Dec 1, 2012

ஒரு இரவு பார்வை:தூங்கா நகரம் மதுரை

நைட் ரவுண்ட்-அப்


தூங்கா நகரம் இரவில் எப்படி இருக்கிறது? ஒரு நள்ளிரவில் மதுரையைச்சுற்றி வந்தோம்..
இரவு 11 மணி பை பாஸ் ரோடு, கருப்பண்ணசாமி கோயில்:
அந்த நேரத்திலும் கருப்பண்ணசாமி பிஸி. தன்னுடைய புதிய பைக்கை வாசலில் நிறுத்திவிட்டு, சாவியைச் சாமியின் காலடியில் வைத்து நெற்றியில் விபூதியைத் தீட்டிக்கொண்டிருந்தார் ஒரு வாலிபர். பைக் சக்கரத்தில் எலுமிச்சை நசுங்கியது. முன்தினம் 'பீட்சா’ படம் பார்த்த எஃபெக்ட் இன்னும் போகாததால், நாமும் கருப்பண்ணசாமிக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நைட் ரவுண்ட்ஸைத் தொடங்கினோம்.
இரவு 11.30:
அப்படியே கீழவாசல் பகுதிக்கு வந்தால், ஓட்டல்களில் மிஞ்சிய இரவு உணவை டிரை சைக்கிளில் கொண்டுவந்து குடிசை மாற்று வாரியப் பகுதிக்கு சப்ளை செய்து கொண்டிருந்தார் ஒருவர். மக்களுக்கு மலிவு விலைப் பொருட்களாவும், பன்றிகளுக்கு விலையில்லாப் பொருட்களாகவும் அள்ளி இரைக்கப்பட்டன அந்த உணவு. தூங்கா நகரை தூங்கவிடாமல் செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் திடீர் நகரைக் கடந்தபோது, நமக்குள் கொஞ்சம் பயம் வந்தது. ஏரியா அப்படி.

பெரியார் பஸ் ஸ்டாண்ட் பக்கம் நின்றால் ஆட்டோவுக்குக் கூப்பிடுவதுபோல், ரொம்ப கேஷூவலாக 'அதற்கு’ கூப்பிடுகிறார்கள் சில அழகிகள். ''நாங்களும் மதுரைக்காரய்ங்கதான்'' என்று அவர்களிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தபோது, 'ஏய்... வர்றதுன்னா வா. இல்லாட்டி மூடிக்கிட்டு போ. மதுரைக்காரன்... அது இதுன்னு சொல்லிட்டுத் திரிஞ்ச கொன்டேபுடுவோம்'' என்று முஷ்டி முறுக்கினார்கள் இரண்டு ரௌடி சார்கள்.
இரவு 12 மணி, ரெயில் நிலையம்:
ரெயில்வே ஸ்டேஷன் வாசலில் நூற்றுக்கணக்கானவர்கள் கூட்டம் கூட்டமாகப் படுத்துக் கிடந்தார்கள். என்னென்ன பொருட்கள் எல்லாம் தலையணை அவதாரம் எடுத்திருக்கின்றன என்று கவனித்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஒருவரின் தலையில் செருப்பு, மற்றொருவரின் தலையில் லக்கேஜ், இன்னொருவருக்கு தன் கை, அடுத்தொருவருக்கு பக்கத்தில் படுத்திருந்தவரின் கை. ரெயில்வே ஸ்டேஷனுக்குள் தூங்க போலீஸார் அனுமதிக்காததால், எல்லாரும் இப்படிக் கும்பலாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். மதுரையிலேயே கொடுத்துவைத்தக் கொசுக்கள் அதிகமிருப்பது இங்கேதான். கொசுவர்த்தி தொல்லை இல்லாமல், வெரைட்டியாக ரத்தம் குடிக்கின்றன!


