Feb 10, 2015

இலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி?…..1,2,3–நிதின் கோகலே –

யுத்தத்தின் கடைசிகட்ட நாட்களில் பிரபாகரன் தளபதி ஜெயத்துடன் நடந்த சந்திப்பு பற்றி கசிந்த ஓர் சுவாரசியமான தகல்..!!

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் தரப்பில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றிய தகவல்கள் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகின்றன.
2009-ம் ஆண்டு மே மாதம் ஆரம்பத்தில் இருந்து சிறிய பகுதியான முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் இயக்கம் முடங்கிய நிலையில், இலங்கை ராணுவம் அவர்களை முற்றுகையிட்டிருந்தது. மே 2-வது வாரத்தில், அந்த முற்றுகையை உடைத்துக் கொண்டு பிரபாகரனை வெளியே கொண்டுசெல்ல சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த முயற்சிகளில், மே மாதம் 11-ம் தேதி இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு குழு வெற்றிகரமாக ராணுவ முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியே சென்றது. ஆனால், அந்தக் குழுவில் பிரபாகரன் இல்லை.
அந்த வழியில் பிரபாகரனை அழைத்துச் செல்வது சாத்தியமா என்பதை பார்க்க அனுப்பி வைக்கப்பட்ட முன்னோடி குழு அது. சுமார் 30 பேரடிங்கிய அந்தக் குழு முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியே சென்றபின், அதில் இருந்த சிலர் மீண்டும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு திரும்பி வந்தனர் – அதே பாதையில் பிரபாகரனையும், வேறு சிலரையும் அழைத்துச் செல்வதற்காக.
ஆனால், 11-ம் தேதி இரவு நடந்த இந்த ஊடுருவலை தெரிந்துகொண்ட இலங்கை ராணுவம், அந்த லூப்-ஹோலை சரிசெய்து பாதுகாப்பை பலப்படுத்தி விட்டது. இலங்கை ராணுவத்தின் 59-வது படைப்பிரிவு நிறுத்தப்பட்டு இருந்த இடத்திலேயே இந்த சம்பவம் நடந்தது.
முதல் குழுவில் சென்று திரும்பிய ஆட்கள், மீண்டும் 12-ம் தேதி இரவு பிரபாகரனையும் வேறு சிலரையும் அழைத்துக்கொண்டு 59-வது படைப்பிரிவு முற்றுகையிட்டிருந்த இடத்தை அடைந்தபோது, இவர்களால் தப்பிச் செல்ல முடியவில்லை. சுமார் ஒன்றரை மணி நேர முயற்சியின்பின் மீண்டும் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பிரபாகரனின் மறைவிடத்துக்கு திரும்பினர்.
அப்போது அந்தக் குழுவில் சென்றிருந்த புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், அதன்பின் ராணுவத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, சமீபத்தில் விடுவிக்கப்பட்டார். அவருடன் பேசியபோது, இறுதி யுத்தத்தின் இறுதி நாள் ஒன்றில் பிரபாகரனை மீண்டும் அவர் சந்தித்தது பற்றி அறிய முடிந்தது.
‘இறுதி நாள் ஒன்றில்’ என்று நாம் குறிப்பிடுவதன் காரணம், மீண்டும் பிரபாகரனை சந்தித்த தேதியை அவரால் சரியாக ஞாபகப்படுத்தி கூற முடியவில்லை. மிகவும் பதட்டமும் பரபரப்புமாக இருந்த அந்த இறுதி நாட்களில் சூரியன் உதிக்கும்போது அன்று என்ன தேதி என்பது பலருக்கு தெரியாமல் இருந்தது என்றார் அவர்.
அவர் கூறிய தகவல்களில் நடந்த சம்பவங்களை வைத்து பார்த்தால், இவர் மே மாதம் 14-ம் தேதி, அல்லது 15-ம் தேதி பிரபாகரனை சந்தித்து இருக்கலாம்.
எமக்கு தகவல் தெரிவித்தவர், விடுதலைப் புலிகளின் தளபதி ஜெயம் (உயிரிழந்து விட்டார்) தலைமையில் இருந்த குழுவினருடன் இருந்தார். இவர்கள் இருந்த பகுதிக்கு மதியம் 3 மணியளவில் திடீரென நாலைந்து பேருடன் பிரபாகரன் வந்தார்.
மிகவும் சோர்வடைந்த முகத்துடன் வந்த பிரபாகரன், ஜெயத்துடன் சுமார் 5 நிமிடங்கள் பேசினார்.
அப்போது ஜெயம், “நீங்கள் இங்கே நிற்காதீர்கள். இங்கிருந்து போய் விடுங்கள் ராணுவத்தின் ஸ்னைப்பர் அணியினர் உங்கள்மீது குறி வைக்கலாம்” என்று சொன்னார்.
அதன்பின் மேலும் ஓரிரு நிமிடங்கள் அங்கே நின்றிருந்த பிரபாகரன், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
அதன்பின், இரவு 7 மணிக்கு பிரபாகரனிடம் இருந்து ஒரு ஆள் வந்தார். ஜெயத்தையும், எமக்கு தற்போது தகவல் தெரிவித்தவரையும் பிரபாகரன் அழைத்துவர சொன்னதாக சொன்னார். இருவரும் சென்றனர்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் பிரபாகரனுக்காக தற்காலிகமாக ஒரு இருப்பிடம் தயார் செய்யப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் பாதுகாப்பு பலமாகவே இருந்தது. உள்ளே பிரபாகரன் இருந்த நிலை இவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு ஒரு மருத்துவர் செலைன் (Saline) ஏற்றிக்கொண்டு இருந்தார்.
மருத்துவ ரீதியாக சில காம்பிளிகேஷன்கள் இருந்த பிரபாகரனுக்கு இரவு பகல் ஓயாத சிந்தனை காரணமாக லேசாக மயக்கம் ஏற்பட்டதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்தார்.
செலைன் மூலம் ஏற்றப்பட்டு கொண்டிருந்த நிலையில், படுத்திருந்தபடியே இவர்களுடன் சுமார் 15 நிமிடங்கள் பேசினார் பிரபாகரன். வெளியே என்ன நடக்கிறது என விசாரித்தார்.
அப்போது ஒருவர் வந்து பிரபாகரனை சந்திக்க ஜவான் (விடுதலைப் புலிகளின் ‘புலிகளின் குரல்’ பெறுப்பாளராக இருந்தவர்) வந்திருப்பதாக சொன்னார். “இப்போது வேண்டாம்” என சைகையாலேயே பதில் கூறினார் பிரபாகரன்.
“அமெரிக்க அதிகாரிகளுடன் நடேசன் (விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்) தொடர்பில் இருக்கிறார். அமெரிக்கா தலையிடும் போல இருக்கிறது. நடேசனிடம் இருந்து நல்ல தகவலை எதிர்பார்க்கிறேன்” என்றார் பிரபாகரன்.
அதன்பின் ஜெயத்திடம் ஆயுதங்கள் பற்றி விசாரித்தார். கையிருப்பில் அதிகளவு ஆயுதங்கள் இல்லை என தெரிவித்த ஜெயம், இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்றார்.
இதைக் கேட்டவுடன் பிரபாகரன் ஆச்சரியப்படும் விதமாக சிரித்தார். “கழுதையிடம் ஆயுதங்களுக்கு சொல்லுவோமா?” என சிரிப்புடன் கேட்டார். அவர் ‘கழுதை’ என்று சொன்னது, ஒருவரின் பட்டப்பெயர்.
விடுதலைப் புலிகளின் ஆயுத சப்ளைக்கு ஒருகாலத்தில் பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதனை (கே.பி.) சில சமயங்களில் ‘கழுதை’ என்று குறிப்பிடுவார் பிரபாகரன். (கழுதை சுமை ஏற்றி வருவதுபோல, ஆயுதங்களை கொண்டு வருவார் என்பதற்காக)
இதைக் கேட்டு மற்றவர்களும் சிரித்தார்கள். ஆனாலும், அங்கே ஒரு கனமான இறுக்கம் நிலவியது. எப்போதும் துடிதுடிப்புடன் காணப்படும் பிரபாகரன், மிகவும் சோர்ந்த நிலையிலேயே காணப்பட்டார். அவரது குரல்கூட மிக பலவீனமான விதத்திலேயே இருந்தது.
இந்த நிலையில் எமக்கு தற்போது தகவல் தெரிவித்தவர் தயங்கியபடி, “இங்குள்ள மக்கள் மத்தியில் சலசலப்பு இருக்கிறது. ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்ல பலரும் முயற்சிக்கிறார்கள்.
அதை தடுப்பது சரி. ஆனால், தப்பிச் செல்ல முயல்பவர்களுக்கு தண்டனை கொடுக்கிறோம். அது சரியல்ல. மக்கள் எம்மை வெறுக்க தொடங்குவார்கள்” என்றார்.
இவரை தொடர்ந்து பேச விடாதபடி கையால் பிடித்து தடுத்தார் ஜெயம் (அடுத்த பாகத்தில் நிறைவுபெறும்).

25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசை, ஆட்டிப் படைத்த பிரபாகரன்; “இலங்கை இறுதி யுத்தம்”: இலங்கை இராணுவம் வென்றது எப்படி? (PART-1)

ltte.piraba-death-001
இலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி?…..
பிரபாகரனின் இறுதி நாட்கள் என்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் ஆங்கில நூலின் தமிழாக்கத்தின் ஒரு பகுதி

இறுதி நாள் -19 மே 2009…
இறுக்கமான முகத்துடன் விநாயகமூர்த்தி முரளிதரன் குனிந்து பார்த்தார். உடலைக் கவனித்தார். பெல்ட்டைப் பார்த்தார். அடையாள அட்டையை நோக்கினார். துப்பாக்கியை ஆராய்ந்தார். அனைத்தும் அவரது முன்னாள் தலைவருடையவை.சில கணங்களுக்குப் பின் உலகுக்கு அறிவித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டார்.

