Jun 26, 2014

உணவு யுத்தம்! 17


 


பாயசம் கசக்கிறதா?

‘திருமண விருந்தில் பரிமாறப்பட்ட ஜவ்வரிசி பாயசம் சாப்பிட்டு 16 பேர் மயக்கம், மருத்துவமனையில் அனுமதி’ என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன். பாயசம் சாப்பிட்டு ஏன் மயக்கமடைந்தார்கள் என அரசு மருத்துவரான எனது நண்பரிடம் கேட்டேன். அவர் ஆதங்கமான குரலில் சொன்னார்: ”எங்கேயும் நம்பி பாயசம் குடித்துவிடாதீர்கள். சில கம்பெனிகள் தயாரிக்கிற ஜவ்வரிசிகள் கலப்படமானவை. அதில் மக்காச்சோள மாவும் செயற்கை ரசாயனங்களும் கலந்துவிடுகிறார்கள். அந்தப் பாயசம் சாப்பிட்டால் வாந்திபேதி ஏற்படும்.”
என்னால் அவர் சொன்னதை நம்ப முடியவில்லை. நிஜம்தானா என மறுபடியும் கேட்டேன்.
”100 சதவிகிதம் உண்மை. ஜவ்வரிசி தயாரிக்கும்போது, பளீரென வெள்ளை நிறம் இருக்க வேண்டும் என்பதற்காக வாஷிங் பவுடரைச் சேர்க்கின்றனர். இந்தப் புகாரில் சமீபமாக ஒரு தொழிற்சாலை மூடப்பட்டிருக்கிறது” என்றபடியே, ”ஜவ்வரிசிக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?” எனக் கேட்டார்.
பச்சைக் குழந்தை முதல் பாயசம் சாப்பிட்டு இருந்தாலும், ஜவ்வரிசிக்கு எப்படி பெயர் வந்தது என யோசிக்கவே இல்லை. அவர் கேட்டபோதுதான் எப்படி அந்தப் பெயர் வந்தது என யோசித்தேன்.
டாக்டர் சிரித்தபடியே சொன்னார்.
”அது ஜாவாவில் இருந்து வந்தது. கஞ்சி செய்யப் பயன்பட்டதால், அதை ஜாவா அரிசி என்று அழைத்தார்கள். அதைச் சொல்லத் தெரியாமல் நம் மக்கள் ஜவ்வரிசி ஆக்கிவிட்டார்கள். மரவள்ளிக் கிழங்கில் இருந்து செய்யப்படுவதே ஜவ்வரிசி. இதனைச் சாகோ, சகுடானா, சபுடானா, சௌவாரி என்றும் அழைக்கின்றனர். கூடுதல் விவரங்கள் வேண்டும் என்றால் மைக்கேல் டார்வர் எழுதிய ‘ஹிஸ்டரி ஆஃப் ஃபுட்’ படித்துப் பாருங்கள்” என்றார்.
உணவின் வரலாற்றை மேலை நாடுகளில் துல்லியமாக எழுதி வைத்திருக்கிறார்கள். இந்திய உணவு முறைகள் பற்றியும் அதன் பண்பாட்டு வரலாற்றையும் நாம் இன்னமும் தொகுத்து நூலாக்கவில்லை.
சாப்பிடுகிற உணவின் பெயர் தமிழ் சொல்லா எனக் கூடத் தெரிந்துகொள்ளாமல் சாப்பிடுகிற பழக்கம் நமக்குள் உருவாகிவிட்டது. உலகம் முழுவதும் பரவலாக உண்ணப்படும் உணவு வகைகள், அதன் தோற்றம், பரவல், உணவில் உள்ள சத்துகள், குறைபாடுகள் பற்றி மைக்கேல் டார்வரும் ஆலன் ஆஸ்டினும் இணைந்து இரண்டு தொகுதிகளாக உணவின் வரலாற்றை எழுதியிருக்கிறார்கள். கேம்பிரிட்ஜ் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. இதில் பல தகவல்கள் விரிவாக உள்ளன.
தமிழ்நாட்டில் 700-க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 90 சதவிகிதம் சேலம், நாமக்கல் வட்டாரத்தில் அமைந்துள்ளன. ஜவ்வரிசியில் அதிக அளவில் கார்போ ஹைட்ரேட், குறைந்த அளவில் கொழுப்பு ஆகியவை உள்ளன. 100 கிராம் ஜவ்வரிசியில் 351 கிலோ கலோரிகள் உள்ளன. இதில் 87 கிராம் கார்போ ஹைட்ரேட், 0.2 கிராம் கொழுப்பு மற்றும் 0.2 கிராம் புரதம் ஆகியவை உள்ளன.
ஒரு பங்கு ஜவ்வரிசியை 15 பங்கு தண்ணீரில் கொதிக்க வைத்து, அது மூன்றில் ஒரு பாகம் சுண்டிய பிறகு குடித்தால் வியாதிகள் குணமாகும் என்கிறது யுனானி மருத்துவம். நோயாளிகளுக்கு ஏற்ற உணவு என்பதுடன், உடல் வெப்பத்தைத் தணித்துக் குளிர்ச்சி அடைய செய்யக் கூடியது என்ற விதத்திலும் ஜவ்வரிசி முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆங்கிலத்தில் இதை சேகோ என அழைக்கிறார்கள். இந்தச் சொல், மலேய மொழியில் உள்ள சேகு என்ற சொல்லில் இருந்து ஆங்கிலத்துக்குச் சென்றிருக்கிறது.
மெட்ரோசைலான் ஸாகு என்பது ஒரு வகைப் பனைமரம். இதன் பழத்தின் ஊறலைக் காய்ச்சி கிடைக்கும் மாவுதான் சேகோ. அந்த மாவை பாசி போலச் சிறுசிறு உருண்டையாக உருட்டி செய்வதே ஜவ்வரிசி. இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை சேகோ ஜாவாவில் இருந்து கப்பல் மூலம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. அதன் காரணமாகவே ஜாவா அரிசி எனப்பட்டது.
இந்தியாவில் வங்காளம், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவற்றில் ஜவ்வரிசி முக்கிய உணவாக விளங்குகிறது. மகாராஷ்டிரத்தில் இதைச் சாபுதானா என்று அழைக்கிறார்கள்.
மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஜவ்வரிசியினால் உப்புமாவும் கஞ்சியும் தயாரித்து உண்கின்றனர். ஒவ்வொரு குடும்பமும் சராசரியாக மாதம் ஒன்றுக்கு ஐந்து கிலோ அளவில் ஜவ்வரிசி பயன்படுத்துகின்றனர். கேரளத்திலும் ஜவ்வரிசியைச் சாதம்போல் செய்து உண்பது வழக்கம்.
ஜவ்வரிசியின் கதையைப் பார்ப்பதற்கு முன் பாயசம் எப்படி இந்திய உணவில் முக்கிய இடம் பிடித்தது என அறிந்துகொள்வோம்.

இந்தியாவில் அரிசியில் செய்யப்படும் பாயசமே முதலாகச் செய்யப்பட்டிருக்கிறது. பாலும் அரிசியும் சேர்ந்து இந்தப் பாயசத்தைச் செய்திருக்கிறார்கள்.

பாயசத்தை வட இந்தியாவில் கீர் என்கிறார்கள். அதன் பொருள் பாலில் செய்த இனிப்பு என்பதாகும். தமிழில் பாயசம் என்ற சொல் உருவானதும் சமஸ்கிருத சொல்லான பாயசா என்பதில் இருந்தே. அதன் பொருளும் பால் என்பதையே குறிக்கிறது. 100-க்கும் மேற்பட்ட பாயச வகைகள் இருக்கின்றன. இதில் பால் பாயசமே ராஜா என்கிறார்கள். இப்படிச் சொல்வதுடன் அது குறித்து ஒரு கதையும் சொல்கிறார்கள்.
ஒரு அரசனின் பிறந்தநாள் விருந்தில் விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. சாப்பிட வந்த ஒரு பிச்சைக்காரன் ருசியான உணவு வகைகளை அள்ளி அடைத்து வயிற்றை நிரப்பினான். அவன் சாப்பிடுவதை மன்னர் வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தார். ஏப்பம் வந்தபோதும் வயிற்றை அசைத்துக் கவளம் கவளமாகச் சோற்றை உள்ளே திணித்தான். அத்தனையும் சாப்பிட்டுவிட்டு பெரிய கிண்ணம் நிறையப் பால் பாயசத்தைக் குடிக்க எடுத்தான்.
‘இவ்வளவு சாப்பிட்ட பிறகு எப்படி இதைக் குடிக்க முடியும்?’ என அரசர் கேட்டதற்கு, அந்தப் பிச்சைக்காரன் பதில் சொன்னான்.
”அய்யா, எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் அரசர் வந்தால் விலகி அவர் செல்வதற்கு வழி தர மாட்டார்களா? அப்படி உணவில் ராஜா, இந்தப் பால் பாயசம். அது உள்ளே போவதற்கு எந்த உணவாக இருந்தாலும், ஒதுங்கி இடம் தரவே செய்யும்.”
இப்படிப் பால் பாயசக் கதையைப் பெருமையாகச் சொல்கிறார்கள்.
இந்தியக் கோயில்களில் கடவுளுக்குப் படைக்கப்படுவதற்காகப் பாயசம் தயாரிக்கப்படுவது 2,000 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறையில் இருந்திருக்கிறது. வெல்லமிட்ட பாயசம் ஒடிசா மாநில பூரி ஜெகனாதர் கோயிலில் இன்றும் கடவுளுக்குப் படைக்கப்படுகிறது.
கேரளாவில் பாயசம் மிகவும் புகழ்பெற்ற உணவு என்பதால், ஆண்டுதோறும் பாயசத் திருவிழா ஒன்றை கேரள சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்கிறது. இதில் விதவிதமான பாயச வகைகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. ஒரு கிண்ணம் பாயசத்தின் விலை ரூபாய் 25-ல் தொடங்கி 2,500 வரை உள்ளது.
தமிழ்நாட்டில் எப்படி ஜவ்வரிசி தொழில் உருவானது என்பது சுவாரஸ்யமான நிகழ்வு. இதுகுறித்து, பொருளாதாரப் பேராசிரியர் எஸ்.நீலகண்டன் ஜவ்வரிசி தமிழகம் வந்த கதை என விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையில் இவர் தரும் தகவல்கள் வியப்பானவை.
சுதந்திரத்துக்கு முந்தைய காலங்களில் மைதா மாவுக்குப் பெயர் மரிக்கன் மாவு என்று பெயர். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதால், அதை அமெரிக்கன் மாவு என்று அழைத்தார்கள். அது மருவி மரிக்கன் மாவு என அழைக்கப்பட்டது. ஜவ்வரிசியும் மைதாவும் முக்கிய இறக்குமதி பொருட்களாக இருந்தன.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் கப்பல்களில் ராணுவ தளவாடப் பொருட்கள் கொண்டுவருவதற்கு மட்டுமே முன்னுரிமைத் தரப்பட்டது. அதனால், இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட ஜவ்வரிசி இறக்குமதி பாதிக்கப்பட்டது. சந்தையில் ஜவ்வரிசி கிடைக்காத காரணத்தால் அதன் விலை பலமடங்கு உயர்ந்தது.
முதல் தரமான ஜவ்வரிசி என்பது முழுக்க முழுக்கப் பனைச் சாற்றில் இருந்து தயாரிக்கப்பட்டது. மட்டரகச் சேகோ என்பது பனைச் சாற்றோடு மைதா மாவைக் கலந்து உருவாக்குவதாகும். இது கலப்பட ஜவ்வரிசி என அழைக்கப்பட்டது. இதன் விலை குறைவு.

இறக்குமதி குறையத் தொடங்கிய காலத்தில் சேலத்தில் வணிகம் செய்துவந்த மாணிக்கம் செட்டியார் என்பவர் கேரளாவுக்குச் சென்று வந்தபோது, அங்கே மைதா மாவுக்குப் பதிலாக மரவள்ளிக் கிழங்கு மாவைப் பயன்படுத்துவதைக் கண்டார். தாமும் அதுபோன்று தயாரித்து, விற்பனை செய்யலாமே என, 

புதிய தொழிலை தொடங்கியிருக்கிறார். மாவு விற்பனை பிரபலமாகத் தொடங்கியது. உடனே மரவள்ளிக் கிழங்கை ஏற்காடு மலைப்பகுதியில் பயிரிட்டு, தனக்குத் தேவையான மரவள்ளிக் கிழங்கினை தானே உற்பத்தி செய்ய ஆரம்பித்தார் மாணிக்கம் செட்டியார்.

இதே நேரம் பொப்பட்லால் ஜி ஷா என்ற வணிகர் மலேசியாவில் இருந்து ஜவ்வரிசி வாங்கி, இந்தியாவில் விற்று நிறையச் சம்பாதித்தார். அவர் இந்தியாவிலே ஜவ்வரிசியைத் தயாரிக்க விருப்பம் கொண்டார். இதற்கான தேடுதலில் இருந்தபோது, தமிழ்நாட்டில் மரவள்ளிக் கிழங்கு மாவு விற்பனை சக்கை போடு போடுவதை அறிந்தார்.
அதற்குக் காரணமாக இருந்த சேலம் மாணிக்கம் செட்டியாரைப் பற்றிக் கேள்விப்பட்டு நேரில் வருகை தந்து, மரவள்ளிக் கிழங்கு மாவைக் கொண்டு ஜவ்வரிசி தயாரிக்க முடியுமா என விசாரித்தார். செட்டியாருக்கு இந்த யோசனையை ஏன் முயன்று பார்க்கக் கூடாது என்று தோன்றியது.
அரைத்த மரவள்ளிக் கிழங்கு மாவை தொட்டிலில் போட்டு நனைய வைத்துக் குலுக்கினால், அது குருணை போலச் சிறு சிறு உருண்டைகளாக மாறுவதைக் கண்டார். அதைத் தனித்து எடுத்து வறுத்தால், ஜவ்வரிசி போல உருவாவதை அறிந்துகொண்டார். இந்த மரவள்ளிக் கிழங்கு உருண்டைகள் நிஜ ஜவ்வரிசி போலவே இருந்தன.
சந்தையில் ஜவ்வரிசிக்கு இருந்த கிராக்கியைப் பயன்படுத்தி, புதிய ஜவ்வரிசியை விற்பனை செய்யலாம் என முடிவுசெய்து 1943-ல் ஷாவோடு இணைந்து மரவள்ளிக் கிழங்கு ஜவ்வரிசியை விற்பனைசெய்யத் தொடங்கினார்.
ஒரிஜினல் ஜவ்வரிசி போலவே இருந்த நகலுக்குப் பெரிய லாபம் கிடைத்தது. இருவரும் பணம் அள்ளத் தொடங்கினார்கள். சந்தையின் வேகத்துக்கு ஈடுகொடுத்து போலி ஜவ்வரிசிகளைத் தயாரிக்க முடியாத அளவுக்கு வணிகம் பெருகியது.
இயந்திரங்களைக் கொண்டு போலி ஜவ்வரிசி உற்பத்தி செய்தால் மட்டுமே சந்தையின் தேவையைத் தீர்க்க முடியும் என முடிவுசெய்து இயந்திரத் தொழில்நுட்பம் அறிந்த வெங்கடாசலக் கவுண்டர் என்பவரை அணுகி, ஜவ்வரிசி தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்துத் தரும்படி கேட்டுக்கொண்டார் மாணிக்கம் செட்டியார்.
அப்படி உருவாக்கப்பட்டதே ஜவ்வரிசி செய்யும் இயந்திரம். இதன் உதவியைக் கொண்டு தினமும் 50 மூட்டைகளுக்குக் குறையாமல் ஐவ்வரிசி தயாரிக்க முடிந்தது. ஜவ்வரிசி தொழிற்சாலைகள் அப்படித்தான் தமிழகத்தில் தொடங்கப்பட்டன.
மரவள்ளிக் கிழங்கினைக் கொண்டு ஜவ்வரிசி தயாரித்து விற்றால் நிறைய லாபம் என்பதைக் கண்டுகொண்ட பலரும், இந்தப் புதிய தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
இந்தத் தொழில் தீவிரமாக வளர்ச்சி அடைந்தபோது 1943-ல் இந்தியாவில் கடுமையான பஞ்சம் உருவானது. இது சர்ச்சில் திட்டமிட்டு உருவாக்கிய பஞ்சம் என்று வரலாற்று ஆய்வாளர் மதுஸ்ரீ முகர்ஜி போன்றவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். வங்கப் பஞ்சம் என்று அழைக்கப்படும் இந்தக் கொடும் பஞ்சத்தில் இந்தியாவில் பல்லாயிரம் மக்கள் உயிர் இழந்தனர்
பஞ்ச காலத்தில் உணவுப் பற்றாக்குறை தீவிரமாகியது. அந்தக் காலத்தில் பஞ்சம்தாங்கி என மரவள்ளிக் கிழங்கு அழைக்கப்பட்டது. அதைக் கப்பங்கிழங்கு, ஏழிலைக் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு எனப் பலவிதமாக அழைக்கிறார்கள். பஞ்ச காலத்தில் இந்தக் கிழங்கை உண்டு பிழைத்தவர்கள் ஏராளம்.
பஞ்சம் வேகமாகப் பரவியதால், மரவள்ளிக் கிழங்கு மாவைக் கொண்டு ஜவ்வரிசி தயாரிக்கக் கூடாது என சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஓர் உத்தரவு பிறப்பித்தார். இதன் காரணமாக ஜவ்வரிசித் தொழிலுக்குத் தற்காலிகப் பின்னடைவு ஏற்பட்டது.

