Oct 26, 2013

“எங்கே... எங்கே எங்க தெய்வம்?”

“எங்கே... எங்கே எங்க தெய்வம்?”
Posted Date : 11:17 (24/10/2013)Last updated : 11:19 (24/10/2013)
டந்த வியாழக் கிழமை அதிகாலை சுமார் 5 மணி இருக்கும்... சென்னை நேரு ஸ்டேடியத்தில் முதல்வரும் ஜனாதிபதியும் கலந்துகொள்ளும் 'எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் திறப்பு விழா’வுக்குச் சவுக்கு மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைத்துக்கொண்டு இருந்தனர் ஊழியர்கள். அவர்களை நோக்கி விரைந்து வந்தது ஒரு போலீஸ் வேன்... 
''வேலைகளை அப்படியே நிறுத்திட்டு எல்லோ​ரும் ராஜாஜி மண்டபத்துக்குக்கிளம்புங்க...'' என்று அதிகாரிகள் உத்தரவிட,  'சரி, விழா நடக்கும் இடத்தை மாற்றிவிட்டார்களாக்கும்...’ என்று ஒரு லாரியில் ஏறி அவர்கள் ராஜாஜி மண்டபம் வந்து சேருவதற்கும், அந்த சோகச் செய்தியைக் கேள்விப்பட்டு நாமும் அங்கு போய் நிற்பதற்கும் சரியாய் இருந்தது!
போலீஸ் உதவி கமிஷனர்கள் சிலர், ராஜாஜி மண்டபப் படிக்கட்டுகளுக்கு எதிரே ஆணி அடித்து, கயிறுகளைக் கட்டி, தடுப்புகள் அமைக்க 'மார்க்’ செய்துகொண்டு இருந்தனர். வந்த ஊழியர்கள் விஷயத்தைக் கேள்விப்பட்டுத் திகைத்து நின்றனர். சற்று நேரத்தில் ஊர் விழித்துக்கொண்டது.
'முதல்வரின் உடல், ராஜாஜி மண்டபத்துக்குக் கொண்டுவரப்பட இருக்கிறது’ என்று கேள்விப்​பட்ட சிலர், அவசர அவசரமாக ஓடி வர, ராஜாஜி மண்டபத்தைச் சுற்றிலும் போலீஸ் நிறுத்தப்​பட்டது. எம்.எல்.ஏ. ஹாஸ்டல் பக்கம் இருந்து சத்தமான குரலெடுத்து, ''யப்பா...  யப்பா..!'' என்று கதறிக்கொண்டு முதலில் ஓடி வந்தார்  அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. பஞ்சவர்ணம். மக்கள் கடலின் முதல் அலைகூட வந்து சேராத நேரம். கொஞ்ச நேரம்தான்!
ஒரு கட்டடம் சரிவதுபோல் 'டமார்’ என்ற சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து பயங்கர அலறல்... இரைச்சல்... தூரத்தில் ஒரு நுழைவாயிலின் இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு, ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் அலறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.
சில போலீஸ் அதிகாரிகள், ''இன்னும் இங்கு முதலமைச்சரைக் கொண்டுவரவில்லை, கொண்டு​வரவில்லை...'' என்று கத்தினார்கள். எதையும் காதில் வாங்காமல் விரைந்து வந்த கூட்டம், மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு மண்டபத்தை நோக்கிப் பாய்ந்து வந்தது. மிகக் குறைந்த எண்ணிக்​கையில் நின்ற போலீஸார், கண நேரத்தில் ஓரமாய் விலகிக்கொண்டனர். படிக்​கட்டின் மேலே இருந்து பார்க்கும்போது, மனிதத் தலைகளால் ஒரு புயல் கிளம்பி வருவதுபோல் இருந்தது. வந்தவர்கள், ராஜாஜி மண்டபத்தின் முன் வாசல் வழியாக மேலே ஏறிக் கதவுகளை முட்டி மோதித் திறந்தனர். உள்ளே முதல்வரின் உடல் இன்னும் வைக்கப்படவில்லை என்பதை நேரில் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்ட பின்னும், ஒவ்வொரு திசைக்கும் அழுதபடி, ''எங்கே... எங்கே எங்க தெய்வம்?'' என்று ஓடித் தேடினர். ராஜாஜி மண்டபத்தை ஒரு சுற்றுச் சுற்றிய பின்னர், ''ஐயோ, காணோமே... காணோமே...'' என்று அரற்றியபடி அவ்வளவு பேரும் அவர்களாகவே கீழே இறங்கிவிட்டனர்.
ராஜாஜி மண்டபத்தின் படிக்கட்டிலும், சுற்று வழியிலும் ரத்தச் சுவடுகளாகக் காலடித் தடங்கள் ஆங்காங்கே இருந்தன. தடுப்புகள் அமைக்க இடம் குறிப்பதற்காகத் தரையில் அடித்துவைக்கப்பட்டு இருந்த ஆணிகளின் மேல் மிதித்து, பலருடைய பாதங்கள் கிழிந்து, கொட்டிய ரத்தம் திட்டுத்திட்டாய்க் கிடந்தது. ராஜாஜி மண்டபத்தின் எதிரே இருந்த பரந்த மைதானத்தில் நின்றவர்களை போலீஸார் நயந்து ஓரம் கட்டிய பின், சவுக்குக் கட்டைகளால் தடுப்புகள் அமைக்கும் வேலை தொடர்ந்தது. அப்போதுதான் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சௌந்தரராஜன், டி.ராமசாமி ஆகிய மூவரும் ஏற்பாடுகளைக் கவனிக்க வந்து சேர்ந்தனர்.
முதல்வர் உடல் வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்டது. பிரதமர் வரும் வரை ராஜாஜி மண்டபத்தின் உள்ளே மேடை மீது வைக்க முதலில் முடிவானது.
உடலை வைக்கும் இடம் பற்றி அமைச்சர்களிடம் ஓர் அதிகாரி விளக்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரன், ''மேடையில் வேண்டாம்... ஹாலிலேயே இருக்கட்டும்!'' என்றார். பெரிய மேஜை ஒன்று இழுத்து வரப்பட்டு மண்டபத்தின் நடுவில் போடப்பட்டது.
கறுப்பு கலர் உடையில், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் முன்னால் வந்தார் ஜெயலலிதா. கண்கள் மட்டும் ரத்தச் சிவப்பில் இருந்தன. அவரை அடுத்து ஓர் அடி தூர இடைவெளியில் இணையாக ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் பல அமைச்சர்கள் வந்தனர்.
பூட்டியிருந்த ராஜாஜி மண்டபத்தின் பக்கவாட்டுக் கதவுகள் வழியாக அவர்களுடன் சேர்ந்து நுழைந்தபோது, உள்ளே... சில விநாடிகளுக்கு முன் பின் வாசல் வழியாகக் கொண்டுவந்து கிடத்தப்பட்ட முதல்வரின் உடலை, மண்டபத்தின் நடுவில் இருந்த மேஜை மீது ஒரு ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து இருந்தனர். வழக்கமான அவர் உடை... தூங்கிக்கொண்டு இருப்பதுபோல் காணப்பட்டார் முதல்வர். வயிற்றுப் பகுதிக்கு மேல் ஒரு பட்டுத் துணியால் கட்டப்பட்டு இருந்தது. முகத்தில் அதே பொலிவு... நாசித் துவாரங்களில் கொஞ்சம் பஞ்சு வைக்கப்பட்டு இருந்தது. அது தவிர, எந்த மாற்றமும் தெரியவில்லை.  வலது கையில் கட்டப்பட்டு இருந்த பெரிய கறுப்பு டயல் கைக்கடிகாரம் மட்டும் காலை 8.45 - ஐத் தாண்டி இயங்கிக்கொண்டு இருந்தது!
சில நிமிடங்கள் வரை மண்டபத்துக்குள் மலர் மாலைகூட வந்து சேரவில்லை. மிகுந்த நிசப்தம் நிலவியது. முதல்வரை அந்தக் கோலத்தில் பார்க்க சகிக்க முடியாமல் அமைச்சர்களும் அவருக்கு நெருக்கமானவர்களும் வாய்விட்டு அழுதனர். முதல்வரின் அருகே இடது பக்கமாக, அவரது வளர்ப்பு மகன் அப்பு. அவரையடுத்து சத்யா ஸ்டூடியோ பத்மநாபன்.  கே.ஏ.கே. நெருங்கி வந்து, பத்மநாபனின் தோள்களை இறுகப் பிடித்ததும், வாய்விட்டுக் கதறினார்கள் பத்மநாபனும் அப்புவும்.
ஜெயலலிதா வந்ததும்... சற்று நேரம் அப்படியே முதல்வரை உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார். கண்களில் நீர் தளும்பி நின்றது. வாய்விட்டு அழாமல் இறுக்கமாக அவர் தலைமாட்டுக்குச் சென்று நின்று​கொண்டு, யாருடைய முகத்தையும் பாராமல், எதிரே உயரத்தில் எதையோ வெறித்துப் பார்த்தபடி நின்றார் ஜெயலலிதா. அவரது கைகள், முதல்வரை வைத்திருந்த ஸ்ட்ரெச்சரின் இரும்புக் குழாய்களை இறுகப் பற்றி இருந்தன. ஜெயலலிதாவுக்கு எதிராய் முதல்வரின் கால்மாட்டில் ஆர்.எம்.வீரப்பன் நின்றார்.
முதல்வரின் உடல் ராஜாஜி மண்டபத்துக்கு வந்து சேர்ந்த பின்னும், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்​படும் சரிவான மேடை, தயாரித்து முடியவில்லை. அப்​போதும் மாலை, பூக்கள் மண்டபத்துக்குள் வந்து சேரவில்லை.
தலைமாட்டில் நின்ற ஜெயலலிதா, முதல்வர் முகத்தையே உற்றுப் பார்ப்பதும், பின்னர் எங்கோ தூரத்தில் வெறித்துப் பார்ப்பதுமாய் இருந்தார். தன் கர்ச்சீப்பால் முதல்வரின் முகத்தை அடிக்கடி சரிசெய்து​கொண்டு இருந்தார்.
ராமாவரம் தோட்டத்தில் இருந்து வந்திருந்த முதல​மைச்சரின் உறவினர்கள், மண்டபத்தின் ஓர் ஓரத்தில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தனர். சற்று நேரத்துக்குள் ஒவ்வொருவராக முண்டியடித்துக்கொண்டு ராஜாஜி மண்டபத்துக்குள் நுழையவும், நெரிசல் அதிகமானது. ஓர் அதிகாரி ஓடி வந்து அமைச்சர்களிடம், ''கூட்டம் கூடுகிறது, இந்த ஹால் தாங்காது...'' என்று முறையிட்டார். அதற்குள் பொதுமக்கள் பார்வைக்கான மேடை தயாராகிவிட்ட தகவல் கிடைத்தது. முதல்வர் படுத்திருந்த ஸ்ட்ரெச்சரைச் சுற்றி அமைச்சர்கள் சூழ்ந்து மெள்ளத் தூக்கினர். ஜெயலலிதாவும் நின்ற இடத்திலிருந்தே ஸ்ட்ரெச்சரின் தலைப் பகுதியை ஏந்திப் பிடிக்க, பொதுமக்கள் பார்வையிட சரிவான மேடையில் கிடத்தினார்கள். ஜெயலலிதா அங்கும் முதல்வரின் தலைமாட்டிலேயே நின்றார்.
முதல்வரின் உடலைப் பார்த்ததும், வெளியே காத்திருந்த கூட்டம் கொந்தளித்தது. ஆண்களும் பெண்களும் வாயில் அடித்துக்கொண்டு அலறினர். இரண்டு பெண்கள் அந்த இடத்திலேயே மயங்கிச் சரிய, காவலர்கள் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினர். அழுகையும் கூக்குரலும் ஒரே இரைச்சலாய் இருந்தது. வெள்ளை நிற பேன்ட் சட்டையில் இருந்த ஓர் இளைஞர், போலீஸ் தடுப்பை மீறி உள்ளே வர முயற்சித்தார். அது முடியாமல் போகவே, கிடத்தப்பட்டு இருந்த முதல்வரின் உடலைக் கீழே நின்றபடி சில நொடிகள் அண்ணாந்து பார்த்துவிட்டு, தடுப்புக் கட்டைகளின்மேல் தன் நெற்றியால் மாறி மாறி முட்டிக்கொண்டார். நெற்றி பிளந்து அவருடைய மார்புப் பகுதி வரை ரத்தம் பீறிட்டது. அதையும் பொருட்படுத்தாமல், கைகளை நீட்டி, ''தலைவா,! போயிட்டியா... நீ போயிட்டியா...'' என்று கதறியபடி மீண்டும் முன்னேற முயன்றார். அவரைத் தடுத்த காவலர்களின் காக்கி யூனிஃபார்மிலும் ரத்தக் கறை படிந்தது.
- தொடரும்

