Jan 26, 2013

புலித்தடம் தேடி...தமிழ் பிரபாகரன்-பாகம் 9

பிரபாகரனின் வன வீடு, உளவுநோக்கிகளின் (ரேடார்) கண்களுக்கே தென்படாத நிழல் பகுதியாக இருந்தது. புதுக்குடியிருப்பு நகரில் இருந்து ஒட்டுசுட்டானுக்குச் செல்லும் வழியே உள்ள காட்டிலேதான் இந்த வீடு இருந்தது.வரி உடுப்பின் கிழிசல்கள் பசுமைப் போர்வைபோல் வீட்டின் காற்றுவெளிகளில் மூடப்பட்டு உள்ளது. இந்த வனமும் போருக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு இலங்கை இராணுவம் கொடுத்துள்ள பெயர்: 'தீவிரவாதியின் நிலத்தடி மறைவிடம்’. (Terrorist Under Ground Hideout) இந்த அறிவிப்புப் பலகை அந்த இடத்தில் பளிச்சிடுகிறது.கிடைத்த தகவல்படி முள்ளிவாய்க்காலுக்கு முன்னான தீவிரவாதத் தலைவர்களின் குடும்பத்தின் இருப்பு இங்குதான் இருந்தது. புலனாய்வுப் பிரிவின் தகவல்படி ஒட்டுசுட்டான், விசுவமடு பகுதிகளை இலங்கை இராணுவம் கைப்பற்றியதற்குப் பின் தலைவர் இவ்விடத்தைக் காலி செய்து​விட்​டார் என்றும் அங்கு எழுதப்பட்டு உள்ளது.
இடமும் வலமும் துவக்கு மண்ணை நோக்கி வணங்குவதுபோல் நிற்க, ஈழ வரைபடத்தின் நடுகில் மெழுகு​வர்த்தி எரிவதுபோல் முன் அரண் கம்பிகளால் வடிவமைக்கப்பட்ட குடில் ஒன்று இருந்தது. வீட்டின் நுழைவாயிலுக்கு முன்னே இருக்கிற இந்தக் குடில்தான் பிரபாகரன், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இடம்.

