உடலின் மிகப் பெரிய உறுப்பு எது? பலரால் யூகிக்க முடியாது. அந்தக் கேள்விக்குப் பதில்… தோல்! ஆம், 50-கே.ஜி தாஜ்மஹாலாக இருந்தாலும் சரி, 90-கே.ஜி தொப்பைத் திலகமாக இருந்தாலும் சரி… அவர்கள் எடையில் 12 முதல்15 சதவிகிதம் வரை தோல்தான். பலரும் நினைப்பதுபோல் தோல், காதலுக்கு ‘மார்க்கெட்டிங்’ செய்யும் வழவழ வஸ்து மட்டும் அல்ல; ஆயிரக்கணக்கான நுண்ணுயிரிகளுக்கு வாழும் இடம் கொடுத்து, உடலுக்குத் தீங்குசெய்ய நினைக்கும் கிருமிகளை, உடலுக்குள் புகவிடாமல் செய்யும் உறுப்பு. அதேசமயம், முக்கிய மருந்துகளை மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கும் புத்திசாலிப் பாதுகாப்பு அரண். உடலின் வெப்பத்தைச் சீராகவைத்திருப்பது, ‘விட்டமின் டி’-யை உருவாக்குவது, சருமத் துளைகள் மூலம் சுவாசிப்பது, யூரியா போன்ற கழிவை வெளியேற்றுவது, கொழுப்பு, நீர் முதலான பொருட்களைச் சேமித்துவைப்பது… எனப் பல வேலைகளை ‘இழுத்துக்கட்டி’ச் செய்யும் உறுப்பு அது. அதனாலேயே தோலில் வரும் நோய்களின் பட்டியல் கொஞ்சம் நீளம். அடுப்பங்கரைத் தாளிப்பு முதல் அணுஉலைக் கசிவு வரை உண்டாக்கும் ஒவ்வாமையில் வரும் நோய்கள் சில. பூஞ்சைகளால், பாக்டீரியாக்களால், வைரஸ்களால் வரும் நோய்கள் சில. நோய் எதிர்ப்பாற்றலின் சீரற்ற தன்மையால் வருவன பல. இன்னும் சில… மன உளைச்சலால் மட்டுமே வருகின்றன!
மற்ற வியாதிபோல், மூன்று நாட்களுக்குக் கஷாயம், நான்கு நாட்களுக்கு ஆன்டி பயாடிக், ஐந்து நாட்களுக்கு டானிக்… என எடுத்துக்கொண்டு தோல் நோய்களில் பெருவாரியைச் சடுதியில் குணப்படுத்திவிட முடியாது. சாதாரண அரையிடுக்கு பூஞ்சையால் வரும் ஒவ்வாமைக்கு க்ரீம் தேய்த்தால், மறுநாளே அரிப்பு காணாமல்போகும். ஆனால், அன்று மாலையே மறுஒளி’அரிப்பு’ தொடங்கும். துவைக்காத சாக்ஸை நாள் முழுக்க அணிந்து கழட்டியதும், கணுக்காலில் வரும் அரிப்பை சுகமாகச் சொறிந்து பின் மறந்துவிடுவோம். திடீரென ஒருநாள் காலை உற்றுப்பார்த்தால் தெரியும்… அந்த அரிப்பு, கரப்பான் எனும் ‘எக்சிமா’வாக மாறியிருக்கும். ரத்தத்தில் ஒவ்வாமை அணுக்களால் வரும் இந்த அரிப்பு முதலில் வறட்சியான அரிப்பாகவும், நாளடைவில் நிறம் மாறி நீர்த்துவம் கசிந்தும் வரும். கருத்து, தடித்து, ஏற்படும் இந்த எக்சிமா, பெரும்பாலும் கணுக்கால்கள், முழங்கால்களில்தான் குடியேறி நெடுநாட்களுக்கு வெளியேற மறுக்கும். கரப்பான் படை வறண்டிருக்கிறதா… நீர்த்துவத்தோடு இருக்கிறதா என்பதைப் பொறுத்து, அதைச் சரிசெய்யும் உணவும் மருந்தும் அமைய வேண்டும். வறண்டிருக்கும் பட்சத்தில் சற்று நீர்த்துவக் குணமுள்ள சுரை, வெள்ளைப் பூசணி முதலிய காய்கறிகள், புளிப்பில்லாத மாதுளை, வாழை, கிர்ணி, தர்பூசணி முதலான கனிகள், நல்லெண்ணெய் சேர்த்த உளுந்தங்களி, குறைவாக நெய் சேர்த்த உணவு போன்றவற்றை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீர்த்துவமாக இருக்கும்போது மேற்கூறிய உணவுகளைத் தவிர்த்து, பிற காய்கனிகளைச் சாப்பிடலாம். இரண்டு வகை கரப்பான்களுக்குமே கோதுமை, மைதா, மீன், நண்டு, இறால், கருவாடு, கம்பு, சோளம், வரகு, பாகற்காய், கத்திரிக்காய் போன்றவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். வறண்ட கரப்பானுக்கு அருகம்புல் தைலம், நீர்த்துவமுள்ள கரப்பானுக்கு, துவர்ப்புள்ள பட்டைகள் சேர்த்துக் காய்ச்சிய சித்த மருத்துவத் தைலங்கள் வழங்கப்பட வேண்டும். நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கும் சீந்தில் பால் கஷாயம், பறங்கிப்பட்டை, ஈச்வர மூலி, சிவனார் வேம்பு போன்ற மூலிகைகளில் செய்து தரப்படும் சித்த மருந்துகளை, அருகில் உள்ள சித்த மருத்துவரிடம் அணுகிப் பெற்று, தக்க ஆலோசனைப்படி பத்தியமாக சில மாதங்கள் சாப்பிட்டால் கரப்பான் மறையும். தோல், அரிப்புடன் தடித்துக் கருமையாகிய ஆரம்ப காலத்திலேயே மருத்துவர் ஆலோசனை அவசியம். அதை விடுத்து, அங்கேயும் ‘ஏழு நாட்களில் சிவப்பு அழகு’ மருத்துவம் செய்வது, நோய்க்கு நிரந்தர பட்டா போட்டுத்தரும்!
‘இது வெறும் பொடுகு’ என சில காலம் அலட்சியமாக இருந்து, தொலைக்காட்சியில் சொல்லும் எல்லா ஷாம்புகளையும் போட்டுக் களைத்து, ஆனாலும் போகாத பொடுகை கண்ணாடியில் உற்றுப்பார்க்கும்போதுதான் தெரியும்… ‘அது பொடுகு அல்ல. அதையும் தாண்டி அடையாக இருக்கிறது’ என்பது! மருத்துவரிடம் ஆலோசனை செய்யும்போது நெற்றியும் முன் முடியும் சந்திக்கும் இடத்தில் அடையாய் scalp psoriasis எனும் தோல் செதில் நோய் வந்திருப்பது தெரியும். காதுக்கு உள்ளே, காதின் பின்புறம் முழங்கையின் பின் பகுதி, முதுகு, இடுப்பு, தண்டுவடத் தோல் பகுதி, இரு கால்கள் போன்ற பகுதிகளில் சோரியாசிஸ் வரும்.