உணவு யுத்தம்!-16

இந்தியாவின் முதல் பேக்கரி!
வேட்டை சமூகத்தில் இருந்து வேளாண் சமூகமாக மனிதன் மாறிய காலத்திலேயே, ரொட்டி சாப்பிடும் வழக்கம் உருவாகிவிட்டது.
ரோமானியர்கள் ரொட்டி தயாரிப்பதில் முன்னோடியாக இருந்த தகவல்களை அவர்களின் வரலாற்று நூல்களில் காண முடிகிறது. கி.மு. 168-ல் ரோமில் அடுமனை தொழிலாளர்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் செய்யப்பட்ட ரொட்டியும், இன்று நாம் சாப்பிடும் ரொட்டியும் ஒன்று இல்லை. அப்போது அவை அரைத்த தானியத்துடன் உப்பும் வெண்ணெய்யும் சேர்த்து செய்யப்பட்டவை. மாவு அரைக்கும் இயந்திரங்கள் உருவாகாத காலம் என்பதால், ரொட்டி கடினமானதாக இருந்தது. ஏதென்ஸ் நகரின் சாலையில் வைத்து ரொட்டிகள் கூவி விற்கப்பட்டன.

சிறந்த ரொட்டி செய்பவர்களுக்குப் பெரிய கிராக்கி இருந்தது. விருந்துகளில் ரொட்டி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டனர், ரொட்டியின் அளவு, எடை, விலை ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும் என்று மக்கள் புகார் தெரிவித்தார்கள். இதற்காக 1266-ல் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது.
அதன் முன்பு வரை ரொட்டியின் விலை என்பது ரொட்டி சுடுபவரின் சம்பளம், அவரது வீட்டுச் செலவு, மனைவியின் செலவுகள், கடை நிர்வாகச் செலவு, எரியும் விறகுகளுக்கான பணம், வீட்டு நாய்களின் உணவு ஆகிய அத்தனையும் சேர்த்தே நிர்ணயிக்கப்படும்.
அதை எதிர்த்த மக்கள், ரொட்டி விலையை முறைப்படுத்தக் கோரி போராடினார்கள். 13-ம் நூற்றாண்டில் ரொட்டியின் தரமும் விலையும் வரையறை செய்யப்பட்டன. ஆனாலும், முழுமையாக அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
1718-ல் ரொட்டி தயாரிப்பதற்காக சிறப்புப் பள்ளி தொடங்கப்பட்டு, முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி பெற்ற ரொட்டி செய்பவர்கள் புது வகை ரொட்டிகளை உருவாக்கினார்கள். உணவு மேஜையில் எப்படி ரொட்டியைப் பரிமாற வேண்டும்… யாருக்கு எத்தனை ரொட்டிகள் வழங்கப்பட வேண்டும் என்ற ஒழுங்குமுறைகளும் உருவாக்கப்பட்டன.
ரஷ்யாவில் உப்பும் ரொட்டித்துண்டும் கொடுத்து வரவேற்பது சம்பிரதாயம். நோன்பு இருப்பவர்களுக்காக விசேஷமான ரொட்டிகள் தயாரிப்பது ஐரோப்பாவில் மரபு.  உலகெங்கும் 1,000-க்கும் மேற்பட்ட விதங்களில் ரொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
ஆட்டோ ரோவெடர் என்ற அமெரிக்கர், மிசூரி மாகாணத்தைச் சேர்ந்தவர். இவர் 1928-ல் ஓர் இயந்திரத்தை உருவாக்கினார். அதன் மூலம் ரொட்டிகளைச் சரியான அளவில் துண்டுசெய்து ஒரு பாக்கெட்டில் அடைத்து விற்க முயன்றார். இயந்திரத்தால் துண்டிக்கப்பட்ட ரொட்டித் துண்டுகளைப் பற்றி பெரிய அளவில் விளம்பரம் செய்த ரோவெட்டர், 1928-ல் தனது விற்பனையைத் தொடங்கினார்.
துண்டாக்கப்பட்ட ரொட்டிகள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றன. இதைக் கொண்டு உடனடியாக சாண்ட்விச் செய்ய முடிகிறது என்பதால், அதன் விற்பனை பெருகியது. அப்படித்தான் துண்டிக்கப்பட்ட ரொட்டித் துண்டுகள் பாக்கெட்டில் விற்பனைசெய்வது உலகெங்கும் பரவியது.
17-ம் நூற்றாண்டுக்குப் பிறகு பேக்கரி தொழிலில் புதிய மாற்றங்கள் உருவாகின. அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலமும், புதிய தொழில்நுட்பக் கருவிகளின் வருகையும் ரொட்டித் தயாரிப்பில் வளர்ச்சியை உருவாக்கின.
தொழில் புரட்சியின் முன்பு வரை, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வசதியானவர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தன. அவர்கள் மட்டுமே கேக் வெட்டி கொண்டாடினார்கள். தொழில் புரட்சியால் உருவான மாற்றங்களால், பேக்கரி தொழிலுக்குத் தேவையான ஈஸ்ட் தயாரிப்பு எளிதாகியது; மாவு அரைக்கும் இயந்திரங்கள் உருவானது. புதிய உபகரணங்களின் வருகை, கேக்குகளின் விலையை மலிவாக்கின. அதனால், ஏழை எளிய மக்களும் பிறந்தநாள் கொண்டாடத் தொடங்கினார்கள். அப்படித்தான் பிறந்தநாள் கொண்டாட்டம் பரவத் தொடங்கியது.
கேக் மற்றும் பிஸ்கட் வகைகளை உண்பதில் பிரெஞ்சுகாரர்களும் பெல்ஜியர்களும் இத்தாலியர் களும் மிக விருப்பம் கொண்டிருந்தார்கள். முதன்முதலாக பாரீஸில்  விதவிதமான கேக்குகள் செய்து விற்கும் பேக்கரி தொடங்கப்பட்டது, அதன் வெற்றியே உலகெங்கும் பேக்கரிகள் உருவாகக் காரணமாகின.
பிறந்தநாளில் நாம் பாடும், ‘ஹேப்பி பர்த் டே டு யூ’ என்ற பாடலை இயற்றியவர்கள் மில்ட்ரெட் ஜே.ஹில், பட்ரி ஸ்மித் ஹில் என்ற சகோதரிகள். இவர்கள் அமெரிக்காவின் கென்டெகி மாநிலத்தில் பிறந்தவர்கள். இவர்கள் இதே மெட்டில், ‘குட் மார்னிங் டு ஆல்’ என்ற ஒரு பாடலை உருவாக்கினார்கள். அந்த மெட்டிலே, ‘ஹேப்பி பர்த் டே’ பாடப்பட்டது.
1893-ம் ஆண்டு முதன்முதலில் பிறந்தநாள் பாடல் வெளியிடப்பட்டிருந்தாலும், 1935-ம் ஆண்டுதான் காப்புரிமை பெற்றது. இன்று வரை அதன் காப்புரிமை நீடிக்கப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றது. தனி நிகழ்வுகளில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், இதை வணிகரீதியாகப் பயன்படுத்தினால் அதற்கான உரிமைத் தொகை கொடுக்க வேண்டும் என்றது நீதிமன்றம்.
இந்த பாடலின் வருகைக்குப் பின்னரே கேக்குகளில், ‘ஹேப்பி பர்த் டே’ என எழுதப்படுவது வழக்கமானது.
இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கேரளத்தில் பேக்கரி ஆரம்பிக்கப்பட்டது. 1880-ல் தலைச்சேரியைச் சேர்ந்த மாம்பள்ளி பாபு என்பவர் ராயல் பிஸ்கட் ஃபேக்டரி என ஒரு கடையைத் துவங்கினார். அப்போது இந்தியாவில் இரண்டே இரண்டு பேக்கரிகள் மட்டுமே இருந்தன. ஒன்று மேற்கு வங்கத்தில். அதை நடத்தியது ஒரு பிரிட்டிஷ்காரர். இந்தியரால் ஆரம்பிக்கப்பட்ட முதல் பேக்கரி தலைச்சேரியில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்கிறார்கள்.
அந்த பேக்கரிக்கு 1883-ம் ஆண்டு வருகை தந்த தேயிலைத் தோட்ட உரிமையாளரான முர்டாக் பிரௌன் என்ற  வெள்ளைக்காரர் தனது குதிரை வண்டியை நிறுத்தி, கடையினுள் வந்து இங்கிலாந்தில் இருந்து தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிளம் கேக் ஒன்றைக் காட்டினார். ‘இதுபோல ஒன்றை செய்துத்தர முடியுமா?’ என விசாரித்தார்.
அதேபோல ஒரு கேக்கை சில தினங்களில் செய்து தந்தார் மாம்பள்ளி பாபு. இந்த கேக்கின் சுவை இங்கிலாந்தில் செய்த கேக்கை விடவும் சிறப்பாக இருந்தது. அதன் பிறகு அந்தக் கடையின்  வியாபாரம் புகழ்பெறத் தொடங்கியது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கேக் அதுவே. அந்த நிகழ்வு நடைபெற்று 129 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக சென்ற வருடம் 1,200 கிலோ எடையில் 300 அடி நீளமான கேக் ஒன்றை உருவாக்கி கிறிஸ்துமஸ் பரிசாக அளித்திருக்கிறார்கள்.
கேக் என்ற ஆங்கிலச் சொல் 13-ம் நூற்றாண்டில்தான் அறிமுகமாகியது. சந்திரனை வழிபடும் ரோமானியர்கள் அதன் வடிவம் போலவே வட்டமாக கேக் தயாரித்தனர் என்கிறார்கள். இதுபோலவே சீனாவிலும் நிலவின் வடிவமாக கேக் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால், ரஷ்யாவில் சூரியனை வழிபடுவதால் வட்ட கேக்குகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
தங்களின் 50-வது பிறந்தநாளை கொண்டாட தேனில் செய்த கேக் தயாரிப்பது ரோமானியர்களின் வழக்கம். ஸ்பாஞ்ச் கேக்குகளை உருவாக்கியவர்கள் ஸ்பானியர்கள். 1840-ல் பேக்கிங் சோடாவும் 1860-களில் பேக்கிங் பவுடரும் அறிமுகமான பிறகே பேக்கரி தொழில் வளர்ச்சி கண்டது.

க்ரீம் மற்றும் சாக்லேட் கொண்டு தயாரிக்கப்படும் பிளாக் ஃபாரஸ்ட் கேக்குகளுக்கு அந்தப் பெயர் வரக் காரணம், அது ஜெர்மனியின் பிளாக் ஃபாரஸ்ட் ஏரியாவில் முதன்முறையாகத் தயாரிக்கப்பட்டதே.

இன்றும் ஃபிரான்ஸும் இத்தாலியும் ஜெர்மனியும் கேக் தயாரிப்பில் முதன்மையான நாடுகளாக உள்ளன. அவர்களின் தனிச்சுவை மிக்க பேக்கரிகள் உலக நாடுகளில் கிளைபரப்பி வணிகம் செய்து வருகின்றன. இந்தியாவின் பல இடங்களிலும் ஜெர்மன் பேக்கரி இருப்பதற்கு அதுவே காரணம். புதுச்சேரி போன்ற ஃபிரெஞ்சு பண்பாடுள்ள நகரில் ஃபிரான்ஸின் புகழ்பெற்ற பேக்கரிகள் இன்றும் இருந்துவருவது இந்த மரபின் சான்றாகும்.
கேக் இல்லாத கிறிஸ்துமஸ் கிடையாது. அதிலும் பிளம் கேக் என்பது கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுவதாகும். இந்தியாவில் கேக் விற்பனை கிறிஸ்துமஸை ஒட்டி 10 மடங்கு அதிகமாகிவிடுகிறது என்கிறார்கள் பேக்கரி உரிமையாளர்கள்.
பிறந்தநாளில் கேக் வெட்டி, பரிசு கொடுத்து, விருந்து அளிப்பதுடன் நமது கொண்டாட் டங்களை ஏன் சுருக்கிக் கொள்கிறோம். எத்தனையோ ஏழை குழந்தைகள் கல்விபெற இயலாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு நாம் நிதி உதவி செய்யலாம். கைவிடப்பட்ட முதியவர்கள் வாழும் இல்லங்களுக்குச் சென்று உதவி செய்யலாம்.
கிராமப்புறப் பள்ளிகளுக்குத் தரமான 100 புத்தகங்களை வாங்கிப் பரிசளிக்கலாம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நிறுவனங்களுக்கு உதவி செய்யலாம். கிராமியக் கலைகளை வளர்க்க ஆதரவு தரலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்து தரலாம். பார்வையற்றவர்கள் அறிந்துகொள்வதற்காக தமிழின் சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை அத்தனையும் ஆடியோவில் பதிவுசெய்து அதற்காக விசேஷ நூலகம் அமைக்கலாம். இப்படி உருப்படியாக செய்வதற்கு எத்தனையோ அரிய வழிகள் இருக்கின்றன. ஆனால் நாம் பிறந்தநாளின் பெயரில் பெருமளவு பணத்தை உணவு சந்தையில் வீணடிக்கிறோம்.
மெழுகுவத்தியை ஊதி அணைப்பதை விடவும் யாரோ ஒரு முகம் அறியாத மனிதருக்கு உதவும்படியாக வெளிச்சம் ஏற்றி வைப்பது முக்கியமானது இல்லையா? பிறந்தநாள் என்பது எப்படி வாழ்கிறோம் என்பதை அடையாளம் காட்டுவது. அதை அர்த்தம் உள்ளதாக்கிக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

உணவு யுத்தம்!-15

பிறந்தநாள் கேக்குகள்!

சில நாட்களுக்கு முன் நாளிதழ் செய்தி ஒன்றில் வெளியான செய்தி இது: மும்பையில் 60 வயதைத் தொட்ட ஒரு தொழில் அதிபர் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஒரே நேரம் 60 கேக்குகளை வெட்டினார். அந்த கேக்குகளின் மொத்த எடை 6,000 கிலோ.
எதற்கு இந்த ஆடம்பரம்? வணிகச் சந்தை உருவாக்கிய பண்பாடு எந்த அளவு விபரீதமாக வளர்ந்திருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம்.
பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே, புத்தாடை அணிந்து கேக் வெட்டுவதும் சாக்லெட்