மரக்குச்சிகளில் அமர்விடம், மரங்களின் அடர்த்திகள் இடையே புகுந்து வரும் ஒளிக்கீற்றுகள், இயற்கையை சீர்குலைக்காத கட்டமைப்பு, மரங்களோடு ஒன்றிய முள்வேலிகள் என அந்த வீட்டின் புவியியல் அமைப்பு அவ்வளவு கச்சிதமானது.
வீட்டைச் சுற்றியுள்ள மூன்றடுக்கு முள்வேலிகளை மீறி உள் காட்டுப்பகுதியில் இருந்து இன்று நகர்ந்தாலும்கூட இந்த வீட்டை அடைய முடியாது என்றார் ஆட்டோ ஓட்டுநர்.
சிறப்புக் காவல் அரணோடு வீட்டின் முகப்பு. உள்ளே நுழைய சாதாரண வீடுபோலதான் தெரிந்தது. 'அங்குள்ள ஒரு கதவைத் திறந்தால், மேல் இருந்து கீழே உள்ள மூன்று மாடிகளுக்குச் செல்லலாம்’ என்றார் ஓட்டுநர்.
சிங்களவர்களுக்கு இராணுவம் வீட்டின் அறிமுகத்தை கொடுத்துக் கொண்டிருக்க... திறந்தே வைக்கப்பட்டு இருக்கும் கதவின் வழியாக நுழைந்தோம்.
கீழே இறங்கும் படிகள் ஓரம் உள்ள சுவர்கள் துப்பாக்கிக் குண்டுகளால் துளை போடப்பட்டு இருந்தன. முதல் மாடி நுழைவில் உள்ள கதவு மரத்தால் ஆனதாகவும், இரண்டாவது மாடி நுழைவில் உள்ள கதவு இரும்பால் ஆனதாகவும், மூன்றாவது மாடியில் உள்ள கதவு கடும் இரும்பால் ஆனதாகவும் இருந்தன.
தரையில் இருந்து கீழே செல்லச் செல்ல, சுவாசிக்க சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஏனெனில், சுவாசிக்க ஏதுவாக வைக்கப்பட்டு இருந்த குளிர்சாதன வசதிகள் அனைத்தும் இராணுவத்தின் கைப்பற்றலுக்குப் பின் அகற்றப்பட்டு விட்டன.
இரண்டாவது, மூன்றாவது மாடிகளில் இருந்து நேரடியாகத் தப்பி மேல் வர சுரங்கப் பாதைகளும் இருந்தன. நடவடிக்கை அறை, உரையாடல் கூடம், பிரபாகரன் அறை என சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டு இருந்தன. வீட்டைச் சுற்றி துப்பாக்கிப் பயிற்சி இடம், ஜெனரேட்டர் அறை, சமையல் அறை, தண்ணீர்தொட்டி, நிலத்தடி வாகன நிறுத்துமிடம் என சகலமும் இருந்தன.
இலங்கையில் இப்படி ஒரு வீடு வேறு எங்கும் இல்லையாம்’ என்றும், 'ஜப்பான் முறைப்படி கட்டப்பட்ட வீடு’ என்றும் சிங்களவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
புலிகள் இருந்தபோது, இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்காக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பகிரப்பட்டது. புலிகள் நினைத்து இருந்தால் காட்டுக்குள்ளே மின்சார இணைப்புகளைக் கொண்டுவந்து இருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல் ஜெனரேட்டரைத்தான் மின் தேவைக்குப் பயன்படுத்தி உள்ளனர்’ என்றார் ஓட்டுநர்.
சிங்களவர்களின் முக்கியமான சுற்றுலாத்தலமாக இதுதான் இப்போது இருக்கிறது.
பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியே வந்து திரும்பும் முனையில், இராணுவத்தால் கடைசி நேரத்தில் அழிக்கப்பட்ட புலிகளின் இரும்புக் கவச வாகனம் வெற்றி அறிவிப்போடு காட்சிப் பொருளாக உருக்குலைந்து கிடந்தது.
அடுத்து, இரணப்பாலை காட்டுப் பகுதியில் இருந்த புலிகளின் நீச்சல் குளத்தை நோக்கி புதுமாத்தளன் ஊடாகச் சென்றோம். இடையில் இடிந்தும் உடைந்தும் கிடைக்கும் பள்ளிகளைப் பார்க்கும் போது மூத்த போராளி கூறிய போர்க்கால சம்பவம் ஒன்று நினைவில் சிறைப்பட்டது.
முள்ளிவாய்க்கால்ல ஒரு பள்ளிக்கூடத்தைதான் ஹோஸ்பிட்டலாக வைச்சிருந்தாங்க. என்னோடு இருந்த பொடியனோட மனைவி காயப்பட்டுட்டா. உடனே அவங்களை இந்தப் பள்ளிக்கூட ஹோஸ்பிட்டலுக்குதான் கொண்டுபோனம். அவளுக்கு வயத்துல காயம். கர்ப்பிணியா இருந்தவ.
டாக்டர்லாம் பங்கர்க்குள்ள இருந்தாங்க. நான் சொன்னன்... 'ஒரு தடவ வந்து பாருங்க’னு. டாக்டர் வரல. 'நீங்க போங்க’ என்றார். நான் எப்படியாவது காட்ட​​ணோம்னு சொல்ல, அவர் டீ குடிச்சுக்கொண்டே 'நீங்க போங்க வாரன்’ என்றார்.
அதுக்குள்ள அப்பிள்ளை செத்துடுச்சு. அந்தப் பிள்ள செத்து ஒரு நிமிஷத்துக்குள்ள டாக்டர் இருந்த பங்கர்குள்ள செல் விழுந்து, அவங்க குடும்பத்தோட இறந்து போனாங்க. நான் சொன்னதைக் கேட்டு அவர் வந்திருந்தா, தப்பி இருக்கலாமோ என்று தெரியல. அவரும் பயத்துல பங்கர்ல இருந்துட்டார்.
செத்த பிள்ள பேர் தமிழ்கவி. இயக்கத்தில் போராளியா இருந்த பெண்'' என்றார். பள்ளிக்கூடங்களைப் பார்த்தபோது இந்தச் சம்பவம்தான் எனக்கு ஞாபகம் வந்தது.

