Jul 10, 2013

"தாயகம்' காக்க "யாசகம்' கேட்டு வைகோ கெஞ்சல்

"கட்சி அலுவலகமான, தாயகத்தை நடத்த, நிதி வழங்குங்கள்' என, யாசகம் கேட்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, ம.தி.மு.க.,வினரையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

பேச்சாற்றலால், 20 ஆண்டு பார்லிமென்டில், தி.மு.க.,வின் முகமாக பிரதிபலித்து, தமிழகத்தில், தி.மு.க.,வின் அடுத்த தலைவர் என்ற இடத்துக்கு முன்னேறி, விடுதலை புலிகள் மூலம், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அகற்றிவிட்டு, தி.மு.க.,வை கைப்பற்ற திட்டமிட்டவர் என்ற குற்றச்சாட்டில், 1993, அக்., 3ல், தி.மு.க.,வில் இருந்து, வெளியேறியவர் வைகோ. "நாங்கள் தான் உண்மையான தி.மு.க.,' என, ஆதரவு திரட்டி, 1994 மே, 6ம் தேதி, ம.தி.மு.க.,வை, வைகோ துவக்கினார்.
கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் வரை, அ.தி.மு.க., கூட்டணியில், ஜெயலலிதாவுக்கு, நம்பிக்கையானவராக இருந்தார். தமிழ், ஈழத் தமிழர், தமிழர் விழா என, பல பெயர்களில், நடராஜனுடன், நெருக்கமாக, வலம் வந்ததால், "நடராஜனுடன் சேர்ந்து, அ.தி.மு.க.,வை, கைப்பற்றி விடுவார்' என, அ.தி.மு.க., தலைமையிடம், போட்ட தூபத்தால், சட்டசபை தேர்தல் கூட்டணி அமைத்த போது, சந்திக்க நேரம் கொடுக்காமல், கூட்டணியில் இருந்து, தூக்கி வீசப்பட்டார்.
மிச்சம் கொஞ்சம்:

வைகோவுடன் இருந்த, எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன், பொன் முத்து ராமலிங்கம், செல்வராஜ், நாஞ்சில் சம்பத் ஆகியோர் வெளியேறினர். தற்போது, விரல்விட்டு எண்ணும் சிலரே, உடன் உள்ளனர். தேர்தல் நேரத்தில் தான், அரசியல் கட்சிகள், நிதி திரட்டுவது வழக்கம். ஆனால், சமீபத்தில், வைகோ என, கையெழுத்திட்டு, அவர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், மிக உருக்கமாக, "வர இருக்கும், லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்கும், கழகத்தின் அன்றாட பணிகளுக்கும், தலைமை கழக அலுவலகமாம் தாயகத்தை இயக்குவதற்கும், பணம் தேவைப்படுகிறது. தங்களால் இயன்ற நிதியை, கனிவோடு தாரீர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, ம.தி.மு.க.,வினரை, தள்ளாடச் செய்துள்ளது.

Jul 8, 2013

குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்?


Temple imagesபொதுவாக குழந்தைகள் அம்மாச்சி(தாயின் அம்மா) மீது  வைக்கிற பாசத்தை தங்கள் மீது வைப்பதில்லையே என்று அப்பத்தாக்களுக்கு கடுமையான கோபம் வருகிறது. அப்படி என்ன தான் அந்த பாட்டி  மந்திரம் போட்டு வச்சாளோ, என் கூட மட்டும் சேர்ந்தா என்னவாம்! என்று பேரன், பேத்திகளைக் கடிந்து கொள்கிறார்கள். உண்மையில் இதில் மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை. இதற்கு முழுக்க முழுக்க அறிவியலே காரணம்.  ஒரு குழந்தை எந்த இடத்தில் பிறக்கிறதோ, அந்த இடத்தின் மீது தான் பாசம் அதிகமாக இருக்கும். நம்நாட்டு வழக்கப்படி, தாயின் தாய் வீட்டில் குழந்தைகள் பிறப்பது தான்  அதிகம். அம்மாச்சி தான் அந்தக் குழந்தையை மூன்று முதல் ஆறுமாதங்கள் வரை பராமரிக்கிறார். அதனால், அவர் மீது அந்தக்குழந்தைக்கு இயற்கையாகவே பாசம் வந்து விடுகிறது. அதனால், லீவு  விட்டதும் அம்மாச்சி வீட்டுக்குப் போக வேண்டும் என்று குழந்தைகள் துள்ளிக்கொண்டு நிற்கிறார்கள். அங்கே போய் ஒன்றிரண்டு மாதத்தைக் கழித்தால் தான் அவர்கள் மனமே ஆறுதலடைகிறது. வாரியார் சுவாமி இதைப்பற்றி வேடிக்கையாக ஒன்று சொல்வார்.அந்தக்காலத்தில் வீடுகளில் பிரசவம் பார்த்தார்கள். அதனால், குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு பாசம்வைத்தது. இப்போது அம்மாச்சி வீட்டிலோ, அப்பாச்சி வீட்டிலோ பிரசவம் பார்ப்பதில்லை. ஆஸ்பத்திரியில் பிரசவம் நடக்கிறது. அதனால், குழந்தை பிறந்ததில் இருந்து, பிறந்த இடத்து பந்தபாசத்துடன் ஆஸ்பத்திரி பக்கமே திரும்பத் திரும்ப போகிறது, என்பார். நிஜம் தானே!