பரிமாறிக்கொள்வதும், விருந்தும்தான் என உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உணவுச் சந்தையின் முக்கிய இலக்குகளில் ஒன்று பிறந்தநாள். அதை மையமாகக்கொண்டு பெரும் வணிகம் நடைபெறுகிறது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவன் சராசரியாக தனது பிறந்தநாளில் கேக், குளிர்பானங்கள், சிற்றுண்டி, விருந்து என 2,000 ரூபாயில் தொடங்கி 5,000 வரை செலவு செய்கிறான். மேல்தட்டு குடும்பங்கள் ஐந்து லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவு செய்கின்றன. இந்த செலவில் 80 சதவிகிதம் சந்தைக்கானதே!  
இந்தியாவில் ஆண்டுதோறும் விற்பனை யாகும் பேக்கரி பொருட்களின் மதிப்பு 3,295 கோடி ரூபாய். இதில் 50 சதவிகிதம் ரொட்டிகள் விற்பனை. 15 முதல் 18 சதவிகிதம் பிறந்தநாள் கேக்குகளின் விற்பனை என்கிறார்கள்.
இந்த விற்பனை ஆண்டுக்கு எட்டு சதவிகிதம் முதல் 9.5 சதவிகிதம் வரை வளர்ச்சியடைந்து வருகிறது. அதற்குக் காரணம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் என்கிறது பேக்கரி மார்க்கெட் சர்வே.
ஒரு பிறந்தநாள் கேக்கின் விலை 500 ரூபாயில் தொடங்கி ஒரு லட்சம் வரை இருக்கிறது. அவரவர் வசதியைப் பொறுத்து பிடித்தமான வடிவத்தில், ருசியில் வாங்கிக்கொள்கிறார்கள். பெருநகரங்களில் புதுப் பழக்கம் உருவாகி உள்ளது. குழந்தைகளின் பிறந்தநாள் கோடை விடுமுறையில் வந்துவிட்டால், பள்ளி திறந்த பிறகு ஒரு நாளை பிறந்தநாளாகக் கொண்டாடுகிறார்கள்.
பிறந்தநாள் கொண்டாடுகிற பழக்கம் நமக்கு மரபானது இல்லை. அதை ஆங்கிலேயர்களிடம் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறோம். அவர்கள் இதை ரோமானியர்களிடம் இருந்து கற்றுக் கொண்டார்கள். பைபிளில் பிறந்தநாள் கொண்டாடும்படியாக எந்தக் குறிப்பும் இல்லை. நமது பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுவது என்பதை சந்தையும் ஊடகங்களும்தான் தீர்மானிக்கின்றன. ஐந்து முக்கிய உணவு நிறுவனங்களே இன்று பிறந்தநாளை வடிவமைக்கின்றன என்கிறார் உணவியல் ஆய்வாளர் ஆர்தர் டிகாட்.
அவை, பிறந்தநாள் கேக்குகள் தயாரிக்கும் பேக்கரிகள், சாக்லெட் தயாரிப்பு நிறுவனங்கள், மது மற்றும் குளிர்பானங்கள், உணவகங்கள், பரிசுப்பொருள் விற்பனையகங்கள்… இவர்களின் சந்தைப்படுத்துதலே பிறந்தநாளை வடிவமைக்கின்றன.
எனது தாத்தா காலத்தில் யாரும் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடியது இல்லை. அதைவிடவும் பிறந்தநாளை நினைவில் வைத்துக்கொண்டதுகூட இல்லை. எந்த மாதம் பிறந்தேன் என்றுதான் சொல்வார்கள். எந்த நட்சத்திரத்தில் பிறந்தோம் என்பதை வைத்து அந்த நட்சத்திரம் வரும் நாளில் கோயில்களுக்குப் போய் வணங்கி வருவதும் பெரியவர்களின் ஆசி பெறுவதும் தானம் அளிப்பதும் வழக்கம். எளிமையான நம்பிக்கையாக மட்டுமே பிறந்தநாள் இருந்தது.
இன்று வயது வேறுபாடின்றி எல்லோரது பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கேக் தவறாமல் இடம் பெறுகிறது. கேக் வெட்டும் ஒருவர்கூட எதற்காகப் பிறந்தநாளில் கேக் வெட்டுகிறோம்… ஏன் மெழுகுவத்திகள் ஏற்றப்படுகின்றன… ஏன் அதை ஊதி அணைக்கச் சொல்கிறார்கள்… ஹேப்பி பர்த்டே டு யூ பாடலை யார் உருவாக்கினார்கள் என எதையும் அறிந்திருக்கவில்லை.
முன்பு ஊருக்கு ஒன்றோ, இரண்டோ பேக்கரி இருக்கும். அதுவும் கிராமப்புறங்களில் கிடையாது. நோயாளிகளுக்கு பன், ரஸ்க், பிரெட் வாங்குவதற்கும், குழந்தைகளுக்கு கேக், பிஸ்கட், செர்ரி பழ ரொட்டி வாங்குவதற்கும் போவார்கள். பேக்கரியின் பெயர்கள் பெரும்பாலும் கிறிஸ்துவப் பெயர்களாகவே இருக்கும். மாடசாமி பேக்கரி, மதுரைவீரன் பேக்கரி என்ற பெயர்களை நான் கண்டதே இல்லை. கருப்பட்டி மிட்டாயும் காரச்சேவும் அதிரசமும் முறுக்கும் சாப்பிட்டு பழகிய தமிழ் மக்கள் எப்படி இன்று கேக், சாண்ட்விச், டோனெட் சாப்பிடப் பழகினார்கள்? வெறும் பழக்கம் மட்டும் பாரம்பரிய உணவு முறையை கைவிட செய்துவிடுமா என்ன?
30 ஆண்டுகளுக்கு முன் பேக்கரிக்குப் போய் வருகிறேன் என்றாலே, ‘வீட்டில் யாருக்காவது உடல்நலம் இல்லையா?’ என்றுதான் கேட்பார்கள். அதுபோல பன், ரொட்டி சாப்பிடுவதற்காகவே காய்ச்சல் வர வேண்டும் என நினைக்கும் சின்னஞ்சிறுவர்களும் இருந்தனர். கேக்கில் முட்டை கலந்திருக்கிறது, அதனால் சைவர்களாகிய நாங்கள் கேக் சாப்பிடமாட்டோம் என ஒரு கோஷ்டி கேக் மற்றும் பிஸ்கட்டுகளை ஒதுக்கி வைத்திருந்தது. இன்று அந்த பேதங்கள் மறைந்து போய்விட்டன. வீதிக்கு இரண்டு பேக்கரிகள் முளைத்திருக்கின்றன. மாநகரில் பிரெட் பட்டர் ஜாம் சாப்பிடும் பழக்கம் அடித்தட்டு மக்கள் வரை பரவியிருக்கிறது. பண்பாட்டைத் தீர்மானிப்பதில் சந்தை எவ்வளவு முக்கியப் பங்கை வகிக்கிறது என்பதற்கு பேக்கரிகளே உதாரணம்.
இன்று பேக்கரி மிக முக்கியமான வணிக மையம். பெரு நகரங்களில் புதிது புதிதாகப் பன்னாட்டு அடுமனைகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. ஒரு துண்டு கேக்கின் விலை ரூபாய் 275-ஐ தொட்டுவிட்டது. கேக் சாப்பிடுவது இளமையின் அடையாளமாக முன்னிறுத்தப்படுகிறது. ஒரு துண்டு கேக்கில் 385 கலோரி இருக்கிறது. ஆகவே, பார்த்துச் சாப்பிடுங்கள். தொடர்ந்து சாப்பிட்டால் நீரழிவு நோயும் உயர் ரத்த அழுத்தமும் உருவாகக்கூடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், இளையோர் காதுகளில் அது ஒலிப்பதே இல்லை.
பேக்கரி என்பதற்குப் பதிலாக வெதுப்பகம் என்ற தமிழ்ச் சொல்லை ஒரு கடையின் பெயர் பலகையில் பார்த்தேன். அடுமனை என்றும் சில விளம்பரங்களில் கண்டிருக்கிறேன். இப்படி அழகான தமிழ்ச் சொற்கள் வந்தபோதும் மனதில் பதிந்துபோன பேக்கரி என்ற சொல்லை விலக்கவே முடியவில்லை. கேக், பிரெட், பிஸ்கட் என ஆங்கிலச் சொற்கள்தான் உடனடியாகப் பேச்சில் வருகின்றன.
பேக்கரியின் சமையல் கூடத்துக்குள் போயிருக்கிறீர்களா? அபூர்வமான ஒரு மணம் வரும். அந்த மணத்துக்காகவே பேக்கரியின் பின்கட்டில் போய் நின்றிருக்கிறேன். பிஸ்கட் செய்பவர்கள் எப்படி இவ்வளவு கச்சிதமாக செய்கிறார்கள், பன் ரொட்டிக்குள் எப்படி செர்ரி பழம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என, பள்ளி வயதில் வியப்பாக இருக்கும்.
கிறிஸ்துவர்கள் மட்டுமே வீட்டில் கேக் செய்வார்கள் என பள்ளி நாட்களில் நம்பிக் கொண்டிருந்தேன். உடன் படித்த கிறிஸ்துவ நண்பனிடம் ‘உன் வீட்டில் கேக் செய்வீர்களா?’ எனக் கேட்டபோது, ‘இல்லை, பேக்கரியில்தான் வாங்குவோம்’ என்றான். இவ்வளவு ருசியாக உள்ள கேக்குகளை ஏன் வீட்டில் செய்வதில்லை என யோசித்திருக்கிறேன். ஒருமுறை அம்மாவிடம் கேட்டேன். ‘அதை செய்வதற்கான அடுப்பு வேண்டும். சரியான பக்குவம் தெரிய வேண்டும். கடையில் உள்ளதுபோல வீட்டில் செய்ய முடியாது’ என்றார்.
இன்று வரை கேக் வகைகள், பிஸ்கட்டுகள், ரொட்டித்துண்டுகள் கடைகளில் வாங்கப்படும் விற்பனைப் பொருளாக மட்டுமே இருக்கின்றன. இந்தியா முழுவதுமாக 20 லட்சம் பேக்கரிகள் இருக்கின்றன என்கிறார்கள். சிறுதொழிலாக இதை செய்பவர்கள் 60 சதவிகிதம். இரண்டு பெரிய நிறுவனங்கள்தான் இந்தச் சந்தையில் கோலோச்சுகின்றன. பெரிய நிறுவனங்களுடன் சிறிய வீட்டுத் தயாரிப்புகள் பலத்த போட்டி போடுகின்றன. நோயாளிகளுக்கான உணவில் பேக்கரி தயாரிப்புகளே இப்போதும் முக்கிய இடத்தில் இருக்கின்றன.
எதற்காக இவ்வளவு பணம் செலவழித்து பிறந்தநாட்களைக் கொண்டாடுகிறோம்? உண்மையில் நாம் கொண்டாட்டத்துக்காக ஏங்குகிறோம். மதம் சார்ந்த விழாக்கள், பண்டிகைகள் தவிர, வேறு கொண்டாட்டங்களுக்கு தனிநபர் வாழ்வில் இடம் இல்லை. ஆகவே, பிறந்தநாளும் திருமணநாளும் முக்கியமானதாக மாறியிருக்கின்றன.
பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கான வழிமுறைகளை ஆங்கிலேயர்கள் உருவாக்கித் தந்துவிட்டார்கள். அதை அப்படியே நாமும் பின்பற்றுகிறோம். ஆனால், திருமண தினத்தைக் கொண்டாடும்போது அவர்களின் பண்பாடு நம்மோடு ஒத்துப்போக மறுப்பதால், சாம்பெயின் குடிப்பதையும் கைகோத்து நடனமாடுவதையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒருகாலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது மன்னர்களுக்கு மட்டுமேயானது. கிறிஸ்து சகாப்தம் துவங்குவதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே எகிப்திலும் ரோமிலும் அரசர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது. கிரேக்க மக்கள் நிறைய கடவுள்களை வணங்குபவர்கள். நிலவுக்கான கடவுள் ஆர்திமிஸ். அதன் வடிவம் போலவே தேன் கலந்த வட்டவடிவமான கேக் ஒன்றை செய்து, அதில் பிரகாசத்துக்காக மெழுகுவத்தியை ஏற்றி கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டாடியிருக்கிறார்கள். அப்படித்தான் பிறந்தநாள் கேக் பிறந்தது என உணவியல் அறிஞர் டி.எஸ்.ராவத் கூறுகிறார்.
பிறந்ததினத்தின்போது மெழுகுவத்தியை ஏற்றுவது ஒரு சடங்கு. தீவினைகள் விலகி ஓடுவதற்காகவே மெழுகுவத்தி ஏற்றப்படுகிறது என்கிறார்கள் ஸ்காட்டிஷ் நாட்டுபுறவியல் ஆய்வாளர்கள்.
பிறந்தநாள் கேக்கின் நடுவில் ஒரேயொரு மெழுகுவத்தி ஏற்றிவைக்கும் வழக்கம் ஜெர்மனியில்தான் துவங்கியிருக்கிறது, குழந்தைகளின் பிறந்தநாள் விழாக்களை தனியே ஓர் அரங்கில் கொண்டாடுவது ஜெர்மானியரின் வழக்கம். அதன் பெயர் கிண்டர்பெஸ்ட். அதில் இருந்துதான் குழந்தைகளுக்கான பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தனித்த நிகழ்வாக கொண்டாடுவது தொடங்கியிருக்கிறது.
குழந்தைகளை தீய ஆவிகள் பற்றிக் கொள்ளாமல் காப்பதற்காகப் பெரியவர்கள் ஒன்றுகூடி வாழ்த்துவதும் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வதும் வழக்கம். அப்படித்தான் பிறந்தநாள் கொண்டாட்டம் உலகெல்லாம் பரவியது என்கிறார்கள்.
பிறந்தநாள் கொண்டாடுகிறவர் தனது மனதுக்குள் ஓர் ஆசையை நினைத்துக்கொள்ள வேண்டும். அது நிறைவேற வேண்டும் என்பதன் அடையாளமாக எரியும் மெழுகுவத்தியை ஊதி அணைக்க வேண்டும். இதன் வழியேதான் மெழுகுவத்தியை ஊதி அணைக்கும் பழக்கம் உருவானது என பிரிட்டிஷ் மக்கள் சொல்கிறார்கள். வயதுக்கு ஏற்ப மெழுகுவத்திகள் அதிகமாவது பின்னாளில் உருவான மாற்றமே.
கிரேக்கர்கள் ஆரம்ப காலங்களில் கேக்குகளை குறிப்பதற்கு பிளகோஸ் என்றே அழைத்தனர். அதன் பொருள் வட்ட வடிமானது என்பதாகும். அவர்களே சடுரா என்ற கேக்கையும் தயாரித்தார்கள். அது பெரிய அளவிலான கேக் ஆகும்.
ரோமானியர்கள் இதுபோலவே பிளசென்டா என்ற வெண்ணைய் சேர்ந்த கேக்குகளை தயாரித்து கடவுளுக்கு அர்ப்பணம் செய்தனர். ரோமில் மூன்றுவிதமான பிறந்ததினங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. ஒன்று தனிநபர்களின் பிறந்ததினங்கள், மற்றது கடவுளின் பிறந்ததினம். மூன்றாவது அரசனின் பிறந்ததினம். இந்த மூன்றில் அரசனின் பிறந்தநாளே மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்பட்டது. மூன்று நிகழ்வுகளுக்கும் மூன்றுவிதமான கேக்குகள் தயாரிக்கப்பட்டன.
பிறந்தநாள் கேக்கின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்றால் அதற்கு முன்பாக ரொட்டியின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அது..

