Dec 28, 2012

மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் வருவாய் ரூ.50 லட்சம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் டிசம்பர் மாத உண்டியல் வருவாய் ரூ.50 லட்சம் கிடைத்துள்ளது. கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான பி.ஜெயராமன் தலைமையில் கோயில் உண்டியல்கள், உபகோயில்களின் உண்டியல்களில் உள்ள காணிக்கைகளை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு உண்டியல் மூலம் ரூ. 50 லட்சமும், அன்னதான உண்டியல் மூலம் ரூ.90 ஆயிரம் கிடைத்துள்ளது. கோயில் உண்டியல்களில் பக்தர்கள் தாலிச் சங்கிலி, தங்கக்காசுகள் காணிக்கையாகவும் அளித்துள்ளனர். அதன்படி 360 கிராம் தங்கமும், 450 கிராம் வெள்ளிப் பொருள்களும் கிடைத்துள்ளன. உபகோயிலான தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 2.40 லட்சமும், அன்னதான உண்டியல் மூலம் ரூ.36 ஆயிரமும்,செல்லூர் திருவாப்புடை யார் கோயில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.26 ஆயிரம் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். வருண பாராயணம் மழைவேண்டி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த 12-ம் தேதி சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபம் அருகே வருணபாராயண சிறப்பு யாகம் தொடங்கியது. இதில் 7 நதிகளது புனித நீர் அடங்கிய கலசங்கள் யாகசாலையில் பூஜை செய்யப்பட்டு, வேதபாராயணம் முழங்க, பொற்றாமரைக் குளத்தில் புனிதநீர் கலக்கப்பட்டது. வருணபாராயண நிறைவு நிகழ்ச்சியானது புதன்கிழமை நடைபெற்றது. இதில் ,பத்துக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு, நதிகளது புனிதநீருக்கு சிறப்புப் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த நீரானது பொற்றாமரைக்குளத்தில் கலக்கப்பட்டது. பாராயணத்தின் நிறைவு நாளான புதன்கிழமை மாலை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றுடன் லேசான மழையும் பெய்தது பக்தர்களை பரவசப்படுத்தியது.

Dec 27, 2012

தி.மு.க. மவுனம் சாதிப்பது ஏன்? நாஞ்சில் சம்பத் கேள்வி

உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று தமிழக முதல்வர் கேட்ட பின்னரும் அதை எதிரி நாடான பாகிஸ்தானுக்கு மத்திய அரசு அனுப்பி வருகிறது. இந்த விஷயத்தில் தி.மு.க. மத்திய அமைச்சர்கள் மவுனமாக இருப்பது ஏன் என்று அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பி உள்ளார். 
அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது, 
பாகிஸ்தான் நமது எதிரி நாடு என்று நாம் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் பாகிஸ்தானுக்கு உபரி மின்சாரம் 5 ஆயிரம் மெகாவாட்டை மத்திய அரசு அனுப்புகிறது. டெல்லியில் உபரி மின்சாரம் இருக்கிறது. அதை தமிழகத்திற்கு அளியுங்கள் என்று தமிழக முதல்வர் கேட்டும் அதை மத்திய அரசு மறுத்து வருகிறது. காரணம் தமிழகத்துக்கு மின்சாரம் தருவதை தி.மு.க. தலைவர் கருணாநிதி விரும்பவில்லை. 
பாகிஸ்தானுக்கு மின்சாரம் தரப்படுவதை அறிந்தும் மத்திய அரசில் பதவி வகிக்கும் தமிழக அமைச்சர்கள் வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்? அதை தந்து விட்டால் வரும் மக்களவை தேர்தலில் அவர்கள் செல்லாக்காசாகி விடுவார்கள் என்பதால்தான். இப்போது தமிழக அரசுக்கு மின்சாரம் மட்டுமே முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதுவும் தீர்ந்து விட்டால் எப்படி தேர்தலை சந்திப்பது என்பதற்காக தி.மு.க அமைச்சர்களாலேயே தமிழகத்திற்கு மின்சாரம் தருவது தடை செய்யப்படுகிறது. காவிரி டெல்டா மக்களின் குறைகளை களைய தமிழகத்துக்கு அதிக மின்சாரம் கொண்டு வர மின் உற்பத்தியை அதிகரிக்க முதல்வர் ஜெயலலிதா திட்டமிடுகிறார் என்றார்.