‘இதனால்தான் வருகிறது’ எனத் தெரியாத நோய்ப்பட்டியலில் நெடுங்காலமாக இருந்துவருகிறது சோரியாசிஸ். நம் உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் தரும் வெள்ளையணுக்களுக்கு இடையிலான உள்நாட்டுக் குழப்பத்தில் விளையும் இந்த நோய், மன உளைச்சலில் அதிகரிக்கும் இயல்பு உடையது. பரீட்சை நேரத்தில், காதல் மறுப்பில், கரிசனக் குறைவில், பதவி உயர்வு குறித்த பரிதவிப்பில், புன்னகையைக்கூட ஸ்மைலியில் மட்டுமே தெரிவிப்போருக்கு சோரியாஸிஸ், ‘இல்லை… ஆனா, இருக்கு’ என கண்ணாமூச்சி காட்டும். இந்த நோயாலேயே ஏற்படும் கடும் மனஉளைச்சலில் நோய் இன்னும் அதிகரிக்கும் எனத் தெரியாது வருந்துவோர்தான் அதிகம். சித்த மருத்துவத் துறை கண்டறிந்த, வெட்பாலைத் தைலம் இந்த நோய்க்கான மிகச் சிறந்த மருந்து.
சரியான புரிதல் இல்லாமல் சில ஆயிரம் ஆண்டுகள் பெரும் மன உளைச்சலை உருவாக்கியது வெண்புள்ளி நோய். ‘ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு ஒட்டுவாரொட்டியாகப் பரவாது, மரபணு மூலமாக தலைமுறைகளுக்குப் பரவாது, வேறு எந்தப் பக்க நோயையும் தராது’ எனத் தெளிவாகத் தெரிந்து, புரிந்துகொள்வதற்குள் பல நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டோம். நிறமிச்சத்து ஒன்றின் குறைவால் வெண்புள்ளி நோய் ஏற்படுகிறது. இது தெரியாமல், புரியாமல், சமூகத்தில் பலரை ஒதுக்கிவைக்கும் அவலம், உலகில் வேறு எங்கும் கிடையாது. லேசான புள்ளிகளைத் தொடக்க நிலையில் அறிந்தவுடன், பூவரசம் பட்டையைக் (நாம் சிறுவயதில் பீப்பி செய்து விளையாடுவோமே அந்த இலைதரும் மரத்தின் பட்டையை) கஷாயமாக்கி 60 மில்லி வரை கொடுத்தால், இந்தப் புள்ளிகள் குறையும் என்கிறது ஆராய்ச்சி. ‘நோனி’ பழத்தின் நம்மூர் ரகமான நுணா மரம் (இன்னொரு பெயர் மஞ்சணத்தி) இலையை சட்னிபோல அரைத்து, நல்லெண்ணெயில் காய்ச்சி எடுக்கப்படும் நுணா தைலத்தைத் தடவி வர இந்தப் புள்ளிகள் மறையும். இன்னொரு விஷயம், இந்தப் பயன் எல்லோருக்கும் கிட்டுவது இல்லை. தவிரவும் இவை முழுமையாகக் குணப்படுத்தும் என்ற ஆதாரமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. ஆனால், இந்தச் சித்த மருந்துகள் எந்தவிதமான பக்கவிளைவும் தராதவை என ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டவை. அருகில் உள்ள சித்த மருத்துவரின், அரசு மருத்துவரின் ஆலோசனைகளுடன் இவற்றை முயற்சிக்கலாம். கூடவே, இரும்புச்சத்துள்ள அத்தி, பேரீச்சைப் பழம் போன்றவற்றைச் சாப்பிடுவதும், எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி முதலான புளிப்புள்ள பழங்களைத் தவிர்ப்பதும் அவசியம்.
நாள்பட்ட சிகிச்சை தேவைப்படும் இதுபோன்ற தோல் நோய்களில், நோய் கொஞ்சம் ஆரம்பநிலையைத் தாண்டி அதிகரித்துவிட்டால், புள்ளிகளை முழுக்கத் துடைத்தெறிந்து குணப்படுத்தும் சாத்தியம் பல நேரங்களில் கிடையாது. ஆனால், முழுமையாகக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். தோல் நோயின் மேலாக வரும் நுண்கிருமித் தொற்று, மிக அதிகமான அரிப்பு, வைரஸால் வரும் அக்கி போன்றவற்றுக்கு, நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைந்த சிகிச்சைதான் நல்லது. இருதுறை மருத்துவர்களும் இணைந்து இதுபோன்ற நாள்பட்ட தோல் நோய்களுக்குச் சிகிச்சை செய்வது பாதுகாப்பானது மட்டும் அல்ல, குறைந்த காலத்தில், குறைந்த செலவில், நாள்பட்ட நோய்க் கூட்டத்தின் பிடியில் இருந்து நம்மை வெளியேறவும் உதவும்.
திடீர் தாக்குதலாகத் தடதடவென அரிப்பு வந்து, அரை மணி நேரத்தில் உதடு வீங்கி, கண் சுருக்கம் வந்து, உடம்பு எங்கும் திட்டுத்திட்டாகத் தடிப்பதை ‘அர்ட்டிகேரியா’ என்கிறார்கள். அதை தமிழ் மருத்துவம் ‘காணாக்கடி’ என்கிறது. கண்களால் பார்த்திராதபோது, எதுவோ ஒன்று கடித்ததால் ஏற்படும் சருமப் பிரச்னை என்பதால், அந்தப் பெயர். நோயை எதிர்க்க எப்போதும் தயார் நிலையில் இருக்கவேண்டிய வெள்ளையணுக்கள், ‘கூடுதல் அலெர்ட்’ ஆவதால் உண்டாகும் தொல்லை இது. ‘நாட்டின் எல்லைப் பகுதிப் புதரில் பதுங்கி ஓடும் பெருச்சாளியை, ‘யாரோ… எவரோ?’ எனப் பதறி ஒரு ராணுவ வீரர் ஏ.கே-47 வைத்துத் தடதடவெனச் சுட, ‘ஆஹா… எதிரி வந்துட்டான். அட்டாக்’ என மொத்த பட்டாலியனும் துப்பாக்கிச் சூட்டைத் தொடங்கும் நிகழ்வோடு காணாக்கடி நோயை ஒப்பிடலாம். ரத்தத்தில் உள்ள எதிர்ப்பு சக்தி அணுக்கள், அதிகப்பிரசங்கியாக தன் சகாக்களிடமே தாக்குதல் நடத்த, உடம்பு தடித்து வீங்குகிறது. எதுவுமே செய்யாவிட்டாலும், இரண்டு மணி நேரத்தில், ‘இப்படி ஒன்று இங்கே வந்ததா?’ எனத் தெரியாதபடி தோல் பழைய நிலைக்குத் திரும்பும். ஆனால், அதற்குள் நம் நகங்கள் அந்தப் பிரதேசத்தில் ஏற்படுத்திய காயத்தில் தடயங்கள் நிலைத்துவிடும். சில நேரங்களில் இந்த அர்ட்டிகேரியா மூச்சுத்திண்றல், சிறுநீரகச் செயலிழப்பு வரைகூட கொண்டு சென்றுவிடும். அதனால், இந்த நோய்க்கு சாதுரியமான சிகிச்சை அவசியம். வெள்ளையணுக்களைத் ‘தட்டி’வைத்தோ, ‘கொட்டி’ ஒழுங்காக வேலைசெய்யப் பணிக்கவோ, சரியான நவீன மருத்துவச் சிகிச்சைகளும் சித்த மருத்துவச் சிகிச்சையும் உண்டு. 1 கைப்பிடி அருகம்புல், 2 வெற்றிலைகள், 4 மிளகுகள் சேர்த்து, கஷாயமாக்கி காலையில் சாப்பிடுவதும், மாலையில் சீந்தில் பொடியைச் சாப்பிடுவதும் ‘காணாக்கடி’யைக் காணாமல்போகச் செய்யும் எளிய வழிமுறைகள்.