இறுதி நேரத்தில் மருத்துவ வசதி இன்றி மருத்துவமனையாக மாறிய பள்ளிக்கூடத்தையும் அம்புலன்ஸ் வான்களையும் இராணுவம் குறிவைத்துத் தாக்கியதன் வெளிப்பாடுதான் இந்தச் சம்பவம்.
இந்தக் கதைகளைச் சொல்ல முடியாமல் அமைதியாய் நிற்கின்றன அந்தக் கட்டடங்கள்.
ஆட்டோ ஓட்டுநர், தன்னுடைய அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.
புதுக்குடியிருப்பை இயக்கம் தன் கட்டுப்பாட்டுல வெச்சிருந்த காலத்தில், நான் மளிகைக் கடை வெச்சிருந்தன். கடைப் பொருட்களை கொழும்புல இருந்து வாங்கி வந்தா, ஓமந்தை எல்லையில இயக்கத்துக்கு வரி கட்டணும். மறுபடியும் கடைக்குக் கொண்டுவந்த பிறகும் வரி கட்டணும். வரி விதிப்பு எல்லாவற்றுக்கும் அதிகம்.
ஆனா, இயக்கக் காலத்துல களவு பயம் இல்லை. களவு எடுத்தவன் பிடிபட்டால், தண்டனை பயங்கரமானதாக இருக்கும். களவு நடந்தால் 24 மணி நேரத்துக்குள்ள களவு எடுத்தவன் சிக்கிடுவான். ஆனா, இன்னைக்கு பொலீஸுக்கு சாராயப் பாட்டிலும் காசும் தந்துட்டே களவு நடக்குது.
போலீஸுகிட்டயோ ஆமிக்கிட்டயோ களவு போச்சுனு சொன்னா, எங்களைத்தான் கடுமையா விசாரிக்கிறாங்க. இயக்கக் காலத்துல சட்டம்னா எழுத்துல இல்ல, நடப்பு வாழ்க்கையில இருந்துச்சி. ஆனா, இன்னைக்கு அப்படி இல்லை'' என்று சொல்லிக் கொண்டே வந்தார்.அதற்குள் காட்டுக்குள் உள்ள புலிகளின் நீச்சல் குளத்தை வந்தடைந்தோம். 2001-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நீச்சல் குளம் 83 அடி நீளமும் 22 அடி ஆழமும் கொண்டது.
நமக்குத் தகவல் கொடுத்தவர்களின் கூற்றுப்படி, இது கடற்புலிகளின் பயற்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இலங்கை கடற்படை மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தும் கடற்புலிகளும் இங்குதான் முழுப் பயிற்சி எடுப்பார்கள்'' என்ற இராணுவத் தரப்பு விளக்கம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.ந்தக் காட்டுக்குள் அமைந்திருக்கும் நீச்சல் குளத்துக்குள் ஒரு புத்தக் கோயில் இப்போது கட்டப்பட்டு உள்ளது. அரச மரமும் மண்ணில் ஊனப்பட்டு உள்ளது. ஆளே இல்லாத காட்டில் எதுக்கு புத்த கோயில்னு புலம்பினார் ஓட்டுநர்.
புத்தக் கோயில்கள் அனைத்தும் சிங்களத்தின் வெற்றியை குறிப்பதாகவும், தமிழர்களின் தோல்வியை கேலிப்படுத்துவதாகவும் தான் விளங்கின.
நாங்கள் கிளம்பியபோது வந்த ஆமி கப் போட்ட ஒரு ஆள், 'எதுக்குப் பெரிய கமராவில் படம் எடுக்கிறீர்கள்?’ என்றார். நான் ஆங்கிலத்திலேயே பேச, மொழித் தடுமாற்றத்தில் 'ஓகே ஹரே’ (போகலாம்) என்று சொன்னார். ஆங்கி​லத்தில் பேசினால், எளிதில் தப்பிக்கலாம் என்று தெரிந்தது.அடுத்துச் சென்றது, கடற்புலிகளின் தளபதி சூசை வீடு.சுற்றியும் ஈ மொய்ப்பது போல பொம்மைக் கடைகளும் தின்பண்டக் கடைகளும் நிறைந்து இருந்தன. உள்ளே நுழையும்போது ஒருவர் இடையில் வந்து, 'எப்படி இருக்கீங்க?’ என்றார்.
நீங்கள் யார்னு தெரியலயே?’ என்றேன். 'தம்பி, நான் உங்கள ரெண்டு நாளைக்கு முன்னாடி முல்லைத்தீவு பஸ்ல பாத்தன். நீங்க பக்கத்துல ஒருத்தர்ட்ட பேசிட்டு இருந்திங்க. தமிழ்நாடு போல இருந்துச்சு. எப்படியும் இங்க வருவீங்க... பேசிக்கலாம்னு இருந்தேன். நினைச்சது​போலவே வந்திட்டங்க. நானும் இங்கதான் கடை போட்டிருக்கன் என்றார்.
புன்னகைக்க... மேலும் தொடர்ந்தவர், ''நானும் தமிழ்நாட்டுல மதுரைதான் தம்பி. மலையகத்துல இருந்து எங்கள அடிச்சுத் துரத்தன காலத்துல இந்தப் பக்கம் வந்துட்டம். எங்க சொந்தக்காரங்க நிறையப் பேர் சேலம், திருச்சி​யிலலாம் இப்பவும் இருக்காங்க'' என்றார். நம்மவர் யாராவது வருவார்களா, அவர்களிடம் ஊரைப்பற்றிப் பேசலாமா என்ற ஏக்கம் உள்ள மனிதரின் குரலாக அது இருந்தது.