Dec 26, 2012

குஜராத் முதல்வராக 4வது முறையாக பதவியேற்றார் நரேந்திர மோடி.விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா !

குஜராத் மாநிலத்தின் முதல்வராக 4வது முறையாக பதவியேற்றார் நரேந்திர மோடி. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 182 இடங்களில் 115ஐ கைப்பற்றி ஆளும் பா.ஜ., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து சாதனை படைத்தது. குஜராத் சட்டசபை பா.ஜ., தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, குஜராத் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று காலை நடந்தது. இதற்காக ஆமதாபாத்தில் மிகப் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ‌‌மொத்தம் 1 லட்சம் பேர் அமரும் வசதி கொண்ட ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பதவியேற்பு விழாவையொட்டி, மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். இதற்காக அவர் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் ஆமதாபாத் சென்றடைந்தார். சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தேசிய தலைவர் நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், வெங்கய்யா நாயுடு, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். நரேந்திர மோடிக்கு, கவர்னர் கமலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில், இன்று காலை தனது டுவிட்டர் இணையதளத்தின் வாயிலாக தொண்டர்களிடையே உரையாடிய மோடி, எதிர்கால இந்தியா சிறப்பாக அமைவதற்கான ரகசியம், அதன் ஒருங்கிணைப்பு மற்றும் உறுதிப்பாட்டிலேயே உள்ளதாக தெரிவித்துள்ளார். மோடியின் இந்த பேச்சு, தேசிய அளவில் அவர் தன்னை நிலைநிறுத்துவதற்கான வழிகளை நோக்கி செல்வதாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

புலித்தடம் தேடி...மகா. தமிழ்ப் பிரபாகரன் 1

புலித்தடம் தேடி... பாகம் 01
இதுதான் நீங்கள் கேட்ட கண்ணி வெடிகள் அகற்றும் பகுதி!’ என்று ஓட்டுனர் இயல்பாகத்தான் சொன்​னார். ஆனால், எனக்கு கண்ணில் வெடித்தது​போல் இருந்தது. எத்தனை உயிர்களைக் காவு​வாங்கிய இடம்! கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு பரந்தன் சந்தியைக் கடக்கையில், மனதில் பெரும் வெறுமை. அந்தச் சாலையின் வலதுபுறமாகச் செல்வதுதான் முல்லைத்தீவை அடையும் வழி. 'சின்ன உப்பளம்’ பகுதியில் நின்றது பேருந்து.
நான் இறங்கிய இடத்தில் ஓர் உணவகம். இராணுவத்துக்குச் சொந்தமானது என்ற மிலிட்டரி மிடுக்கு அந்த உணவகத்துக்கு இருந்தது.
ஆயுதம் ஏந்தியபடி புலி பதித்த தடத்திலும், ஆக்கிரமிப்பாய் இன்று சிங்கள இராணுவம் குவிந்துள்ள பாதையிலும் கண்ணி வெடிகள் இருக்கின்றன. இனியும் யாருக்காக என்ற வேதனைக் கேள்வியுடன், மரண நெடுஞ்சாலையான 'ஏ9’ சாலையில் நடக்கிறேன்.
கண்ணி வெடிகளை அகற்றும் பணி நடக்கிறது. எல்லா வேலைகளையும் சிங்களவர்களுக்கே தரும் இலங்கை அர​சாங்கம், உயிருக்கு ஆபத்தான கண்ணி வெடிகள் அகற்றும் பணியில் தமிழர்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
நொடி கவனம் சிதறி​னாலும் உயிர் போகும் வேலை. அதைப் படம்பிடித்துக்கொண்டே நகர்ந்தேன். தூரமாய் ஒரு கூடாரம் தெரிந்தது. இன்னும் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்த்தபோது அங்கேயும் இராணுவம்.