தோலின் பணியும் பயனும் அறியாது, அதில் மேற்கத்திய முலாம் பூசி (அழகூட்டி என்ற பெயரில்) அதில் நாம் நடத்தும் வன்முறைகள், தோலையும் தாண்டி உட்சென்று தொல்லைகள் தருபவை. சூழலைச் சிதைப்பதில் முன்னணியில் உள்ள அழகூட்டி ரசாயனங்களில் பல, சூழலைச் சிதைப்பதற்கு முன்னர் நம் தோலையும் உடலையும் சிதைக்கும் வாய்ப்புகள் அதிகம். ஏறத்தாழ 80,000 ‘அழகுபடுத்திகள்’ உலகச் சந்தையில் உள்ளன. ஒவ்வொரு குழந்தையும் போடும் நெயில் பாலீஷில் கலந்துள்ள காரீயம் உண்டாக்கும் அபாயம் பற்றி, பெற்றோர்களுக்குத் தெரியாது. குளிக்காமல் கொள்ளாமல், கக்கத்தில் மணமூட்டி அடித்து கல்லூரிக்குக் கிளம்பும் இளசுக்கு, அதிலுள்ள ஃபார்மால்டிஹைடு, எத்திலீன் ஆக்ஸைடு வருங்காலத்தில் குழந்தைப் பேறுக்குத் தடை உண்டாக்கும் எனத் தெரியாது. பின்னர் நள்ளிரவில் டி.வி முன்போ, அல்லது பிரபல குழந்தைப்பேறு மருத்துவர் முன்போ குத்தவைத்து உட்கார்ந்து குறிப்புகள் கேட்க வேண்டியதுதான். முகப் பூச்சுக்களில் இருக்கும் தாலேட், கண் அழகுக்குப் பயன்படுத்தப்படும் பாலிசைக்ளிக் ஹைட்ரோ கார்பன், சில வகை பிளாஸ்டிசைசர்ஸ், பாரபன்கள் (பெரும்பாலான க்ரீம், ஷாம்புக்களில் சேர்க்கப்படும் பிரிசர்வேட்டிவ் பொருள்), நிறமிகளுக்காகச் சேர்க்கப்படும் வண்ண நானோ துகள்கள்… இவை அனைத்தும் தோலின் இயற்கை அரணை உடைத்து உடலுக்குள் உறிஞ்சப்பட்டு, ‘அழகான நோயாளியை’ உருவாக்கக்கூடும் என்கிறது அறம் உள்ள மருத்துவ அறிவியல்!
- நலம் பரவும்…
வீட்டிலேயே தயாரிக்கலாம் சோரியாஸிஸ் மருந்து!
வெட்பாலை இலைகளைச் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் போட்டு, மூன்று முதல் நான்கு நாட்கள் வரை வெயிலில் காயவைத்து எடுக்க, கருநீல நிறம்கொண்ட தைலம் கிடைக்கும். அதை 10 முதல் 15 துளிகள் உள்ளுக்கும் வெளிப்பூச்சாகவும் கொடுக்க, வெகுநாட்களாக இருந்துவரும் ‘சோரியாசிஸ்’ மெள்ள மெள்ளக் குறையத் தொடங்கும். இதையும், இதோடு சேர்த்து, இந்த சோரியாசிஸ் நோய்க்கு என்றே பிரத்யேகமாக அரசு சித்த மருத்துவமனைகளிலும் தேசிய சித்த மருத்துவமனையிலும் வழங்கப்படும் மூலிகை மருந்துகளைக்கொண்டே, இந்த நோயை முழுமையாகக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்!
வனப்பான தோல் இருக்க…
கறுப்பு நிறம்… அழகு மட்டும் அல்ல, ஆரோக்கியமும்கூட. அதை சிவப்பு நிறம் ஆக்குகிறேன் என முயற்சிப்பது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதற்கு சமம்.
தோல் உலராமல் வழவழப்பாக வைத்திருக்க உங்கள் அன்றாட மெனுவில், பப்பாளி, மாதுளை, சிவப்புக் கொய்யா, பன்னீர்த் திராட்சை, பெரிய நெல்லி இருந்தால் போதும். டேபிள் பெஞ்சுக்கு வார்னிஷ் அடிப்பதுபோல, தோலை பல ரசாயனங்களால் பட்டைத் தீட்ட வேண்டியது இல்லை.
பாசிப்பயறு மாவு, நலுங்கு மாவு தேய்த்துக் குளிப்பது, சோப்பு போல் தோலின் இயல்பான எண்ணெய்த்தன்மையைப் போக்காமல், வழவழப்புடன் வனப்பாக இருக்க உதவும்.
தோல் முற்றிலும் வறட்சி அடையாமல் இருக்க நல்லெண்ணெய்க் குளியல், காயத்திருமேனித் தைலக் குளியல் நல்லது. சிறுவயது முதலே இந்தப் பழக்கங்களைப் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
தோசைமாவு, இயற்கையான புரோபயாட்டிக் சத்துள்ள கொண்ட ஒரு scrub. அதைக்கொண்டு முகத்தைக் கழுவி, தோலின் இறந்த செல்களை நீக்கி முகப் பொலிவு பெறலாம்.
MELASMA, BLEMISHNESS முதலான சாம்பல் நிற முகத் திட்டுகளுக்கு, முல்தானிமட்டியில் ஆவாரைப் பூ, ரோஜாப் பூ சேர்த்து அரைத்து எடுத்துக்கொண்ட அந்தக் கலவையை மோரில், அல்லது பன்னீரில் குழைத்துப் பூசி லு மணி நேரம் கழித்துக் கழுவலாம். திட்டுக்கள் மறையும்!
நலம் 360’ – 31
புற்றுநோய்… இந்தியர்களைக் குறிவைத்திருக்கும் புது வில்லன்!
இது ஆறு மாத சிசு முதல் 60 வயது பாட்டி வரை, வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் தாக்குகிறது. புகைக்காத, மது அருந்தாத, அணு உலைக்கு அருகில் இல்லாத, மார்பு விரியும்போது 120 செ.மீ., சுருங்கும்போது 105 செ.மீ நிலையில் உள்ள சிக்ஸ்பேக் நபர்கள் என எவருக்கும் எப்போதும் இந்த நோய் வரும் வாய்ப்பு உண்டு. அஞ்சு சுத்து முறுக்கு, வீட்டு அதிரசம் சாப்பிட்ட சமூகம் நாம். ஆனால், இப்போது எங்கு இருந்து வருகிறது, எப்படிச் செய்கிறார்கள், என்னவெல்லாம் இருக்கிறது என எதுவும் தெரியாமல் எல்லா உணவுப் பொருட்களிலும் மிளகாய் வற்றலைத் தூவி வாய் பிளந்து தின்றுகொண்டிருக்கிறோம். ‘ஐபோன்ல ஓவுலேஷன் ஆப்ஸ் சிக்னல் காட்டுது. இன்னைக்குக் கண்டிப்பா காதல் செஞ்சாகணும்’ என இளம்தம்பதிகள் காதல் புரியவும் அலாரம்வைக்கிறார்கள். இவை எல்லாமும்கூட புற்றுக்குக் காரணங்கள்தான்!
