Jul 2, 2014

நலம் 360’ - 3



மருத்துவர் கு.சிவராமன்.

முடி பற்றிய புரிதலும் வரலாறும் மிக மிக நீட்சியானது. முடியைப் பராமரிக்க, அலங்கரிக்க, அதை வைத்து அடையாளப்படுத்திக்கொள்ள மனித இனம் காலம்தொட்டு எடுத்துக்கொண்ட முயற்சிகளும், அதற்கான பதிவுகளும் வியப்பையும் விஞ்ஞானத்தையும் உள்ளடக்கியவை.

'ஆய்மலர் வேய்ந்த இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே’ என, காதலோடு நெருங்கிய கணவனைக் காண வெட்கி, ஆம்பல் மலர் கொய்த தன் கூந்தலை விரித்து அதன் கருமைக்குள் புதைந்த கவித்துவம் முதல், 'அரிவை கூந்தலின் நறியவும் உளவோ...’ என ஆண்டவரும் அரசாங்கக் கவியும் அடித்துக்கொண்டது வரை சங்க இலக்கியத்தில் கூந்தல் குறித்த செய்திகள் ஏராளம். ஆணும் பெண்ணும் பன்னெடுங்காலமாகக் கூந்தலை ஆற்றலின் வடிவமாக, ஆண்மையின் அடையாளமாக, பெண்மையின் அழகியலாக, மனச்செம்மையின் சின்னமாக... எனப் பல வடிவில் வைத்திருந்தனர். சமணர்கள், துறவின் அங்கமாக மழித்ததும், சமயம் கிடைத்தபோதெல்லாம் சைவம் அதைப் பழித்ததும் வரலாறு சொல்லும் முடி குறித்த செய்திகள்.

தன் அழகிய கூந்தலை, மிகுந்த மனஉளைச்சலில் இருக்கும் பெண்கள் கத்தரிக்கோலால் வெட்டிக்கொள்ளும் செய்தி, இன்றைக்கு உளவியல் நோயான Paranoid Diseases-ல் விவரிக்கப்படுவதுபோல, தமிழின் பழம் இலக்கியங்களில் உளப் பிறழ்வு கிரியை நோய்களிலும் சொல்லப்பட்டுள்ளன. கவிதையாக சங்கம் பேசிய இந்த முடி விஷயம், இன்று இந்தியச் சந்தையில் 100 பில்லியன் ரூபாய் வணிகம் என நீல்சன் கணக்கீடு சொல்கிறது.

'கோவிந்தா... கோவிந்தா...’ என திருப்பதியில் நாம் கொடுக்கும் முடி, நம்மிடம் மழித்த பிறகு fumigate (கிருமி களை முழுமையாக நீக்க, பூச்சிக்கொல்லி மருந்தடித்து 'ட்ரீட்’ செய்யும் முறை) செய்யப்பட்டு, பல தரப் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு, கொஞ்சம் கெரட்டின் சத்து எடுக்கவும், 'தாத்தா’ வயதில் 'மாமா’ தோற்றம் காட்ட 'விக்’ செய்யவும் விற்கப்படுகிறதாம். எவ்வளவுக்குத் தெரியுமா? வருடத்துக்கு 200 கோடி ரூபாய் மதிப்புக்கு!

20 வயது வரை, 'எண்ணெயா? என் தலையைப் பார்த்தா, உனக்குத் தாளிக்கிற பாத்திரம் மாதிரி தெரியுதா?’ என்றெல்லாம் கேட்டுவிட்டு, 'அங்கிள்... நீங்க எங்கே வேலை பார்க்கிறீங்க?’ எனப் பக்கத்து வீட்டுச் சின்னப் பெண் கேட்டதும் பதறி, 'அங்கிளா... நானா?’ என ஓடிப்போய் கண்ணாடியைப் பார்க்கையில், முன் மண்டையின் ஊடாக 'கூகுள் எர்த்’ தெரியும். உடனே, 'மச்சான் டேய்... முடி கொட்டுதுபோல. யாரைப் பார்க்கலாம்?’ என்ற முதல் கேள்வி பிறக்கும்.