நான் நின்றுகொண்டு இருந்த இடத்தைப் பார்த்தேன். மணல் நிறைந்த தடம் அது. கண்ணுக்கெட்டும் தூரத்தில் தண்ணீரும் இராணுவத்தின் யுத்த வெற்றிச் சின்னமும் தென்பட்டது.
எந்த மக்களையும் பார்க்க முடியவில்லை. நடந்தே தண்ணீரை ஊடறுத்துச் சென்று பாதையை கடக்க முடிவெடுத்து, கொஞ்ச தூரம் நடந்திருப்பேன். ஒரு பேருந்து வந்தது. அதில் ஏறினேன்.
சில நிமிடங்களில் வந்தது, சிங்களர்​களுக்கான வெற்றிச் சின்னம். அப்போது மணி காலை 9.30. இராணுவ டெம்போவில் இருந்த ஆயுதங்கள் இறக்கப்​பட்ட நேரத்தில், நான் தனி ஆளாக அந்த இடத்தில் நின்றேன். என் மீது இராணுவப் பார்வைகள்.
யார் நீ? என்றது ஒரு குரல்.
இலங்கைக்குச் சுற்றுலா வந்துள்ளேன் என்றேன் சாதாரணமாக.
போ'' என்று கை அசைத்தனர். நான் நுழை​வதற்குள் சிங்களச் சுற்றுலாவாசிகள் சுமார் 30 பேர் ஒரு வானில் வந்து இறங்கினர். அவர்களோடு நானும் நுழைந்தேன்.
இராணுவத்தைச் சேர்ந்த மூன்று பேர் செல்போன் பேசியவாறே எங்களுடன் வந்தனர்.
சிங்களவர்களைப் போன்றே, நானும் அந்த வெற்றிச் சின்னத்தைப் படம் எடுத்தேன். இராணுவத்தினர் சிங்களவர்களுக்கு எதையோ சொல்லிக்கொண்டு இருந்தனர்.
அவர்களுக்குச் சிங்களத்தில் சொன்னதை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ எனக்குச் சொல்ல முடியுமா? என்று கேட்டேன்.
சிங்களம் தவிர எதுவும் தெரியாது என்றனர்.
சிங்களப் பயணி ஒருவர் என்னிடம், ''இது நம் மண்ணை ஆக்கிரமித்து இருந்த புலித் தீவிரவாதிகளிடம் மீட்ட இடம். இங்கு நம் போர் வீரர்கள் பெரும் தியாகத்தைச் செய்து புலித் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றி உள்ளனர்.
நமது மண்ணை நாம் மீட்டெடுத்து உள்ளோம். நீங்கள் எல்லாம் தென் இலங்கையில் இருந்து வந்துள்ளீர்கள். இது ஆபத்து நிறைந்த இடம். சாலையை விட்டு உள்பகுதிக்குள் செல்லாதீர்கள். வெடிக்காத குண்டுகள் நிறையப் புதைக்கப்பட்டு உள்ளன'' என்று இராணுவ வீரர் சொன்னதாக ஆங்கிலத்தில் சொன்னார்.
மனித நாமத்தினால் தேசத்தின் புண்ணியத்துக்குத் தோன்றிய ஆயுதம் தாங்கிய படைத் தலைவர் அதிமேதகு மகிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையிலும் பாது​காப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலிலும் ஒருங்கிணைப்பிலும் ஏனைய இராணுவப் பிரிவுகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையால் வடக்கையும் தெற்கையும் இணைத்ததன் நினைவாய் சமாதான நினைவுத் தூபி இங்கு எழுப்பப்பட்டுள்ளது’ என்று பொறிக்கப்பட்டதை என் கண்கள் வாசித்தன.