Oct 15, 2013

சர்வதேச அடையாள அட்டை
மாணவர்களுக்கான சர்வதேச அடையாள அட்டை


மாணவர்கள் மாவட்டங்கள், மாநிலங்களை கடந்து நாடு விட்டு பிற நாடுகளுக்கு சென்று படிப்பது இன்று சாதாரண ஒன்றாகி விட்டது. எங்கு சென்றாலும் நமக்கானதொரு அடையாளம் தேவைப்படுகிறது.
எங்கு சென்றாலும் நமக்கானவற்றைப் பெறுவதற்கு, நம்மை மிகச் சரியாக அடையாளப்படுத்திக் கொள்ளவும், சட்ட ரீதியான, சமூகப் பாதுகாப்பு, சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கும் ஒரு அடையாள அட்டை தேவைப்படுகிறது.
நம் தமிழகத்திலே கூட பள்ளி, கல்லூரி மாணவர் அடையாள அட்டை இருந்தாலும், பேரூந்தில் இலவசமாக பயணிப்பதற்கு அரசாங்கம் தனியாக ஒரு அடையாள அட்டையை வழங்குகிறது. அது தவிர பள்ளி மாணவர்கள் அடையாள அட்டையைக் கொண்டு பள்ளிச் சீருடைகள் தள்ளுபடி விலையில் ஒரு சில கடைகள் தருகின்றன, கல்லூரி அடையாள அட்டையைக் கொண்டு பல பொழுதுபோக்கு நிறுவனங்கள் தள்ளுபடிகளை தருகின்றன.
மாணவர் அடையாள அட்டையை படிக்கும் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் வழங்கினாலும் அதற்கான பொதுவான அங்கீகாரம் என்பது அனைத்து இடங்களிலும் இருப்பதில்லை.
தமிழக மாணவர்கள் வேறு மாநிலத்திற்கு செல்லும்பொழுதோ, வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் மாணவர்கள் அங்கிருந்து விடுமுறைக்கு தம் சொந்த நாட்டிற்கு வரும்போதோ அல்லது பயிற்சி படிப்பிற்காக வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லும்பொழுதோ, அந்த இடத்தில் மாணவர் சலுகைகளை பெற முடியாத நிலைக்கு உள்ளாகின்றனர்.
இந்த குறையைப் போக்கும் வகையில் கிடைத்திருப்பதுதான் சர்வதேச மாணவர் அடையாள அட்டை(ISIC). யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே சர்வதேச மாணவர் அடையாள அட்டையாக இது விளங்குகிறது.124 நாடுகளில் பயன்படுத்தக்கூடிய இந்த மாணவர் அடையாள அட்டையைக் கொண்டு சில்லறை விற்பனை கடைகள், உணவகங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், எழுது பொருட்கள், புத்தக விற்பனை நிலையங்கள் போன்ற 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சலுகைகளைப் பெறுவதற்கு இந்த அட்டை உதவுகின்றது.
தகுதி
முழு நேர படிப்பாக படிக்கும் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் எவரும் ஆன்-லைன் வழியாக அடையாள அட்டையைப் பெறலாம்.
கட்டணம்
வருடத்திற்கு 500 ரூபாய் மற்றும் வரிகள் சேர்த்து கட்ட வேண்டியது இருக்கும்.
எங்கு விண்ணப்பிக்கலாம்?
ISIC இன் www.isic.co.in/apply என்ற இணைய பக்கம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களுக்கு அஞ்சல் வழியாக அடையாள அட்டை அனுப்பப்படும்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.isic.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Oct 8, 2013

உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா?


கவனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை. 
* உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா.
* இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன.
* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது.
* இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவிகிதம்.
* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படுபவர்களில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகம்.
* இந்தியாவில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.
டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மாணவி ஐந்து பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் ஆகட்டும், குவாஹாத்தியில் சாலையில் பலர் முன்னிலையில் ஓட ஓட ஓர் இளம்பெண் மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவம் ஆகட்டும். முக்கியமான ஒரு செய்தியை நமக்குத் திரும்பத் திரும்ப உணர்த்துகின்றன... இனியும் இந்த நாட்டில் அரசாங்க அமைப்புகளை நம்பிப் பயன் இல்லை. நம் குழந்தைகளைக் காத்துக்கொள்ள இனி நாம்தான் களம் இறங்கியாக வேண்டும்; குழந்தைகளுக்கான பாலியல் கல்வியை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதே அந்தச் செய்தி!சரி, எந்த இடத்தில் இருந்து தொடங்குவது?
முக்கியமான 5 கட்டளைகள்:
*மார்பகம், பிறப்புறுப்பு, மாதவிடாய், நாப்கின், ஆணுறை, சுய இன்பம், உடலுறவு, கற்பு, பலாத்காரம், காதல், குழந்தைப் பிறப்பு... இப்படி எது தொடர்பாக உங்கள் குழந்தை கேட்டாலும் மறைக்காமல் அறிவியல்ரீதியிலான உண்மையைச் சொல்லுங்கள். அதேசமயம், தேவைக்கு அதிகமாக, பெரிய பெரிய விளக்கங்களோடு பதில் அளிக்க வேண்டியது இல்லை. அவர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்லப் பழகுங்கள். இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசும்போதோ, குழந்தைகளை விசாரிக்கும்போதோ ஒரு குற்றவாளியை அணுகுவதுபோல அவர்களின் நேருக்கு நேர் அமர்ந்து, கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து, பக்கவாட்டில் அமர்ந்து விளையாட்டாகப் பேசுங்கள். ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளைப் பற்றியும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் இருக்கும். இயல்பாகவே ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும். எனவே, ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் சொல்லிக்கொடுங்கள். 
* வீட்டில் அரைகுறை ஆடையோடு உலவாதீர்கள். கணவன் - மனைவி நெருக்கத்தைக் குழந்தையின் முன் காட்டாதீர்கள். குழந்தையின் முன் உடை மாற்றாதீர்கள். ஆபாசம் வரும் எனத் தெரிந்தால், டிவியோ, பத்திரிகையோ குழந்தை முன் பார்க்காதீர்கள். 
* பாலியல் கல்வியின் அடிப்படையே வீட்டிலிருந்து, பாலியல் சமத்துவத்தில் இருந்துதான் தொடங்குகிறது. எனவே, ஆண் - பெண் பாகுபாடு எந்த விதத்திலும் வீட்டில் நிலவாத சூழலை உருவாக்குங்கள். சமையலில் தொடங்கி முக்கியமான முடிவுகளை எடுப்பது வரை எல்லா விஷயங்களிலும் கணவன் - மனைவி இருவருக்கும் சமமான பங்கு இருப்பதை உறுதிசெய்யுங்கள். ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் எல்லா வேலைகளையும் கற்றுக்கொடுங்கள்; பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் எல்லா வாய்ப்புகளையும் அளியுங்கள்.
* சக நண்பராக குழந்தைகளோடு நெருக்கமாக உரையாடுங்கள். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமேனும் அவர்களோடு செலவிடுங்கள். அவர்களுடைய நண்பர்கள், விருப்பங்கள், செயல்பாடுகள்பற்றிப் பேசித் தெரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளிடம் பிறப்புறுப்புபற்றி சகஜமாகப் பேசுங்கள். கை, கால்களைப் போல அதுவும் ஓர் உறுப்புதான் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள். அதைப் பற்றிப் பேசவோ, சந்தேகம் கேட்கவோ அவர்கள் தயங்காத சூழலை உருவாக்குங்கள். புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குங்கள். நீங்கள் சொல்ல நினைக்கும் - ஆனால், சொல்ல முடியாதது என்று நினைக்கும் - விஷயங்களைப் புத்தகங்களாக வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்.
* குழந்தைகள் எந்த ஒரு சங்கடமான விஷயத்தை உங்கள் முன் கொண்டுவந்தாலும் ‘‘பயப்பட வேண்டாம், இது ஒரு பிரச்னையே இல்லை, நான் இருக்கிறேன்’’ என்கிற பக்கபல வார்த்தைகளோடு அவர்களை அணுகுங்கள்.