ஏ.டி.எம். ஒன்றின் வாசலில் டிப்டாப் ஆசாமி ஒருவர் திருதிருவென்று விழித்தபடி உட்கார்ந்திருந்தார். 'ஒரு திருடர் சிக்கிட்டார்’ என்று அருகில்போய் பேச்சுக் கொடுத்தோம். 'கார்டை சொருகினேன் தலைவா. 8,000-னு டைப் பண்ணிட்டு பார்த்தா, பணம் வரலை. கார்டும் உள்ளே போயிடுச்சு. விஷயத்தைச் சொல்லலாம்னா இந்த ஏ.டி.எம்-க்கு வாட்ச்மேனே கிடையாது. வேற யாராச்சும் உள்ளேபோய் கார்டை நுழைச்சி, என்னோட 8,000 வெளியே வந்திடுமோனு பயமா இருக்கு. அதனாலதான் இங்கேயே பட்டறையப் போட்டுட்டேன். 'அவுட் ஆஃப் சர்வீஸ்’னு எழுதித் தொங்க விட்டுடலாம்னு பார்த்தேன். அட்டையும் இல்லை. பேனாவும் இல்லை. அதான் நானே ஷட்டரை இறக்கிவிட்டுட்டு, காவலுக்கு உட்கார்ந்திருக்கேன்' என்றவர் நம்மைப்பற்றி விசாரித்துவிட்டு, 'முதல்ல காலையில பேங்குக்குப்போய் எப்படி பணத்தை மீட்கிறதுனு கவலையா இருந்துச்சு. ஆனா, இப்போ பணத்தைப்பத்தின கவலையைவிட, டெங்குவைப்பத்தின கவலைதான் ஜாஸ்தியா இருக்கு. கொசுக்கடி பின்னுது சார்' என்றார் பரிதாபமாக.
கிளம்பியபோது, 'சார் நீங்க என் கூடவே விடிய விடிய உட்கார்ந்து இந்த அனுபவத்தை எழுதுங்களேன்' என்றார் சிரிக்காமல். 'காத்திருங்க. வேற யாராச்சும் துணைக்கு வருவாய்ங்க தலைவா' என்றபடி நாம் கிளம்ப, எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று அவரது அருகில் படுத்துக்கொண்டது. மனிதருக்கு டெங்குவோடு, ரேபிஸ் பயமும் வந்திருக்கக்கூடும்.
மணி 12:30 மணி ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட்:
அந்த நேரத்திலும் புரோட்டாவை ஒருபிடி பிடித்துக்கொண்டிருந்தார்கள். பஸ் ஸ்டாண்டை ஒட்டி வைகை கரைச்சாலையில், அழுக்குச் சட்டையுடன் ரெண்டு பேர் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார்கள். யாராவது சிக்கினால், வழிப்பறி செய்துவிட்டு ஆற்றுக்குள் இறங்கி ஓடிவிடுவார்களாம். வைகையில் தண்ணீர் இல்லாதது எவ்வளவு வசதியாக இருக்கிறது என்று வியந்தபடி, வேறு பாதையாக கோரிப்பாளையம் வந்தோம். அந்த நேரத்திலும் தேவர் சிலைக்குக் கால் வலிக்க காவலுக்கு நின்றார்கள் போலீஸார்.

அரசு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தால் கொசுவர்த்தி வாசனை. ஒவ்வொரு ஆளைச் சுற்றியும் சீரியல் செட்போல நான்கைந்து கொசுவர்த்திகள் எரிந்தன. ஒரு கொசுவர்த்தியைப் பல துண்டுகளாக உடைத்து, சுற்றிலும் வைத்தால்தான் கொசு கடிக்காதாம். சிலர் பாக்கெட் கணக்கில் ஸ்டாக் வைத்திருந்தார்கள்.
நள்ளிரவு 1 மணி, அரசு பாலிடெக்னிக்:
சுள்ளான்கள் சிலர் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தார்கள். எல்லாம் நினைவஞ்சலி போஸ்டர்கள். தான் ஒட்டிய போஸ்டர் மீது இன்னொரு போஸ்டரை அவர்கள் ஒட்டுவதைப்பார்த்து, பெருசு ஒருவர் பொங்க, ''இது என்ன உன் வீட்டுச் சுவரா? வர்றவன் போறவன் எல்லாம் ஒட்டத்தான் செய்வாய்ங்க... வேணுமுன்னா ஒவ்வொரு போஸ்டர் பக்கத்துலேயும் காவலுக்கு ஆள்போடு'' என்று வயதுக்கு மரியாதை கொடுக்காமல் பேசினார்கள் சுள்ளான்கள்.