என்னை நெருங்கிய இராணுவத்தினர் மூவர், என்னைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். நான் சொன்ன அனைத்தையும் குறித்துக்கொண்டனர். ''ஓகே மச்சான்'' என்று இரண்டு பேர் விலகிச் செல்ல, ஒருவர் மட்டும் அந்த இடத்திலேயே நின்றார்.
சில நிமிடங்களில் இருவரும் மீண்டும் வந்தனர். 'வாங்க பேசலாம்’ என்று அழைத்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பேசும் விதம் விசாரணையை நோக்கிச் செல்வதை உணர முடிந்தது. நடந்தே என்னை இராணுவச் சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.
கொஞ்ச நேரம் உட்காருங்கள். எங்கள் ஆமி மேஜர் வருவார்'' என்றார்கள்.
நான் ஏன் அவரைப் பார்க்க வேண்டும்?'' என்று கேட்டேன்.
அவர்தான் உங்களைப் பார்க்க வேண்டுமாம்'' - கிண்டலாய் சினந்தனர். அப்போது, என்னைச் சுற்றி இராணுவத்தைச் சேர்ந்த ஏழு பேர் இருந்தனர். அடுத்து பொலிஸைச் சேர்ந்த இருவர் வந்து, என்னைப் பற்றிய தரவுகளை எடுத்தனர். காக்க​வைத்து ஒரு மணி நேரத்துக்கும் மேலானது. கழிவறை செல்லும்போதும் என்னைக் காவல் காத்தனர்.
இடையில் வந்த ஒருவர், ''முள்ளிவாய்க்கால் போனீங்​களா? பிரபாகரன் செத்த இடம் நந்திக் கடல் போய்ப் பார்த்தாச்சா..?' என்று எதையோ சொல்​லிச் சென்றார்.
அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் கிளிநொச்சிப் பக்கம் இருந்து, இராணுவ ஜீப் ஒன்று வந்தது. ஐந்து பேரோடு வந்து இறங்கினார் ஓர் அதிகாரி. அவர்​களுக்குப் பின்னே மொபட்டில் இருவர் வந்தனர்.
விசாரணை தொடங்கியது. முழுக்கவும் ஆங்கிலத்​தில் பேசினர்.
எங்கு இருந்து வருகிறீர்கள்... எதற்காக வந்துள்​ளீர்கள்?''
இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து சுற்றிப்பார்க்க வந்துள்ளேன்.''
நீங்கள் இலங்கையைத் தேர்வு செய்யக் காரணம் என்ன?''
என்ன சொல்ல? '' 'லோன்லி பிளானட்’ இணை​யதளம் 2013-க்கான சிறந்த 10 சுற்றுலா நாடுகளில் இலங்கையைத் தேர்வுசெய்துள்ளது. அதன் காரணமாகவும் பயணச்செலவு குறைவு என்ப​தாலுமே இலங்கையைத் தேர்வுசெய்தேன்'' என்றேன் மையமாக.
என்று வந்தீர்கள்... என்ன பணியில் உள்ளீர்கள்?''
நவம்பர் 13 அன்று வந்தேன். ஆய்வுப் பணியில் உள்ளேன்.
இங்கே வேறு எங்கு போனீர்கள்?
யாழ்ப்பாணத்தில் உள்ள டச் கோட்டை, முருகன் கோயில்'' என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஒருவர், ''நைஸ் போன். தாங்க பார்ப்போம்'' என்று கிட்டத்தட்ட பறித்துக்கொண்டார்.
நீங்கள் எங்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ளத்தான் இப்படிக் கேட்டோம். ஏன் தனியாக வந்தீர்கள்? என்று மறுபடியும் கேட்டனர்.
அதுதான் ஏற்கெனவே சொன்னேனே! என்றேன்.