அப்படி விசாரிக்கும் இளைஞர் கூட்டம் சிட்டி, பட்டி வித்தியாசம் இல்லாமல் பல்கிப் பெருகுவது தெரிந்ததும், 'பிசிபிசுப்பு இல்லாத மிகவும் லேசான எண்ணெய், நறுமண எண்ணெய், நெல்லிக்காய் முதலிய மூலிகை சேர்ந்த தைலம், வைட்டமின், புரதம் எல்லாம் சேர்ந்த மருத்துவ எண்ணெய், குளிர்ப்பூட்டி எண்ணெய்...’ என, இன்று சந்தையில் பல கம்பெனிகள், இந்த முடி பிரச்னைக்கு மருந்து தருவதாக ஏராளமான எண்ணெய் களுடன் திரிகின்றன. 'சாட்சாத் சந்திர மண்டலத்தில் இருந்து எடுத்த எண்ணெயில் காய்ச்சியது என்றும், வெள்ளை கோட் அணிந்த டாக்டர் தோற்ற அழகி, 'இந்த உலகின் முதல் தர சர்ட்டிஃபிகேட் பெற்றது எங்கள் எண்ணெய்’ என்றும் அல்வா கிண்டுகிறார்கள். கூடவே, 'இது மொட்டை மண்டையில்/வழுக்கையில் முடி வளரவைக்கும்’ என்றெல்லாம் சொல்லி, சாட்சிக்கு கிராஃபிக்ஸ், அனிமேஷன் எல்லாம் செய்து, 'அப்போ அப்படி... இப்போ இப்படியாக்கும்’ என, கூந்தல் வளர்ந்ததைக் காண்பித்து நடக்கும் வணிகம் கோடிகளில் கொடிகட்டிப் பறக்கிறது.

Androgenetic alopecia எனும் வழுக்கைதான், இன்றைய இளைஞர்களுக்கும் பெண்களுக்குமான முக்கிய முடி பிரச்னை என நவீன மருத்துவம் கூறுகிறது. AR எனும் மரபணுவின் காரணமாகத்தான் இந்த வழுக்கை வருகிறது. பொதுவாக, தலையின் ஒரு சதுர செ.மீட்டரில் புதிதாக முளைக்கும் முடி, நீளமான வளர்ந்த முடி, வளர்ந்து வாழ்ந்து ஓய்வில் இருக்கும் முடி... எனப் பலதரப்பட்ட முடிகள் இருக்கும். அந்தக் கூட்டத்தில் வயதாக வயதாக புது முடி பிறக்காமல் இருப்பதுதான் வழுக்கைக்கான காரணம்.

டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் எனும் ஆண்ட்ரோ ஜனின் காரணமாக இது அதிகரிப்பதாகவும் கண்டறிந் துள்ளார்கள். தமிழர் மருத்துவமான சித்த மருத்துவமோ பித்தம் உடலில் அதிகரிப்பதும், உடற்சூடு பெருகுவதை யுமே முடி கொட்டுவதற்கான முக்கியக் காரணங்கள் எனச் சொல்கிறது. இதில் முக்கியமான விஷயம், ஹிப்போகிரேட்டஸ் பேரன்மார் சொல்லும் நவீன மருத்துவ டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோனும், புலிப்பாணி பேரன்மார் சொல்லும் சித்த மருத்துவப் பித்து ஆதிக்கமும் உற்றுப்பார்த்தால் ஒன்றாகப் புரிவது வியப்பு மட்டுமல்ல; பாரம்பரிய அனுபவத்தின் அறிவியல் செறிவும்கூட!

கூந்தல் ஆரோக்கியமாக இருக்க, குழந்தை முதலே கரிசனம் வேண்டும். உணவு அக்கறை, முடி பராமரிப்பு, கூடவே நன்மை மட்டுமே விளைவிக்கும் வாழ்வியல்... இவைதான் அடர்த்தியான முடிக்கு அடிப்படை. அதோடு அப்பாவுக்கு 'அனுபம்கெர்’ நெற்றி இருக்கும்போது, பையனுக்கு 40 வயதில் 'விராட் கோஹ்லி’ கூந்தல் வராதுதான். முடி கொட்டுவதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி, எந்த நேரமும் அதைப் பற்றியே சிந்தித்து, கூகுளில் துழாவி, எல்லா மருத்துவர் கிளினிக்கிலும் கர்ச்சீஃப் போட்டு வைத்து, வாழ்வைத் தொலைக்கும் இளைஞர் கூட்டமும் இன்று ஏராளம். 'சார்... போன 15 நாள்ல எனக்குக் கொட்டுன முடியைப் பார்க்கிறீங்களா?’ என ஒரு கைப்பையில், தினமும் படுக்கையில், பாத்ரூமில், சீப்பில் சேகரமான முடிகளை ஒன்றுவிடாமல் சேகரித்து எடுத்து வந்த அந்த இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் எனக்கு திகில் ஏற்படுத்தினார். 'சுவாரஸ்யமாப் படிச்சிட்டு இருக்கும்போது, என்னை அறியாம முடியை விரல்ல சுத்தி 'பச்சக்’னு பிடுங்கிடுறேன்’ என, தலைப்புண்ணோடு முடி கொட்டி வந்த பெண்ணையும் பார்த்துப் பயந்திருக்கிறேன்.

