Mar 29, 2013

ஆர்வத்துடன் கூடிய கற்றலே, குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு சிறந்தது !

நாம் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை கற்கிறோம். கற்றல் செயல்பாடானது 24x7 என்ற தொடர்ந்த செயல்பாடாக நம் வாழ்வில் இடம்பெற்ற ஒன்று என்பதை புரிந்துகொள்பவரே புத்திசாலி.
ஒரு மனிதனுக்கு கற்றல் என்பது அவன் கருவறையில் இருக்கையிலேயே தொடங்கி விடுகிறது. அவனின் மரணம் வரையில் அது நீடிக்கிறது.
படித்தல் என்பது புத்தகப் படிப்பில் மட்டுமே அடங்கியது என்று நாம் நினைத்தால், உண்மையிலேயே சோர்ந்து விடுவோம். ஆனால், கற்றல் என்பது பரந்த அளவிலானது மற்றும் அது வெறும் புத்தகத்திற்குள் மட்டும் அடங்கியதன்று.
நாம் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களைப் பார்க்கிறோம். உதாரணமாக, புதிய புத்தகம், புதிய திரைப்படம், புதிய பணி அனுபவம் மற்றும் புதிய பயணம் போன்ற அனைத்துமே கற்றல் செயல்பாடுகள்தான். நாம் இதற்கு முன்பு அறிந்திராத ஒன்றை, தற்போது புதிதாக அறிந்து கொள்வதே கற்றல் எனப்படும். ஆனால், விஷயம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த விஷயம் வாழ்வுக்கும், சிந்தனைக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
தங்கள் குழந்தையின் கற்றல் செயல்பாட்டை எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற கவலை அனைவருக்குமே இருக்கும். அதற்கான வழிமுறைகள் பல இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றைப் பற்றி இங்கே காண்போம்.
கவலையின்றி படித்தல்
ஒரு குழந்தை ஒரு புத்தகத்தைப் படிக்கிறதென்றால், அதை மனப்பாடம் செய்ய வேண்டுமே என்ற கவலையின்றி படித்தல் வேண்டும். ஒரு விஷயத்தை புதிதாக அறிந்துகொள்கிறோம் என்ற எண்ணம் மட்டுமே அந்தக் குழந்தைக்கு இருக்க வேண்டும். மனப்பாடம் செய்ய வேண்டுமே என்ற நெருக்கடியானது, ஒரு குழந்தைக்கு கவலையை உண்டாக்கி, அந்த விஷயத்தை அது அனுபவித்துப் படிப்பதை தடை செய்துவிடும்.
மேலும், ஒரு விஷயத்தை அனுபவித்துப் படிக்கும்போது, இயல்பாகவே, அந்த விஷயத்தின் பெரும்பகுதி நினைவில் பதிந்துவிடும். எனவே, மனப்பாடம் என்ற ஒரு செயல்பாட்டை குழந்தையிடம் திணிக்கக்கூடாது.
சுந்திரமான மனம்
"கலங்கிய நீரை தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருந்தால், அது எப்போதுமே தெளியாது. ஆனால், அதை அப்படியே தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டால், படிப்படியாக தெளிந்துவிடும்" என்பது புகழ்பெற்ற தாவோயிச தத்துவம். அதுபோல்தான் நமது மனமும். அதற்கு தொந்தரவும், நெருக்கடியும் தராதவரை, அது சிறப்பாக செயல்படும். எனவே, உங்கள் குழந்தையை தொந்தரவு செய்யாமல், எந்த செயலையும், சுதந்திரமாக செய்யவிடுங்கள்.
