Dec 31, 2012

புலித்தடம் தேடி.. தமிழ் பிரபாகரன் !- பாகம் 02

இலங்கை ஒரு சொர்க்க பூமி. மனித குலம் நிறைந்து வாழ​வேண்டிய அற்புத பூமி. ஆனால், இன்று அப்படி இல்லை. இனவாதம் அந்த சொர்க்க பூமியை சுடுகாடு ஆக்கிவிட்டது!
ஒரு மனிதன், மனிதப் பிறப்புக்குரிய அன்போடும், அறிவோடும், பண்போடும் இலங்கையில் வாழ முடியாது என்று ஒரு பத்திரிகையாளர் எழுதினார்.
இது, தமிழர்களுக்கு மட்டுமான நியதி அல்ல, சிங்களவர்களுக்கும் தான்.
அந்த பூமியில் தீபாவளி அன்று காலை கால் ஊன்றினேன். அரக்கம் மிகுந்த நரகாசுரனை வதம் செய்ததால் தீபாவளியைக் கொண்டாடுகிறோம் என்பது இதிகாசக் கதை. அதே தீபாவளி தினத்தன்று தமிழர் நிலைமையை அறியச் சென்றது முரண் சுவை!
பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இறங்கினேன்.
சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளால் இரத்தினக் கற்களுக்கு வரி விலக்கு, அதிகப்படியான பணம் கொண்டு வருபவர்களுக்கு வரி விலக்கு’ என்றெல்லாம் இப்பொழுது இலங்கையில் பல விலக்குகள் வெளிநாட்டினருக்கு உண்டு.
சுற்றுலா’ என்ற மந்திரச் சொல்லை வைத்தே சர்வதேசத்திடம் இருந்து இலங்கை தன்னைக் காத்துக்கொள்கிறது. உள்நாட்டுக் கடவுச்சீட்டுகளின் உடைமைகளுக்குக் கடுமையான சோதனைகள் இருந்தன.
'இந்தியக் கடவுச்சீட்டு’ என்பதாலும் முதல் முறை செல்வதாலும் பெரிய சோதனைகள் இலங்கைக்குள் நுழையும் போது இல்லை.
அங்குள்ள தமிழ் நண்பர் வரவேற்க, வெளியே வந்தேன். புத்தபிரான் வெண்மை நிறத்தில் அமர்ந்து இருந்தார். 'இலங்கையில் புத்தபிரான் வீதிக்கு வீதி அமர்ந்திருப்பார். போருக்குப் பிறகு, தாய்லாந்து கொடுத்த 20,000 புத்தர்கள் இலங்கை முழுதும் உள்ளனர்’ என்றார் நண்பர்.
விமான நிலையத்தில் இருந்து கொழும்பு 34 கிலோ மீட்டர். கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு புத்தகக் கடைக்குச் சென்றேன். அங்கு பணியாற்றும் சிங்களப் பெண்ணிடம், 'மகாவம்சம்’, 'புத்தர் வரலாறு’ புத்தகங்கள் உள்ளதா?’ என்றேன். அவர், 'தருகிறேன்’ என்று சொல்லிவிட்டு பேச்சுவாக்கில் 'நீங்கள் ரெட் க்ரோஸா?’ என்று சந்தேகித்தார். 'எந்த நாடு நீங்கள்?’ என்றும் விசாரித்தார். எல்லோரும் எல்லோரைப் பற்றியும் விசாரிக்கிறார்கள்.
இங்கு யார் யாரெல்லாம் புத்தகம் வாங்கினார்கள் என்பதைக்கூட இராணுவம் வந்து விசாரிக்கும். அதனால்தான் கேட்கிறார்'' என்றார் நண்பர்.
இங்கே எல்லாமே புலிதான். அரசாங்கத்தை எதிர்ப்பவர் தமிழராக இருந்தால் தமிழ்ப் புலி. சிங்களவராக இருந்தால் சிங்களப் புலி என்றுதான் சொல்கிறார்கள்.
இப்படி இலங்கை அரசின் பாசிசக் கோட்பாடுகளை எதிர்த்து அதன் பாதிப்பால் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட பத்திரிகையாளர்கள் பாஷ்னா அபிவர்தனே, பிரட்ரிகா ஜான்ஸ் போன்றோர்தான் சிங்களப் புலிகளுக்கான எடுத்துக்காட்டு. அதனால்தான் யாரைப் பார்த்தாலும் சந்தேகமாகப் பார்க்கிறார்கள்... பயப்படுகிறார்கள்!'' என்றார் நண்பர்.
இலங்கைக்கு இந்தியா நட்பு நாடுதானே. அதனால் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு மரியாதை அதிகம் இருக்கும் அல்லவா?'' என்று நண்பரைக் கேட்டேன்.
இலங்கையை இந்தியா வேண்டுமானால் நட்பு நாடு என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், நடைமுறை நடவடிக்கைகள் அப்படி இல்லை. ஒரே ஒர் உதாரணம் சொல்கிறேன். ஏற்றுமதி செய்யும் இந்திய மகிழுந்து (கார்) நிறுவனங்களுக்கு ஓர் முட்டுக்கட்டையை இலங்கை அரசாங்கம் போடப்போகிறது.
இப்போது, இலங்கையில் சாதாரண டாடா நானோ காரின் விலை 16 லட்சம். (இலங்கை ரூபாய்க்கு) அடேங்கப்பா என எச்சில் விழுங்காதீர்கள். இலங்கையில் மகிழுந்துக்கான வரி 200 சதவிகிதம். இந்திய நிறுவனங்களுக்கு வரியை மேலும் உயர்த்தப் போகிறார்கள்.
ஆனால், ஜப்பான் நிறுவனங்களுக்குக் குறைக்கப் போகிறார்கள். இலங்கை அரசு தன் பங்காக தங்கள் நாட்டிலேயே ஒரு மகிழுந்து நிறுவனத்தையும் கொண்டு வந்துள்ளது.
இதனால், இந்தியாவின் மகிழுந்து நிறுவனங்களுக்கும் அரசுக்கும் பொருளாதார வழியில் பெரும் அடிவிழப் போகிறது. நட்புநாடு இப்படித்தான் நடந்துகொள்ளப் போகிறது என்றார்.
கொழும்பு புறக்கோட்டை வீதியில் நடந்து​கொண்டே, சில புகைப்படங்கள் எடுத்தேன். ஒரு பேருந்தைக் கடக்கும்போது பேருந்துக் கண்​காணிப்​​பாளர் ஒருவர் தமிழில், ''நில்லுங்க'' என்றார். நான் விழித்தேன். இது நகரப் பகுதி. இப்படி எல்லாம் படம் பிடிக்கக் கூடாது. வெளி​நாட்டி​னரும் பத்திரிகையாளர்களும் மட்டும்​தான் மக்கள் அதிகமுள்ள இடத்தில் படம் எடுக்க அனுமதிக்கப்படுவர்  என்றார்.
மாலையில் கொழும்புக் கடற்கரைக்குச் சென்றேன். வழியில்தான் இலங்கையின் பழைய நாடாளுமன்றமும் மகிந்த ராஜபக்‌சவின் அலரி மாளிகையும் இருக்கின்றன.
சாலை ஓரங்களில் மணல் மூட்டைகள் மெகா உயரத்துக்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. சுனாமி முன்னெச்சரிக்கைக் கட்டமைப்பாக இருக்கும் என்று முதலில் நினைத்தேன். பின்னர்தான் தெரிந்தது அது கார் பந்தயத்துக்கான ஏற்பாடாம்.
சிறந்த சர்வதேச இளைஞன் என்று 2012-ம் ஆண்டு இந்திய அரசின் விருதைப் பெற்ற நாமல் ராஜபக்‌ச தான் (மகிந்தாவின் மகன்) இந்த விளையாட்டுகளை இலங்கையில் அறிமுகப்படுத்திப் பங்கேற்கிறார். இந்த இரவு நேர கார் பந்தய ஏற்பாட்டால் கொழும்பு சாலைகள் எல்லாம் மணல் மூட்டைகளால் நிரம்பிக் கிடந்தன.
உயர் பாதுகாப்புப் பகுதியான காலிச் சாலையில் (Galle Road) பயணிக்கிறேன். பழைய இலங்கை நாடாளுமன்றத்துக்கு மிக அருகிலேயே 'ஷரிங்லா’ என்ற ஹாங்காங் நட்சத்திர சொகுசு விடுதியின் கட்டுமானப் பணி நடந்துகொண்டு இருந்தது. 2015-ம் ஆண்டு திறக்கப் போகும் அந்த சொகுசு விடுதி இலங்கைக்கு வந்த கதை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்கள்.
பொதுவாகச் சொன்னால் இலங்கை குறிப்பாக கொழும்பு நகரம், இப்போது மெல்லமெல்ல சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்கிறது. தொழில் முதலீடுகள் என்ற பெயரால் இந்தியாவின் பகை நாடான சீனா, முழுமையாக தனது ஆக்டோபஸ் கரங்களை இலங்கையில் ஊன்றி விட்டன.
இந்த விடுதி கட்டப்பட்டுவரும் மொத்த இடம் 10 ஏக்கர். இதை, இலங்கை அரசிடம் இருந்து 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் வாங்கினார்கள். இலங்கை அரசின் கணக்குப்படி 408 மில்லியன் டொலர்களை சொகுசு விடுதி கட்டுமானத்துக்கு முதலீடு செய்துள்ளது, ஷரிங்லா என்ற சீன நிறுவனம்.
அதேபோல் அம்பாந்தோட்டையில் 115 ஏக்கரில் ஒரு விடுதியைத் திறக்க இருக்கிறார்கள். அதற்கு 120 மில்லியன் டொலர்களை ஒதுக்கி உள்ளது. இந்த நன்றிக்கடன் எல்லாம் போதாது என்று கொழும்பின் பெரும் கடல் பகுதியையே சீன அரசுக்கு விற்றுவிட்டது மகிந்த அரசு.
சீனாவின் அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும் சீனர்கள்தான் தொழிலாளர்கள். இலங்கை ஆட்களை வேலைக்கு வைப்பது இல்லை. விரைவில் குட்டிச் சீனாவாக இலங்கை உருவெடுக்கும். அதற்கான அடித்தளத்தை சீனா அமைத்து விட்டது என்கிறார்கள்.
கொழும்பு கடற்கரையில் என்னைச் சந்தித்த இலங்கைப் பத்திரிகையாளர் ஒருவர் இதுகுறித்து சில விரிவான தகவல்களைத் தந்தார். ''புலிகளுடனான யுத்தம் 2009-ம் ஆண்டு முடிந்து விட்டது. தமிழர்கள் தங்களது உரிமைகளை இழந்து அனாதை ஆக்கப்பட்டது குறித்து இலங்கை அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை.
ஆனால், இலங்கையில் அடுத்த சில ஆண்டுகளுக்குள் ஒரு பெரும் யுத்தம் நடக்க இருக்கிறது. அது பொருளாதார யுத்தம். அதில் மனித இழப்புகள் இருக்காது. ஆனால், இலங்கையே சிங்களவர்கள் கையில் இருந்து கைநழுவப் போவதைத் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது.
ஒரு பக்கம் சீனாவும் இன்னொரு பக்கம் அமெரிக்காவும் நின்று இலங்கையைக் கபளீகரம் செய்யப் பார்க்கின்றன. சமீபத்தில் சீனா - இலங்கைக்கு இடையே 16 ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
ஏற்கெனவே, அம்பாந்தோட்டை விமான நிலையம், துறைமுகம், நுரைசோலையில் அனல் மின் நிலையம், கொழும்பு துறைமுகம் விரிவாக்கம், ரயில் பாதை புனரமைப்பு வேலைகளை சீனா செய்துவருகிறது.
இதை சீனாவிடம் கொடுக்க வேண்டாம். நாங்கள் செய்துதருகிறோம்’ என்று இந்தியா முன்வந்தது. அப்போது, இந்தியாவுக்கும் சில திட்டப் பணிகளை ஒதுக்கினர். சம்பூர், காங்கேசன்துறை, பலாலி, வட பகுதிப் புனரமைப்பு ஏற்பாடுகளை இந்தியா செய்து கொடுத்தது. சீனாவைக் காட்டி இந்தியாவிடமும், இந்தியாவைக் காட்டி சீனாவிடமும் அபிவிருத்திப் பணிகளுக்கான பணத்​தைச் சுரண்டிவருகிறது இலங்கை.
இந்தநிலையில், எப்படியாவது உள்ளே நுழைந்து விட அமெரிக்காவும் துடிக்கிறது.
இலங்கையில் எண்ணெய் வளம் உள்ளதா?’ என்பதை ஆராய்ச்சி செய்ய அமெரிக்கா விரைவில் வர இருக்கிறது. அவர்கள் வந்தால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் நேரடி மோதல் நடக்கும். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா சில முயற்சிகளை எடுப்பதே இலங்கையை அச்சுறுத்துவதற்காகத்தான்.
புலிகள் அமைப்பை அழித்து விட்டதாக இலங்கை அரசு வெற்றிச் சின்னங்களை அமைத்தாலும் அடுத்து எதிர்கொள்ளப் போகும் பேராபத்துகளை இலங்கை அரசாங்கம் உணர்ந்ததுபோல் தெரியவில்லை.
இந்தப் பன்னாட்டுத் திட்டங்களுக்காக அரசுக்கு நெருக்கமான முக்கிய குடும்பத்துக்கு தரப்பட்டுள்ள கையூட்டு மட்டும் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்பதால், ஆபத்தை உணராமலேயே தலையாட்டியபடி தாரை வார்க்கிறார்கள்'' என்கிறார். இதைக் கேள்வி கேட்பவர்கள் அனைவரும் இலங்கை அரசாங்கத்தின் எதிரிகளாகப் பார்க்கப்படுகிறார்கள். அதில் தமிழர், சிங்களவர் என்ற வித்தியாசம் இல்லை.
மௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார, 'முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம், ராஜபக்‌சவின் காலத்திலும் கட்ட​விழ்க்கப்பட்டு உள்ளது. தங்களுக்கு அழுத்தத்தைக் கொடுப்பவர்களுக்கு எதிராக அரசு தன் பயங்கர​வாதத்தைக் கட்டவிழ்க்கிறது. இதனால் வடக்கில் தமிழ் இளைஞர்கள், நீதித்துறை பிரமுகர்கள் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர். பிரேமதாச தன் காலத்தில் நடந்த அரசப் பயங்கரவாதத்தின் வன்முறைகள் பற்றி ஊடகங்களிடம், 'தனக்கு எதுவும் தெரியாது’ என்றே திரும்பத் திரும்பச் சொல்வார். அதேபோல் இப்போதுள்ள அரச பயங்கரவாதம் பற்றியும் ராஜபக்‌ச 'எதுவும் தெரியாது’ என்று சொல்லப் போகிறாரா?'' என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.
இதுதான் இன்றைய கொழும்புவின் அரசியல் யதார்த்தம்.
அனைத்தும் அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்டது. அரசாங்கம் ராஜபக்சவுக்குக் கட்டுப்பட்டது என்பதுதான் இன்று இலங்கையில் அமுலில் இருக்கும் ஒரே கொள்கை.
இதற்குக் கட்டுப்படாததாக நீதித்துறை இருப்பதால், அந்த நீதித் துறையையும் வளைக்கும் காரியங்கள் தொடங்கி விட்டன. நீதித் துறையை நாடாளுமன்றத்தின் கீழ் கொண்டுவர மகிந்த அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அப்படி மாறினால் நீதிவான்கள் அரசியல்வாதிகளின் கட்டுப்பாடுகளுக்கு இணங்க வேண்டும் என்ற நிலைமைக்கு இலங்கை நீதித்துறை சென்றுவிடும்.
நீதித்துறையில் அரசின் தலையீட்டை விமர்சித்துள்ள ஜே.வி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, ''நாட்டு மக்கள், மகிந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்தை வழங்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கித்தான் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுள்ளது மகிந்த அரசு. மக்களால் வழங்கப்படாத பெரும்பான்மை பலத்தை, அரசாங்கம் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. நீதித் துறையை அரசு தனது அத்துமீறலுக்குப் பயன்படுத்தினால், சர்வதேச சமுதாயம் பார்த்துக்கொண்டு சும்மா இராது'' என்று சீறியுள்ளதுதான், சிங்களவர்கள்கூட எத்தகைய சினத்தில் உள்ளனர் என்பதற்கு உதாரணம்.
மறுநாள் காலை, யாழ்ப்பாண பேருந்தில் என் பயணம் தொடங்கியது. நடுநிசி நெருங்கிக் கொண்டு இருக்க, இரத்தச் சிவப்புத் துண்டுடன், 'நீடுழி வாழ்க’ என ராஜபக்ச யாழ்ப்பாணத்துக்குள் வரவேற்றார்.