உணவு யுத்தம்!-14

விவசாயத்தில் பன்னாட்டு நிறுவனங்கள்!
ஒரு நாளைக்கு 20 ரூபாய் கிடைக்கிறது என்பதற்காக தனது 73 வயதிலும் வீடு வீடாக கூடை தூக்கிக்கொண்டு போய் கீரை விற்கும் பாட்டியை நான் அறிவேன். முதுமையில் யாருக்கும் சுமையாக வீட்டில் இருக்கக் கூடாது, படிக்க விரும்பும் பேரன் பேத்திகளுக்கு ஃபீஸ் கட்டுவேன் என்ற இரண்டு காரணங்களை அந்தப் பாட்டி எப்போதும் சொல்வார். அவரைப்போன்ற நூறு நூறு உழைக்கும் பெண்களின் வாழ்க்கையை முடிவு கொண்டுவரக் கூடிய அந்நிய நேரடி முதலீட்டை ஆதரிக்கக் கூடாது.
இந்தியாவில் பல்வேறு வகையான சில்லறை வணிகங்களில் ஈடுபடுகின்றவர்களின் எண்ணிக்கை நான்கு கோடி. இவர்கள் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள். இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு சில்லறை வர்த்தகம் நடந்து வருகிறது. அந்நிய நேரடி மூலதனத்தால் இவர்களின் விற்பனை மோசமாகப் பாதிக்கப்படும்.
காய்கறிக் கடைகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக நடத்தத் துவங்கினால் விவசாயிகள் லாபம் அடைவார்கள் என்ற பொய் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. அது ஏமாற்று வேலை. காரணம், ஒப்பந்தம் செய்யப்பட்ட விவசாயிகள் இவர்களைத் தவிர வேறு நிறுவனத்திடம் பொருளை விற்க முடியாது. அதுபோலவே இதுவரை கிடைத்துவந்த இடைத்தரகு பணத்தை கம்பெனி, தானே எடுத்துக்கொள்ளும்.
விவசாயி தனது பொருளின் விலையை உயர்த்த முடியாமல் அவனை அடிமாடுபோல முடக்குவதுடன் அவன் என்ன விவசாயம் செய்ய வேண்டும் என்பதை இந்தத் நிறுவனங்கள் தீர்மானிக்கத் தொடங்கும். ஆகவே, விவசாயிகளுக்கு இப்போது கிடைக்கும் ஊதியத்தைவிட குறைவான பணமே கிடைக்கும் என்பதே உண்மை. அத்துடன் இதுவரை இயங்கிவந்த கூட்டுறவு வேளாண்மை அமைப்புகள் முழுவதும் செயலற்றுப் போகத் தொடங்கிவிடும். சில்லறை விற்பனைத் துறையில் அந்நிய முதலீடுகள் வருகையால் நமது சந்தை சீரழிவதுடன் விவசாயிகள் முன்னிலும் மோசமாகச் சுரண்டப்படுவார்கள். ஆகவே, காய்கறிக் கடைகள் போன்ற சிறுவணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
எனது பள்ளி வயதில் வீதி வீதியாகப் போய் காய்கறிகள் விற்றிருக்கிறேன். எங்கள் தோட்டத்தில் விளைந்த கத்தரிக்காயும் புடலங்காயும் சுரைக்காயும் பாகற்காயும் வெண்டையும்  பூசணியும் முருங்கையும் கூடையில் வைத்துக்கொண்டு வீதிவீதியாக கூவி விற்க வேண்டும்.
உள்ளூரில் இவற்றை வாங்குபவர்கள் குறைவு. அதனால் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு சைக்கிளில் போய்வர வேண்டும். காய்கறிகள் விற்கப் போனபோதுதான் எத்தனை வகையான மனிதர்கள் இருக்கிறார்கள், என்ன சாப்பிடுகிறார்கள் என்பதைக் கண்டுகொண்டேன். உணவு விஷயத்தில் ஒரு வீட்டைப்போல இன்னொரு வீடு  இருப்பதில்லை.
பெண்கள் காய்கறி வாங்க வந்த பிறகுதான் என்ன சமையல் செய்யலாம் என்று யோசனை செய்வார்கள். சிறுவர்கள் காய் வாங்க வந்தாலோ, சற்று எடை அதிகமாகப் போட்டுத் தர வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகளை ஏமாற்றிவிட்டோம் என்று கூச்சலிடுவார்கள்.
அதுபோலவே ஆண்கள் காய்கறி வாங்கினால் அழுகிய காயோ, பூச்சியோ இல்லாமல் கவனமாகப் பொறுக்கி சரியான அளவு எடை நிறுத்துத் தர வேண்டும். இல்லாவிட்டால், விவரம் தெரியாத ஆளை ஏமாற்றிவிட்டதாக வீட்டுப் பெண்கள் சண்டைக்கு வந்து நிற்பார்கள். காய்கறிகளைப் பார்த்து வாங்குவதில் மக்கள் அவ்வளவு விழிப்புடன் இருப்பார்கள்.
காய்கறிகள் வாடிப்போய்விட்டால், அதை விற்க முடியாது. இப்போது அந்தக் கவலை இல்லை. இரண்டு மூன்று நாட்கள் ஆகி, வாடிவதங்கிய இரண்டாம் நம்பர் காய்கறிகளை உணவகங்களுக்கு மலிவு விலையில் விற்றுவிடுகிறார்கள். நாம் சுவைத்துச் சாப்பிடும் சைவ சாப்பாடுகளில் இடம்பெறும் காய்கறிகள் இப்படி மலிவாக வாங்கப்பட்டவையாகக்கூட இருக்கலாம்.
உணவு என்பது பசியைப் போக்குவதற்கான வழிமுறை மட்டும் இல்லை. அது ஒரு பண்பாடு. ஒவ்வொரு இனக் குழுவும் தனக்கென ஒரு உணவுப் பண்பாட்டைக் கொண்டிருக்கிறது. அந்தப் பண்பாடு நிலவியலுக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்றார்போல மாறியிருக்கிறது.
உணவுப் பண்பாட்டைத் தீர்மானிப்பது வாழ்க்கைமுறையும் சீதோஷ்ண நிலைகளும்தான். இன்று இரண்டும் தலைகீழாக மாறிவிட்டிருக்கின்றன. எந்தப் பருவ காலத்தில் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்ற கவனம் பெரும்பான்மையினருக்கு இல்லை.
அதுபோலவே குறிப்பிட்ட காய்கறி வகை குறிப்பிட்ட காலத்தில்தான் விளையும் என்ற நிலையும் இல்லை. இந்த மாற்றம்தான் ஆரோக்கிய சீர்கேட்டுக்கான முக்கியக் காரணம்.
பெருநகரங்களில் விற்கப்படும் காய்கறிகளுக்கு ருசியே இருப்பது இல்லை. தண்ணீர் மற்றும் மண்வாகு காரணம் என்கிறார்கள். கிராமப்புறங்களில் கத்தரிக்காய் வாங்கும்போது, எந்த ஊர் காய் என்று கேட்டு வாங்குவார்கள். மண்வாகுதான் காய்கறிகளுக்கு ருசி என அவர்களுக்குத் தெரியும்.
இன்று குளிர்சாதனம் செய்யப்பட்ட கடைகளில் விற்பனையாகும் காய்கள், எந்த ஊரில் விளைந்தவை என்று யாருக்கும் தெரியாது. அதைவிடக் கொடுமை எல்லா காய்கறிகளின் பெயர்களையும் ஆங்கிலத்தில்தான் எழுதிப் போட்டிருப்பார்கள். தமிழ்நாட்டில் காய்கறி பேரில்கூடவா தமிழ் அழிக்கப்பட வேண்டும்?
எந்தக் காய்கறியைக் கேட்டாலும் ஊட்டியில் விளைந்தவை என்று சொல்லிக்கொள்கிறார்கள். கோயம்பேட்டுக்குப் போய் பார்த்தால் நாட்டுக் காய்கறிகளைவிடவும் அதிகம் சீமைக் காய்கறிகள்தான் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
கேர‌ட், பீ‌ட்ரூ‌ட், சௌசௌ, நூ‌க்கோ‌ல், ப‌ட்டா‌ணி, மு‌‌ள்ளங்‌கி, பீன்ஸ், முட்டைக்கோஸ், சோயா, பீட்ரூட், காலிஃபிளவர் போன்ற இங்கிலீஷ் காய்கறிகள் போர்த்துகீசியர்களாலும் பிரெஞ்சுகாரர்களாலும் பிரிட்டிஷ்காரர்களாலும் நமக்கு அறிமுகம்செய்து வைக்கப்பட்டவை.
மிளகாய், அன்னாசிபழம், உருளைக்கிழங்கு, தக்காளி, பப்பாளி ஆகியவை போர்த்துகீசியர்களின் வழியே நமக்கு அறிமுகமானவை. முன்பு நாம் காரத்துக்காக மிளகைப் பயன்படுத்தி வந்தோம். அதற்குப் பதிலாக அறிமுகமானது என்பதால்தான் மிளகாய் என்று பெயர் உருவானது. மிளகாய் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் விளைந்த தாவரம்.
வெண்டைக்காய், எத்தியோப்பியாவில் இருந்து வந்தது. பீட்ரூட் தெற்கு ஐரோப்பாவில் இருந்து அறிமுகமானது. காலிஃபிளவர் இத்தாலியில் விளையக் கூடியது. அங்கிருந்து ஃபிரான்ஸுக்கு அறிமுகமாகி இந்தியாவுக்கு வந்தது. கேரட் ஆப்கானிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்டது. முட்டைக்கோஸ் மத்தியத் தரைக்கடல் பகுதியில் இருந்து கிரேக்கத்துக்கு அறிமுகமானது. அங்கிருந்து ஸ்காட்லாந்துக்கு சென்று, அங்கிருந்து பிரிட்டிஷ் வழியாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது.
‘தக்காளிக்கு தக்காளி என்ற பெயர் எப்படி வந்தது? யார் இதை வைத்தது?’ என்று என் பையன் ஒருநாள் கேட்டான். எனக்குப் பதில் தெரியவில்லை என்பதால், தமிழ்ப் பேரகராதியைப் புரட்டிப் பார்த்தேன். மணத்தக்காளி என்ற சொல் நம்மிடம் உள்ளது. ஒருவேளை வடிவம் சார்ந்து சீமைத்தக்காளி என்ற பெயர் வந்திருக்கக் கூடும். சீமை காணாமல் போய் தக்காளியாக இன்று எஞ்சியிருக்கலாம் என்று பதில் சொன்னேன்.
போர்த்துகீசியர்களால் நமக்கு அறிமுகமான காய்கறிகளில் முக்கியமானது தக்காளி. ஆங்கிலத்தில் இதற்கு வழங்கும் பெயரான டொமேட்டோ என்பது நஃகுவாட்டில் மொழிச் சொல்லான டொமாட்ல் என்பதில் இருந்து வந்ததாகும். அதற்கு உருண்டையான பழம் என்று அர்த்தம்.
பல்வேறு கலாசாரங்களின் சமையல் முறைகளில் எப்போதும் தக்காளிக்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது. வட ஐரோப்பாவில் தக்காளி அறிமுகப்படுத்தப்பட்டபோது, அது வெறும் அலங்காரச் செடியாக மட்டுமே வளர்க்கப்பட்டது. இத்தாலிக்குக் கொண்டுவரப்பட்ட தக்காளி மஞ்சள் நிறத்தில் இருந்த காரணத்தால், அதை  போமோடோரோ அதாவது தங்க ஆப்பிள் என்று அழைத்தனர்.
ஐரோப்பாவில் இருந்து அட்லாண்டிக் வழியாகத் திரும்பவும் வட அமெரிக்காவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட தக்காளி, 19-ம் நூற்றாண்டில் உலகின் முக்கிய உணவு ஆனது.
தக்காளியின் நிறம் என்னவென்று கேட்டால், பெரும்பாலும் ‘சிவப்பு’ என்போம். ஆனால் மஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, ஊதா, பிரவுன், வெள்ளை, பச்சை நிறங்களிலும் தக்காளி இருக்கின்றன.
த‌க்காளியை எதில் சேர்ப்பது காயா அல்லது ப‌ழ‌மா என்ற சந்தேகம் பலருக்குள்ளும் இருக்கிறது. அமெரிக்காவில் இதற்காக நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். 1893-ம் வ‌ருஷ‌ம், அமெரிக்க‌ உச்ச ‌நீதிம‌ன்ற‌ம் த‌க்காளி ஒரு காய்தான் ‍எனத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
பல இங்கிலீஷ் காய்கறிகளுக்கு இன்னமும் தமிழ்ச் சொல் உருவாகவில்லை. அதை அப்படியே ஆங்கிலத்தில்தான் அழைக்கிறோம். சில காய்கறிகளை வடிவம் சார்ந்து தமிழ்படுத்தியிருக்கிறோம். சில காய்கறிகளை உள்ளூர் காய்கறிகளுடன் ஒப்பிட்டுப் பெயர் கொடுத்திருக்கிறோம்.
முன்பெல்லாம் இயற்கை உரங்களைக் கொண்டு விளைவித்த காய்கறிகளை, தோட்டத்தில் இருந்து நேரடியாகப் பறித்துச் சாப்பிட்டோம். அவற்றில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவும் கலக்கப்படவில்லை.
இன்றோ இந்தியாவில் உற்பத்தியாகும் 10 கோடி டன் காய்கறிகளை, பூச்சித் தாக்குதலில் இருந்து பாதுகாக்க, 6,000 டன் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள். சர்வதேச அளவுடன் ஒப்பிட்டால், இது 68 சதவிகிதம் அதிகம்.
காய்கறிகள் உடலுக்கு நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், பூச்சி மருந்துகளும் ரசாயனக் கலவைகளும் கலந்த காய்கறிகளை, கொள்ளை விலையில் விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்தவும், இயற்கையாக விளைந்த காய்கறிகளை நேரடியாக விநியோகம் செய்யவும் முறையான வழிமுறைகள் இன்னமும் உருவாக்கப்படவில்லை.
குளிர்பிரதேசங்களில் வசிப்பவர்கள் அவர்கள் உடல்நலத்துக்கு ஏற்ப காய்கறிகளைப் பயிரிட்டு சாப்பிட்டார்கள். அந்தக் காய்கறிகளை வெப்பமண்டலத்தில் வாழ்ந்துகொண்டு நாம் அன்றாடம் விரும்பி சாப்பிடுவது, நம் உடல்நலத்துக்குப் பொருத்தம் இல்லாதது.
ஆகவே, நாட்டுக் காய்கறிகளுக்கே நம் உணவில் முக்கியத்துவம் தர வேண்டும். கீரைகள், பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவதற்கு குழந்தைகளைப் பழக்கப்படுத்த வேண்டும். சரிவிகித உணவில் எந்தக் காய்கறிகள் எவ்வளவு தேவை என்பதை அறிந்து உண்ண வேண்டும். இல்லாவிட்டால் உணவின் பெயரால் நமக்கு நாமே விஷமிட்டுக் கொள்கிறோம் என்பது நிஜமாகிவிடும்.

உணவு யுத்தம்!-13

ருசியில்லாத காய்கறிகள்!
காய்கறிக் கடைக்குச் சென்றிருந்தேன். முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட கடை; பகட்டான கண்ணாடியில் கீரைகளும் காய்கறிகளும் ஒளிர்கின்றன. காய்கறி கடைகள் இப்படியாகும் என நான் கனவிலும் நினைத்தவன் இல்லை.
ரஷ்ய முட்டைகோஸ்களில் இருந்து நாசிக் வெங்காயம் வரை பல்வேறு காய்கறி ரகங்கள். காய்கறிகளின் விலை கண்ணைக் கட்டுகிறது. ஒருவர்கூட பேரம் பேசவில்லை. புழு விழுந்திருக்கிறது என புகார் சொல்லவில்லை.

காய்கறிகளை துண்டுகளாக நறுக்கியும் வெங்காயத்தை, பூண்டை உரித்துவைத்தும் பாக்கெட்களில் வைத்திருந்தார்கள். விசேஷ நாட்களில் அம்மாவும் சித்திகளும் எவ்வளவு வெங்காயம் உரித்திருப்பார்கள். எவ்வளவு கண்ணீர் சிந்தியிருப்பார்கள். ‘நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை; ஞாயிற்றுகிழமையும் பெண்களுக்கு இல்லை’ என்று எங்கோ படித்த வரி மனதில் தோன்றியது.
தேங்காயைத் துருவி பாக்கெட்டில் போட்டு வைத்திருந்தார்கள். தேங்காய் சில் வாங்குவதற்காகப் பலசரக்கு கடையில் நிற்கும்போது, தேங்காயை கண்முன்னே உடைத்து சிரட்டையில் தேங்காய் தண்ணீர் குடிக்கத் தருவார்களே… அந்த நாட்கள் இனி வராது என்று நினைத்துக்கொண்டேன்.
காய்கறி வாங்கவந்த ஒருவர் கையிலும் பையோ, கூடையோ கிடையாது. அதைக் கொண்டுவருவது கூடவா சுமை? என்ன மனிதர்கள் இவர்கள்? இவ்வளவு விழிப்பு உணர்வு பேசியும் கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பைகளில்தான் காய்கறிகளைப் போட்டுத் தருகிறார்கள்.
வாழைப்பழச் சோம்பேறி என்று எங்கள் ஊரில் திட்டுவார்கள். அதாவது, வாழைப்பழத்தை தானே தோல் உரித்துச் சாப்பிட இயலாதவன் என்று பொருள். அதை நிஜமாக்குவதுபோல உதிர்த்துவைக்கப்பட்ட மாதுளைகள், துண்டுகள் போடப்பட்ட அன்னாசிப் பழம், உரித்த கொடுக்காபுளி ஆகியவை பாக்கெட்களில் இருந்தன.
விதையில்லாத பழங்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்றார் கடைக்காரர். விதையின் மீது ஏன் இத்தனை வெறுப்பு, விதையில்லாமல் பழம் எப்படி வரும்? ஒரு திராட்சை விதையைக்கூடவா மனிதர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை? விதையில்லாத பழங்கள் என்றால், விலை இரண்டு மடங்கு அதிகம்; விதை இருந்தால் ருசியிருக்காது என்றார் கடைக்காரர். அது சுத்தப் பொய். அப்படி நம்மைப் பழக்கிவைத்திருக்கிறார்கள்.
பெருநகரங்களில் அன்றாடம் காய்கறி வாங்குபவர்கள் குறைவு. வாரம் ஒருமுறை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் நிரப்பிக்கொள்கிறார்கள். அதனாலே கீரைகள் சாப்பிடுவது குறைந்து போய்விட்டது.
அரைக் கீரை, முளைக் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, மணத்தக்காளி கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறு கீரை, வெந்தயக் கீரை, புளிச்சக் கீரை, தண்டுக் கீரை, வல்லாரைக் கீரை, முடக்கத்தான் கீரை, பாலக் கீரை, கரிசலாங்கண்ணி கீரை, லட்சக் கொட்டை, பருப்புக் கீரை, சுக்கான் கீரை புதினாக் கீரை, கொத்துமல்லிக் கீரை என எத்தனையோ விதமான சிறந்த கீரைகள்.
இவை உணவுப் பொருட்கள் மட்டுமல்ல… சிறந்த மூலிகைகள்; மருத்துவ குணம் மிக்கவை. இவற்றின் மகிமை தெரியாமல் நாம் அவற்றை ஒதுக்கிவருகிறோம். பள்ளிப் பிள்ளைகளில் பெரும்பான்மையினர் கீரைகள் சாப்பிடுவதற்குப் பழகவே இல்லை. கீரை என்றாலே பதறி ஓடுகிறார்கள்.

பழங்காலம் முதலே மனிதனின் ஆகாரத்தில் முக்கிய இடம் பெற்றது கீரை. உடலுக்குத் தேவையான தாதுப் பொருட்களையும் வைட்டமின் சத்துக்களையும் பெறுவதற்கு ஒருவர் தினசரி 125 கிராம் கீரைகளையும் 75 கிராம் காய்கறிகளையும் பருப்பையும் சாப்பிட வேண்டும்.