திராட்சைக் கொத்தின் முதுகில் படிந்திருக்கும் ஆர்கனோ பாஸ்பரஸ் உரத் துணுக்குகள், கொளுத்தும் வெயிலில் நின்ற காரின் உட்புற அலங்காரங்கள் உமிழும் பென்சீன், பில்டிங் செட் விளையாடும்போது அதில் கசியக்கூடிய டயாக்சின், சமையலறை அலங்காரத்துக்கு மரமும் பிளாஸ்டிக் கலவையும் சேர்த்துத் தயாரித்த மெலமின் ஃபினிஷ் அடுக்குகள் கசியவிடும் யூரியா ஃபார்மால்டிஹைடு என இவை எல்லாம் அடினோ கார்சினோமா முதலான பல்வேறு புற்றுக்களையும் அடிச்சுவடு தெரியாமல் செருகுகின்றன.
எப்போது ஒரு சராசரி செல், புற்றுச்செல்லாக உருவெடுக்கும் என எவராலும் இன்று வரை துல்லியமாகக் கணிக்க இயலவில்லை. பாதுகாப்பு அரணாக இருந்துவந்த நோய் எதிர்ப்பு சக்தி குறைவுபட்டதாலா, Apoptosis எனும் துல்லிய உடல் செல் புரோகிராம் பிழையாகப் படைக்கப்பட்டதாலா, இல்லை அதைப் படியெடுக்கும்போது மன அழுத்தத்தில், சூழல் சிதைவில், உணவு நச்சில் செல் இழைக்கும் தவறினாலா… எதுவும் தெரியாது. ஆனால், சில உணவுப் பழக்கங்கள் பசியை ஆற்றுவதோடு, நோயைத் தடுக்கவும் பயனாகும் என்பது மட்டும் மருத்துவப் புரிதல்!
‘சூடா ஒரு டீ சாப்பிட்டு வரலாம் மாப்பிள்ளை’ என்ற ஓர் அழைப்பு உற்சாகம் மட்டும் தராது. புற்று அணுக்களை எதிர்க்கவும் வழிவகுக்கும் என்கிறது நவீனப் புரிதல். தேயிலையின் கருப்பொருட்கள் உடலுக்குள் துறுதுறு விறுவிறு உற்சாகத்தை விதைப்பவை. வெள்ளைச் சர்க்கரை, வெள்ளைப் பால் கலக்காமல் கறுப்புத் தேநீராக அருந்தினால் அதிக பலம் நிச்சயம். தேநீரைச் சுவைபட மாற்ற, மணமூட்ட… அதை வறுத்து, ரோஸ்ட் செய்து என பல வன்முறைகளை பிரபல தேயிலை நிறுவனங்கள் நிகழ்த்துவது உண்டு. அந்த அதிகப்பிரசங்கித்தனத்தைச் செய்யாமல், பச்சையாக அப்படியே நீர்த்துவம் மட்டும் உலர்த்திவரும் க்ரீன் டீ, இன்னும் கூடுதல் சிறப்பு. தேநீர் மிகச் சிறப்பாக இருந்தாலும், அதில் கலந்திருக்கும் பூச்சிக்கொல்லித் துணுக்குகள் குறித்த ஆய்வு முடிவுகள் நம்மை அதிரவைக்கின்றன. சோழ மண்டலக் காடுகளை மழித்து தேயிலை பயிரிட்ட சூழலியல் வன்முறை போதாது என, இப்போது அந்தத் தேயிலையிலும் எக்கச்சக்க பூச்சிக்கொல்லிகளை வரம்புக்கு மீறித் தெளிப்பதன் விளைவே இது!
புற்றைப் பொறுத்தமட்டில் நம் முதல் காவலன், பழங்கள்தாம். சொல்லப்போனால், அனைத்துக் கனிகளுமே ஏதோ ஒருவிதத்தில் புற்றுநோயின் வருகையைத் தடைசெய்கின்றன. காடுகளின் ஓரத்தில் கிடைக்கும் இலந்தை முதல், மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரோஸ்பெர்ரிகள் வரை ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் புற்றோடு மோதும் வல்லமை உடையது. கனிகளின் நிறங்கள், பூச்சிகள், பறவைகளை ஈர்க்க இறைவன் படைத்ததாகக் கூறப்பட்டாலும் அவற்றை ருசிக்கும் மனிதர்களுக்கு சுவையோடு சேர்த்து, புற்றுக்கு எதிரான தடுப்பாற்றலை வழங்கவும் செய்கிறது. சிவந்த நிறத் தக்காளியின் மெல்லிய தோலில் நிறைந்துள்ள சிவப்பு நிறச் சத்தான லைக்கோபீன்கள், ஆண்களின் புராஸ்டேட் கோளப் புற்றுநோயைத் தடுக்கக்கூடியவை. சாதாரணமாக 50 வயதைக் கடந்த ஆண்களுக்கு புராஸ்டேட் கோள வீக்கம் இயல்பான ஒன்று. அது வெகுசிலருக்கு புற்றாக மாறும் அபாயம் உண்டு. இந்த மாற்றத்தைத் தடைசெய்யும் சத்து, தக்காளியின் சிவந்த நிறத் தோலுக்கு உண்டு. வெள்ளைப் பூசணி, வெள்ளரி விதையும் இதே திறன்கொண்டவை. புராஸ்டேட் கோள வீக்கம் உள்ளவர்கள் தினமும் சின்ன வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் போன்ற சாலட்களைச் சாப்பிடுவது அந்தக் கோளப் புற்றைத் தடுக்க உதவும்.
கமலா ஆரஞ்சுப் பழத்தில் உள்ள மெல்லிய உட்தோலில் சிட்ரஸ் பெக்டின் என்ற பொருள் உள்ளது. இது பல புற்றுநோய்களைத் தடுக்கும் இயல்பு உள்ளது. பொதுவாக ஆரஞ்சுப் பழத்தை ஜூஸாகச் சாப்பிடாமல் அப்படியே சுளையாகச் சாப்பிடும்போதும் நார்ச்சத்தும் புற்றுநோய் தடுப்புச் சத்தும் கிடைக்கும். உள்ளூர் கனிகளில் சிவப்புக் கொய்யா, நாவல் பழம், திண்டுக்கல் பன்னீர்த் திராட்சை போன்றவை புற்றுநோய்த் தடுப்பில் திறன் வாய்ந்தவை. குறிப்பாக பன்னீர்த் திராட்சையின் விதையில் உள்ள துவர்ப்புச் சுவையுடைய ரிசர்விடால் சத்து புற்றுநோய்க்கு எதிராகப் போராடும். கொட்டையில்லாத திராட்சைக்கு கூடுதல் விலை கொடுக்கும் முட்டாள் கும்பலாக இனியாவது நாம் இருக்க வேண்டாம். நாவல் பழத்தின் கருநீல நிறம் நாவில் படிவதை நாம் பார்த்திருப்போம். அந்த நிறமிச் சத்தும் புற்றை எதிர்க்கும் வல்லமைகொண்டது.
பெண்களின் மார்பகப் புற்றுநோயையும் நாம் பழங்களைக்கொண்டு எதிர்க்கலாம். 40 வயதைக் கடந்த பெண்கள், மாதவிடாய் முடிவை நெருங்கும் வயதினர், தினமும் உணவில் ஏதேனும் ஒரு கனியை எடுத்துக்கொள்வது மார்பகப் புற்றுநோய் வருகையைத் தடுக்கும். குறிப்பாக பப்பாளிப் பழத் துண்டுகள், மாதுளை முத்துக்கள், தர்பூசணி… இவற்றை தினசரி உட்கொள்ளும்போது புற்றின் வருகை குறையும். வேகவைத்த பீட்ரூட், தர்பூசணி, மாதுளை இவற்றை சாறாக அடித்து அதில் ஓரிரு புதினா இலைகளைப் போட்டு அரை ஸ்பூன் மலைத் தேன் விட்டு வாரம் இரண்டு முறை அருந்துவது பெண்களுக்கு கருப்பை, மார்பகப் புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.
