளிப்பும் துவர்ப்புமான மாங்காய், துவர்ப்பும் இனிப்புமான வாழைக்கச்சல், கசப்பும் துவர்ப்புமான கத்திரிக்காய், இவற்றை சமைக்கையில் துளி கடல் உப்பு… என அனைத்து சுவைகளும் கலவையாக இருந்தன என்பது தெரியவருகிறது. ஆனால், இன்று அதே உணவு, ‘கேவண்டிஷ்’ வாழை, ‘கார்பைடு கல்’லால் பழுத்த அல்போன்சா மாம்பழம், ‘பி.டி’ கத்திரி, ‘அயோடைஸ்டு’ உப்பு என உருமாறிவிட்டது. இதை நாம் உண்ணும்போது நோய் எதிர்ப்பு ஆற்றல் வருமா… அல்லது நோய் வருமா… என அவற்றைப் படைத்தவர்கள்தான் பதில் அளிக்க வேண்டும்.
உணவில் கசப்பும் துவர்ப்புமான சுவைகளை நம்மில் பலர் மறந்தேவிட்டோம். இவை இரண்டும் அன்றாடம் ஏதேனும் ஓர் உணவில் இருப்பது, நோய்க்கு எதிரான இயற்கைக் கேடயத்தை எந்த நேரமும் அணிந்திருப்பதற்குச் சமம். அதிக கசப்பைத் தரும் நிலவேம்புக்குள் டெங்கு ஜுரத்தை மட்டுப்படுத்தும் கூறு ஒளிந்து இருக்கிறது. பன்றிக் காய்ச்சலுக்கு இன்றளவில் ஒரே மருந்தான டாமிஃப்ளூ தயாரிக்கப் பயன்படும் SAI அமிலம், பிரியாணிக்குப் போடும் அன்னாசிப் பூவின் கசப்புக்குள் ஒளிந்திருக்கிறது. புற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றல் தரும் கசப்பும் துவர்ப்புமான ஃபீனால்கள், பால் சேர்க்காத பச்சைத் தேநீரில் கலந்திருக்கிறது. காச நோய்க்கும், ஹெச்.ஐ.வி-க்கும் எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றல் தரும் கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு… கலந்த சத்துக்கள் நெல்லிக்காயில் நிரம்பி இருக்கின்றன. சாதாரண வைரஸ் ஜுரத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆற்றல் துளசியின் கசப்புக்கும் துவர்ப்புக்கும் இடையே இருக்கிறது.
குழந்தைகளுக்கான அக்கறை:
எந்த வெளித்தீண்டலும் இல்லாமல் ஒவ்வோர் அணுக்குள்ளும் இயல்பாகவே ஒளிந்திருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலை ‘Cell mediated immunity’ என்பார்கள். அந்த எதிர்ப்பு ஆற்றல் நன்றாக இருந்தால் தொற்றுகள் தரும் நுண்ணுயிரிகள், உடலைத் தொந்தரவு செய்வது இல்லை. ஆனால், அந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் வெள்ளை சர்க்கரை சாப்பிடும்போது, ரசாயனக்கூறுகள் சேர்க்கப்பட்ட துரித உணவுகளைச் சாப்பிடும்போது, டிரான்ஸ் கொழுப்புகள் அடங்கிய பேக்கரி, பஃப்ஸ், ஃபிங்கர் ஃப்ரைஸ் சாப்பிடும்போது செம்மையாகப் பராமரிக்கப்படுவது இல்லை என்கிறது இன்றைய அறிவியல். ஆக, குழந்தைகளை அப்படியான உணவுகளில் இருந்து விலக்கிவைப்பது தொற்றில் இருந்து காக்கும் உன்னத வழி. இயல்பிலேயே மருத்துவக் குணமுள்ள தேனில், மருத்துவக் குணமுள்ள கசப்பான, காரமான மூலிகைகளைக் கலந்துகொடுத்து குழந்தைகளை வளர்த்தவர்கள் நாம். தூதுவளைப் பழத் தேன், மாதுளைப் பழத் தேன், மிளகுத் தேன், நெல்லித் தேன்… ஆகியவை சில உதாரணங்கள். அதேபோல் குழந்தைகளுக்கு சுரசம் என மூலிகை இலைச்சாறைக் கொடுக்கும் பழக்கமும் நம்மிடையே உண்டு. கற்பூரவல்லி இலைச் சாற்றை தேனில் குழைத்து, லேசாக அனலில் காட்டி, தேன் பொங்கும்போது எடுத்து, ஆறவைத்து, அதை அவ்வப்போது அடிக்கடி சளித்தொற்று வரும் குழந்தைக்குக் கொடுக்கலாம். இதேபோல் துளசி, தூதுவளை இலையையும் கொடுக்கலாம்.
சிறப்புக் கவனிப்பு தேவைப்படுவோருக்கான அக்கறை:
சர்க்கரை/புற்று வியாதிக்காரர், சமீபமாக நோயில் இருந்து மீண்டவர்கள், கர்ப்பிணிப் பெண், குழந்தைப் பெற்ற பெண், வயோதிகர் இவர்கள்தான் தொற்றுகளுக்கு அதிகம் ஆளாகக்கூடிய ‘vulnerable group’ என்கிறது மருத்துவ உலகம். காலை/மாலை தேன் சேர்த்த, பால் சேர்க்காத தேநீர், லக்டோபாசில்லஸ் எனும் புரோபயாட்டிக் சேர்ந்த இட்லி/கம்பங்கூழ், ஆப்பத்துக்குத் தொட்டுக்கொள்ள… நோய் எதிர்ப்பு ஆற்றலை தாய்ப்பாலுக்கு அடுத்த நிலையில் தரக்கூடிய, தேங்காய்ப்பால், மதிய உணவில் ஏதேனும் ஒரு கீரை… ஆகிய உணவுப்பழக்கம் தொற்றுக்கு எதிரான பாதுகாப்புக் கவசம் ஆகும். சர்க்கரை வியாதி உள்ளவர் தவிர பிறர் இனிப்புக்குப் பதில் பனைவெல்லம், தேன் அல்லது ஆர்கானிக் நாட்டுவெல்லம் இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம். காரம் தேவைப்படும் தருணங்களில் மிளகைச் சேர்த்துக்கொள்வது, சுவையுடன் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் சேர்த்துக்கொள்வதற்கு ஒப்பானது.
வெந்தயத்தில் இருந்து 4-hydroxy isoleucine-ம், தக்காலத்தில் (அன்னாசிப் பூவுக்கான வேறு பெயர்) இருந்து SAI அமிலத்தையும், மஞ்சளில் இருந்து குர்குமினையும், தேங்காயில் இருந்து மோனாலாரினையும் உறிஞ்சி, நோய் எதிர்ப்பு ஆற்றல் மாத்திரைகள், மருந்துகளாக மாற்றி கூவிக்கூவி டாலரில் விற்கிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் பேச்சிலும் மூச்சிலும் வைத்திருந்த நாம், ‘பீட்சா ரொம்ப ஹைஜீனிக்கா தயாரிக்கிறாங்க. ரோட்டுக்கடை ஆப்பம், வடை எல்லாம் அப்படியா இருக்கு?’ எனப் பேசிக்கொண்டிருக்கின்றோம்.
அரை இடுக்கில் அரிப்பைத் தரும் பூஞ்சைத் தொற்றில் இருந்தும், அண்ட வந்த ஐந்தாறு நாட்களில் நம்மைக் கொன்றுகுவித்த பல பாக்டீரியா, வைரஸ்களில் இருந்தும் நம்மை மீட்டு எடுத்தது நவீன அறிவியலின் தடுப்பு மருந்துகளும், உயிர் எதிர் நுண்ணுயிரிகளும்தான். ஆனால், அதே எதிர் நுண்ணுயிரியை அளவு இல்லாமல், மருந்திலும் உணவிலும் தடுப்பிலும் நாம் பயன்படுத்துவது எதிர்விளைவை உண்டாக்கிவிட்டது. இன்றைக்கு காசம் முதலான நோய் தரும் பல பாக்டீரியாக்களுக்கு எதிராக எந்த ஆன்ட்டிபயாட்டிக்கும் வேலை செய்யாத DRUG RESISTANCE நிலை இந்தியா முதலான வளர்ந்த நாடுகளில் உருவாகிவருவது மிகவும் கவலைக்குரிய விஷயம்.
ஒரு இன்ச்சில் ஒரு மில்லியனுக்கும் குறைவான அளவில் உள்ள வைரஸும் சரி, கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாவும் சரி, இரை தேடித் தானாக நம்மை அணுகுவது இல்லை. சக இனத்தை அழித்து, தனது நாளைய கொண்டாட்டத்துக்கு கர்ச்சீப் போட்டுவைக்கும் காட்டுமிராண்டிக் குணமும் அவற்றுக்கு உரித்தானது அல்ல. லாபவெறிக்காக இயற்கையைச் சிதைக்கும் மனிதனின் விபரீத முயற்சிகளே அந்தக் கிருமிகளை, நுண்ணுயிரிகளைத் தீண்டித் தூண்டுகின்றன. கொள்ளை நோய் பரப்பும் கிருமிகளிடம், ‘ஏன் இந்தப் பேரழிவை உண்டாக்கு கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘அவனை நிறுத்தச் சொல்… நான் நிறுத்துகிறேன்’ என்று மனிதனைச் சுட்டிக்காட்டுமோ என்னவோ!?