அதிகம் கேட்கப்படும் 5 கேள்விகளும் சொல்ல வேண்டிய பதில்களும்!
‘‘அம்மா, என்கூட படிக்குற ஒரு பையன் என்கிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொல்றாம்மா...”‘‘ஆஹா... அவனுக்கு உன்னைப் பிடிச்சுருக்குபோல இருக்குடா. உன்கூட ஃப்ரெண்டா இருக்க ஆசைப்பட்டு இருக்கான். அதை அவனுக்குச் சொல்லத் தெரியலை. டி.வி., சினிமாவைப் பார்த்து காதல்னு சொல்லி இருக்கான். தப்பில்லே. அவன்கிட்டே சொல்லு. நம்ம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்து படிப்போம்னு. ஞாயிற்றுக் கிழமைல வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வா. விளையாடு!’’
‘‘ஏம்மா, பெண்களுக்கு மட்டும் மார்பு வளருது... ஆண்களுக்கு வளரலை?”‘‘பிற்காலத்துல குழந்தைங்க பிறக்கும்போது, அந்தக் குழந்தைங்களுக்குப் பால் கொடுக்கணும் இல்லையா? அதுக்காகத்தான் பெண்களுக்கு மார்பு பெரிசா வளருது.’’
‘‘பலாத்காரம்னா என்னப்பா?”‘‘கண்ணா, நம்ம உடம்புல சில இடங்களை எல்லோரும் தொடலாம், சில இடங்களைத் தொடக் கூடாது. அப்படித் தொடக் கூடாத இடங்களை நம்மளை மீறித் தொட்டுடறதைத்தான் பலாத்காரம்னு சொல்றாங்க.’’
‘‘மாதவிடாய்னா என்னம்மா? அக்காவுக்கு நாப்கின் எதுக்கு வாங்குறீங்க?”‘‘உடம்புக்குத் தேவை இல்லாத தண்ணீர் எப்படி உச்சாவா வருதோ, அதேபோல, பெண்களுக்கு மட்டும் அவங்க பெரிய பிள்ளையா வளர ஆரம்பிச்ச உடனே தேவையில்லாத ரத்தம் வெளியே வரும். அதைத்தான் மாதவிடாய்னு சொல்வாங்க. அப்படி வரும்போது, அந்த ரத்தம் டிரஸ்ல பட்டுடாம இருக்கத்தான் நாப்கின்.’’
‘‘குழந்தை எப்படிப்பா பிறக்குது?”‘‘அப்பாக்கிட்ட ஒரு கெமிக்கல் இருக்கும். அது அம்மா வயித்துக்குள்ள இருக்குற கெமிக்கல்கிட்டே போய் சேர்ந்து, பாப்பாவாப் பிறக்கும். ஏரோப்ளேன் எப்படிப் பறக்குது? அதை முழுசாச் சொன்னா உனக்கு இப்போ புரியாதுல்ல... அதுபோல, நீ பெரியவனாகும்போது இதெல்லாம் படிப்புல வரும். அப்போ உனக்கு எல்லாம் புரியும்.’’
அணுகச் சங்கடமான 3 விஷயங்கள்! 
குட் டச் / பேட் டச் 
குழந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, அதன் உடலில் பிறர் எங்கெல்லாம் தொடலாம், எங்கெல்லாம் தொடக் கூடாது என்று புரியவையுங்கள். கை குலுக்கலாம் - குட் டச். தலை மேல் கை வைக்கலாம், கன்னத்தில் கையால் கிள்ளி முத்தம் கொடுக்கலாம், தோளில் கை போடலாம் - குட் டச். தடவக் கூடாது - பேட் டச். மார்பில், வயிற்றில், இடுப்பில், பிறப்புறுப்பில், தொடையில் கை வைக்கக் கூடாது; தடவக் கூடாது. வாய் மீது வாய் வைத்து முத்தம் கொடுக்கக் கூடாது. கட்டிப்பிடிக்கச் சொல்லக் கூடாது. மடியில் அமர்த்திக்கொண்டு அணைக்கக் கூடாது - பேட் டச். அப்படி யார் செய்தாலும் சம்பந்தபட்டவர்களிடம் இருந்து சமர்த்தாய் நழுவி, தனியாக இருக்கும்போது அம்மாவிடம்/அப்பாவிடம் உடனே சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் . வீட்டின் அருகிலோ, பள்ளிக்கூடத்தின் அருகிலோ தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள் யாரேனும் தங்களைத் தொடர்ந்து கவனிக்கிறார்களா, சைகை மூலம் அழைக்கிறார்களா, சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்களா என்று குழந்தைகள் கவனிக்கக் கற்றுக்கொடுங்கள். அப்படிக் குழந்தை தெரிவிக்கும் நபர்களைக் கண்காணியுங்கள். 
காதல் 
குழந்தை ஐந்து வயதில் காதல் வயப்படலாம். இயல்புதான். பதின்பருவத்தில் காதல் வருவதும் இயல்புதான். சூசகமாகச் சொல்லுங்கள்... ‘‘வெறும் நட்புதான்பா. ஆனா, இந்த வயசுல அப்படித்தான் தோணும், தப்பில்லை. இப்படித்தான் அப்பாவுக்கும் சின்னப் புள்ளையா இருக்கும்போது நடந்துச்சு. அப்புறம் பெரியவனானதும் இதெல்லாம் சும்மான்னு புரிஞ்சுச்சு. படிப்பைக் கவனிப்பா. எதுவா இருந்தாலும் அது முக்கியம்’’ என்பதுபோலப் பேசுங்கள்.
சுய இன்பம் 
ஆணோ, பெண்ணோ... ஒரு குழந்தை தன் வாழ்வில் இரு முறை சுயஇன்பம் பழக்கத்துக்கு ஆட்படுகிறது. முதல் முறை 3-5 வயதில். இரண்டாவது முறை 10-13 வயதில். இது எல்லாக் குழந்தைகளுக்கும் சகஜமானது. பிறப்புறுப்பைத் தேய்த்துக்கொண்டே இருப்பதால் கிடைக்கும் சுகம் காரணமாக ஏற்படும் இந்தப் பழக்கத்தை விவரம் தெரியாத வயதில், குழந்தையின் கவனத்தைத் திசை மாற்றி நம்மால் தடுக்க முடியும். ஆனால், விவரம் தெரிந்த பின் பதின்பருவத்தில் ஏற்படும் பழக்கம் அப்படி அல்ல. அனுமதியுங்கள். அதேசமயம், டி.வி., ஆபாசப் புத்தகங்கள், இணையம் போன்ற திசை திருப்பும் விஷயங்களை வீட்டில் இருந்து அகற்றுங்கள். விளையாட்டு உள்ளிட்ட பிற விஷயங்களில் ஊக்குவியுங்கள். கவனம் சிதறும் அளவுக்குப் பழக்கம் அதிகமானால், அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூசகமாகத் தெரியப்படுத்துங்கள்.
ஆப்த வாக்கியம் 

ஒரு விஷயத்தைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே சொல்லி வளருங்கள். ‘‘நீ மட்டுமே உலகம் இல்லை. நாம் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ எவ்வளவோ பேருடைய உழைப்பு தேவைப்படுகிறது. ஆகையால், உன்னைப் போல் எல்லோரையும் நினை’’ என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வளருங்கள். எல்லோருடைய எண்ணங்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தி வளருங்கள். வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் நீங்கள் அவர்களுக்குத் துணையாக இருப்பீர்கள்; எதையும் மறைக்க வேண்டியது இல்லை என்று சொல்லி வளருங்கள். அதேசமயம், எப்போதும் குழந்தைகளைக் கவனத்திலேயே வைத்திருங்கள்! 
டாக்டர் விகடன் ஜன.2013

Sep 30, 2013

2030ல் மதுரை எப்படியிருக்க வேண்டும்

2030ல் மதுரை எப்படியிருக்க வேண்டும் என, கல்லூரி மாணவர்களிடம் கேட்ட போது, மதுரைப் பற்றிய தங்கள் எதிர்கால கனவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அவர்கள் கூறிய கருத்துகள் சில.

மெட்ரோ சிட்டி மதுரை :


ஜுலி மார்கோ, ஆசிரியை, பைபாஸ் ரோடு:தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 14.62 லட்சம் மக்கள் தொகையுடன், 148 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. மதுரையின் இதயப்பகுதியான மீனாட்சி கோயில் மற்றும் புராதன இடங்களின் அருகில் போக்குவரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். கிழக்கே தெப்பக்குளம் முதல் காளவாசல் வரை மற்றும் தெற்கே திருப்பரங்குன்றத்திலிருந்து புதூர் வரை உள்ள ரோடுகளில் கடைகளின் ஆக்கிரமிப்பும், வாகன ஓட்டிகள் முறையற்று வாகனங்களை "பார்க்' செய்வதும் அதிகரித்துள்ளது. போக்குவரத்து விதிகளை யாரும் பெரிதாக மதிப்பதேயில்லை. "பிரீ லெப்ட்' பகுதியில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாதபடி முன் வந்த வாகனங்கள் அடைத்துக் கொண்டு நிற்கின்றன. முக்கிய சந்திப்புகளில் தற்காலிகமாக போக்குவரத்து விதிகளை ரோடுகளில் ஏற்படுத்திட வேண்டும். மக்கள் நினைத்த இடத்தில் ரோட்டை கடக்க முயற்சிக்கின்றனர், இது எந்த அளவிற்கு ஆபத்து என்பதை, அவர்களுக்கு உணர்த்துவது யார்? அதிக நெரிசல் ரோடுகளில் பாதசாரிகள் செல்ல சுரங்கப் பாதை அவசியம் அமைக்க வேண்டும். தரமில்லாத பாலங்கள், ரோட்டின் குறுக்கேயுள்ள மின் கம்பங்கள், விளம்பர போர்டுகள் அகற்றப்பட வேண்டும். சென்னையில் உள்ளது போல் மெட்ரோ ரயில் அல்லது மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால், 2030ல் மதுரை "மெட்ரோ
சிட்டியாக' வளர்ந்துவிடும்.

2030ல் விபத்தில்லா மதுரையோகீஸ்வரி,குடும்பத் தலைவி, வில்லாபுரம்.2030ல் மதுரை அழகான தோற்றம் பெற்றிட, முதலில் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சாலை விதிகளை மதித்து, அதன் படி வாகன போக்குவரத்தை முறைப்படுத்திட வேண்டும். பிளாட்பாரங்களை ஆக்கிரமித்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்கி கொடுத்து, நடை பாதைகளை மக்கள் நடப்பதற்கு பயன்படுத்தும் வகையில் அவ்வப்போது சீரமைக்கலாம். பின்னால் வரும் வாகனங்களை கவனிக்காமல் நினைத்த இடத்தில் அதிரடி பிரேக் போட்டு விபத்து ஏற்படுத்தும் வாகனங்களுக்கும், போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும். சிக்னலுக்கு காத்திருக்கும் நேரத்தில், விரைவில் மக்கள் சாலையை கடந்து செல்ல, "ஜீபிரா கிராஸிங்' அமைக்க வேண்டும். முக்கிய இடங்களில் பாலங்கள் கட்டுவது நல்லது, ஆனால் அதை குறுகிய காலத்தில் தரமானதாக கட்டுவது மிக அவசியமாகும். மதுரையில் பெரிய மாற்றத்தை கொண்டு வர போக்குவரத்தை சீர் செய்து விபத்தை குறைத்தாலே போதும்.

ஈரடுக்குத் தீர்வு:இரா.கல்யாண சுந்தரம்,அனுப்பானடி:
மதுரை தெற்கு வாசல் பாலத்தின் நெருக்கடிக்கு தீர்வு காண, ஈரடுக்குப் பாலம் அமைப்பதை தவிர வேறு வழியில்லை. ஆனால், மேலடுக்கு உருவாக்க கீழே பூமியிலிருந்து தான் தூண்களை எழுப்ப வேண்டும். முதலாவதாக வலுவான அகலமான தூண்களை பாலத்தின் இருபுறமும் தற்போதைய பாலத்தின் உயரத்திற்கு எழுப்பி, கிழக்கு-மேற்கில் தலா 7 அடி அகலப்பாதையை உண்டாக்க வேண்டும். இரு புறமும் 3 அடி நடைபாதை, 4 அடி சைக்கிள் செல்லும் வழியாக இருக்க வேண்டும். அதன் பிறகு தூணை மேலெப்பி மேலடுக்குப் பாலத்தை அமைக்க வேண்டும். மேலும் கீழுள்ள பாலங்கள் ஒரு வழிப்பாதையாக அமைக்க வேண்டும். இதைத் தவிர, இந்த நெருக்கடிக்கு இன்னொரு தீர்வாக தாழ்நிலை கர்டர் பாலம் அமைக்கலாம். அப்படி கர்டர் பாலம் அமைத்தால் அதில் பாதசாரிகளும், இரு சக்கர வாகனங்களும் மட்டும் செல்ல வசதியாக இருக்கும். பாலம் அமைக்க, இடங்களை ஆர்ஜிதம் செய்ய முடியாவிட்டால், ஈரடுக்கு பாலம் கட்டுவதை தவிர வேறு வழியில்லை.


நான்கு வழிச் சாலை வேண்டும்ஜோதி, மதுரை மருத்துவ கல்லூரி.மதுரையில் சமீப காலமாக ஆடு,மாடு, நாய் தொல்லை அதிகரித்துள்ளது. வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் ரோட்டில் திரிந்தால் மதுரை எப்படி வளரும். இது போன்ற செயல்கள் நடக்க காரணமாக இருப்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். டூவீலர், ஆட்டோ, பஸ், கார் செல்ல தனி தனி ரோடுகளாக பிரித்து நகருக்குள் நான்கு வழி சாலை அமைக்கலாம். படித்த இளைஞர்கள் வெளி ஊர்களுக்கு வேலை தேடி செல்கின்றனர், நம் ஊரிலேயே பெரிய கம்பெனிகள், ஐ.டி., நிறுவனங்களை துவங்கிட வழி செய்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தி, பொருளாதார வளர்ச்சி பெற செய்யலாம். குடிநீர் குழாய்கள், குப்பை தொட்டிகள், மின் விளக்குகள் மாதம் ஒரு முறை பழுது பார்த்து குறையில்லாத மாநகரமாக உருவாக்கிட முயற்சி செய்ய வேண்டும்.