இரைப்பைப் புற்றுநோய்க்கு அதிக காரமுள்ள உணவுகளைத் தொடர்ச்சியாக எடுத்துவருவதும், மது அருந்துவதும், அடிக்கடி வலி மாத்திரைகள் எடுப்பதும் நாள்பட்ட குடல் புண்கள் மற்றும் இரைப்பைப் புண்கள் இருப்பதும் மிக முக்கியக் காரணங்கள். வயிற்றில் எரிச்சல், வலி இருந்து அது இரைப்பைப் புண் எனத் தெரியவந்தும், உணவில் அக்கறை இல்லாமல் அலட்சியமாக இருப்பது புற்றின் வருகையை விரைவாக்கும். இரைப்பை, குடல் சார்ந்த புற்றுகள் வராது இருக்க, மஞ்சள் ஒரு மிகச் சிறந்த தடுப்பு மருந்து. புற்றுக்குக் காரணிகளாக பல விஷயங்கள் உண்டு. மஞ்சளின் பல்வேறு கூறுகள், ஒருங்கிணைந்து இந்தக் காரணிகளை எல்லாம் சரிசெய்வதால்தான், இந்தியர்களுக்கு மேற்கத்திய நாடுகளைக் காட்டிலும் குடல்புற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைவு என ஜான்ஹாப்கின் மருத்துவமனையின் மூத்த புற்றுநோய்ப் பேராசிரியர் டாக்டர் பரத் அகர்வால் தெரிவிக்கிறார். தனியாக எடுத்துக்கொள்ளும்போது மஞ்சள் எளிதில் உட்கிரகிக்கப்படாமல் இருப்பதும், அதுவே பாலில் மஞ்சள் தூள் போட்டுச் சாப்பிடும்போது, உணவைத் தாளித்து எடுக்கும்போது மஞ்சள் சேர்த்தாலும், வெண் பொங்கல், கறிக்குழம்பு இவற்றில் சேர்த்து உணவாக்கும்போதும் மஞ்சள் உட்கிரகிக்கப்படும் வேகம், அளவு அதிகரித்திருப்பதை நவீன ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இனி உங்கள் வீட்டு சமையலில் ஒரு சிட்டிகை மஞ்சள் இல்லாமல் எந்தப் பரிமாறலும் இருக்க வேண்டாம்.
சமையலறையில் நேரம் செலவழிப்பது, மடமைத்தனம் என்ற தவறான நவீனப் பிற்போக்குச் சிந்தனை நகர்ப்புறங்களில் பெருகியுள்ளது. அடுப்பங்கறை மெனக்கெடல்கள் அநாவசியமானது. அந்த நேரத்தில் வேலைக்குப் போகலாம்; சினிமா பார்க்கலாம், சமூக வலைதளங்களில் நட்பு பெருக்கலாம் என நினைப்பது அறியாமை; மடமை. உணவின் ஒவ்வொரு கவள உருவாக்கத்திலும் அக்கறையும் கரிசனமும் தேவை. நம் கைப்பட உருவாக்கும் மூலப்பொருட்களை அன்றன்றே சமைத்துச் சாப்பிட்டுவிட வேண்டும். ‘ரெடி டு ஈட்’ உணவுகளில் குவிந்திருக்கும் ரசாயனத் துணுக்குகளில் பெரும்பாலானவை தனித்தனியாகப் பார்க்கும்போது புற்றுக்கு வழிவகுப்பவை. குறிப்பாக செயற்கை வண்ணமூட்டிகள், செயற்கை மணமூட்டிகள், நீண்ட நாளுக்குக் கெட்டுப்போகாமல் வைத்திருப்பவை என எல்லாவற்றையுமே அகலக் கண்களால் பார்க்கும்போது, அதன் பின்னணியில் பயங்கரங்கள் ஒளிந்துதான் இருக்கின்றன. துரித உணவுகளில் சேர்க்கப்படும் உப்புக்கள் மறுபடி மறுபடி சூடாக்கப்படும்போது பிரிந்து, செல்களைச் சிதைக்கும் தன்மையோடு உடலில் வலம் வரத் தொடங்கும். அதனால், ‘இப்போது நேரம் இல்லை’ எனச் சொல்லி துரிதங்களைத் துரத்தினால், பிறகு வாழ்க்கையிலேயே அதிக நேரம் இருக்காது. வெள்ளைச் சர்க்கரை எனும் சீனி பலர் நினைப்பதுபோல நீரிழிவுக்கு மட்டும் சாதகமானது அல்ல. புற்றுநோய் பல்கிப் பெருக, உடலுக்கு வெள்ளைச் சர்க்கரைதான் காரணமாக இருக்கிறது. புற்றில் இருந்து மருத்துவத்தால் மீண்டுவரும் ஒவ்வொருவரும் வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்தப்பட்ட பண்டங்களை முடிந்தவரை சாப்பிடாமல் இருப்பது மிகவும் நலம். ஓர் இடத்தில் புற்றுசெல்களும் நல்ல செல்களும் இருக்கும்போது அந்த இடத்தில் சர்க்கரை வந்தால், புற்றுசெல்கள் சர்க்கரையை வேகமாக உட்கிரகித்து புற்றின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புற்றுநோயைத் தடுக்க விரும்புபவர்களும், புற்றுநோயில் இருந்து மீண்டுவருபவர்களும் வெள்ளைச் சர்க்கரையை விலக்குவது நன்று. அதேபோல் சர்க்கரைக்கு மாற்றாக ஜீரோ கலோரி எனக் கூறிக்கொண்டு சந்தைக்கு இன்று வரும் பல்வேறு செயற்கை இனிப்புகள், அதி கொதிநிலையில் பிளாஸ்டிக்கு களை எரித்தால் வரும் டயாக்சினைப் போல, புற்றுநோயைத் தருவிக்கும் காரணியாக மாறுகின்றன.
காய்கறிகளில் பிரக்கோளி புற்றுநோயின் வளர்ச்சியைக் குறைப்பதில் பயன்தருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. லோ கிளைசிமிக் தன்மையுடைய சிறுதானிய உணவுகள் புற்றுநோய் சிகிச்சையில் பொருத்தமான உணவுகள். குறிப்பாக மோர், சிறிய வெங்காயம் சேர்த்த கம்மங்கூழ், மணமூட்டிகள், நறுமண மூட்டிகளுடன் சேர்த்துச் செய்த வரகரிசி பிரியாணி, உப்புமாவாக பொங்கலாகச் செய்யப்படும் தினையரிசி உணவுகள் என இவை எல்லாமே அடிப்படையில் ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக உமிழ்பவை. புற்றுநோய் சிகிச்சையின்போதும், கதிர்வீச்சு சிகிச்சையின்போதும் கதிர்வீச்சுக்குப் பிந்தைய உடல் தேறிவரும் காலத்தின்போதும் தினையரிசி கம்பு, வரகரிசி, சாமை, குதிரைவாலி இவற்றில் சமைத்துச் சாப்பிடுவது சிறந்தது.