அவர் என்னைவிட்டு விலகி, தன் மேல் அதிகாரிக்கு சிங்களத்தில் என்னைப் பற்றிய விவரங்களைச் சொன்னார். 40 நிமிடங்கள் போனது. அவர்கள் என்னைப் படம் எடுத்துக்கொண்டனர். மொபட்டில் வந்த இருவரும் மறுபடியும் என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டனர். என் கடவுச்சீட்டைப் பரிசோதித்தனர். கடவுச்சீட்டில் என் பெயர், தமிழ்ப் பிரபாகரன் என்று இருந்தது.
தமிழ்ப் பிரபாகரன் என்று பெயர். அதுவும் தனியாக வந்திருக்​கிறாய்?'' என்றார்கள்.
என்னைப் பற்றி பேசும்போது ஏன் உங்களுக்குள் சிங்களத்தில் பேசுகிறீர்கள். இருவருக்கும் பொதுவான மொழியில் பேசுங்கள். நான் உங்கள் நாட்டுக்கு வந்த விருந்தாளி. சுற்றுலாவாசியை ஒரு தீவிரவாதிபோல் விசாரிக்கிறீர்கள்.
நான் இந்தக் கேள்வியை வீசிய நேரம், பொலிஸிடம் இராணுவ அதிகாரி கடும் கோபத்துடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அவர் சிங்களத்தில் பொலிஸிடம், எங்களுக்குச் சந்தேகம் இருக்கும் பட்சத்தில், யாரையும் கைது​செய்யலாம். உன்னிடம் அதைச் சொல்ல​வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
அதாவது என் மீது நடவடிக்கை எடுப்பதில் இராணுவம், பொலிஸ் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதை என்னால் உணர முடிந்தது. இராணுவ அதிகாரி தன் அதிகாரியிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது என்னிடம் தங்கள் நிலையைப் பேசிய பொலிஸ்,  உங்கள் பக்கம் தப்பு இல்லை என்றாலும், இராணுவத்தை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் எங்களை மிரட்டுகிறார்கள்.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த இடத்தைப் படம் எடுக்கக் கூடாது. நீங்கள் தனியாக வந்ததைத்தான் இராணுவம் பெரிய பிரச்சினையாகப் பார்க்கிறது. உங்களை இராணுவப் பெரியவர் கைதுசெய்யச் சொல்லி இருக்கிறார். உங்களிடம் ஆங்கிலத்தில் நன்றாகத்தான் பேசுகிறார். ஆனால் எங்களிடம் சிங்களத்தில் கைது செய்யச் சொல்கிறார் என்றார்.
டீ குடிச்சிட்டே கதைப்போம் வாங்க என்றார் இடையில் வந்த சி.ஐ.டி அதிகாரி.  அனுமதிபெற்று நுழைந்த பிறகும் மணிக்கணக்காய் விசாரணை செய்யும் உங்களை எப்படி நம்புவது? என்றேன்.
பதில் பேசாமலே அவர்களுக்குள் சிங்களத்தில் பேசினர். யாருக்கோ என்னைப் பற்றிய தகவலைப் பகிர்ந்தனர். இலங்கையில் தங்கியிருக்கும் முகவரியை மீண்டும் வாங்கிக்கொண்டு, போகலாம் என்றார் சி.ஐ.டி. அதிகாரி திடீரென.
எழுந்து நடக்க ஆரம்பித்தேன். என்னை விசாரித்த இராணுவ மேஜர் நான் பேருந்து ஏறும்வரை என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.
புலிகள் என்றாலும் கேமரா என்றாலும் சிங்கள இராணுவத்துக்கு இன்றும் அவ்வளவு பயம். அந்தப் பயத்தால்தான் தமிழ் நிலம் இன்றும் இராணுவ வசிப்பி​டமாக இருக்கிறது.
ஐந்து லட்சம் சிங்களவர்களை உள்ளடக்கிய இலங்கை இராணுவம், தனது மொத்தப் பங்கில் 80 சதவிகிதப் படையினரை (நான்கு லட்சம் பேர்) தமிழர் நிலத்தில் புலிகளுக்காகக் காவல் வைத்துள்ளது.