கர்ணல் கருணா என்றழைக்கப்படும் முரளிதரனுக்கு அது ஒரு சோகமான தருணம். ஒரு காலத்தில் பிரபாகரனின் மெய்க்காப்பாளராக இருந்த கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பின் அடிமட்டத்தில் சேர்ந்து சிறிது சிறிதாக உயர்ந்து அந்த அமைப்பின் மிகவும் சிறந்த தளபதிகளில் ஒருவராக மிகவும் நம்பத்தகுந்தவராக ஆனார். அதே அமைப்பிலிருந்து 2004 இல் விலகினார்.
பின்னர் இலங்கை அரசில் ஓர் அமைச்சராக இருந்த அவர், போர் நிகழ்ந்த வடகிழக்கு இலங்கையில் சிறுமண் திட்டுக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார்; உலகிலேயே மிகவும் அபாயகரமான தீவிரவாதத் தலைவர் என்று கருதப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டார் என்று அரசு அறிவித்தது உண்மை தான் என்பதை உலகுக்குப் பறைசாற்ற..
அடிமட்டத்திலிருந்து ஒரு கெரில்லாப் படையை உருவாக்கி, அதில் வலுவான ஒரு தரைப்படை, திறமையான ஒரு கடற்படை, அப்போது தான் முளைத்துள்ள ஒரு விமானப்படை என அனைத்தையும் கொண்டிருந்தார் பிரபாகரன்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியைத் தன் கைக்குள் வைத்திருந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசை ஆட்டிப்படைத்து வந்தார். அப்படிப்பட்ட வலுவான ஒரு தலைவருக்கு ஏற்பட்டது மிகச் சாதாரணமான ஒரு முடிவு. ஆனால் இலங்கை இராணுவத்துக்கு அது அவ்வளவு எளிதான ஒரு வெற்றியாக இருக்கவில்லை.
33 மாதங்கள் கடுமையான, தொடர்ச்சியான, தீவிரமான போராட்டத்துக்குப் பிறகே, பிரபாகரனை ஒரு சதுப்புநிலக் காட்டுப் பகுதிக்குள் குறுக்கி கொல்ல முடிந்தது.
பிரபாகரன் கொல்லப்பட்டு இரு நாட்களுக்குப் பின் இந்தப் போரை வழி நடத்திய இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா என்னிடம் பேசினார். “பிரபாகரனும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் கடைசி நேரத்தில் இராணுவத்தை ஏமாற்றி, தப்ப முயற்சி செய்து, ஒரு கடுமையான தாக்குதலை நிகழ்த்தினராம்”. அவரது அலுவலகத்தில் நடந்த நேர்முகத்தின் போது பிரபாகரனின் கடைசி சிலமணிகளைப் பற்றி விளக்கிய பொன்சேகா இவ்வாறு கூறினார்.
“18 மே இரவு, 19 காலை, விடுதலைப் புலிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து கொண்டனர். நந்திக்கடல் காயல் பகுதியில் எங்களது முதல் பாதுகாப்பு வளையத்தை தாக்கி உடைத்து வெளியேறினர். இந்த மூன்று குழுக்களுக்கும் தலைமை தாங்கியவர்கள் ஜெயம், பொட்டுஅம்மான், சூசை ஆகியோர்.
ஆனால் முதல் வளையத்துக்குப் பின் இரண்டாவது மூன்றாவது வளையங்கள் இருக்கும் என்பதை அவர்கள் கணிக்கத் தவறி விட்டனர்.
பிரபாகரனும் அவரது மெய்க்காப்பாளர்களும் தப்பித்து விட்டதாக நினைத்தனர். ஆனால் உண்மையில் 250 பேர் அடங்கிய புலிகள் எங்களது முதலாம், இரண்டாம் பாதுகாப்பு வளையங்களுக்குள் நன்றாகச் சிக்கிக் கொண்டனர்.
அன்று இரவு நடந்த கடுமையான போருக்குப் பின், கிட்டத்தட்ட அனைத்துத் தலைவர்களுமே கொல்லப்பட்டனர். 19 காலை, பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
ஜெனரல் பொன்சேகா நிதானமாக, சுருக்கமாகச் சொன்ன இது அனைத்துமே தொலைக்காட்சி வாசகர்களுக்கானது… இந்தியாவின் 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சி என்.டி.டி.விக்காக நான் அவரைப் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தேன். அவரது பேச்சில் 18,19 மே மாதத்தில் நடந்த முழு விவரமும் வெளிவரவில்லை. பின்னர் பலருடன் பேசியதில் அந்த இரு நாள்களில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்டேன்.
பொன்சேகா சொன்னது போல, இறுதிப்போர் நடந்தது மிகக் குறுகிய மண் திட்டில், கிழக்கில் இந்தியப் பெருங்கடலாலும் மேற்கில் நந்திக்கடல் காயலாலும் சூழப்பட்ட பகுதி. கிழக்கில் கடற்கரை. மேற்கில் நீர் நிரம்பி இருக்கும் சதுப்பு நிலக் காடுகள். இடையில் மண் திட்டு.அந்தப் பகுதியில் ஒரு முக்கிய சாலை இருந்தது. வடமேற்கு, தென்கிழக்கு அச்சில் காயல்களை நோக்கிச் சாய்ந்தபடி செல்லும் ஏ- 35 பரந்தன்- முல்லைத்தீவு நெடுஞ்சாலை, காயலை நெருங்குவதற்கு முன் இயற்கைத் தடுப்பரண்கள், மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட தடுப்புக்கள் ஆகியவற்றைத் தாண்டித்தான் செல்ல முடியும்.
விடுதலைப் புலிகளின் கடைசி நிலத்துண்டை அணுக இராணுவம் இரு தாழ்ந்த பாலங்கள், ஒரு விரிந்த கடற்கடை, புலிகளால் ஏற்படுத்தப்பட்ட பல மேடுகள், பள்ளங்கள் ஆகியவற்றைத் தாண்டிச் செல்லவேண்டும்.
விடுதலைப் புலிகளின் தலைமை மீதான இந்தக் கடைசி முற்றுகையைச் செயற்படுத்த ஜெனரல் பொன்சேகா மூன்று இராணுவப்படைப்பிரிவுகள், ஒரு சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றை இறக்கியிருந்தார்.
53 வது டிவிஷனுக்கு மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தலைமை வகித்தார். கர்ணல் ஜி.வி. ரவிப்பிரியா தலைமையிலான டாஸ்க் போர்ஸ் 8 க்கும் அவரே பொறுப்பு. கடந்த 33 மாதங்களாக நான்காம் ஈழப்போரில் பெரும் பங்கு ஆற்றிய பிரிகேடியர் ஷவீந்திர சில்வாவின் 58வது டிவிஷன் இப்போதும் முன்செல்லும் படையாக இருந்தது.
இறுதியில் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தலைமையிலான 59 வது டிவிஷன் வட்டுவாகல் தரைப்பாலத்துக்குத் தெற்கே தடுப்பு விய+கம் அமைந்திருந்தது. வடக்கிலிருந்து மற்ற இரு படைப்பிரிவுகளும் தாக்குதலைத் தொடங்கியிருந்தன.
இந்த மாபெரும் படைக்குவியலுக்கு முன், பிரபாகரனும் விடுதலைப் புலிகளின் தலைமையும் முற்றிலுமாகச் சிக்கிக் கொண்டனர்.
பிரபாகரன் தப்பிக்க ஒரே வழி தான் இருந்தது. காயல் வழியாக. இலங்கை இராணுவத்துக்கு அது நன்றாகவே தெரிந்திருந்தது. அதனாலேயே முன்னெச்சரிக்கையாக அங்கும் படைகளை நிறுத்தியிருந்தனர்.
இறுதிப்போர் மே 17 அன்றே தொடங்கி விட்டது. போரில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் தகவல்களின்படி மே 17 அன்றே புலிகள் தப்பிக்க முயற்சி எடுத்தனர்.
ஜெயத்தின் தலைமையில் 150 புலிகள் சிறு படகுகள் மூலமும் அன்று காலை 3 மணிக்கு இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். கெப்பிலாறு தடுப்பரணுக்கு அருகில் காயலின் மேற்குக் கரையில் புலிகள் இறங்கினர்.
அங்கே 5 வது விஜயபா இன்பண்ட்ரி றெஜிமென்ட்டும் 19 வது ஸ்ரீலங்கா லைட் இன்பன்ட்ரியும் தயாராக இருந்தன. காயலின் மேற்கு கரையில் மூன்று மணி நேரம் நிகழ்ந்த கடுமையான போரில் 148 புலிகள் கொல்லப்பட்டனர்.
இராணுவத்துக்கும் கடுமையான உயிர்ச்சேதம். ஆனால், புலிகளால் இராணுவத்தில் தடுப்பரணை உடைக்க முடியவில்லை.
இந்தச் சண்டையில் இருந்து காயலின் கரையின் ஒரு பகுதியைக் கைப்பற்றி, அங்கிருந்து முதியங்காட்டுக்குள் தப்பிச் செல்ல பிரபாகரனுக்கு ஒரு வழியை ஏற்படுத்தித் தர புலிகள் முயற்சி செய்கிறார்கள் என்பது இராணுவத்துக்குப் புரிந்து விட்டது.
ஜெனரல் பொன்சேகா என்னிடம் சொன்னார். “விடுதலைப் புலிகள் இந்த வழியைத் தான் முதலில் பின்பற்றுவார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அங்கே ஒரு பகுதியைத் தக்க வைத்திருந்தார்கள் என்றால் காயல் வழியாகத் தலைவர்கள் அனைவரும் தப்பி, முதியங்காட்டுக்குள் சென்று மறைந்திருப்பார்கள். அவர்களைப் பிடிப்பது இயலாததாகி இருக்கும். கடந்த பல வருடங்களில் அவர்களது செயற்திட்டங்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதால் நாங்கள் அதனை முன்னதாகவே எதிர்பார்த்திருந்தோம்.
போர் முடியும் நிலையில், விடுதலைப் புலிகள் பிணையாக வைத்திருந்த கடைசி சிவிலியன்களும் தப்பித்து அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து விட்டனர். அதனால் நன்கு பயிற்சி பெற்றிருந்த புலிகளைத் தாக்குவதில் இராணுவத்துக்கு கட்டுப்பாடுகள் ஏதும் இருக்கவில்லை.
கொழும்பில் இருந்தபடி ஜெனரல் பொன்சேகாவே நேரடியாக நிலைமையைக் கண்காணித்து வந்தார். போர்க்களத்தில் தளபதிகள் பிரபாகரனைப் பிடிக்க நேர்த்தியான திட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தனர்.
இதற்கு இடையில், விடுதலைப் புலிகள் தோற்று விடுவது உறுதி, பிரபாகரன் பிடிக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்று தெரிந்த காரணத்தால் உலக ஊடகங்களைச் சேர்ந்த அனைவரும் கொழும்புக்கு கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர்.
நானும் மே 16 அன்று விமானத்தில் கொழும்பு சென்றடைந்தேன். அன்றோ இந்தியர்கள் அனைவரும் இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகளைக் காண்பதற்காக தொலைக்காட்சிப் பெட்டியிலேயே கண் வைத்த வண்ணம் இருந்தனர்.
அடுத்த 24 மணி நேரத்துக்கு பத்திரிகையாளர்கள் நாங்கள் அனைவரும் போர் முனையில் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ள, எங்களுக்குத் தெரிந்த அனைவரிடமும் தொடர்பு வைத்துக் கொண்டு இருக்கை நுனியில் உட்கார்ந்திருந்தோம்.
ஆனால் அரசுத் தரப்பிலிருந்து ஒரே ஒரு செய்தி தான் வந்து கொண்டிருந்தது. “விடுதலைப் புலித் தலைமை முழுவதும் ஒரு சிறுதுண்டு நிலத்தில் மாட்டிக் கொண்டுள்ளனர்” அதற்கு மேல் வேறு எந்தத் தகவலும் கிடையாது…..
(தொடரும்…..) –நிதின் கோகலே –

முதல் போராளிப் படைக்கு, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆன்டனி தலைமை; “இலங்கை இறுதி யுத்தம்”: இலங்கை இராணுவம் வென்றது எப்படி? (PART-2)

ltte.piraba-016


மே17 இரவு ஆனதும், விடுதலைப் புலிகளிடமிருந்து கடுமையான தாக்குதலை இராணுவம் எதிர்நோக்கியது. எதிர்பார்த்தது போலவே மே 17 நள்ளிரவுக்குப் பின் புலிகளின் தாக்குதல் ஆரம்பித்தது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளம் டிபன்ஸ் எல்கே, 17 ஆம் கெமுனு கண்காணிப்பு றெஜிமெண்டின் தளபதி லெப்டினண்ட் கர்ணல் கீர்த்தி கொட்டாச்சியை மேற்கோள்காட்டி, இந்தத் தாக்குதல் வஞ்சகமான முறையில் நடைபெற்றது என்றது.
கொட்டாச்சியின் தகவலின்படி, சிவிலியின் உடையில் இருந்த சில தீவிரவாதிகள், காயல் கரையைக் காத்துக் கொண்டிருந்த துருப்புக்களை அணுகி, தங்களை உள்ளே அனுமதிக்குமாறு கேட்டுள்ளனர். அப்போது மே 18, அதிகாலை 2.30 மணி.
“எனது படைகள் தான் காயமுள்ளிவாய்க்கால் சிவிலியின் மீட்புப் புள்ளியில் காவல் காத்துக் கொண்டிருந்தன. காயல் கரை வழியாக வந்த சில தீவிரவாதிகள் எங்கள் பாதுகாப்பு வளையத்துக்குச் சற்று முன்னதாக, சிறு தீவுக் குழுமங்களில் ஒளிந்து கொண்டிருந்தனர். ஒரு சிறு குழு மட்டும் எங்கள் அதிகாரிகளிடம் வந்து, அவர்கள் குழுவில் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்களை உள்ளே அனுமதிக்குமாறும் கேட்டனர் என்று கர்ணல் கொட்டாச்சி தெரிவித்தார்.
ஆனால், டாஸ்க்போர்ஸ்8 இன் தலைவர் கர்ணல் ரவிப்பிரியாவும் பிரிகேட் கமாண்டர் லெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகேவும் கர்ணல் கொட்டாச்சியிடம் ஏற்கனவே விரிவாகப் பேசியிருந்தனர். விடுதலைப் புலிகள், சிவிலியன் வேடத்தில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதைச் சொல்லியிருந்தனர்.
“அனைத்துச் சிவிலியன்களையும் ஏற்கனவே காப்பாற்றி விட்டதால், காலை விடிவதற்கு முன் யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று நான் கூறிவிட்டேன். காலை 3 மணி ஆனபோது மீட்புப் புள்ளியில் இருந்த அதிகாரி, சிவிலியன் குழு என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் வன்முறையில் இறங்குவதாகவும் பாதுகாப்பு வளையத்தை உடைக்க முற்படுவதாகவும் தெரிவித்தார்.
உடனே நிலைமையைக் கட்டுப்படுத்த, வானை நோக்கி இரு முறை சுடுமாறு அவருக்கு ஆணையிட்டேன். உடனே 200 புலிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே எங்கள் பகுதியைத் தாக்கத் தொடங்கினர் என்றார் கர்ணல் கொட்டாச்சி.
இறுதி யுத்தம் நிஜமாகவே ஆரம்பித்து விட்டது. 681வது பிரிகேடின் தளபதி லெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகே, இந்தச் சண்டையைப் பற்றிக் குறிப்பிடுகையில் சொன்னார்: “தீவிரவாதிகள் எங்களது இரண்டு பதுங்கு குழிகளைக் கைப்பற்றினர். எங்களது பாதுகாப்பு வளையத்தில் 100 மீட்டருக்கு இடைவெளியை ஏற்படுத்தினர்.
ஆனால் முதலாவது தாக்குதலுக்குப் பிறகு, உள்ளே நுழைந்த அனைவரும் எங்களது மெஷின் துப்பாக்கியின் வீச்சுக்குள் வந்தனர். அவர்கள் அந்தக் காயல் கரையிலேயே மடிந்தனர். எங்கள் தரைப்படையும் டாஸ்க் போர்சும் சுமார் 100 புலிகளைக் கொன்றிருப்பர். அதில் சில தலைவர்களும் அடக்கம். அவர்கள் தண்ணீருக்குள்ளிருந்து வெளிவரும் முன்னரேயே கொல்லப்பட்டனர்”.
இதற்கிடையே, காலை விடியும் போது 100 புலிகளைக் கொண்ட மற்றுமொரு குழு வட்டுவாகலுக்கு வடக்கே தடுப்பாக இருந்த 58வது பிரிவைத் தாக்கியது. இந்தப் புலிகளும் கொல்லப்பட்டனர். ஏ- 35 நெடுஞ்சாலையில் கடற்கரைப் பகுதிக்கு நீந்தி வந்த புலிகளில் பெரும்பான்மையானோர் 58வது டிவிஷனால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சதுப்புநிலக் காடுகளில் ஒழிந்திருந்த புலிகள் சுமார் 100 பேர் டாஸ்க்போர்ஸ் 8 ஆலும் தரைப்படையினராலும் தேடிப் பிடித்துக் கொல்லப்பட்டனர்.
இராணுவத்தின் கையில் சிக்கி இறந்த முதல் போராளிப் படைக்கு பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆன்டனி தலைமை தாங்கினார். அந்தக் குழுவினர் வந்து இறங்கிய இடத்திலிருந்து 250 மீட்டர் தூரம் கடப்பதற்குள்ளாகவே சுட்டுக் கொல்லப்பட்டனர். சார்லஸ் ஆன்டனியின் குண்டு துளைத்த உடல் உடனடியாகக் கண்டு பிடிக்கப்பட்டு அடையாளம் காட்டப்பட்டது.
மே 18,
இந்தச் செய்தியை நாங்கள் தொலைக்காட்சியில் அறிவித்து, தூரத்தில் கொழும்பில் இருந்தபடி அதன் விளைவுகளை ஆராய்ந்து கொண்டிருந்தோம். அதற்குள்ளாக வதந்திகள், அரை உண்மைகள், பொய்கள் என அனைத்தும் முடிவே இல்லாமல் பரவ ஆரம்பித்தன.