அவரிடம் பேசிவிட்டு சூசையின் வீட்டுக்குள் நுழைந்தோம். வீட்டின் முகப்பில் 'எதிரிகளே நமது நல்ல ஆசிரியர்கள்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.
உள் அறையில் ஓர் கதவு பீரோ போல் இருந்தது. அதுதான் பங்கர்க்குச் செல்லும் வழி. அதைப் பார்க்க வந்த ஒரு சிங்கள மூதாட்டி தவறி விழுந்து இறந்து விட்டாராம். அதனால், இப்போது அதை மூடி விட்டார்களாம்.
போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது தமிழகத்​துக்குப் பேசிய சூசை, 'கடைசி மணித்தியாலங்கள் தாக்குதல் நடந்துகொண்டு இருக்கு. நிறைய சனம் செத்துக்கொண்டு இருக்கு. இரண்டு கி.மீ. அகலத் துண்டுக்குள்ள கடுமையான யுத்தம் நடந்துகொண்டு இருக்கு. எல்லா இடமும் பிணக் குவியல்கள்தான்.
கே.பி.பத்மநாபன் ஊடாக ஜெனிவாவோடு தொடர்பு கொண்டு வெள்ளவாய்க்கால் வழியாக காயப்பட்டுக்கொண்டு இருந்த மக்களை எடுக்கச் சொன்னம். ஆனா, எடுக்கல. அந்த மொத்தச் சனமும் இப்ப செத்திட்டுது.
நாங்களும் இராணுவத்த எதிர்த்து சண்ட பிடிச்சுக்கொண்டு இருக்கம். கடைசி வரை நாங்கள் அடிபணிய மாட்டம். ஆனா, எங்க மக்கள் செத்துக்கொண்டு இருக்கினம்.
சர்வதேசம் திரும்பிப் பாக்கையில. மக்கள் எல்லாம் பங்கர்குள்ள இருக்க வெச்சிருக்கனம். சுத்தி வளைக்கப்பட்ட பங்கர்களில் மக்கள் இருக்கினம்.
மக்களை வெளியில எடுக்கச் சொல்லி தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கம்’ என்று சொல்ல, எதிர் முனையில் இருந்தவர் அழ... 'அழாதடா, தமிழன் அழக் கூடாது. வெல்லுவம் வெல்லுவம்’ என்ற குரல் என்னுடைய ஞாபகத்துக்கு வந்தது.
அந்த வீட்டுக்குள் சூசையின் சூரிய முகம் பளிச்சிடுவதாகவே உணர முடிந்தது. மக்களை பங்கர்குள் இருக்க வெச்சிருக்கம் என்று சூசை குறிப்பிட்ட மக்களைத்தான் விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக போரில் பயன்படுத்தினர் என்று சர்வ​தேசமும் ஐ.நா-வும் குறிப்பிடுவது.
இருள் கவ்விக்கொண்டு இருந்த வேளையில் புதுக்​குடியிருப்பில் இருந்து கிளிநொச்சிக்குச் செல்கிறேன்.
கந்தசாமி கோயில் அருகே ஒரு காலத்தில் புலிகளின் சமாதானச் செயலகம் இருந்தது. அதைக் கடந்து விரைகிறேன்.
அடுத்த நாள் காலை இரணைமடு குளத்தை நோக்கி இரு சக்கர வாகனத்தில் உள்ளூர் நண்பரோடு நகர்ந்தேன். அந்த இரணைமடுவில்தான் அன்டன் பாலசிங்கம்...
ஊடறுத்துப் பாயும்.......
ஜூனியர் விகடன்




Jan 23, 2013

செல்போன் கட்டணம் இரு மடங்கு உயர்வு!

ஏர்டெல், வோடபோன் செல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை இரு  மடங்கு அதிகரித்துள்ளன. அதாவது, இந்த நிறுவனங்கள் ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் என்பது 2 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

ஐடியா நிறுவனம், ஒரு நொடிக்கு 1.2 பைசா என்று இருந்ததை 2 பைசாவாக அதிகரித்து உள்ளது.

மார்ச் 1 ஆம் தேதி முதல் இந்தியா முழுக்க ரோமிங் கட்டணத்தை ரத்து செய்ய\ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அப்போது ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட, இப்போதே செல்போன் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி இருக்கின்றன.
மேலும் அதிகரித்து வரும் செலவால் செல்போன் நிறுவனங்களின் நிகர லாபம் தொடர்ந்து குறைந்து வருவதும் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாகஇருக்கிறது.

