Dec 15, 2012

அ.தி.மு.க.வில் இணைந்த ம.தி.மு.க. நிர்வாகிகள்!

ம.தி.மு.க.வில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத் சமீபத்தில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவருக்கு அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியை வழங்கினார். இதையடுத்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் நாஞ்சில் சம்பத் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.
இதற்கிடையே நாஞ்சில் சம்பத் ம.தி.மு.க.வில் உள்ள தன் ஆதரவாளர்கள் 250 பேரை அ.தி.மு.க.வில் சேர்க்க முடிவு செய்தார். அதன்படி அவர்கள் அனைவரும் இன்று சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வந்தனர்.
 
அவர்கள் இன்று பகல் 12.30 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க. வில் தங்களை இணைத்துக் கொண்டனர். முன்னதாக தலைமை கழகத்துக்கு வந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை நாஞ்சில் சம்பத் வரவேற்றார்.
 
இந்த நிகழ்ச்சியின்போது அ.தி.மு.க. சார்பில் நாஞ்சில் சம்பத்துக்கு கார் ஒன்று பரிசாக கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பொதுக்கூட் டங்களில் பேசுவதற்கு வசதியாக இந்த பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
 
நாஞ்சில் சம்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள கார், இன்னோவா காராகும். இந்த காரின் சாவியை முதல்- அமைச்சர் ஜெயலலிதா, நாஞ்சில் சம்பத்திடம் வழங்கினார்.
 
பிறகு அந்த இன்னோவா கார் அருகில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சென்று பார்த்தார். தனக்கு கார் பரிசு வழங்கியதற்காக முதல்-அமைச்சர் ஜெய லலிதாவுக்கு நாஞ்சில் சம்பத் நன்றி தெரிவித்தார்.
 
அதன்பிறகு அ.தி.மு.க. வில் இணைந்த 250 ம.தி.மு.க. நிர்வாகிகளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். அவர்கள் அனைவருக்கும் அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். அவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
 
அன்புச் சகோதரர் அ.தி.மு.க. துணை கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமையில் ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைய வந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவு. நீங்கள் வந்த இடம் நல்ல இடம். எத்தகைய நம்பிக்கையுடன் இன்று கழகத்தில் இணைய வந்துள்ளீர்களோ அந்த நம்பிக்கை வீண் போகாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நம்முடைய லட்சியம், கல்லாமை இல்லாமை இல்லாத ஒரு தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். மக்களுக்காக இயங்குகிற ஒரு இயக்கம் அ.தி.மு.க. தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை நாம் போராடி பெற வேண்டும். இந்த லட்சியத்தை அடைய நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் மிக ஒளிமயமான எதிர்காலம் அமைய என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
 
இன்று அ.தி.மு.க.வில் இணைந்த ம.தி.மு.க. நிர்வாகிகள் விவரம் வருமாறு:-
 
ம.தி.மு.க.வைச் சேர்ந்த பொறியாளர் அணி துணைச் செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட அவைத் தலைவருமான லட்சுமணன், திருநெல்வேலி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்குமார், மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் தூத்துக்குடி வசந்தம் சரவணன், சட்டத்துறை துணைச் செயலாளர் மதுரை ஆசைத்தம்பி.மாணவரணி செயலாளர் வா.கோவிந்தராஜ் ,வழக்கறிஞர் ஞானவேல் ,வழக்கறிஞர் பாலாஜி
சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் ரைஸ்மில் பாலசுப்பிரமணியம், மாநில சட்டத்துறை துணை செயலாளரும், வடுகபட்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினர் கோவை சி.ஜெ.பிலிப்சன், மாணவர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் பொன்னியின் செல்வன்.
 
சிவகங்கை மாவட்ட, சாக்கோட்டை ஒன்றியச் செயலாளர் புதுவயல் சுப்பிரமணி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் காரைக்கால் சக்திவேல் உடையார், தென்சென்னை மாவட்ட அவை தலைவர் ஹைடெக் மனோகரன், மாவட்ட பொருளாளர் ஈகை செல்லப்பாண்டியன் உள்ளிட்ட 250 நிர்வாகிகள் தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.