ஊடறுத்துப் பாயும்...
ஜூனியர் விகடன்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!


Dec 28, 2012

மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் வருவாய் ரூ.50 லட்சம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் டிசம்பர் மாத உண்டியல் வருவாய் ரூ.50 லட்சம் கிடைத்துள்ளது. கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான பி.ஜெயராமன் தலைமையில் கோயில் உண்டியல்கள், உபகோயில்களின் உண்டியல்களில் உள்ள காணிக்கைகளை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு உண்டியல் மூலம் ரூ. 50 லட்சமும், அன்னதான உண்டியல் மூலம் ரூ.90 ஆயிரம் கிடைத்துள்ளது. கோயில் உண்டியல்களில் பக்தர்கள் தாலிச் சங்கிலி, தங்கக்காசுகள் காணிக்கையாகவும் அளித்துள்ளனர். அதன்படி 360 கிராம் தங்கமும், 450 கிராம் வெள்ளிப் பொருள்களும் கிடைத்துள்ளன. உபகோயிலான தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 2.40 லட்சமும், அன்னதான உண்டியல் மூலம் ரூ.36 ஆயிரமும்,செல்லூர் திருவாப்புடை யார் கோயில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.26 ஆயிரம் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். வருண பாராயணம் மழைவேண்டி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த 12-ம் தேதி சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபம் அருகே வருணபாராயண சிறப்பு யாகம் தொடங்கியது. இதில் 7 நதிகளது புனித நீர் அடங்கிய கலசங்கள் யாகசாலையில் பூஜை செய்யப்பட்டு, வேதபாராயணம் முழங்க, பொற்றாமரைக் குளத்தில் புனிதநீர் கலக்கப்பட்டது. வருணபாராயண நிறைவு நிகழ்ச்சியானது புதன்கிழமை நடைபெற்றது. இதில் ,பத்துக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு, நதிகளது புனிதநீருக்கு சிறப்புப் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த நீரானது பொற்றாமரைக்குளத்தில் கலக்கப்பட்டது. பாராயணத்தின் நிறைவு நாளான புதன்கிழமை மாலை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றுடன் லேசான மழையும் பெய்தது பக்தர்களை பரவசப்படுத்தியது.

Dec 27, 2012

தி.மு.க. மவுனம் சாதிப்பது ஏன்? நாஞ்சில் சம்பத் கேள்வி

உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று தமிழக முதல்வர் கேட்ட பின்னரும் அதை எதிரி நாடான பாகிஸ்தானுக்கு மத்திய அரசு அனுப்பி வருகிறது. இந்த விஷயத்தில் தி.மு.க. மத்திய அமைச்சர்கள் மவுனமாக இருப்பது ஏன் என்று அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பி உள்ளார். 
அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது, 
பாகிஸ்தான் நமது எதிரி நாடு என்று நாம் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் பாகிஸ்தானுக்கு உபரி மின்சாரம் 5 ஆயிரம் மெகாவாட்டை மத்திய அரசு அனுப்புகிறது. டெல்லியில் உபரி மின்சாரம் இருக்கிறது. அதை தமிழகத்திற்கு அளியுங்கள் என்று தமிழக முதல்வர் கேட்டும் அதை மத்திய அரசு மறுத்து வருகிறது. காரணம் தமிழகத்துக்கு மின்சாரம் தருவதை தி.மு.க. தலைவர் கருணாநிதி விரும்பவில்லை. 
பாகிஸ்தானுக்கு மின்சாரம் தரப்படுவதை அறிந்தும் மத்திய அரசில் பதவி வகிக்கும் தமிழக அமைச்சர்கள் வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்? அதை தந்து விட்டால் வரும் மக்களவை தேர்தலில் அவர்கள் செல்லாக்காசாகி விடுவார்கள் என்பதால்தான். இப்போது தமிழக அரசுக்கு மின்சாரம் மட்டுமே முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதுவும் தீர்ந்து விட்டால் எப்படி தேர்தலை சந்திப்பது என்பதற்காக தி.மு.க அமைச்சர்களாலேயே தமிழகத்திற்கு மின்சாரம் தருவது தடை செய்யப்படுகிறது. காவிரி டெல்டா மக்களின் குறைகளை களைய தமிழகத்துக்கு அதிக மின்சாரம் கொண்டு வர மின் உற்பத்தியை அதிகரிக்க முதல்வர் ஜெயலலிதா திட்டமிடுகிறார் என்றார்.

Dec 26, 2012

குஜராத் முதல்வராக 4வது முறையாக பதவியேற்றார் நரேந்திர மோடி.விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா !

குஜராத் மாநிலத்தின் முதல்வராக 4வது முறையாக பதவியேற்றார் நரேந்திர மோடி. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 182 இடங்களில் 115ஐ கைப்பற்றி ஆளும் பா.ஜ., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து சாதனை படைத்தது. குஜராத் சட்டசபை பா.ஜ., தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, குஜராத் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று காலை நடந்தது. இதற்காக ஆமதாபாத்தில் மிகப் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ‌‌மொத்தம் 1 லட்சம் பேர் அமரும் வசதி கொண்ட ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பதவியேற்பு விழாவையொட்டி, மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். இதற்காக அவர் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் ஆமதாபாத் சென்றடைந்தார். சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தேசிய தலைவர் நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், வெங்கய்யா நாயுடு, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். நரேந்திர மோடிக்கு, கவர்னர் கமலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில், இன்று காலை தனது டுவிட்டர் இணையதளத்தின் வாயிலாக தொண்டர்களிடையே உரையாடிய மோடி, எதிர்கால இந்தியா சிறப்பாக அமைவதற்கான ரகசியம், அதன் ஒருங்கிணைப்பு மற்றும் உறுதிப்பாட்டிலேயே உள்ளதாக தெரிவித்துள்ளார். மோடியின் இந்த பேச்சு, தேசிய அளவில் அவர் தன்னை நிலைநிறுத்துவதற்கான வழிகளை நோக்கி செல்வதாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