சைரன் ஒலிக்க தீயணைப்பு வாகனம் ஒன்று திருமங்கலம் ரோட்டில் பறந்தது. உடனே பக்கத்தில் இருந்த சாமி பல்க்கில் (மதுரையில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்குகிற, அதிகம் விற்பனை நடக்கிற பல்க் இது) மேற்கொண்டு ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டுவிட்டு, பின் தொடர்ந்தோம். பழங்காநத்தம் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் இருந்து புகை கிளம்பிக்கொண்டிருந்தது. பரபரப்பாகப்போய் இறங்கினால், கிச்சனில் தீ விபத்தாம். அதை போட்டோ எடுக்கவிடாமல் தடுக்க, நான்கு ஊழியர்களை ஏவி விட்டிருந்தார்கள். ' பெர்மிஷன் கேட்டுட்டுப் போட்டோ எடுங்க... என்ன?' என்று மிரட்டிய ஊழியரிடம், 'யார்கிட்ட பெர்மிஷன் கேட்கணும்'' என்றோம். 'மார்னிங் டியூட்டிக்கு வர்ற மேனேஜரிடம்'' என்றார் அவர்.
'சரிண்ணே, தீயை எல்லாம் அணைச்சி, ரூமைக் கழுவிவிட்டபிறகு, போன் போடுங்க. வந்து போட்டோ எடுக்கிறோம்'' என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு, கிளம்பினோம்.
- கே.கே.மகேஷ்
படங்கள்: பா.காளிமுத்து
en.vikatan

Nov 30, 2012

மதுரையில் போலீஸ் என்கவுண்டர்

போலீசாரை தாக்கிவிட்டு இரண்டு கைதிகள் தப்பியோடினர். திருப்பாச்சேத்தி அருகே எஸ்.ஐ., ஆல்வின் சுதன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான பிரபு மற்றும் பாரதி ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் திருப்பி அழைத்து வந்த போது, மதுரை லேக்வியூ அருகே போலீசாரை தாக்கிவிட்டு அவர்கள் தப்பியோடினர்,தங்களை தற்காத்து கொள்ள  போலீஸ்  துப்பாகியால் சுட்டனர்
:""போலீசாரை தாக்க முயன்றதால், ரவுடிகள் பிரபு, பாரதியை சுட்டேன்,'' என, டி.எஸ்.பி., வெள்ளத்துரை கூறினார்.எஸ்.ஐ., ஆல்பின் சுதன் கொலை வழக்கில் கைதான ரவுடிகள் இருவரும், மானாமதுரை ராஜகம்பீரம் கால்பிரவு கிராமம் அருகே, நேற்று, "என்கவுன்டரில்' கொல்லப்பட்டனர்.இதுகுறித்து வெள்ளத்துரைகூறியதாவது: போலீசாரிடம் இருந்து தப்பிய இருவரையும் பிடிக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இருவரும் தங்கள் சொந்த ஊருக்கு வரலாம் என்பதால், அப்பகுதியில் சோதனை நடத்தினோம்.அப்போது பைக்கில் வந்த இருவரும் போலீசாரை நோக்கி, பெட்ரோல் குண்டு வீசினர். அரிவாள் வைத்திருந்தனர். போலீசாரை பாதுகாக்க இருவரையும் சுட்டேன், என்றார். 

சோலார் ,காற்றாலை மின்சாரத்தை இணைத்து, வீடுகளில் அமைக்க அதிகபட்சமாக, 2.75 லட்சம் ரூபாய் !

