சென்னை : மழைநீர் வடிகால் திட்டம் போல் சூரியஒளி மின்சார திட்டத்தையும்
மக்கள் இயக்கமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு மாவட்ட
கலெக்டர்கள் துணையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு
சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று
தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
தமிழக
அரசு வெளிப்படையான, திறமையான, பொறுப்பான நிர்வாகத்தை அளிக்க முழுமையாக
தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
தமிழக மக்கள் பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வருவதோடு மகிழ்ச்சியாகவும்
இருக்க வேண்டும். இதற்காக தொலைநோக்கு திட்டம் ஒன்றை நான் ஏற்கனவே
வெளியிட்டுள்ளேன். இந்த தொலைநோக்கு திட்டத்தை நிறைவேற்ற நீங்கள் அனைவரும்
ஒத்துழைக்க வேண்டும். சிறப்பான நிர்வாகத்தின் மூலமே இது சாத்தியமாகும்.
தமிழகத்தில்
சட்டம் ஒழுங்கு நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இடதுசாரி தீவிரவாதம்
தமிழகத்தில் எங்கும் இல்லை. மத அடிப்படைவாதம் தலைதூக்க அனுமதி இல்லை. சாதி
கலவரங்கள் விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. நில
அபகரிப்பு தொடர்பாக 1627 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸீ835.94 கோடி
மதிப்பிலான சொத்துகள் உரியவர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.
மீன்
பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தாக்குவது
இன்னமும் தொடர்கிறது. என்றாலும் தமிழக அரசு கொடுத்த வலுவான எதிர்ப்பு
காரணமாக தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளது. தமிழகத்தில், சட்டவிரோதமாக
வெட்டி எடுக்கப்பட்ட ஸீ4 ஆயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக கிரானைட் தொழில் செய்த நிறுவனங்கள் மீது
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களின் ஸீ9,783 கோடி
சொத்துக்களை முடக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொது
விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கி வரும் ஒரே
மாநிலம் தமிழகம். இதற்காக ஆண்டுதோறும் ஸீ3,300 கோடியை மாநில அரசு
செலவழித்து வருகிறது. பொது விநியோக திட்டத்துக்கான அரிசியை மாநில எல்லைகள்
வழியாக கடத்துவதை தடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு மாவட்ட
நிர்வாகத்திடம் உள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து போலி மதுபானங்கள்
தமிழகத்துக்கு வருவதும் தடுக்கப்பட வேண்டும். சாலை பாதுகாப்பு
மேம்படுத்தப்பட வேண்டும். விபத்து காரணமாக ஏற்படும் உயிரிழப்பை தடுக்க
நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பொது விநியோக திட்டத்தின் வாயிலாக
மானிய விலையில் பருப்பு, எண்ணெய் போன்றவை வழங்கப்படுகிறது. அத்தியாவசிய
பொருட்கள் கடத்தலை கடுமையாக கண்காணிக்க வேண்டும். போலி ரேஷன் கார்டுகள்
களையப்படுவதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். முழுமையான மருத்துவ
காப்பீடு திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு
நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏழை என்பதற்காக மருத்துவ சிகிச்சை
கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்படாத அளவுக்கு இந்த திட்டத்தை சிறப்பாக
செயல்படுத்த வேண்டும்.
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு 2023 என்ற
தொலைநோக்கு திட்டம் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு தொழில்
துறையினரிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக தேசிய அளவிலும்,
சர்வதேச அளவிலும் முதலீட்டாளர்களிடம் ஒருவித எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தொலைநோக்கு திட்டத்தில் வேளாண், மீன் துறை, கால்நடை பராமரிப்பு துறைகளுக்கு
அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 2023 தொலைநோக்கு திட்டம் மூலம்
மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சியை 11 சதவீதமாக உயர்த்த அரசு
திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு
காய்ச்சல் பரவியது. டெங்குவை கட்டுப்படுத்த ஏற்கனவே அரசு பல வழிகாட்டிகளை
வெளியிட்டுள்ளது. இத்தகைய நோய் பரவுவதை தடுப்பது முற்றிலும் மாவட்ட
நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது. எனவே இது தொடர்பாக பொதுமக்களிடம்
விழிப்புணர்வை ஏற்படுத்தி உடனுக்குடன் மருத்துவ உதவிகள் கொடுத்து டெங்கு
நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழந்தைகள் பள்ளி
படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க ரொக்க பரிசு திட்டம் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. பாடப் புத்தகம்,
நோட்டு, பை, சீருடை, ஜியாமிட்ரி பாக்ஸ், அட்லஸ், லேப்டாப், காலனி போன்றவை
இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகர் மேம்பாட்டுக்காக
கடந்த 2011,12 மற்றும் 2012,13ம் ஆண்டுகளில் 1,000 கோடியும், மற்ற
மாநகராட்சிகளுக்கு 1,500 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. சாலைகள்,
தெருவிளக்குகள், குடிநீர், கழிவுநீர், சானிடேஷன் மற்றும் திடக்கழிவு
மேலாண்மை திட்ட மேம்பாட்டுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்
திறந்த வெளியில் மலம் கழிப்பதை 2015க்குள் முற்றிலும் தடுக்க 92.43
கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர்கள் கவனம் செலுத்தி,
திட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும்.
2015ம் ஆண்டுக்குள் சூரிய
சக்தி வாயிலாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் திட்டம் போல் சூரியஒளி மின்சார திட்டத்தையும் மக்கள்
இயக்கமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர்கள் துணையாக
இருக்க வேண்டும். தொழில்முனைவோரை ஊக்குவிக்க நீட்ஸ் என்ற புது திட்டம்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக பட்ஜெட்டில் 100 கோடி
ஒதுக்கப்பட்டு, முதல் தவணையாக ஏற்கனவே 1.80 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்
சட்டம் , ஒழுங்கு சிறப்பாக உள்ளதால், இதை பயன்படுத்தி அனைத்து திட்டங்களை
யும் திறம்பட செய்ய வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.