கிட்டத்தட்ட 70 சதவிகிதப் புற்றுநோய்களை உணவின் மீதான அக்கறையை வைத்தே, நாம் ஆரம்ப காலத்திலேயே தடுக்க முடியும். கூடுதல் கரிசனமும் பாரம்பர்யப் புரிதல்கொண்ட மெனக்கெடல்களும் மட்டுமே இந்த நோயை முற்றிலும் தடுக்க, தீவிரப்படாமல் இருக்க இன்று வரை உதவும். இன்று பஞ்சாப் மாநிலத்தில் பெருவாரியாக புற்று பெருகியதற்கு மிக முக்கியக் காரணம், பாசுமதி அரிசியை எக்குத்தப்பாக விளைவிக்க அந்த மண்ணில் கொட்டி கபளீகரம் நடத்தும் ரசாயன உரங்கள்தான். பாசுமதி விளைந்த நிலத்தின் அடியில் அணுக் கதிர்வீச்சு உள்ள கனிமங்கள் உருவாகும் அளவுக்கு, அங்கே ஏராளமாக ரசாயனப் பூச்சிக்கொல்லி நச்சுக்கள் கலக்கப்படுவது சமீபத்தில் தெரியவந்துள்ளது. நச்சு ரசாயனத் துணுக்குகள்கொண்ட பளபளப்பான காய்கறிகளைவிடச் சற்று தொய்வாக, பூச்சிக்கும் புகலிடம் கொடுத்த காயும் கனியும் நஞ்சில்லா ருசிகொண்ட உணவு என்பது மட்டும் அல்ல, புற்று வராது நம்மைக் காக்கவும்கூடியது. ஹைதராபாத்தில் உள்ள தேசிய உணவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று, உலக நாடுகளை எல்லாம் தடைசெய்துள்ள 13 வகை கொடிய ரசாயனங்கள், நாம் அன்றாடம் சாப்பிடும் கத்திரிக்காய் அவரைக்காயில் இருந்து அரிசி, பருப்பு வரை அனைத்திலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த ரசாயனத் துணுக்குகளில் பல, உலக சுகாதார நிறுவனம் சொல்லும் குரூப் ஒன் புற்றுநோய் காரணிகள் பட்டியலில் இடம்பெற்றவை.
உற்பத்தியைப் பெருக்குகிறேன்; பிற பூச்சிகளிடம் இருந்து காக்கிறேன்; அதிக நாட்கள் சந்தைப்படுத்துகிறேன் எனப் பல காரணங்களைக்கொண்டு நாம் சாப்பிடும் பெருவாரியான உணவுகளில் நஞ்சு செருகப்பட்டுள்ளது. இன்று பெயர் அளவில் பெருகியிருக்கும் புற்றுநோய்க் கூட்டத்துக்கு மிக முக்கியக் காரணம் இந்தப் பூச்சிக்கொல்லி ரசாயனங்களே. வீட்டுத் தொட்டியில் சின்னதாகச் சிறிய நெல்லிக்காய் அளவில் வரும் தக்காளியிலும் தளதளவென வளர்ந்துவரும் கீரையிலும் இன்னும் கத்திரி, வெண்டை, கொத்தமல்லி கீரையிலும் இந்த விஷத் துணுக்குகள் பிரச்னை கிடையாது. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் எனக் கூறிய காலம்போய், வீட்டுக்கு 10 தொட்டிச் செடிகள் வளர்ப்போம் என்பது காலத்தின் கட்டாயமாகிவருகிறது. பணப் பெட்டிகளில் அல்ல, அந்தச் சின்னஞ்சிறு தொட்டிகளிலேயே உங்கள் வாழ்வும் வளமும் இருக்கும்!
நலம் 360- தொடர் இறுதிக் கட்டுரை
நலம் 360– இளைப்பாறும் சமயம் இது. ”நலத்தின் கோணம் 360 டிகிரி; நலம் என்பது நோய்க்கும் மருந்துக்கான தட்டையான பாலம் அல்ல..”என்பதைத்தான் எழுதிவந்தோம். இளங்காலையில் நாம் போடும் ஒரு தும்மலுக்குப் பின்னே இரத்தத்தில் கொஞ்சம் கூடுதாலாகிப் போய்விட்ட இமினோகுளோபுலின்கள் மட்டும் காரணமில்லை. தொலைந்துபோய்விட்ட சில ஈய்ச்சட்டியில் செய்த ரசம், துளசிக் கசாயம் முதலான அன்றாட நல்லுணவும், சில ஆண்டுகளாய் காற்றில் கசிய விடும் அம்மோனியா முதலான ஆயிரக்கணக்கான பிரபஞ்சத்துக்குப் பரிச்சியமில்லாத வாயுக்களும், கரிசனமும் காதலும் காணாமல் போய், ஆதார் அட்டையில் மட்டுமே ஒட்டியிருக்கும் குடும்பமும் கூட காரணமாயிருக்கும் என்ற புரிதலினைச் சொல்ல எழுதியதுதான் நலம் 360.
மொத்த சமூகமும் நலமாயிருக்க நம் முன்னோர்கள் மெனக்கிட்ட போரிட்ட வரலாறு பெரிதினும் பெரிது. “நோயெல்லாம் கடவுளும் கன்மமும் தந்தது; அதை பரிகரிக்க நினைப்பது, கடவுளை எதிர்ப்பது போன்றது” என்ற போக்கை எதிர்த்து, ”நீ சாப்பிட்ட உணவும், நீ வளர்க்கும் கோபம் காமம், குரோதம், மோகம், மதம், மாச்சரியம் இடும்பை, அகங்காரம்” என்னும் எட்டு குணமும் ஒட்டியவைதான் காரணம் எனச்சொன்னவர்கள் நம் 18 சித்தர்கள் மட்டுமல்ல. இன்றைய நவீன மருத்துவத்தின் துவக்கப்புள்ளிகளான இங்கிலாந்தின் டார்வினும், நியூட்டனும், நம் நாட்டு வங்காளத்து சூஃபீக்களும், வடலூர் வள்ளலாரும் கூட அந்த வரிசையில் உள்ளவர்தாம். சாதீய சமூக அவலங்களை எதிர்த்து, நலத்தின் 360 கோணத்தை முதலில் நமக்குக் காட்டியவர்கள் அவ்ர்கள்தாம்
இப்படிபிறந்த நம் நலப்பேணலை என்பது நாம் நெடுநாள், உணவோடும், வாழ்வியலோடும், மொழியோடும், பண்பாட்டோடும் வைத்திருந்தோம். இப்பரந்த புரிதல்தான் நமது ’காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய்’தடுப்பூசிகளைப் போட்டு ஆயுளை ஆரோக்கியமாய் நகர்த்திய விஷயம். ’நீர் கருக்கி நெய் உருக்கி மோர் பெருக்கி’, என்று உணவுச் சூட்சுமங்களை சொல்லி நோய்கற்றியவிஷயம். ”காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளனுக்கு கூற்றை உதைக்கும் குரியதுவாமே”- என மூச்சுப்பயிற்சியில் அன்றாடம் செப்பனிட்டுக்கொண்டிருந்த விஷயம். கூடவே “இது சூடு; இது குளிர்ச்சி; இது பின்பனிக்கால உணவு; இது மருதத்திணை உணவு; இது பேறுகால உணவு”எனும் சமையலறை அக்கறைகள் இருந்த விஷயம்
இருந்தும் கூட, நம் சாமானியனின் சராசரி ஆயுட்காலம் சுதந்திரம் அடையுமட்டும் 37 வயதுதான் இருந்தது. அம்மையிலும், ஊழியிலும், பிளேக்கிலும் காசத்திலும் நம்மில் நிறையபேர் காணாமல் போன வரலாறுண்டு. பிறந்ததில் 3 க்கு ஒன்றை தொட்டிலுக்குப்பதில் பிணக்காட்டுக்கு அனுப்பியவர்களாய்த்தான் இருந்தோம்.. ஒருவேளை, எட்வர்டு ஜென்னரும், லூயி பாஸ்டரும், ராபர்ட் கோச்சும், வந்திராவிட்டால், இன்று நம்மில் எத்தனைபேர் நடமாடிக் கொண்டிருப்போம்? என்பது மிகப்பெரிய கேள்வி. அப்போதைய சமூகத்தின் தொற்று நோய் நலச்சவால்களுக்கு, தன் வாழ்வையே பணயம் வைத்து விடைதேடிய அந்த விஞ்ஞானிகள் கூட்டத்துக்கும் ”அண்டத்திலுள்ளதே பிண்டம்;; பிண்டத்திலுள்ளதே அண்டம்” எனப்பாடிய சித்தர்கள் கூட்டத்துக்கும் அடையாளங்கள் மட்டும்தான் வேறு வேறு. ஆனால் அக்கறைகள் ஒன்றுதாம். நவீன அறிவியலின் புரிதலின் துணைகொண்டு அம்மையையும், வெறி நாய் வைரசையும் விரட்ட அவர்கள் தடுப்பூசிகளைத் தந்திராவிட்டால், நம்மில் நிறையபேர் இன்னும் நடமாடிக்கொண்டிருக்க இன்றும் வாய்ப்பில்லை.