புலித்தடம் தேடி...மகா. தமிழ்ப் பிரபாகரன் 1

புலித்தடம் தேடி... பாகம் 01
இதுதான் நீங்கள் கேட்ட கண்ணி வெடிகள் அகற்றும் பகுதி!’ என்று ஓட்டுனர் இயல்பாகத்தான் சொன்​னார். ஆனால், எனக்கு கண்ணில் வெடித்தது​போல் இருந்தது. எத்தனை உயிர்களைக் காவு​வாங்கிய இடம்! கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு பரந்தன் சந்தியைக் கடக்கையில், மனதில் பெரும் வெறுமை. அந்தச் சாலையின் வலதுபுறமாகச் செல்வதுதான் முல்லைத்தீவை அடையும் வழி. 'சின்ன உப்பளம்’ பகுதியில் நின்றது பேருந்து.
நான் இறங்கிய இடத்தில் ஓர் உணவகம். இராணுவத்துக்குச் சொந்தமானது என்ற மிலிட்டரி மிடுக்கு அந்த உணவகத்துக்கு இருந்தது.
ஆயுதம் ஏந்தியபடி புலி பதித்த தடத்திலும், ஆக்கிரமிப்பாய் இன்று சிங்கள இராணுவம் குவிந்துள்ள பாதையிலும் கண்ணி வெடிகள் இருக்கின்றன. இனியும் யாருக்காக என்ற வேதனைக் கேள்வியுடன், மரண நெடுஞ்சாலையான 'ஏ9’ சாலையில் நடக்கிறேன்.
கண்ணி வெடிகளை அகற்றும் பணி நடக்கிறது. எல்லா வேலைகளையும் சிங்களவர்களுக்கே தரும் இலங்கை அர​சாங்கம், உயிருக்கு ஆபத்தான கண்ணி வெடிகள் அகற்றும் பணியில் தமிழர்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
நொடி கவனம் சிதறி​னாலும் உயிர் போகும் வேலை. அதைப் படம்பிடித்துக்கொண்டே நகர்ந்தேன். தூரமாய் ஒரு கூடாரம் தெரிந்தது. இன்னும் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்த்தபோது அங்கேயும் இராணுவம்.
நான் நின்றுகொண்டு இருந்த இடத்தைப் பார்த்தேன். மணல் நிறைந்த தடம் அது. கண்ணுக்கெட்டும் தூரத்தில் தண்ணீரும் இராணுவத்தின் யுத்த வெற்றிச் சின்னமும் தென்பட்டது.
எந்த மக்களையும் பார்க்க முடியவில்லை. நடந்தே தண்ணீரை ஊடறுத்துச் சென்று பாதையை கடக்க முடிவெடுத்து, கொஞ்ச தூரம் நடந்திருப்பேன். ஒரு பேருந்து வந்தது. அதில் ஏறினேன்.
சில நிமிடங்களில் வந்தது, சிங்களர்​களுக்கான வெற்றிச் சின்னம். அப்போது மணி காலை 9.30. இராணுவ டெம்போவில் இருந்த ஆயுதங்கள் இறக்கப்​பட்ட நேரத்தில், நான் தனி ஆளாக அந்த இடத்தில் நின்றேன். என் மீது இராணுவப் பார்வைகள்.
யார் நீ? என்றது ஒரு குரல்.
இலங்கைக்குச் சுற்றுலா வந்துள்ளேன் என்றேன் சாதாரணமாக.
போ'' என்று கை அசைத்தனர். நான் நுழை​வதற்குள் சிங்களச் சுற்றுலாவாசிகள் சுமார் 30 பேர் ஒரு வானில் வந்து இறங்கினர். அவர்களோடு நானும் நுழைந்தேன்.
இராணுவத்தைச் சேர்ந்த மூன்று பேர் செல்போன் பேசியவாறே எங்களுடன் வந்தனர்.
சிங்களவர்களைப் போன்றே, நானும் அந்த வெற்றிச் சின்னத்தைப் படம் எடுத்தேன். இராணுவத்தினர் சிங்களவர்களுக்கு எதையோ சொல்லிக்கொண்டு இருந்தனர்.
அவர்களுக்குச் சிங்களத்தில் சொன்னதை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ எனக்குச் சொல்ல முடியுமா? என்று கேட்டேன்.
சிங்களம் தவிர எதுவும் தெரியாது என்றனர்.
சிங்களப் பயணி ஒருவர் என்னிடம், ''இது நம் மண்ணை ஆக்கிரமித்து இருந்த புலித் தீவிரவாதிகளிடம் மீட்ட இடம். இங்கு நம் போர் வீரர்கள் பெரும் தியாகத்தைச் செய்து புலித் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றி உள்ளனர்.
நமது மண்ணை நாம் மீட்டெடுத்து உள்ளோம். நீங்கள் எல்லாம் தென் இலங்கையில் இருந்து வந்துள்ளீர்கள். இது ஆபத்து நிறைந்த இடம். சாலையை விட்டு உள்பகுதிக்குள் செல்லாதீர்கள். வெடிக்காத குண்டுகள் நிறையப் புதைக்கப்பட்டு உள்ளன'' என்று இராணுவ வீரர் சொன்னதாக ஆங்கிலத்தில் சொன்னார்.
மனித நாமத்தினால் தேசத்தின் புண்ணியத்துக்குத் தோன்றிய ஆயுதம் தாங்கிய படைத் தலைவர் அதிமேதகு மகிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையிலும் பாது​காப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலிலும் ஒருங்கிணைப்பிலும் ஏனைய இராணுவப் பிரிவுகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையால் வடக்கையும் தெற்கையும் இணைத்ததன் நினைவாய் சமாதான நினைவுத் தூபி இங்கு எழுப்பப்பட்டுள்ளது’ என்று பொறிக்கப்பட்டதை என் கண்கள் வாசித்தன.
என்னை நெருங்கிய இராணுவத்தினர் மூவர், என்னைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். நான் சொன்ன அனைத்தையும் குறித்துக்கொண்டனர். ''ஓகே மச்சான்'' என்று இரண்டு பேர் விலகிச் செல்ல, ஒருவர் மட்டும் அந்த இடத்திலேயே நின்றார்.
சில நிமிடங்களில் இருவரும் மீண்டும் வந்தனர். 'வாங்க பேசலாம்’ என்று அழைத்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பேசும் விதம் விசாரணையை நோக்கிச் செல்வதை உணர முடிந்தது. நடந்தே என்னை இராணுவச் சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.
கொஞ்ச நேரம் உட்காருங்கள். எங்கள் ஆமி மேஜர் வருவார்'' என்றார்கள்.
நான் ஏன் அவரைப் பார்க்க வேண்டும்?'' என்று கேட்டேன்.
அவர்தான் உங்களைப் பார்க்க வேண்டுமாம்'' - கிண்டலாய் சினந்தனர். அப்போது, என்னைச் சுற்றி இராணுவத்தைச் சேர்ந்த ஏழு பேர் இருந்தனர். அடுத்து பொலிஸைச் சேர்ந்த இருவர் வந்து, என்னைப் பற்றிய தரவுகளை எடுத்தனர். காக்க​வைத்து ஒரு மணி நேரத்துக்கும் மேலானது. கழிவறை செல்லும்போதும் என்னைக் காவல் காத்தனர்.
இடையில் வந்த ஒருவர், ''முள்ளிவாய்க்கால் போனீங்​களா? பிரபாகரன் செத்த இடம் நந்திக் கடல் போய்ப் பார்த்தாச்சா..?' என்று எதையோ சொல்​லிச் சென்றார்.
அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் கிளிநொச்சிப் பக்கம் இருந்து, இராணுவ ஜீப் ஒன்று வந்தது. ஐந்து பேரோடு வந்து இறங்கினார் ஓர் அதிகாரி. அவர்​களுக்குப் பின்னே மொபட்டில் இருவர் வந்தனர்.
விசாரணை தொடங்கியது. முழுக்கவும் ஆங்கிலத்​தில் பேசினர்.
எங்கு இருந்து வருகிறீர்கள்... எதற்காக வந்துள்​ளீர்கள்?''
இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து சுற்றிப்பார்க்க வந்துள்ளேன்.''
நீங்கள் இலங்கையைத் தேர்வு செய்யக் காரணம் என்ன?''
என்ன சொல்ல? '' 'லோன்லி பிளானட்’ இணை​யதளம் 2013-க்கான சிறந்த 10 சுற்றுலா நாடுகளில் இலங்கையைத் தேர்வுசெய்துள்ளது. அதன் காரணமாகவும் பயணச்செலவு குறைவு என்ப​தாலுமே இலங்கையைத் தேர்வுசெய்தேன்'' என்றேன் மையமாக.
என்று வந்தீர்கள்... என்ன பணியில் உள்ளீர்கள்?''
நவம்பர் 13 அன்று வந்தேன். ஆய்வுப் பணியில் உள்ளேன்.
இங்கே வேறு எங்கு போனீர்கள்?
யாழ்ப்பாணத்தில் உள்ள டச் கோட்டை, முருகன் கோயில்'' என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஒருவர், ''நைஸ் போன். தாங்க பார்ப்போம்'' என்று கிட்டத்தட்ட பறித்துக்கொண்டார்.
நீங்கள் எங்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ளத்தான் இப்படிக் கேட்டோம். ஏன் தனியாக வந்தீர்கள்? என்று மறுபடியும் கேட்டனர்.
அதுதான் ஏற்கெனவே சொன்னேனே! என்றேன்.
அவர் என்னைவிட்டு விலகி, தன் மேல் அதிகாரிக்கு சிங்களத்தில் என்னைப் பற்றிய விவரங்களைச் சொன்னார். 40 நிமிடங்கள் போனது. அவர்கள் என்னைப் படம் எடுத்துக்கொண்டனர். மொபட்டில் வந்த இருவரும் மறுபடியும் என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டனர். என் கடவுச்சீட்டைப் பரிசோதித்தனர். கடவுச்சீட்டில் என் பெயர், தமிழ்ப் பிரபாகரன் என்று இருந்தது.
தமிழ்ப் பிரபாகரன் என்று பெயர். அதுவும் தனியாக வந்திருக்​கிறாய்?'' என்றார்கள்.
என்னைப் பற்றி பேசும்போது ஏன் உங்களுக்குள் சிங்களத்தில் பேசுகிறீர்கள். இருவருக்கும் பொதுவான மொழியில் பேசுங்கள். நான் உங்கள் நாட்டுக்கு வந்த விருந்தாளி. சுற்றுலாவாசியை ஒரு தீவிரவாதிபோல் விசாரிக்கிறீர்கள்.
நான் இந்தக் கேள்வியை வீசிய நேரம், பொலிஸிடம் இராணுவ அதிகாரி கடும் கோபத்துடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அவர் சிங்களத்தில் பொலிஸிடம், எங்களுக்குச் சந்தேகம் இருக்கும் பட்சத்தில், யாரையும் கைது​செய்யலாம். உன்னிடம் அதைச் சொல்ல​வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
அதாவது என் மீது நடவடிக்கை எடுப்பதில் இராணுவம், பொலிஸ் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதை என்னால் உணர முடிந்தது. இராணுவ அதிகாரி தன் அதிகாரியிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது என்னிடம் தங்கள் நிலையைப் பேசிய பொலிஸ்,  உங்கள் பக்கம் தப்பு இல்லை என்றாலும், இராணுவத்தை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் எங்களை மிரட்டுகிறார்கள்.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த இடத்தைப் படம் எடுக்கக் கூடாது. நீங்கள் தனியாக வந்ததைத்தான் இராணுவம் பெரிய பிரச்சினையாகப் பார்க்கிறது. உங்களை இராணுவப் பெரியவர் கைதுசெய்யச் சொல்லி இருக்கிறார். உங்களிடம் ஆங்கிலத்தில் நன்றாகத்தான் பேசுகிறார். ஆனால் எங்களிடம் சிங்களத்தில் கைது செய்யச் சொல்கிறார் என்றார்.
டீ குடிச்சிட்டே கதைப்போம் வாங்க என்றார் இடையில் வந்த சி.ஐ.டி அதிகாரி.  அனுமதிபெற்று நுழைந்த பிறகும் மணிக்கணக்காய் விசாரணை செய்யும் உங்களை எப்படி நம்புவது? என்றேன்.
பதில் பேசாமலே அவர்களுக்குள் சிங்களத்தில் பேசினர். யாருக்கோ என்னைப் பற்றிய தகவலைப் பகிர்ந்தனர். இலங்கையில் தங்கியிருக்கும் முகவரியை மீண்டும் வாங்கிக்கொண்டு, போகலாம் என்றார் சி.ஐ.டி. அதிகாரி திடீரென.
எழுந்து நடக்க ஆரம்பித்தேன். என்னை விசாரித்த இராணுவ மேஜர் நான் பேருந்து ஏறும்வரை என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.
புலிகள் என்றாலும் கேமரா என்றாலும் சிங்கள இராணுவத்துக்கு இன்றும் அவ்வளவு பயம். அந்தப் பயத்தால்தான் தமிழ் நிலம் இன்றும் இராணுவ வசிப்பி​டமாக இருக்கிறது.
ஐந்து லட்சம் சிங்களவர்களை உள்ளடக்கிய இலங்கை இராணுவம், தனது மொத்தப் பங்கில் 80 சதவிகிதப் படையினரை (நான்கு லட்சம் பேர்) தமிழர் நிலத்தில் புலிகளுக்காகக் காவல் வைத்துள்ளது.
அப்படியான சிங்கள இராணுவத்தின் கேமரா பயத்தால்தான், இந்தியக் குடியுரிமைபெற்ற தமிழனாகிய நானும், இலங்கையில் இரண்டு முறை இராணுவ விசாரணைக்காக மூன்று மணி நேரம் வைக்கப்பட்டேன்!
ஆனால், தமிழர்கள் அனைவரும் 24 மணி நேரமும் இராணுவ விசாரணையில் இருப்பதைப் போலவே இருக்கிறார்கள்.
கொழும்புவில் மிகக் கோரமானது பூசா சிறை முகாம். எந்த விசாரணையும் இல்லாமல் 20 ஆண்டுகளைக் கடந்தும் தமிழர்கள் சிறை வைக்கப்பட்டு இருக்கும் இடம். இங்கேதான் என் மகன் இருக்கிறானா என்று எந்தத் தாயும் உறுதி செய்ய முடியாத அளவுக்கு இருட்டான இடம்.
இன்னொன்று, இலங்கை இராணுவத்தில் 4-வது மாடி விசாரணை. அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அனைவரையும் உயிரோடு சிறுகச்சிறுகச் சித்திரவதை செய்து கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்லும் இடம் அது.
இவை இரண்டும் இன்னும் உலகத்தின் மனச்சாட்சிக்கு முன்னால் வெளிச்சத்துக்கு வராத இடங்கள். உண்மையைச் சொன்னால், ஈழத்தின் மொத்த நிலப்பரப்புமே அப்படித்தான் இருக்கிறது!
நாலைந்து தமிழர்கள் சேர்ந்து நிற்க முடியாது. சந்தேகக் கண்கள் உங்களை நோட்டமிட்டபடி நிற்கும். சொந்தங்கள் பக்கத்து ஊரில் இருந்து வந்தால்கூட, பதிவுசெய்த பிறகுதான் நுழைய முடியும்,
வெளிநாட்டில் இருந்து வருவதைப் போல. வெளிநாட்டில் இருந்து உறவுகளைப் பார்க்க வருபவர்களுக்கு முழுமையான விசாரணை உண்டு.
கிளிநொச்சியில் ஒரு காட்சி... கோயில் திருவிழாவில் பக்திப் பரவசத்துடன் தமிழ் பக்தர்கள் நடந்து செல்கிறார்கள். சுற்றிலும் பாதுகாப்​புக்கு இராணுவமோ, பொலிஸோ போனால் பரவாயில்லை. ஆனால், பக்தர்கள் தலைகளைவிட இராணுவத்தினர் எண்ணிக்கைதான் அதிகம்.
தமிழர்கள் சாமியைச் சொல்லித் திரண்டாலும் புலிகளாகவே நினைக்கிறது இராணுவம். சுயமாய் நடமாடவும், சுயமாய் பொருள் தேடவும், சுயமாய்ச் செயல்படவும் அனுமதிக்காத அவசர நிலை இன்னமும் அப்படியே இருக்கிறது.
தமிழர்களைக் கண்களுக்குத் தெரியாத கயிறால் கட்டிப்போட்டுவிட்டு, அவன் சுதந்திரமாய் அலைந்த பூமியை சுற்றுலாத் தலங்களாக மாற்றி விட்டனர்.
சிங்களவர் பெருமை பேசும் நினைவகங்கள், இராணுவத்தின் வீரம் சொல்லும் முகாம்கள், புத்தரின் புகழ்பாடும் கோயில்கள், கேளிக்கை விடுதிகள் என ஈழப் பிரதேசம், தமிழ் அடையாளங்களைத் தொலைத்து விட்டது. தமிழர்களைப் போலவே துடைக்கப்பட்டு விட்டது!
ஆனையிறவுக்கு முன் ஒரு பகலைக் கொழும்புவில் தொடங்கினேன். எனது பயணமும் அங்கு இருந்துதான் ஆரம்பம் ஆனது!
ஊடறுத்துப் பாயும்......
ஜூனியர் விகடன்