குறிப்பாக, செல்போன் சேவையில் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபகம் கடந்த மூன்றாண்டுகளாக வீழ்ச்சிக் கண்டுள்ளது.

Jan 22, 2013

மாமதுரை போற்றுவோம்

 மதுரையில் பிப்ரவரி மாதம் 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படவுள்ள மாமதுரை போற்றுவோம் விழாவிற்கான முப்பரிமாண காட்சி விளம்பரங்களை கலெக்டர்அன்சுல்மிஸ்ரா தலைமையில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா மற்றும் விழாக்குழுவினர் நேற்று திறந்து வைத்தனர். மதுரையில் பிப்ரவரி மாதம் 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படவுள்ள மாமதுரை போற்றுவோம் விழா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகரின் அதிகப்படியான மக்கள் கூடும் இடங்களான விளக்குத்தூண், பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரிலுள்ள மேலவாசல்கோட்டை ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள முப்பரிமாண காட்சி விளம்பரங்களை கலெக்டர்அன்சுல்மிஸ்ரா, மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா மற்றும் விழாக்குழுவினர்நேற்று திறந்து வைத்து பார்வையிட்டனர்.. அதனடிப்படையில் விளக்குத்தூண் பழந்தமிழரின் வீர விளையாட்டான ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டை நினைவுகூறும் வகையில் திமிறி ஓடும் காளை மாட்டின் திமிலைப்பிடித்து வீரன் ஒருவன் அடக்கும் காட்சி சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பழங்காநத்தம் ரவுண்டானாவைச்சுற்றி பழந்தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் கல்வெட்டுகள் நிறைந்த பாறை ஒன்றிலிருந்து வெளிக்கிளம்பும் யானையின் சிற்பக்காட்சியும், மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரிலுள்ள மேலவாசல் கோட்டையின் மேல் ஆங்கிலேயர்களால் அகற்றப்பட்ட கோட்டையின் வடிவமைப்பும், ஐந்து யானைகளின் முகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த முப்பரிமாண விளம்பரக்காட்சிகளை சென்னையைச் சேர்ந்த கலை இயக்குநர் நாகு தலைமையில் 40 கலைஞர்கள் சேர்ந்து இருவாரங்களாக பணியாற்றி உருவாக்கியுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையர் ஆர்.நந்தகோபால், மாமதுரை போற்றுவோம் விழாக்குழுவின் தலைவரும், மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோயிலின் தக்காருமான கருமுத்துகண்ணன், மதுரை மாநகராட்சி துணை ஆணையர் சாம்பவி, விழாக்குழுவின் துணைத்தலைவர்கள் கே.எஸ்.பரத், சு.வெங்கடேஷன், உதவி ஆணையர் தேவதாஸ், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ்,தேசிய தகவல் மைய அலுவலர் திரு.மைக்கேல் உள்ளிட்ட அலுவலர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Jan 21, 2013