நலம் 360’ – 12

முன்புபோல இளவட்டக்கல் தூக்கி, நான்கைந்து மாடுகளை விரட்டி, குதிரையில் போய் குறுக்கு சிறுத்தவளைக் கவர்ந்துவரும் கஷ்டம் எல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு இல்லைதான். ஆனாலும், சிக்ஸ்பேக் சித்ரவதை, ‘செல்லம்… தங்கம்… புஜ்ஜிம்மா’ கொஞ்சல்களுக்காக நித்திரை வதை… எனக் காதலுக்கான ஆண்களின் மெனக்கெடல்கள் இன்றும் தொடரத்தான் செய்கின்றன.
‘எனக்கு மட்டும் சொந்தம் 
உனது இதழ் கொடுக்கும் முத்தம்; 
உனக்கு மட்டும் கேட்கும் 
எனது உயிர் உருகும் சத்தம்’

போன்ற வைரமுத்து வரிகளை ‘காப்பி-பேஸ்ட்’  செய்து, வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்களில் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காதலின் சாஃப்ட்வேர் இப்படி காலமாற்றத்துக்கு ஏற்ப தரம் உயர்ந்தாலும், ஹார்டுவேர் நிறையவே பழுதாகி வருவதாக மருத்துவ ஆய்வுகள் பலமாக எச்சரிக்கின்றன.
குடும்பக் கட்டுப்பாடு பிரிவு, ஐந்து கிலோ அரிசி, 500 ரூபாய் இனாம் எல்லாம் தேவை இல்லாமலே, இயல்பாகவே மனித இனத்தின் கருத்தரிக்கும் தன்மை பல மடங்கு குறைந்துவருகிறதாம். 1 மில்லி விந்துவில் 60-120 மில்லியன் உயிர் அணுக்கள் இருந்த காலம் மலையேறி,          15 மில்லியன் இருந்தாலே பரவாயில்லை என மருத்துவம் ஆதரவு ஆறுதல் சொல்கிறது. அதிலும் பெரும்பாலானவர்களுக்கு வெளியாகும் அணுக்களில் 10 சதவிகிதம் மட்டுமே உயிர்ச்சத்து நிறைந்ததாக இருக்கிறதாம். நமக்கு முன்னால் இந்தப் பூவுலகில் பிறந்த எலி, எருமை, குரங்குகளுக்கு எல்லாம் இந்த எண்ணிக்கையும் சதவிகிதமும் பல மடங்கு அதிகமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. 31-40 வயதையொட்டிய தம்பதிகளில், 46 சதவிகிதம் பேருக்குக் கருத்தரிப்புக்கான மருத்துவ உதவி தேவை என்கிறது இந்திய ஆய்வு ஒன்று. விளைவு… தெருவுக்கு இரண்டு அண்ணாச்சிக் கடைகள் மாதிரி, ஊருக்கு ஊர் செயற்கைக் கருவாக்க மையங்கள் பெருகிவருகின்றன. என்ன ஆச்சு நமக்கு மட்டும்?
பல்வேறு காரணங்கள்… வாகனம் கக்கும் புகை, பிளாஸ்டிக் பொசுங்களில் பிறக்கும் டயாக்ஸின், இன்னும் பல காற்று மாசுக்களை கருத்தரித்த பெண் சுவாசிப்பது, அவள் வயிற்று ஆண் குழந்தையின் செர்டோலி செல்களை (பின்னாளில் அதுதான் விந்து அணுக்களை உற்பத்தி செய்யும்) கருவில் இருக்கும்போதே சிதைக்கிறதாம். ‘உணவு உற்பத்தியைப் பெருக்குகிறேன்’ என மண்ணில் நாம் தூவிய ரசாயன உர நச்சுக்களின் படிமங்கள், இப்போது நம் உயிர் அணுக்களுக்கு உலை வைக்கின்றன. பெண்கள் ஸ்ட்ராபெர்ரி இதழ் அழகு வேண்டி, தாலேட் கலந்த உதட்டுப்பூச்சு தடவுவது, முத்தமிடுவோருக்கு காதல் தந்து, கூடவே கருத்தடையும் செய்துவிடுகிறதாம்.
மறுபுறம்… சைக்கிள்ஸ்டாண்டில், குட்டைச்சுவரில், கடைசி பெஞ்சில், நண்பர்களால் நடத்தப்படும் ஆண்மை குறித்த ரகசிய டியூஷன்களில், மனசுக்குள் ஒட்டிக்கொள்ளும் விந்து குறித்த தப்பான புரிதல்களால் நொந்துதிரியும் ஆண்கள் ஏராளம்… தாராளம். ஆறரை அடி உயர ஆப்பிரிக்க ‘போர்னோ’ நடிகர்களைப் பார்த்து, ‘அவனை மாதிரி இல்லையே… எனக்கு சிறுசா இருக்கே!’ என உள்ளுக்குள் குமுறும் ஆண்மகன்கள் ஏராளம். இதுபோன்ற உளவியல் ஆண்மைக் குறைவு ஆர்ப்பரித்து வளர்வதற்கு, பாலியல் அறியாமை மிக முக்கியக் காரணம்.
இளங்காலை எதிர்பாராத முத்தத்தில் தொடங்கி, எள்ளலும், கொஞ்சலும், திமிறலும், குதூகலமும் சேர்ந்து முடிவாக நான்கைந்து நிமிடங்களில் உறவுகொள்ளும் உயிர்வித்தையை உணராது, ‘நீலப்படத்தில் அவங்க 0.45 மணி நேரமா முனகிட்டு இருக்காங்களே…  நமக்குத் துரித ஸ்கலிதம் சிக்கல் இருக்கோ?!’ எனக் குமைகிறார்கள் இளைஞர்கள். போதாததற்கு ‘சுய இன்பத்தால் சுருங்கிப்போச்சா?’ எனும் விஷ விதைகளை நள்ளிரவு டாக்டர்கள் நட்டுவைக்க, ‘அப்போ… நான் அப்பாவாகவே முடியாதா?’ என்ற கேள்விக்குள் உறைகிறார்கள். ‘ஆண்களில் சுய இன்பம் செய்பவர்கள்        99 சதவிகிதத்தினர்; மீதி  1சதவிகிதத்தினர் பொய்யர்கள்’ என்று ஆங்கிலப் பழமொழி இங்கே உங்கள் கவனத்துக்கு.
நாம் சாப்பிடும் ஒவ்வொரு வாய் உணவும் சாரம், செந்நீர், ஊன் கொழுப்பு, எலும்பு, மஞ்சை… எனப் படிப்படியாக ஆறு தாதுக்களைக் கடந்தே, ஏழாம் உயிர்த்தாதுவான சுக்கிலத்தை அடையும். அத்தனை இடர்பாடுகளையும் தாண்டி சேகரிக்கப்படும் உயிர்துளியை அநாவசியமாக வீணாக்க வேண்டாம் என்பது சித்தர்களின் கருத்து. மற்றபடி சுய இன்பம் என்பது, கொலை பாதகம் அல்ல; அன்றாட அவசியமும் அல்ல!
நள்ளிரவு தாண்டியும் மடியில் மடிக் கணினியைக் கட்டிக்கொண்டு அழும் ஐ.டி ‘இணையர்களின்’ எண்ணிக்கை எகிறிக்கொண்டேயிருக்கிறது. எப்போதுமே நெருக் கடியிலும் பயத்திலும் வாழும் அவர்களுக்கு, இரவு கண் விழிப்பால் உடலின் பித்தம் கூடி விந்து அணு உற்பத்தியைக் குறைக்கிறது. மடிக்கணினி, விதைப்பகுதிச் சூட்டை அதிகரித்து உயிர் அணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்பதையும் அவர்கள் உணர்வது இல்லை… அல்லது உதாசீனப்படுத்துகிறார்கள்.
உடலில் இதயம், மூளை போன்ற அத்தியாவசிய உறுப்புகளை எலும்புகளும் தசைகளும் பொத்திப் பாதுகாக்க, விந்து உற்பத்தி ஸ்தலமான விதைப்பையை மட்டும் உடலுக்கு வெளியே தொங்கவிட்டிருப்பதற்கு முக்கியமான காரணம், உடல் வெப்பத்தில் இருந்து 3-4 டிகிரி அது உஷ்ணம் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால், விஷயம் புரியாமல் இறுக்கமான உள்ளாடை, சருமத்தோடு ஒட்டித் தைத்ததுபோல இறுக்கமான ஜீன்ஸ்… என இயற்கையின் செட்டிங்ஸை மாற்றுவது சரியா? எள்ளு, கொள்ளுத் தாத்தாக்களின் வீரிய விருத்திக்கு, காத்தாடிய ‘பட்டாபட்டி’ உள்டவுசரும், பட்டும்படாத எட்டு முழ வேட்டியும் எந்த அளவுக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறது என்பது புரிகிறதா?
விதைப்பையில் உருவாகும் நாள அடைப்பு, சொந்த விந்துவையே பாக்டீரியாவாகப் பார்க்கும் பழுதாகிப்போன உடல் எதிர்ப்பாற்றல், பிட்யூட்டரி, ஹைபோதாலமஸ் கோளங்களின் செயல்பாட்டுக் குறைவால் நிகழும் ஹார்மோன் குறைவு… என விதவிதமான மருத்துவக் காரணங்களும் ஆண்மைக்குறைவை அதிகரிக்கின்றன.
‘அட… பிரச்னையா அடுக்காதீங்க. சிக்கல் தீர என்ன வழி? அதைச் சொல்லுங்க!’ எனப் பொங்கி எழுவோருக்கு, பாரம்பர்ய வாழ்க்கைமுறையே பதில்! அதற்காக ‘காண்டாமிருகக் கொம்பு தர்றேன், சிட்டுக்குருவி லேகியம் கை மேல் பலன் கொடுக்கும், தங்கபஸ்பம் ரெடி பண்ணிரலாம்’ என உட்டாலக்கடி வியாபாரிகளிடம் சிக்கிக்கொள்ளக்கூடாது. போலிகளிடம் சிக்காமல், ஒழுங்காக கீரை, காய்கறி சாப்பிட்டாலே, உயிர் அணு செம்மையாகச் சுரக்கும்!
உயிர்ச்சத்து… விதைகளிலும், மொட்டுக்களிலும், வேர்களிலும் பொதிந்து இருக்கும் என கருதியதாலோ என்னவோ, சித்த மருத்துவம் பல தாவர விதைகளை, மொட்டுக்களை, வேர்களை ஆண்மை அபிவிருத்திக்கான மருந்துகளில் அதிகம் சேர்க்கிறது. சப்ஜா விதை, வெட்பாலை விதை, பூனைக்காலி விதை, மராட்டி மொக்கு, மதனகாமேஸ்வரப் பூ, அமுக்குராங்கிழங்கு, சாலாமிசிரி வேர், நிலப்பனைக் கிழங்கு என அதன் பட்டியல் நீளும். வளம் குன்றிய தேரி நிலத்தில் வளரும் நெருஞ்சில் முள்ளின் சப்போனின்கள், விந்தணுக்களை உற்பத்தி செய்யும் செர்டோலி செல் பாதிப்பைச் சீராக்கும் என்கிறது மருத்துவத் தாவரவியல். அதேபோல் பூனைக்காலி விதையும், சாலாமிசிரியும், அமுக்குராங்கிழங்கும் அணுக்களை உயர்த்த, டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்களைச் சீராக்க எனப் பல பணிகள் செய்வதை, நவீன உலகம் உற்றுப் பார்க்கிறது. உடனே, ‘ஒவ்வொன்றிலும் தலா 100 கிராம் வாங்கி ஒரு கலக்குக் கலக்கி…’ என ஆரம்பித்துவிட வேண்டாம். பிரச்னை உற்பத்தியிலா, பாதையிலா, மனதிலா என்பதை, உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசி யுங்கள். அதன் பிறகு தேவைக்கு ஏற்ப உங்கள் உணவுப் பழக்கத்தைத் தீர்மானியுங்கள்.
மிக முக்கியமாக, புரிதலிலும் விட்டுக்கொடுத்தலிலும் மட்டுமே தாம்பத்ய பயிர் வீரியமாக விளையும். கருத்தரிப்பைச் சாத்தியப்படுத்துவதில், உறுப்பின் அளவைக் காட்டிலும் மனதின் அளவுக்குத்தான் ஆண்மை அதிகம் உண்டு. ஆதலால் காதல் செய்வீர்… ஆரோக்கியமாக!