அன்று முழுதும் பிரபாகரனின் இருப்பிடம் பற்றி முற்றிலும் மாறுபட்ட பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியாயின. ஒரு தகவல், பிரபாகரன் முதியங்காட்டுக்குள் தப்பிச் சென்று விட்டார் என்றது.
பிரபாகரன், கடற்புலிகளின் தலைவர் சூசை, விடுதலைப் புலிகளின் உளவு அமைப்புத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் கைப்பற்றப்பட்ட ஒரு அம்புலன்ஸில் ஏறித் தப்பிச் செல்லும் போது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் அவர்களது உடல்கள் அடையாளம் தெரியாமல் எரிந்து போயின என்றும் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரை மேற்கோள் காட்டி மற்றொரு தகவல். இந்தத் தகவல்கள் எவையுமே உண்மை இல்லை என்று பின்னர் தெரிய வந்தது.
ஒரு மூத்த இராணுவ அதிகாரி பின்னர் தெளிவுபடுத்தினார். ஏயார் மொபைல் பிரிகேடின் ஆம்புலன்ஸ் வாகனம் அது. அதனைத் தீவிரவாதிகள் கைப்பற்ற முயன்று தாக்கிய போது அது தீப்பிடித்து எரிந்தது. எரிந்து நாசமான வண்டியின் உள்ளே ஓர் உடல் உள்ளது என்று படைவீரர்கள் தகவல் தெரிவித்தனர். அந்த உடல், பார்க்க பிரபாகரனின் உடலை ஒத்திருந்தது என்றனர். ஆனால் அந்தத் தகவல் தவறானது என்று நிரூபணம் ஆனது.
ஆனால் இந் விளக்கம் வர நிறையத் தாமதம் ஆனது. எனவே 18 மே அன்று ஊடகங்களில் இருந்த நாங்கள் இந்தச் செய்தியைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்தோம். இத்தனைக்கும் பாதுகாப்பு அமைச்சகமும், இராணுவமும் இந்தத் தகவலை அதிகாரப+ர்வமாக உறுதி செய்ய மறுத்திருந்தன.
போர்முனையில் சுற்றிவளைக்கும் இராணுவத்திடமிருந்து தப்பிச் செல்ல விடுதலைப் புலிகளின் தலைமை செய்த அனைத்து முயற்சிகளையும் படைகள் தடுத்து விட்டன. நாள் முழுவதும் போர் நடக்கும் பகுதியில் எஞ்சியுள்ள புலிகளைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
350க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உடல்கள் கிடைத்தன. ஆனால் ஒவ்வொன்றும் யாருடைய உடல் என்று அடையாளம் காண்பதில் நிறையச் சிரமங்கள் இருந்தன. உளவு நிறுவனத்தைச் சேர்ந்தவவர்கள் அந்த வேலையில் இறங்கினர். தம்மிடம் உள்ள புகைப்படங்களைக் கொண்டு இறந்த ஒவ்வொருவரையும் கவனமாகப் பார்க்கத் தொடங்கினர்.
அன்று மாலைக்குள்ளாக, கொல்லப்பட்டதில் 30 க்கும் மேற்பட்டோர் விடுதலைப் புலி அமைப்பின் மேல் நிலை, இடைநிலைத் தலைவர்கள் என்று இராணுவம் அடையாளம் கண்டு கொண்டது. ஆனால் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான் ஆகியோர் எங்குமே காணப்படவில்லை.
எனவே கண்காணிப்பு தொடர்ந்து பலமாகவே இருந்தது. பிரபாகரனும் அவரது கூட்டாளிகளும் அங்கே தான் எங்கேயோ பதுங்கியுள்ளனர் என்பதை நன்கு உணர்ந்திருந்த படைத்தளபதிகள் ஒருதுளி கூடக் கவனம் சிதறிவிடக் கூடாது. துருப்புக்கள் கண்காணிப்பை தளர்த்திவிடக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தனர். அடுத்த 12 மணி நேரம், மிகவும் முக்கியமானவை.
இலங்கையைப் பொறுத்தமட்டில் 19 மே 2009 மிக முக்கியமான நாளாக இருந்தது. காலை 9.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தன் உரையைத் தொடங்கினார். தமிழில் பேச ஆரம்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
ஆனால் ராஜபக்சவும் பிரபாகரன் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அதனால் இராணுவம் போரை முடித்து விட்டதா? என்ற கேள்விக்குப் பதில் ஏதும் கிடைக்கவில்லை.
ஆனால் யாருக்குமே தெரியாமல் அன்று அதிகாலையிலேயே 25 ஆண்டுகாலப் போர் அதன் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு சதுப்புநிலக் காட்டில் கடும் போர் நிகழ்ந்திருந்தது…
(தொடரும்…..) –நிதின் கோகலே –

தன் அழிவுக்கான வித்தை, பிரபாகரன் தானே விதைத்தது; “இலங்கை இறுதி யுத்தம்”: இலங்கை இராணுவம் வென்றது எப்படி? (PART-3)

ltte.piraba-00818 மே இரவு முழுவதும், 19 மே அதிகாலையிலும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே, கர்ணல் ரவிப்பிரியா, லெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகே ஆகியோர் கரயமுள்ளிவாய்க்கால் தரைப் பாலத்தின் மீது எப்படி இறுதித் தாக்குதலைச் செய்வது என்று திட்டமிட்டபடி இருந்தனர்.
அதிரடிப்படையினர் அதற்கு முதல் நாளே பெரும் பகுதி சதுப்பு நிலத்தை முழுவதுமாகச் சோதனை செய்திருந்தனர். அன்று 8.30 மணிக்கு மிச்சம் உள்ள சதுப்பு நிலங்களை டாஸ்க்போர்ஸ் 8ம் 4ம் விஜயபா இன்பண்ட்ரி றெஜிமெண்டும் சோதனை செய்யத் தொடங்கினர்.
லெப்டினண்ட் கர்ணல் லலாந்த கமகேயுடன் 4 வது விஜயபாவின் தளபதி லெப்டினண்ட் கர்ணல் ரோஹித அலுவிஹாரேயும் நேரடியாகப் படைகளுக்குத் தலைமை தாங்கி முன்னே சென்றனர். 8 வீரர்கள் கொண்ட இரு குழுக்கள், 4 வீரர்கள் கொண்ட ஒரு குழு என மூன்று குழுக்கள் சதுப்பு நிலத்தில் நீரில் அமிழ்ந்தபடி தேடுதலைத் தொடங்கின.
சார்ஜண்ட் எஸ்.பி.விஜேசிங்க தலைமையிலான முதல் குழு சதுப்பு நிலத்தில் நுழைந்ததும் அவர்களை நோக்கி துப்பாக்கிக் குண்டுகள் எகிற ஆரம்பித்தன. நெஞ்சளவு நீரில், முள் புதர்களுக்குப் பின் வீரர்கள் பதுங்க வேண்டியிருந்தது.
ஒரு மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, விஜேசிங்கயின் படை சுமார் 50 மீட்டர் தூரம் முன்னேறியது. அங்கே ஐந்து உடல்கள் கிடந்தன. இறந்தவர்கள் உடல்களில் பிஸ்டல்களும் ரிவால்வர் துப்பாக்கிகளும் கிடந்தன.
விஜேசிங்கவுக்கு உடனடியாகப் புரிந்து விட்டது. அவர்கள் மிக முக்கியமான தலைவர்களுக்கு அருகில் இருக்கின்றார்கள். ஏனெனில் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களினக் மெய்க்காப்பாளர்கள் மட்டுமே பிஸ்டல்களை வைத்திருக்கலாம்.
சார்ஜண்ட் உடனே தன் பிரிகேட் தலைவருக்கும் கமாண்டிங் அதிகாரிக்கும் தகவல் அனுப்பினார். சில நிமிடங்களுக்குள்ளாக இறந்த ஒருவரது உடல் வினோதனுடையது என்று கண்டு பிடிக்கப்பட்டது.
பிரபாகரனின் உள்வட்டப் பாதுகாப்பு அணியின் மூத்த மெய்க்காப்பாளர்களிர் வினோதன் ஒருவர். “உடனேயே இது முக்கியமான கண்டுபிடிப்பு என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது” என்று லலாந்த கமகே பின்னர் தெரிவித்தார்.
2009-06-04-தங்கள் இறுதி இலக்குக்கு மிக மிக அருகில் வந்து விட்டோம் என்று படைகளுக்குப் புரிந்து போனது. மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தன் அணியின் ஒவ்வொரு நகர்வையும் மிகவும் நெருக்கமாகப் பார்த்து வந்தார்.
அவர் உடனேயே சார்ஜண்ட் விஜேசிங்கவின் ஆட்களைத் தடுப்பு விய+கத்தில் நிற்கச் சொன்னார். தப்பிச் செல்லும் அனைத்து வழிகளையும் அடைக்குமாறு கூறினார்.
8 பேர் அடங்கிய தரைப்படைக் குழு ஒன்றும் நால்வர் அடங்கிய டாஸ்க் போர்சும் விஜேசிங்கவின் குழுவுக்குப் பக்க பலமாக உடனடியாக அனுப்பப்பட்டன. இந்த இரண்டாவது குழுவுக்கு சார்ஜண்ட் டி.எம்.முத்துபண்டா தலைமை தாங்கினார்.
இந்த அணியினர் முன்னேறும்போது மீண்டும் துப்பாக்கிச் சூடு ஆரம்பமானது. கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சதுப்பு நிலக்காட்டில் அமைதி. இரு அணிகளும் மிகவும் மெதுவாகப் புதர்களுக்கு இடையே முன்னேறினர். 18 இறந்த உடல்கள் கிடைத்தன.
அதில் வேலுப்பிள்ளை பிரபாகரனும் ஒருவர். இலங்கை அரசை 30 ஆண்டுகளாகத் துன்புறுத்தி வந்தவர். அப்போது காலை 8.30 மணி.19 மே 2009.
உடனே இராணுவத் தளபதிக்குத் தகவல் பறந்தது. ஆனால் உலகுக்குத் தகவலை அறிவிப்பதற்கு முன் ஜெனரல் பொன்சேகா இருமுறை உறுதி செய்து கொள்ள விரும்பினார்.
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுடனான ஆலோசனைக்குப் பிறகு விநாயகமூர்த்தி முரளிதரன் என்னும் கர்ணல் கருணாவை அழைத்து பிரபாகரனது உடலை அடையாளம் காட்டுமாறு கேட்டுக் கொண்டனர்.
அத்துடன் சில நாட்களுக்கு முன் இலங்கை அரசிடம் தஞ்சம் புகுந்திருந்த விடுதலைப் புலிகளின் ஊடகத் தொடர்பாளர் தயா மாஸ்டரையும் போர் முனைக்கு அழைத்த வந்தனர்.
இருவருமே, நந்திக்கடல் காயலில் வீழ்ந்து கிடந்த உடல் பிரபாகரனுடையதே என்று உறுதி செய்தனர். உலகின் மிகப் பயங்கரமான தீவிரவாத அமைப்பைத் தோற்றுவித்த பிரபாகரனின் கதை முடிந்து விட்டது. விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வி முழுதானது.
அப்போது தான் நாடாளுமன்றத்தில் தன் பேச்சை முடித்திருந்த குடியரசுத் தலைவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒரு மணி நேரத்துக்குள் இராணுவ உடையில் பிரபாகரனின் உடல் உலகின் அனைத்துத் தொலைக்காட்சி சானல்களிலும் ஒளிபரப்பாக ஆரம்பித்தது.
யாராலும் இதனை நம்பமுடியவில்லை. விடை தெரியாத பல கேள்விகள் தான் எஞ்சியிருந்தன.
எத்தனையோ புதுமையான தீவிரவாத வழிமுறைகளைப் புகுத்திய ஒரு மனிதர், எப்படி ஒரு சாதாரண சாவைச் சந்தித்திருக்க முடியும்?
தப்பிக்க அவரிடம் வழியே இருக்கவில்லையா?
அவர் ஏன் பிற விடுதலைப் புலி வீரர்களைப் போல சயனைட்டைச் சாப்பிட்டு உயிர் துறக்கவில்லை?
எவ்வளவோ இன்னல்கள் வந்த போதும் ஆச்சரியமூட்டும் வகையில் எதிர்த்தாக்குதல்களைப் புரிந்த ஒருவர், இம்முறை ஏன் அப்படி ஏதும் செய்து நிலைமையை மாற்றவில்லை?
அவரது நெருங்கிய கூட்டாளிகளால் அல்லது குடும்பத்தினரால் மட்டுமே இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியும். ஆனால் அவர்கள் அனைவரும் இறந்திருந்தனர்.
பிரபாகரன் இறந்து பல நாள்கள் ஆன பிறகும் வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தன. எப்படி பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் இராணுவம் உயிருடன் பிடித்து, அவர்களைத் துன்புறுத்தி ஒவ்வொருவராக கொலை செய்தது என்றது ஒரு வதந்தி.
மற்றொரு வதந்தியில் தங்களை இராணுவம் சுற்றி வளைத்து விட்டது என்பதை அறிந்த பிரபாகரன், தன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா(23), இளைய மகன் பாலச்சந்திரன் (11) ஆகியோரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, தன்னைத் தானே சுட்டுக் கொன்றதாகச் சொன்னது.
ஆனால் இந்த வதந்திகள் எதையுமே உறுதி செய்ய முடியவில்லை. அதேநேரம் இலங்கை அரசும் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோர் பற்றி அமைதி காத்தது. விளைவாக வதந்திகள் பரவுவதை தடுக்க வழியில்லாமல் இருந்தது.
பிரபாகரனின் இறப்புக்கு அடுத்த வாரம், புலி ஆதரவு இணையத்தளங்களும் தமிழ் இதழ்களும் செய்தித்தாள்களும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் இராணுவம் காட்டிய உடல் பிரபாகரனைப் போன்ற வேறு ஒருவரது உடல் என்றும் எழுதின.
ஆனால் இலங்கை அரசைப் பொறுத்தமட்டில் இராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்பட்டது உறுதியே. ஒரு மாதம் கழித்து டி.என்.ஏ. சோதனை மூலம் நந்திக்கடல் காயலில் கண்டெடுக்கப்பட்ட உடல் பிரபாகரனுடையதே என்று உறுதி செய்யப்பட்டது.
பிரபாகரனின் அழிவுக்கு காரணம் என்ன?…
விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பல காரணங்களைச் சொல்லலாம். ஆனால் “கர்ணல் கருணா, பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டிய மறுநாள் என்னிடம் சொன்ன ஒரு வாக்கியம், பிரபாகரனின் சுய அழிவைத் தெளிவாக விளக்குகின்றது.
தன் முன்னாள் தலைவரின் கோரமான சாவுக்காகத் தான் வருந்துவதாக என்னிடம் ஒப்புக் கொண்ட கருணா சொன்னார். “ பிரபாகரன் அமைதிக்கான மனிதர் கிடையாது. அவருக்கு அழிக்க மட்டுமே தெரியும். ஆக்க அல்ல”
இந்த உலகுக்கு மனித வெடிகுண்டுகளை அறிமுகப்படுத்திய ஒருவரைப் பற்றிய மிகச் சரியான கணிப்பு இது. பிரதமர்களையும் குடியரசுத் தலைவர்களையும் கொல்வதற்கு ஆணையிட்டவர் பிரபாகரன்.
ஆயிரக்கணக்கான இளம் ஆண்களையும் பெண்களையும் கவர்ந்து, தமிழ் ஈழத்துக்காகத் தம் உயிரையும் கொடுக்குமாறு தூண்டியவர் பிரபாகரன். ஆனால், எப்போது நிறுத்திக் கொள்வது என்று பிரபாகரனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
பல வருடங்களாகத் தொடர்ந்து பெற்ற வெற்றிகள், விடுதலைப் புலிகளின் தலைவருக்குத் தன் திறமை மீது அதீத தன்னம்பிக்கையையும் சுயதிருப்தியையும் வளர்த்து விட்டது. அதனால் மாறும் நிலைமைகளை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு பயங்கரவாதியாகவே வாழ்ந்து ஒரு பயங்கரவாதியாகவே மறைந்தார். ஒரு அரசியல்தலைவராக அவர் முன்னேறவே இல்லை.
தன் அழிவுக்கான வித்தை பிரபாகரன் தானே விதைத்தது, 2008 க்குப் பிறகான காலகட்டத்தில் தான் என்கிறார் கருணா. நார்வே முன் வைத்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட பிரபாகரன் அதை முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கவே இல்லை.
என்னுரை..
இந்தோரிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்து கொண்டிருக்கும் போது தான் இந்தப் புத்தகத்தை எழுதும் எண்ணம் எனக்குத் தோன்றியது. உத்தராஞ்சல் மாநிலத்தின் மோ நகரில் உள்ள புகழ்வாய்ந்த இராணுவப்படைக் கல்லூரியில் “ இராணுவத்துக்கும், ஊடகங்களுக்கும் இடையேயான உறவு” என்ற தலைப்பில் பேசிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன்.
அந்தப் பேச்சின் போது, சமீபத்தில் இலங்கையில் நடந்து முடிந்த போரைப் பற்றி என்னிடம் இந்திய இராணுவத்தினர் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டிருந்தனர்.
நான் இலங்கைக்குச் சென்று அங்கு நடந்த போரை , என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்காகப் பின்பற்றி செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தேன். போர் முடிந்த காரணத்தால் அப்போது தான் இந்தியா திரும்பி வந்திருந்தேன்.
என் அனுபவங்களை இந்திய இராணுவ வீரர்களிடம் பகிர்ந்து கொண்ட போது தான் இந்தப் போரைப் பற்றிய பல விஷயங்கள் வெளி உலகுக்குச் சற்றும் தெரிந்திருக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.
இலங்கை இராணுவத்தின் வெற்றிக்கான சூத்திரம் என்ன? என்று பலரும் கேட்டனர். இன்னும் பலர், விடுதலைப் புலிகள் தவறு செய்த இடம் எது? என்று தெரிந்து கொள்ள விரும்பினர்.
எனவே, உலகின் மிகக் கொடூரமான ஒரு தீவிரவாதக் குழுவை எப்படி இலங்கை இராணுவம் ஒழித்துக் கட்டியது என்ற கதை எழுதப்பட்டே ஆகவேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