புலித்தடம் தேடி... மகா. தமிழ் பிரபாகரன்- பாகம் 8

வெற்று உயிர்களாக, வெந்த உடல்களாகத் தமிழர்கள் இலங்கையிலே துடிதுடிக்​கின்ற​னர் என்று, நான்கு சுவர்களுக்​குள் நாம் அழுதபோது, உடம்பிலே நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஒருவன் தெரு​வுக்கு வந்தான். அவன் பெயர் முத்துக்குமார். அந்தப் பெயர் ஈழத்து மண்ணில் மக்களின் மனதில் கல்​வெட்டாக வாழ்கிறது.
இதுவரை இறந்த மாவீரர்களின் பெயரோடு முத்துக்குமார் பெயரும் இணைந்துவிட்டது. ''இனியும் எங்களுக்காகத் தமிழ்நாட்டில் ஓர் உயிரும் போகக்கூடாது என்று எங்கள் அவலங்களுக்கு மத்தியிலும் அவருக்காகத் தீபம் ஏந்தினோம். என்றும் அவருக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்கள்'' என்று என்னிடம் ஒரு ஈழத்தமிழர் கையைப் பற்றிக் கொண்டு சொன்னபோது, கண்கள் பனித்தன.
போர்க்குணத்தோடும் நன்றி உணர்வோடும் இருக்கும் அந்த மக்கள் கண் முன்னாலேயே தமது சொந்த பந்தங்களைப் பறிகொடுத்த வடுக்களை மட்டும் மறக்க முடியாமல் தவிக்கின்றனர். ஒரு போர் முடிந்த பிறகும் அவர்களின் மனதில் அது உளவியல் போரை நிகழ்த்துவதைப் பார்க்க முடி​கிறது. மனரீதியாக எதையோ இழந்தவர்களைப் போலத் தான் இப்போது அவர்கள் உலா வருகிறார்கள்.
தொண்டு நிறுவன ஊழியர் ஒருவர் என்னிடம் இதுபற்றி விவரித்தார்.
2009-ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை தமிழ் மக்களின் உளவி​யல் நிலைகள் தொடர்பாக 'அமெரிக்க மருத்துவக் கூட்டமைப்பு’ என்ற அமைப்பினர் ஓர் ஆய்வு நடத்தினர். அமெரிக்க மருத்துவர் பராசெய்ன் இந்த ஆய்வுக்குத் தலைமை வகித்தார். வடக்கு மாகாணம் மற்றும் இடம்பெயர் முகாம்​களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 92 சதவிகித மக்கள் உளவியல் ரீதியான பிரச்சினைகளில் பாதிக்கப்படும் மோசமான நிலையில் உள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த ஆய்வுக் கருத்தைப் போன்றே வவுனியாவைச் சேர்ந்த உளவி​யல் மருத்துவரும் ஓர் கருத்தை முன் வைத்தார். 'யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மனோநிலை சீரடைய இன்னும் இருபது ஆண்டுகளாவது தேவைப்படும்’ என்று அவர் சொல்லி இருக்கிறார்'' என்று அந்த ஊழியர் சொன்னார்.
ஏக்கம் நிரம்பிய விழிகள், அச்சம் போர்த்திய முகங்கள், தயங்கித் தயங்கி வரும் பேச்சுக்கள் அனைத்துமே ஒருவகையில் விரக்தியையே வெளிப்​படுத்துகின்றன. சிலநேரங்களில் வீரமாகவும் பல நேரங்களில் விரக்தியாகவும் பேசுகிறார்கள். உளவியல் போர் கண்ணுக்குத் தெரியாமல் நடந்து கொண்​டிருப்பதையே இது காட்டுகிறது.
புதுமாத்தளனில் இருந்து புதுக்குடியிருப்புக்கு நகர்ந்தேன். சுதந்திரபுரம், உடையார்கட்டு, வள்ளிபுனம் என பரந்தன் முதல் முல்லைத்தீவு வரை உள்ள 'ஏ35’ நெடுஞ்சாலையில் எல்லாமே அழிவுகளின் காட்சிகள்தான். ஓடு வேய்ந்து இருந்த கூரைகள் எல்லாம் இன்று கீற்றுக் கூரைகளாக உள்ளன. புதுக்குடியிருப்பு  நகர் மட்டுமே ஊர் போலத் தெரிந்தது. மக்கள் கூட்டமும் ஓரளவுக்குத் தென்பட்டது.
தொண்டு ஊழிய நண்பர் அவசர வேலை காரணமாக விடைபெற்றுக் கொண்டார். அவரே ஒரு கிளிநொச்சி நண்பரை எனக்கு வழிகாட்ட ஏற்பாடு செய்திருந்தார். ஏனெனில், நம் தமிழ்​நாட்டின் பேச்சு வழக்கு எளிதில் காட்டிக் கொடுத்து​விடும். தனியே சென்றால் பேச இயலாதவர்போல செல்ல வேண்டும். முன்பின் அறிமுகம் இல்லாத மக்கள் நம்மிடம் பேசுவதும் சிரமம். தவிர, நாம் யார் என்று தெரியாமல் நம்மையே சந்தேகத்தோடும் பயத்தோடும் பார்ப்பார்கள். எனவேதான் யாராவது ஒரு ஈழ நண்பரை உடன் வைத்துக்கொண்டே என்னுடைய பயணத்தைத் தொடர வேண்டி இருந்தது.