1953-இல் ஜோனாஸ் சால்க் தான் கண்டறிந்த போலியோ தடுப்பூசியை முதலில் தனக்கும் தன் குழந்தைக்கும் போட்டுக் கொண்டு உலகில் போலியோவை விரட்ட எடுத்த முனைப்பும், 48 நாள் தொடர்ச்சியாக கல்வத்தில் 24 விதமான சாறுகளை விட்டு அரைத்து, ஆயிரம் வரட்டிகளை வைத்துப் புடமிட்டு, உலோக மூலப்பொருளை உடலுறிஞ்சிப் பயனாக்கும் பாதுகாப்பான உப்பாக்கி, அதையும் குண்டூசி முனையில் எடுத்து தேனிலோ, மூலிகைப்பொடியிலோ குழைத்து, தான் செய்த பெருமருந்தை தான் சாப்பிட்டுப்பார்க்கும் நம் தமிழ்ச் சித்தனும் எனக்கு ஒரே புள்ளியில்தாம் தெரிகின்றனர்.
அதேபோல், உள்ளங்கையின் பகுதிகளில் உடலை உற்றுப்பார்க்கும் சுஜோக்கும், உடலின் பல்வேறு புள்ளிகளில் உடலின் உயிராற்றல் குவிந்தும், சீராக ஓடும் ஓட்டத்தை அறியும் வர்மமும், தொடுசிகிச்சையும் மிக முக்கியமான நலப்புரிதல்தாம். ”யிங்- யாங்கின்” ஒருமிப்பை மூலிகைகளைக் கொண்டும், தாய்-சீ நடனம் மூலம் மூச்சை ஆண்டும் சிகிச்சையளிக்கும் சீனமருத்துவமாகட்டும், அதன் இன்னொரு பரிமாணமான ஜப்பானிய கம்போ மருத்துவமாகட்டும், அரபு மருத்துவம், யுனானி மருத்துவம் என ஒவ்வொன்றும் அக்கறையும் அறமும் கொண்ட நீண்ட மரபின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பதிவுகள்.
ஒருபக்கம் இப்படி நீண்ட தெள்ளிய அனுபவம் கொண்ட மரபு இருக்கின்றது. இன்னொரு பக்கம் இந்த உடல், பல ஆயிரம் கோடி செல்களாகும் முன்னர், முதல் ஸ்டெம் செல்லுக்குள் எப்படி இத்தனை திட்டங்கள் இருக்கின்றது? என படு நுணுக்கமாக ஆய்ந்து சொல்லும் உச்ச அறிவியல் படைத்திருக்கின்றோம். ஆனால் இரு புள்ளிகளும், நம் விளிம்பு நிலைச் சாமானியனின் நலத்தேடலுக்கு விடை சொல்லாமல் விலகிப் போவதுதான் வேதனையிலும் வேதனை. நலம்360 சொல்ல நினைத்ததும் சிந்திக்க நினைத்ததும் அதை மட்டும்தான்.
மேற்கத்திய மருத்துவமுறை படித்தறிந்து விட்டதால், உள்ளூர் நீண்ட அனுபவம் எல்லாம் மடமையும் அறிவற்றதுமாய் ஆகிப்போய்விட்ட்தாய் உதாசீனப்படுத்தி ஓரங்கட்டுவது ஒருபக்கம்.”நவீன அறிவியலே மொத்தமாய் பொய்; எங்கள் பாரம்பரியம் அத்தனையையும் விஞ்சியது. உடலையும் உலகையும் ஞானக்கண்களால், முழுமையாய் அறிந்துவிட்டோம். இதில் தேட ஒன்றுமில்லை. உள்ளது உள்ளபடி செய்துபோவதைத் தவிர கேள்விகள் கேட்பதோ, ஆய்வுக்குட்படுத்துவதோ வன்முறை” என குமுறும் இன்னொரு பக்கம். இருசாராராரும் உற்றுப்பார்க்க வேண்டிய இன்னொரு கோணம் இருக்கின்றது.
நியூட்டனும், பிளமிங்க்கும், சால்க்குக்கும் நகர்த்திய நவீன மருத்துவ விஞ்ஞானம் இன்று மொத்தமாய், வணிகத்தின் இரும்புக் கரங்களுக்குள் சிக்கியுள்ளது. சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் என்பதால் பாதுகாப்பாய் பல லோ பட்ஜெட் படம் ரிலீஸ் தள்ளி வைப்பது போல, நோயகற்ற தயாராயிருந்தாலும் வணிகத்துக்காக, “இன்னும் 15 வருசம் கழித்து, இந்த புற்று நோய்க்கு மருந்தை ரிலீஸ் பண்ணலாம்”, என பல மருந்துகள் ரிலீஸ் தள்ளிப்போகும் வணிகப்பிடி, நிறைய மருத்துவருக்குமே தெரியாது. ”மருந்து ரெடி; நோய் எங்கே? இதற்காக இதுவரை இத்தனை மில்லியன் டாலர் கொட்டியிருக்கின்றோம்..குப்பையிலா போட முடியும்,? நோயை பரப்புங்கள். எனும் தமிழ் சினிமாவின் ஒன் லைன்கள் உருவாக்கும் கம்பெனிகள் நம் உலகில் உண்டு. ஐன்ஸ்டீனும் நியூகோமனும் ஃபேபரும் அறிவியலை நகர்த்திக் கொண்டிருந்த சமயத்தில், அவர்கள் விஞ்ஞானத்தைக் கொண்டே, லிட்டில் மாஸ்டரை ஜப்பானிலும், ஏஜண்ட் ஆரஞ்சை வியட்னாமிலும், மஸ்டர்டு கேசை இத்தாலி ஓரக்கடற்படைத்தளத்திலும் தெளித்து கோடிக்கணக்கானவர்களை கொன்று குவித்த வரலாறை நாம் மறக்க முடியாது. நவீன அறிவியலை அன்று மண் வெறிக்காக பயன்படுத்திய கூட்டம், இன்று பணத்துக்கும் பங்குச்சந்தைக்குமாக நகர்த்த தயங்காது மருத்துவர் உலகம் இதை உற்றுப்பார்த்துதான் ஆகவேண்டும்.