நகர எல்லையை விரிவாக்கலாம்ராக்கேஷ்,மெப்கோ பொறியியல் கல்லூரி:பல ஆண்டுகளாக தென் மாவட்டங்களில் மின்சார பாற்றாக்குறை இருந்து வந்தது. அதில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று மதுரை. மின்சாரத்தை நம்பியுள்ள சிறு தொழில் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மின்சாரத்தை உற்பத்தி செய்திட, "சோலார் பிளான்ட் அமைக்கலாம். பெட்ரோல் விலைஉயர்வு மற்றும் சுற்றுப்புற தூய்மையை கருத்தில் கொண்டு, அருகில் உள்ள இடங்களுக்கு சைக்கிளில் சென்றால், உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும். நகரத்தின் அனைத்து பகுதிகளையும் இனணக்கும் வகையில் போக்குவரத்து வசதி செய்யலாம். நகர எல்லையை விரிவாக்கி தொடர் பேருந்து, மாடி பேருந்துகளை இயக்கலாம். போஸ்டர் ஒட்டுவது, பொது இடங்களில் புகைப்பது, எச்சில் துப்புவதை நிறுத்த வேண்டும்.

நகரமா கிராமமா?பிரீத்தி, மதுரை காமராஜர் பல்கலைகழகம்:மதுரையை மற்ற நகரங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால், இன்னும் வளர்ச்சியடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அன்று, கிராமமாக இருந்த மதுரை இன்று, சிறியளவில் வளர்ச்சி பெற்று நகரத்திலும் சேராமல், கிராமத்திலும் சேராமல் நடுத்தரமாக இருக்கிறது. கே.கே. நகர், அண்ணா நகர், பை பாஸ் ரோடு இந்த ஒரு சில பகுதிகள் தான் பார்க்க ஹை-டெக் தோற்றத்தை தருகிறது. இருப்பினும் ரோடுகளை முறைப்படி பராமரிப்பதில்லை. நாம் வாழும் ஊரை, நாம் எப்படி வைத்து கொள்ள வேண்டும் என, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மதுரையை சுற்றியுள்ள ஊர்களுக்கு மின்சார ரயில் வசதி ஏற்படுத்தினால் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். சாக்கடை, சாலை வசதிகள் போன்ற அடிப்படை வளர்ச்சி பணிகளை முறைப்படி செய்து வந்தால், வளர்ந்து வரும் நகரமான மதுரை 2030ல் வளர்ந்த நகரமாகிவிடும்.

நெரிசல் தீர ஸ்கை பஸ் பிளான்:ராஜாமணி, இந்திய பொறியாளர் சங்கத் தலைவர், மதுரை: மதுரையில் நிலவும் நெரிசலுக்கு காரணம் குறுகிய ரோடுகளும், ஆக்கிரமிப்புகளும் தான். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில், பிளைஓவர் பாலங்களை அமைத்து மோனோ ரயில் விடலாம். ரயில்வே பொறியாளர்கள் சார்பில், சில ஆண்டுகளுக்கு முன்பு, நகர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒரு திட்டம் ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டது. ரோட்டில் பில்லர்கள் எழுப்பி, அதன் மீதான பாலங்களில் டிராக் அமைத்து, இரு பெட்டிகள் கொண்ட டிராம் போன்ற ஸ்கைபஸ்களை இயக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு திட்டம் தற்போது ஐதராபாத்தில் பரிசீலிக்கப்படுகிறது. மேலூர், மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார் பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம், திருநகர், திருமங்கலம் வரை ஸ்கை பஸ்களை இயக்கினால், நகருக்குள் நெரிசல் தவிரும். இன்னொரு திட்டத்தையும் பரிசீலக்கலாம். மதுரையை சுற்றியுள்ள மேலூர், சிலைமான், அவனியாபுரம், திருமங்கலம், நாகமலை, விளாங்குடி, கூடல்நகர், அய்யர்பங்களா, மாட்டுத்தாவணி பகுதிகளை இணைக்கும் வகையில் புதிதாக ரயில் பாதை அமைத்து "டெமு' ரயில்களை இயக்கலாம். தற்போது ஒரு கி.மீ.,க்கு அகல ரயில் பாதை அமைக்க, நில ஆர்ஜிதத்தையும் சேர்த்து ரூ.ஏழு கோடியாகும் என மதிப்பீடப்படுகிறது. இதன் மூலம் புறநகர்பகுதியினர் நகருக்குள் வசிக்க வருவதை தவிர்க்க முடியும். மத்திய, மாநில அரசுகள் இணைத்து நிதி ஒதுக்கினால் இத்திட்டங்கள் சாத்தியமே. மதுரை வைகையாற்றின் இரு கரைகளிலும் அமைந்துள்ள ரோட்டை விரிவுப்படுத்தி, இரு வழிச்சாலையாக மாற்றி, வழிநெடுகிலும் ஆற்றையொட்டி பூங்கா, ரோட்டின் நடுவில் ஹைமாஸ் விளக்குகள், அமைத்து (மாடல் ரோடு) வாகன போக்குவரத்தை திருப்பி விடலாம். இடையிடையே இரு கரை ரோடுகளையும் இணைக்க தரைமட்ட அல்லது உயர்மட்ட பாலங்களை அமைக்கலாம். டெலிபோன், மின்சார, கேபிள் வயர்களை அண்டர்கிரவுன்டில் கொண்டு செல்ல வேண்டும். தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப, பாதாள சாக்கடை திட்டத்தில் ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும். "அண்டர்கிரவுன்டில்' வயர்கள், சாக்கடை, காஸ் இணைப்பு போன்றவைகளை கொண்டு சென்றால், ரோடுகளில் வாகன போக்குவரத்திற்கு சிரமம் இருக்காது. 

Sep 28, 2013

சூப்பர் ஸ்டாரின் இதயம் திறக்கிறது!