தொண்டு ஊழிய நண்பர் சொன்ன உளவியல் பிரச்சினைகள் பற்றி கிளிநொச்சி நண்பரிடம் கேட்​டேன்.
பிள்ளையின் முன்னே தாயும், தாயின் முன்னே பிள்ளையும் கற்பழிக்கப்படும்போது மனம் எப்படி தாங்கும்? சொந்தங்கள் எல்லாம் உறுப்புகளை இழந்து துடித்தபோதும் கண்முன்னே உயிர்களைவிட்ட போதும் பார்த்துப் பார்த்துத் துடித்தது எங்கள் சனம்... தங்களோட உற்றவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? என்பது தெரியாமல் வாழும் மனசு எப்படி நன்றாக இருக்கும்?'' என்றார்.
உளவியல் என்பது உயிர்ப் பிரச்சினை. தனிப்பட்ட மக்களின் பிரச்சினை என்று இதை சாதாரணமாக நினைக்க முடியாது. இது ஒரு காலகட்டத்தின் சமூகத்தையே பாதிக்கும் அல்லவா? இதை இலங்கை அரசாங்கமோ, இராணுவமோ உணர்ந்ததாகத் தெரியவில்லை. இராணுவ வெற்றியின் இருப்பையும் தங்கள் கருத்துப்படி பிரபாகரனின் இறப்பையும் நினைவுப்படுத்தி தொடர்ந்து பெரும் உளவியல் போரை மக்கள் மீது தொடுத்து வருகிறது.
இப்பொழுது இராணுவம் புதிதாக வரைப்படக் கண்காட்சி நிலையம் ஒன்றைப் புதுக்குடியிருப்பில் திறந்துள்ளது. அதில் 2009 போரின்போது ராணுவ நகர்வுகள் எப்படி எல்லாம் இருந்தன, எந்தெந்த படையணி எந்தெந்த வழியில் முள்ளிவாய்க்காலை சுற்றி வளைத்தது, நந்திக்கடல் ஓரத்தில் எங்கு பிரபாகரனைக் கண்டெடுத்தோம் என வரைபடத்தோடு விளக்கி அந்தத் தகவல் நிலையத்தில் விளக்கி வருகின்றனர்.
இராணுவம் போரின் வடுக்களைப் போக்காமல் போர் முறைகளையே மீண்டும் மீண்டும் காட்டி, மக்களின் மன ரணத்தை கீறிக் கீறி மகிழ்ந்தபடி இருக்கிறது.
ஆனால், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் பகுதி களில் மருத்துவர்களோ, மனநல மருத்துவர்களோ அவ்வளவாக இல்லை.
இதைப்பற்றி புதுக்குடியிருப்பு ஊர்வாசி ஒருவரிடம் கேட்டேன்.
அவர், ''மருத்துவமனைகளே இல்லாத இடத்தில் மருத்துவர்கள் எப்படி இருப்​பார்​கள்? இருக்கிற தமிழ் மருத்துவர்களையும் சிங்களப் பகுதிகளில் நியமித்துவிட்டு, சிங்கள மருத்துவர்களை தமிழ் பகுதிகளில் நியமிக்கிறது அரசு.
உயிரைக் காப்பத்துற மருத்துவர்கிட்டகூட எங்கப் பிரச்சினை என்னன்னு சொல்ல முடியல. அதுலகூட சிங்கள திணிப்பு. அரசு பணியில இருக்கிறதால தமிழ் மருத்துவர்கள் சிங்களம் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், சிங்கள மருத்துவர்கள் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. நாங்க தமிழ் மருத்துவர்களைக்கூட கேட்கலை. தமிழ் தெரிந்த மருத்துவரைத்தான் கேட்கறம்'' என்றார்.
'போருக்குப் பிறகும் இன முரண்பாட்டை காட்டிக்கொண்டிருந்தால் அது இன்னொரு போராளிக் குழு உருவாக்கத்துக்கு வழி வகுக்கும்’ என்னும் சந்திரிகா குமாரதுங்கவின் பேச்சை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, 'அயோ ஒகுலஜா (AYO OKULAJA)’ என்ற நைஜீரிய ஊடகத்துக்கு அளித்த பேட்டி 'இலங்கை எப்படி உள்ளது?’ என்பதை நிதர்சனமாக உணர்த்துகிறது.
தமிழ்ப் புலிகளுக்கு எதிரான மகிந்த ராஜபக்சவின் தாக்குதல் இப்போது அனைத்துலக சமூகத்தில் மிகப் பெரிய விவகாரமாக உள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அதை இன்னமும் விசாரித்துக் கொண்டிருக்கிறது. நாம் போரை முடிவுக்கு கொண்டுவந்த போதிலும், இது வேறொரு போருக்​கான ஒரு நீண்ட ஆயத்தமாக இருக்கக்கூடும் என்றே நம்புகிறேன். தமிழ்மக்கள் நீண்ட காலமாகவே பாரபட்சமாக நடத்தப்பட்டனர். அவர்கள் தமது உரிமைகளைக் கேட்டனர்.