கடும் மின்வெட்டில் தவிக்கும் தமிழக மக்களுக்கு, வரப்பிரசாதம் போல், மிகக் குறைந்த விலையில், சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கு, தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.சோலார் மற்றும் காற்றாலை மின்சாரத்தை இணைத்து, வீடுகளில் அமைக்க அதிகபட்சமாக, 2.75 லட்சம் ரூபாய் செலவாகும் என, தனியார் நிறுவனங்கள் கூறுகின்றன. தேவை அதிகரிக்கும் போது, இத்தொகை மேலும் குறையும் என்றும் தெரிவிக்கின்றனர்.
"காற்றாலை மின் உற்பத்தி-2012' மாநாடு, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், நேற்று முன்தினம் துவங்கி, மூன்று நாள்கள் நடக்கிறது. இதில், ஜெர்மனி, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த காற்றாலை கட்டுமானப் பொருள்கள் உற்பத்தியாளர்கள் அரங்குகளை அமைத்துள்ளனர்.கண்காட்சியில் வர்த்தக மற்றும் வீட்டு உபயோகத்துக்கான காற்றாலைகள் மற்றும் சோலார் மின் உற்பத்தி பற்றிய கருத்தரங்குகள் நடந்தன. வர்த்தக அடிப்படையிலான, காற்றாலை மின் உற்பத்திக்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், வீட்டு உபயோகத்துக்கான மின் உற்பத்திக்கும் பங்களிக்கப்பட்டது.
பன்னாட்டு நிறுவனங்கள்
தமிழகத்தில் தற்போது நிலவும், கடும் மின்வெட்டை சமாளிக்கும் வகையில், வீடுகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ஓட்டல்கள் போன்றவற்றில், காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டன.வர்த்தக பயன்பாட்டுக்கு காற்றாலைகளை நிறுவி தரும் பன்னாட்டு நிறுவனங்களான, கமேசா, ஜெக்டோ எனர்ஜி போன்ற நிறுவனங்கள், வீட்டு உபயோகத்துக்கான, காற்றாலைகளை நிறுவ முன்வந்துள்ளன.கமேசா நிறுவனம், 2.75 லட்சம் ரூபாயில், சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை வீடுகளில் நிறுவ முடியும் என அறிவித்துள்ளது.
ஜெக்டோ எனர்ஜி நிறுவனம், புதிய தொழில்நுட்பங்களுடன், காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தியை நிறுவ தயாராக இருந்தாலும், வர்த்தக பயன்பாட்டுக்கும் உரியதாக, மின் உற்பத்தி இருக்கும் என தெரிவிக்கிறது.இதன், ஆறு மெகாவாட் திறன் கொண்ட, காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க, இரண்டு கோடி ரூபாய் செலவாகும் என்கின்றனர்.
உள்ளூர் நிறுவனம்
திருப்பூர் மாவட்டம், கேத்தனூரில் காற்றாலை உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான, கே.எஸ்.டி., நிறுவனம், 1.75 லட்சம் ரூபாயில் வீடுகளுக்கான சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கலாம் எனக் கூறுகிறது.இந்நிறுவனத்தின் ஆலோசகர் ராஜு கூறியதாவது:வீடுகளுக்கு மரபுசாரா மின் உற்பத்தியை அமைக்கும் போது, சோலார் மற்றும் காற்றாலை ஆகியஇரண்டையும் சேர்த்து அமைப்பதே சிறந்தது. ஒரு கே.வி., மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் போது, 500 வாட்ஸ் சோலார் நிலையத்தையும், 500 வாட்ஸ் காற்றாலை நிலையத்தையும் அமைக்க வேண்டும்.ஒரு கே.வி., மின் உற்பத்தி நிலையம் அமைத்தால், இரண்டு மின் விசிறி, நான்கு டியூப்லைட்டுகளை பயன்படுத்தலாம். மிக்சி, கிரைண்டர், டிவி, ஏ.சி., போன்றவற்றை பயன்படுத்த, மூன்று கே.வி., வரை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க வேண்டும். இதற்கு, கூடுதல் செலவாகும்.
சீதோஷ்ண நிலைகேற்ப...
இந்த அமைப்பின் மூலம், பகல் நேரங்களில் சோலார் மின்சாரத்தையும், இரவு நேரங்களில் காற்றாலை மின்சாரத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். சீதோஷண நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, இரண்டில் ஒன்றின் மின்சாரத்தை, 24 மணி நேரமும் பெறலாம்.குறைவான, மிதமான, அதிக காற்று வீசும் பகுதிகளுக்கு ஏற்ப, காற்றாலை மின் உற்பத்தியை நிறுவ, ஏதுவான வடிவங்களில், காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களை அமைக்கலாம். நீண்ட கால பயன்பாடு என்ற முறையில், சோலார் மற்றும் காற்றாலைகளில்முதலீடு செய்ய வேண்டும்.
நீண்ட கால முதலீடு
தற்போது செய்யும் முதலீடு, அடுத்த 25 ஆண்டுகள் வரை, பயன் தரும். முதல், 10 ஆண்டுகளில், முதலீடு செய்த தொகைக்கு மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்த, 15 ஆண்டுகள் லாப பருவமாக இருக்கும்.அடுத்த, 25 ஆண்டுகளில், மின்வாரியத்தின் கட்டணம் பல மடங்கு உயரும். டீசல் மின் உற்பத்தி, யூனிட்டுக்கு, 50 ரூபாய் வரை இருக்கும். ஆனால், காற்றாலை மற்றும் சோலார் மூலம்உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ஐந்து ரூபாயை தாண்டாது.எனவே, நீண்ட கால முதலீடாக இவற்றில் முதலீடு செய்ய வேண்டும். மேலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின் உற்பத்தி என்பதும் முக்கியமான ஒன்று. இவ்வாறு ராஜு கூறினார்.

அரசு மானியம் கிடைக்குமா?

சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்காக, மொத்த செலவில் 30 சதவீத தொகையை, மத்திய அரசு அளிக்கிறது. தமிழக அரசும் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.அரசின் மானியம் பெறுவதற்கு, காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்திக்கான உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம், பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.உபகரணங்களுக்கு, அரசின் பயன்பாட்டுச் சான்றும் பெற்றிக்க வேண்டும். பதிவு செய்யாத, சான்றிதழ் பெறாத நிறுவனங்கள் அமைக்கும் நிலையங்களுக்கு அரசு மானியம் பெற முடியாது.பதிவு பெற்று, சான்றிதழ் பெற்ற நிறுவனங்களின் உபகரணங்களை பயன்படுத்தினால் மட்டுமே, அரசின் மானியம் கிடைக்கும்.

மின்வெட்டு பிரச்னைதான் இன்றைக்கு ஹாட் டாப்பிக். புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் வருவதில் தாமதம், மின் பற்றாக்குறையால் ஏற்பட்ட பொருளாதார தேக்கம், காலநேரம் இல்லாத மின்வெட்டினால் ஏற்படும் பிரச்னைகள் என இவை எல்லாம் ஒன்று சேர்ந்து அடுத்த கட்டத்தை நோக்கி யோசிக்க வைத்திருக்கிறது.
மின் பற்றாக்குறையைச் சமாளிக்க மாற்று எரிசக்தியை ஊக்குவிப்பதற்கான அரசின் முயற்சிகளும் ஒருபக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் நமக்கு உடனடியாக கை கொடுப்பது மாற்று எரிசக்தித் திட்டங்களான காற்றாலையும், சூரிய மின்சாரமும்தான்.
சோலார் பவர் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. சிறிய அளவில் வீடுகளுக்கு மட்டுமல்ல, பெரிய அளவிலான மின் உற்பத்தித் திட்டங்கள்கூட சோலார் பவரில் சாத்தியம் என்பதே இன்றைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி.
சோலார் பவருக்கு அடுத்தபடியாக இருப்பது காற்றாலை மின்சார உற்பத்திதான். தமிழ்நாட்டில் பல இடங்களில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தமிழ்நாடு மின் வாரியத்தோடு இணைந்து செயல்படுகின்றன. அதே சமயத்தில், வீடுகளின் மொட்டை மாடியிலேயே சிறிய டவர்கள் மூலம் ஒரு நாளில் 24 மணி நேரமும், ஆண்டு முழுவதும் காற்றிலிருந்து மின்சாரத்தை எடுக்க முடியும் என்பது காற்றாலையில் சாதகமான விஷயம்.
ஆனால், லேட்டஸ்ட் வளர்ச்சியாக, இப்போது சோலார் பேனல்கள் மற்றும் சிறிய அளவிலான காற்றாலைகள் என இரண்டையும் இணைத்து, மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முறை பிரபலமாகி வருகிறது. இந்த நவீன சிஸ்டத்தை வீடுகளுக்குப் பொருத்தித் தரும் ஏ அண்ட் டி சோலார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.விஜயேந்திரனிடம் பேசினோம்.
ஹைபிரிட் சிஸ்டம்!
''சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக படும்போதுதான் சோலார் பவர் பேனல்கள் முழு அளவில் மின் ஆற்றலை தரும். சாதாரணமாக நிலவும் வெப்பநிலையிலிருந்து மின் ஆற்றலை உறிஞ்ச முடியும் என்றாலும், பேனல்களில் மிகக் குறைந்த வெப்ப நிலையில் குறைவான மின்சாரமே பேனல்களிலிருந்து பெற முடியும். ஆனால், காற்றாலை மின்சாரத்திற்கு இதுபோன்று எந்தத் தடையுமில்லை. காற்று வீசும் நேரத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ளும் ஆற்றல் கொண்டது. இதையே நமது தேவைக்கு ஏற்ப வீடுகளில் அமைத்துக்கொண்டால் எந்நேரமும் நம்மால் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ள முடியும். இதற்கேற்ப சோலார் - காற்றாலை இரண்டின் சேர்க்கைதான் ஹைபிரிட் சோலார் சிஸ்டம்ஸ் என்கிறோம்.
