இலங்கையில் திடீர் அலறல்
“இலங்கை அரசு சும்மா பார்த்துக் கொண்டு இருந்தால், இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி, இலங்கைக்குள் தமிழர்களுக்கு தமிழ் ஈழம் ஒன்றை உருவாக்கி கொடுத்துவிட்டு போய்விடும். அதன்பின் நாம் எதுவும் செய்ய முடியாது” என்று அபாய எச்சரிக்கை கொடுத்துள்ளது, இலங்கை எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி.
இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான லக்ஷ்மன் கிரியெல்ல, கொழும்புவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், “பா.ஜ.க., இந்தியாவில் தற்போதுள்ள ஆளும் கட்சியான காங்கிரஸ் போன்ற ‘கொட்டாவி விடும்’ கட்சி அல்ல. அவர்கள் (பா.ஜ.க.) தீவிரவாத இந்துத்துவா அமைப்பு. அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், ‘இலங்கை அரசு இனியும் தமிழர்களுடன் விளையாடினால், எமது கட்சி அங்கே ஈழத்தை அமைத்து கொடுத்து விடும்’ என டில்லியில் வைத்து கடந்த வியாழக்கிழமை கூறியுள்ளார்.
இந்தக் கட்சியினர் சொல்வதை செய்யக் கூடியவர்கள். விடுதலைப் புலிகளால் 30 ஆண்டுகளாக சாதிக்க முடியாததை, பாரதீய ஜனதா கட்சி சாதித்து, ஈழத்தை அமைத்து கொடுத்துவிடும்.
பா.ஜ.க. ஈழம் உருவாக்கி கொடுக்கப்படும் என்று கூறுவதை நாம் லேசாக எடுத்துக் கொள்ள கூடாது. இந்தியாவின் தேசியக் கட்சி ஒன்று, அது ஆளும் கட்சியோ, எதிர்க் கட்சியோ, முதல் தடவையாக ஈழம் பற்றி பேசியிருப்பது ஒரு அபாய எச்சரிக்கை” என்றார்.
லக்ஷ்மன் கிரியெல்ல, “வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரீஸூக்கு சமீபத்தில் நான் நாடாளுமன்றத்தில் வைத்து கூறியதைதான் மீண்டும் கூறுகிறேன். இலங்கை தற்போது போகும் பாதை, சூடான், மற்றும் கிழக்கு திமோர் சென்ற அதே பாதை. அங்கெல்லாம் அரசுக்கு என்ன நடந்தது?
இப்போது, இந்தியாவின் பா.ஜ.க.வினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாம் உடனடியாக இந்தியா தொடர்பான எமது வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.