Dec 20, 2012

திறந்தநிலைப் பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு;தமிழக உயர் கல்வித் துறைச் செயலாளர்

பத்தாம் வகுப்பிற்குப் பிறகு டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்துவிட்டு திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் மூலமாகப் இளநிலைப் பட்டம் முடித்தவர்களை அரசு வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்காக வழக்கமான முறையில் இளநிலைப் பட்டம் முடித்தவர்களுக்கு இணையாகக் கருதலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக உயர் கல்வித் துறைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்ட அரசாணை விவரம்: பத்தாம் வகுப்பு மற்றும் டிப்ளமோவுக்குப் பிறகு பி.இ. படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து பட்டம் முடித்த மாணவர்கள், பிளஸ் 2 முடித்து பி.இ. படித்த மாணவர்களுடன் சமமாகக் கருதப்பட்டு உதவிப் பொறியாளர் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றனர்.
பத்தாம் வகுப்பு, டிப்ளமோ படிப்புக்குப் பிறகு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலமாக பட்டப்படிப்பு பெற்று, பல அரசுப் பணிகளில் ஏற்கெனவே வேலையில் உள்ளவர்கள், தங்களது பணிவரன்முறை தொடர்பாக அரசுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வருகின்றனர்.
இவர்களையும், வழக்கமான முறையில் பட்டம் பெற்றவர்களையும் வேலைவாய்ப்பிற்கு இணையாகக் கருதலாமா என்பது குறித்து கல்வி நிர்ணயத் தகுதி குழுவில் பரிசீலித்து, அதன் பரிந்துரையை தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில், இணைக் கல்வி தகுதி நிர்ணயக் குழுவின் தீர்மானம் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையைப் பரிசீலித்த பிறகு அரசு கீழ்க்கண்ட உத்தரவைப் பிறப்பிக்கிறது.
1. பத்தாம் வகுப்பு, மூன்றாண்டு டிப்ளமோ, அதன்பிறகு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அல்லது தொலைதூரக் கல்வி நிறுவனம் மற்றும் கல்லூரிகளில் பெறப்பட்ட பட்டப்படிப்பு (10-3-3).
2. பதினோராம் வகுப்புக்குப் பின் (பழைய எஸ்.எஸ்.எல்.சி.) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்ட ஆசிரியப் பட்டயப் படிப்பு, பிறகு தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் இளங்கலைப் பட்டப்படிப்பு (11-2-3).
3. பத்தாம் வகுப்பு, இரண்டாண்டு ஐ.டி.ஐ., பின்னர் தொலைதூரக் கல்வி நிறுவனம் இளங்கலைப் பட்டப்படிப்பு (10-2-3)
4. பத்தாம் வகுப்பு, மூன்றாண்டு பட்டயப் படிப்பு, பிறகு இரண்டாண்டு பட்டப்படிப்பு (லேட்டரல் என்ட்ரி) (10-3-2) ஆகியவற்றைப் படித்தவர்களை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2-க்குப் பிறகு 3 ஆண்டு இளங்கலைப் பட்டம் படித்தவர்களுக்கு இணையாகக் கருதி பொதுப்பணிகளில் வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு பெற அங்கீகரித்து ஆணையிடப்படுவதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

குஜராத் தேர்தல்; ஹாட்ரிக் வெற்றி!:நரேந்திர மோடி

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 13 மற்றும் 17-ந்தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 71.32 சதவீத ஓட்டுக்கள் பதிவானது.
 
நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வில் இருந்து பிரிந்து சென்று கேசுபாய் படேல் தொடங்கிய புதிய கட்சியான குஜராத் பரிவர்த்தன் கட்சி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது. தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு ஓட்டுக்கள் பதிவானதால், அது எந்த கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
 
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 44 ஆயிரம் மின்னணு எந்திரங்களில் பதிவு செய்யப்பட்டிருந்த வாக்குகள், 33 மையங்களில் வைத்து எண்ணப்பட்டது. சுமார் 8 ஆயிரம் பேர் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
ஓட்டுப்பதிவுக்கு முன்பும், பிறகும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதை உறுதிபடுத்துவது போல 8.30 மணிக்கு குஜராத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர்.
 
அடுத்த ஒருமணி நேரத்துக்குள் பாரதீய ஜனதா கட்சி, ஆட்சி அமைக்க தேவையான 92 இடங்களில் முன்னிலை பெற்றது. இதன் மூலம் பாரதீய ஜனதா கட்சி குஜராத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.
 
10.30 மணிக்கு 182 தொகுதிகளில் முன்னிலை உறுதியானது. அப்போது பாரதீய ஜனதா 116 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் 61 தொகுதிகளிலும், கேசுபாய் படேலின் குஜராத் பரிவர்த்தன் கட்சி 3 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தனர்.
 
குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளதால் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக முதல்- மந்திரி பதவி ஏற்க உள்ளார். 2002 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் முதல்-மந்திரி பதவி வகித்த மோடி 3-வது தடவை முதல்-மந்திரி ஆவதன் மூலம் குஜராத் அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
 
மணிநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், மீண்டும் பா.ஜ.க. ஆட்சி மலர வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். என்றாலும் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றியை பெறவில்லையே என்ற கவலை பா.ஜ.க.வினரிடம் நிலவுகிறது.
 
நரேந்திர மோடி ஆமதாபாத்தில் உள்ள சர்தார்படேல் ஸ்டேடியத்தில் நடக்கும் விழாவில் பதவி ஏற்க உள்ளார். இதற்காக அந்த விளையாட்டு மைதானம் முழு வீச்சில் தயார் செய்யப்பட்டு வருகிறது.
 
அந்த மைதானத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் முன்னிலையில் நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார். குஜராத்தில் 2002-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா 127 இடங்களிலும், காங்கிரஸ் 51 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. 2007-ல் பாரதீய ஜனதா 117 இடங்களும், காங்கிரஸ் 59 இடங்களும் பெற்றன.
 
இந்த தடவை (2012) நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டது. சில கருத்துக்கணிப்புகள் மோடிக்கு 141 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறின.
 
ஆனால் இந்த தடவை நரேந்திர மோடிக்கு வெற்றி கிடைத்துள்ள போதிலும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. கடந்த 2002, 2007-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் கிடைத்த வெற்றி போலத்தான் இந்த தடவையும் பா.ஜ.க.வுக்கு வெற்றி கிடைத்துள்ளது. பெரிய அளவில் குஜராத் தேர்தலில் மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dec 18, 2012

சூரியஒளி மின்சார திட்டமும் மக்கள் இயக்கமாக மாறும்:முதல்வர் ஜெயலலிதா

சென்னை : மழைநீர் வடிகால் திட்டம் போல் சூரியஒளி மின்சார திட்டத்தையும் மக்கள் இயக்கமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு மாவட்ட கலெக்டர்கள் துணையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

தமிழக அரசு வெளிப்படையான, திறமையான, பொறுப்பான நிர்வாகத்தை அளிக்க முழுமையாக தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழக மக்கள் பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வருவதோடு மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். இதற்காக தொலைநோக்கு திட்டம் ஒன்றை நான் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இந்த தொலைநோக்கு திட்டத்தை நிறைவேற்ற நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சிறப்பான நிர்வாகத்தின் மூலமே இது சாத்தியமாகும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இடதுசாரி தீவிரவாதம் தமிழகத்தில் எங்கும் இல்லை. மத அடிப்படைவாதம் தலைதூக்க அனுமதி இல்லை. சாதி கலவரங்கள் விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. நில அபகரிப்பு தொடர்பாக 1627 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸீ835.94 கோடி மதிப்பிலான சொத்துகள் உரியவர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தாக்குவது இன்னமும் தொடர்கிறது. என்றாலும் தமிழக அரசு கொடுத்த வலுவான எதிர்ப்பு காரணமாக தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளது. தமிழகத்தில், சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட ஸீ4 ஆயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக கிரானைட் தொழில் செய்த நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களின் ஸீ9,783 கோடி சொத்துக்களை முடக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கி வரும் ஒரே மாநிலம் தமிழகம். இதற்காக ஆண்டுதோறும் ஸீ3,300 கோடியை மாநில அரசு செலவழித்து வருகிறது. பொது விநியோக திட்டத்துக்கான அரிசியை மாநில எல்லைகள் வழியாக கடத்துவதை தடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்திடம் உள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து போலி மதுபானங்கள் தமிழகத்துக்கு வருவதும் தடுக்கப்பட வேண்டும். சாலை பாதுகாப்பு மேம்படுத்தப்பட வேண்டும். விபத்து காரணமாக ஏற்படும் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

 பொது விநியோக திட்டத்தின் வாயிலாக மானிய விலையில் பருப்பு, எண்ணெய் போன்றவை வழங்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் கடத்தலை கடுமையாக கண்காணிக்க வேண்டும். போலி ரேஷன் கார்டுகள் களையப்படுவதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். முழுமையான மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏழை என்பதற்காக மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்படாத அளவுக்கு இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு 2023 என்ற தொலைநோக்கு திட்டம் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு தொழில் துறையினரிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் முதலீட்டாளர்களிடம் ஒருவித எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தொலைநோக்கு திட்டத்தில் வேளாண், மீன் துறை, கால்நடை பராமரிப்பு துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 2023 தொலைநோக்கு திட்டம் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சியை 11 சதவீதமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவியது. டெங்குவை கட்டுப்படுத்த ஏற்கனவே அரசு பல வழிகாட்டிகளை வெளியிட்டுள்ளது. இத்தகைய நோய் பரவுவதை தடுப்பது முற்றிலும் மாவட்ட நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது. எனவே இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உடனுக்குடன் மருத்துவ உதவிகள் கொடுத்து டெங்கு நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க ரொக்க பரிசு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. பாடப் புத்தகம், நோட்டு, பை, சீருடை, ஜியாமிட்ரி பாக்ஸ், அட்லஸ், லேப்டாப், காலனி போன்றவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகர் மேம்பாட்டுக்காக கடந்த 2011,12 மற்றும் 2012,13ம் ஆண்டுகளில் 1,000 கோடியும், மற்ற மாநகராட்சிகளுக்கு 1,500 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர், கழிவுநீர், சானிடேஷன் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்ட மேம்பாட்டுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை 2015க்குள் முற்றிலும் தடுக்க 92.43 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர்கள் கவனம் செலுத்தி, திட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும்.

2015ம் ஆண்டுக்குள் சூரிய சக்தி வாயிலாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் திட்டம் போல் சூரியஒளி மின்சார திட்டத்தையும் மக்கள் இயக்கமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர்கள் துணையாக இருக்க வேண்டும். தொழில்முனைவோரை ஊக்குவிக்க நீட்ஸ் என்ற புது திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக பட்ஜெட்டில் 100 கோடி ஒதுக்கப்பட்டு, முதல் தவணையாக ஏற்கனவே 1.80 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் சட்டம் , ஒழுங்கு சிறப்பாக உள்ளதால், இதை பயன்படுத்தி அனைத்து திட்டங்களை யும் திறம்பட செய்ய வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

Dec 17, 2012

ஜூன்2013குள் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்: நாஞ்சில் சம்பத்!

அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரடி திடலில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் பச்சைமால் தலைமை தாங்கினார். நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., நகரச் செயலாளர் சந்திரன், அவைத்தலைவர் சதாசிவம், இணைச்செயலாளர் லிசம்மா, துணைச் செயலாளர் சிவகாமி, பொருளாளர் ஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-

தனி மனிதனின் தலை எழுத்தை தீர்மானிப்பது பிரம்மா. தமிழகத்தின் தலை எழுத்தை தீர்மானிப்பது அம்மா என்ற நிலை இன்று உள்ளது. நாம் எல்லாம் அதிகம் கேட்கும் வார்த்தைகள் அடுத்த பிரதமர் அவர் தான் என்ற நல்ல வார்த்தைகள்தான். மின் பற்றாக்குறையை காரணம் காட்டி தி.மு.க. செயற்குழுவை கூட்டி ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் நடத்தினால் மின்சாரம் வந்து விடுமா? மின்வெட்டுக்கு காரணமே தி.மு.க.தான்.

