Aug 26, 2014

உணவு யுத்தம்!-31


உருளைக்கிழங்கு சாப்பிடப் பிடிக்கும் என்றால் உலகில் எந்த நாட்டுக்கும் நீங்கள் போய் வரலாம். எல்லா ஊர்களிலும் விதவிதமான சுவைகளில் உருளைக்கிழங்கில் செய்த உணவு கிடைக்கும். சாப்பாட்டுப் பிரச்னையை ஓரளவு சமாளித்துவிடலாம்’ என்கிறார் பிராட் ஜான்சன். இவர் ஒரு பயண எழுத்தாளர். உணவு பற்றி எழுதுவதற்காக நிறைய நாடுகளைச் சுற்றியிருக்கிறார்.
பிராட் சொல்வது உண்மை என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். விமானப் பயணத்தில் தரப்படும் பெரும்பான்மை உணவு வகைகளை வாயில் வைக்க முடியாது. அதிலும் ஐரோப்பிய பயணங்களில் தரப்படும் உணவு பெரும்பாலும் இத்தாலிய வகையாக இருக்கும். அவற்றை என்னால் சாப்பிட முடியாது. ஆகவே, வேகவைத்த உருளைக் கிழங்குடன் ஒரு துண்டு ரொட்டி. கடுங்காப்பி குடித்து பசியை தணித்துக்கொள்வேன்.

ஒரு காலத்தில் கைதிகளுக்கும் பன்றிகளுக்கும் மட்டுமே உணவாகப் போடப்பட்ட உருளைக்கிழங்கு, இன்று உலகில் அதிகம் சாப்பிடப்படும் பொருளாக மாறியிருக்கிறது. பைபிளில் உருளைக்கிழங்கு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால், அதை சாப்பிடக் கூடாது என்ற நம்பிக்கை மதவாதிகளிடம் இருக்கிறது. ஆனால், 16-ம் நூற்றாண்டுக்குப் பிறகு உருளைக்கிழங்கு புகழ்பெறத் தொடங்கி மக்களின் பஞ்சம் போக்கும் நிவாரணியாக மாறியது.
உருளைக்கிழங்கை நேரடியாகச் சாப்பிடுவதை விடவும் சிப்ஸாக, பிரெஞ்சு ஃபிரையாக சாப்பிடுவதையே இளம் தலைமுறையினர் விரும்புகிறார்கள். பாக்கெட்டுகளில், டின்களில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ் விற்பனை சக்கை போடு போடுகிறது. இந்தியாவில் ஒரு மனிதன் ஓர் ஆண்டில் 16 கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுகிறான்.
ஆண்டுக்கு சிப்ஸ் விற்பனை மட்டும் 2,500 கோடி ரூபாய் என்கிறார்கள். அதிகம் சிப்ஸ் சாப்பிடாதீர்கள், உடல் குண்டாகிவிடும். ஆரோக்கியக் கேடு என மருத்துவர்கள் ஆலோசனைகள் சொல்கிறார்கள். ஆனால், சிப்ஸ் விற்பனை குறையவே இல்லை. இதற்கான முக்கியக் காரணம் மரபான நமது சிற்றுண்டிகள், நொறுக்குத் தீனிகள் மறைந்து போனதே.
எந்த நாட்டு உணவகத்துக்குப் போனாலும் ஏதாவது ஒரு விதத்தில் உருளைக்கிழங்கு சாப்பிடக் கிடைக்கிறது. வேகவைத்த உருளைக்கிழங்கில் ஒரு சாதாரண வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்தைப்போல ஐந்தரை மடங்கு கூடுதல் நார்ச்சத்து உள்ளது. இதுபோலவே, புரதம் மற்றும் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. ஆகவே, விரும்பி உண்ணப்படுகிறது என்கிறார்கள்.
ஜெர்மனியில் உருளைக்கிழங்கின் நடுவில் துளையிட்டு அதில் வெண்ணைய்யை நிரப்பி அப்படியே பொரித்துத் தருகிறார்கள். வெண்ணெய் வழியும் இந்த முழு உருளைக்கிழங்குகளை ஆளுக்கு 15 முதல் 20 வரை சாப்பிடுகிறார்கள். ஜெர்மனியர்களுக்கு உருளைக்கிழங்கில் தோல் இருக்கக் கூடாது.