நோய்க்கான காரணத்தை நுண்கதிர்களால் நோண்டுகையில், நுண்ணறிவால், புதிதாய் இந்த மருந்து எதற்கு, இதன் சிறப்புக்குப் பின்னால் சீரிய அறம் சார் விஞ்ஞானம் மட்டுமே உள்ளதா? முந்தைய மருந்தின் காப்புரிமை வணிகம் மடிந்ததால், புது மருந்தின் புகுத்தல் நுழைகிறதா? என்பதையும் சிந்திக்கும் நுண்மாண் நுழைபுலம் நமக்கும் வேண்டும். இன்னும் பறவைக்காய்ச்சலும் பன்றிக்காய்ச்சலும் ஏன் எச்ஐவியும் கூட ஆய்வகங்கள் தோற்றுவித்தவை என்ற அறைகூவலை உதாசீனப்படுத்தாமல் உற்றுப்பார்க்க வேண்டும்.
இன்னொரு பக்கம் நாங்கள் ’ககன குளிகை போட்டு வானில் பறந்தவர்கள்;புஷபக விமானத்தில் கிரகங்களுக்கு இடையே பறந்தவர்கள்‘ எங்களுக்குத் தெரியாததா? என சமூக மடமைகள் பலவற்றிற்கு சந்தனக்காப்பு போட்டு கும்பிடுபவர்கள் இன்னும் உண்டு. பிறந்த பச்சைக்குழந்தையை, அடைமழையின் அமிலமழைத்தண்ணீரில் குளிப்பாட்டி எதிர்ப்பாற்றல் கொடுக்கும், மரணத்தின் விளிம்பில் நிற்கும் நோயாளியை ”பத்தாயிரம் ஆகும்; கொல்லிமலைக்கு மேலே கொஞ்சூண்டு மூலிகை ஒன்று இருக்கின்றது. அது என் கண்ணுக்குத்தான் தெரியும். அமாவாசைக்கு அடுத்தநாள் அதை கொணர்ந்தால் நீங்க அடுத்த ஒலிம்பிக்சில் ஓடலாம்” என் பொய்யுரை சொல்லி, அவரின் இறுதி மூச்சில், இளைப்பாருவதும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது. அதேசமயத்தில் சின்னதாய் ஒரு கட்டுமருந்தை, உரைகல்லில் 3 இழைப்பு இழைத்து, உயிர்பிரியும் சன்னியினை நிறுத்திக் காப்பாற்றிய மருந்தையும் அதன் செய்முறையையும் காவிரியில் ஆடிஅமாவசையில் எறிந்திருக்கின்றோம். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னரே போரிலோ, விபத்திலோ கையிழந்த வாலிபனை அதன்பின்னரும் இருபது ஆண்டுகள் வாழும்வண்ணம் அறுவைசிகிச்சை செய்ததை மதுரையின் கோவலன்மெட்டில் அகழ்வாராய்ச்சியில் கார்பன் தரவுகள் சொல்லியிருந்தாலும், மிச்சமிருக்கும் சித்தமருத்துவத்தில் ஆய்வுசெய்ய அத்தனை தடைகள். நிறைய மனத்தடை; கொஞ்சம்தான் பணத்தடை. சிக்கன்குனியாவையும், டெங்குவையும் கொஞ்சம் நிறுத்தி இரத்ததட்டுகளை உயர்த்திய நிலவேம்பு போல 750க்கும் மேற்பட்ட தமிழ் மூலிகைகள் களைச்செடியாக மட்டும் காத்திருப்பதும் உதாசீனபடுத்துவதும் உலகிலேயே இங்கு மட்டும்தான் நடக்கும்.
பகுத்துண்டெல்லாம் பல்லுயிரெலாம் எல்லாம் ஓம்ப வேண்டாம்; ஒரு கம்பெனி, ஒரு விதை; ஒரு அரசன் என வாழ்வதுதான் நாகரீகம் என உணவிலும், ”கரிசனம் எந்த சப்ஜெக்ட்? நான் படிக்கலையே? நான் மட்டும் செங்குத்தாய் வளர்வதுதான் வளர்ச்சி எனும் நவீனகல்வியிலும், படுவேகமாய் நாம் நகரத்துவங்கியதில் தொற்றாவாழ்வியல் நோய்க் கூட்டம் சுனாமியாய் நம்மை நோக்கி நகர்ந்து வருகின்றது. இப்போதேனும் கொஞ்சம் விழிக்க வேண்டும்.
நவீன அறிவியலினின் தேடலும், நீண்ட மரபின் புரிதலும் அறம் எனும் புள்ளியில் ஒருங்கிணைய வேண்டும். நானோ துகள்களை தேடும் நுண் ஆடிகள், சாணத்து வறட்டியில் புடமிட்டுச் சமைத்த மருந்துகளை மறுதேடல் செய்யவேண்டும்.. ”இனி வழியில்லை; இன்னும் காலத்துக்கும் மருந்துதான்; மரணம் அடுத்த நிறுத்தத்தில்”என இருக்கும் பல நோயாளிகளுக்கு இந்த ஒருங்கிணைப்பு மட்டுமே பதிலளிக்க முடியும். ”எந்த காலத்தில சார் நீங்க இருக்கீங்க.. ? எனக்கு அதைப்பத்தியெல்லாம் தெரியாது..எதனாச்சும் ஏற்பட்டிருச்சுன்னா அப்புறம் எங்கிட்ட வரக் கூடாது? சொல்லிட்டேன்”, எனும் ஆங்கில வாசகங்கள் நோயாளிகளிடம் இனி வேண்டாம்; ”அத்தனையும் பொய்; ஆபத்து; நான் மட்டும்தான் உனக்கான ஆபத்பாந்தவன்” என நோயின் முழுப்புரிதலில்லாமல் சொல்லும் பழமை போர்த்திய மடமையும் வேண்டாம்.
என்னை நாடி வந்த நோயாளிக்கு, குறைந்த செலவில், கூடிய மட்டும் குறைந்த காலத்தில், முழுமையான, பக்கவிளைவில்லாத, மீண்டும் தலைகாட்டாத, படி நான் இந்த நவீனமருந்தை தருகிறேன். நீங்கள் உங்கள் சூரணத்தைக் கொடுங்கள். அந்த பாரம்பரிய மருத்துவர் தொட்டு உயிராற்றலை நகர்த்தட்டும். இன்னொருவர் மூச்சுக்கு பயிற்சிக்கு அளிக்கட்டும். பாதுக்காப்பான நஞ்சற்ற பாரம்பரிய உணவை நம் இயற்கை விவசாயி ஊட்டட்டும். காதலோடு அதை பரிமாறும் குடும்பமும், கனிவோடு உறவாடும் நட்பும் சேர்ந்து நோய்க்கான சிகிச்சையளீப்போம்”என்பதுதான் நலம்360-ன் நாதம். இப்படி கட்டுரையை எழுதி முடித்துவிட்டு, கட்டுரையில் பிழை பார்த்துக் கொண்டிருக்கையில், என் அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி. ”டாக்டர்! நான் மதுமேகநோய்க்கான நவீன மருத்தவர். நேற்று பார்த்த என் நோயருக்கு சிறுநீரக்க்கல்லிருக்கின்றது. அறுவைசிகிச்சை அவசியமில்லை என தோன்றுகிறது. அனுப்பிவைக்கிறேன். உங்கள் சித்தமருத்துவத்தில் சிகிச்சைதாருங்கள்”..
நலம் 360 நம்பிக்கையை விதைத்திருக்கின்றது!. கொஞ்சம் இளைப்பாறிவிட்டு, மீண்டும் வருகிறேன். வணக்கம்.