2001-2006-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் 500 மெகாவாட் மின்சாரம் தமிழகத்தில் உபரியாக இருந்தது. இதனால் வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. தற்பொழுது ஆட்சிக் காலத்தில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. உடன்குடியில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், உப்பூரில் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும், வட சென்னையில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வருகிற ஜூன் மாதத்தில் இருந்து தமிழ்நாடு மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறும். கேரள மீனவர்கள் இருவரை இத்தாலியைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் மத்திய அமைச்சர் அந்தோணி கேரளாவிற்கு ஆதரவாக செயல்பட்டார். இங்கு தமிழக மீனவர்கள் தினமும் இலங்கை ராணுவத்தால் தினமும் பாதிக்கப்பட்டு வருவதை தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதி அமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ இதுவரை வாயை திறக்கவில்லை.தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இலங்கை அதிபர் ராஜ பக்சேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று துணிச்சலோடு தீர்மானம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அன்னிய முதலீட்டுக்கு எதிரான வாக்கெடுப்புக்கு பல கட்சி கள் விலை போய் விட்டன. ஆனால் விலை போகாத ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டும் தான்.

Dec 15, 2012

அ.தி.மு.க.வில் இணைந்த ம.தி.மு.க. நிர்வாகிகள்!

ம.தி.மு.க.வில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத் சமீபத்தில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவருக்கு அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியை வழங்கினார். இதையடுத்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் நாஞ்சில் சம்பத் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.
இதற்கிடையே நாஞ்சில் சம்பத் ம.தி.மு.க.வில் உள்ள தன் ஆதரவாளர்கள் 250 பேரை அ.தி.மு.க.வில் சேர்க்க முடிவு செய்தார். அதன்படி அவர்கள் அனைவரும் இன்று சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வந்தனர்.
 
அவர்கள் இன்று பகல் 12.30 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க. வில் தங்களை இணைத்துக் கொண்டனர். முன்னதாக தலைமை கழகத்துக்கு வந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை நாஞ்சில் சம்பத் வரவேற்றார்.
 
இந்த நிகழ்ச்சியின்போது அ.தி.மு.க. சார்பில் நாஞ்சில் சம்பத்துக்கு கார் ஒன்று பரிசாக கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பொதுக்கூட் டங்களில் பேசுவதற்கு வசதியாக இந்த பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
 
நாஞ்சில் சம்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள கார், இன்னோவா காராகும். இந்த காரின் சாவியை முதல்- அமைச்சர் ஜெயலலிதா, நாஞ்சில் சம்பத்திடம் வழங்கினார்.
 
பிறகு அந்த இன்னோவா கார் அருகில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சென்று பார்த்தார். தனக்கு கார் பரிசு வழங்கியதற்காக முதல்-அமைச்சர் ஜெய லலிதாவுக்கு நாஞ்சில் சம்பத் நன்றி தெரிவித்தார்.
 
அதன்பிறகு அ.தி.மு.க. வில் இணைந்த 250 ம.தி.மு.க. நிர்வாகிகளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். அவர்கள் அனைவருக்கும் அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். அவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
 
அன்புச் சகோதரர் அ.தி.மு.க. துணை கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமையில் ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைய வந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவு. நீங்கள் வந்த இடம் நல்ல இடம். எத்தகைய நம்பிக்கையுடன் இன்று கழகத்தில் இணைய வந்துள்ளீர்களோ அந்த நம்பிக்கை வீண் போகாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நம்முடைய லட்சியம், கல்லாமை இல்லாமை இல்லாத ஒரு தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். மக்களுக்காக இயங்குகிற ஒரு இயக்கம் அ.தி.மு.க. தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை நாம் போராடி பெற வேண்டும். இந்த லட்சியத்தை அடைய நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் மிக ஒளிமயமான எதிர்காலம் அமைய என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
 
இன்று அ.தி.மு.க.வில் இணைந்த ம.தி.மு.க. நிர்வாகிகள் விவரம் வருமாறு:-
 
ம.தி.மு.க.வைச் சேர்ந்த பொறியாளர் அணி துணைச் செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட அவைத் தலைவருமான லட்சுமணன், திருநெல்வேலி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்குமார், மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் தூத்துக்குடி வசந்தம் சரவணன், சட்டத்துறை துணைச் செயலாளர் மதுரை ஆசைத்தம்பி.மாணவரணி செயலாளர் வா.கோவிந்தராஜ் ,வழக்கறிஞர் ஞானவேல் ,வழக்கறிஞர் பாலாஜி
சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் ரைஸ்மில் பாலசுப்பிரமணியம், மாநில சட்டத்துறை துணை செயலாளரும், வடுகபட்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினர் கோவை சி.ஜெ.பிலிப்சன், மாணவர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் பொன்னியின் செல்வன்.
 
சிவகங்கை மாவட்ட, சாக்கோட்டை ஒன்றியச் செயலாளர் புதுவயல் சுப்பிரமணி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் காரைக்கால் சக்திவேல் உடையார், தென்சென்னை மாவட்ட அவை தலைவர் ஹைடெக் மனோகரன், மாவட்ட பொருளாளர் ஈகை செல்லப்பாண்டியன் உள்ளிட்ட 250 நிர்வாகிகள் தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

Dec 6, 2012

வீட்டு உபயோகத்திற்கு 55 ஆயிரம் ரூபாயில் காற்றாலை

வீட்டு உபயோகத்திற்கு ஏற்ப, 55 ஆயிரம் ரூபாயில், செங்குத்தான காற்றாலைகளை நிறுவும் நிறுவனங்கள் சந்தையில் நுழைந்துள்ளன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில், காற்றாலை மின் உற்பத்திக்கு, முக்கிய பங்கு அளிக்கப்படுகிறது. இதுவரை, வர்த்தக உபயோகத்திற்கு மட்டுமே காற்றாலைகள் அமைக்கப்பட்டன.அதிகரிக்கும் மின்வெட்டை மனதில் கொண்டு, வீட்டு உபயோகத்திற்கான சிறிய காற்றாலைகள் வடிவமைப்பில் நிறுவனங்கள் இறங்கி உள்ளன.வீட்டு உபயோகத்திற்கான காற்றாலைகளை வடிவமைத்தாலும், அவை, நடுத்தர மக்கள் வாங்கும் விலையில் இல்லை என்ற குறை இருந்தது.தற்போது, நடுத்தர மக்களின் மனக்குறையை போக்கும் விதமாக, சந்தையில் சிறிய காற்றாலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

சிறிய காற்றாலை வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள, "மெக்லின்ஸ் இந்தியா' நிறுவனத்தின் இயக்குனர் சிவசங்கர் கூறியதாவது:வர்த்தக பயன்பாட்டுக்கான காற்றாலைகளை நிறுவ, அதிக முதலீடு தேவைப்படும். இவற்றின் பிளேடுகள் அளவில் பெரியவை; இதை வீடுகளில் அமைக்க முடியாது.தற்போது, காற்றாலைகளில் பொருத்தப்படும் வட்ட வடிவிலான பிளேடுகள், சில நேரங்களில் கழன்று, விபத்தை ஏற்படுத்தும்.இப்பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில், வீட்டு உபயோகத்திற்காக சிறிய காற்றாலையை, வடிவமைத்து உள்ளோம். நடுத்தர மக்களும், இதை எளிதில் வாங்கி நிறுவ முடியும்; 55 ஆயிரம் ரூபாயில் அமைத்து தருகிறோம். இதற்கு தேவைப்படும் இடம் மிகக் குறைவு.

விபத்தை ஏற்படுத்தாத வகையில், பிளேடுகள் செங்குத்தான வடிவில் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த முறையில் அமைக்கப்படும் ஒரு காற்றாலை மூலம், ஒரு நாளுக்கு அதிகபட்Œமாக, மூன்று யூனிட் மின் உற்பத்தி செய்யப்படும்.சென்னை பள்ளிக்கரணையில் உள்ள காற்று சக்தி தொழில்நுட்ப மையம், காற்று அதிகம் வீசும் மாவட்டங்கள் எவை என்பதை பட்டியலிட்டுள்ளது. அந்த மாவட்டங்களில், இந்த சிறிய காற்றாலைகளை நிறுவி, காற்று வீசும் பருவ காலத்தில், மின்சாரத்தை பெற்று பயனடைய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
தென் மாவட்டங்களுக்கு "லக்'


:வீடுகளுக்கு மரபுசாரா மின் உற்பத்தியை அமைக்கும் போது, "சோலார்' மற்றும் காற்றாலை ஆகிய இரண்டையும் சேர்த்து அமைப்பதே சிறந்தது என்று, அத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர்.இருப்பினும், காற்று அதிகம் வீசும் மாவட்டங்களான, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்ட மக்களுக்கும், திருப்பூர், கோவை ஆகிய மேற்கு மாவட்ட மக்களுக்கும், சிறிய காற்றாலைகள் வரவால், "லக்' அடித்துள்ளது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Dec 5, 2012

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம்: முதல்வர் ஜெயலலிதா

டெல்டா மாவட்டங்களில் 15 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர், போதிய தண்ணீர் இல்லாததால் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் பம்பு செட்டுகள் மூலம் பயிர்களை காப்பாற்ற வசதியாக, காவிரி டெல்டா பகுதிகளில் பிப்ரவரி மாதம் வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
‘காலையில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் இந்த மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மேலும் சம்பாவை காப்பாற்றவும், பாதிப்பு ஏற்பட்டால் போதிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டீசல் பம்பு செட்டுகளை இயக்குவதற்கு ஏக்கருக்கு 600 ரூபாய் மானியம் அளிக்கப்படும். எனவே, விவசாயிகள் தன்னம்பிக்கை இழக்க வேண்டாம்’, என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு, வினாடிக்கு 1000 கன அடியில் இருந்து 4000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம் 50.95 அடியாகும், தற்போது அணையில் 18415 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3158 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை முதல் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டால் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

Dec 4, 2012

அ.தி.மு.க., வில் நாஞ்சில் சம்பத்


ம.தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக இருந்து வந்த  நாஞ்சில் சம்பத் இன்று காலையில் முதல்வர் ஜெ.,வை சந்தித்து அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டார். இவர் தி.மு.க.,பக்கம் சாய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க.,வில் இன்று சேர்ந்தார். இந்த செய்தி ம.தி.மு.க., தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.  ம.தி.மு.க.,வில் வைகோவுக்கு இணையாக பெரும் திரளாக நாஞ்சில் சம்பத் பேச்சை கேட்க கூட்டம் சேரும். கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக கட்சி பொதுச்செயலர் வைகோவுடன் மனக்கசப்பில் இருந்து வந்த சம்பத் கட்சிப்பணியில் இருந்து விலகி இருந்தார். பிரசாரத்திற்கு எங்குமே செல்லவில்லை. அ.தி.மு.க., பொதுசெயலரை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டார். இவரது விலகல் ம.தி.மு.க.,வுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.
அ.தி.மு.க., வில் உயர்ந்த பதவி :
இன்று காலையில் அ.தி.மு.க.,வில் இணைந்ததும் சம்பத்துக்கு இந்த கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநில அரசின் சாதனை விளக்க கூட்டங்களில் பங்கேற்க நாஞ்சில் சம்பத் தனது பிரசார பயணத்தை விரைவில் துவங்குவார் என கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

Dec 1, 2012

ஒரு இரவு பார்வை:தூங்கா நகரம் மதுரை

நைட் ரவுண்ட்-அப்


தூங்கா நகரம் இரவில் எப்படி இருக்கிறது? ஒரு நள்ளிரவில் மதுரையைச்சுற்றி வந்தோம்..
இரவு 11 மணி பை பாஸ் ரோடு, கருப்பண்ணசாமி கோயில்:
அந்த நேரத்திலும் கருப்பண்ணசாமி பிஸி. தன்னுடைய புதிய பைக்கை வாசலில் நிறுத்திவிட்டு, சாவியைச் சாமியின் காலடியில் வைத்து நெற்றியில் விபூதியைத் தீட்டிக்கொண்டிருந்தார் ஒரு வாலிபர். பைக் சக்கரத்தில் எலுமிச்சை நசுங்கியது. முன்தினம் 'பீட்சா’ படம் பார்த்த எஃபெக்ட் இன்னும் போகாததால், நாமும் கருப்பண்ணசாமிக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நைட் ரவுண்ட்ஸைத் தொடங்கினோம்.
இரவு 11.30:
அப்படியே கீழவாசல் பகுதிக்கு வந்தால், ஓட்டல்களில் மிஞ்சிய இரவு உணவை டிரை சைக்கிளில் கொண்டுவந்து குடிசை மாற்று வாரியப் பகுதிக்கு சப்ளை செய்து கொண்டிருந்தார் ஒருவர். மக்களுக்கு மலிவு விலைப் பொருட்களாவும், பன்றிகளுக்கு விலையில்லாப் பொருட்களாகவும் அள்ளி இரைக்கப்பட்டன அந்த உணவு. தூங்கா நகரை தூங்கவிடாமல் செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் திடீர் நகரைக் கடந்தபோது, நமக்குள் கொஞ்சம் பயம் வந்தது. ஏரியா அப்படி.