''இது ஆண்டவன் கட்டளை!'' - சூப்பர் ஸ்டாரின் இதயம் திறக்கிறது!
)
(ஆனந்த விகடன்: 29.05.2005)
 எங்கோ தொலைதூரச் சிகரத்தின் அடர்ந்த பனிக் குகையில் மௌனத்தின் மத்தியில் உற்பத்தியாகி, பிரதேசமெங்கும் உருகிப் பெருகி வழிந்தோடும் மகா நதியான கங்கையின் பிரணவ மந்திரப் பேரோசை தவிர, சில்லிடும் அமைதி!
மனசுக்குள்ளும் மழை பெய்ய ஆரம்பிக்கும் நேரம்... குளிர்க் காற்றுக்கு இதமாக, காசித் துண்டை உதறி நெற்றியில் இறுக்கிக் கட்டிக்கொள்கிறார் ரஜினி.
சவரம் செய்யப்படாத முகம்; கிழிசலான கதர்ச் சட்டை; இடுப்பில் காவி வேட்டி; காலில் ரப்பர் செருப்பு; கையில் ஊன்றுகோல். அந்த குளிர் கண்ணாடியும், லெதர் பேக்கும் இல்லையென்றால் ரஜினி... கூட்டத்தில் ஒரு முகம்!
ன்ன இல்லை இவரிடம்?
இதோ இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படம்.... 'சந்திரமுகி’!
தமிழ் சினிமாவின் அத்தனை ரிக்கார்டுகளையும் அடித்து நொறுக்கி தூக்கித் தூரப்போட்டுவிட்டு, துள்ளலாய் ஓடுகிறது படம்.
'சூப்பர் ஸ்டார்’ என்பது ஆளுக்காள் அமரத் துடிக்கிற மியூசிக்கல் சேர் அல்ல; அது ரஜினியின் அடையாளம்... அடையாளங்களில் ஒன்று!
இந்த ஜென்மத்துக்குப் போதுமான புகழ் பார்த்தாகிவிட்டது. இன்னும் ஏழு தலைமுறைக்குத் தேவையான பொருள் சேர்த்தாகிவிட்டது. இவர் பேசினால் செய்தி. பேசாவிட்டாலும் செய்தி. புதிய படத்துக்கு பூஜை போட்டாலோ கொட்டும் கரன்ஸி அருவி. நிரந்தரமாக லட்சக்கணக்கான இதயங்களிலும், நிம்மதி தேடும்போதெல்லாம் இமயத்திலும் வசிக்கிற வாழ்க்கை!
சம காலத்தில் இவர் போல் யாரும் சிகரங்களைத் தொட்டதுமில்லை. சர்ச்சைகளில் சிக்கி, இவரளவுக்கு எவரையும் விமர்சனங்கள் சுட்டதுமில்லை!
'சந்திரமுகி’யின் வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு, தன் நன்றியைச் சொல்ல அழைத்தார் ரஜினி. வீட்டிலேயே விருந்து படைத்தார். நள்ளிரவு தாண்டியும் நடந்தது கொண்டாட்டம். விடிந்தபோது, ரஜினி சென்னையில் இல்லை. தன் குருவின் பாதம் பணிந்து நன்றி சொல்ல பயணமாகிக்கொண்டு இருந்தார் இமயமலைக்கு!
டெல்லிக்கு விமானம். அங்கிருந்து ரிஷிகேஷ். பிறகு ராணிகேத். இடுப்பொடிக்கிற இரண்டு நாள் பயணம் காத்திருக்கிறது. ரஜினியுடன் வழித்துணையாக பாபாஜி தரிசனத்துக்குப் பயணமாகிற நண்பர் ஹரி உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார். ''ரஜினி என்ற நடிகருக்கு உங்களைப் போல நானும் ஒரு ரசிகன். ஆனால், ரஜினி என்கிற மனிதருக்கு நான் நண்பன். 'இருந்தும் இல்லாமல் இரு’ என்பார்களே.. அதற்கு எனக்குத் தெரிந்த ஒரே உதாரணம் ரஜினிதான்'' என்கிறவர் எதையோ நினைத்துக்கொண்டு சிரிக்கிறார்.
''ரஜினிக்கும் எனக்கும் இருக்கிற நட்பு தெரிந்த சிலர், 'ஏன் சார் ரஜினி அடிக்கடி இமயமலைக்குப் போறார்? சாமியார் ஆகிடுவாரா?” என்று என்னிடம் கேட்பார்கள்.
துறவு என்பதில் பலவிதங்கள் உண்டு. மகா பெரியவரும் துறவிதான். மதர் தெரஸாவும் துறவிதான். பெரியவர் தெய்வங்களைத் தொழுதார். மக்களுக்கு ஆசிர்வாதங்களை வழங்கினார். தெரஸா தெருவோர தொழுநோயாளிகளையே தெய்வங்களாகப் பார்த்தார். அவர்களுக்குச் சேவை செய்தார். அப்படி ரஜினியிடம் என்னைக் கவர்ந்தது அவரது பற்றற்ற மனசு!'' என்கிறார் ஹரி.
''ரஜினி நிறைய குட்டிக் கதைகள் சொல்வார் தெரியுமா'' என்று பயணத்தை சுவாரசியப்படுத்துகிறார் ஹரி.
இதோ ரஜினி சொல்லும் கதை!
''ஒரு தாய் ஒட்டகமும்  அதன் குட்டி ஒட்டகமும் பேசிக்கொண்டு இருந்தன. குட்டி மனசில் நிறைய கேள்விகள். 'நமக்கு ஏன் அம்மா இத்தனை நீளமான கால்கள்?’ என்றது குட்டி. 'அதுவா மகனே, பாலைவனத்தில் மிக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதுவும் மணல் பூமி. அதனால்தான் நமக்கு நீண்ட கால்கள் வழங்கினார் கடவுள்’ என்றாள் தாய்.
'நமக்கு ஏன் இத்தனை முரட்டு உதடுகள்? கற்கள் போல பற்கள்?’
'அதுவா மகனே, பாலைவனத்தில் கிடைப்பதெல்லாம் முள் தாவரங்கள்தானே. அவற்றை மெல்லுவதற்கு வசதியாகக் கடவுள் செய்த ஏற்பாடு!’
'நமக்குள் ஏன் இத்தனை பெரிய தண்ணீர்ப் பை?’
'அதுவா மகனே, பாலைவனத்தில் தண்ணீர் கிடையாதே. அதனால் பயணத்தில் தாகமெடுத்தால், நா வறண்டு நாம் தடுமாறக் கூடாது என்று கருணைகொண்டு கடவுள் தந்த பரிசு இது!’ என்று தாய் ஒட்டகம் பதில் சொன்னதும், 'அதெல்லாம் சரி, பிறகு ஏனம்மா நாம் இப்படி சர்க்கஸில் இருக்கிறோம்?’ எனக் கேட்டதாம் குட்டி ஒட்டகம்.”
இது ரஜினிக்கு மிகவும் பிடித்த தத்துவார்த்தமான குட்டிக் கதை. ''நாமெல்லாம் சர்க்கஸ் ஒட்டகங்கள்தானே!’ எனச் சிரிப்பார் ரஜினி'' என ஹரி சொல்லும்போதே சிரிக்கிறார்.
சாலையோர தேநீர்க் கடைக்குள் நுழைகிறார் ரஜினி.
யாரோ புது கஸ்டமர் என்பதுபோல எட்டிப் பார்க்கிற கடைப் பையன், ''ரஜினி சாப்!'' என அலறுகிறான் பரவசமாக!
சத்தம் கேட்டு ஏழெட்டு குட்டிப் பையன்கள் பக்கத்துக் காட்டுக்குள்ளிருந்து ஓடி வருகிறார்கள். டீக்கடை மாஸ்டர் அமிதாப்பின் ரசிகராம். 'அந்தா கானூன்’ பார்த்த பிறகு ரஜினிக்கும்.
மரத்தடியில் அமர்கிற ரஜினி, அந்த சின்னப் பையன்களிடம் பேச ஆரம்பிக்கிறார். காட்டு ரோஜாக்கள் போல சிவந்த நிறம். பூனைக் கண்கள். குளிர் அந்தப் பையன்களுக்கு கூடுதல் வசீகரத்தை வழங்கி இருக்கிறது. 'மித்வா சுன் மித்வா...’ என லகான் படப் பாடலை கீச்சிடும் குரலில் பாடிக் காட்டுகிறான் பையன். தேயிலை மணக்கும் பானம் கொஞ்சம் கதகதப்பு கூட்டுகிறது. உழைத்தால்தான் பிழைப்பு என வாழ்கிற அந்தப் பையன்கள், ரஜினிக்கு அவரது பெங்களூர் பால்ய காலத்தை நினைவுப்படுத்தி இருப்பார்கள் போல. தன்னை மறந்து ஏகாந்தமாக ரசிக்கிறவர், ''நல்லா பாடுறாப்லல்ல!'' என்கிறார் தன் புருவம் சொடுக்கிச் சிரித்து.
பயணம் தொடர்கிறது!
மிழ்நாடே கொண்டாடுகிற ஒரு நடிகர், அந்த ஒளிவட்டம் எதுவும் இல்லை. பாதுகாப்புக்கு யாரும் இல்லை. படை பரிவாரங்கள், உதவியாளர்கள் இல்லவே இல்லை. தன் பையைத் தானே சுமந்தபடி, பாத யாத்திரையாகச் செல்கிறார்.
கற்பிழக்காத காற்று. இரைச்சலே இல்லாத இயற்கை. ''நம்ம ஊர்ல  இருக்கிற வசதிகள் என்னென்னவோ இங்கே இல்லைதான். ஆனா இங்கே இருக்கிற அமைதி வேறெங்கேயும் இல்லை. அமைதியான சூழல், நம்ம மனசைத் திறக்கும். மனசு அமைதியா இருந்தா எண்ணம் தூய்மையாகும். எண்ணம் தூய்மையா இருந்தா, எல்லோரும் சுத்தமா இருப்போம்ல!''
மயமலைத் தொடரின் மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்றான நந்தாதேவியின் (25,661 அடிகள்) அடிவாரத்தில், அல்மோரா மாவட்டத்தில் இருக்கிறது ராணிகேத். அங்கிருந்து துரோண்மலை மீது ஏற வேண்டும். புலிகள் உலவும் அந்த மலை உச்சியில், காலங்கள் தாண்டிய கம்பீரத்துடன் காத்திருக்கிறது பாபாஜியின் கற்குகை!
'பாபாஜி’ என்றால் 'வணக்கத்துக்குரிய தந்தை’ என்று பொருள்.
மூன்றாவது முறையாக தன்னைத் தரிசிக்க, தன் தாள் பணிந்து நன்றி சொல்ல வருகிற சிஷ்யனுக்காக, இந்தமுறை சிலிர்ப்பூட்டும் அனுபவம் தரக் காத்திருக்கிறார் மகாமுனி பாபாஜி மகராஜ்!
த்தனை காலத்தில் ஆறேழு பேர் மட்டுமே நுழைய முயற்சித்த குகை அது. குத்திக் கிழிக்கும் கூரிய கற்கள் கொண்ட அபாயகரமான குழி அது. அதற்குள் ஒரு மனிதன் உடலைத் திணித்து நகர்ந்து நகர்ந்து செல்வதென்பது, உயிரைப் பணயம் வைக்கும் தருணம்.
விடுகதைதானோ இவர் வாழ்க்கை...
விடை தேடித்தானோ இந்தப் பயணம்!
(காந்தம் இழுக்கும்)

Sep 11, 2013

வாழ்க அண்ணா! வெல்க அவரது கொள்கை!


1935ல் நான் பெத்துநாயக்கன்பேட்டை காங்கிரஸ் கமிட்டிச் செயலாளராக இருந்தேன். இந்த நேரம் சென்னை வர இருந்த நேருவுக்கு வரவேற்புக் கொடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டேன். அப்போது நானும் அண்ணாவும் நல்ல நண்பர்கள். நான், செங்கல்வராயன், அண்ணா மூவரும் பெத்துநாயக்கன்பேட்டையில்தான் சந்திப்போம். நான் அண்ணாவுடன் பழகுவதைப் பல காங்கிரசு நண்பர்கள் கண்டிப்பார்கள்.அண்ணா பழகுவதற்கு இனிய நண்பர். அவர் நட்பை என்னால் இழக்க இயலாது. அதைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள் என்று கூறுவேன்.
ஒரு நாள் காலை அண்ணா அவர்கள் என் வீட்டிற்கு வந்து, என்ன உங்களைப் பார்க்கவே முடியவில்லை. நேருவுக்கு வரவேற்புக் கொடுக்கும் வேலையா? எங்கே வரவேற்பு? என்றார். பிராட்வே டாக்கீசில் வரவேற்பு என்றேன். கட்டணமா - இலவசமா என்றார்.
கட்டணம் என்றார்.
எனக்கு இலவசச் சீட்டு வேண்டுமே என்றார்.
எத்தனை வேண்டும் என்றேன்.
நாலைந்து என்றார். எனக்கு உள்ளூர ஓர் ஆசை. அண்ணா அவர்களே விரும்பி நேரு கூட்டம் கேட்க வருவதாகக் கூறுகிறாரே, ஒரு வேளை அவர் மனம் மாறி காங்கிரசுக்கு வரப்போகிறாரோ என்று எண்ணி நாலைந்து என்ன பத்து தருகிறேன் என்று கொடுத்தேன்.
மறுநாள் காலை ஒரு நன்பரை அனுப்பி இன்னும் பத்துப் பதினைந்து பாஸ் கேட்டிருந்தார். ஒரு கூட்டமாகவே வந்து காங்கிரசில் சேரப் போகிறார்கள் போலிருக்கிறது! என்ற மகிழ்ச்சியில் நான் இருபது பாஸ் கொடுத்தனுப்பினேன்.
பிராட்வே டாக்கீசில் நேரு பேசியபோது அண்ணா முன் வரிசையில் அமர்ந்திருந்தார். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் கூட்டம் முடியும் நேரத்தில் அண்ணா அவர்கள் அச்சடித்த கேள்வித்தாள் ஒன்றை நேருவிடம் கொடுக்க முயன்றபோது மேடையிலிருந்த சத்தியமூர்த்தி அதைப் பிரித்துப் படித்துவிட்டு இதற்கெல்லாம் நேரு பதில் சொல்லமாட்டார் என்று கூறினார்.
உடனே நேரு சத்தியமூர்த்தியின் கையிலிருந்த கேள்வித்தாளை வாங்கிப் படித்துவிட்டு இதற்கு நான் பதில் சொல்ல மாட்டேன் என்ற சத்தியமூர்த்தி சொன்னது தவறு. ஆரம்பத்தில் தந்திருந்தால் நிச்சயம் பதில் சொல்வியிருப்பேன். இப்போது நேரமாகிவிட்டதால் இக்கேள்விகளுக்கு இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் பதில் சொல்கிறேன் என்றார்.
கூட்டம் முடிந்ததும் அவர், அண்ணா கேள்விகள் எப்படியிருக்கும் என்று பேசிக்கொண்டே சென்றதால் நேருவின் கூட்டச் சிறப்பு கெட்டுவிட்டதாகக் காங்கிரசுத் தோழர்கள் ஆத்திரமடைந்தார்கள்.
எல்லோர்க்கும் என்மீது கோபம். எப்படி அண்ணாதுரைக்கு அத்தனை இலவசச் சீட்டு கொடுக்கலாம். அவரை ஏன் அழைத்தாய்? என்று கண்டித்தார்கள். நான், அவர் காங்கிரசில் சேர வரப்போகிறாரோ என்ற மகிழ்ச்சியில்தான் அண்ணாவை அழைத்தேன். இப்படி நடக்குமென்று உண்மையிலேயே எனக்குத் தெரியாது என்று அவர்களைச் சமாதானப்படுத்தினேன்.
மாலையிவ் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நேரு அண்ணாவின் கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறிவிட்டு, இந்த கேள்விகள் எப்படி இருந்தாலும் கேள்விகள் கேட்டவரின் சிந்தனையை - அறிவை - ஆற்றலை நான் பாராட்டுகிறேன் என்றார். இது காங்கிரசுத் தோழர்களுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்திவிட்டது. இவ்வளவுக்கும் நீர்தாம் காரணம் என்று அன்று இரவு முழுவதும் என்னைத் தூங்கவிடாமல் ஒருவர் ஒருவராக வந்து கடிந்துகொண்டார்கள்.
மறுநாள் அண்ணாவை சந்தித்து, என்ன அண்ணா இப்படிச் செய்துவிட்டீர்களே என்று கேட்டதற்கு இதுதானா - இன்னும் என்னென்ன செய்யப்போகிறேன் பார்! என்று சிரித்துக்கொண்டே பதில் கூறினார்கள்.