முட்டை, பால், மீன் எண்ணெய் முதலியவற்றில் வைட்டமின் ஏ இருந்தாலும், கீரைகளில் இருந்து ஏ வைட்டமினைப் பெறுவதுதான் எளிதானது. அகத்திக் கீரை, முளைக் கீரை, தண்டுக் கீரை, முருங்கைக் கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலியவற்றில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
இதுபோலவே அகத்திக் கீரை, முளைக் கீரை, புளிச்சக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகியவற்றில் வைட்டமின் பி அதிகமாகக் காணப்படுகிறது. அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, புண்ணாக்குக் கீரை, முளைக் கீரை, முட்டைகோஸ், கொத்தமல்லி முதலிய கீரைகளில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
வைட்டமின்கள் மட்டுமின்றி நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும் கீரை வகைகளில போதிய அளவில் கிடைக்கின்றன.
மதுரையின் அரசரடி பகுதியில் பால் அட்டை போல கீரை அட்டை என்ற ஒன்றை நடைமுறைபடுத்தி இருக்கிறார்கள். தினசரி காலை ஆறரை மணிக்கு உங்கள் வீட்டு வாசலில் இரண்டு கட்டு கீரை கொண்டுவந்து தருகிறார்கள். எந்த நாளில் என்ன கீரை வேண்டும் என்று பட்டியிலிட்டுத் தந்துவிட்டால், அந்தக் கீரை வீடு தேடி வரும். தமிழ்நாட்டில் வேறு எங்கும் இப்படியான கீரை அட்டை இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால், நடைமுறைப்படுத்த வேண்டிய முக்கியமான உணவுப் பழக்கம் தினசரி கீரை சாப்பிடுவதாகும். தினமும் சாப்பாட்டில் ஏதேனும் ஒரு கீரை இருந்தால், மருத்துவச் செலவைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.
சமீபத்தில் ஜப்பானுக்குப் போயிருந்தபோது அங்கேயுள்ள காய்கறிக் கடைக்குச் சென்றிருந்தேன். விதவிதமான கீரைகள், காய்கறிகள். ஒரு கத்தரிக்காயை வாங்கினால், முழு குடும்பமும் மூன்று வேளை சாப்பிட்டுவிடலாம். அவ்வளவு பெரியது. எல்லா காய்கறிகளும் அளவில் பெரியதாக இருந்தன. காய்கறிகளை முகர்ந்து பார்த்தால், மனம் வேறுவிதமாக இருந்தது. காரணம், ரசாயன உரங்கள்.
இந்த நிலை இந்தியாவிலும் வந்துவிட்டது. மார்க்கெட்டில் விற்கப்படும் கத்தரிக்காய் பார்க்க அழகாக உள்ளது. ஆனால், வாயில் வைக்க முடியவில்லை. பூசணி பெரியதாக இருக்கிறது. ஆனால் ருசியே இல்லை. எந்தக் காய்கறியை சமைத்தாலும் வாசனை வருவது இல்லை.
இன்று காய்கறிகள் விளைச்சலைப் பெருக்கவும் அளவில் பெரியதாக காய்ப்பதற்கும் அதிகமான அளவில் ஆக்சிடோசின் என்ற ஹார்மோனை பயிர்களுக்குச் செலுத்துகின்றனர். இதனால், காய்கறிகள் அதிக எடையும் வடிவமும் கொள்கின்றன. கூடுதல் நிறத்தையும் பெறுகின்றன. குறிப்பாக பரங்கிக்காய், சுரைக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் கத்தரிக்காயில் ஆக்சிடோசின் ஹார்மோன் அதிக அளவில் செலுத்தப்படுகிறது.
ஆக்சிடோசின் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை, புற்றுநோய், குறைந்த ரத்த அழுத்தம் உருவாகும் எனக் கூறப்படுகிறது.
காய்கறிகள் வாடாமல் இருக்க, அலுமினியம் பாஸ்பைட், பேரியம் கார்பனேட் போன்ற ரசாயனங்கள் தெளிக்கப்படுகின்றன.
இதுபோலவே தமிழகத்தில் பல இடங்களில், கழிவுநீரைப் பயன்படுத்தி கீரை வளர்த்து, விற்பனை செய்து காசு பார்க்கிறார்கள். இந்த வகை கீரைகளை சாப்பிடுவதால் பல நேரங்களில் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை போன்ற நோய்கள் உருவாகின்றன. உணவுப் பொருட்கள் விற்பனையில் ஏமாற்றுவது என்பது மன்னிக்க முடியாத குற்றம். கடுமையான தண்டனை தரப்பட வேண்டும்.
காய்கறி உணவை இன்று சைவ உணவு என்று அழைக்கிறோம். சமண மதம் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் இதற்கு ‘ஆருகத உணவு’ என்று பெயர். இலங்கை தமிழர்கள் மத்தியில் இன்றும் ‘ஆரத உணவு’ என்ற சொல் வழக்கில் உள்ளது. ஆரத உணவு என்பது ஆருகத உணவு என்பதன் திரிந்த நிலையாகும்.
அவரவர் வாழ்வியல் முறைக்கும் வசிப்பிடத்துக்கும் ஏற்பதான் உணவு முறைகள் அமைகின்றன. பண்பாட்டின் பிரதான அம்சங்களில் ஒன்று உணவு. இதில் காய்கறிகள் சாப்பிடுவது மட்டும்தான் சரி என்று முழங்கவும் முடியாது. அசைவம் சாப்பிடுவது மட்டுமே உயர்வானது என பெருமை கொள்ளவும் முடியாது.
உணவு அவரவர் வாழ்வுமுறை சார்ந்த தேர்வு. உழைப்பும் சூழலும் மரபும் உடல்வாகும் பருவகால மாற்றங்களும்தான் உணவைத் தேர்வுசெய்ய வைக்கின்றன. நாம் கவனம்கொள்ள வேண்டியது… நமது உணவை நமது தேவை கருதி தேர்வுசெய்கிறோமா, வணிகர்களின் மோசடி விளம்பரங்களுக்காக நமது உடலை பாழ்படுத்திக்கொள்கிறோமா என்பதையே.
திங்கள் முதல் சனி வரை காய்கறிகள், ஞாயிறு ஒரு நாள் அசைவம் என்பது பெரும்பான்மை குடும்பங்களில் எழுதப்படாத விதிபோலவே கடைப்பிடிக்கப்படுகிறது. அதிலும் செவ்வாய், வெள்ளி அன்று சாம்பார் என்பது சைவக் குடும்பங்களில் இன்றும் தொடரும் முறை.
இந்தியர்களின் உணவில் 23 சதவிகிதம் காய்கறிகள் இடம் பெற்றுள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமண விருந்தில் நாட்டுக் காய்கறிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்தன. வாழைக்காயும் பூசணியும் இல்லாத திருமண விருந்து ஏது?
30 ஆண்டுகளுக்கு முன் எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றில் திருமணத்தின்போது அவியலில் பீன்ஸ், கேரட் போட்டுவிட்டார்கள் என்று பந்தியில் தகராறு நடந்து, வயதானவர்களில் பலர் சாப்பிடாமல் எழுந்து போனார்கள். அவியலில் பீன்ஸ் போட்டுவிட்டார்கள் என்ற ஆவலாதி ஊர் முழுவதும் ஒரு வாரத்துக்கு இருந்தது.
அதே ஊரில்தான் இன்று கல்யாண வீடுகளில் பஃபே முறையில் சப்பாத்தி குருமாவும், ஃபிரைடு ரைஸ், காலிஃப்ளவர் மஞ்சூரியனும் ஆனியன் ரய்தாவும் பரிமாறுகிறார்கள். வயது வேறுபாடின்றி ருசித்து சாப்பிடுகிறார்கள். சாப்பாடு விஷயத்தில் மனிதர்கள் ரொம்பவும் ரோஷம் பார்ப்பவர்கள் இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.
பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலைசெய்யும் ஒரு நண்பரின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர்கள் நான்கு நாளைக்கு ஒருமுறை சமைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து ஒவ்வொரு பாத்திரத்திலும் தேதி எழுதி ஒட்டியிருந்தார்கள். படித்தவர்கள் அல்லவா?
கணவன் மனைவி இருவருமே வேலைக்குப் போகிறவர்கள் என்பதால் நேரம் இருப்பது இல்லை என்று சொல்லியபடியே 20-ம் தேதி செய்த பொரியலையும் 16-ம் தேதி செய்த வத்தக்குழம்பையும் சூடுபடுத்தி சாப்பிடக்கூட விருப்பமின்றி, அப்படியே குளிர்ச்சியாகத் தட்டில் போட்டு சாப்பிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பினார்கள்.
‘ஏன் நண்பா இப்படி சாப்பிடுகிறாய்?’ என ஆதங்கத்துடன் கேட்டபோது, ‘ரசித்து, ருசித்து சாப்பிடுவதற்கெல்லாம் இப்போது நேரம் இல்லை. சம்பாதிக்க வேண்டும்’ என்று கணவன் மனைவி இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.
‘அப்படி சம்பாதித்து என்ன செய்யப்போகிறீர்கள்… சம்பாதித்த பணத்தை டாக்டருக்குக் கொடுக்கவா?’ என்று கேட்டேன்.
‘அதை எல்லாம் நோய் வரும்போது பாத்துகிடலாம். இப்போ பணம் பண்ணுவது மட்டும்தான் குறிக்கோள்!’ என்றார் நண்பர்.
மரபான தமிழ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் எப்படி இதுபோன்ற மாற்றத்துக்குள் வர முடியும் என்பது புரிந்து கொள்ளமுடியாத விஷயமாக மனத்தை உறுத்தியது.
இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறது. இவர்களுக்காகத்தான் துரித உணவகங்கள், குளிர்சாதனம் செய்யப்பட்ட காய்கறி கடைகள் முளைக்கின்றன. இவர்கள் உடலை வெறும் இயந்திரம் போலவே நினைக்கிறார்கள். உயிர் வாழ்தலின் அர்த்தம் புரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
காய்கறி மார்க்கெட் என்பது ஒரு தனி உலகம். அதற்குள் நுழையும்போது நுகரும் மணமும் காய்கறிகளின் பச்சை சிவப்பு, ஊதா, ஆரஞ்சு நிறமும் உவகை தருவதாக இருக்கும். எந்த நாட்டுக்குப் போனாலும் அங்குள்ள காய்கறி மார்க்கெட்டை அவசியம் பார்வையிடுவேன். அது அவர்கள் பண்பாட்டின் மையம்.
வாரச் சந்தைகள், தள்ளுவண்டிக் கடைகள், வீதியோரக் கடைகள், உழவர் சந்தை, மலிவுவிலை காய்கறிக் கடைகள் என்று காலந்தோறும் காய்கறிக் கடைகள் மாறிக்கொண்டே வந்தபோதும், இன்று அது எதிர்நோக்கி இருப்பது பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பை.

Jun 25, 2014

உணவு யுத்தம்!-12

p30

வாழைப்பழ யுத்தம்!
வாழைப்பழம் என்றதும் நம் நினைவுக்கு வரக்கூடிய இன்னொரு விஷயம் வாழைப்பழ குடியரசு என்ற பிரயோகம். அதாவது, பனானா ரிபப்ளிக் எனப்படும் இது எதைக் குறிக்கிறது? பெயரளவுக்கு மட்டுமே குடியரசாக இருக்கும் பொம்மை அரசைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சொல்லுக்குப் பின்னால் உள்ள வரலாறுதான் வாழைப்பழ யுத்தத்தின் கதை.
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய பகுதிகளில் உள்ள நாடுகளின் வாழைப்பழ சந்தையை ஏகபோகமாக தங்கள் கைவசம் வைத்துக்கொள்வதற்காக அமெரிக்கா உருவாக்கிவைத்த பொம்மை

p32
அரசுகளையே, வாழைப்பழ குடியரசு என்று அழைக்கின்றனர். இந்தச் சொல்லை அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் ஓ.ஹென்றி. ஹோண்டுரஸ் நாட்டின் பொம்மை அரசைக் குறிக்க அவர் வாழைப்பழக் குடியரசு என்னும் பதத்தைப் பயன்படுத்தினார்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வாழைப்பழம் பயன்படுத்துவதில் முக்கியமான தேசங்களாக இருந்தபோதும், அந்த நாடுகளில் வாழைப்பழம் விளைவது இல்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டன், ஃபிரான்ஸ் ஆகிய நாடுகள் வாழைப்பழத் தேவைக்காகத் தங்களின் காலனி நாடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கின. குறிப்பாக பிரிட்டன் அரசானது ஜமைக்கா, டொமினிக்கா போன்ற நாடுகளிலும், ஃபிரான்ஸ் அரசானது ஐவரி கோஸ்ட், கேமரூன் நாடுகளிலும் வாழைப்பழ உற்பத்தியை கைவசப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது.
இதற்காக, மூன்றில் ஒரு பகுதி மக்கள் வாழைத் தோட்டங்களில் பணியாற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். வாழைப்பழத்தை உடனடியாகப் பெட்டிகளில் அடைத்து கப்பலில் ஏற்றுவதற்கு வசதியாக, அவை காயாகவே பறிக்கப்பட்டு ரசாயனம் மூலம் பழமாக்கப்பட்டன.
அப்போதுதான் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாழைப்பழங்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் அறிமுகமாகத் தொடங்கின. இப்போதுகூட அமெரிக்காவில் ஸ்டிக்கர் ஒட்டாத வாழைப்பழங்கள் விற்கப்படுவது இல்லை. அமெரிக்காவில் உள்ள இந்தியக் கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும் வாழைப்பழம்கூட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதே. இந்த ஸ்டிக்கர் வணிக நிறுவனத்தின் அடையாளச் சின்னம்.
வாழைச் சாகுபடியில் உலகில் முன்னணியில் இருப்பது ஈகுவடார், கொலம்பியா, குவாதமாலா, மெக்சிகோ, ஹோண்டுரஸ், பெரு, வெனிசுலா. பனாமா, பிரேசில் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள். அதே நேரத்தில் வாழைப்பழத்தை உபயோகிப்பதில் முன்னணியில் இருப்பவை ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அமெரிக்காவும்.
இரண்டும் யார் வாழைப்பழச் சந்தையைக் கைப்பற்றுவது என்பதில் அடித்துக்கொண்டன. அதற்காக நடந்ததுதான் வாழைப்பழ யுத்தம். இதற்கு முக்கியக் காரணம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் விளையும் வாழைப்பழங்களுக்கு ஐரோப்பாவில் சுங்க வரி விதிக்கப்படுவதே.
ஆப்பிரிக்கா, கரீபியன் என தங்களிடம் அடிமைப்பட்டு இருந்த நாடுகளில் இருந்து வாழைப்பழ இறக்குமதி செய்யும்போது, அவற்றுக்குச் சுங்க வரி கிடையாது என விசேஷ சலுகை அளித்தன ஐரோப்பிய நாடுகள்.
அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாழைப்பழத்துக்கு சுங்க வரி விதிக்கப்பட்டது. இதனால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் வாழைப்பழங்களின் விலை கூடியது. தடையற்ற வாணிப ஒப்பந்தத்தின்படி, இறக்குமதி செய்யும் வாழைப்பழத்துக்கு சுங்கவரி வசூலிப்பது தவறானது என போர்க்கொடி தூக்கியது அமெரிக்கா.
லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஆதரவாகப் பேசுவதுபோல அமெரிக்கா குமுறியதற்கு முக்கியக் காரணம் லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒட்டுமொத்த வாழைத் தோட்டங்களையும் அவர்கள் கைபற்றியிருந்ததே.
இந்தப் பிரச்னை உலக வர்த்தக அமைப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 20 ஆண்டுகளாகத் தொடர்ந்த வாழைப்பழ யுத்தம், சமீபமாகப் பேசித் தீர்க்கப்பட்டு, எட்டு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன்மூலம் சுங்கவரி படிப்படியாகக் குறைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
p33
ஐரோப்பாவில் சுங்க வரியில்லாமல் வாழைப்பழம் விற்க முடியும் என்றதும் கரீபிய பகுதிகளில் உள்ள வாழைப்பழத் தோட்டங்களைக் கண்வைத்து பன்னாட்டு வணிகர்கள் குதித்தனர். 45 சதவிகித சந்தையைக் கைப்பற்றியது ஒரு அமெரிக்க நிறுவனம். ஜெர்மனியின் திறந்த சந்தையைப் பயன்படுத்தி நாட்டின் முக்கிய வாழைப்பழ விநியோக நிறுவனமாக அது வளர்ச்சி கண்டது.
ஐரோப்பியர்கள் ஆண்டுக்கு 2.5 மில்லியன் டன் வாழைப்பழத்தை உண்கிறார்கள். ஆகவே, அவர்களின் தேவையைப் பூர்த்திசெய்ய கரீபியத் தீவுகளில் விளையும் மொத்த வாழைப்பழமும் ஏற்றுமதி செய்யப்படும் பொருளாக மாறியது.
இன்னொரு பக்கம்… அமெரிக்கா தனது வாழைப்பழத் தேவைக்கான லத்தீன் அமெரிக்க நாடுகளான ஈகுவடார், கொலம்பியா, நிகராகுவா போன்ற நாடுகளில் உள்ள வாழைத் தோட்டங்களைத் தனதாக்கிக்கொண்டு நேரடியாக வாழைப்பழங்களை அமெரிக்காவுக்குக் கப்பலில் இறக்குமதி செய்யத் தொடங்கின. இதற்காக யுனைடெட் ஃபுரூட் கம்பெனி என்ற ஒருங்கிணைந்த நிறுவனம் ஒன்றினை வணிகர்கள் உருவாக்கினர். இவர்கள் ஆண்டுக்கு 14 மில்லியன் டன் வாழைப்பழத்தை அமெரிக்காவுக்கு சப்ளை செய்கிறார்கள்.
வாழைப்பழச் சந்தையை யார் கையகப்படுத்துவது என்று பலத்த போட்டி உருவானது. ஒரு பக்கம்… பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள்; மறுபக்கம்… அமெரிக்கா. இந்த இரண்டு பிரிவுகளுக்கு இடையில் வாழைப்பழ யுத்தம் தொடங்கியது.
அமெரிக்க  நிறுவனங்கள் கையில் லத்தீன் அமெரிக்க வாழைத் தோட்டங்கள் பெருமளவு வந்து சேர்ந்தன. இந்தத் தோட்டங்களைப் பரம்பரையாக நிர்வகித்துவந்த விவசாயிகள், கூலிகளாக மாற்றப்பட்டனர். அடிமைகளைப்போல நடத்தப்பட்டு, வாழைத் தோட்டத்தில் தினம் 14 மணி நேரம் வேலைசெய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். குழந்தைகள் உழைப்பும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
இத்துடன் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் அரசின் ஒத்துழைப்புடன் அமெரிக்க நிறுவனங்களுக்குக் கையளிப்பு செய்யப்பட்டது. வாழைப்பழங்களை உடனடியான கொண்டுசெல்வதற்கு என்றே புதிதாக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன.
வாழைத் தோட்டங்களைப் பாதுகாப்பதற்கு என்று தனி பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. இந்தப் பாதுகாப்புப் படைகளுக்கு அதிநவீன துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வழங்கப்பட்டன. வாழைத் தோட்டங்களைச் சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டது.
வாழைத்தோட்ட தொழிலாளிகள் அமெரிக்காவின் வல்லாண்மையை எதிர்க்கிறார்கள் என்பதைக் காரணம் காட்டி, அவர்களைப் போராளிகள் எனச் சுட்டுத் தள்ளியது அமெரிக்கப் பாதுகாப்புப் படை.
இப்படி வாழைத் தோட்டத்தில்  நடைபெற்ற ஒரு போராட்டத்தில் கொல்லப்பட்ட 3,000 கொலம்பியர்களின் உண்மை சம்பவத்தைத்தான் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், தனது ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலில் விவரிக்கிறார்.
தங்களின் வாழைப்பழச் சந்தைக்கு உதவி செய்வதற்காக நாட்டின் அரசியல்வாதிகள், ராணுவ அதிகாரிகளுக்கு கோடி கோடியாக லஞ்சத்தை வாரி இறைத்தன அமெரிக்க நிறுவனங்கள். அத்துடன் நாட்டின் அதிபரைத் தங்களின் கையாளாக மாற்றிக்கொண்டு, மறைமுக அரசாங்கத்தை நடத்தின. எதிர்ப்பு துவங்கும்போது தாங்களே சிலரைப் போராளிகள் என உருவாக்கி கலவரத்தில் ஈடுபடச் செய்தன. கொலம்பியாவிலும் ஈகுவடாரிலும் குவதமாலாவிலும் இவர்கள் செய்த கொலைகள், அக்கிரமங்கள் அளவில்லாதவை.
p34
மத்திய கிழக்கு ஆசியாவை ஆக்கிரமிக்க எண்ணெய் வளத்தைக் காரணம் காட்டி எப்படி கையகப்படுத்த முயன்றதோ, அதுபோலவே வாழைப்பழத்தைக் காரணமாகக் காட்டி ஹோண்டுரஸ் மீது அமெரிக்காவின் கவனம் திரும்பியது. இந்த வாழைப்பழ யுத்தம் பற்றி சிறப்பான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார் இபா.சிந்தன்.
அவரது, ‘மீண்டுவருமா வாழைப்பழ தேசம்?’ என்ற வரலாற்றுத் தொடரில் ஹோண்டுரஸில் எப்படி அமெரிக்கா வாழைப்பழத் தோட்டங்களைக் கைப்பற்றி அரசை வீழ்த்தியது என்ற வரலாறு தெளிவாகக் கூறப்படுகிறது.
ஹோண்டுரஸின் பெரும்பகுதி தோட்டங்களைக் கைப்பற்றிய அமெரிக்க நிறுவனங்கள், இதற்காக நாடு முழுவதும் ரயில் பாதைகள் அமைத்துத் தருவதாகவும், அதற்குப் பதிலாக விளைநிலம் தேவை என்றும் ஓர் ஒப்பந்தம் போட்டன. வியாபார முதலாளிகளுக்கு மட்டுமே பயன்பட்ட ரயில் பாதைகளைக் காட்டி, தாங்கள் ஹோண்டுரஸுக்குப் பெரிய உதவிசெய்து வருகிறோம் என்று அமெரிக்கா பெருமையடித்தது.
வாழைத் தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் பூஞ்சை நோயின் காரணமாக ஏராளமான தோட்டங்கள் அழிய ஆரம்பித்தன. மக்கள் நோயுற்றனர். அவர்களை அப்படியே அம்போவென விட்டுவிட்டு, வேறு பகுதிகளுக்கு தோட்டம் அமைக்கச் சென்றுவிட்டன வாழைப்பழ நிறுவனங்கள். அப்படி செல்லும்போது, ரயில் பாதைகளையும் அவர்கள் பெயர்த்துக்கொண்டு போய்விட்டனர் என்பதுதான் கொடுமை.
இவ்வளவு ஏன்? வாழைப்பழச் சந்தையை நிலைநாட்டிக்கொள்ளவதற்காக நாட்டின் அரசை கலைத்து, தங்களுக்கு ஆதரவான முன்னாள் அதிபர் மேனுவேல் பொனிலாவுக்கு ஆதரவாக ராணுவத்தைத் துணைக்கு வைத்துக்கொண்டு, ஆட்சியைக் கைப்பற்றினர்.
1975-ல், ஹோண்டுரஸ், கொலம்பியா, கோஸ்டாரிகா, ஈகுவடார், குவாத்தமாலா, நிகராகுவா, பனாமா போன்ற நாடுகள் ஒன்றிணைந்து ‘வாழைப்பழ ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு’ ஒன்றை உருவாக்கின.
‘உற்பத்திசெய்யும் தங்களைவிட வாங்கி விற்கும் அமெரிக்கா 83 சதவிகித லாபம் அடிக்கிறது. ஆகவே, அமெரிக்க வாழைப்பழ நிறுவனங்களுக்கு அதிக வரி போட வேண்டும்’ என்று முடிவு செய்யப்பட்டது. உடனடியாக வரிவிதிப்பு தொடங்கியது. அதாவது, ஒரு பெட்டிக்கு அரை டாலர் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ள மறுத்த வாழைப்பழக் கொள்முதல் நிறுவனங்கள், ஆட்சியாளர்களுக்குப் பணத்தை வாரி இறைத்து வரியைத் தள்ளுபடி செய்யவைத்தன.
பிரிட்டனிலும் ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் ஒவ்வொரு நாளும் சாப்பிடும் வாழைப்பழத்துக்காக, எங்கோ லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் கரீபியத் தீவுகளிலும் ஏழை எளிய மக்கள் முதுகு ஒடிய உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் தினக்கூலி நான்கு வாழைப்பழம் வாங்கக்கூட போதுமானது இல்லை.
நிலத்தையும் உழைப்பையும் கொடுத்து இவர்கள் உருவாக்கிய வாழைப்பழங்கள்தான் சூப்பர் மார்க்கெட்களில் பகட்டான ஸ்டிக்கருடன் ஏதோ தொழிற்சாலையில் தயாரானவைபோல காட்சி தருகின்றன. இந்த நிலை இந்தியாவுக்கு வருவதற்கு அதிக காலம் இல்லை. வணிக நிறுவனங்களுக்கு மனித உயிர் என்பது தூக்கி எறியப்படும் வாழைப்பழத் தோல் போன்றதே.
அடுத்த முறை வாழைப்பழம் சாப்பிடும்போது ஒரு நிமிடம் இந்தப் பழத்துக்காக வீழ்த்தப்பட்ட லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய நாடுகளை, உரிமைக்காகப் போராடி உயிர்துறந்த மக்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
இந்திய வாழை விவசாயிகளும் வணிகச் சந்தையில் ஏமாந்துபோய் தலையில் துண்டை போட்டுக்கொண்டு மௌனமாக உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதையும் நினைக்க மறந்துவிடாதீர்கள். வாழைப்பழம் மென்மையானது. ஆனால் அதன் அரசியல் அத்தனை மென்மையானது இல்லை.