நலம் 360’ – 13

சீன மருத்துவ, சித்த, ஆயுர்வேத மருத்துவ இலக்கியங்களில் பன்னெடுங்காலத்துக்கு முன்பே தைராய்டு கோளத்தின் நோய்கள் பேசப்பட்டுள்ளன. தைராய்டு கோளத்தில் வரும் முன் கழுத்து வீக்கத்தை (Goitre) லியோனார்டோ டாவின்சியின் உலகப் புகழ்பெற்ற ‘Madonna of the Carnation’ ஓவியம் சித்திரித்திருக்கிறது. தைராய்டு என்பது, முன் கழுத்தில் மூச்சுக்குழலில் அமைந்திருக்கும் பட்டாம்பூச்சி வடிவக் கோளம். அந்த வடிவம் ‘தைராய்டு’ என்ற பழங்காலப் போர் ஆயுதம்போல இருந்ததாக உணர்ந்த தாமஸ் வார்ட்டன் என்கிற விஞ்ஞானி, அந்தக் கோளத்துக்கு ‘தைராய்டு’ எனப் பெயர் சூட்டினார். இந்தக் கோளம் சுரக்கும் சுரப்பு குறைந்தால்… ஹைப்போதைராய்டு, அளவு அதிகமானால்… ஹைப்பர்தைராய்டு, முன் கழுத்து வீங்கியிருந்தால்… ‘காய்ட்டர்’ என்கிற கோளவீக்கம் என நோய்களாக அறியப்படுகின்றன. இவ்வளவு நீண்ட வரலாறு கொண்ட இந்த நோயை, இன்றளவிலும் முழுமையாகக் குணப்படுத்தும் மருந்து ஆதாரபூர்வமாகக் கண்டறியப்படவில்லை. காலை எழுந்து பல் துலக்கியதும், முதல் வேலையாக தைராக்சின் மருந்தை விழுங்குவோர் இப்போது அநேகர்.
தைராய்டு தொடர்பான நோய்கள், பெண்களைத்தான் அதிகம் தாக்குகின்றன. எனினும், அது பெண்களுக்கான பிரத்யேக நோய் அல்ல. ஆண்களுக்கு ‘அந்த’ விஷயத்தில் நாட்டம் குறைவது, ஆண்மை குறைவது, முதியவர்களின் மறதி… போன்ற குறைபாடுகளுக்கு தைராய்டு சுரப்பு குறைவதும் ஒரு காரணம். பெண்களின் மாதவிடாய் சீர்கேடு, பாலிசிஸ்ட்டிக் ஓவரி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி உருவாவது, கருத்தரிப்பு தாமதம் ஆவது, கருமுட்டை வெடிக்காமல் இருப்பது போன்றவற்றுக்கு முக்கியமான காரணம் இந்த தைராய்டு சுரப்பு குறைவே. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தொடங்கி, 14 அல்லது 15-வது நாளில் கருமுட்டை வெடிப்பு கட்டாயம் நிகழ வேண்டும். அந்த வெடிப்பை நிகழ்த்த ஹார்மோனைத் தூண்டுவது தைராய்டு சுரப்பிதான். மாதவிடாய், 30 நாட்களுக்கு ஒருமுறை நிகழாமல், அல்லது கருத்தரிப்பு, தாமதம் ஆகும் சமயத்தில், முதலில் தைராக்சின் சுரப்பு சரியாக உள்ளதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.
மாதவிடாய் சீர்கேடு மட்டும் அல்ல, உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறைபாடு, எடை அதிகரிப்பு, அறிவாற்றல் குறைவு, முடி உதிர்தல், சரும உலர்வு… எனப் பல நோய்கள் தோற்றுவாய்க்கும் தைராய்டு சுரப்பு குறைவே காரணம். ‘இதற்குத் தீர்வே கிடையாதா? எப்போ… எப்படிக் கேட்டாலும், மாத்திரையை நிறுத்தக் கூடாது என்று டாக்டர் சொல்றாரே?’ என்று வருத்தத்துடன் கேட்போர், இந்தியாவில் மட்டும் சுமார் 4.2 கோடி பேர்!
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 150 மைக்ரோ கிராம் அயோடின்தான் நமக்குத் தேவை. அயோடின் உப்பு அதிகம் உள்ள கடலோர மண்ணின் நிலத்தடி நீரில் இருந்தும், கடல் மீன்களில் இருந்தும் இந்த உப்பு நமக்கு எளிதாகவே கிடைக்கும். ஆனால், இதுவே நன்னீர் மீன்களில் அயோடின் சத்து 20-30 மைக்ரோகிராம்தான் கிடைக்கும். தவிர, பால், முட்டை, காய்கறிகளில் இருந்தும் அயோடினை எடுத்துக்கொள்ள வேண்டும். மண்ணின் அயோடைடு சத்தைப் பொறுத்தே, அதில் வேர்விட்டு வளரும் காய்கறிகளில் அயோடின் அளவு கிடைக்கும்.
சுமார் 15 வருடங்களுக்கு முன், இந்தியாவின் கடல் ஓரத்தைவிட்டு விலகியுள்ள ஏறத்தாழ 226 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் அயோடின் சேர்க்கையையும், தைராக்சின் சுரப்பு அளவையும் இந்திய மருத்துவக்கழகம் ஆய்வு செய்தது. முடிவு, ஏராளமானோர் அயோடின் குறைவுடன் இருப்பதை உறுதிசெய்தது. இப்படியேவிட்டால், பெருவாரியான மக்கள் ஹைப்போதைராய்டு நோயால் பீடிக்கப்பட்டு சாதாரண உடல்சோர்வில் தொடங்கி, உடல் வளர்ச்சிக் குறைவு, மூளை செயல்திறன் குறைவு வரை ஏற்படக்கூடும் எனக் கருதினார்கள். உடனே அவசர அவசரமாக, இந்தியர் அனைவருக்கும் அயோடினை உணவில் அன்றாடம் கொடுக்க முடிவு செய்தது அரசு. உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி அன்றாடம் நாம் சாப்பிடும் உப்பில் அயோடினைச் செறிவூட்டிக் கொடுப்பதைக் கட்டாயம் ஆக்கினார்கள். விளைவு, உப்பை உப்பளத்தில் காய்ச்சி பல கடல்சார் கனிமங்களின் தாவர நுண்கூறு கலவையாகத் தந்த காலம் மலையேறி, செறிவூட்டப்பட்ட சோடியம் குளோரைடை சோற்றில் போட்டுச் சாப்பிடும் நிலைக்கு வந்தோம்.
அயோடினை அதிகம் பெறவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அறுசுவையில் ஒரு பிரதான சுவையான உப்புச் சுவையை அதன் இயல்பான கடல் கனிமங்களில் இருந்து பெற்றபோதுதான், நாம் உப்பின் தேவையற்ற குணங்களைத் தவிர்த்தும், தேவையானவற்றை சரியான அளவில் பெற்றும் வந்தோம். அந்த உணவுக் கூட்டமைப்பை செயற்கை உப்பு நிச்சயம் அளிக்காது.
சென்னை மருத்துவக் கல்லூரியின் ஓய்வுபெற்ற எண்டோகிரைனாலஜி பேராசிரியர் ஒருவர், ‘இந்த அயோடைஸ்டு உப்பு, மருந்து என்பதே சரி. அது எப்படி எல்லோருக்குமான உணவாகும்? முழுமையான ஆய்வுகள் நடத்தப்படாமல், அவசரகதியில் உட்கொள்ளவைக்கப்பட்ட இந்த உப்பே, நல்ல நிலையில் இயங்கும் தைராய்டுகளையும் நோய்வாய்ப்படுத்துகிறது’ என்றார். அயோடின் அதிகரித்தால் அது பெரிதாக நச்சு இல்லை எனச் சொல்லப்படுகிறது. ஆனால், சில சமயம் அதுவே காய்ட்டர் நோய்க்கு காரணமாகிவிடும் என மருத்துவ உலகின் ஓர் அச்சம் உண்டு.