17-ம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களின் வருகையால்தான் இது இந்தியாவுக்கு அறிமுகமானது. சூரத் பகுதியில் முதன்முறையாக உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டது. மொகலாய சக்ரவர்த்தி ஜஹாங்கிர் ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் தூதுவராக இருந்த தாமஸ் ரோவின் மதகுருவான எட்வர் டெரி இதுகுறித்த நேரடி குறிப்பை எழுதியிருக்கிறார். வாரன்ஹேஸ்டிங் தனது ஆட்சிக் காலத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறார். அப்போதுதான் மலைகளில் இதைப் பயிரிடுவது தொடங்கியது.
போர்த்துகீசியர்களுக்கு முன்பாக சீனர்கள் வழியாக உருளைக்கிழங்கு இந்தியாவுக்கு அறிமுகமானது என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். நெல், கோதுமை, சோளம் இவற்றுக்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு உலகெங்கிலும் பரவலாகப் பயிரிடப்படுகிறது. அந்நிய செலாவணி ஈட்டித்தரும் முக்கிய வணிகப் பயிராகவும் விளங்குகிறது.
இப்போது அத்தியாவசிய உணவுப் பொருள் பட்டியலில் உருளைக்கிழங்கும் வெங்காயமும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரு தனிநபர் ஆண்டுக்கு 23.5 கிலோ உருளைக்கிழங்கைச் சாப்பிடுகிறார் என்கிறார்கள். உலகிலே அதிகம் இதைச் சாப்பிடுகிறவர்கள் பொலிவியர்கள். ஒருவரே ஆண்டுக்கு 90 கிலோ சாப்பிடுகிறார் என்கிறார்கள்.
மாறிவரும் உணவுச் சூழலில் பிரெஞ்சு ஃபிரை அல்லது சிப்ஸ் சாப்பிடுவதை இளையோர் விரும்புகிறார்கள். இதை சாப்பிடுவதற்காகவே பன்னாட்டு உணவகங்களைத் தேடிப் போகிறார்கள்.
பூரி புகழ்பெறத் தொடங்கிய பிறகே உருளைக்கிழங்கு தமிழகத்தில் பிரபலமானது. பூரி மசாலாவை தோசையில் வைத்து சுடப்படும் மசாலா தோசைகள் மைசூரில் இருந்தே தமிழகத்துக்கு அறிமுகமாகின.
உருளைக்கிழங்கு இன்னமும் கடவுளின் உணவாக மாறிவிடவில்லை. சாமிகள் இன்னமும் நாட்டுக் காய்கறிகள்தான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். மனுஷன்தான் மாறிவிட்டான்.
அமெரிக்க பயணத்தின்போது, ஒரு மெக்சிகன் உணவகத்தின் வாசலில், ‘உலகம் உருளைக் கிழங்கால் இணைக்கப்பட்டிருக்கிறது’ என அறிவிப்புப் பலகை ஒன்றைக் கண்டேன். உண்மை. நம் காலத்தில் உணவுதான் உலகை இணைக்கும் பாலம். நாம் சீன உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுவதுபோல சீனர்கள் இந்திய தோசையையும் வடையையும் சாப்பிட விரும்புகிறார்கள். இத்தாலிய உணவு வகைகள் நம் குழந்தைகளுக்குப் பிடித்துப் போயிருக்கிறது. இத்தாலியப் பெண்களுக்கு இந்திய மசாலா கோழிக்கறி பிடித்திருக்கிறது. எல்லைக்கோடுகள் போட்டு நாடுகள் பிரிக்கப்பட்டபோதும் உணவு வகைகள் அவற்றை அழித்து ஒன்றுசேர்த்துவிடுகின்றன. பசியோடு உள்ள மனிதன் எல்லா நாடுகளிலும் ஒன்றுபோலதான் இருக்கிறான்.
எண்ணெயிலிட்டு பொரித்த உருளைக்கிழங்கு பிரெஞ்சு ஃபிரைஸ் என அழைக்கப்பட்டபோதும் அதற்கும் பிரான்ஸுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அதை உருவாக்கியவர்கள் பெல்ஜியத்தைச் சேர்ந்தவர்கள். 1850-களில் இருந்தே அவர்கள் உருளைக்கிழங்கை எண்ணெய்யில் பொரித்து விரும்பி சாப்பிட்டிருக்கிறார்கள். மிக மெல்லியதாக வெட்டுவதற்குத்தான் ‘பிரெஞ்ச் கட்’ என்பார்கள். பெல்ஜியத்தில் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் அதிகம் என்பதால், மெலிதாக வெட்டப்பட்ட உருளைக்கிழங்குகளுக்கு பிரெஞ்சு ஃபிரைஸ் என பெயர் வந்துவிட்டது.