உணவு யுத்தம்!-11

‘கரகாட்டக்காரன்’ வாழைப்பழம்!
மதுரை செல்லும் ரயிலில் ஒரு கல்லூரி மாணவனுடன் பயணம் செய்தேன். எதிர் சீட்டில், காதில் ஹெட்போன் மாட்டியபடியே பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தான். ரயில் கிளம்பும் நேரத்தில் சிவப்பு நிற உடை அணிந்த பீட்சா விற்பனையாளன் ஒருவன் வேகமாக வந்து அந்தப் பையனுக்கு பீட்சா டெலிவரி செய்தான். அந்த மாணவன் புன்சிரிப்புடன், ‘ஆர்டர் கொடுத்தால் ரயிலிலும் வந்து விநியோகம் செய்வார்கள்’ என்றபடி பீட்சாவை வாங்கினான்.
‘இதுதான் உனது வழக்கமான இரவு உணவா?’ என்று கேட்டேன்.
‘வீட்டில் இருந்தால் இரவு ஃபிரைடு ரைஸ், சப்பாத்தி சாப்பிடுவேன். வெளியூர் கிளம்பினால் இப்படி பீட்சா ஆர்டர் பண்ணி சாப்பிடுவேன், அல்லது பழங்கள் சாப்பிடுவேன்’ என்றான்.
‘என்ன பழம்?’ என்று கேட்டேன்
‘ஆப்பிள் அல்லது ஆரஞ்சு சாப்பிடுவேன்’ என்றான்.

‘அது வயதானவர்கள் சாப்பிடும் பழம்’ என்று சொல்லிச் சிரித்தான்.
வாழைப்பழம் வயதானவர்கள் சாப்பிடும் பொருள் என்ற எண்ணம் இந்தப் பையன் மனதில் எப்படி வந்தது? பழம் சாப்பிடுவதற்கு வயது ஒரு பொருட்டா என்ன?
அந்தப் பையன் சொன்னது உண்மை. அந்த ரயில் பெட்டியில் இருந்தவர்களில் 16 வயது முதல் 30 வரை இருந்த ஒருவர்கூட வாழைப்பழம் சாப்பிடவில்லை. இதை எல்லாம் எப்படிச் சாப்பிடுகிறார்கள் என்பது போலத்தான் அவர்கள் பார்த்தார்கள்.
வாழைப்பழத்தின் மீது இளம் தலைமுறைக்கு ஏன் இத்தனை வெறுப்பு, அல்லது இளக்காரம்? வாழைப்பழம் சாப்பிடும் பழக்கத்தை இளம்தலைமுறை அறிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. அதை ஊதுபத்தி ஸ்டாண்ட் என்று சிலர் கேலி செய்வதையும் பார்க்கிறோம்.
‘கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடி நினைவிருக்கிறதில்லையா? அது வெறும் நகைச்சுவை காட்சி மட்டுமில்லை. ஒரு ரூபாய்க்கு இரண்டு வாழைப்பழம் விற்கப்பட்ட காலத்தை அது நினைவுபடுத்துகிறது. வாழைப்பழம் வாங்க வேண்டும் என்றால் பெட்டிக்கடைக்குப் போக வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இத்தோடு அன்றாடம் வாழைப்பழம் சாப்பிடுகிற பழக்கம் உள்ளவர்களுக்குப் பழம் சாப்பிடாவிட்டால் நிறைவு வராது. அதற்காக உணர்ச்சிவசப்பட்டு சண்டையிடுவார்கள் என்பதையும் அடையாளம் காட்டுகிறது.
1989-ல் ‘கரகாட்டக்காரன்’ வெளியானது. இந்த 25 வருடங்களில் வாழைப்பழத்தின் விலை 12 மடங்கு ஏறியிருக்கிறது. இன்றைக்கு ஒரு வாழைப்பழம் ஐந்து ரூபாய் முதல் எட்டு ரூபாய் வரை மாநகரில் விற்கப்படுகிறது. பெட்டிக்கடைகளில் நாட்டு வாழைப்பழங்களைக் காணமுடிவது இல்லை. குளிர்பான நிறுவனங்களும் சிப்ஸ் கம்பெனிகளும் பெட்டிக்கடைகளை ஆக்கிரமித்துவிட்டன.
பகட்டான கூல் ட்ரிங்குகளுக்குப் பொருத்தமில்லாமல் வாழைப்பழங்கள் உடன் விற்கப்படுவதைப் பன்னாட்டு கம்பெனிகள் விரும்புவதில்லை. ‘வாழைக் குலைகளைத் தொங்கவிட்டால் விளம்பரப் பலகையை மறைத்துவிடுகிறது’ என குளிர்பான கம்பெனியினர் தடுத்துவிடுகிறார்கள் என்றார் ஒரு பெட்டிக்கடைக்காரர்.
வீதியில் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்பவரிடம் பேசியபோது, ”முன்பு போல நாட்டு வாழைப்பழம் வருவது இல்லை.  பொதுவாக மக்கள் நீளமாக உள்ள பச்சை பழம் சாப்பிடுவதை விரும்புகிறார்கள். பெரும்பான்மை இளைஞர்களுக்கு வாழைப்பழம் என்றாலே பிடிப்பது இல்லை. காரணம், அது வெளிநாட்டுப் பழமில்லையே… நாட்டு வாழைப்பழத்தை விரும்பிக் கேட்பவர்கள் வயசானவர்கள் மட்டுமே” என்றார்
கோயில் கடைகளில் விற்பதற்கு என்றே தனியாக வாழைப் பழங்களை விளைவிக்கிறார்கள் போலும். அங்கே வாங்கிய வாழைப்பழங்களை உரித்துச் சாப்பிட்டால் அழி ரப்பரைத் தின்பது போல சுவையற்று இருக்கிறது. அதை சாப்பிடும் கடவுள்கள் நிலை பாவம்!
திண்டுக்கல்லுக்குப் போயிருந்தபோது மலைவாழைப்பழம் வாங்க கடைக்குப் போனேன். எத்தனை கிலோ வேண்டும் என்று கேட்டார்கள். எண்ணிக்கையில்தானே வாழைப்பழம் வாங்குவோம் எனக் கேட்டால் இப்போது கிலோவுக்கு மாறிவிட்டோம் என்கிறார்கள்.
கீழ் பழநி மலை, தாண்டிக்குடி மற்றும் சிறுமலையில் மலை வாழை விளைச்சல் அதிகம் காணப்படுகிறது. உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இதுபோன்ற ருசியான ரகம் கிடையாது என்பதால் இதன் சிறப்பு கருதி உலக ரக உரிமம் பெறப்பட்டிருக்கிறது.
மருத்துவ குணம் நிறைந்த இந்தப் பழத்துக்குச் சந்தையில் அதிக கிராக்கி நிலவுவதுடன், மலைப்பழம் என போலியான பழங்கள் அதிகம் விற்கப்படுகின்றன. உண்மையான மலை வாழைப் பழம் 15 நாள் ஆனாலும் கெடாது. தோல் சுருங்குமே அன்றி சுவை குறையாது. போலிப் பழங்கள் எளிதில் அழுகிவிடுகின்றன.
உலகெங்கும் 300-க்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் இருக்கின்றன. நம் ஊரிலே 30-க்கும் மேற்பட்ட வாழைப்பழ ரகங்கள் சந்தையில் கிடைத்தன. இன்று கற்பூரவல்லி, மலைவாழை, பேயன், சக்கை, ரஸ்தாளி, பச்சை, பெங்களூரு மஞ்சள், நேந்திரன், மொந்தன், பூவன், கதலி, ஏலரிசி, மோரீஸ், செவ்வாழை, மட்டி, சிங்கன் ஆகியவையே சந்தையில் கிடைக்கின்றன.
வாழைப்பழத்தின் சுவையும் அளவும் மாறிக்கொண்டேயிருக்கிறது. என்ன காரணம் என விவரம் அறிந்த பழவியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘அசிட்டிலீன் வாயு அல்லது கால்சியம் கார்பைட் மூலம் பழுக்க வைக்கப்படுவது முக்கியக் காரணம். தண்ணீர், நிலம் இரண்டும் சீர்கெட்டுப்போனது இன்னொரு காரணம்’ என்றார்.
இந்தியாவில் ஆண்டு தோறும் 29,77,991 ஆயிரம் டன் வாழைப்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் தமிழகமே முன்னணியில் உள்ளது. இந்தியாவில் விளையும் வாழைப்பழங்கள், துபாய், ஓமன், கொரியா, ஈரான், குவைத், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வாழை, வெறும் பழம் மட்டுமில்லை. உலகையே ஆட்டுவைத்த பழம். இதற்காக கரீபியத் தீவுகளிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் எவ்வளவு போராட்டங்கள், உள்நாட்டுப் போர்கள் நடந்திருக்கின்றன… எவ்வளவு பேர் இறந்திருக்கிறார்கள்? இந்த வரலாறு இன்னமும் முழுமையாக வெளிச்சத்துக்கு வரவில்லை. வாழைப்பழங்களுக்கான போர் நம் காலத்தின் முக்கியமான உணவு யுத்தம். அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக வாழையின் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
வாழை முதன்முதலாக பப்புவா நியூ கினியில் பயிரிடப்பட்டது என்கிறார்கள். இதற்கு ஆதாரமாக நியூகினியாவின் குக் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் தடயங்கள் கிடைத்திருக்கின்றன. அதைக்கொண்டு அங்கே வாழை கி.மு 5000 முதலே பயிரிடப்பட்டிருக்கக்கூடும் என்கிறார்கள். இந்தியாவுக்கு எப்போது வந்தது என்ற காலக்கணக்கு தெரியவில்லை.
ஆனால் புத்தர் காலத்திலேயே வாழைப்பழம் இருந்திருப்பதாக பௌத்த நூல்கள் கூறுகின்றன. மொகலாயர்கள் இந்தியாவிலிருந்து வாழையை மத்திய கிழக்குப் பகுதிக்குக் கொண்டு சென்றனர். அதன் பின்பு அரேபிய வணிகர்கள் வாழையை ஆப்பிரிக்கா எங்கும் பரப்பினர். போர்ச்சுகீசிய வியாபாரிகள் மூலமாக வாழை அமெரிக்காவுக்குச் சென்றது.
கி.பி 1402-ல் போர்ச்சுகீசிய மாலுமிகள் ஆப்பிரிக்காவில் கிடைத்த வாழைப்பழத்தை கனாரி தீவுக்கு எடுத்துச் சென்று பயிரிட்டார்கள். கி.பி 1516-ம் வருஷம் தாமஸ் டி பெர்லாங்கோ என்ற போர்ச்சுகீசிய பாதிரியார் கனாரி தீவிலிருந்து வாழை மரத்தை, மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான சாண்டோ டொமிங்கோ என்ற இடத்துக்குக் கொண்டுசென்றார். இங்கிருந்து மத்திய அமெரிக்க தேசங்களுக்கு வாழை பரவியது. இப்படித்தான் ஒவ்வொரு நாடாக வாழை பரவியது.
வெப்பமண்டல நாடுகளில் வாழை அதிகம் விளையக்கூடியது. வாழைப்பழத்தில் கார்போஹைடிரேட், புரதம், சர்க்கரை சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ் ஆகியவை அடங்கியுள்ளன. நார்ச்சத்தும், ரிபோஃபிளேவின், தயாமின் முதலான வைட்டமின்களும் உள்ளன. வாழைப்பழத்தில் இயற்கையாகவே சுக்ரோஸ், குளூக்கோஸ், ஃப்ரக்டோஸ் உள்ளதால் வாழைப்பழம் தின்றவுடனே உடலுக்கு சக்தி கிடைக்கிறது. இதன் காரணமாகவே விளையாட்டு வீரர்கள் விரும்பி உண்ணுகிறார்கள்.
வாழையின் ஆங்கிலப் பெயரான ‘பனானா’  என்பது ஸ்பானிஷ் அல்லது போர்ச்சுகீசிய மொழியிலிருந்து உருவாகியிருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதன் அறிவியல் பெயரான ‘மூசா’ அரபுப் பெயரிலிருந்து உருவானது. வாழைப்பழத்தின் மற்றொரு ஆங்கிலப் பெயரான Plantain  என்பது ஸ்பெயின் மொழியில் வாழைப்பழத்தின் பெயரான ‘Platano’ விலிருந்து மருவியது.
வாழை சிறந்த நஞ்சு முறிப்பான் ஆகும். கிராமப் பகுதிகளில் யாரையாவது பாம்பு கடித்துவிட்டால் உடனடியாக வாழைச்சாறு பருகக் கொடுப்பார்கள். நஞ்சு முறிந்துவிடும். இது போலவே நாம் சாப்பிடும் உணவில் நஞ்சு கலந்திருந்தாலும் முறித்துவிடும் என்பதாலே வாழை இலையில் உண்ணுகிறோம்.
ஒவ்வொரு வாழைப்பழ ரகத்துக்கும் எப்படி பெயர் வந்தது என்பதற்குக்கூட கதையிருக்கிறது. ரஸ்தாலி எனப்படும் கோழிக்கோடு பழம், கப்பலில் ஏற்றிக்கொண்டு போய் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டது. அதன் காரணமாகவே இலங்கையில் அதன் பெயர் கப்பல்பழம்.
இப்போது சந்தையில் கிடைக்கக்கூடிய பெங்களூரு வாழைப்பழம் எனும் பெரிய மஞ்சள் வாழைப்பழம் மரபணு மாற்றம் செய்த பழமாகும். அதைச் சாப்பிடுவதால் சைனஸ் மற்றும் சுவாச ஒவ்வாமை நோய்கள், வயிற்றுக் கோளாறுகள் உருவாகின்றன. ஆகவே மரபணு மாற்று செய்த வாழைப்பழங்களை சாப்பிடாதீர்கள் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
வாழையில் ஏற்படும் பூச்சிக் கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாகப் பூச்சிகளைக் கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்திவிடுகிறார்கள். இதைத்தான் பி.டி. வாழை என்று அழைக்கிறார்கள். இப்படி உருவாக்கப்படும் வாழை மரம் ஒருமுறை மட்டுமே பழம் கொடுக்கும். வாழையடி வாழையாக வளராது. ஆகவே, வாழையின் இயல்பான தன்மைகள் மாறிவிடுகின்றன என்கிறார்கள் சுற்றுச்சூழல் அறிஞர்கள்.
உலகிலேயே அதிகமாக வாழைப்பழத்தை உபயோகிக்கும் நாடு அமெரிக்கா. அதற்கு அடுத்தபடி ஜெர்மனி. உகாண்டாவில்தான் தனி நபர் அதிகமான அளவு வாழைப்பழங்களைச் சாப்பிடுகிறார்கள். அதாவது, ஒரு நாளைக்கு சராசரியாக ஏழு முதல் 11 வாழைப்பழங்கள் சாப்பிடுகிறார்கள். அவர்களின் விருப்ப உணவான மதோகே வாழைப்பழத்தைக் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது.
வாழைநாரின் இழையைப் பிரித்தெடுத்து கயிறு செய்கிறார்கள். கப்பல்களில் பயன்படுத்தப்படும் இவ்வகை கயிறுகள் கடல்நீரின் உப்பால் அரிக்கப்படாத தன்மை கொண்டவை. வாழைநாரில் உருவாக்கப்படும் கார்க், கப்பல்களில் எண்ணெய் கசிந்தால் அடைப்பதற்குப் பயன்படுகிறது. கிராமப்புறங்களில் எண்ணெய் டின்களில் வாழைத்தார் வைத்து அடைத்திருப்பது இந்தக் காரணத்தால்தான்.
தஞ்சை கல்வெட்டுகள் பற்றி முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையில் வாழைப்பழம் பற்றிய சோழ மாமன்னன் ராஜராஜன் கல்வெட்டைக் குறிப்பிடுகிறார். அந்தக் கல்வெட்டு கோயிலுக்கு வாழைப்பழம் வாங்க வைப்புநிதி சேகரிக்கப்பட்டதை விவரிக்கிறது.
விநாயகருக்கு நிவேதனம் செய்ய தினந்தோறும் 150 வாழைப்பழம் வழங்குவதற்கு 360 காசுகளை முதலாகப் போட்டு வைப்புத் தொகை வைத்திருந்தான் சோழன்.
ஒரு நாள் நிவேதனத்துக்கு 150 பழங்கள் தேவை என்றால் ஆண்டொன்றுக்கு 54,000  பழங்கள் தேவை. அன்றைய காலகட்டத்தில் வாழைப்பழ விலை ஒரு காசுக்கு 1,200 பழங்கள். 360 காசுகளுக்கு ஒரு வருடத்துக்கான வட்டித் தொகை 45 காசுகள் என்றால் வட்டி விகிதம் 12.5% என்று தெரிகிறது.
மன்னனுடைய இந்த ஏற்பாட்டின்படி மூலதனம் அப்படியே இருக்கும். ஆண்டு வட்டி வருமானத்தை மட்டும் செலவுக்கு எடுத்துக்கொள்வார்கள். இதுபோல சோழர் காலத்தில் பருப்பு, மிளகு, சீரகம், சர்க்கரை, நெய், உப்பு, வாழை இலை, வெற்றிலை, பாக்கு, கற்பூரம், விறகு ஆகிய பொருட்களின் விலைகளும் எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் இருந்தன என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியம்.
இது ஒரு வாழைப்பழ விஷயத்தில்கூட அரசு எந்த அளவுக்கு அக்கறை காட்டியிருக்கிறது என்பதற்கான உதாரணம்!