திரு. என்.வி.நடராசன்

Sep 7, 2013

சிறு வயதிலேயே குழந்தைகளுக்கும் சேமிப்பு குறித்து சொல்லித் தருவது வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது

குழந்தைகளிடம் பணத்தைக் கொடுப்பது, இருமுனை கொண்ட கத்தி போன்றது என்பது சிலரது கருத்து.ஆனால், கத்தியை சரியான காரணங்களுக்கு பயன்படுத்த பழக்கிவிட்டால் நல்லதே!மறுபுறம், பணம் குறித்த புரிதல் இல்லாத நிலை, இன்னும் ஆபத்தானது என்பதும் கவனிக்கத்தக்கது.இன்று, நாட்டுக்கு மட்டுமின்றி, அதிகரித்துவிட்ட பண வீக்கத்தால், வீட்டுக்கும் பொருளாதாரச் சவால்கள் அதிகரித்துள்ள நிலையில், சேமிப்பின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.இதனால், சிறு வயதிலேயேகுழந்தைகளுக்கும் சேமிப்பு குறித்து சொல்லித் தருவது வீட்டுக்கு, நாட்டுக்கு என இரண்டுக்கும் நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.சுயமாக பலவற்றைக் கற்றுக்கொள்ளும் திறன்கொண்ட இன்றைய குழந்தைகள், சேமிப்பு குறித்து கற்றுக்கொள்வது ஒன்றும் இயலாத காரியமில்லை என்பதும் அவர்களது கருத்து.குழந்தைகள் வீட்டில் பெரியவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பொறுத்து செயல்படுகிறது என்பது மனோதத்துவ நிபுணர் அபிலாக்ஷாவின் கருத்தாகும்.நிதி நிலவரத்தைப் பொறுத்தவரை, ஒரு குடும்பத்தின் உண்மையான நிலையை, குழந்தைகளுக்குப் புரிய வைப்பது அவசியமும் கூட, என்பது மனோதத்துவ நிபுணர்களின் கருத்து.குடும்பத்தின் நிதிநிலவரம் குறித்து குழந்தைகளிடம் பெரியவர்கள் பேசுவதில்லை. அது ஆபத்தானது.தந்தைக்கு மிகப்பெரிய கடன் இருக்கலாம். அதை குழந்தையிடம் கூறுவதில்லை. எதுவானாலும் குழந்தையிடம் திறந்தமனதுடன் பேசுவதே நல்லதாகும் என அபிலாக்ஷா தெரிவிக்கிறார்.குடும்பத்தின் உண்மையான நிதிச்சுழல் தெரிவதால், ஆரம்ப நாட்களிலேயே குழந்தைகளிடம் சில ஆரோக்கியமான பண்புகள் உருவாகும் வாய்ப்புள்ளதாம்.அதற்கு, பெற்றோர் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
          
                 குழந்தைகள் செலவுசெய்யும் பணத்தை அதுவாகவே கணக்குவைத்துக் கொள்ளும் என்பதும் அபிலாக்ஷாவின் கருத்தாகும்.இந்த கருத்தை நிதி நிபுணர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.சித்திரமும் கைப் பழக்கம் என்பது போல, பணத்தைக் கையாள்வதும் கூட பழக்கத்தின் அடிப்படையில்தான் என சொல்லும் இவர்கள், குழந்தைகளின் செலவுக்கு ஓரளவு பணம் தருவதில் தவறில்லை என்கிறார்கள்.குழந்தைக்கு பணம் தருவதில் தவறில்லை. அது செலவு செய்வதற்குகூட நாம் உதவிபுரியலாம் என நிதி ஆலோசகர் பார்வதி தெரிவிக்கிறார்.ஆனால், இவ்வாறு தரப்படும் பணம், ஒரு வரம்புக்குள் இருக்க வேண்டியது அவசியம்.இல்லாவிட்டால், அதுவே பாதகமாக முடியவும் வாய்ப்புண்டு.சில பணக்கார குழந்தைகளுக்கு பணம் நிறைய தந்துவிட்டு பெற்றோர் அதை கண்காணிப்பதே இல்லை. அவ்வாறு இல்லாமல் அக்குழந்தைகள் செய்யும் செலவை கண்காணிப்பது அவசியம் என மனோதத்துவ நிபுணர் அபிலாக்ஷா தெரிவித்துள்ளார்.கண்காணிப்பது ஒருபுறம் இருக்க, குழந்தைகள் எதை எப்படி அணுக வேண்டும் என சொல்லித்தர வேண்டிய அவசியமும், பெற்றோரிடம்தான் உள்ளது.ஆனால், அதை மறைமுகமாக, அதாவது சர்க்கரை தடவிய மாத்திரைகளைப் போல அளிப்பதே புத்திசாலித்தனமாகும்.குழந்தைகளுக்கு விளையாட்டுகள் மூலமாக சேமிப்பு குறித்து விளக்கலாம் நிதி ஆலோசகர் பார்வதி தெரிவித்துள்ளார்.இப்படியெல்லாம் பயிற்றுவிக்கப்படும் குழந்தைகள், எதிர்காலத்தில் சந்திக்கும் திடீர் நிதி நெருக்கடிகளை திறமையாக சமாளிக்கும் திறன் பெற்றவர்களாகவும், அதில் இருந்து மீளும் தன்னம்பிக்கை பெற்றவர்களாகவும் இருப்பார்கள் என்பது பலரது கருத்து.அத்தகைய குழந்தைகள், இந்தியாவைப் பொருளாதார வல்லரசாக மாற்றுவார்கள் என்று சொன்னால், நம்ப முடிகிறதில்லையா?

Sep 2, 2013

உலக அரங்கில் இந்தியா தலைகுனிந்துள்ளது. சோமாலியா நாட்டின் நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதுநாஞ்சில் சம்பத்,


வேலூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூரில் நடந்தது.
கூட்டத்தில் கட்சியின் கொள்ளை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசியபோது,  ’’தமிழகத்தில் எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு கட்சியை தொடங்கி 1977-ல் ஆட்சியை பிடித்தார். தொடர்ந்து அவர் 3 தடவை முதலமைச்சராக பதவி வகித்தார். இதுவரை எந்த தலைவராலும் இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.
எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு 89-ம் ஆண்டு அ.தி.மு.க. இரண்டாக பிளவு பட்டு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் கருணாநிதி ஆட்சியை பிடித்தார். அதன் பின்னர் அ.தி.மு.க. ஒன்றாகி இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்ட பின்னர் 1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார்.
2011-ம் ஆண்டு 3–வது முறையாக முதலமைச்சராக பதவியேற்று பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.
மத்திய அரசின் தவறான கொள்கைகளால் இந்தியாவில் தற்போது பொருளாதார நெருக்கடி உருவாகி உள்ளது. பலவிதமான அச்சுறுத்தல்கள் வருகின்றன. இப்போது லடாக் வரை சீனா ஊடுருவிவிட்டது. 5 ராணுவவீரர்களை பாகிஸ்தான் சுட்டுக் கொன்றுவிட்டனர். வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் 1 ரூபாயின் மதிப்பு ஒரு டாலராக இருந்தது. ஆனால் இப்போது 67 ரூபாய் கொடுத்தால்தான் 1 டாலர் கிடைக்கும்.
இதனால் உலக அரங்கில் இந்தியா தலைகுனிந்துள்ளது. சோமாலியா நாட்டின் நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறை, குற்றம் ஏதாவது சொல்ல முடியுமா? எல்லா பிரச்சினைக்கும் தீர்வு கண்டுள்ளோம். மத்திய அரசு 28 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியும் தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப் படவில்லை.  வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமராக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.

Aug 29, 2013

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?