அப்படியான சிங்கள இராணுவத்தின் கேமரா பயத்தால்தான், இந்தியக் குடியுரிமைபெற்ற தமிழனாகிய நானும், இலங்கையில் இரண்டு முறை இராணுவ விசாரணைக்காக மூன்று மணி நேரம் வைக்கப்பட்டேன்!
ஆனால், தமிழர்கள் அனைவரும் 24 மணி நேரமும் இராணுவ விசாரணையில் இருப்பதைப் போலவே இருக்கிறார்கள்.
கொழும்புவில் மிகக் கோரமானது பூசா சிறை முகாம். எந்த விசாரணையும் இல்லாமல் 20 ஆண்டுகளைக் கடந்தும் தமிழர்கள் சிறை வைக்கப்பட்டு இருக்கும் இடம். இங்கேதான் என் மகன் இருக்கிறானா என்று எந்தத் தாயும் உறுதி செய்ய முடியாத அளவுக்கு இருட்டான இடம்.
இன்னொன்று, இலங்கை இராணுவத்தில் 4-வது மாடி விசாரணை. அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அனைவரையும் உயிரோடு சிறுகச்சிறுகச் சித்திரவதை செய்து கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்லும் இடம் அது.
இவை இரண்டும் இன்னும் உலகத்தின் மனச்சாட்சிக்கு முன்னால் வெளிச்சத்துக்கு வராத இடங்கள். உண்மையைச் சொன்னால், ஈழத்தின் மொத்த நிலப்பரப்புமே அப்படித்தான் இருக்கிறது!
நாலைந்து தமிழர்கள் சேர்ந்து நிற்க முடியாது. சந்தேகக் கண்கள் உங்களை நோட்டமிட்டபடி நிற்கும். சொந்தங்கள் பக்கத்து ஊரில் இருந்து வந்தால்கூட, பதிவுசெய்த பிறகுதான் நுழைய முடியும்,
வெளிநாட்டில் இருந்து வருவதைப் போல. வெளிநாட்டில் இருந்து உறவுகளைப் பார்க்க வருபவர்களுக்கு முழுமையான விசாரணை உண்டு.
கிளிநொச்சியில் ஒரு காட்சி... கோயில் திருவிழாவில் பக்திப் பரவசத்துடன் தமிழ் பக்தர்கள் நடந்து செல்கிறார்கள். சுற்றிலும் பாதுகாப்​புக்கு இராணுவமோ, பொலிஸோ போனால் பரவாயில்லை. ஆனால், பக்தர்கள் தலைகளைவிட இராணுவத்தினர் எண்ணிக்கைதான் அதிகம்.
தமிழர்கள் சாமியைச் சொல்லித் திரண்டாலும் புலிகளாகவே நினைக்கிறது இராணுவம். சுயமாய் நடமாடவும், சுயமாய் பொருள் தேடவும், சுயமாய்ச் செயல்படவும் அனுமதிக்காத அவசர நிலை இன்னமும் அப்படியே இருக்கிறது.
தமிழர்களைக் கண்களுக்குத் தெரியாத கயிறால் கட்டிப்போட்டுவிட்டு, அவன் சுதந்திரமாய் அலைந்த பூமியை சுற்றுலாத் தலங்களாக மாற்றி விட்டனர்.
சிங்களவர் பெருமை பேசும் நினைவகங்கள், இராணுவத்தின் வீரம் சொல்லும் முகாம்கள், புத்தரின் புகழ்பாடும் கோயில்கள், கேளிக்கை விடுதிகள் என ஈழப் பிரதேசம், தமிழ் அடையாளங்களைத் தொலைத்து விட்டது. தமிழர்களைப் போலவே துடைக்கப்பட்டு விட்டது!
ஆனையிறவுக்கு முன் ஒரு பகலைக் கொழும்புவில் தொடங்கினேன். எனது பயணமும் அங்கு இருந்துதான் ஆரம்பம் ஆனது!
ஊடறுத்துப் பாயும்......
ஜூனியர் விகடன்