பெரியார் பஸ் ஸ்டாண்ட் பக்கம் நின்றால் ஆட்டோவுக்குக் கூப்பிடுவதுபோல், ரொம்ப கேஷூவலாக 'அதற்கு’ கூப்பிடுகிறார்கள் சில அழகிகள். ''நாங்களும் மதுரைக்காரய்ங்கதான்'' என்று அவர்களிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தபோது, 'ஏய்... வர்றதுன்னா வா. இல்லாட்டி மூடிக்கிட்டு போ. மதுரைக்காரன்... அது இதுன்னு சொல்லிட்டுத் திரிஞ்ச கொன்டேபுடுவோம்'' என்று முஷ்டி முறுக்கினார்கள் இரண்டு ரௌடி சார்கள்.
இரவு 12 மணி, ரெயில் நிலையம்:
ரெயில்வே ஸ்டேஷன் வாசலில் நூற்றுக்கணக்கானவர்கள் கூட்டம் கூட்டமாகப் படுத்துக் கிடந்தார்கள். என்னென்ன பொருட்கள் எல்லாம் தலையணை அவதாரம் எடுத்திருக்கின்றன என்று கவனித்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஒருவரின் தலையில் செருப்பு, மற்றொருவரின் தலையில் லக்கேஜ், இன்னொருவருக்கு தன் கை, அடுத்தொருவருக்கு பக்கத்தில் படுத்திருந்தவரின் கை. ரெயில்வே ஸ்டேஷனுக்குள் தூங்க போலீஸார் அனுமதிக்காததால், எல்லாரும் இப்படிக் கும்பலாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். மதுரையிலேயே கொடுத்துவைத்தக் கொசுக்கள் அதிகமிருப்பது இங்கேதான். கொசுவர்த்தி தொல்லை இல்லாமல், வெரைட்டியாக ரத்தம் குடிக்கின்றன!


ஏ.டி.எம். ஒன்றின் வாசலில் டிப்டாப் ஆசாமி ஒருவர் திருதிருவென்று விழித்தபடி உட்கார்ந்திருந்தார். 'ஒரு திருடர் சிக்கிட்டார்’ என்று அருகில்போய் பேச்சுக் கொடுத்தோம். 'கார்டை சொருகினேன் தலைவா. 8,000-னு டைப் பண்ணிட்டு பார்த்தா, பணம் வரலை. கார்டும் உள்ளே போயிடுச்சு. விஷயத்தைச் சொல்லலாம்னா இந்த ஏ.டி.எம்-க்கு வாட்ச்மேனே கிடையாது. வேற யாராச்சும் உள்ளேபோய் கார்டை நுழைச்சி, என்னோட 8,000 வெளியே வந்திடுமோனு பயமா இருக்கு. அதனாலதான் இங்கேயே பட்டறையப் போட்டுட்டேன். 'அவுட் ஆஃப் சர்வீஸ்’னு எழுதித் தொங்க விட்டுடலாம்னு பார்த்தேன். அட்டையும் இல்லை. பேனாவும் இல்லை. அதான் நானே ஷட்டரை இறக்கிவிட்டுட்டு, காவலுக்கு உட்கார்ந்திருக்கேன்' என்றவர் நம்மைப்பற்றி விசாரித்துவிட்டு, 'முதல்ல காலையில பேங்குக்குப்போய் எப்படி பணத்தை மீட்கிறதுனு கவலையா இருந்துச்சு. ஆனா, இப்போ பணத்தைப்பத்தின கவலையைவிட, டெங்குவைப்பத்தின கவலைதான் ஜாஸ்தியா இருக்கு. கொசுக்கடி பின்னுது சார்' என்றார் பரிதாபமாக.
கிளம்பியபோது, 'சார் நீங்க என் கூடவே விடிய விடிய உட்கார்ந்து இந்த அனுபவத்தை எழுதுங்களேன்' என்றார் சிரிக்காமல். 'காத்திருங்க. வேற யாராச்சும் துணைக்கு வருவாய்ங்க தலைவா' என்றபடி நாம் கிளம்ப, எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று அவரது அருகில் படுத்துக்கொண்டது. மனிதருக்கு டெங்குவோடு, ரேபிஸ் பயமும் வந்திருக்கக்கூடும்.
மணி 12:30 மணி ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட்:
அந்த நேரத்திலும் புரோட்டாவை ஒருபிடி பிடித்துக்கொண்டிருந்தார்கள். பஸ் ஸ்டாண்டை ஒட்டி வைகை கரைச்சாலையில், அழுக்குச் சட்டையுடன் ரெண்டு பேர் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார்கள். யாராவது சிக்கினால், வழிப்பறி செய்துவிட்டு ஆற்றுக்குள் இறங்கி ஓடிவிடுவார்களாம். வைகையில் தண்ணீர் இல்லாதது எவ்வளவு வசதியாக இருக்கிறது என்று வியந்தபடி, வேறு பாதையாக கோரிப்பாளையம் வந்தோம். அந்த நேரத்திலும் தேவர் சிலைக்குக் கால் வலிக்க காவலுக்கு நின்றார்கள் போலீஸார்.

அரசு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தால் கொசுவர்த்தி வாசனை. ஒவ்வொரு ஆளைச் சுற்றியும் சீரியல் செட்போல நான்கைந்து கொசுவர்த்திகள் எரிந்தன. ஒரு கொசுவர்த்தியைப் பல துண்டுகளாக உடைத்து, சுற்றிலும் வைத்தால்தான் கொசு கடிக்காதாம். சிலர் பாக்கெட் கணக்கில் ஸ்டாக் வைத்திருந்தார்கள்.
நள்ளிரவு 1 மணி, அரசு பாலிடெக்னிக்:
சுள்ளான்கள் சிலர் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தார்கள். எல்லாம் நினைவஞ்சலி போஸ்டர்கள். தான் ஒட்டிய போஸ்டர் மீது இன்னொரு போஸ்டரை அவர்கள் ஒட்டுவதைப்பார்த்து, பெருசு ஒருவர் பொங்க, ''இது என்ன உன் வீட்டுச் சுவரா? வர்றவன் போறவன் எல்லாம் ஒட்டத்தான் செய்வாய்ங்க... வேணுமுன்னா ஒவ்வொரு போஸ்டர் பக்கத்துலேயும் காவலுக்கு ஆள்போடு'' என்று வயதுக்கு மரியாதை கொடுக்காமல் பேசினார்கள் சுள்ளான்கள்.


சைரன் ஒலிக்க தீயணைப்பு வாகனம் ஒன்று திருமங்கலம் ரோட்டில் பறந்தது. உடனே பக்கத்தில் இருந்த சாமி பல்க்கில் (மதுரையில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்குகிற, அதிகம் விற்பனை நடக்கிற பல்க் இது) மேற்கொண்டு ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டுவிட்டு, பின் தொடர்ந்தோம். பழங்காநத்தம் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் இருந்து புகை கிளம்பிக்கொண்டிருந்தது. பரபரப்பாகப்போய் இறங்கினால், கிச்சனில் தீ விபத்தாம். அதை போட்டோ எடுக்கவிடாமல் தடுக்க, நான்கு ஊழியர்களை ஏவி விட்டிருந்தார்கள். ' பெர்மிஷன் கேட்டுட்டுப் போட்டோ எடுங்க... என்ன?' என்று மிரட்டிய ஊழியரிடம், 'யார்கிட்ட பெர்மிஷன் கேட்கணும்'' என்றோம். 'மார்னிங் டியூட்டிக்கு வர்ற மேனேஜரிடம்'' என்றார் அவர்.
'சரிண்ணே, தீயை எல்லாம் அணைச்சி, ரூமைக் கழுவிவிட்டபிறகு, போன் போடுங்க. வந்து போட்டோ எடுக்கிறோம்'' என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு, கிளம்பினோம்.
- கே.கே.மகேஷ்
படங்கள்: பா.காளிமுத்து
en.vikatan

Nov 30, 2012

மதுரையில் போலீஸ் என்கவுண்டர்

போலீசாரை தாக்கிவிட்டு இரண்டு கைதிகள் தப்பியோடினர். திருப்பாச்சேத்தி அருகே எஸ்.ஐ., ஆல்வின் சுதன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான பிரபு மற்றும் பாரதி ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் திருப்பி அழைத்து வந்த போது, மதுரை லேக்வியூ அருகே போலீசாரை தாக்கிவிட்டு அவர்கள் தப்பியோடினர்,தங்களை தற்காத்து கொள்ள  போலீஸ்  துப்பாகியால் சுட்டனர்
:""போலீசாரை தாக்க முயன்றதால், ரவுடிகள் பிரபு, பாரதியை சுட்டேன்,'' என, டி.எஸ்.பி., வெள்ளத்துரை கூறினார்.எஸ்.ஐ., ஆல்பின் சுதன் கொலை வழக்கில் கைதான ரவுடிகள் இருவரும், மானாமதுரை ராஜகம்பீரம் கால்பிரவு கிராமம் அருகே, நேற்று, "என்கவுன்டரில்' கொல்லப்பட்டனர்.இதுகுறித்து வெள்ளத்துரைகூறியதாவது: போலீசாரிடம் இருந்து தப்பிய இருவரையும் பிடிக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இருவரும் தங்கள் சொந்த ஊருக்கு வரலாம் என்பதால், அப்பகுதியில் சோதனை நடத்தினோம்.அப்போது பைக்கில் வந்த இருவரும் போலீசாரை நோக்கி, பெட்ரோல் குண்டு வீசினர். அரிவாள் வைத்திருந்தனர். போலீசாரை பாதுகாக்க இருவரையும் சுட்டேன், என்றார். 

சோலார் ,காற்றாலை மின்சாரத்தை இணைத்து, வீடுகளில் அமைக்க அதிகபட்சமாக, 2.75 லட்சம் ரூபாய் !

கடும் மின்வெட்டில் தவிக்கும் தமிழக மக்களுக்கு, வரப்பிரசாதம் போல், மிகக் குறைந்த விலையில், சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கு, தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.சோலார் மற்றும் காற்றாலை மின்சாரத்தை இணைத்து, வீடுகளில் அமைக்க அதிகபட்சமாக, 2.75 லட்சம் ரூபாய் செலவாகும் என, தனியார் நிறுவனங்கள் கூறுகின்றன. தேவை அதிகரிக்கும் போது, இத்தொகை மேலும் குறையும் என்றும் தெரிவிக்கின்றனர்.
"காற்றாலை மின் உற்பத்தி-2012' மாநாடு, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், நேற்று முன்தினம் துவங்கி, மூன்று நாள்கள் நடக்கிறது. இதில், ஜெர்மனி, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த காற்றாலை கட்டுமானப் பொருள்கள் உற்பத்தியாளர்கள் அரங்குகளை அமைத்துள்ளனர்.கண்காட்சியில் வர்த்தக மற்றும் வீட்டு உபயோகத்துக்கான காற்றாலைகள் மற்றும் சோலார் மின் உற்பத்தி பற்றிய கருத்தரங்குகள் நடந்தன. வர்த்தக அடிப்படையிலான, காற்றாலை மின் உற்பத்திக்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், வீட்டு உபயோகத்துக்கான மின் உற்பத்திக்கும் பங்களிக்கப்பட்டது.
பன்னாட்டு நிறுவனங்கள்
தமிழகத்தில் தற்போது நிலவும், கடும் மின்வெட்டை சமாளிக்கும் வகையில், வீடுகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ஓட்டல்கள் போன்றவற்றில், காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டன.வர்த்தக பயன்பாட்டுக்கு காற்றாலைகளை நிறுவி தரும் பன்னாட்டு நிறுவனங்களான, கமேசா, ஜெக்டோ எனர்ஜி போன்ற நிறுவனங்கள், வீட்டு உபயோகத்துக்கான, காற்றாலைகளை நிறுவ முன்வந்துள்ளன.கமேசா நிறுவனம், 2.75 லட்சம் ரூபாயில், சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை வீடுகளில் நிறுவ முடியும் என அறிவித்துள்ளது.
ஜெக்டோ எனர்ஜி நிறுவனம், புதிய தொழில்நுட்பங்களுடன், காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தியை நிறுவ தயாராக இருந்தாலும், வர்த்தக பயன்பாட்டுக்கும் உரியதாக, மின் உற்பத்தி இருக்கும் என தெரிவிக்கிறது.இதன், ஆறு மெகாவாட் திறன் கொண்ட, காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க, இரண்டு கோடி ரூபாய் செலவாகும் என்கின்றனர்.
உள்ளூர் நிறுவனம்
திருப்பூர் மாவட்டம், கேத்தனூரில் காற்றாலை உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான, கே.எஸ்.டி., நிறுவனம், 1.75 லட்சம் ரூபாயில் வீடுகளுக்கான சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கலாம் எனக் கூறுகிறது.இந்நிறுவனத்தின் ஆலோசகர் ராஜு கூறியதாவது:வீடுகளுக்கு மரபுசாரா மின் உற்பத்தியை அமைக்கும் போது, சோலார் மற்றும் காற்றாலை ஆகியஇரண்டையும் சேர்த்து அமைப்பதே சிறந்தது. ஒரு கே.வி., மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் போது, 500 வாட்ஸ் சோலார் நிலையத்தையும், 500 வாட்ஸ் காற்றாலை நிலையத்தையும் அமைக்க வேண்டும்.ஒரு கே.வி., மின் உற்பத்தி நிலையம் அமைத்தால், இரண்டு மின் விசிறி, நான்கு டியூப்லைட்டுகளை பயன்படுத்தலாம். மிக்சி, கிரைண்டர், டிவி, ஏ.சி., போன்றவற்றை பயன்படுத்த, மூன்று கே.வி., வரை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க வேண்டும். இதற்கு, கூடுதல் செலவாகும்.
சீதோஷ்ண நிலைகேற்ப...
இந்த அமைப்பின் மூலம், பகல் நேரங்களில் சோலார் மின்சாரத்தையும், இரவு நேரங்களில் காற்றாலை மின்சாரத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். சீதோஷண நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, இரண்டில் ஒன்றின் மின்சாரத்தை, 24 மணி நேரமும் பெறலாம்.குறைவான, மிதமான, அதிக காற்று வீசும் பகுதிகளுக்கு ஏற்ப, காற்றாலை மின் உற்பத்தியை நிறுவ, ஏதுவான வடிவங்களில், காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களை அமைக்கலாம். நீண்ட கால பயன்பாடு என்ற முறையில், சோலார் மற்றும் காற்றாலைகளில்முதலீடு செய்ய வேண்டும்.
நீண்ட கால முதலீடு
தற்போது செய்யும் முதலீடு, அடுத்த 25 ஆண்டுகள் வரை, பயன் தரும். முதல், 10 ஆண்டுகளில், முதலீடு செய்த தொகைக்கு மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்த, 15 ஆண்டுகள் லாப பருவமாக இருக்கும்.அடுத்த, 25 ஆண்டுகளில், மின்வாரியத்தின் கட்டணம் பல மடங்கு உயரும். டீசல் மின் உற்பத்தி, யூனிட்டுக்கு, 50 ரூபாய் வரை இருக்கும். ஆனால், காற்றாலை மற்றும் சோலார் மூலம்உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ஐந்து ரூபாயை தாண்டாது.எனவே, நீண்ட கால முதலீடாக இவற்றில் முதலீடு செய்ய வேண்டும். மேலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின் உற்பத்தி என்பதும் முக்கியமான ஒன்று. இவ்வாறு ராஜு கூறினார்.