 எஸ்.குருமூர்த்தி
1. பற்றாக்குறை அதிகரிப்பும் ரூபாயின் வீழ்ச்சியும்!
இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைவதை 18 மாதங்களாக மெளன சாமியாராகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்துவதற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைக்கப் போவதாக ஆகஸ்ட் 12-ம் தேதி அறிவிக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். 2012 ஜனவரியில் ரூ.45 கொடுத்து ஒரு டாலரை இந்தியர்களால் வாங்க முடிந்தது. ஆனால், ஆகஸ்ட் 12-ல் ஒரு டாலர் வாங்க ரூ.61 கொடுக்க வேண்டியிருந்தது. 2012 ஜனவரியில் இருந்து தற்போது வரை டாலரின் மதிப்பு 35 சதவீதம் உயர்ந்தது. அது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் பிரதிபலித்தது.
2004-2005 முதல் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வந்ததன் நேரடி விளைவு இது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும் சில "நடவடிக்கைகளை' ப.சிதம்பரம் ஆகஸ்ட் 12-ல் அறிவித்தார்.
ஆனால், அவர் அறிவித்த 36 மணி நேரத்துக்குள்ளாக ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ந்தது. டாலருக்கு ரூ.61.50 கொடுக்க வேண்டியிருந்தது. இந்தியாவிலிருந்து டாலர் வெளியேறுவதைத் தடுக்க வெளிநாடுகளில் முதலீடு செய்வதையும், பணம் செலுத்துவதையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு இந்திய ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையும் கைகொடுக்கவில்லை.
ரூபாய் மதிப்பு வீழ்ந்து வந்த நிலையில், உண்மையிலேயே ரூபாயின் மதிப்பு - அதாவது அதன் வாங்கும் சக்தி- டாலருக்கு வெறும் ரூ.19.75தான் என்று "தி எகனாமிஸ்ட்' (2.1.2013) குறிப்பிட்டது. அதாவது ரூபாயின் இன்றைய சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் அதன் நிஜமான மதிப்பு!
சர்வதேச சந்தையில் தகுதிக்கும் மிகக் குறைவாக மதிப்பிடப்படும் கரன்சி இந்திய ரூபாய்தான் என்றும் "தி எகனாமிஸ்ட்' குறிப்பிட்டது. உண்மையிலேயே அதிக மதிப்புடைய, ஆனால் குறைத்து மதிப்பிடப்பட்ட ரூபாயின் மதிப்பு ஏன் குறைந்து வருகிறது? இதற்கு யார் பொறுப்பு?
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004-இல் பதவி ஏற்றபோது, இந்தியப் பொருளாதாரம் வலுவாகவும், வளர்ச்சிப் பாதையிலும் இருந்தது. நிதியமைச்சராகப் பொறுப்பேற்றபோது, வலுவான பொருளாதார நிலையையே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விட்டுச் சென்றது என்று ப.சிதம்பரமே ஒப்புக் கொண்டுள்ளார்.
2004 ஜூலையில் அவரது பட்ஜெட் உரையில், "இந்தியாவின் பொருளாதார அடிப்படை வலுவாகவே காணப்படுகிறது. ஏற்றுமதியைவிட இறக்குமதி கூடுதலாக இருந்தால் ஏற்படும் பற்றாக்குறை நிலையும் இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த நிலை மாறி, 1991-ம் ஆண்டில் காணப்பட்ட இருண்ட பொருளாதார நிலை ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணம்?
2004-ல் முந்தைய ஆட்சி விட்டுச் சென்ற வளமான பொருளாதாரத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எப்படி சீரழித்தது?
நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் பாய்ச்சல்
2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றதில் இருந்து பொருளாதாரம் மோசமானது எப்படி, 2009-ல் மீண்டும் அதே அரசு ஆட்சிக்கு வந்ததும் பொருளாதாரம் எப்படி சீரழிந்தது என்பதை சில புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே புரியும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் அண்மைக்கால வரலாற்றைப் பார்ப்போம்.
1991-2001 காலகட்டத்தில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 35 பில்லியன் (ஒரு பில்லியன் - 100 கோடி) டாலராக இருந்தது. அதாவது 3,500 கோடி டாலர். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறை உபரியாக மாறியது. உபரி -ஆம், உபரிதான்- அதுவும். 22 பில்லியன் டாலராக இருந்தது. 1978-க்குப் பிறகு நடப்புக் கணக்கு உபரி என்பது அதுவே முதல்முறை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது உபரியாக இருந்த நடப்புக் கணக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு ஆட்சியில், ப.சிதம்பரம் (ஐந்தரை ஆண்டுகள்), பிரணாப் முகர்ஜியின் (மூன்றரை ஆண்டுகள்) தலைமையில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு 339 பில்லியன் டாலராக அதிகரித்தது. அவர்களது பொருளாதாரத் தலைமையின் கீழ் உபரி எவ்வாறு, ஏன் பற்றாக்குறையாக ஆனது?
2003-2004 இல் 13.5 பில்லியன் டாலரை நடப்புக் கணக்கு உபரியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒப்படைத்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2004-05இல் 2.7 பில்லியன் டாலராகவும், 2-வது மற்றும் 3-வது ஆண்டுகளில் மூன்று மடங்காக அதாவது 10 பில்லியன் டாலராகவும் உயர்ந்தது. பின்னர், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 16 பில்லியன் டாலராகவும் (4-வது ஆண்டு), 28 பில்லியன் டாலராகவும் (5-வது ஆண்டு), 38 பில்லியன் டாலராகவும் (6-வது ஆண்டு), 48 பில்லியன் டாலராகவும் (7-வது ஆண்டு), 78 பில்லியன் டாலராகவும் (8-வது ஆண்டு), 89 பில்லியன் டாலராகவும் (9-வது ஆண்டு) அதிகரித்தது.
கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றை அதிகமாக இறக்குமதி செய்வதே நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணம் என அரசு திரும்பத் திரும்பக் கூறியது. இப்போதும் கூறி வருகிறது. இதுதான் காரணமா, இதுதான் முழு உண்மையா என்றால் நிச்சயமாக இல்லை.
உற்பத்தியை அழித்த இறக்குமதி
இறக்குமதி புள்ளிவிவரங்களை ஆய்வு செய்வதால் அதிர்ச்சிகரமான உண்மைகள் புலப்படுகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மூலதனப் பொருள்களின் இறக்குமதி விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. பொதுவாகச் சொல்வதென்றால் இது யாராலும் கவனிக்கப்படாததாகி (அல்லது மறைக்கப்பட்டதாகி) விட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது மூலதனப் பொருள்களின் இறக்குமதி சராசரியாக ஆண்டுக்கு 10 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே (2004-05) மூலதனப் பொருள்களின் இறக்குமதி 25.5 பில்லியன் டாலராக ஆனது. அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் மூலதனப் பொருள்களின் இறக்குமதி அதிகரித்தது.
2-வது ஆண்டில் 38 பில்லியன் டாலராகவும், 3-வது ஆண்டில் 47 பில்லியன் டாலராகவும், 4-வது ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும், 5-வது ஆண்டில் 72 பில்லியன் டாலராகவும், 6-வது ஆண்டில் 66 பில்லியன் டாலராகவும், 7-வது ஆண்டில் 79 பில்லியன் டாலராகவும், 8-வது ஆண்டில் 99 பில்லியன் டாலராகவும், 9-வது ஆண்டில் 91.5 பில்லியன் டாலராகவும் அதிகரித்தது. 9 ஆண்டுகளில் மொத்தம் 587 பில்லியன் டாலருக்கு மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மூலதனப் பொருள்களின் இறக்குமதி "செயல்படும்' பொருளாதாரத்துக்கான அறிகுறி. தத்துவரீதியாக, அது தேசிய உற்பத்தியை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், என்ன ஆனது என்பதைப் பார்ப்போம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் தொழில் துறை உற்பத்திக் குறியீடு ஆண்டுதோறும் சராசரியாக 11.5 சதவீதமாக இருந்தது. ஆனால், இது படிப்படியாகக் குறைந்து அடுத்த 5 ஆண்டுகளில் 5 சதவீதத்துக்கும் கீழே போனது. கடைசியாக 2012-13 இல் 2.9 சதவீதமாக ஆனது. 4 ஆண்டுகளில் மூலதனப் பொருள் இறக்குமதி அதிகரிப்பதற்கேற்ப தொழில் துறை உற்பத்தி அதிகரிக்காமல் 11.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக 56 சதவீத சரிவைக் கண்டது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 9 ஆண்டுகளில் 587 பில்லியன் டாலருக்கு மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடைசி 5 ஆண்டுகளில் 407 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இது மொத்தத்தில் 79 சதவீதமாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் சராசரியாக 45 பில்லியன் டாலருக்கும், பிந்தைய 5 ஆண்டுகளில் 80 பில்லியன் டாலருக்கும் மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
79 சதவீதம் அதிகரிப்பு
மூலதனப் பொருள் இறக்குமதி 79 சதவீதம் அதிகரித்தபோதும், தேசிய உற்பத்தி 56 சதவீதம் வீழ்ச்சியடைந்தது மட்டுமல்ல அதிர்ச்சி. தொடர்ந்து உற்பத்தி குறைவதையும், இறக்குமதி அதிகரிப்பதையும் பிரதமரும், நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கியும், பொருளாதார ஆலோசகர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதுதான் அதிர்ச்சி.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (கரண்ட் அக்கௌண்ட் டெபிசிட்) என்றால் என்ன?
நாம் அன்னியச் செலாவணி கொடுத்து இறக்குமதி செய்யும் மொத்தத் தொகைக்கும், ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணிக்கும் உள்ள இடைவெளிதான் நடப்புக் கணக்கு உபரி அல்லது பற்றாக்குறை. ஏற்றுமதி அதிகமாக இருந்தால் உபரியும், இறக்குமதி அதிகமாக இருந்தால் பற்றாக்குறையும் ஏற்படும். அளவுக்கு மீறிய பற்றாக்குறை ஏற்படும்போது அது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்.
மூலதனப் பொருள்களின் இறக்குமதி என்றால் என்ன?
ஒரு தயாரிப்பாளர் ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்காக மூலப்பொருளை இறக்குமதி செய்வதுதான் மூலதனப் பொருள் இறக்குமதி.
அப்படி மூலப்பொருளை இறக்குமதி செய்து புதிய பொருள்களைத் தயாரித்து அதிக விலைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இறக்குமதியால் ஏற்படும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை ஈடுகட்ட முடியும்.