அந்த வகையில் உங்கள் குழந்தை ஒன்றை படித்துமுடித்தப் பிறகு, அதை திரும்பவும் அதனிடம் கேட்கவும். அப்போது, தான் படித்த விஷயத்தை, அதனுடன் தொடர்புடைய அம்சங்களுடன் இணைத்து சொல்லும் திறனை உங்கள் குழந்தைப் பெறும். உதாரணமாக, ஒரு கதையைப் படித்திருந்தால், அதனோடு தொடர்புடைய கதாப்பாத்திரங்கள் மற்றும் பிற கருத்தாக்கங்களுடன் இணைத்து சொல்லும். இதன்மூலம், அந்த கதையானது, குழந்தையின் நினைவில் நீண்டகாலம் மறக்காமல் பசுமையாக நிலைத்திருக்கும்.
மூளையிலுள்ள சைனாப்டிக் இணைப்புகள் தூண்டப்படுகையில் அல்லது இருக்கும் இணைப்புகள் வலுப்படுத்தப்படுகையில், நினைவுகள் உருவாகின்றன. இந்த வகையில், ஒரு குழந்தை, தான் படித்ததை ஒவ்வொரு முறை நினைவுகூறும்போதும், அந்த இணைப்புகள் வலுவடைகின்றன.
எனவே, அழுத்தமற்ற சூழலில், ஒரு விஷயத்தை ஆழமாக புரிந்து படிக்கையில், அது நல்ல முறையில் நினைவில் நிற்கிறது. ஆனால், இந்த செயல்பாடானது, தேர்வு நெருங்கும் சமயத்தில் பின்பற்றத்தக்கதல்ல. ஒரு புதிய கற்றல் செயல்பாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை.
இலக்கு மதிப்பெண் அல்ல...
மூளையின் இயல்பான செயல்பாட்டு அடிப்படையில் ஒரு விஷயத்தை கற்பதானது, மகிழ்ச்சியைத் தரும். அந்த செயல்பாட்டின் அடிப்படையிலேயே, உங்கள் குழந்தைக்கு பயிற்சியளிக்க வேண்டும். இதன்மூலம், வெறும் பள்ளி பாடப்புத்தகத்தோடு உங்கள் குழந்தை முடங்கிவிடாது.
வெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே பழக்கப்படுத்தப்பட்ட மற்றும் மதிப்பிடப்படும் குழந்தைகள், தங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையில் பெரிதாக எதையும் சாதித்ததில்லை. அவர்களால் சாதிக்கவும் முடியாது. ஆனால், அறிவின் உண்மையான ஆழத்தைத் தேடி, படிப்பதற்கு பழக்கப்படுத்தப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில அதிகமாக சாதிப்பார்கள்.
இதுபோன்ற பயிற்சிகளால், ஒரு குழந்தை அதிகபட்ச மதிப்பெண்களைப் பெறாமலும் போகலாம். ஆனால், அவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைவார்கள். ஏனெனில், இந்திய கல்வித்திட்டமானது, முழு அறிவுத்திறனை பரிசோதிக்கும் செயல்பாடாக இல்லை. இயல்பான மற்றும் ஆர்வத்துடன் கூடிய கற்றலே, குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உகந்தது.