இந்த முறையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற சோலார் பேனல்களும், காற்று மூலம் மின்சாரம் பெற சிறிய அளவிலான மின் இயற்றிகளும் பொருத்திக்கொள்ள வேண்டும். அதாவது, 30-லிருந்து 40 சதவிகிதம் வரை சோலார் பேனல்களும், 60 அல்லது 70 சதவிகிதம் காற்று மின் இயற்றிகளும் கொண்ட கலவைதான் ஹைபிரிட் சோலார் சிஸ்டம்ஸ்.
பயன்கள்!
இந்த புதிய சிஸ்டத்தில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. ஆண்டுக்கு ஏழு முதல் எட்டு மாதங்கள் நமக்கு முழுவீச்சில் சோலார் பேனல்கள் மின்சாரம் உற்பத்தி செய்யும். ஆனால், இரவு நேரத்திலும், மழைக்காலங்களிலும் பேனல்கள் முழுவீச்சில் மின் உற்பத்தி செய்ய முடியாது. ஆனால், காற்றாலையில் இந்த கவலை இல்லை. மழை, வெயில், பகல், இரவு என்று எந்தத் தடையுமில்லை. பகலில் பேனல்கள் வழி உற்பத்தியும், இரவில் காற்றின் மூலமும், மழை, காற்று வீசக்கூடிய பருவ நிலைகளிலும் இந்த ஹைபிரிட் சிஸ்டத்தின் மூலம் முழு அளவிலான மின்சாரம் நமக்கு கிடைக்கும். 
எப்படி அமைப்பது?
பொதுவாக, தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளும் சீரான காற்று வீசும் புவி அமைப்பு கொண்டவைதான். எனவே, அனைத்து இடங்களிலும் இதை பொருத்திக்கொள்ளலாம்.  இந்த முறையில் காற்றாலை தரையிலிருந்து 60 அடி உயரத்தில் சுற்றும். அதாவது, வீட்டிற்கு அருகில் இடவசதி கொண்டவர்கள் தரைப்பகுதியிலும், மொட்டை மாடியிருந்தால் அதற்கேற்ப உயர அளவிலும் அமைத்துக்கொள்ள வேண்டும். 60 அடி உயரத்தில் இறக்கைகளின் சுற்றளவு சுமார் 1.5 முதல் 2.75 மீட்டர் வரை இருக்கும். 1 கிலோ வாட் காற்றாலை இயந்திரத்தின் மொத்த எடையும் 30 கிலோவுக்குள்தான் இருக்கும். 
சாதகமான விஷயங்கள்!
சாதாரணமாக காற்றில் இலைகள் அசையும் வேகத்தில் காற்று வீசினாலே இந்த மின் இயற்றி தானாகச் சுற்றத் தொடங்கிவிடும். அதாவது, காற்றின் வேகம் மிதமாக இருந்தாலே போதும். (நிமிடத்திற்கு 3.1 மீட்டர்)  அதேபோல இந்த மின் இயற்றியை இயக்குவதற்கு என்று தனியாக மின்சாரம் செலவிடத் தேவையில்லை. காற்றின் வேகத்திற்கு ஏற்ப தானாக இயங்கி தானாகவே நிற்கும் ஆற்றல் கொண்டது. சூரிய சக்தி, காற்று சக்தி இரண்டும் சேர்ந்த கலவை என்பதால் எந்த பருவ நிலையிலும் நமக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும்'' என்றார் அவர்.
செலவு எவ்வளவு?
தற்போது சோலார் பவர் மின் சாதனங்களை வீடுகளில் அமைப்பதற்கு ஆகும் செலவிலேயே இந்த சிஸ்டத்தையும் அமைத்துக்கொள்ள முடியும். இதற்கு மத்திய அரசின் மாற்று எரிசக்தி துறை மானியமும் அளித்து வருகிறது. ஒரு கிலோவாட் ஹைபிரிட் சிஸ்டம் அமைக்க 2.50 முதல் 3.00 லட்சம் வரை செலவாகும். அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், டிரஸ்ட்கள், லாப நோக்கமற்ற அமைப்புகள் இந்த சிஸ்டத்தை அமைத்துக்கொள்ளும்பட்சத்தில் ஒரு கிலோவாட்டிற்கு 1.5 லட்சம் ரூபாய் வரை மானியம் பெற முடியும். தனிநபர்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு ஒரு லட்சம்  வரை மானியம் கிடைக்கிறது. நிறுவனங்கள் இந்த முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்போது இதற்கான செலவு தேய்மானத்துடன் சேர்த்துக் கணக்கில் காட்டி வரிச் சலுகையை அனுபவிக்க முடியும்.
எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் நமக்கு இந்த திட்டம் ஒரு தீர்வாக இருக்கலாம்.
- நீரை.மகேந்திரன்,
படம்: தி.விஜய், ச.இரா.ஸ்ரீதர், ரா.மூகாம்பிகை