சரி… இந்த நோயைத் தவிர்க்க என்னதான்  வழி? கடல்மீன் உணவுகள்தான் முதல் தேர்வு. வாரம் ஓரிரு நாள் மீன் உணவு சாப்பிடுவது அயோடினை சரியான அளவில் வைத்திருக்க உதவும். ‘மீனா… வாட் யூ மீன்?’ என அலறும் சைவர்கள், அதற்குப் பதிலாக ஊட்ட உணவாக கடல் பாசிகளை உணவில் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில உணவுகளே தைராய்டு கோளத்தில் பாதிப்புகளை உண்டாக்கும் (GOITROGENIC) எனக் குறிப்பிடுகிறார்கள். அந்த உணவுப் பட்டியலில் நம் ஊர் கடுகும் முட்டைக்கோஸும் இடம் பிடித்திருக்கின்றன. லேசாக முன் கழுத்து வீக்கமோ, ஹைப்போதைராய்டு நோயோ இருக்கும்பட்சத்தில், தாளிப்பதற்கு கடுகு, தடாலடி பொரியலாக முட்டைக்கோஸ் சமைப்பதைத் தவிர்க்கவும்.
இன்னொரு முக்கியமான விஷயம்… சந்தையில் உள்ள ஊட்டச்சத்துப் பானங்களில் அதிகமாகச்  சேர்க்கப்படுவது சோயா புரதம். ‘அட… பிள்ளை போஷாக்கா தேறி வரட்டும்’ எனக் காரணம் சொல்லி, நேரடிச் சந்தை மற்றும் மல்ட்டிலெவல் மார்க்கெட்டிங் மூலமோ  அவற்றை  மருத்துவர் ஆலோசனை பெறாமல் கொடுப்பது நிச்சயம் நல்லது அல்ல. ஏனென்றால், ‘புற்றைக் கட்டுப்படுத்தும்’, ‘இது மெனொபாஸ் பருவப் பெண்களுக்கு நல்லது’, ‘நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரும்’, ‘உடல் எடையைக் கூட்டும்’ எனக் கூவிக்கூவி விற்கப்படும் இந்தப் புரதம், சில நேரங்களில் தைராய்டு கோள வீக்கத்தையும் தரும். ‘மாதவிடாய் சரியாக வரவில்லை, மந்த புத்தியாக இருக்கிறாள், இவனுக்குப் படிப்பு ஏறவே மாட்டேங்குது’ என்போருக்கு கடல் கடந்து விற்பனைக்கு வரும் டானிக்குகளைவிட, கடல் மீன்தான் நன்மை பயக்கும். கடல் மீன் தைராய்டு சுரக்க அயோடினைத் தரும். தைராய்டு நோயில் வலுவிழக்கும் எலும்புக்கு வைட்டமின் – டி தரும். மந்தம் ஆகும் மூளை குதூகலித்து உத்வேகம் பெற டி.ஹெச்.ஏ அமிலம், ஒமேகா கொழுப்பு எல்லாமும் பரிமாறும். கடையில் விற்கப்படும் புரத உணவுகளைக் காட்டிலும், பட்டை தீட்டாத தானியங்கள், பயிறுகளைச் சேர்த்து அரைத்து வீட்டில் செய்யப்படும் சத்துமாவு போன்றவை புரதச்சத்தைக் கொடுப்பதோடு, தைராய்டு நோயை மட்டுப்படுத்தும் கால்சியம், செலினியம் போன்றவற்றையும் அளிக்கும்.
தைராய்டு சுரப்பு குறைவாக இருந்தால், சரியான சிகிச்சை மிகவும் அவசியம்.  தைராக்சின் சத்துக் குறைவு உள்ளோருக்கு நேரடியாகவே அந்தச் சத்தைக் கொடுத்து வருகிறது நவீன மருத்துவம். எந்தக் காரணம்கொண்டும் மருத்துவர் அனுமதி இல்லாமல் இந்தச் சத்து மாத்திரைகளை நிறுத்துவதும், அளவைக் குறைப்பதும் கூடாது. பாரம்பர்ய பிற மருத்துவ முறைகளைப் பின்பற்றுபவர்கள், அந்த மருத்துவ முறை மூலம் தைராய்டு கோளத்தைத் தூண்டியோ, அல்லது உடல் இயக்க ஆற்றலைச் சீராக்கியோ தைராய்டு கோளம் இயல்பு நிலைக்கு வரும் வரை, அதற்கான சத்து மருந்துகளை ஒருங்கிணைந்து எடுத்துக்கொள்வதுதான் நல்லது. தடாலடியாக நிறுத்துவது பெரும் நோய்ச் சிக்கலை ஏற்படுத்தும்.
சித்த, ஆயுர்வேதப் புரிதலில் கபத் தன்மையையும், பித்தத் தன்மையையும் சீராக்கும் மூலிகைகளை, மருந்துகளை இந்தத் தைராய்டு நோய்க்குப் பரிந்துரைப்பர். ‘அன்னபவழச் செந்தூரம்’ என்கிற பாரம்பர்ய சித்த மருந்தும், மந்தாரை அல்லது ‘கான்சனார்’ இலைகளால் செய்யப்படும் ‘காஞ்சனார் குக்குலு’ என்கிற ஆயுர்வேத மருந்தும் இந்த நோய்களில் அதிகம் ஆராயப்பட்ட பாரம்பர்ய மருந்துகள். நவீன மருந்து அறிவியல் ஆய்வும், இந்த மருந்துகள் தைராய்டு சத்தை நேரடியாகத் தராமல், தைராய்டு கோளத்தைத் தூண்டி, அதன் செயல்திறனை ஊக்குவிக்கின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது. கூடவே உடல் எடை குறைவு, மாதவிடாய் கோளாறு போன்றவற்றைச் சீர்செய்வது இந்த மருந்துகளின் தனிச்சிறப்பு.
யோகாசனமும் மூச்சுப் பயிற்சியும் தைராய்டு கோளம் சரியாக இயங்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. சூரிய வணக்கம், கபாலபாதி பிராணாயாம மூச்சுப் பயிற்சி, விபரீதகரணி யோகப் பயிற்சி… ஆகியவை உடல் இயக்க ஆற்றலை வலுப்படுத்தும் என்கின்றன ஆராய்ச்சிகள்.
ஒரு தைராய்டு சுரப்பு குறைவு நோயாளி காலையில் ஒரு மாத்திரை சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், கூட்டாக இந்த யோகாசனப் பயிற்சி, ஏதேனும் பாரம்பர்ய மருந்து, கூடவே அடிக்கடி கடல்மீன் உணவு/கடற்பாசி உணவு சாப்பிடுவது போன்றவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே, மெள்ள மெள்ள இந்த நோயின் பிடியில் இருந்து விலக முடியும். ஆனால், என்று வரும் இந்த ஒருங்கிணைப்பு?
- நலம் பரவும்…

கடல் உணவுகள் சில…

அயோடினும் புரதமும் நிறைந்த கடல் மீன்கள், தைராய்டு குறைவு நோய்க்கான சிறப்பு உணவுகள். கூடுதல் புரதமும் வைட்டமின் – டி சத்தும் இவற்றின் ஸ்பெஷல். அதிலும் குறிப்பாக வஞ்சிர மீன் குழம்பு, மிக அதிகப் புரதம் கொண்டது. இதை குடம்புளிக் கரைசலில் செய்தால், உடல் எடையையும் குறைக்கும்!