Aug 25, 2013

நிஜமான சம்பவங்கள் சில... உள்ளங்கையில் உலகம் வேண்டாமே!-டி.அருள் எழிலன், 
நிஜமான சம்பவங்கள் சில... 
செங்கல்பட்டு அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், ஒரு மாணவன் வகுப்பறையில் பயன்படுத்திய செல்போனை வாங்கி ஆசிரியர் பரிசோதித்தார். அதில் முழுக்கவே ஆபாச வீடியோக்கள். அதைவிட அதிர்ச்சி, பள்ளியின் ஆசிரியை ஒருவரை மிகவும் ஆபாசமான கோணங்களில் அந்த மாணவன் வீடியோ எடுத்திருந்தான். எச்சரிக்கப்பட்டு, பிரச்னை முடிக்கப்பட்டது. விஷயம் தெரிந்ததும் அந்த ஆசிரியை, 'இந்த வேலையே வேண்டாம்’ என்று விலகிச் சென்றுவிட்டார். கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியை தேர்வுத்தாளை திருத்திக்கொண்டிருந்தார். வினாத்தாளில் கேள்வி ஒன்றுக்கு, பாலியல் தொடர்பான தன் இச்சைகளை ஆசிரியையுடன் சம்பந்தப்படுத்தி ஒன்றரைப் பக்கத்துக்குப் பதிலாக எழுதியிருந்தான் ஒரு மாணவன்.
 உயர் வர்க்கக் குழந்தைகள் படிக்கும் நாமக்கல் பள்ளி அது. சில மாணவர்கள்  கழிப்பறையில் ஆபாச அடைமொழிகளால் பள்ளியில் பணிபுரியும் பலரையும் மாணவிகளின் பெயரையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். விசாரணையில் அந்த மாணவர்களைக் கண்டுபிடித்து பள்ளி நிர்வாகம் மாணவர்களை டிஸ்மிஸ் செய்தது. தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட அந்த மாணவர்கள், இப்போது மனநல ஆலோசனையில் இருக்கிறார்கள்.
பள்ளிக்கூட வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் ஒவ்வொரு நாளையும் பதற்றத்துடன் கழிக்கிறார்கள். '15 வயதில் ஆபாசப் படம், 16 வயதில் காதல், 17 வயதில் வீட்டைவிட்டு ஓடுவது’ எனச் சீரழிகிறது சிறுவர்களின் வாழ்வு. 'தங்கள் பிள்ளைகள் நல்லவர்கள்’ எனப் பெற்றோர்களின் உள்மனது அவர்களுக்கு ஆறுதல் சொன்னாலும், இன்னொரு புறம் சமூக யதார்த்தம் அவர்களைப் பதற்றத்திலேயே வைத்திருக்கிறது.  
மாணவர்கள் மட்டும்தான் இப்படி என்று எண்ண வேண்டாம். இந்தப் படுகுழி சீரழிவில் மாணவிகளும் சிக்கியுள்ளனர்.
''சென்னையில் உள்ள மேல்தர வர்க்கக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடம் அது. வகுப்பு நடைபெறும்போது மாணவி ஒருத்தி வகுப்பறையில் மொபைலில் அடல்ட்ஸ் ஒன்லி வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதைக் கண்டுபிடித்த ஆசிரியை, 'உன் பெற்றோரை அழைத்துச் சொல்லட்டுமா?’ என்று கேட்க, 'நீங்க ஏன் இந்தக் கேள்வி எல்லாம் கேக்கிறீங்க? என்  அப்பா அம்மாகிட்ட என்ன சொல்லப்போறீங்க? நான் நல்லாப் படிக்கிறேனா, ஒழுங்கா மார்க் வாங்குறேனா.... அதை மட்டும் பாருங்க’ என்று  அலட்சியமாய் பதில் சொல்லியிருக்கிறாள். மதிப்பெண்களைத் தாண்டிய வாழ்க்கை மதிப்பீடுகளைக் கற்றுத் தராத பெற்றோர்களும் பள்ளிக்கூடங்களும்தான் இப்படியான நடத்தைகளுக்கு முழுப் பொறுப்பு'' என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.
ஒரு மிஸ்டுகாலில் தொடங்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையிலான உரையாடல், 'உங்க குரல் ரொம்ப அழகா இருக்கு’ என்று இழுத்து, ஆறே மாதத்தில் வீட்டைவிட்டு ஓடி வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளும் அளவுக்குச் செல்கிறது.  சிறுவர்களோ, ஆபாசப் படங்களில் பார்க்கும் பெண்களைத் தேடிச் செல்வது, அதற்காகப் பணம் செலவழிப்பது, பணம் இல்லாதபோது பழகிய வீடுகளிலேயே திருடுவது, அதுவே சில நேரங்களில் கொலை வரை செல்வது என்று விபரீதமாகிவிடும். இத்தகைய சம்பவங்கள் பெரும்பாலானவற்றின் காரணங்களை ஆராயும்போது, சமூக வலைத்தளங்களும், செல்போன்களும்தான் முக்கியக் காரணமாக இருக்கின்றன. சமீபத்தில் மும்பையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று இதை உறுதிசெய்கிறது.
மும்பையைச் சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், நாடு முழுக்க பள்ளிச் சிறுவர்களிடம் நடத்திய ஆய்வில், 14 முதல் 18 வயது வரையிலான இளம் சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபட சமூக வலைத்தளங்களும், இணையம், செல்போன்களே முக்கியக் காரணம் என்று தெரியவந்துள்ளது. ஆய்வில் கலந்துகொண்டதில் 96 சதவிகித மாணவர்கள், போலிப் பெயர்களில் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்துள்ளனர். மிகவும் இறுகிய மனதுடன் சிதைந்த கூட்டுக்குள் வாழும் இளையோர், தங்களின் மனக்குறைகளை முகமே தெரியாத யாரோ ஒருவரிடம் முகநூலில் கொட்டித் தீர்க்கிறார்கள். விளைவு, இளவயது காதல், டேட்டிங், ஆடம்பரச் செலவுகளுக்காக கொலை, கொள்ளை என்று அவர்களின் வாழ்க்கை திசை மாறுகிறது. நவீன அறிவியல் புரட்சியின் சின்னங்களான இணையமும், செல்போனும் நம் பிள்ளைகளின் மனங்களை சிதைத்து வீசுகின்றன.
''நம் கற்பனைக்கு எட்டாத வகையில் தொழில்நுட்பம் உள்ளங்கைக்குள் மிக மலிவான விலையில் கிடைக்கிறது. அதன் பெரிய பக்கங்களில் அறிவுச் செல்வங்களும், அறிவியல் வியப்புகளும் கொட்டிக்கிடக்க... இன்னொரு பக்கத்தில் ஆபாச வக்கிரங்களும், அதை வடிகாலாக பயன்படுத்திக்கொள்ளும் வசதிகளும் இருக்கின்றன. இந்தத் தொழில்நுட்பங்கள் எப்படி தங்களின் குழந்தைகளைப் பாதிக்கின்றன என்பதுகூட பெரும்பாலான பெற்றோர்களுக்குப் புரிவதில்லை. அவசியத் தேவைக்கு ஒரு தொலைபேசி என்பதற்கு அப்பால், அதிநவீனத் தொலைபேசியை பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பதில் ஒளிந்திருப்பது குடும்ப கௌரவம். ஆனால், அந்த அதிநவீனத் தொலைபேசி எப்படி குடும்ப கௌரவத்தைக் காவு வாங்குகிறது என்பதைக்கூட இந்தப் பெற்றோர்கள் அறியாமல் இருப்பதுதான் அதிர்ச்சி. ஒருகாலத்தில் நடுத்தர வயதில் இருப்பவர்கள் செய்த ஆபாச சேட்டைகளை, இப்போது 12, 13 வயது சிறுவர்களே செய்கிறார்கள். மகனைப் போல், பேரனைப் போல இருக்கும் சிறுவன்கூட, தவறான எண்ணத்தோடு ஒரு பெண் மீது சாய்கிறான்!'' என்று ஆதங்கம் தெரிவிக்கிறார் அருள்மொழி.  
13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பார்க்கவோ, பயன்படுத்தவோ அனுமதி இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில் கூறியிருந்தது. விபரீத செய்கைகளுக்கு வழிவகுக்கும் சமூக இணையதளங்கள் உள்ளிட்ட 13 இணையதளங்களைத் தடைசெய்ய அமெரிக்காவிடம் இந்தியா ஒத்துழைப்பும் கோரியிருந்தது. ஆனால், 'கருத்துரிமையில் தலையிட முடியாது’ என்று அமெரிக்க உள்துறை இதை நிராகரித்துவிட்டது. இந்த நிலையில், உள்ளூர் காவல் துறையால் இத்தகைய குற்றங்களைக் கண்காணிக்க முடியுமே தவிர, கட்டுப்படுத்த முடியாது என்பதே சமூக யதார்த்தம்.
12, 13 வயதினை உள்ளடக்கிய வளரிளம் பருவத்தில் குழந்தைகள் நுழையும்போது அவர்களின் மனம் புதிய விஷயங்களைத் தேடுகிறது. அவர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பது பெற்றோர்களுக்குத் தெரிவதே இல்லை. 'தன் பிள்ளை தப்பு செய்யாது’ என்று ஒவ்வொரு பெற்றோரும் தீர்மானமாக நம்புகின்றனர். யார் பிள்ளையாக இருந்தாலும் நடைமுறை உலகத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பதே உண்மை. அவர்கள், தாங்கள் சிறுவர்களாக இருந்த அந்தக் காலத்து பழங்கதைகளை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உள்ளங்கையில் அடங்கும் செல்போனில் உலகத்தின் அத்தனை வன்மங்களையும் பாதுகாத்துக்கொள்வதும், கண்டுபிடிக்கும் சூழல் எழும் சமயம், அவற்றை ஆதாரமே இல்லாமல் அழித்துவிடுவதும் இப்போது வெகு சுலபம். பெற்றோர்களுக்கு இந்தத் தொழில்நுட்பங்கள் புரிவது இல்லை. தங்கள் பிள்ளைகள் ஸ்மார்ட்போனில் சகல அப்ளிகேஷன்களையும் பயன்படுத்துவது குறித்து அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். மாறாக, அந்தப் பிள்ளைகள் உள்ளே வேறு ஒரு வினோத வக்கிர பயங்கர  உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிதர்சனத்தைப் பெற்றோர் உணர்வதும் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் இப்போதைய அதிஅவசியப் பக்குவத் தேவை!  

சமூகத்தில் என்ன மாற்றம் தேவை?
ஜெயந்தினி, உளவியல் மருத்துவர்
 ஆண், பெண் குழந்தைகள் இணைந்து படிக்கும் பள்ளிக்கூடங்கள் இப்போது அருகி விட்டன. 2 வரை ஆண்கள் தனியாக பெண்கள் தனித்தனியாகப் படித்துவிட்டு, கல்லூரி செல்லும்போது திடீரென இருபாலரும் இணைந்து படிக்கும்போது அதிகக் கிளர்ச்சியடைகிறார்கள். எதிர்பாலினக் கவர்ச்சியைக் குறைத்து இயல்பான ஆண், பெண் நட்பை வளர்த்தெடுக்கும் விதத்தில் இருபாலர் பள்ளிகள் துவங்கப்பட வேண்டும்,
 18 வயதுக்குக் கீழானவர்கள் இணையத்தைப் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். உலகின் பல நாடுகளில் இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதை அரசே செய்ய வேண்டும். செய்யாதபட்சத்தில் அரசியல் கட்சிகளும் சமூக இயக்கங்களும் இதற்காகப் போராட வேண்டும்.
 மனிதர்கள் யாராக இருந்தாலும் ஒழுக்கம் தேவை. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஒழுக்கமின்மையை அனுமதிக்க முடியாது. சமூகச் சூழலை கருத்தில்கொண்டு, இத்தகைய வேலி நம் பிள்ளைகளுக்கு அவசியமாகிறது. அதை நெருக்கியும் போடவேண்டியதில்லை. மிகவும் விலக்கியும் போட வேண்டியதில்லை. பெற்றோர்களாகிய உங்களிடம் இருந்து அன்பு கிடைக்கவில்லை என்றால், கிடைக்கும் இடம் தேடி அவர்கள் சென்று விடுவார்கள்!

பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
ம்மால் கைவிட முடியாத எதையும் நம் குழந்தைகள் கைவிட மாட்டார்கள். நாம் கையில் ஒன்றும், பையில் ஒன்றுமாக இரண்டு செல்போன்கள் வைத்துக்கொண்டு பிள்ளைகளைப் 'பயன்படுத்த வேண்டாம்’ என்று சொன்னால் அதை அவர்கள் ஏற்கமாட்டார்கள். ஆகவே, தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவதைக் காட்டிலும் அதன் ஆபத்தான பக்க விளைவுகளை முதலில் பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதைச் சரியான முறையில், பொருத்தமான சந்தர்ப்பத்தில் குழந்தைகளுக்கும் புரியவைக்க வேண்டும்.
அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் பள்ளிக்கூடம் படிக்கும் மகனுக்கோ, மகளுக்கோ செல்போன் என்பது அவசியமாகிறது. அதுவே, யாரோ ஒருவர் வேலைக்குச் சென்று, ஒருவர் வீட்டில் இருக்கிறார் என்றால் பிள்ளைகளுக்கு ப்ளஸ் 2 முடிக்கும் வரை செல்போன் அவசியம் இல்லை. எப்படி இருந்தாலும் பள்ளிச் சிறுவர்களுக்கு செல்போன் வாங்கித் தரும்போது, அது அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட மாடல் செல்போனாக இருப்பது அவசியம். அவர்களுக்கு அது போதுமானதும் கூட. 'ஏழை வீட்டுப் பையன் வெச்சிருக்குற அதே சாதாரண செல்போனை, என் பையனும் வெச்சிருக்குறதா?’ என இதில் கௌரவம் பார்த்து, ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுப்பதும், பின்னர் நிகழும் விளைவுகளுக்கு பெரும்பாலும் காரணமாகும்!
 இன்று சமூக வலைத்தளங்களே கதி என கிடப்பதும், விட்டில்பூச்சிகளாக அதன் கவர்ச்சியில் சிக்கி சீரழிவதும் பெரும்பகுதி கல்லூரி மாணவர்களே. நண்பர்களுடனான புகைப்படங்களை பகிர்வதில் துவங்கி, குடும்பம் பற்றிய தகவல்களை பொதுவெளியில் கொட்டுவது வரை அது எல்லையற்றுப் போகிறது. ஆகவே, கல்லூரி வயதில் உள்ளப் பிள்ளைகளின் பெற்றோர் எது அந்தரங்கம், எது பொதுவானது என்பதை பிள்ளைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.றீ வீதியில் இறங்கி உடல் தசைகள் புத்துணர்வு பெற ஓடியாடுவதுதான் விளையாட்டு. வீடியோ கேம்ஸ் என்பது விளையாட்டு அல்ல, அது நோய். தங்கள் பிள்ளைகள் சிறப்பாக வீடியோ கேம்ஸ் ஆடுவதாக மகிழ்ச்சி அடைவதை நிறுத்திக்கொண்டு, அவர்களுக்கு நடைமுறை விளையாட்டுகளை பழக்கப்படுத்த வேண்டும். பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்க ஊக்குவிக்க வேண்டும்!
 எந்நேரமும் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கும் குழந்தைகளின் கற்பனைத் திறனும், மூளையின் செயல்பாடும் முழு வளர்ச்சியடைவதில்லை. கையால் எழுதுவதும், ஓவியங்கள் வரைவதும் மூளை நரம்புகளை உற்சாகப்படுத்தும்.
 பெண் குழந்தை வயதுக்கு வருவதை பெரிய விழாவாகக் கொண்டாடி, 'நீ பெரியவள் ஆயிட்டே. இனி வெளியில் போகாதே’ என முடக்கிப் போடாமல், அது பருவ வயதின் இயற்கையான மாற்றம் என்பதை உணர்ந்து அதை இயல்பாக எதிர்கொள்ளும் மன தைரியத்தை உருவாக்குங்கள்!
 குழந்தைகளின் முதல் ரோல்மாடல் அப்பா, அம்மாதான். ஆகவே, அவர்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நல்ல பல பழக்கங்களை நீங்கள் கைக்கொள்ளுங்கள். நல்ல ரோல்மாடல் பெற்றோரிடமிருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, மோசமான நடத்தைகளை கற்பூரமாகப் பற்றிக்கொள்வார்கள்... உஷார்!
- ஆனந்த விகடனிலிருந்து...