Mar 28, 2013

கண்ணீர்ப் பிழைப்பு!


             தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் கச்சத்தீவு பிரச்னை எழுப்பப்பட்டு, அதற்கு தமிழக முதல்வர் விரிவான விளக்கமும் அளித்துள்ளார். இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும்   அவர் விவரித்துள்ளார்.
கச்சத்தீவு மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே 1974-இல் இலங்கைக்கு வழங்கப்பட்டது மிகப்பெரிய தவறு என்பதே, உலக அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. இதை எதிர்த்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு வழக்குத் தொடுத்திருந்தாலும், அந்த வழக்கு இதுவரை விசாரணைக்கு வரவில்லை. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியுமா என்பதும், கச்சத்தீவைத் திரும்பவும் இந்தியா பெற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினாலும், இலங்கையை அந்தத் தீர்ப்பு கட்டுப்படுத்துமா என்பதும் சந்தேகம்தான்.
   கச்சத்தீவு இலங்கை அரசுக்கு அளிக்கப்பட்டாலும், 1974 ஒப்பந்தத்தின்படி, இலங்கை மீனவர்களும், இந்திய மீனவர்களும் இப்பகுதியில் தங்கள் பாரம்பரிய உரிமையுடன், தீவைச் சுற்றிலும் மீன் பிடிக்கலாம், தீவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு வந்து செல்லலாம். இதற்கு யாரும் விசா, கடவுசீட்டு வைத்திருக்க வேண்டியதில்லை. ஆனால், 1976-இல் கடிதம் மூலமான திருத்தத்தில், இந்தத் தீவில் இந்திய மீனவர்கள் தங்கள் வலைகளைக் காயப்போடவும் ஓய்வு எடுக்கவும் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று மாற்றப்பட்டதாக இலங்கை அரசு சொல்கிறது.
1974 ஒப்பந்தப்படி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்த பிறகுதான் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும் சுடப்படுவதும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்று புள்ளிவிவரங்கள் மூலம் அறியலாம்.ஆனால், இந்தச் சம்பவங்கள் அதிகரிக்கக் காரணம் கச்சத்தீவு மட்டுமே அல்ல. இதை முழுமையாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றால் 1974-லிருந்து 2013 வரையிலான காலகட்டத்தை இலங்கையில் விடுதலைப் புலிகள் ஆதிக்கம் செலுத்திய காலம்; கரும்புலிகள் இக்கடற்பரப்பை ஆதிக்கம் செய்த காலம்; தற்போது இலங்கையில் விடுதலைப் புலிகள் இல்லாத காலம் என மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.
    இலங்கை விடுதலைப் புலிகள் கொரில்லாப் போர் தொடங்கியபோது, அவர்களுக்கான உதவிகள் தமிழ்நாட்டிலிருந்துதான் வருகின்றன என்பதால் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர் படகுகள் ஒவ்வொன்றையும் சந்தேகத்துடன் அணுகினர். கடத்தல்காரர்களாகக் கருதினர். தமிழ்நாட்டுக்குச் செல்லும் அல்லது திரும்பும் புலிகளாகக் கருதினர். இதனால் கண்மூடித்தனமாக தாக்குதல் கடலில் நடத்தப்பட்டது. அப்பாவி மீனவர்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.
        விடுதலைப் புலிகளின் கடற்படையான கரும்புலிகள் ஆதிக்கம் பெற்றபோது, இந்திய மீனவர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, இலங்கைக் கடற்படை தாக்கப்படுவதாக இலங்கை ராணுவம் புகார் கூறியது. அப்போதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது.