சுறா புட்டு, பாலூட்டும் பெண்ணுக்கு தைராய்டு குறைவைச் சரியாக்குவதுடன், பால் சுரப்பை மிக அதிகமாக்கும்!

பொரித்த சீலா மீனில், புரதச்சத்தும் அயோடினும் மிக அதிகம்!

‘அகர் அகர்’ என்கிற கடற்பாசியில் வட இந்தியர்கள் செய்யும் இனிப்பு, குழந்தைகளுக்கு நலம் தரும் உணவு. பால், வெல்லம், அகர் அகர், ஏலக்காய்த் தூள் சேர்த்து இதைச் செய்யலாம்!

ஸ்பைரூலினா என்கிற சுருள்பாசி மாத்திரைகள்,  ஊட்ட உணவு வகைகளில் மிகப் பிரபலம். மீன் சாப்பிடாதோர் இதைச் சாப்பிடலாம்!

புற்றுநோய்… உஷார்!
ஒட்டுமொத்த சூழல் சிதைவு, மனம் வெதும்பிய வாழ்வியல்… போன்ற காரணிகளால் பல புற்றுநோய்க் கூட்டம் பெருகிவரும் சூழலில் தைராய்டு கோளப் புற்றும் அதிகரிக்கிறது. PAPPILLARY, FOLLICULAR, MEDULLARY, ANAPLASTIC… என நான்கு வகையில் இந்தப் புற்று வரலாம். இதில் வெகுசாதாரணமாக வரக்கூடியது PAPPILLARY. தைராய்டு கோள வீக்கத்தை எப்போதும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், எளிய அல்ட்ரா சவுண்டு மற்றும் FNAC பரிசோதனைகள் மூலம் தொடக்கத்திலேயே பரிசோதித்து, இந்த வீக்கத்தின் இயல்பைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை புற்றுநோயாக இருக்கும்பட்சத்தில், ANAPLASTIC பிரிவைத் தவிர்த்து மற்றவற்றை அறுவைசிகிச்சை போன்ற சரியான ஒருங்கிணைந்த சிகிச்சைகள் மூலம், முழுமையாக நலம்பெற வாய்ப்பு அதிகம். புற்றாக இல்லாதபட்சத்தில், வெறும் வீக்கத்தைக் கண்டு கலவரப்படத் தேவை இல்லை!