–நிதின் கோகலே –


Feb 6, 2015

இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் பதித்ததன் நோக்கம் என்ன? 1-6

இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் பதித்ததன் நோக்கம் என்ன??- (பகுதி-1)

இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்று திரும்பிப் பல ஆண்டுகளின் பின்னர், கொழும்பில் இந்தியத் தூதராக அந்த நாட்களில் இருந்த டிக்சித் தனது பேட்டி ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“இலங்கை ஜனாதிபதியை நானும் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியும் சந்தித்தபோது, இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் காரணமாக சிங்கள பகுதிகளில் ஏற்பட்ட கிளர்ச்சி பற்றியும் பேச்சு வந்தது.
சிங்கள பகுதிகளில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்குவதற்காக இலங்கை ராணுவத்தை தமிழ் பகுதியில் இருந்து சிங்கள பகுதியை நோக்கி நகர்த்தும் யோசனையில் இருந்தார். ஜெயவர்தனே”
“அதாவது சிங்கள ராணுவத்தையே சிங்கள மக்களிடம் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்க அனுப்ப முடிவு செய்தார். அப்படித்தானே”
“ஆம். அதுவேதான். அப்படி நகர்த்தும்போது வடக்கிலும், கிழக்கிலும் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு எதிராக நிறுத்தி வைத்துள்ள படைகளின் இடங்களில் ஒரு வெற்றிடம் ஏற்படுமே. அதற்கு என்ன செய்யப் போகின்றீர்கள் என்று ராஜிவ் காந்தி கேட்டார்.”
“அதற்கு ஜெயவர்த்தனேவின் பதில் என்ன? தமிழ் பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற்று கொள்ளப் போவதாகச் சொன்னாரா?”
“இல்லை. ஈழ விடுதலை இயக்கங்கள் தமது (இலங்கை) ராணுவம் மீது தாக்குதல் நடத்தாமல் பார்த்துக் கொள்வதற்காக இந்திய ராணுவத்தை அனுப்ப முடியுமா என்று கேட்டார் ஜெயவர்தனே.
இந்தக் கோரிக்கை இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக வைக்கப்பட்டால் இந்தியா தனது படைப்பிரிவு ஒன்றை நிச்சயம் இலங்கைக்கு அனுப்பும் என்று பதில் கூறினார் ராஜிவ்காந்தி”
“அப்படியான கோரிக்கை இலங்கை அரசால் அதிகாரபூர்வமாக இந்திய அரசிடம் வைக்கப்பட்டதா”
“ஆம். கோரிக்கை வைக்கப்பட்டால் நிச்சயம் செய்வோம் என்று ராஜிவ் காந்தி சொன்ன உடனேயே இலங்கை ஜனாதிபதி இப்படியான கோரிக்கைக் கடிதம் ஒன்றைத் தயாரிக்கும்படி தனது உதவியாளரிடம் கூறினார்.
தயாரிக்கப்பட்ட கடிதத்தில் அந்த இடத்திலேயே கையெழுத்திட்டு ராஜிவ் காந்தியிடம் கொடுத்தார் ஜெயவர்தனே. அதன்பிறகு தான் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பப்படுவது என்று இறுதி முடிவு எடுக்கப்பட்டது.”
“அப்படியானால் அதற்கு முன்னர் இந்திய ராணுவம் இலங்கைக்கு அனுப்பப்படுவது பற்றி முடிவு எடுக்கப்படவில்லையா”
“இல்லை. இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவதாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இல்லையே. அப்படியிருக்கும்போது இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவது என்ற பேச்சுக்கே இடமில்லையே. அனுப்பும்படி இலங்கை ஜனாதிபதி அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுத்தார். நாங்கள் அனுப்பினோம். அவ்வளவுதான்”
மேற்படி பேட்டியைப் படித்தால் இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளின் பின்னர்தான் துரித கதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இந்திய ராணுவம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது என்பது போன்ற ஒரு தோற்றம் வருகிறதல்லவா?
ஆனால் இவர் கூறியது நிஜம் அல்ல. தாம் கூறுவது பொய் என்பது, அவருக்கு (டிக்சித்) இந்த பேட்டி கொடுத்த போதே தெரியும்!
ராஜிவ் காந்தி கொழும்பு செல்வதற்காக டில்லியில் விமானம் ஏறுவதற்கு முன்னரே, முன்னேற்பாடுகள் தொடங்கி விட்டன. இதற்கு நிறையவே ஆதாரங்கள் இருக்கின்றன.
மத்திய அரசை பொறுத்தவரை இதெல்லாம் நடப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னரே இந்திரா காந்தியின் காலத்தில் இலங்கை மீது படையெடுப்பதற்கான ரகசிய திட்டம் ஒன்று இந்திய ராணுவத் தளபதிகளால் போடப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
சில காரணங்களினால் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
இந்திய ராணுவம் இலங்கையில் போய் செய்யவேண்டிய காரியத்தை செய்வதற்காகவே, ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதங்களும் பயிற்சிகளும் கொடுத்தார்கள். இலங்கை ராணுவத்தை தாக்க அனுப்பி வைத்தார்கள்.
உண்மையில், இந்திய ராணுவம் செய்திருக்க வேண்டிய ப்ராஜெக்ட் அது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட தடைகளால், ஈழ விடுதலை இயக்கங்களை நம்பி, அவர்களை வளர்த்து விட்டார்கள். அது, இந்திரா காந்தி காலத்து கதை.
பின்னர் ராஜிவ் காந்தியின் காலத்தில், இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்னரே இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் முடிவும் எடுக்கப்பட்டு விட்டது. அதற்கான முன்னேற்பாடுகளும் தொடங்கியிருந்தன.
டில்லி தலைமை, தங்களது ராஜதந்திர திறமையால் ஜனாதிபதி ஜெயவர்தனவையே இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பும்படி கேட்க வைத்தார்கள்.
ஒருவேளை ஜெயவர்தனே அப்படிக் கேட்காமல் விட்டிருந்தால் வேறு ஒரு மார்க்கத்தில் சந்தர்ப்பம் ஒன்றை உருவாக்கியிருப்பார்கள் – இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கு.
இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னரே இந்தியாவில் செய்யப்பட்ட சில முன்னேற்பாடுகளைப் பாருங்கள் – நாங்கள் சொல்வதில் உள்ள உண்மை புரியும்.
இந்திய படை நகர்வு இலங்கையை நோக்கி இருக்க வேண்டும் என்றால், இந்திய விமானப்படையும் கடற்படையும் தான் ராணுவ வீரர்களையும், ராணுவ உபகரணங்களையும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அந்த முன்னேற்பாடுகள் இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு முன்பே தொடங்கிவிட்டன. இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்புங்கள் என ஜெயவர்த்தனே வேண்டுகோள் விடுப்பதற்கு முன்பே தொடங்கிவிட்டன.
அதுவரை காலமும் இந்திய படை நகர்வுகளின்போது ராணுவத்தினரின் போக்குவரத்து ஏற்பாடுகள் அனைத்துமே இந்திய விமானப்படையின் CAC (Central Air Command) எனப்படும் மத்திய வான்படை கட்டளை தளத்தில் இருந்தே நடைபெற்றன. இந்திய விமானப்படையின் தெற்கு பிராந்திய கட்டளை தளம் (Southern Air Command) மிகச் சிறிய அளவிலேயே இருந்தது.
தெற்கு பிராந்தியக்காரர்களின் முக்கிய மையம் திருவனந்தபுரத்திலும், பயிற்சி மையம் பங்களுருவிலும் இருந்தன. இந்த இரு இடங்களிலும் முக்கியமான படைப்பிரிவுகள் எதுவும் இருக்கவில்லை. போர் விமான ஆபரேஷன் எதுவும் இல்லாமல் வெறும் ஹெலிகாப்டர் ஆபரேஷன் மட்டுமே தென் பிராந்தியத்தில் இருந்தது.
தென் பிராந்திய விமானத்தளம் என்று பார்த்தால் எப்போதாவது யுத்த விமான நடமாட்டங்கள் கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள சூலூர் விமானப்படை தளத்திலேயே இருந்தன. அங்கே மிகச்சிறிய படைப்பிரிவான 43-வது விங் மாத்திரம் இயங்கியது. அவ்வளவுதான்.
யாழ்ப்பாணம் மீது இந்திய விமானப்படை விமானங்கள் உணவுப் பொருட்களைப் போட்ட பின்னர் – இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்யப்படும் முன்னர் – இந்திய விமானப்படையின் தென் பிராந்திய ஆபரேஷன் திடீரென பெரிது படுத்தப்பட்டது.
ஹின்டன் விமானப்படைத் தளத்தில் இருந்த MI-8 பிரிவும், 109-வது படைப்பிரிவும் சூலூர் விமானப்படைத் தளத்துக்கு மாற்றப்பட்டன. இந்த இரு படைப்பிரிவுகளுடன் உத்தரவிடும் தளபதியாக இந்திய விமானப்படையின் முக்கிய தளபதிகளில் ஒருவரான வி.கே.என். சப்ரே அனுப்பப்பட்டார்.
அதேபோல தென் பிராந்திய விமானப்படைத் தளங்களில் மற்றொன்றான யெலஹங்காவுக்கு (பங்களுருவுக்கு அருகேயுள்ள தளம்) 112-வது படைப்பிரிவு அனுப்பப்பட்டது. விங் கமான்டர் எஸ்.கே. சர்மாவின் தலைமையில் இந்த நகர்வு செய்யப்பட்டது.
மூன்றாவதாக 119-வது படைப்பிரிவும் விங் கமான்டர் டி.என். சாஹே தலைமையில் தென்னிந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. இந்தப் படைப்பிரிவு சென்னைக்கு அருகிலுள்ள தாம்பரத்தில் இருந்து இயங்கத் தொடங்கியது.
இவை அனைத்துமே ஒரு பெரிய படைநகர்வு தென்னிந்தியாவில் இருந்து ஏற்படுவதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்பதை ராணுவ நகர்வுகள் பற்றித் தெரிந்த யாருமே ஒப்புக் கொள்வார்கள்.
தென்னிந்தியாவிலிருந்து ராணுவ நகர்வு என்றால், அந்தத் திசையில் இந்தியாவுக்கு அருகேயிருப்பவை இரண்டே இரண்டு நாடுகள்தான்.
ஒன்று இலங்கை, மற்றது மாலதீவு.
மாலதீவு நோக்கி இந்திய ராணுவம் அனுப்பப்பட வேண்டுமென்றால் இந்தளவுக்கு பெரிய ஏற்பாடுகள் தேவையில்லை. குட்டி நாடு அது. இதனால், ராணுவ நகர்வு முன்னேற்பாடுகள் இலங்கையை நோக்கியே இருந்தன என்று சுலபமாக ஊகித்து விடலாம்.
மீண்டும் கவனியுங்கள் – இவை எல்லாமே ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பே செய்யப்பட்டு விட்டன.
இதற்கு அடுத்தபடியாக தொடங்கியது ‘தஞ்சாவூர் நடவடிக்கை’ என்று புகழ்பெற்ற ராணுவ நகர்வு.
இலங்கைக்கு இந்திய ராணுவம் அனுப்பி வைக்கப்பட்ட விவகாரத்துக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது, தமிழகத்தின் தஞ்சாவூரை நோக்கித்தான்! அதுதான், ‘தஞ்சாவூர் நடவடிக்கை’!
தஞ்சாவூர் நடவடிக்கை என்று இந்திய விமானப் படையினரால் கூறப்பட்ட நடவடிக்கை, மிகக் குறுகிய காலப்பகுதியில் விமானப்படைத்தளம் ஒன்றை உருவாக்கிய ஆபரேஷன். இலங்கைக்கான படைநகர்வு திட்டமிடப்பட்ட போது அதற்காக தென்னிந்தியாவின் பகுதிகளிலேயே தளங்கள் அமைக்கப்படுவது அவசியமாகியது.
அப்படியான திடீர் தளம் ஒன்றுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், நம்ம தஞ்சை.. தஞ்சாவூர்.
தஞ்சாவூரில் ஏற்கனவே பாழடைந்த விமானப் படைத்தளம் ஒன்று இருந்தது. இரண்டாம் உலகமகா யுத்தத்தின்போது பிரிட்டிஷ்காரர்களால் உபயோகிக்கப்பட்ட தளம் அது. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் இருந்து அகன்ற பின்னர் உபயோகிக்கப்படாமலேயே கிடந்து பாழடைந்து கிடந்தது அது.
இந்தியா தனது ராணுவத்தின் கண்களை வடக்கு எல்லையில் பாகிஸ்தானையும், சீனாவையும் நோக்கி வைத்திருந்த காரணத்தால் தென்னிந்தியா மீது பெரிதாக அக்கறை காட்டியிருக்கவில்லை.
தென்னிந்தியாவுக்கு அருகிலுள்ள இலங்கை தங்களுக்கு ராணுவ ரீதியான அச்சுறுத்தலாக இல்லாதிருந்த காரணத்தால் இந்திய விமானப்படை தஞ்சாவூரில் கவனம் செலுத்தி, அதை உபயோகித்திருக்கவில்லை.
இப்போது திடீரென இலங்கையை நோக்கிய படை நகர்வு என்று வந்தவுடன் தஞ்சாவூர் முக்கியத்துவம் பெற்றது.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்துக்கு முன்னர் தஞ்சாவூர் விமானத்தளத்தை யாராவது பார்த்திருப்பீர்கள் என்றால் அது எந்தளவுக்குப் பாழடைந்து கிடந்தது என்பதைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். ரன்வே தகர்ந்துபோன நிலையில் இருந்தது. ATC (Air Traffic Control) டவரின் கதியும் அதுவே.
திடீரென தஞ்சாவூருக்கு ஏராளமான விமானப்படையினர் வந்து இறங்கினார்கள். விமானப்படை உயரதிகாரிகள் அருகிலுள்ள ‘ஹோட்டல் தமிழ்நாடு’ என்ற தமிழக அரசு உல்லாசப்பயண துறையின் சின்னஞ்சிறு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்கள்.
அங்கே தங்குவதற்கு போதிய ரூம்கள் கிடையாது. ‘ஹோட்டல் தமிழ்நாடு’ தவிர தஞ்சையில் உருப்படியான ஹோட்டலும் கிடையாது (1980-களில்! இப்போது எப்படியோ தெரியவில்லை. 80 களில் இந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறேன். கரப்பான் பூச்சி சும்மா ஓடாது, குரூப் டான்ஸே ஆடும்!)
இதனால், விமானப்படை அனுப்பிய பலர் ரூம் கிடைக்காமல் (அதிஷ்டசாலிகள்), தஞ்சாவூரில் படைத்தளம் இருந்த பகுதியில் கூடாரம் அடித்துத் தங்கினார்கள்.
விமானத்தளத்தை திருத்தும் வேலைகள் சுறுசுறுப்பாக தொடங்கின.
ATC டவர் இரு தினங்களில் திருத்தி அமைக்கப்பட்டது. அதற்குத் தேவையான ரேடார் கருவிகள் பூனேவில் இருந்து கொண்டு வரப்பட்டன. மறுபுறமாக நூற்றுக்கணக்கான தஞ்சைவாசிகள் ரன்வே உருவாக்கும் வேலையில் இறக்கி விடப்பட்டார்கள்.
தளம் இருந்த இடம் துப்புரவு செய்யப்பட்டு, சுற்றிலும் முட்கம்பியிலான வேலி போடப்பட்டு 5 தினங்களிலேயே விமானத்தளம் இயங்கும் நிலைமைக்கு கொண்டுவரப்பட்டது.
திருத்த வேலைகள் தொடங்கிய 5-வது தினமே நான்கு விமானப்படை MI-8 ரக ஹெலிகாப்டர்கள் முதல் முறையாக தஞ்சாவூரில் தரையிறங்கின. விமானப்படையின் தளபதிகளில் ஒருவரான வி.கே.என். சாப்ரே, தமது 109-வது படைப்பிரிவிலிருந்த ஹெலிகாப்டரை தாமே செலுத்திக் கொண்டு தஞ்சாவூர் வந்து தரையிறங்கினார்.
தளபதியே நேரில் வந்தவுடன் சூடு பிடித்தது, ‘தஞ்சாவூர் நடவடிக்கை’, முன்னாள் சோழ சாம்ராஜ்ய தலைநகர் தஞ்சையில் இருந்து இலங்கையை நோக்கி! (தொடரும்)

இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் பதித்ததன் நோக்கம் என்ன?? (பகுதி-2)

விமானப்படையின் தளபதிகளில் ஒருவரான வி.கே.என். சாப்ரே, தமது 109-வது படைப்பிரிவிலிருந்த ஹெலிகாப்டரை தாமே செலுத்திக் கொண்டு தஞ்சாவூர் வந்து தரையிறங்கினார்.
தளபதியே நேரில் வந்தவுடன் சூடு பிடித்தது, ‘தஞ்சாவூர் நடவடிக்கை’, முன்னாள் சோழ சாம்ராஜ்ய தலைநகர் தஞ்சையில் இருந்து இலங்கையை நோக்கி!
வேறுசில ஹெலிகாப்டர்கள் 112வது படைப்பிரிவில் இருந்து தாஞ்சாவூருக்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்திய விமானப்படையின் முக்கிய தளபதிகளில் ஒருவரான விநய்ராஜின் தலைமையில் அவை வந்திருந்தன.
ipkf-20140611-1இவர் 1971ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் யுத்தத்தின்போது எம்.ஐ.-4, எம்.ஐ.-8 ஹெலிகாப்டர்களில் இந்திய ராணுவ வீரர்களை கிழக்குப் பாகிஸ்தானுக்கு கொண்டுபோய் தரையிறக்கிய விமானி.
இந்திய விமானப்படையின் முன்னேற்பாடுகள் தென்னிந்தியாவில் இப்படி ஆரம்பித்திருக்க, இந்திய கடற்படை தந்திரமாக ஒரு காரியம் செய்தது.
இலங்கை ஆபரேஷனுக்காக உருவாக்கப்பட்ட முதலாவது தென்பிராந்திய கடற்படை ஆபரேஷன் மையம் ஒன்றை, அருகில்கூட கடல் இல்லாத திருச்சியில் அமைத்தது.
இந்தியாவின் கடலோர பகுதி நகரம் ஒன்றில் ஆபரேஷன் சென்டர் அமைத்தால், எதற்காக திடீரென ஆபரேஷன் மையம் அமைக்கிறார்கள் என்ற சந்தேகம் யாருக்காவது ஏற்படும். அதுவும் தென்னிந்தியாவில் அமைத்தால், அருகில் உள்ள நாடுகள் இலங்கையும் மாலதீவும்தான்.
இதில் மாலதீவு குட்டி நாடு. அப்படியானால், இந்திய கடற்படை இலங்கை செல்லப் போகிறதா? என்ற சந்தேகம் எழும்.
இந்த சந்தேகம் யாருக்கும் எழாமல் இருப்பதற்காகவே, இலங்கை ஆபரேஷனுக்கான முதலாவது தென்பிராந்திய கடற்படை ஆபரேஷன் மையம் திருச்சியில் அமைக்கப்பட்டது!
இலங்கை செல்லப்போகும் இந்தியக் கடற்படை கப்பல்களுக்கு பாதுகாப்புக் கொடுப்பதற்காக கடற்படையின் சீகிங்ஸ் விமானங்கள் திருச்சியில் வந்து தரையிறங்கின.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் பற்றித் தமிழகத்தில் பெரிதாக அறியப்படாத நேரம் அது. இலங்கைக்கு இந்தியப்படைகள் அனுப்புவது பற்றியே யாருக்கும் தெரிந்திராத காலத்தில் இப்படியான ராணுவ நடவடிக்கைகள் தமிழகத்தில் நடைபெறுவதை மக்கள் வியப்புடன் பார்த்தார்களே தவிர, இவையெல்லாம் இந்தியப்படைகளை இலங்கைக்கு அனுப்புவதற்கான முன்னேற்பாடுகள் என்று யாருமே சந்தேகப்படவில்லை.
இதிலுள்ள மற்றுமோர் வேடிக்கை என்னவென்றால், தென்னிந்தியாவில் நடைபெற இந்த ராணுவ முன்னேற்பாடுகள் தங்கள் நாட்டுக்கு இந்திய ராணுவத்தை அனுப்புவதற்கே என்பதை இலங்கை அரசும் தெரிந்து கொள்ளவில்லை. தமிழகத்திலிருந்த விடுதலை இயக்கங்களும் தெரிந்து கொள்ளவில்லை.
அந்தளவுக்கு, எதற்காக இவை செய்யப்படுகின்றன என்று சொல்லப் படாமலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
india_seekiyar_003இதில் இலங்கை அரசின் நிலை மிகவும் பரிதாபமானது.
“இந்தியப் படைகளை அனுப்பி வையுங்கள்” என்று இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனே இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கேட்டுக் கொண்டபோது, இந்தியா சில நூறு ராணுவத்தினரை உள்ளடக்கிய ஒரு சிறு படைப்பிரிவைத்தான் அனுப்புவார்கள் என்று நினைத்திருந்தார்.
அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தின் ஒரு சிறு படைப்பிரிவு வந்து ஈழ விடுதலை இயக்கங்கள் இலங்கை ராணுவத்தை தாக்காமல் இருக்கிறார்களா என்பதை கண்காணிப்பார்கள். அது நமக்குத்தான் நல்லது என்றே இலங்கை ஜனாதிபதி நினைத்திருந்தார்.
“ஆனால்  இலங்கையில் இந்தியப் படைகள் வந்து இறங்கத் தொடங்கியபோது, கொண்டு வரப்பட்ட ஏராளமான ராணுவத்தினர் மற்றும் டாங்கிகள் போன்ற கனரக வாகனங்களைப் பார்த்தபோது, இது அமைதிப்படையா அல்லது யுத்தம் புரிய வரும் படைப்பிரிவா என்ற சந்தேகம் இலங்கை ராணுவத்துக்கு ஏற்பட்டது” என்று ஜே.ஆர். ஜெயவர்தனேவின் சுயசரிதை நூலில் எழுதப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டு 24 மணிநேரம்   முடிவதற்கு முன்னரே ஜுலை 30-ம் தேதி மட்டும் மொத்தம் 34 விமானங்கள்   இந்திய ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு இலங்கையில் போய் இறங்கின.
இப்படிக் கொண்டு வந்து இறக்கப்பட்டவர்களை வைத்து சில மணி நேரத்தில் இந்தியாவின் 54வது இன்ஃபான்ட்ரி படைப்பிரிவு இலங்கை மண்ணில் உருவாக்கப்பட்டது.
இலங்கையில் உருவாக்கப்பட்ட இந்த 54வது படைப்பிரிவு என்பது இந்திய ராணுவத்தின் 47, 76 மற்றும் 91-வது படைப்பிரிவின் வீரர்களை இணைத்து உருவாக்கப்பட்ட படைப்பிரிவு. இதில் இருந்தவர்கள் அனைவரும் மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங்கின் தலைமையில் செகந்திரபாத் ராணுவத் தளத்திலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள்.
தொடர்ந்து இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் இருந்த வெவ்வேறு இடங்களில் இருந்த வெவ்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த ராணுவத்தினர் திடீர் திடீரென விமானங்களில் ஏற்றப்பட்டு இலங்கையில் கொண்டுபோய் இறக்கப்பட்டார்கள்.
இதில் பெரிய தமாஷ் என்னவென்றால், இலங்கையில் கொண்டுபோய் இறக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர்களில் பலருக்கு, அவர்கள் வந்து இறங்கியிருப்பது, இந்தியாவுக்கு வெளியேயுள்ள மற்றொரு நாடு என்பதுகூட சொல்லப்பட்டிருக்கவில்லை.
யுத்த தளபாடங்கள் மற்றும் கனரக ராணுவ வாகனங்களும் அதுபோலவே கொண்டுவந்து இறக்கப்பட்டன. கொண்டு வரப்பட்ட சில கனரக யுத்த தளபாடங்களைப் பார்த்தால் இந்தியாவின் நோக்கம் அமைதியை மேற்பார்வை பார்ப்பதல்ல – வேறு ஏதோ திட்டம் இருக்கிறது என்று நினைக்க வைத்தது.
ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், இந்திய ராணுவம் இலங்கைக்கு வந்திறங்கிய இரண்டாவது நாளே கொண்டுவரப்பட்ட BMP-2 ரக டாங்கிகளைச் சொல்லலாம். இவை நாடுகளுக்கிடையிலான யுத்தத்தின்போது பயன்படுத்தப்படும் டாங்கிகள். தரையில் முன்னேறித் தாக்குவதுடன், எதிரி ராணுவத்தின் விமானங்களையும் தாக்கி வீழ்த்தக்கூடிய டாங்கிகள்.
ஈழ போராளி இயக்கங்களுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யச் சென்ற இந்திய அமைதிப்படைக்கு, இலங்கையில் BMP-2 ரக டாங்கிகள் எதற்கு யாருக்கும் புரியவில்லை.
இதிலுள்ள மற்றுமோர் விஷயம்; இந்த டாங்கிகள் எதற்காக, எங்கே அனுப்பப்படுகின்றன என்ற தகவலை இந்திய ராணுவத்தினருக்குக்கூட முழுமையாக சொல்லப்படாமல் இலங்கையில் கொண்டுபோய் இறக்கினார்கள்.
india_bmp2_01செகந்திராபாத்திலுள்ள 18வது இன்ஃபான்ட்ரி படைப்பிரிவைச் சேர்ந்த உத்தம் சிங் டொக்ரா கூறுவதைப் பாருங்கள்:
“செகந்திராபாத்தில் BMP-2 டாங்கிகளைஇயக்கும் வேலையில் நான் இருந்தேன். அப்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டதாக தகவல் வந்தது.
மறுநாளே சுமார் 10 டாங்கிகளை செகந்திராபாத் ரெயில்வே நிலையத்துக்குக் கொண்டு செல்லும்படி உத்தரவு வந்தது.
“ரயில்வே ஸ்டேஷனுக்கு எதற்கு டாங்கிகள்?” என்று ஆச்சரியமாக கேட்டபோது, அதற்கு கிடைத்த பதில் அதைவிட ஆச்சரியமானது.
“டாங்கிகளை ஏற்றிச் செல்ல சிறப்பு கூட்ஸ் ரயில் ஒன்று செகந்திராபாத் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வரப்போகிறது.
அதில் டாங்கிகளை ஏற்றுவது எப்படி என பயிற்சி செய்து பார்ப்பதுதான் நோக்கம்” என்பதே தள தளபதியிடம் இருந்து வந்த பதில்.
ரயில் வந்தது. நாங்களும் டாங்கிகளை ரயிலில் ஏற்றினோம்.
டாங்கிகளையும் எங்களையும் ஏற்றிக் கொண்டு ரயில் புறப்பட்ட பின்னர்தான் அது ஒன்றும் பயிற்சி அல்ல என்பதைப் புரிந்து கொண்டேன். ரயில் நேரே சென்னை வரை சென்றது.
சென்னையில் டாங்கிகளை இறக்கிய பின்னர் விமான நிலையத்துக்கு கொண்டு சென்றார்கள். இது டாங்கிகளை விமானத்தில் ஏற்றும் பயிற்சி என்று சொல்லப்பட்டது. மிகப் பெரிய IL76 கஜ்ராஜ் விமானம் ஒன்று நின்றது. அதில் டாங்கிகளை ஏற்றினோம்.
இரண்டாவது தடவை ஏற்றும்போது இவர்கள் ‘பயிற்சி’ என்று கூறுவது சும்மா கதை என்பது எனக்குப் புரிந்துவிட்டது.
டாங்கிகளை எங்கோ ரகசியமாகக் கொண்டு போகிறார்கள். போகும் இடம் எதுவென்று ரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.
விமானத்துக்குள் டாங்கிகளை ஏற்றியபின் விமானம் புறப்பட்டு மீண்டும் ஒருமணிநேரத்தில் தரையிறங்கியது.
விமானத்துக்குள் இருந்து டாங்கை வெளியே செலுத்தியதுபோதுதான் நான் இலங்கை மண்ணில் நிற்பதைப் புரிந்து கொண்டேன். இந்தியாவின் BMP-2 டாங்கியை இலங்கை மண்ணில் முதல் முதலில் பதித்த பெருமை எனக்குக் கிடைத்தது”
(தொடரும்)

இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் பதித்ததன் நோக்கம் என்ன?? – பகுதி-3

இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றிய விபரங்கள் தெரியவந்தபோது, இந்தியாவில் ஒருவிதமான உணர்வு இருந்தது. இலங்கையிலுள்ள தமிழ் மக்களிடம் ஒருவித உணர்வு இருந்தது, சிங்கள மக்களிடம் வேறுவித உணர்வு இருந்தது.
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்தியா செய்த முயற்சிகளை வரவேற்கவே செய்தார்கள். இந்தியா மூலமாக இலங்கையின் இனப்பிரச்சனை தீரப்போகின்றது என்று நம்பினார்கள்.
இதற்கு முக்கிய காரணம், ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன் இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் இலங்கை ராணுவம் நடத்தியிருந்த மோசமான தாக்குதல்களும், கடுமையான பொருளாதாரத் தடையும் தமிழ் மக்களை பெரிதும் சோர்ந்து போக வைத்திருந்தது.
அப்படியான நேரத்தில் இந்தியா தலையிடுவதால், இனிமேல் இலங்கை ராணுவத்தினரின் தாக்குதல் இருக்காது என்றும், அத்தியாவசிய பொருட்களில் தடை ஏற்படாமல் இந்தியர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் நம்பியதால் ஆதரவு உணர்வு அதிகமாக இருந்தது.
இலங்கையிலுள்ள சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்களின் உணர்வு இதற்குத் தலைகீழாக இருந்தது.
இந்த ஒப்பந்தம் பற்றிய முழு விபரங்களும் சிங்கள பகுதிகளில் தெரிய வந்தபோது அதற்கு எதிர்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. ஜே.ஆர். ஜெயவர்தனேவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் பலரே தனிப்பட்ட முறையில் ஒப்பந்தத்தை எதிர்த்தார்கள்.
rajiv-20140620-1
எதிர்த்தது மாத்திரமில்லாமல், அவர்களே சிங்கள மக்களைத் தூண்டிவிடவும் செய்தார்கள்.
கொழும்பு நகரில் வன்முறை வெடித்தது. 50க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. இலங்கை போக்குவரத்து கழகத்தின் சொத்துக்கள் (வாகனங்கள்) மாத்திரம் 140 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியில் சேதப்படுத்தப்பட்டன.
கொழும்பு நகரில் இப்படி வன்முறை நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருந்த காரணத்தால், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைச் செய்துவிட்டு, இந்தியா திரும்புவதற்கு கொழும்பு வீதிகளைப் பயன்படுத்த முடியவில்லை பிரதமர் ராஜிவ் காந்தியால்.
கொழும்பு நகரிலிருந்து கட்டுநாயக விமான நிலையத்துக்கு ராஜிவ் காந்தி ஹெலிகாப்டர் மூலம் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
கட்டுநாயகவில், இந்தியப் பிரதமர் இந்தியாவுக்குச் செல்லுமுன் இலங்கைப் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த வைபவத்தில் இந்தியப் பிரதமர் நடந்து சென்றபோது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் தனது துப்பாக்கியின் பின்புறத்தால் ராஜிவ் காந்தியின் தலையில் தாக்க முயன்றார்.
இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கூட தடுக்க முடியாதபடி துரிதமாக நடந்து விட்ட இந்த தாக்குதல் முயற்சியில் இருந்து ராஜிவ் காந்தி தப்பித்துக் கொண்டதன் காரணம் அவர் ஒரு விமானியாக இருந்ததால் இயற்கையிலேயே இருக்கும் எச்சரிக்கை உணர்வும் ரிஃப்ளெக்ஷனுமாக இருக்கலாம்.
தாக்குதல் முயற்சியைக் கண்டவுடன் ராஜிவ் காந்தி துரிதமாக நகர்ந்துவிட துப்பாக்கியின் பின்புறம் அவரது தலையில் படாமல் தோளில் பட்டது.
தாக்கியவரின் பெயர் விஜித ரோஹன.
விஜித ரோஹன கைது செய்யப்பட்ட நிலையில் அவரைப் பேட்டிகண்ட கார்ல் முல்லர் அந்தப் பேட்டியை சன்டே டைம்ஸ் பத்திரிகையில் பிரசுரித்திருந்தார். ராஜிவ் காந்தியை ஏன் தாக்கினீர்கள் என்று விஜித ரோஹனவிடம் கேட்கப்பட்டபோது அவர் கொடுத்த பதிலைப் பாருங்கள்.
“திரிகோணமலை ராணுவ முகாமில் வைத்து எங்களுக்குக் கூறப்பட்டிருந்தது என்னவென்றால், ராஜிவ் காந்தி இலங்கையின் முகத்தில் அறைந்துவிட்டார் என்றும், இந்தியா எங்களது (இலங்கையின்) எதிரி. தீவிரவாதிகளுக்கு (விடுதலை இயக்கங்களுக்கு) ஆதரவு கொடுக்கும் நாடு என்றும் எங்களுக்கு கூறப்பட்டிருந்தது.
அப்படியிருக்கும்போது பின்பு கொழும்பில் வைத்து அதே எதிரிக்கு பளபளப்பான வரவேற்புக் கொடுப்பதை யாரால் சகித்துக்கொள்ள முடியும்? எதிரிக்கு அடையாள அணிவகுப்பு மரியாதை செய்ய வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவு வந்தபோது எங்களில் பலர் கொதித்துக் கொண்டிருந்தோம்.
எமது நாட்டின் எதிரிக்கு எனது கையால் தண்டனை கொடுக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன், தாக்கினேன்” என்றார் விஜித ரோஹன தனது பேட்டியில்.
கிட்டத்தட்ட இதே மனநிலைதான் பெரும்பாலான சிங்கள மக்களிடையேயும் இருந்தது.
இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொழும்பில் தாக்கப்பட்டார் என்ற செய்தி புதுடில்லியை அடைந்தவுடன் மிகப்பெரிய பூகம்பமே ஏற்பட்டது. இலங்கைக்கு ராணுவரீதியாக பாடம் கற்பிக்கவேண்டும் என்று அரசு உயர்மட்டத்தில் இருந்தவர்களே வெளிப்படையாகக் கூறினார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை நாட்டின் முதல் குடிமகன் இந்திய ஜனாதிபதி. அவர் பிரதமரை வரவேற்கப் போவது மரபு இல்லை. ஆனால் தாக்குதல் செய்தி தெரியவந்தபோது மரபு பற்றியெல்லாம் யோசிக்கத் தயாராக இல்லை இந்திய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன்.
தாக்குதலுக்கு உட்பட்டு வரும் இந்திய பிரதமரை வரவேற்க டெல்லி விமானநிலையம் சென்றார் அவர்.
ராஜிவ் காந்தியை ஏற்றிவந்த விமானம் டெல்லியில் தரையிறங்கியபோது கடும் கொந்தளிப்பான நிலை காணப்பட்டது.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் இனிமேல் அவ்வளவுதான் என்று கூறியவர்களும், இலங்கை மீது படையெடுப்பை இந்தியா உடனடியாக நடாத்தும் என்று ஊகித்தவர்களும் இருந்தார்கள்.
ஆனால் விமானம் தரையிறங்கிய பின்னர் தனது அரசியல் ஆலோசகர்களுடன் ஆலோசித்த இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட விரும்புகிறார் என்று கூறப்பட்டது.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் செய்துவிட்டு இந்தியா திரும்பிய பின்னரும் ராஜிவ் காந்தி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை டெல்லியில் மீண்டும் ஒருமுறை சந்தித்தார்.
Elam-1501
அந்தச் சந்திப்பின்போது, “எமது (விடுதலைப்புலிகள்) ஆயுதங்களை ஒப்படைப்பது இந்தச் சூழ்நிலையில் அவ்வளவு நல்ல யோசனையாக இருக்காது” என்பது புலிகளின் தரப்பால் தெரிவிக்கப்பட்டது.
“இந்தியப் பிரதமருக்கான அணிவகுப்பு மரியாதையின்போதே இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால் தாக்கப்படுகிறார். அப்படியான ராணுவத்தை நம்பி எப்படி ஆயுதங்களை ஒப்படைப்பது?” என்று கேட்டார்கள் புலிகள் தரப்பினர்.
அதற்கு ராஜிவ் காந்தி, “என்மீது நடந்த தாக்குதல் பற்றி நான் கவலைப்படவில்லை. இந்த ஒப்பந்தம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு சில உரிமைகளைப் பெற்றுத்தரும். தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும், விடுதலை இயக்கங்களின் பாதுகாப்புக்கும் இந்தியா உத்தரவாதம் கொடுக்கும் என்று இன்னமும் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இதற்கு பிரபாகரன், “போராட்டத்துக்காக தமது படிப்பு, எதிர்காலம் அனைத்தையும் விட்டுவிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து ஆயுதம் ஏந்திய ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நான் (பிரபாகரன்) என்ன பதில் சொல்வது? அவர்களது எதிர்காலத்துக்கு என்ன உத்தரவாதம்?” என்று கேட்டார்.
“விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் அவர்களது நல்வாழ்வுக்காக இந்தியா விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 500 மில்லியன் இந்திய ரூபா பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறது” என்றும் பிரபாகரனிடம் தெரிவித்தார் பிரதமர் ராஜிவ் காந்தி.
இந்த உறுதிமொழிகள் பிரபாகரனை முழுமையாக இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வைக்கவில்லை.
இதற்கிடையே இந்திய அமைதிப்படை இலங்கையில் போய் இறங்கிய நிலையில் பிரபாகரனையும், அவருடன் அழைத்து வரப்பட்டவர்களையும் தொடர்ந்தும் டெல்லியிலேயே வைத்திருந்தது மத்திய அரசு. அவர்களை எப்போது யாழ்ப்பாணத்துக்குத் திருப்பி அனுப்புவது என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறத் தொடங்கினார்கள் டெல்லி அதிகாரிகள்.
ashoka-20120901-1இதற்கிடையே, “பிரபாகரனும் மற்றவர்களும் எதற்காக டில்லியிலுள்ள அசோகா ஹோட்டலில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்ற கேள்வி யாழ்ப்பாணத்தில் எழுந்தது.
இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்து முடிந்து இலங்கை மண்ணில் வந்திறங்கிய இந்திய அமைதிப்படை, யாழ்ப்பாணத்தில் காலடி வைத்த தினத்திலிருந்து தமிழ் மக்களின் வரவேற்பைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் – சூழ்நிலை ஒரு கடுமையான யு-டர்ன் அடிக்கும்வரை!
சூழ்நிலை திரும்பியது ஜுலை மாதம் 31-ம் தேதி. (தொடரும்)

இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் பதித்ததன் நோக்கம் என்ன?? (பகுதி-4)

சென்னையில் பிரபாகரனின் சில மணி நேரம்
ஜுலை 31-ம் தேதியன்று இந்திய அமைதிப் படையினரின் வாகனங்கள் யாழ்ப்பாணத்தில் நகர முடியாதபடி விடுதலைப் புலிகள் ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வீதிகளில் அமர்ந்து கொண்டார்கள். விடுதலைப் புலிகளின் தலைவரையும் அவருடன் சென்றவர்களையும் திரும்பவும் யாழ்ப்பாணத்துக்கு அனுப்புங்கள் என்று கோஷமிடத் தொடங்கினார்கள்.
இந்திய அமைதிப் படையின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த மேஜர் ஜெனரல் ஹகிரட் சிங் பயணம் செய்து கொண்டிருந்த காரும் வழிமறிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அன்று மாலையே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ் பிராந்தியத் தலைவர் குமரப்பா இந்திய அமைதிப்படையின் தளபதியைச் சந்தித்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவந்து சேர்க்காதவரை எதுவுமே செய்யமுடியாது என்று தெரிவித்தார்.
premium-idஇந்திய அமைதிப்படையின் தளபதி பின்னாட்களில் கொடுத்த பேட்டியொன்றில், குமரப்பாவின் சந்திப்புப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.
“அவர் (குமரப்பா) நட்பு ரீதியாகப் பழகக் கூடியவர். மரியாதையாகப் பேசத்தெரிந்தவர். அன்றைய சந்திப்பின்போதும் மிகவும் மரியாதையுடனே பேசினார். ஆனால் மிக உறுதியாகப் பேசினார்.
‘நீங்கள் (இந்திய அமைதிப்படை) இங்கே வந்திருப்பது எங்களிடமிருந்து ஆயுதங்களை அகற்றுவதற்கு என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ஜெனரல், எங்களிடமிருந்து ஆயுதங்களை பலவந்தமாக அகற்ற முயன்றீர்கள் என்றால் நாங்கள் உங்களைத் திரும்பித் தாக்குவோம்.
நாங்கள் ஆயுதம் தூக்கினால் இந்திய அமைதிப்படையின் ஆட்களைக் கொல்லமுடியும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். நாங்கள் எங்களைத் தமிழீழத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்கள். தமிழீழத்துக்காக உயிரையும் விடத் தயாராக இருப்பவர்கள்.
எங்கள் தலைவர் இங்கே திரும்பி வந்து எங்களிடமுள்ள ஆயுதங்களை ஒப்படையுங்கள் என்று கூறும்வரை எங்களிடமிருந்து உங்களால் ஆயுதங்களை அகற்றவே முடியாது.
உங்களைப் போலவே விடுதலைப்புலிகளும் ஒரு ராணுவம்தான். தளபதியின் கட்டளைக்கு மாத்திரமே கீழ்ப்படிவோம். இந்தத் தகவலை டில்லிக்கு அனுப்பி, எங்கள் தலைவரை இங்கு அழைத்து வாருங்கள். அதுவரை எதுவுமே இங்கே நடக்காது என்றார் குமரப்பா.”
இந்தக் கூற்றிலிருந்த முக்கியத்துவம் இந்திய அமைதிப்படையின் தளபதிக்கு நன்றாகவே புரிந்திருக்க வேண்டும். அவர் புதுடில்லிக்குத் தகவல் அனுப்பினார்-
“பிரபாகரனை யாழ்ப்பாணம் அனுப்பாதவரை இங்கே எதுவும் செய்ய முடியாது”
இது நடைபெற்று இரு தினங்களில் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியிடமிருந்து, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனேவுக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று இந்தியத் தூதுவர் டிக்சித் மூலமாக கொழும்புவந்து சேர்ந்தது.
இதோ, கடிதத்திலிருந்த வாசகங்கள்:
விடுதலைப்புலிகளின் தலைவர் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு விட்டார். ஆயுதங்களை ஒப்படைக்கவும் சம்மதித்து விட்டார். ஆயுத ஒப்படைப்பை அவர் நேரடியாக யாழ்ப்பாணத்தில் நின்றே செய்ய விரும்புகிறார்.
இந்த நடைமுறைகள் சுமுகமாக நடைபெறுவதற்காக இன்று மாலை, ஆகஸ்ட் 2-ம் தேதி விடுதலைப் புலிகளின் தலைவரை விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கிறோம்.
ipkf_vanni_1பிரபாகரன் டில்லியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட தினத்தன்று என்ன நடந்தது?
அன்றைய தினம் பற்றி இந்திய அமைதிப்படையின் முழுமையான ஆபரேஷனுக்கு தலைவராக இருந்த லெப்டினென்ட் ஜெனரல் திபிந்தர் சிங், இந்திய அமைதிப்படை பற்றி பின்னாட்களில் எழுதிய புத்தகத்தில் இப்படி எழுதுகிறார் (47, 48-ம் பக்கங்கள்):
நான் சென்னையில் இருந்தேன். டெல்லியில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சென்னை வழியாகச் செல்லப் போவதாகத் தகவல் கிடைத்தது. சென்னையில் அவரைச் சந்திக்க விரும்பினேன்.
அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவர் இந்திய ராணுவத்தின் தெற்கு பிராந்திய தலைமையத்தில் உள்ள விருந்தினர் அறையில் என்னைச் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அவருடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவின் தலைவர் யோகியும், வேறு இரு உறுப்பினர்களும் வந்தார்கள். அறைக்குள் நுழையும் முன் வெளியே வராந்தாவில் தனது செருப்புக்களைக் கழட்டிவிட்டு (மரியாதை நிமித்தம்) உள்ளே வந்தார் பிரபாகரன்.
அவர் டெல்லியில் இருந்தபோது வீட்டுக் காவலில் இருந்தாரா இல்லையா என்பது பற்றிய சர்ச்சை இருந்தது. நாங்கள் இருவருமே அதுபற்றிப் பேசவில்லை.
ஆனால், “இனிமேல் எக்காரணம் கொண்டும் இந்திய வெளியுறவு அமைச்சையோ, இந்திய உளவுத்துறை ‘ரா’வையோ நான் நம்பமாட்டேன்” என்று அவர் வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார்.
ஆயுதங்களை அகற்றுவது என்ற விஷயம் வந்தபோது, நான் மிகவும் கவனமாக ‘சரணடைவது’ என்ற சொல்லை உபயோகிக்காதபடி பார்த்துக் கொண்டேன்.
“நான் யாழ்ப்பாணம் சென்று எமது இயக்க தளபதிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் ஆயுத அகற்றல் நடைமுறையை வைத்துக் கொள்ளலாம்” என்று பிரபாகரன் தெரிவித்தார்.
“ஆயுதங்களை இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டால், விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் இருக்கும் ஆயுதங்களிலேயே மிகப் பெரிய ஆயுதத்தை, நானே எனது கையால் உங்களிடம் (ஜெனரல் திபிந்தர் சிங்) ஒப்படைப்பேன். போதுமா?” என்று அவர் கூறினார்.
இந்திய ராணுவ தெற்கு பிராந்திய தலைமையகம் வந்துள்ள அவருக்கும், இவருடன் வந்தவர்களுக்கும் ஏதாவது பானம் கொடுத்து உபசரிக்க விரும்பினேன்.
“நீங்களோ உங்களுடன் வந்தவர்களோ மதுபானம் அருந்த விரும்பினால் இங்கே ஏற்பாடு செய்யலாம். ஆனால், மன்னிக்கவும் சிகரட் ஏற்பாடு செய்ய முடியாது” என்று நான் கூறியபோது, அவர் சிரித்தபடி “மதுபானம் அருந்துவதும் புகைப்பதும் விடுதலைப் புலிகளின் விதிமுறைகளுக்கு முரணானது” என்றார்.
அதன்பின் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக அவரும் மற்றவர்களும் விமான தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆகஸ்ட் 2ம் தேதி விடுதலைப் புலிகளின் தலைவரும் மற்றயவர்களும் சென்னையிலிருந்து பலாலிக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டு, அங்கிருந்து இந்திய அமைதிப் படையின் கவச வாகனங்கள் மூலம் சுதுமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஜுலை 24ம் தேதி சுதுமலையில் எந்த இடத்திலிருந்து அவர் அழைத்துச் செல்லப்பட்டாரோ, அதே இடத்தில் அவருக்காகக் காத்திருந்த விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கொண்டார்.
வந்து இறங்கிய அதே இடத்தில், சுதுமலை அம்மன் கோவில் திடலில் அடுத்த இரு தினங்களில் விடுதலைப் புலிகளின் தலைவரின் பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற்றது. அவர் கலந்து கொண்ட முதலாவது பொதுக்கூட்டம் அதுதான்.
“நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்” என்ற பிரபலமான உரை அங்குதான் பேசப்பட்டது.
அதில், இந்தியாவின் நிர்ப்பந்தம் காரணமாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தது என்பதைக் குறிப்பிட்டிருந்தார். இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் அடக்குமுறையை பயன்படுத்தாதபடி இந்திய அமைதிப்படை பார்த்துக் கொள்ளும் என்று உறுதி கொடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.
“இந்தியாவும் இந்தியப்பிரதமரும் உறுதி கொடுத்திருக்கிறார்கள். அந்த உறுதி மொழியை நம்பி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எமது ஆயுதங்களை ஒப்படைக்கிறது. இந்திய அமைதிப்படை தமிழர்களைக் காக்கும் சக்தியாக இருக்கும் என நம்புகிறோம்” என்று அவர் கூறியபோது கூடியிருந்த மக்களிடையே பலத்த ஆரவாரம் எழுந்தது.
அப்படி ஆரவாரம் எழுந்த அந்தக் கணத்தில் – ஒரேயொரு கணத்தில் – அவரது முகத்தில் ஒரு மாற்றம் தோன்றி மறைந்ததை அந்தப் பேச்சை தொலைக்காட்சியில் பார்த்த சிலர் கவனித்திருக்கலாம்.
அந்த மாற்றத்துக்கு ஒரு அர்த்தம் இருந்தது என்பது மிக விரைவிலேயே தெரியவந்தது. (தொடரும்)

இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் பதித்ததன் நோக்கம் என்ன?? (பகுதி-5)