இப்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலை. இப்போதைய சிக்கல் வேறுவிதமாக மாறியிருக்கிறது. இத்தனை காலமாக மீன்பிடிப்பதற்கான தடையாலும், உள்நாட்டுப் போரினாலும் அச்சமடைந்து ஒதுங்கிநின்ற இலங்கை மீனவர்கள் தற்போது மீண்டும் மீன்பிடித் தொழிலைத் தொடங்கியுள்ளனர். இலங்கைக் கடற்பரப்பில்தான் அதிக மீன்வளம் இருக்கிறது என்பதால், இந்திய மீனவர்கள் எல்லைதாண்டிப்போய், இலங்கை மீனவர்களுக்குப் போட்டியாக மீன் பிடிக்கின்றனர்.
தமிழகத்தில் நாம் எவ்வாறு, இலங்கைக் கடற்படையின் அட்டூழியத்தைக் கண்டித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசைக் கோருகிறோமோ அதுபோன்று, இலங்கை மீனவர்களும் தங்கள் அரசிடம் இந்திய மீனவர்களின் அத்துமீறல், மீன்கொள்ளை ஆகியவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோருகின்றனர்.இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு இலங்கைக் கடற்பரப்பில் எதுவரையிலும் இந்திய மீனவர்கள் சென்று மீன்பிடிக்கலாம், எத்தனை லட்சம் டன் மீன்களைப் பிடிக்கலாம், எத்தனை விசைப்படகுகளை அனுமதிக்கலாம் என்பது குறித்த ஒப்பந்தம் போடுவதாகத்தான் இருக்க முடியும். கச்சத்தீவு மீதான உரிமை கிடைத்தாலும்கூட, இலங்கைக் கடற்பரப்பில் மட்டுமே மீன்வளம் அதிகம் என்பதால், இந்த ஒப்பந்தம் காணப்படாமல் பிரச்னைக்கு முடிவு வராது.இதில் இன்னொன்றும் நாம் பார்க்க வேண்டும். 1974-இல் இருந்த படகு எண்ணிக்கையைவிட இப்போதுள்ள படகு எண்ணிக்கை பல ஆயிரம் மடங்கு உயர்ந்துவிட்டது. ராமேஸ்வரம் மீனவர்கள் மட்டுமல்லாமல், நாகை, காரைக்கால் மீனவர்கள்தான் அதிகமான படகுகளில் செல்கிறார்கள். அதே கடற்பரப்பு, அதே மீன்வளம், ஆனால் பல்லாயிரம் படகுகள். இந்தப் படகுகள் பலவும் அரசியல் புள்ளிகளுக்கும், அவர்களது உறவினர்கள், பினாமிகள், ஆதரவாளர்களுக்கும் சொந்தமானவை. அவர்களும், மீன்பிடித் தொழில், மீன் ஏற்றுமதி என்று பல கோடி ரூபாய் லாபம் ஈட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
         இந்தப் படகு முதலாளிகள் ஒருநாளும் கடலுக்குள் சென்று வலைவீசியவர்கள் அல்ல. துப்பாக்கித் சூட்டில் சாகிறவன் மட்டும் மீனவன். ஒருவேளைக் கஞ்சிக்காக, அலைகடல்மேலே அலையாய்க் கிடந்து உயிரைக் கொடுப்பவர்கள் அவர்கள்தான். முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் அதுதான் அவர்கள் வாழ்க்கை.
       இத்தனை நாளும் போரால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரமும் கடல்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்திய அரசு வழங்கும் நிவாரணங்கள் ராஜபட்ச அரசால் தென் இலங்கைவாழ் சிங்களர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தத்தான் பயன்படுகிறது என்கிற நிலையில், இலங்கையில் வாழும் தமிழ் மீனவர்களின் பிரச்னையையும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டிய கடமை நமக்கு உண்டு.
இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை பெற்றுத் தருவதோடு, எத்தனை படகுகள் அங்கே செல்ல வேண்டும் என்பதையும் தீர்மானிப்பதாக, உரிமங்கள் வழங்குவோராக தமிழக அரசு இருக்க வேண்டும். அதுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும்.