நலம் 360’ – 14

திடீரென ஒரு நாள் ‘சுரீர்’ என பல் வலியெடுத்து, முகம் கோணி, காது, தொண்டை, பின்மண்டை வரை வலித்த பிறகே நாம் பல் மருத்துவரைத் தேடுகிறோம். ஆனால் பல் மருத்துவ உலகம் சொல்வதெல்லாம், ‘பற்களின் பாதுகாப்பு பிறந்தவுடன் தொடங்கியிருக்க வேண்டும்’ என்பதைத்தான்!
சிசுவுக்கு தாய்ப் பால் புகட்டியதும் மிருதுவான, சுத்தமான துணியால் மிகமிக மென்மையாக ஈறுகளைத் துடைப்பதில் இருந்து பல் பராமரிப்பு தொடங்குகிறது. நள்ளிரவில் பால் கொடுத்துவிட்டு ஈறுகளைச் சுத்தம் செய்யாமல் விடுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு அனைத்து
பற்களும் முட்டிக்கொண்டு வெளியே வந்தவுடன், தினமும் இரு முறை பல் துலக்கும் பயிற்சியைக் கற்றுக்கொடுப்பது, ‘பல்’லாண்டு கால பல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும். குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக ஃப்ளுரைடு கலக்காத பற்பசைகளைப் பயன்படுத்தலாம். இன்னொரு முக்கியமான விஷயம், ‘இப்போ ஈ காட்டப்போறியா இல்லையா?’ எனப் பயமுறுத்தி, குழந்தைகளைப் பல் துலக்கப் பயிற்றுவிக்கக் கூடாது. பல் துலக்குவதை, வாய் கொப்பளிப்பதை ஒரு குதூகல விளையாட்டுபோல் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது மிக முக்கியம். அதே சமயம் ஆர்வக்கோளாறில் பற்பசையைக் கணிசமாகப் பிதுக்கி, பற்களில் அப்பி, உப்புத்தாள் போட்டு சுவரைப் பட்டி பார்ப்பதுபோல் தேய்ப்பதும் முட்டாள்தனம். ஒரு நிலக்கடலை அளவுக்கான பற்பசையே மந்திரப் புன்னகையை அளிக்கும்.
இன்னும் நம்மில் பலருக்கு பற்களின் இடையே சிக்கியிருக்கும் துணுக்குகளை நீக்கும் DENTAL  FLOSS (பற்களுக்கு இடையே மெல்லிய இழையைவிட்டு சுத்தம் செய்யும் பயிற்சி) பழக்கம் பற்றிய அறிமுகமே இல்லை. ஆனால், கல்யாணம் நிச்சயமானவுடன் வாழ்க்கையில்  முதன்முதலாக பல் மருத்துவரிடம் சென்று, ‘கல்யாணம்… பற்களைச் சுத்தம் பண்ணணும்’ என நிற்போம். அவர் பலப் பல உபகரணங்களின் உதவியுடன் பற்களை சுத்தம் செய்யும்போது வெளியேறும் அழுக்கைப் பார்த்து, ‘இத்தனை வருஷமும் இவ்வளவும் நம்ம வாய்க்குள்ளயா இருந்துச்சு’ என நொந்துபோவோம். அதே உத்வேகத்துடன் வந்து, ‘இனி தினம் மூணு தடவை பல் தேய்க்கணும்’ என ஆரம்பித்து சில நாட்களுக்கு பிரஷ்ஷ§ம் வாயுமாகத் திரிவோம். ஆனால், எல்லாம் சில நாள் ஷோதான்!
பராமரிப்பைத் தாண்டி, பல்லைப் பாழடிக்கும் பழக்கங்களில் இருந்து விடுபடுவதுதான் பாதுகாப்புக்கான முதல் படி. சாப்பிட்ட பின் பலர் உதடுகளை மட்டும் தேய்த்துக்கொள்வார்கள். ஆனால், நன்றாக வாயைக் கொப்பளிப்பது முக்கியம். அதுவும்  ஆரோக்கியம் தரும் விட்டமின் சி சத்துள்ள பழங்களைச் சாப்பிட்டால்கூட முடிவில் வாயைக் கொப்பளிக்காமல் விட்டால், அந்தப் பழங்களின் அமிலத் துணுக்குகள் பற்களில் கறையை உண்டாக்கும்; எனாமலைச் சுரண்டும்.
‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ எனப் பலகாலம் படித்து வந்தாலும், ‘அந்த இரண்டும் எங்க ஃப்ளாட்ல இல்லையே’ என்ற பரிதவிப்புடன், ஷாருக் கான், அனுஷ்கா சொல்லும் பேஸ்ட் மற்றும் பிரஷில்தான் நம்மில் பலர் பல் துலக்குகிறோம். அந்த பேஸ்ட் மற்றும் பிரஷில்  நடக்கும் வணிக யுத்தம் எக்கச்சக்கம். சினிமா திரையரங்குகளில் மட்டுமே விளம்பரம் வந்திருந்த காலம் தொடங்கி, இன்று ஆன்லைன் விளம்பரங்கள் வரை, ‘ஆயுர்வேத மூலிகையாலே… தயாரிப்பது…’ எனப் பாடிக்கொண்டு ஒரு குடும்பமே பளிச் பற்களைக் காட்டிப் பரவசப்படுத்தும். ஆரம்பத்தில், ‘உங்கள் டூத் பேஸ்ட் வெள்ளையாக இருந்தால் மட்டுமே, பற்களும் வெள்ளையாக இருக்கும்’ எனப் பாடி வந்தன விளம்பரங்கள். இடையில், ‘கலர்கலர் கெமிக்கல்கள்தான் உங்கள் பற்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்’ என மினுங்கும் நிற ஜெல் பேஸ்ட்களை இளமையின் அடையாளம் ஆக்கினர். உப்பு, கரித்தூள் கொண்டு பல் தேய்த்துக்கொண்டிருந்த தாத்தா பாட்டிகளிடம், ‘கரித்தூள் வெச்சு விளக்க, அது பல்லா… பழைய பாத்திரமா?’ எனக் கிண்டலடித்தோம். ஆனால், இப்போது அதே கரித்தூளை ‘activated charcoal’ வடிவில் அடக்கியது என்று விளம்பரப்படுத்தி சார்க்கோல் இழைகளால் தயாரித்த பிரஷ் விற்கிறார்கள். ஆக, கூடிய விரைவில் ஆலங்குச்சி பிரஷ், வேலங்குச்சி பிரஷ் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களால் விற்கப்படலாம். ‘உங்கள் சட்டைப் பையில் இருக்கும் பணத்தை, உங்களை வைத்தே கிழித்தெறிய வைத்துவிட்டு, கூடுதல் வட்டியில் காலமெல்லாம் கடன் வாங்கவைக்கும்’ வணிக சித்தாந்தத்துக்கு இதைவிட மோசமான எடுத்துக்காட்டு இருக்க முடியாது.
