விண்ணப்பதாரர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான புதிய வசதி, மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ். மணீஸ்வர ராஜா கூறினார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியது:
பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் வசதிக்காக, பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின்கீழ், மதுரை மற்றும் நெல்லையில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் முன்பதிவு செய்யும் பலர், குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது இல்லை. இதனால், உண்மையாக பாஸ்போர்ட் பெற காத்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.
ஒரே நாளில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் வாய்ப்பு:
முன்பதிவு செய்யும்போது பாஸ்போர்ட் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் நடைமுறை அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம், சேவை மையங்களில் முன்பதிவு செய்துவிட்டு குறிப்பிட்ட நாளில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்காதவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து விட்டது. ஐந்து சதவீதத்துக்கும் குறைவானவர்களே தவிர்க்க முடியாத காரணங்களால், குறிப்பிட்ட நாளில் சமர்ப்பிக்க இயலாமல் போய்விடுகிறது. அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறையின் காரணமாக, முன்பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு, அடுத்த நாளே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் தேதி கிடைத்து விடுகிறது.
மேலும் ஒரு புதிய வசதி:
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், விசாரணைக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு வசதியாக விசாரணை கவுன்ட்டர் செயல்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பதாரர்கள் அளிக்கும் மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த சேவையைச் சீர்படுத்தும் வகையில் பாஸ்போர்ட் சம்பந்தமான விசாரணைகளுக்கு தொலைபேசி மூலமாகவோ, ஃபேஸ்புக் மூலமாக தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் அலுவலர்களைச் சந்திக்க வருவதற்கு 2 நாள்களுக்கு முன்பாக, தொலைபேசி அல்லது ஃபேஸ்புக் மூலமாகத் தொடர்பு கொண்டு அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். அனுமதி பெற்ற நாளில் குறிப்பிட்ட நேரத்தில் அலுவலர்களைச் சந்திக்கலாம். இந்த புதிய நடைமுறையின் மூலம், பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பதாரர்கள் காத்திருக்கும் நேரம் வெகுவாகக் குறையும்.
அதோடு, குறிப்பிட்ட நாளில் வர இருக்கும் விண்ணப்பதாரர்களின் விவரம் முன்கூட்டியே அலுவலர்களுக்கு தெரியும் என்பதால், அவர்களது விண்ணப்பத்தை சரிபார்த்து தயாராக எடுத்து வைக்கப்படும். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு பாஸ்போர்ட் வழங்கக் கூடியதாக இருந்தால், அன்றைய தினமே பாஸ்போர்ட் வழங்கப்படும்.
மதுரை பாரதி உலா சாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்கள், மதுரை மற்றும் நெல்லை பாஸ்போர்ட் சேவை மையங்களில் இருந்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களுக்கு மட்டுமே, இந்த புதிய நடைமுறை பொருந்தும் என்றார். புதிய வசதிக்கான தொடர்பு எண்: 0452-2521204. ஃபேஸ்புக் முகவரி: passport office madurai.