Mar 27, 2013

நடிப்பில் ஆர்வமா?

ஒரு கதையின் கதாப்பாத்திரத்தை, ஒரு மேடையிலோ, தொலைக்காட்சி அல்லது திரைப்படத்திலோ பேசுதல் அல்லது பாடுதல் மூலம் வெளிப்படுத்துபவர் நடிகர்.
கவர்ச்சி, விளம்பரம், புகழ், ஏராளமான பணம் மற்றும் எங்கு கண்டாலும் ஓடிவரும் ரசிகர் கூட்டம் என்ற உச்ச நிலையில் ஒரு நடிகரோ, நடிகையோ இருந்தாலும், நடிப்புத் தொழிலில், கடின உழைப்பின் மூலமும், புத்திசாலித்தனமாக திட்டமிடுதலின் மூலமும்தான் வெற்றிபெற முடியும்.
இத்துறைக்கு தேவைப்படும் தகுதிகள்: முதலில் நடிப்பின் மீது அதீத ஈடுபாடும், காதலும் இருக்க வேண்டும். நல்ல தோற்றம், படைப்புத் திறன், கற்பனைத் திறன், நல்ல தகவல்-தொடர்புத் திறன், அறிவுக்கூர்மை, உடல் வலிமை போன்ற பலவித அம்சங்கள் அவசியம்.
பலவித ரசனைகளும், பழக்கவழக்கங்களும் கொண்ட குழுக்களுடன் இணைந்துப் பணியாற்றும் தன்மை வேண்டும். கற்றலில் பொறுமை, ஒத்திகைப் பார்த்தல் மற்றும் புதிய விஷயங்களை சோதித்துப் பார்க்கும் தைரியமும், திறமையும் இருக்க வேண்டும்.
தன்னம்பிக்கையும், வரிகளை விரைவாக மனனம் செய்யும் திறமையும், சந்த நயம், பிரமாதமான நடிப்புத் திறன் போன்ற பல திறமைகள் முக்கியம்.
தேவைப்படும் திறன்கள்: சிலருக்கு இயல்பாகவே நடிப்புத் திறன் நன்கு அமையப் பெற்றிருக்கும். உணர்வுகளை தெரிவிக்கும் விதமாக சிறந்த உடலசைவுகளை உண்டாக்கும் திறன், பல்வேறு விதமான உணர்ச்சிகளை வடிக்கும் திறன், கதை மற்றும் காட்சியுடன் ஒன்றிவிடும் திறன், பலவிதமான மொழிநடைகள் பற்றிய அறிவும், அதனுடனான அனுபவம், உடல்மொழியை வெளிப்படுத்தும் திறன், கவர்ந்திழுக்கும் குரல், தெளிவான பேச்சு, நல்ல கற்பனைத் திறன், ஒன்றை கிரகித்து அதன்படியே செயல்படும் திறன் போன்ற பலவித திறன்கள் நடிப்புத் துறைக்கு அவசியம்.
சம்பளம்: இந்த துறையில் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் என்று எதுவுமில்லை. உங்களின் நடிப்புத்திறன் மற்றும் அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்து, சம்பளமும் மாறுபடும். நீங்கள் எந்தளவிற்கு சிறப்பாக செயல்படுகிறீர்களோ, அந்தளவிற்கு சிறப்பான சம்பளம் உண்டு. மேலும் இடத்திற்கு இடம் வருமானம் மாறுபடும். நீங்கள் புகழின் உச்சியில் இருக்கும்போது, உங்களின் சம்பளமும் உச்சத்தில் இருக்கும்.

சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:

Film and Television Institute of India, Pune (www.ftiindia.com)
National school of drama, Delhi (www.nsd.gov.in)
Asian academy of Film and TV, Noida (www.aaft.com)
ZIMA Mumbai (www.zimainstitute.com)
Delhi film institute, New Delhi (www.delhifilminstitute.com)

Mar 25, 2013

அக்டோபர் மாதம் முதல், ரோமிங் கட்டணம் நீக்கப்படும்; அமைச்சர், கபில் சிபல்

டில்லியில் நடந்த, தேசிய, பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டில், அமைச்சர், கபில் சிபல் பேசியதாவது: ""அக்டோபர் முதல், ரோமிங் கட்டணம் அகற்றப்படும். நாட்டில், எங்கிருப்பவர்களும், எந்த இடத்திற்கும் கூடுதல் கட்டணம் இல்லாமல் பேசலாம்,'' என, மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர், கபில் சிபல் கூறினார். இணையதளம், சுதந்திரமான ஊடகமாக தொடர்ந்து விளங்கும். அதை கண்காணிக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. கம்ப்யூட்டர் சிப் உற்பத்திக்கு, முக்கியத்துவம் கொடுக்கப்படும். வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், இந்தியாவில், கம்ப்யூட்டர் சிப் தயாரிக்க முன் வந்தால், வரிச்சலுகை போன்றவை வழங்கப்படும். அக்டோபர் மாதம் முதல், ரோமிங் கட்டணம் நீக்கப்படும்; நாட்டில் எந்த பகுதியில் இருப்பவர்களும், பிற பகுதியில் உள்ளவர்களை, எத்தகைய கூடுதல் கட்டணமும் இன்றி தொடர்பு கொள்ள முடியும். இவ்வாறு, அமைச்சர், கபில் சிபல் கூறினார்.