ஆலும் வேலும் மட்டும் அல்ல, மருதம், இலந்தை, இலுப்பை, இத்தி, கருங்காலி… எனப் பல துவர்ப்புத் தன்மையுள்ள மூலிகைக் குச்சிகளை, அதன் பட்டையோடு சேர்த்து பல் துலக்கப் பயன்படுத்தியது  நம் பாரம்பர்யம். ஹெர்குலிஸில் இருந்து வந்தியத்தேவன் வரை அதில் ஒன்றைத்தான் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆலங்குச்சியில் குளிர்ச்சி, இலந்தையில் இனிய குரல்வளம், இத்தியில் விருத்தி, இலுப்பையில் திடமான செவித்திறன், நாயுருவியில் புத்திக்கூர்மை, தைரியம், மருதத்தில் தலைமயிர் நரையின்மை, ஆயுள் நீட்டிப்பு… என பல்குச்சி மூலம் சகல நிவாரணங்களைச் சொல்லிக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள். பல் துலக்க, துவர்ப்புத்தன்மை பிரதானமாக இருக்கவேண்டும். மேற்குறிப்பிட்ட அத்தனை குச்சிகளும் அதைத்தான் தந்தன. பொதுவாக துவர்ப்புச் சுவை தரும் தாவர நுண்கூறுகள் அனைத்தும்  நோய் எதிர்ப்பு ஆற்றலையும், எதிர் நுண்ணுயிரித்தன்மையையும், ஆன்ட்டி-ஆக்சிடென்ட் தன்மையையும் தருவன என்பது இன்றைய தாவரவியலாளர் கண்டறிந்தது.
திருக்குரானில்தான் முதன்முதலில் ‘மிஸ்வாக்’ குச்சியைப் பல் துலக்கப் பயன்படுத்தச் சொன்னார்கள். துவர்ப்புச் சுவையுடைய மெஸ்வாக் குச்சி மரத்தின் பெயர் உகாமரம். வழக்குமொழியில் குன்னிமரம் என்பார்கள். உகா குச்சியின் பயனை நாம் மறந்தாலும் பேஸ்ட் கம்பெனி மறக்கவில்லை. மூலிகைப் பற்பசையில் அதற்கு எனத் தனிச் சந்தை உண்டு. திரிபலா சூரணம் எனும் மும்மூர்த்தி மூலிகைக் கூட்டணி, வாய் கொப்பளிக்கவும், பல் துலக்கவும் மிக எளிதான மிக உன்னதமான ஒரு மூலிகைக் கலவை. பல உடல் வியாதிக்கும் பயன் அளிக்கும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கூட்டணி பல் ஈறில் ரத்தம் வடிதல், வலி, ஈறு மெலிந்து இருத்தல், கிருமித்தொற்று… போன்ற வாய் மற்றும் பற்கள் பிரச்னைக்குப் பலன் அளிக்கும் எளிய மருந்து.
பற்களுக்கு ‘ரூட் கேனால்’ சிகிச்சை இப்போது பிரபலம். பற்கள் மற்றும் அதைச் சூழ்ந்துள்ள வெளி மற்றும் உள்சதைப் பகுதிகள் அழற்சியால், கிருமித் தொற்றால் பாதிப்பு அடையும்போது, பல் முழுதாகப் பாழ்பட வாய்ப்பு உண்டு. முன்னெல்லாம் குறடு வைத்து பல்லைப் பிடுங்கிவிடுவார்கள். இப்போது, பல்லை நீக்காமல் பாதிப்படைந்த சதைப்பகுதியை மட்டும் நீக்கி, இயல்பாகப் பல்லைப் பாதுகாக்கும் சிகிச்சைதான் ரூட் கேனால். உங்கள் குடும்ப மருத்துவர் பரிந்துரைந்தால், அதை மேற்கொள்வது உங்கள் பல்லை நெடுநாள் பாதுகாக்கும்.
பல் வலி, பல் பிரச்னை மட்டும் அல்ல. பல்லின் புறப்பகுதியில் வரும் அழற்சி மற்றும் தொற்றுப் பக்கவாதம், மாரடைப்பு முதல் ஆண்மைக் குறைவு வரை ஏற்படுத்தும் என்கிறது ஆங்கில மருத்துவம். தினம் இருமுறை பல் துலக்காவிட்டால், ‘அந்த’ ஆர்வம் குறையும்  நிலை வரலாம். ‘கருப்புபூலா வேர்’ எனும் சாதாரணச் செடியில் பல் துலக்கினால், ஆண்மை பெருகும் என்கிறது சித்த மருத்துவம். PERIODONTITIS எனும் அழற்சியே பலருக்கு வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும். குறிப்பாக சர்க்கரை வியாதியினருக்கு இந்தப் பிரச்னை அதிகம். அதே சமயம் வாய் துர்நாற்றத்துக்கு பல் பிரச்னை மட்டும் காரணம் அல்ல. அஜீரணம்,  நாள்பட்ட குடல்புண், ஈரல், கணைய நோய்கள்கூட காரணங்களாக இருக்கலாம். ‘வாய் நாறுது’ எனச் சொல்லி, சந்தையில் விற்கும் விதவிதமான மணமூட்டிக் கொப்பளிப்பான்களில் வாய் கொப்பளித்தால், வாய் மணக்காது… வாஷ்பேசின் வேண்டுமானால் மணக்கக்கூடும்!
‘பல்லுன்னா அப்படித்தான் காரை ஏறும்; விழும்; பொக்கை ஆகும். அதுக்கெல்லாம் எதுக்கு இவ்வளவு அக்கறை? பொம்பளைக்கு எதுக்கு பல் கிளீனிங், பல் செட்டு?’ என மடமை பேசும் சமூகச்சூழலில் இருந்து, இன்னும் நம்மில் பலர் வெளியே வரவில்லை. ஸ்டெம் செல் உதவியுடன் டைட்டானியப் பல் வளர்க்கும் வித்தையை நவீன உலகு ஆய்வு செய்கிறது.  ஆலும் வேலும் பற்களைப் பராமரிக்கும் என 3,000 வருடங்களாக நம் இலக்கியம் அழுத்திச் சொல்கிறது. ஆனால், இதை வணிகம் மட்டும்தான் இணைக்க வேண்டுமா? சமூக அக்கறையுடன் இரண்டு அறிவியலும் இணைந்தால், அழகான அடித்தட்டு மக்களின் முகங்கள் புன்னகைக்கும்!
- நலம் பரவும்…