அரசு மானியம் கிடைக்குமா?

சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்காக, மொத்த செலவில் 30 சதவீத தொகையை, மத்திய அரசு அளிக்கிறது. தமிழக அரசும் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.அரசின் மானியம் பெறுவதற்கு, காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்திக்கான உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம், பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.உபகரணங்களுக்கு, அரசின் பயன்பாட்டுச் சான்றும் பெற்றிக்க வேண்டும். பதிவு செய்யாத, சான்றிதழ் பெறாத நிறுவனங்கள் அமைக்கும் நிலையங்களுக்கு அரசு மானியம் பெற முடியாது.பதிவு பெற்று, சான்றிதழ் பெற்ற நிறுவனங்களின் உபகரணங்களை பயன்படுத்தினால் மட்டுமே, அரசின் மானியம் கிடைக்கும்.

மின்வெட்டு பிரச்னைதான் இன்றைக்கு ஹாட் டாப்பிக். புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் வருவதில் தாமதம், மின் பற்றாக்குறையால் ஏற்பட்ட பொருளாதார தேக்கம், காலநேரம் இல்லாத மின்வெட்டினால் ஏற்படும் பிரச்னைகள் என இவை எல்லாம் ஒன்று சேர்ந்து அடுத்த கட்டத்தை நோக்கி யோசிக்க வைத்திருக்கிறது.
மின் பற்றாக்குறையைச் சமாளிக்க மாற்று எரிசக்தியை ஊக்குவிப்பதற்கான அரசின் முயற்சிகளும் ஒருபக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் நமக்கு உடனடியாக கை கொடுப்பது மாற்று எரிசக்தித் திட்டங்களான காற்றாலையும், சூரிய மின்சாரமும்தான்.
சோலார் பவர் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. சிறிய அளவில் வீடுகளுக்கு மட்டுமல்ல, பெரிய அளவிலான மின் உற்பத்தித் திட்டங்கள்கூட சோலார் பவரில் சாத்தியம் என்பதே இன்றைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி.
சோலார் பவருக்கு அடுத்தபடியாக இருப்பது காற்றாலை மின்சார உற்பத்திதான். தமிழ்நாட்டில் பல இடங்களில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தமிழ்நாடு மின் வாரியத்தோடு இணைந்து செயல்படுகின்றன. அதே சமயத்தில், வீடுகளின் மொட்டை மாடியிலேயே சிறிய டவர்கள் மூலம் ஒரு நாளில் 24 மணி நேரமும், ஆண்டு முழுவதும் காற்றிலிருந்து மின்சாரத்தை எடுக்க முடியும் என்பது காற்றாலையில் சாதகமான விஷயம்.
ஆனால், லேட்டஸ்ட் வளர்ச்சியாக, இப்போது சோலார் பேனல்கள் மற்றும் சிறிய அளவிலான காற்றாலைகள் என இரண்டையும் இணைத்து, மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முறை பிரபலமாகி வருகிறது. இந்த நவீன சிஸ்டத்தை வீடுகளுக்குப் பொருத்தித் தரும் ஏ அண்ட் டி சோலார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.விஜயேந்திரனிடம் பேசினோம்.
ஹைபிரிட் சிஸ்டம்!
''சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக படும்போதுதான் சோலார் பவர் பேனல்கள் முழு அளவில் மின் ஆற்றலை தரும். சாதாரணமாக நிலவும் வெப்பநிலையிலிருந்து மின் ஆற்றலை உறிஞ்ச முடியும் என்றாலும், பேனல்களில் மிகக் குறைந்த வெப்ப நிலையில் குறைவான மின்சாரமே பேனல்களிலிருந்து பெற முடியும். ஆனால், காற்றாலை மின்சாரத்திற்கு இதுபோன்று எந்தத் தடையுமில்லை. காற்று வீசும் நேரத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ளும் ஆற்றல் கொண்டது. இதையே நமது தேவைக்கு ஏற்ப வீடுகளில் அமைத்துக்கொண்டால் எந்நேரமும் நம்மால் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ள முடியும். இதற்கேற்ப சோலார் - காற்றாலை இரண்டின் சேர்க்கைதான் ஹைபிரிட் சோலார் சிஸ்டம்ஸ் என்கிறோம்.
இந்த முறையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற சோலார் பேனல்களும், காற்று மூலம் மின்சாரம் பெற சிறிய அளவிலான மின் இயற்றிகளும் பொருத்திக்கொள்ள வேண்டும். அதாவது, 30-லிருந்து 40 சதவிகிதம் வரை சோலார் பேனல்களும், 60 அல்லது 70 சதவிகிதம் காற்று மின் இயற்றிகளும் கொண்ட கலவைதான் ஹைபிரிட் சோலார் சிஸ்டம்ஸ்.
பயன்கள்!
இந்த புதிய சிஸ்டத்தில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. ஆண்டுக்கு ஏழு முதல் எட்டு மாதங்கள் நமக்கு முழுவீச்சில் சோலார் பேனல்கள் மின்சாரம் உற்பத்தி செய்யும். ஆனால், இரவு நேரத்திலும், மழைக்காலங்களிலும் பேனல்கள் முழுவீச்சில் மின் உற்பத்தி செய்ய முடியாது. ஆனால், காற்றாலையில் இந்த கவலை இல்லை. மழை, வெயில், பகல், இரவு என்று எந்தத் தடையுமில்லை. பகலில் பேனல்கள் வழி உற்பத்தியும், இரவில் காற்றின் மூலமும், மழை, காற்று வீசக்கூடிய பருவ நிலைகளிலும் இந்த ஹைபிரிட் சிஸ்டத்தின் மூலம் முழு அளவிலான மின்சாரம் நமக்கு கிடைக்கும். 
எப்படி அமைப்பது?
பொதுவாக, தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளும் சீரான காற்று வீசும் புவி அமைப்பு கொண்டவைதான். எனவே, அனைத்து இடங்களிலும் இதை பொருத்திக்கொள்ளலாம்.  இந்த முறையில் காற்றாலை தரையிலிருந்து 60 அடி உயரத்தில் சுற்றும். அதாவது, வீட்டிற்கு அருகில் இடவசதி கொண்டவர்கள் தரைப்பகுதியிலும், மொட்டை மாடியிருந்தால் அதற்கேற்ப உயர அளவிலும் அமைத்துக்கொள்ள வேண்டும். 60 அடி உயரத்தில் இறக்கைகளின் சுற்றளவு சுமார் 1.5 முதல் 2.75 மீட்டர் வரை இருக்கும். 1 கிலோ வாட் காற்றாலை இயந்திரத்தின் மொத்த எடையும் 30 கிலோவுக்குள்தான் இருக்கும். 
சாதகமான விஷயங்கள்!
சாதாரணமாக காற்றில் இலைகள் அசையும் வேகத்தில் காற்று வீசினாலே இந்த மின் இயற்றி தானாகச் சுற்றத் தொடங்கிவிடும். அதாவது, காற்றின் வேகம் மிதமாக இருந்தாலே போதும். (நிமிடத்திற்கு 3.1 மீட்டர்)  அதேபோல இந்த மின் இயற்றியை இயக்குவதற்கு என்று தனியாக மின்சாரம் செலவிடத் தேவையில்லை. காற்றின் வேகத்திற்கு ஏற்ப தானாக இயங்கி தானாகவே நிற்கும் ஆற்றல் கொண்டது. சூரிய சக்தி, காற்று சக்தி இரண்டும் சேர்ந்த கலவை என்பதால் எந்த பருவ நிலையிலும் நமக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும்'' என்றார் அவர்.
செலவு எவ்வளவு?
தற்போது சோலார் பவர் மின் சாதனங்களை வீடுகளில் அமைப்பதற்கு ஆகும் செலவிலேயே இந்த சிஸ்டத்தையும் அமைத்துக்கொள்ள முடியும். இதற்கு மத்திய அரசின் மாற்று எரிசக்தி துறை மானியமும் அளித்து வருகிறது. ஒரு கிலோவாட் ஹைபிரிட் சிஸ்டம் அமைக்க 2.50 முதல் 3.00 லட்சம் வரை செலவாகும். அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், டிரஸ்ட்கள், லாப நோக்கமற்ற அமைப்புகள் இந்த சிஸ்டத்தை அமைத்துக்கொள்ளும்பட்சத்தில் ஒரு கிலோவாட்டிற்கு 1.5 லட்சம் ரூபாய் வரை மானியம் பெற முடியும். தனிநபர்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு ஒரு லட்சம்  வரை மானியம் கிடைக்கிறது. நிறுவனங்கள் இந்த முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்போது இதற்கான செலவு தேய்மானத்துடன் சேர்த்துக் கணக்கில் காட்டி வரிச் சலுகையை அனுபவிக்க முடியும்.
எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் நமக்கு இந்த திட்டம் ஒரு தீர்வாக இருக்கலாம்.
- நீரை.மகேந்திரன்,
படம்: தி.விஜய், ச.இரா.ஸ்ரீதர், ரா.மூகாம்பிகை


Oct 31, 2012

நீலம் புயல் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்

வங்க கடலில் சென்னையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் நிலை கொண்ட 'நீலம்' புயல் தமிழக கடற்கரையை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்தது. கடந்த 3 நாட்களாக மிரட்டிய இந்த புயல் இன்று மாலை கடலூருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே மகாபலிபுரத்தில் புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. புயல் கரையை கடக்கும்போது சூறாவளி காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த புயல் கரையை கடக்கும்போது சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும்