பிரபாகரன் யாழ்ப்பாணத்துக்கு ஆப்பப்பட்ட சில தினங்களில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியான ‘ஆயுதம் அகற்றல்’ என்ற சிக்கலான கட்டத்துக்கு நேரம் வந்தது.
ஒப்பந்தப்படி ஈழ விடுதலை தொடர்பாக இலங்கை அரசு கைது செய்து வைத்திருந்தவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும். அதற்குப் பிரதிபலனாக ஈழ விடுதலைப் போராளி இயக்கங்கள் எல்லாம் தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.
இதுதான் மிகவும் சிக்கலான கட்டமாக நோக்கப்பட்டது.
ஒப்பந்தத்துக்கான ஆரம்ப கட்டப் பேச்சுக்கள் நடைபெற்றபோதே இந்த ஆயுதம் அகற்றல் விஷயத்தில்தான் இலங்கை அரசு மிகமிக ஆர்வமாக இருந்தது. அதற்குப்பல காரணங்கள் இருந்தன.
ஒப்பந்தத்தை காரணமாகக் காட்டி விடுதலை இயக்கங்களிடம் இருந்த ஆயுதங்கள் அகற்றிவிட்டால், ஒருவேளை ஒப்பந்தம் முறிந்து போனால்கூட விடுதலை இயக்கங்கள் மீண்டும் தங்களுக்குத் தேவையான ஆயுதங்களைப் பெறுவதற்கு நீண்டகாலம் எடுக்கும். அதற்குள் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்பது இலங்கை அரசு இதில் ஆர்வமாக இருந்ததன் முக்கிய காரணம்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்த பிரதமர் பிரேமதாச மற்றும் சில அமைச்சர்கள் ஆகியோரைச் சமாளிப்பதற்கு ஜே.ஆர். வைத்திருந்த துருப்புச்சீட்டும் இந்த ஆயுதம் அகற்றல்தான்.
ஒப்பந்தம் கையொப்பமாகும் தினத்தன்று காலையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்துக்கான விவாதம் மிகவும் சூடாக நடைபெற்றது. ஒப்பந்தமே வேண்டாம் என்று எதிர்த்துக் கொண்டிருந்த பிரேமதாசவையும் மற்றயவர்களையும் சமாதானப்படுத்த ஜனாதிபதி ஜெயவர்தனேவால் கூறப்பட்டது இதுதான்:
“எங்களுடைய (இலங்கை) ராணுவம் பல ஆண்டுகளாக ஈழ விடுதலை இயக்கங்களிடம் இருந்து ஆயுதங்களை அகற்றி தீவிரவாதத்தை நிறுத்த முயல்கின்றது. ஆனால் இன்று வரை வெற்றி கிடைக்கவில்லை.
இந்த ஒப்பந்தத்தில் ஒரு கையெழுத்து போடுவதன் மூலம் எமது ராணுவம் பல ஆண்டுகளாக செய்ய முடியாமல் இருந்ததை ஒரேநாளில் செய்து விடலாம் என்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை?”
“ஒப்பந்தம் ஏற்பட்டபின் அவர்கள் நிச்சயம் ஆயுதங்களை ஒப்படைப்பார்கள் என்பது என்ன நிச்சயம்?”
“அதற்கு தாங்கள் பொறுப்பு என்று ராஜிவ்காந்தி என்னிடம் நேரடியாகக் கூறியிருக்கிறார். இதோ பாருங்கள். கெட்ட காரியங்களை இந்தியர்களிடம் விட்டுவிடலாம். நாங்கள் அலட்டிக் கொள்ளாமல் அமர்ந்து பார்த்து ரசிக்கலாம். (Let Indians do the dirty work. We will sit back, relax and enjoy the show)”
இப்படி ஜே.ஆரினால் வர்ணிக்கப்பட்ட ஆயுத அகற்றலுக்கான நேரம் வந்தபோது, அதற்காக ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காரியம் முடிந்துவிடவில்லை. காலக்கெடு இரண்டு நாட்களுக்கு பிற்போடப்பட்டது.
காரணம் ஆயுதம் அகற்றல்பற்றி தனது தளபதிகளுடன் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வர அவகாசம் தேவை என்று பிரபாகரன் கூறியிருந்தார்.
விடுதலைப்புலிகள் இயக்கம் தவிர்ந்த மற்றய இயக்கங்கள் தனித்தனியாக அவர்களிடம் இருந்த ஆயுதங்களை ஒப்படைக்கத் தொடங்கினார்கள். தனிப்பட்ட போராளிகள் தமது கையிலிருக்கும் ஆயுதங்களை ஒப்படைப்பதாகவும், சிறுசிறு குழுக்களாகச் சென்று ஆயுதங்களை ஒப்படைப்பதாகவும் இந்த நடவடிக்கை நடக்க தொடங்கியது.
விடுதலைப்புலிகள் இயக்கமும் ஆயுதங்களை ஒப்படைப்பது என்று கொள்கை ரீதியான முடிவைக் கூறியிருந்தது. ஆனால் மற்றய இயக்கங்களைப்போல தனிப்பட்ட போராளிகளோ சிறுசிறு குழுக்களாக ஆயுத ஒப்படைப்பு செய்வதோ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நடைபெறவில்லை.
மாறாக, விடுதலைப்புலிகள் உறுப்பினர்களிடம் இருந்து புலிகளின் தலைமையால் நியமிக்கப்பட்ட சிலர் ஆயுதங்களை சேகரித்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.
விடுதலைப் புலிகளின் ஆயுதச் சேகரிப்பு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நடைபெறுகிறது என்ற விபரம் யாழ்ப்பாணத்துக்குள் அமைதிப் படையினருடன் கலந்து வந்திருந்து இந்திய உளவுத் துறையினருக்கு (ரா) தெரியவந்தது. அவர்கள் அதை டில்லிக்கு அறிவித்தனர்.
இதையடுத்து டில்லியில் இருந்து “புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராகின்றார்கள்” என்ற தகவல் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய ராணுவத் தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் இந்திய உளவுத்துறை ரா ஏஜென்ட்டுகளுக்கு யாழ்ப்பாணத்தில் தகவல் கொடுப்போரிடம் இருந்து மற்றுமோர் உளவுத் தகவலும் கிடைத்தது.
யாழ்ப்பாணத்திலுள்ள கடைகளில் என்றுமில்லாத அளவுக்கு பொலிதீன் பைகளும், கிரீஸும் (grease) விற்பனையாகின்றன என்பதுதான் அந்தத் தகவல்.
“யாழ்ப்பாணத்தில் உள்ள கடைகளுக்கு வரும் சில இளைஞர்கள், ஒவ்வொரு கடையிலும் இருக்கும் முழு பொலிதீன் பைகளையும், கிரீஸையும் பணம் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள். அவர்கள் எதற்காக வாங்குகிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை” என்ற தகவலை யாழ்ப்பாணத்திலிருந்த ‘ரா’வின் ஆட்கள் டெல்லிக்கு அனுப்பினார்கள்.
இந்த உளவுத் தகவல் எவ்வளவு முக்கியமானது, இதன் பின்னால் எவ்வளவு முக்கியமான ரகசியம் ஒன்று உள்ளது என்பதை, அன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட ‘ரா’ ஏஜென்ட்டுகள் யாரும் புரிந்து கொள்ளாதது ஆச்சரியம்தான்!
யாழ்ப்பாணத்தில் நடந்த இந்த நடவடிக்கை எதற்கு என்பது டில்லி அரசியல்வாதிகளுக்கும் புரியவில்லை. எனவே அதைப்பற்றி அவர்களும் கவலைப்படவில்லை.
விடுதலைப் புலிகள், “ஆகஸ்ட் 5-ம் தேதி தங்களது ஆயுதங்களை ஒப்படைக்கப் போகிறோம்” என்று பலாலி ராணுவ முகாமில் இருந்த இந்திய ராணுவத் தலைமைக்கு அறிவித்திருந்தார்கள்.
“விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்புக்காக 20 துப்பாக்கிகளையும், பிரதித் தலைவர் மாத்தையாவின் பாதுகாப்புக்காக 15 துப்பாக்கிகளையும் வைத்துக்கொண்டு மீதி ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விடுங்கள்” என்று தகவல் அனுப்பினார் இந்திய ராணுவத்தின் யாழ்ப்பாண ஆபரேஷனுக்கு பொறுப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்.
ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவின் தலைவராக இருந்த யோகி இரண்டு வாகனங்களில் ஆயுதங்களுடன் பலாலி முகாமுக்குச் சென்றார். இலங்கை அரசின் தரப்பிலிருந்து அன்றைய பாதுகாப்புச் செயலாளர் சேபால ஆடிகல, பலாலி ராணுவ முகாமுக்கு வந்திருந்தார்.
இலங்கை ராணுவ அதிகாரிகள் இந்திய ராணுவத் தளபதிகள் ஆகியோரின் முன்னிலையில் தன்னிடமிருந்த ஜேர்மன் மவுசர் துப்பாக்கியை மேசையில் வைத்தார் யோகி – ஆயுத ஒப்படைப்புக்கு அடையாளமாக.
இந்த ஆயுத ஒப்படைப்பு இலங்கை அரசுக்கு சொந்தமான ரூபவாஹினி டி.வி. சேனலிலும், இந்தியாவின் தூர்தர்ஷன் சேனலிலும் காண்பிக்கப்பட்டது. பாதுகாப்புச் செயலாளர் சேபால ஆடிகல இலங்கை ஜனாதிபதியிடம் இருந்து எடுத்துவந்த உத்தரவு ஒன்றைப் படித்தார்.
ஈழ விடுதலை தொடர்பாக இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 5400 தமிழர்களை விடுதலை செய்யும் உத்தரவு அது.
யோகியுடன் வந்திருந்த இரண்டு வாகனங்களில் இருந்த ஆயுதங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன.
அப்படி ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களில் பெரும்பான்மையான ஆயுதங்கள், சில ஆண்டுகளுக்கு முன் இந்திய உளவுத்துறை ‘ரா’வினால் விடுதலை புலிகளுக்குக் கொடுக்கப்பட்ட ஆயுதங்கள் என்பதை அங்கிருந்த இந்திய ராணுவத் தளபதிகள் புரிந்து கொள்ளவில்லை.
இதை மட்டுமா புரிந்து கொள்ளவில்லை?
யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் பொலிதீன் பைகளையும் கிரீஸையும் வாங்கியவர்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என்பதை இந்திய உளவுத்துறையும் புரிந்து கொள்ளவில்லை. அவை எதற்காக வாங்கப்பட்டன என்பதையும் புரிந்து கொள்ளவில்லை.
இவற்றில் புரிந்துகொள்ள என்ன உள்ளது?
முதலாவது, ஆயுத ஒப்படைப்பு என்று சொல்லி, தமக்கு ‘ரா’ கொடுத்த ஆயுதங்களையே, இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது, விடுதலைப் புலிகள் இயக்கம்.
இரண்டாவது, விடுதலைப் புலிகளிடம் இருந்த புதிய, முக்கிய ஆயுதங்கள் அனைத்தும் பழுதடையாமல் கிரீஸ் பூசப்பட்டு, பொலிதீன் பைகளில் பேக்கிங் செய்யப்பட்டு, இடம் அடையாளம் வைத்து தரையடியே புதைக்கப்பட்டு விட்டன.
(தொடரும்)

இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் பதித்ததன் நோக்கம் என்ன?? (பகுதி-6)

அப்போது இலங்கை ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றில், “விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் தங்களது முழு ஆயுதங்களையும் ஒப்படைக்கும்வரை காத்திராமல் இலங்கை அரசு ஏன் அவரசப்பட்டு எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய்கிறது?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ஜெயவர்த்தனே, “விடுதலைப் புலிகளது முழு ஆயுதங்களையும் ஒப்படைக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. அதற்கான உறுதிமொழி இந்திய அரசால் இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஆயுத ஒப்படைப்பை இந்திய அரசு கவனித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கிறோம்” என்றார்.
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரை அருகில் வைத்துக்கொண்டு இலங்கை ஜனாதிபதி இப்படி அறிவித்தது ஒரு சாமர்த்தியமான நடவடிக்கை என்றும், இந்தியர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை வேறு வழியில்லாமல் நிறைவேற்றியே ஆகவேண்டிய நிலையை ஜனாதிபதி ஜெயவர்த்தனே ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் எழுதியது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை.
இதற்கு மறுதினம் ஆகஸ்ட் 9ம் தேதி பிரதமர் பிரேமதாச தனது இரண்டு வார மௌனத்தை முறித்துக் கொண்டு வாய்திறந்தார்.
கொழும்புக்கு அருகே நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பிரேமதாச பேசியபோது “இலங்கை – இந்திய ஒப்பந்தம்  நான் இலங்கைக்கு வெளியே வெளிநாடு ஒன்றில் இருந்தபோது முடிவு செய்யப்பட்டது. பிரதமர் என்ற முறையில் என்னைக் கலந்து ஆலோசிக்கவில்லை. எனவே இந்த ஒப்பந்தத்துக்கு நான் கட்டுப்படவேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
“இந்த ஒப்பந்தம் தமிழர்களுக்கு குறிப்பிட்ட சில அதிகாரங்களுடன் கூடிய தமிழ் ஈழம் ஒன்றை உருவாக்கிக் கொடுக்கும் ரகசியத் திட்டத்துடன் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கின்றேன்” என்றார் அவர்.
“எமது மூதாதையர்கள் இந்த நாட்டை ஒரு முழு நாடாக விட்டுச் சென்றார்கள். அப்படியான நாடு இப்போது துண்டு துண்டாக உடையக்கூடிய நிலையில் இருக்கின்றது. இலங்கை ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தம், நாடு உடைவதைத் தடுக்குமா அல்லது நாட்டை உடையச் செய்யுமா என்று நாங்கள் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று அவர் கூறியது பலரது புருவங்களை உயரவைத்தது.
காரணம் அவர் இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்ற வார்த்தைப் பிரயோகம் செய்யாமல், இலங்கை ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் என்றே குறிப்பிட்டிருந்தார்.
அதாவது இது தனிப்பட்ட இருவரால் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் என்றே பார்க்கப்பட வேண்டும் என்று அவர் சொல்லாமல் சொல்லியிருந்தார்.
இந்தப் பேச்சில் இருந்து பிரேமதாசா இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நேரடியாக எதிர்க்கத் துணிந்து விட்டார் என்பதை புரியக் கூடியதாக இருந்தது அவர் இப்படிப் பேசுவதற்கு முன்னர் இரண்டு வாரங்கள் மௌனமாக இருந்தார் என்று கூறியிருந்தோம் அல்லவா.
அந்த இரண்டு வாரங்களிலும் தனது ஆதரவாளர்களையும், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தவர்களையும் மறைமுகமாகச் சந்தித்து ஒன்று திரட்டியிருந்தார். ஜனாதிபதி ஜெயவர்த்தனேவுக்கு எதிராக இறங்குவதற்கு ஒரு களம் அமைத்து வைத்திருந்தார்.
இதற்குக் காரணம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களை அரசியலில் இருந்தே ஒதுக்கி வைக்கும் விதத்தில் ஜனாதிபதி ஜெயவர்த்தனே திட்டம் வைத்திருந்தார் என்பது பிரேமதாசவுக்குத் தெரிந்திருந்தது.
ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட தினத்தில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்திய ஜனாதிபதி ஜெயவர்த்தனே, அந்த விவகாரத்தை வெளிப்படையாகத் தெரிவித்தும் இருந்தார். பல அமைச்சர்களுக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுக்கும் பாணியில் இருந்தன ஜனாதிபதி ஜெயவர்த்தனே கொடுத்த சில பதில்கள்.
இதோ அன்றைய செய்தியாளர் மாநாட்டில் சில கேள்விகளுக்கு ஜனாதிபதி ஜெயவர்த்தனேவால் கொடுக்கப்பட்ட பதில்களைப் பாருங்கள் புரியும்.
கேள்வி: இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு ஒப்பந்தம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?
ஜெயவர்த்தனே: ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது என்பது இலங்கை என்ற நாட்டின் கைகளில் இருக்கின்றது. இலங்கையின் கையில் இருக்கின்றது என்றால் ஜனாதிபதியான எனது கையில் இருக்கின்றது என்றும் அர்த்தம். நான் நிறைவேற்றுவேன்.
கேள்வி: எனது கேள்வி என்னவென்றால், இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு உங்களது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. உங்களது பிரதமரே (பிரேமதாச) இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கும்போது இதை எப்படி உங்களால் நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் சென்று ஒப்புதலைப் பெறமுடியும்?
(தொடரும