எது சரி… எது தப்பு?
அறிவுப் பல்லை (WISDOM TOOTH) கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்பது இல்லை. அது குறுக்கே வளர்ந்தால், தாடை சதைப்பகுதியில் சீழ்க்கட்டியை உருவாக்கினால் மட்டுமே அகற்றலாம்.

பல் வலிக்கு நிவாரணமாக கிராம்புத் தைலம் தடவுவது அல்லது வலிக்கும் பல்லில் கிராம்பை வைத்துக் கடித்துக்கொள்வது பாட்டி வைத்தியமுறை. ஆனால், இன்று சந்தையில் கிடைக்கும் கிராம்பில் 100-க்கு 90 சதவிகிதம், அதன் எண்ணெய் நீக்கப்பட்ட வெறும் சக்கை மட்டுமே இருக்கிறது. கிராம்பு எண்ணெயிலும் கலப்படம் அதிகம். பல்லில் உண்டாகும் லேசான வலிக்கு, அந்த இடத்தில் இஞ்சித்துண்டு வைத்துக் கடிப்பதும், கூடவே அரை டீ-ஸ்பூன் அமுக்கரா சூரணம் சாப்பிடுவதும் நிவாரணம் தரும். அப்போதும் வலி அதிகரித்தால் அல்லது தொடர்ந்தால், பல் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

ஈறில் ரத்தக் கசிவு இருந்தால், அது பல் நோயாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அது ரத்தத்தட்டு குறை நோயோ அல்லது ஆரம்பக்கட்ட சர்க்கரை நோயாகவோகூட இருக்கலாம்.

டீன் டிக்கெட்டுகள் பற்களில் பச்சை குத்திக்கொள்கின்றனர். ‘பல் மேல் உறைபோல செய்து அதில்தான் குத்துகிறோம். அதனால் பல்லுக்குப் பாதிப்பு இல்லை’ என இப்போது சொன்னாலும், நாளை மருத்துவ உலகம் எதை மென்று விழுங்கும் என யாருக்கும் தெரியாது… எனவே, உஷார்.

சீரான பல் வரிசை அமைக்கும் அழகியல் சிகிச்சை அதிகரித்துள்ளது. ஆனால், இது பார்லருக்குப் போய் முடிவெட்டுவதுபோல இல்லை. பல் மருத்துவரின் ஆலோசனை மிக அவசியம்.

பல்லில் காரை, மஞ்சள் கறை படிவதைப் போக்க, அமில உணவுகளைச் (தேநீர், பழச்சாறுகள்…) சாப்பிடும்போதெல்லாம் வாயைக் கொப்பளிக்கலாம்.

சிலர் மாருதி காரையே பற்களால் கடித்து இழுக்க, பலருக்கு பால்கோவா கடித்தாலே பற்கள் கூசும். ‘பல் உறுதியாக இருக்க கால்சியமும் பாஸ்பரஸும் நிறைந்த பால் பொருட்கள் பயன்படும்’ என்கிறார்கள் பல் மருத்துவர்கள். மோரும் கம்பும் சேர்ந்த கம்பங்கூழ் நல்லது என்கிறார்கள் பல் போன பாட்டிகள்! 

பல் பத்திரம்
தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் 7 முதல் 10 நிமிடங்கள் வரை மென்மையான இழைகளால் ஆன டூத் பிரஷால் (mild, soft, wild, hard என்றெல்லாம் பல பிரஷ்கள் சந்தையில் உண்டு.) பல் துலக்கினால் போதும். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதிதான். ஆனால், உமிழ்நீர்பட்ட ஒரே குச்சியை ஒவ்வொரு நாளும் உபயோகிக்க முடியாது. தினம் ஒரு குச்சியை உடைத்தால், ஓர் ஊர் பல்தேய்க்க ஒரு காட்டையே அழிக்கவேண்டி வரும். அது சூழலுக்குக் கேடு. அந்தக் கால சாப்பாடு பல்லை அவ்வளவாகப் பாதித்திருக்காது. இப்போதைய சாப்பாட்டில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருக்கும் பல ரசாயனத் துணுக்குகள், பல்லையும் வாயையும் பதம்பார்ப்பதால், பேஸ்ட், பிரஷ் பரவாயில்லை. வாரம் ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுபோல், வாரம் இரண்டு நாட்கள் மூலிகை பல் துலக்குதல் நடத்தலாம்.

குளிர்பானம், சவ்வு மிட்டாய், தனி சர்க்கரை போன்றவை, பற்களின் எனாமலைப் பாதிக்கும். ஜீரணக் கோளாறால் வயிற்றில் சுரக்கும் அமிலம், வாய்ப் பகுதிக்கு வந்து பல் எனாமலை அரிக்கும்.

குழந்தைகள் ஃப்ளுரைடு இல்லாத பசையைப் பயன்படுத்துவது நல்லது. அதிகபட்ச ஃப்ளுரைடுகூட பல் அரிப்பு தொடங்கி சர்க்கரை வியாதி வரை உண்டாக்கும்.

‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ எனச் சொன்னாலும் சொல்லிவைத்தார்கள்… நம்மவர்கள் குண்டூசி, கொண்டை ஊசி, உட்பட கூர்முனைகொண்ட பல பொருட்களாலும் பல் குத்துகின்றனர். பொதுவாகப் பல் குத்துவதே தவறு. அதற்குப் பதில் சாப்பிட்டு முடித்ததும், வாயை நன்கு கொப்பளியுங்கள். அல்லது அதற்கென உள்ள மென்மையான இழைகளால் சுத்தம் செய்யுங்கள்.

எண்ணெய்க் கொப்பளிப்பு சமீபத்தில் மிகவும் பிரபலம்.  கிருமிகள் நீங்க, உடல் சூடு குறைய, வாய்ப் புண்களைத் தடுக்க… செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயால் வாயைக் கொப்பளிக்கலாம்.