நீலம் புயல் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 

Oct 9, 2012

ஒட்டுண்ணிகள்! தினமணி தலையங்கம்


காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா என்ன தொழில் செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அவரை ""வெற்றிகளைக் குவிக்கும் வியாபாரி. அரசியலுக்கு மாற மாட்டார்'' என்று பிரியங்கா தெரிவித்தபோது என்ன தொழில் செய்கிறார் என்று யாரும் கேட்கவில்லை. இப்போது "உங்கள் தொழில் என்ன? உங்களுக்கு எப்படி இவ்வளவு சொத்துகள் வந்தன?' என்று "ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் தலைவர் கேஜரிவால் மற்றும் பிரசாந்த் பூஷண் இருவரும் கேட்கிறார்கள் என்றால், அதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன.
 "வெறும் ரூ. 50 லட்சம் முதலீட்டில் தொடங்கிய தொழில் இப்போது ரூ.300 கோடிக்கும் மேலாக மதிப்பு பெற்றது எப்படி?' என்று கேட்கும் கேஜரிவால், இதுவரை ராபர்ட் வதேரா நடத்தும் நிறுவனங்கள் வாங்கியுள்ள சொத்துகள் குறித்த விவரங்களையும், "இந்த சொத்துகள் ஏன் சந்தை மதிப்பைவிடக் குறைவான விலையில் உங்களுக்கு விற்கப்பட்டன? எந்த அடிப்படையில் இந்தச் சொத்துகளை வாங்கக் கடன் அளிக்கப்பட்டது?' என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்கின்றார்.
 இந்தியாவின் மிகப்பெரும் வீடு, மனை, நிலம் விற்பனை நிறுவனம் டி.எல்.எப். இந்த நிறுவனம் வதேராவுக்கு நம்பிக்கையின் பேரில் வியாபார ரீதியாக ரூ.65 கோடி முன்பணம் கொடுத்ததை ஒப்புக்கொள்கின்றது. ஆனால், ஏன் முன்பணம் கொடுக்கவேண்டும்? அதற்காக அவரிடம் செய்துகொண்ட தொழில் ஒப்பந்தம் என்ன? என்று அதுகுறித்து விளக்கம் கேட்டால் சொல்ல மறுக்கிறது.
 "நாங்கள் கொடுத்த பணத்தில் ரூ.15 கோடியைத் திருப்பிச் செலுத்திவிட்டார். ரூ.50 கோடிக்கு நிலப் பரிமாற்றம் நடந்துள்ளது' என்று மட்டும் சொல்கின்றது டி.எல்.எப். நிறுவனம். இந்த நிறுவனத்தின் பதில் சட்டப்படியாக சரியாக இருந்தாலும்கூட, ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை, அந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த இரு நாள்களில் அடைந்துள்ள வீழ்ச்சியே சொல்லும்!
 டிஎல்எப் நிறுவனம் - ராபர்ட் வதேரா இடையிலான கொடுக்கல் வாங்கல், வியாபாரம் ஆகியவை சட்டப்படி கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது என்கிறார் வதேராவுக்காக வக்காலத்து வாங்கும் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித். ஆனால், இதேபோன்று எல்லா நிறுவனங்களுக்கும், எந்தப் பிணையும் இல்லாமல் ரூ.65 கோடியை முன்பணமாக டி.எல்.எப். அள்ளிக் கொடுத்துவிடுமா? இந்தப் பரிவர்த்தனை அவர் ராபர்ட் வதேரா என்பதற்காக அல்ல, அவர் சோனியா காந்தியின் மருமகன் என்பதற்காகத்தான் என்று விவரம் தெரியாத குழந்தைகூடச் சொல்லிவிடுமே!
 இந்தியாவில் எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசியல் தலைவர்கள் என்று யார் பெயரிலும் பெருமளவு சொத்து கிடையாது. அரசியல்வாதிகள் வேட்புமனு தாக்கலின்போது தெரிவிக்கும் சொத்துகளைத் தவிர வேறு ஏதும் சேர்த்துக்கொண்டதில்லை. சிலர் பாவம், சொந்தமாக ஒரு கார்கூட இல்லாதவர்கள்!
 ஆனால், இவர்களது மனைவிமார்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். பிள்ளைகள், மாப்பிள்ளைகள், அண்ணன், தம்பி, மைத்துனன் எல்லாரும் பெருந்தொழிலதிபர்களாக மாறிவிடுகிறார்கள். இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் இத்தகையவர்களைப் பட்டியல்போட்டால், அதில் விதிவிலக்காக இருப்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.
 பெரிய இடத்துத் தொடர்புடைய யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். அவர்கள் எல்லோருமே தங்கள் "திறமையால்' வளர்ந்ததாகத்தான் சொல்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி யாரையும் மிரட்டவில்லை, தொழில்போட்டியை ஒடுக்கவில்லை, அதுவாக வளர்ந்தது என்கிறார்கள். இதை நாம் நம்புவோம் என்றும் நம்புகிறார்கள்.
 உரிய ஆவணம் அல்லது தொழில் திட்டம் இல்லாமல் கடன், முன்பணம் பெறுவது ஊழலாகக் கருதப்படுவதில்லை; ஒரு தொழில் முனைவோருக்கான வாய்ப்பாகப் பேசப்படுகிறது. ஒரு இணை நிறுவனத்தின் வளர்ச்சியை நசுக்கினால் அதனை தொழில்போட்டியில் இயல்பானதாகப் பார்க்கிறார்கள். அதிகாரிகளைத் தங்கள் நிறுவன மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொண்டால், அது நட்பு ரீதியிலான ஆலோசனையாகப் பார்க்கப்படுகிறது. இவை யாவும் "ஊழல்' என்ற வட்டத்துக்குள் வருவதே இல்லை.
 ஒருவர் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தினால் குற்றம் சொல்லும் இந்திய அரசியல் சட்டம், அவரது உறவினர்கள், அதைத் தவறாகப் பயன்படுத்தினால் அதை அப்பதவி வகிப்பவரின் குற்றமாகப் பார்ப்பதில்லை. இதுதான் சட்டத்தின் ஓட்டை. ஆகவே எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் சொத்துகளில் மாற்றம் இருப்பதே இல்லை. அவர்களைச் சுற்றியுள்ள ரத்த உறவுகள் மலையென சொத்துகளைக் குவித்துக்கொண்டே இருக்கின்றன.
 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், சந்தைப் பொருளாதார அடிப்படையிலான கார்ப்பரேட் சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்தின் பங்குகளை இன்னொரு நிறுவனம் வாங்குவது சட்டப்படி சரி என்கிற நியாயத்தைப் பயன்படுத்தித்தான் முறைகேடு நிகழ்ந்தது. வதேரா விவகாரத்தில் மட்டுமல்ல, பிரமுகர்களின் வாரிசுகள் சம்பந்தப்பட்ட பணப் பரிமாற்றங்கள் சட்டத்தின் போர்வையில் சரியாகத்தான் இருக்கிறது. நேர்மைக்கு விடைகொடுத்துவிட்டு பணத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க முற்பட்டிருக்கும் சந்தைப் பொருளாதார அவலத்தின் வெளிப்பாடுதான் சுற்றி இருப்பவர்கள் சொத்து சேர்க்கும் சாமர்த்தியம்.
 அரவிந்த் கேஜரிவாலும், பிரசாந்த் பூஷணும் கூறுவதுபோல, லோக்பால் அமைப்பு என்று ஒன்று இருந்திருந்தால், வதேரா மீதான குற்றச்சாட்டை அங்கே தாக்கல் செய்திருக்கலாம். நீதிமன்றத்தில் சட்டம்தான் எடுபடுமே தவிர தர்மத்துக்கு இடம் கிடையாதே...
 வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த அதிகாரிகள், அமைச்சர்கள் கைது செய்யப்படுவதைப்போல, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த அவர்தம் உறவுகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலைமை வராமல் போனால் இந்திய ஜனநாயகம் தீவிரவாதிகளின் பிணைக்கைதியாகிவிடும் துர்பாக்கியம் ஏற்படும், ஜாக்கிரதை!

Oct 1, 2012

குமுதம் ரிபோர்டர் பைத்தியம் :நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு

குமுதம் ரிபோர்டேரும் பைத்தியம் அதை படிக்கிறவர்களும் பைத்தியம் நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு

      கூட்டணியில் இருந்த காலத்திலேயே போயஸ் தோட்டத்தின் வாசல் படிகளை மிதிக்காதவன் நான்

மற்றவர்களை காட்டிலும் வைகோவோடு எனக்கு ஆழமான அடர்த்தியான தொடர்பு உண்டு ,கல்லூரி படிக்கிற கால் சட்டை பருவம் முதல் என் காலடியில் காணாமல் போன தமிழர் மாண்புகளை கண் முன்னாள் மீட்டு எடுக்கும் காவிய தலைவன் வைகோ என்று நம்பி அவரின் கரம் பற்றியவன் நான் ,செய்தி வந்த அந்த நாளிலும் கழகத்தின் விதைகளை அரபு நாடுகளில் தூவி கொண்டு இருந்தேன் ,கூட்டணியில் இருந்த காலத்திலேயே போயஸ் தோட்டத்தின் வாசல் படிகளை மிதிக்காதவன் நான் இது போன்று பரபரப்புக்காக செய்தி போட்டு பணம் தேடுவதை விட குமுதம் ரிபோர்ட்டர் வேறு ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம் ,கழக தோழர்கள் இது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்

Sep 3, 2012

ராஜபக்சவுக்கு எதிராக ம.பி.யில் மதிமுக போராட்டம்: வைகோ

இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபக்ச மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில்  நடைபெற் உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்போது,அவருக்கு எதிராக அங்கு மதிமுக  போராட்டம் நடத்தும் என்று அக்கட்சிட்யின் பொதுச் செயலாளர் வைகோ  அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இலட்சக்கணக்கான  ஈழத்தமிழர்களை சிங்கள இனவாத அரசு முப்படைகளை ஏவி எங்கள் தமிழக்குல ரத்த  உறவுகளை கோரமாக கொன்று அழித்த கொடியவன் ராஜபக்ச, மத்திய பிரதேச  மாநிலத்தில் சாஞ்சியில் செப்டம்பர் 21 ஆம் தேதி புத்தமதம் தொடர்பான கல்வி  மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக அழைத்துள்ளதாகவும்,  ராஜபக்சே அதில் பங்கேற்கப் போவதாகவும், பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை  எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.கவுதம புத்தர் பெருமகனார் பெயரை உச்சரிப்பதற்கு கூட அணுவளவும் தகுதி இல்லாத  கொடிய கொலைகாரன்தான் ராஜபக்சே,புத்தரின் பெருமை பேசும் விழாவில் ராஜபக்ச  கலந்துகொண்டால் புத்தரின் எலும்புகள் கூட அதை மன்னிக்காது.
 
மத்தியில் காங்கிரஸ் தலைமை தாங்கும், சோனியா காந்தி இயக்கும் ஐக்கிய  முற்போக்குக் கூட்டணி அரசு ஈழத்தமிழர்களை அழிக்க சிங்கள அரசுக்கு ஆயுதங்களும்,  ஆயிரக்கணக்கான கோடிகளும் கொடுத்து, தமிழ் இனக்கொலைக்கு உடந்தையாக  செயல்பட்டு இன்றுவரை மன்னிக்க முடியாத பல துரோகங்களை செய்து வருகிறது.

புத்தரின் பெயரைச் சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லாது தமிழர்களை படுகொலை  செய்த சிங்கள இனவாத ராஜபக்ச அரசுக்கு, புத்தரின்  புனிதப்பொருள்களை  அனுப்பக்கூடாது  என்று வற்புறுத்தி யிருந்தேன். ஆனால், தமிழர்களின் மன வேதனைகளை  உதாசினப்படுத்திவிட்டு புத்தர் பெருமானின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப்பொருள்களை  மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் குமாரி செல்ஜாயும், தேசிய அருங்காட்சியகத்தின்  இயக்குநர் நாயகம் பிரவீண் ஸ்ரீவத்சவாவும் கொழும்புக்கு கொண்டுபோய் தமிழர்களின்  ரத்தம் தோய்ந்த ராஜபக்ச கரங்களில் ஒப்படைத்தனர்.இதற்கு என்றைக்கும் மன்னிப்பே  கிடையாது.

மத்திய பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரான வாஜ்பாய்  பிரதமராக இருந்த காலத்தில், சிங்கள அரசு பணம் கொடுத்தாலும் இந்திய அரசு  ஆயுதங்களை விற்காது என்று துணிச்சலாக முடிவெடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்திலும்  அறிவித்தார்.அதனையே செயல்படுத்தினார். ஆனால் இன்றோ உடல் நலம் மிக நலிந்து  பேசவும் முடியாமல் அடல் பிகாரி வாஜ்பாய் படுத்த படுக்கையாக இருப்பதால்தான்  இப்படிப்பட்ட மன்னிக்க முடியாத துரோகம் தமிழருக்கு செய்யும் கேடுகெட்ட செயலை  சுஷ்மா சுவராஜூம், மத்திய பிரதேச பா.ஜ.க. அரசும் அறிவிக்கும் நிலை  ஏற்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி தலைவர் நிதின் கட்காரியும், ஈழத்தமிழர்கள் நலனில் உண்மையான  அக்கறை கொண்டுள்ள யஷ்வந்த்சின்கா போன்ற பாரதிய ஜனதா கட்சி தலைவர்களும்  மகிந்த ராஜபக்சவை புத்தர் விழாவுக்கு அழைக்கும் முடிவை ரத்து செய்ய உரிய  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

எனது நியாயமான இந்த வேண்டுகோளை உதாசீனம் செய்து மாபாவி ராஜபக்சவேவை  மத்திய பிரதேச சாஞ்சியின் விழாவுக்கு அழைத்து வந்தால், அதனை எதிர்த்து சாஞ்சியில்  செப்டம்பர் 21 ல் எனது தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்  கருப்புக்கொடி போராட்டம் நடத்தும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்"  என்று கூறியுள்ளார்.

Aug 9, 2012

மதுரை வலைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பம்!



தருமி - தருமி
தமிழ்வாசி பிரகாஷ் - தமிழ்வாசி
வா.கோவிந்தராஜ்- தமிழன்