மெக்கேன் ஃபுட்ஸ் என்கிற கனடா நாட்டு நிறுவனம் மிக அதிகமான அளவில் பிரெஞ்சு ஃபிரைஸைத் தயாரிக்கிறது. உருளைக்கிழங்கைப் பதப்படுத்தும் 30 தொழிற்சாலைகள் இவர்கள் வசமுள்ளன.
உருளைக்கிழங்கின் தாயகம் என தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெருவை கூறுகிறார்கள். ஒரு உருளைக்கிழங்கு வேகுவதற்கு ஆகும் நேரத்தைக்கொண்டு, இன்கா இனமக்கள் தங்களின் காலக் கணக்கை உருவாக்குகிறார்கள். அந்த அளவு அவர்களின் முக்கிய உணவாக இருந்திருக்கிறது.
மிஷனரிகள் மலைவாழ் மக்களைத் தேடி பெருவின் அடர்ந்த காட்டுக்குள் போனபோது அவர்களுக்கு உணவாக அறிமுகமாகியிருக்கிறது உருளைக்கிழங்கு. அதைப் பயன்படுத்தி மாய மந்திரங்கள் செய்ய முடியும், அதன் வழியே சாத்தானை வசியப்படுத்த முடியும் என ஸ்பானிய ரசவாதிகள் நினைத்தார்கள்.
இன்றும் பெருவில் நவம்பர் 1-ம் நாள் பூமியில் உருளைக்கிழங்கு ஒன்றை விதைத்து பூமித் தாயின் கருணை வேண்டி விவசாயிகள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
ஆண்டிஸ் மலையில் வசிக்கும் குவாச்சா இனத்தவர்கள் 140-க்கும் மேற்பட்ட உருளைக் கிழங்கு ரகங்களை விவசாயம் செய்கிறார்கள். பெருவில் மட்டும் 2,800 விதமான உருளைக் கிழங்குகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் சில மருத்துவத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
குவாச்சா இனத்தில் பெண் பார்க்கப்போகும் போது உருளைக்கிழங்கை, பெண்ணை உரிக்கச் சொல்கிறார்கள். அவள் கச்சிதமாக உரித்திருந்தால்தான் நல்ல பெண் என தேர்வு செய்வார்களாம். அதுபோலவே உருளைக் கிழங்கு விவசாயம் செய்வதற்கு முன்பாக பூமிக்கு சாந்தி சடங்கு செய்து வணங்கியே விதைக்கத் தொடங்குவார்களாம்.
சில உருளைக்கிழங்கு வகைகளைப் பறித்து ஓடுகிற தண்ணீரில் நாலைந்து நாட்கள் ஊறப்போடுவார்களாம். அப்போதுதான் அது மிருது தன்மை அடையும் என்கிறார்கள். 15-ம் நூற்றாண்டில்தான் உருளைக்கிழங்கு ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
டார்வின் தனது கடற்பயணத்தின்போது இனிப்பு உருளைக்கிழங்குகள் சாப்பிடுவதைக் கண்டதாக எழுதுகிறார், சர் பிரான்சிஸ் ட்ரேன். தனது பயணக்குறிப்பில் இத்தாலியில் இருந்து இங்கிலாந்துக்கு உருளைக்கிழங்கு விவசாயம் கொண்டு போகப்பட்டிருக்கிறது என்ற தகவலைக் குறிப்பிடுகிறார். பவேரிய யுத்தகாலத்தில் போர்வீரர்கள் பசியைப் போக்கிக்கொள்ள உருளைக்கிழங்கை தோண்டி எடுத்து அவித்து சாப்பிட்டார்கள் என்ற தகவலைக் காணமுடிகிறது.
பிரான்ஸின் மருந்தியல் நிபுணரான ஏ.பர்மெண்டியர் ஜெர்மனில் கைதியாக இருந்த நாட்களில் உருளைக்கிழங்கு பற்றி அறிந்திருக்கிறார். விடுதலையான பிறகு அவர் பிரான்ஸுக்குச் சென்று பயிரிடத் தொடங்கினார் என மில்லேயின் நூல் குறிப்பிடுகிறது.
ரஷ்யாவின் பீட்டர் அரசன் உருளைக் கிழங்கு சாப்பிடுவதில் அதிக விருப்பம் கொண்டிருந்திருக்கிறான். ஆனால், மதத் துறவிகள் உருளைக்கிழங்கினை சாத்தானின் ஆப்பிள் என்றும் ஈடன் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனி என்றும் கூறி, அதை சாப்பிடுவதில் இருந்து தடுத்து வைத்திருந்தனர்.