அவர்களின் உரிமை​களை வழங்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற எனது அரசாங்கம் முதன்முதலாக ஒப்புக்கொண்டது. முழு உரிமைகளையும் கொண்ட ஒரு சமமான ஆட்சியை நிறுவ ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், ராஜபக்ச சிறுபான்மையினரின் உரிமைகளில் நம்பிக்கை கொண்டவரல்ல. அவர் ஒருவரே எனது அமைச்சரவை பேச்சுக்களுக்கு எதிராக இருந்தார். அவரது தேவை, தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது.
இப்போது ஒட்டுமொத்த உலகமுமே, இராணுவத் தாக்குதலுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் இணைகிறார்கள். தாக்குதல்களைக் கண்டிக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் தனது திட்ட வகுத்தலின்படியே தொடர்ந்து நடக்குமானால், இன்னும் சில ஆண்டு​களில் இன்னொரு போராளிக்குழு உருவாகும். இறுதித் தாக்குதலின்போது பொதுமக்களின் மனித​உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள் நிறையவே இடம்பெற்றன.
என் தாய் தந்தைக்குப் பிறகு, அரசியல் தேவை​யில்லை என்று நான் ஒதுங்கியபோதும் மூன்று ஆண்டுகளுக்குப் பின் அரசியலுக்குள் இழுத்து வரப்​பட்டேன். அப்போதே என்னுடன் இந்த வம்சஆட்சி முடிவுறும் என்று கூறினேன். என் பிள்ளைகளை அரசியலுக்குக்கொண்டு வர எனக்கு விருப்பமில்லை. வம்ச அரசியல், எல்லாவற்றையும் ஒரு குடும்பத்துக்குள் அபகரிக்க இடமளிக்கிறது.
இலங்கையின் இப்போதைய ஜனாதிபதி மிகப் பெரிய ஊழல்களை செய்துள்ளார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் அரசாங்கப் பதவிகளில் உள்ளனர். நான்கு சகோதரர்கள் அமைச்சரவையில் இருக்கின்றனர். அவர்களின் பிள்ளைகள் நாடாளுமன்றத்தில் பதவி வகிக்கின்றனர். இந்தமுறையில் இங்கு தீமைகளே அதிகம் நடக்கிறது'' என்று அவர் கூறி இருக்கும் உண்மை யோசிக்கத்தக்கது.. குறிப்பாக ராஜபக்ச.
அன்று மாலை மீண்டும் கிளிநொச்சிக்குத் திரும்பினேன்.
அடுத்த நாள் காலை, அதே புதுக்குடியிருப்புப் பகுதிக்குத்தான் பயணம் என்றாலும் செல்லக்கூடியது புலிகள் வலுவாக நிலை கொண்டிருந்த காட்டுக்கு. அந்தக்காட்டில்தான் பிரபாகரனின் நிலத்தடி வீடு உள்ளது. 'நீங்கள் செல்வது இப்போது சுற்றுலா தலமாக உள்ள பகுதிகள் என்பதால் நீங்கள் தனியாகச் செல்லலாம்.
ஆனால், யாரிடமும் எதையும் பேச வேண்டாம். பேருந்திலிருந்து இறங்கியதும் ஆட்டோ பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று எனக்குச் சொல்லப்பட்டு இருந்தது. புதுக்குடியிருப்பில் இறங்கியதும் ஆட்டோ பிடித்துக் கிளம்பினேன்.
நகரைக் கடந்து மண்பாதையில் ஆட்டோ சென்றது. மீண்டும் காட்டுக்குள் ஒரு பாதை. அந்தப் பாதை ஓரங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணி இன்னமும் நடக்கிறது. அடுக்கடுக்காய் பதுங்குக் குழிகளோடு காவல் அரண்கள். ஆறு அடுக்கு பாதுகாப்பு அரண்கள் உள்ளதை இராணுவம் கண்டறிந்ததாக ஆட்டோ ஓட்டுநர் சொன்னார். '
இந்தக் காட்டுப்பாதையின் ஒரு கிலோ மீட்டருக்கு முன்னால்தான் மக்கள் குடியிருந்தனர். ஆனால் புதுக்குடியிருப்பில் வாழ்ந்த மக்களுக்கோ, நகரில் வாழ்ந்த எங்களுக்கோ இப்படி ஒரு வீடு இருந்தது தெரியாது.
முன்பு இது ஒத்தையடிப் பாதையாகப் புதர் மண்டிக் கிடக்கும். ஆனால், இப்போது இராணுவம் வந்து பாதையை அகலப்படுத்தி விட்டது'' என்று சொல்லியபடியே ஆட்டோவை ஓட்டினார்.
பிரபாகரன் இருந்த வீடு நெருங்கிக்கொண்டு இருந்தது.
ஊடறுத்துப் பாயும்...
ஜூனியர் விகடன்