உணவு யுத்தம்! - 10

 பாப்கார்னும் பாதிப்புகளும்!

பாப்கார்னும் பாதிப்புகளும்!
 ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பே பெரு நாட்டு மக்கள் சோள ரகத்தைச் சாப்பிட்டு வந்திருக்கின்றனர். மத்திய மெக்ஸிகோவில் உள்ள 'பெத்கேரே’ என்ற இடத்தில் இருந்து 5,600 வருடங்களுக்கு முன் உபயோகிக்கப்பட்ட சோளம் கிடைத்திருக்கிறது. 16 அல்லது 17-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனியர் மூலமே இந்தச் சோளம் அமெரிக்காவுக்கு அறிமுகமானது. இன்று அதிகம் மக்காச்சோளம் விளையும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.
ஆரம்ப காலங்களில் ஆடு மாடுகளுக்கான பிரதான உணவாகக் கருதப்பட்ட மக்காச்சோளம், இன்று உலகின் முக்கிய தானியங்களில் ஒன்றாக, பெரிய சந்தையை உருவாக்கியிருக்கிறது. கோழிப் பண்ணைகளில் தீவனமாக மக்காச்சோளம் இன்றும் அதிகமாகப் பயன்படுத்தபடுகிறது.
பாப்கார்ன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. காரணம், அதில் நார்ச்சத்துகள் அதிகம். குறைவான கலோரி உள்ள ஆரோக்கிய உணவு. அத்துடன், வைட்டமின்களும் மினரல்களும் இணைந்தவை என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு பாக்கெட் வெண்ணெய் தடவி பொரித்த சோளப்பொரியில் 1,261 கலோரி உள்ளது. இதில் 79 கிராம் கொழுப்பும் 1,300 மில்லி கிராம் சோடியம் உப்பும் உள்ளன.
ஆனால், அதை உப்பும் வெண்ணெய்யும் மசாலாவும் சேர்த்து மெஷினில் பொரித்து ரசாயன சுவையூட்டிகளைச் சேர்த்து சாப்பிடும்போது, அது கெடுதலான உணவாக மாறிவிடுகிறது. குறிப்பாக, சுவையூட்டுவதற்காக அதில் சேர்க்கப்படும் டை-அசிட்டால் தான் பாப்கார்னின் மணத்துக்கு முக்கிய காரணம். இந்த மணம் நுரையீரல் ஒவ்வாமையை உண்டுபண்ணக் கூடியது. தொடர்ந்து பாப்கார்ன் சாப்பிடுகிறவர்களுக்கு, நுரையீரல் நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள்.
பெங்களூரில் உள்ள மல்டிப்ளெக்ஸ் ஒன்றில் பாப்கார்ன் விற்பனையகம் வைத்திருக்கும் ராஜ்பன் என்பவர், தனது வருமானம் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறவரின் வருமானத்தைவிட இரு மடங்கு அதிகம் என்கிறார்.
'ஒரு நாளைக்குச் சராசரியாக 1,500 பேர் சினிமா பார்க்க வருகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், அதில் 1,400 பேர் பாப்கார்ன் மற்றும குளிர்பானங்கள் வாங்குகின்றனர். ஒரு காம்போ பேக்கின் விலை 250 ரூபாய் என்றால், எங்கள் ஒருநாள் வருமானம் 3.5 லட்சம். எல்லா செலவுகளும் போக ஆண்டுக்கு எப்படியும் 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை சம்பாதிக்கிறேன்’ என்கிறார்.
இந்திய சினிமா தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் பாப்கார்ன் விநியோகத்தில் 90 சதவிகிதம் அமெரிக்க கம்பெனிகளுடையது. இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் தங்களின் இந்திய நிறுவனங்கள் துணையுடன் ஆயிரம் கோடிக்கும் மேல் விற்பனை செய்கின்றன.
பாப்கார்ன் சந்தையின் அபரிமித வளர்ச்சியின் காரணமாக 2015-ல் 2,034 கோடி ரூபாய்க்கு பாப்கார்ன் விற்பனையாகும் எனக் கணக்கிட்டிருக்கின்றனர்.
ரூபாய் 120-க்கு விற்கப்படும் ஒரு பாக்கெட் பாப்கார்ன் தயாரிக்க ஆகும் செலவு, ஒரு ரூபாய் 80 காசு. விற்பனையாளர் கமிஷன், போக்குவரத்து, விளம்பரம், இத்யாதி என அத்தனையும் சேர்த்துக்கொண்டாலும் ரூ.10-க்குள்தான் வரும் என்றால், ஒரு பாக்கெட் விற்பனையில் ரூ.110 லாபம். இவ்வளவு கொள்ளை லாபம் வேறு எந்தத் தொழிலிலும் கிடையாது.
அதே நேரம், மக்காச்சோளம் விவசாயம் செய்யும் விவசாயிக்கு ஒரு கிலோவுக்குக் கிடைக்கும் விலை ரூ.20 மட்டுமே. அதுவும், அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினாவில் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி ஆவதால், உள்ளூர் சந்தையில் விலை சரிந்துவிடுகிறது.
நாம் சாப்பிடும் பாப்கார்னால் உண்மையான லாபம் யாருக்கு என்றால், அமெரிக்க நிறுவனங்களுக்குத்தான். ஆகவே, அவர்கள் பாப்கார்ன் சந்தையைப் பெரிதுபடுத்த எல்லாவிதமான விளம்பர உத்திகளையும் பயன்படுத்துகின்றனர்.
வீடுகளிலும் சாலையோரங்களிலும் மட்டுமே தயாரிக்கப்பட்டு சாப்பிடப்பட்டு வந்த சோளப்பொரி பரவலானது, பாப்கார்ன் இயந்திரத்தின் வருகையால்தான். 1892-ம் ஆண்டு, சார்லஸ் கிரேடர் என்ற அமெரிக்கர், பாப்கார்னைத் தயாரிக்க நீராவியால் இயங்கும் இயந்திரத்தைக் கொண்ட தள்ளுவண்டியை வடிவமைத்தார். அதன் தொடர்ச்சியாக, பாப்கார்ன் இயந்திரங்களை விற்க ஆரம்பித்தார். இன்று வரை இவரது குடும்பத்தினரே அதிக அளவில் பாப்கார்ன் மெஷினை விற்றுவருகின்றனர்.
சீனாவில், நாம் அரிசியைப் பொரிப்பதுபோல மூடிவைத்த பாத்திரத்துக்குள் சோளத்தைப் போட்டு பொரிக்கும் முறையிருக்கிறது. சீனர்களும் பாப்கார்னை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.
ஜப்பானில் 15-க்கும் மேற்பட்ட ருசிகளில் பாப்கார்ன் விற்கப்படுகிறது. ஆனால், வீதியில் நடந்துகொண்டே பாப்கார்ன் சாப்பிடுவதை ஜப்பானியர்கள் விரும்புவது இல்லை. தீம்பார்க் போன்றவற்றினுள் செல்லும்போது கழுத்தில் தொங்குமாறு அமைக்கப்பட்ட பாப்கார்ன் டின்களை வாங்கி மாட்டிக்கொள்கிறார்கள். பசிக்கும்போதெல்லாம் சாப்பிடுகிறார்கள்.
1914-ல்தான் பிராண்டெட் பாப்கார்ன்கள் அறிமுகமாகின. ஜாலி டைம் எனப்படும் பாப்கார்ன்தான் முதன்முறையாக விற்பனைக்கு வந்த பிராண்டெட் பாப்கார்ன். 1945-ல் மைக்ரோவேவ் மூலம் சோளத்தைப் பொரிக்கலாம் என்ற முறை உருவாக்கப்பட்ட பிறகு, இன்று வரை அதுவே பிரதானமாகக் கையாளப்பட்டு வருகிறது.
1940-களில் அமெரிக்காவில் பாப்கார்ன் சந்தை குறைய ஆரம்பித்தது. விற்பனையை அதிகரிக்க பாப்கார்ன் நிறுவனங்கள் குளிர்பான நிறுவனங்களுடன் கைகோத்துக்கொண்டு விளம்பரம் செய்யத் துவங்கின. அப்படித்தான் குளிர்பானமும் பாப்கார்னும் தியேட்டரில் இணைந்து விற்பனையாவது துவங்கியது. அன்று துவங்கிய சந்தை, இன்று விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து நிற்கிறது.
பாப்கார்ன் பெற்றுள்ள பெரிய வரவேற்பைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜனவரி 19-ம் தேதியை தேசிய பாப்கார்ன் தினமாக அறிவித்துள்ளது அமெரிக்கப் பாப்கார்ன் போர்டு.
பாப்கார்ன் மட்டுமல்ல... தியேட்டரில் விற்பனையாகும் சமோசா, போண்டா போன்ற பெரும்பான்மை உணவு வகைகள் தரமற்றவையே. அவை எப்போது தயாரிக்கப்பட்டன என்பதற்கு எந்தக் குறிப்பும் கிடையாது. காலையில் செய்து மீதமான உணவுப்பொருட்களை, திரும்பத் திரும்பச் சூடுபடுத்தி விற்றுவருகிறார்கள் என்பதே பெரும்பாலும் நிஜம்.
தியேட்டரை ஒரு உணவு மேஜையாக மாற்றியதில் இருந்து மீள்வதற்கு என்னதான் தீர்வு? இடைவேளை இல்லாமல் சினிமா தொடர்வதே! அமெரிக்காவில் அப்படித்தான் சினிமா திரையிடப்படுகிறது. ஆனால், இடைவேளை இல்லாமல் நம்மால் சினிமா பார்க்க முடியாது. ஆங்கிலப் படங்களுக்குக்கூட நாமாக ஓர் இடத்தில் இடைவேளை விட்டுக்கொள்கிறோம்.
அமீர் கான் தயாரிப்பில் வெளியான ஹிந்தி படமான 'தோபி காட்’ படம் இடைவேளை இல்லாமல் திரையிடப்பட்டது. இதை ஏற்க மறுத்து அரங்கில் கூச்சலிட்டனர். சில அரங்குகளில் தாங்களே எழுந்து வெளியே சென்று பாப்கார்ன் வாங்கிச் சாப்பிடத் துவங்கிவிட்டனர். இந்தப் பிரச்னை காரணமாகவே இன்று வரை இரண்டு மணி நேரம் சினிமா எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. சினிமாவை அடுத்தகட்டம் நோக்கி வளரவிடாமல் தடுத்திருப்பதில் பாப்கார்ன் போன்ற இடைவேளை உணவுகளுக்கும் ஒரு முக்கியப் பங்கு இருக்கிறது.
மக்காச்சோள உற்பத்தியில் உலகில் ஐந்தாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. இது சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெள்ளை சோளமும் சிவப்பு சோளமும் பாரம்பரியமாகப் பயிரிடப்பட்டு வருகின்றன. சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை சர்க்கரை நோயில் இருந்து உடலைக் காப்பாற்றக் கூடியவை.
அமெரிக்காவில் பாப்கார்ன் கலாசாரம் எப்படி பரவியது என்பது குறித்து ஆண்ட்ரூ ஸ்மித், 'பாப்டு கல்சர்’ என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த நூலில் பாப்கார்ன் வரலாறும், சமகால உண்மைகளும் மிகத்தெளிவாக எடுத்துக்காட்டப்படுகின்றன.
இன்றுள்ள மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் பற்றி இவ்வளவு கவலைப்படுகிறோம். ஆனால், ஐரோப்பிய நாடுகளில் 'கோல்டு க்ளாஸ் ஸீட்டிங்’ என்ற பெயரில் தலையணை, போர்வை, இலவச பாப்கார்ன் மற்றும் ஒயின்கள் வழங்கப்படும் ஆடம்பர திரையரங்குகள் இப்போது அறிமுகமாகி வருகின்றன.
என்ன வகையான படம் என்பதற்கு ஏற்றார்போல உணவு வகைகளை வழங்க இருக்கிறோம் என்றும் கூறுகிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய சினிமா அரங்குகளில் இதுபோன்ற உணவுடன் கூடிய படுக்கைகள் கொண்ட வசதி உருவாக்கப்பட்டுவிடும்.
முன்பு கிராமங்களில் உள்ள டூரிங் டாக்கீஸ்களில் இரவு காட்சிக்கு வருபவர்கள் பசியோடு இருப்பார்களே என, அருகிலேயே ஒரு எளிய பரோட்டா கடையை வைத்திருப்பார்கள். தியேட்டரின் ஒரு வாசல் வழியாக ஹோட்டலுக்குள் போய்விடலாம். அதை நகரவாசிகள், 'இது எல்லாம் சினிமா தியேட்டரா?’ என்று கேலிசெய்தார்கள். இன்றைக்கு சிறிய நகரங்களில் படம் முடியும் வரை வாயை மெல்லும் பழக்கம் இன்னமும் வரவில்லை.
சினிமா தியேட்டர்கள், ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையம், ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் விற்கப்படும் ஸ்நாக்ஸ், கூல்டிரிங்ஸ், தண்ணீர் பாட்டில், உணவு வகைகள் குறித்த புகார்களைத் தெரிவிக்க நுகர்வோர் அமைப்பு 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி (044-66334346) எண் கொடுத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி நுகர்வோர் தங்களின் புகார்களைப் பதிவு செய்தல் அவசியம்.
ஜெர்மனியில் இப்போது பாப்கார்ன் கலாசாரத்துக்கு எதிராக, 'தியேட்டரில் பாப்கார்ன் விற்க மாட்டோம்’ என்ற ஓர் இயக்கத்தை உருவாக்கியிருக்கின்றனர். குறிப்பாக, கினோ சினிமா என்ற அரங்கில் பாப்கார்ன் விற்கப்படுவது இல்லை என்ற அறிவிப்பு முகப்பிலே வைக்கப்பட்டிருக்கிறது.
வியாபார தந்திரங்களில் மயங்கி... சினிமா மயக்கத்தில் கிரங்கி... பாப்கார்ன் போன்ற விஷயங்களுக்கு அடிமை ஆவது உடல் ரீதியாக பெரிய உபாதையை உருவாக்கிவிடும் என்பதே பெரும்பாலானவர்கள் கருத்து!

உணவு யுத்தம்! - 9

 தியேட்டரும் பாப்கார்னும்!

திருவிளையாடல் பார்த்திருக்கிறீர்கள்தானே! அதில் தருமி சிவனிடம் நிறைய கேள்விகள் கேட்பார். தருமி கேட்கத் தவறிய கேள்விகள் எப்போதும் இருக்கின்றன. அப்படியான சில கேள்விகளாக இதைச் சொல்லலாம்.
பிரிக்க முடியாதது என்னவோ?
தியேட்டரும் பாப்கார்னும்!
சேர்ந்தே இருப்பது?
பாப்கார்னும் கூல்டிரிங்ஸும்!
சேராமல் இருப்பது?
வயிறும் ஃபாஸ்ட் ஃபுட்டும்!
சொல்லக் கூடாதது?
பாப்கார்ன் விலை!
சொல்லக் கூடியது?
காசு கொடுத்து வயிற்றுவலியை வாங்கிய கதை!
பாப்கார்ன் என்பது?
பகல் கொள்ளை!
சினிமா தியேட்டரில் பாப்கார்ன் விற்பது எதனால்?
படம் நல்லா இல்லை என்பதை மறக்கடிக்க!
தருமியைப்போல நாம் எப்போதும் கேள்விகளை மட்டுமே வைத்திருக்கிறோம். யாரிடம் பதில் கேட்பது எனத் தெரியவில்லை. இன்று உணவின் பெயரால் பகிரங்கக் கொள்ளை நடைபெறும் முக்கிய இடம் திரையரங்கம்.
சென்னை ஷாப்பிங் மாலில் உள்ள மல்டிஃப்ளெக்ஸ் திரையரங்கு ஒன்றுக்குப் படம் பார்க்கப் போயிருந்தேன். டிக்கெட் கட்டணம் 120, உள்ளே போய் உட்கார்ந்த உடன் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டு ஊதா நிற சட்டை அணிந்த ஓர் இளைஞன் இரண்டு மெனு கார்டுகளை நீட்டினார்.
பீட்சா, வெஜ் ரோல், பர்கர், ஃபிரெஞ்ச் ஃபிரைஸ், பேல்பூரி, பானிபூரி, நக்கட்ஸ் என முப்பது, நாற்பது உணவு வகைகள். தவறிப்போய் ஏதாவது ஹோட்டலுக்குள் நுழைந்துவிட்டேனோ என நினைத்தபடியே திரும்பிப் பார்த்தேன்.
அருகில் உட்கார்ந்திருந்த ஒரு குடும்பம் கடகடவென ஆர்டர் கொடுக்க ஆரம்பித்தனர். படம் துவங்கிய அரை மணி நேரத்தில் பெரிய தட்டு நிறைய சான்ட்விச், பீட்சா, வெஜ் ரோல் என வந்து சேர்ந்தது. கூடவே, இரண்டு அரை லிட்டர் கூல்டிரிங்ஸ் பாட்டில், டைனிங் டேபிள் இல்லாத குறை மட்டுமே. அவர்கள் இடைவேளை வரை சாப்பிட்டுக்கொண்டே படம் பார்த்தார்கள். பக்கத்தில் உட்கார்ந்திருந்த இன்னொருவர் அவர்கள் சாப்பிடுவதை எச்சில் ஒழுகப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
சினிமா தியேட்டரா அல்லது ரெஸ்டாரன்ட் உள்ளே சினிமா போடுகிறார்களா எனத் தெரியாமல் தடுமாறிப்போனேன். இடைவேளை விடப்பட்டது. வெளியே பாப்கார்ன் வாங்க நீண்ட வரிசை. ஒரு பாப்கார்ன் விலை ரூ.80-ல் துவங்கி 240 வரை லார்ஜ் சைஸ், எக்செல், டபுள் எக்செல் என விரிந்துகொண்டே போனது.
அரை கிலோ அளவு பாப்கார்ன் பாக்கெட் ஒன்றை சுமந்துகொண்டு போனது அந்தக் குடும்பம். கூடவே நான்கு குளிர்பானங்கள், சமோசா, பப்ஸ், சாஷ் பாக்கெட்கள், சாக்லேட் மபின், இத்யாதிகள்.
ஒரு காபி குடிக்கலாம் என்று கவுன்ட்டரில் இருந்த பெண்ணிடம் கேட்டேன். 75 ரூபாய் என்றார். என்ன காபி எனக் கேட்டபோது ரெடிமேட் பால் படவுரைக் கொண்டு தயாரிக்கப்படும் மெஷின் காபி எனச் சொன்னார். குடிக்க முடியாத குமட்டல் காபியின் விலை 75 என்பதால் அது வேண்டாம் எனச் சொல்லிவிட்டு, தண்ணீர் பாட்டில் தாருங்கள் என்றேன். ஒரு பாட்டில் தண்ணீர் 50 ரூபாய் என்றார். வெளியே 10 ரூபாய்தானே என்றபோது, தியேட்டரில் 50 ரூபாய்தான் என்றார். இதைப்பற்றிப் புகார் தெரிவிக்க விரும்புகிறேன் என்றேன். தியேட்டர் மேனேஜரிடம் போய்ச் சொல்லுங்கள். இவை தனியார் கடைகள். எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றார் அந்த விற்பனை பெண்.
பொதுக் குடிநீர் எங்கே இருக்கிறது எனக் கேட்டேன். அப்படி ஒன்று கிடையாது. கடையில் விற்பதை மட்டுமே வாங்க வேண்டும் என்றார். தினமும் பல்லாயிரம் பேர் வந்துபோகிற அரங்கில் குடிநீர் கிடையாது. இதில் நாமாக வீட்டில் இருந்து எந்த உணவுப்பொருளையும் கொண்டுபோய்விடக் கூடாது என்பதற்காக மெட்டல் டிடெக்டர் சகிதமாக ஒரு கும்பல் நுழைவாயிலில் நம்மை நிறுத்திவைத்துத் தடவி தடவி சோதிக்கின்றனர்.
இந்தச் சோதனையில் ஒரு பெரியவரிடம் திருப்பதி லட்டு சிக்கிவிட்டது. கோயிலுக்குப் போய்விட்டு வந்தவர், அப்படியே சினிமா பார்க்க நுழைந்திருக்கிறார். அதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். சாமி பிரசாதம் என அவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அனுமதிக்கவே இல்லை. லட்டை தனியே எடுத்து அவருக்கு ஒரு ரசீது சீட்டு போட்டுக் கொடுத்து, படம் முடியும்போது பெற்றுக்கொள்ளுங்கள் என்று உள்ளேவிட்டார்கள். இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலகத்தில்கூட இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடி இருக்குமா எனத் தெரியாது.
சினிமா தியேட்டர் என்பது படம் பார்க்கும் இடம் இல்லை. அது ஒரு சந்தைக்கூடம். அங்கே படமும் பார்க்கலாம் என்பதே இன்றைய நிஜம். இலை போட்டு முழு சாப்பாடு போடவில்லை. அதுவும் விரைவில் நடந்தேறிவிடக் கூடும்.
ஒரு நாடகம் பார்க்கும்போதோ, இசை நிகழ்ச்சி பார்க்கும்போதோ இப்படி வாயில் எதையாவது மென்றுகொண்டே ரசிப்பதில்லையே... சினிமா பார்க்கும்போது மட்டும் ஏன் எதையாவது மென்றுகொண்டேயிருக்க ஆசைப்படுகிறோம்?
சர்க்கஸ் நிகழ்ச்சியில் ஒரு நிகழ்வுக்கும் மற்றொரு நிகழ்வுக்கும் இடையில் சற்று இடைவெளி இருக்கும். அதை நிரப்புவதற்கே பாப்கார்ன் விற்பனை உதவியது. அந்தப் பழக்கம்தான் சினிமா பார்க்கும்போதும் தொடர்கிறது என்கிறார் உணவியல் அறிஞர் மெக்ரெயன்.
எனக்கென்னவோ நம் ஊரில் எந்த இடத்திலும் எதையும சாப்பிடுவதற்கு ஒரு காரணமும் தேவை இல்லை என்றே தோன்றுகிறது. கண்டதையும் சாப்பிடத் தயாராக இருப்பதுதானே நமது பண்பாடு. இல்லாவிட்டால் ராத்திரி ஒன்றரை மணிக்கு மிட்நைட் ஹோட்டலில் இவ்வளவு கூட்டம் அலைமோதுமா என்ன?
ஒருமுறை சாலையோர உணவகம் ஒன்றுக்குச் சாப்பிடப் போயிருந்தேன். கடையை எடுத்துவைத்துவிட்டார்கள். சூடாக இருந்த கல்லில் தோசை போட்டுத் தருகிறேன்... உட்காருங்கள் என்றார் உரிமையாளர். பரிமாறுகிறவன் எரிச்சலான குரலில் சொன்னான். 'என்னா சார் மனுசங்க... விடிஞ்சு எழுந்ததில் இருந்து தூங்கப் போறவரைக்கும் எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. நல்லவேளை தூக்கத்துல சாப்பிடுறது இல்லை. இப்படியே போனா, உலகம் தாங்காது. ஒருத்தருக்கும் வாயைக் கட்டணும்னு நினைப்பே கிடையாது.’
அவன் சொன்ன விதம் சிரிப்பாக வந்தது. ஆனால், சொன்ன விஷயம் உண்மையானது. சாவு வீட்டுக்குப் போனால்கூட நமக்கு வகை வகையான சாப்பாடு வேண்டியிருக்கிறது. ஏன் இப்படி நாக்கின் அடிமைகளாக மாறியிருக்கிறோம். இந்தப் பழக்கத்தின் ஒரு பகுதிதான் தியேட்டருக்குள் அள்ளி அப்பிக்கொள்வது.
எனது பள்ளி வயதில் சினிமா தியேட்டரில் இடைவேளையின்போது முறுக்கு, கடலை மிட்டாய் விற்பவர்களைக் கண்டிருக்கிறேன். அவர்களின் குரலே வசீகரமாக இருக்கும். முறுக்கின் விலை 5 பைசா, கடலை மிட்டாய் 5 பைசா. தவிர தேங்காய் பர்பி, வேர்க்கடலை, பால் ஐஸ், சேமியா ஐஸ் விற்பார்கள். சோடா கலர் விற்பதும் உண்டு. சினிமா பார்க்க வருபவர்களில் பாதி பேர் எதுவும் வாங்கிச் சாப்பிட மாட்டார்கள். அது கௌரவக் குறைச்சல் என நினைப்பார்கள்.
பாப்கார்ன் விற்பது 80-களின் பிற்பகுதியில்தான் திரையரங்குகளில் துவங்கியது. அப்போதும்கூட சோளப்பொரியை மனுசன் தின்பானா என யாரும் வாங்க மாட்டார்கள். இன்றைக்கு பாப்கார்ன் விற்கப்படாத தியேட்டர்களே இல்லை. ஒரு ஆண்டுக்கு 1,235 கோடி ரூபாய்களுக்கு இந்தியாவில் பாப்கார்ன் விற்பனை ஆகிறது. இதில் 75 சதவிகிதம் சினிமா தியேட்டர்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
தியேட்டரில் எப்படி பாப்கார்ன் முக்கிய இடம் பிடித்தது... யார் இதை அறிமுகம் செய்து வைத்தவர்கள்? இந்திய சினிமா தியேட்டர்களில் பாப்கார்ன் விற்க துவங்கியது அமெரிக்கப் பாதிப்பில்தான். 1929-ல் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியிருந்த அமெரிக்காவில், உணவின் விலை மிக அதிகமாக இருந்தது. ஆகவே, பசியைத் தாங்கிக்கொள்ள வீதியில் மலிவு விலையில் விற்கப்படும் பாப்கார்னை வாங்கி, தியேட்டருக்குள் கொண்டுபோய் ரகசியமாக சாப்பிட ஆரம்பித்தனர். வீதிகளில் தள்ளுவண்டியில் விற்கப்படும் பாப்கார்ன் விற்பனை அதிகமாகியது.
பொருளாதாரச் சரிவில் இருந்த தியேட்டர்கள் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்த பாப்கார்ன் விற்பனையை தியேட்டரினுள் அனுமதித்தன. குறைந்த விலையில் நிறைய பாப்கார்ன் கிடைக்கிறது என்பதால், மக்களும் பசியைப் போக்கியபடி சினிமா பார்க்கத் துவங்கினர். ஒருவகையில் இது ஒரு பஞ்ச காலத்து உணவுபோலத்தான் அறிமுகமானது. 1927-ம் வருடம் நியூயார்கின் ரோஸ் தியேட்டரில்தான் பாப்கார்னின் சினிமா பிரவேசம் அறிமுகமானது.
அதற்கு முன்பு வரை சினிமா தியேட்டர் என்பது உயர்குடியினர் வரும் இடம் என்பதால், அங்கே மலிவான உணவுப்பொருட்கள் விற்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்த மாற்றமே பாப்கார்ன் தியேட்டருக்குள் நுழைந்த கதை.
இதுபோலவே இரண்டாம் உலகப்போரின்போது சர்க்கரைக்கு ரேஷன் முறை கொண்டுவரப்பட்டது. ஆகவே, இனிப்பு மிட்டாய்கள் தயாரிப்பது குறைந்துபோனது. இந்தச் சந்தையைத் தனதாக்கிக் கொண்டது பாப்கார்ன். யுத்தகாலத்தில் அதன் விற்பனை ஆறு மடங்கு அதிகமானது.
பாப்கார்ன் எனப்படுவது ஒரு சோள ரகம். அதன் பூர்வீகம் மெக்சிகோ. அங்கு வாழ்ந்துவந்த அஸ்டெக் பழங்குடி மக்கள் மக்காச்சோளத்தை உணவாகக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். சோளக்கதிர்களை மாலையாகக் கட்டிக்கொண்டு ஆடுவதும் அவர்களது வழக்கம். ஸ்பானிய காலனிய மயமாக்கம் காரணமாக அஸ்டெக் பழங்குடியினர்கள் அழித்து ஒழிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்த உணவு முறைகளில் சில காலனிய நாடுகளுக்குப் பரவத் துவங்கின. அப்படிப் பரவியதுதான் மக்காச்சோளமும்.