'தலைக்குக் குளிச்சிட்டு காஞ்சதும் தேங்காய் எண்ணெய் கொஞ்சமாவது தேய்ச்சுக்கணும்’ என்பது மட்டும்தான் நம்மவர்கள் கடைப்பிடிக்கும் பல ஆண்டு பழக்கம். ஆனால் இன்றைக்கு, பல குளியல் அறைகளை எட்டிப் பார்த்தால், ஒரு மருந்துக்கடை அலமாரி போலவே காட்சியளித்து பயம் தருகிறது. பழைய நம்பியார் படங்களில் கண்ணாடிக்குப் பின் உள்ள அலமாரியில் தங்கக்கட்டிகள் இருப்பதுபோல, குளியலறை சவரக் கண்ணாடிக்குப் பின் பல கெமிக்கல் சாமான்கள். 'குளிப்பதற்கு முன் இந்த ட்ரீட்மென்ட் ஆயிலை கொஞ்சம் தேய்க்கணும். அப்புறம் இந்த ஷாம்பு, அதுக்குப் பின்னாடி இந்தக் கண்டிஷனர், அதன் பின்னர் உலர்த்திவிட்டு இதில் சில சொட்டுகள்... அதோடு முடி கலையாமல் இருக்க இந்த கிரீம், மினுமினுப்பாக இருக்க இந்தத் தெளிப்பான்’ என, ஏழெட்டுச் சங்கதிகளை சின்னதாக ஒரு யாகம் நடத்துவதுபோல தலையில் நடத்தும் இளைஞர்களுக்கும், ஆன்ட்டி-அங்கிள் பருவத்தினருக்கும், சோடியம் லாரல் சல்பேட், மீத்தைல் ஐசோ தையோசிலினைன் முதலான பல விஷமிகள் அலர்ஜி முதல் கேன்சர் வரை வரவைப்பன என்று தெரியுமா?

சரி, இதற்கெல்லாம் என்ன செய்யலாம்?

சின்ன வயசு முதலே சாப்பாட்டில் முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, சிறுகீரை சேர்த்துச் சாப்பிட வேண்டும். கம்பஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலை துவையல்... போன்றவை வாரம் 2-3 நாட்கள் அவசியம். மாதுளை ஜூஸ், காய்ந்த திராட்சை, உலர் அத்தி சாப்பிடுவது மிக நல்லது. வாரம் ஒரு நாளேனும் தலைக்கு நல்லெண்ணெய்த் தேய்த்துக் குளிப்பது அவசியம். தினமும் தலைக்குக் குளிப்பது முடி கொட்டும் என்பது, புளியமரத்தடியில் படுத்தால் பேய் பிடிக்கும் என்பது மாதிரியான மூடநம்பிக்கை. தலைக்குக் குளித்தால் முடி வளர்க்கும். சிஸ்டின் லைசின், அர்ஜினைன், மித்தோனைனின் போன்ற அமினோ அமிலங்களின் குறைவும்கூட முடி கொட்டுவதற்கான காரணங்கள். குழந்தைப் பருவம் முதல் வீட்டில் அடிக்கடி சுண்டல், நவதானியச் சத்துமாவுக் கஞ்சி, சிறுதானிய உணவு, பீன்ஸ், அவரை முதலான காய்கறிகள் சாப்பிடுவது, முடி கொட்டும் குறைபாடு நிகழாது தடுக்கும். இளம் வயதில் உணவின் மீதான அக்கறை, பின்னாளில் இளநரை இல்லாமல் முடியைக் காக்கும்!

திருச்செங்கோடு அருகில் 2,200 அடி தோண்டி தண்ணீர் எடுத்து, தென்னைக்கு ஊற்றுகிறார்களாம். இப்படிச் சூழல் சிதைவால் நீர் வற்றி, காற்று மாசுபட்டுப்போனதும் முடி கொட்டுவதற்கானப் பின்னணிச் சூழலியல் காரணங்கள். கட்டுப்படாத சர்க்கரை, இதய நோய், அதற்கான தவிர்க்க முடியாத மருத்துவம், சினைப்பை நீர்க்கட்டிகள், புராஸ்டேட் கோள வீக்கம், தைராய்டு குறைவு... என, சில மருத்துவக் காரணங்களும் முடி கொட்டுதலுக்குத் துணை செய்யும். இவையெல்லாம் தாண்டி, முடி கொட்டுவதற்கு மிக முக்கிய இன்னொரு காரணம், பரபரப்பாகவும், பரிதவிப்பாகவும், பயமாகவும் நகரும் மனம். பல பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் முடி கொட்டுவதற்கும் இதுதான் முக்கியக் காரணம். இளைஞர்களுக்கு வாழ்வின் முக்கிய நகர்வுகள் மீதான பயமும் அவநம்பிக்கையும் முடி கொட்டவைக்கும் முக்கியக் கூறுகள். மசபுசா மலையடிவார மூலிகை, அல்ட்ரா டெக்னாலஜி அணுக்கள் அடங்கிய ட்ரீட்மென்ட்டைவிட, சின்னதாக உச்சி முத்தம், கைகளை அழுந்தப் பற்றிய நடை, தோளோடு சேர்த்த அரவணைப்பு, 'அட’ எனும் பாராட்டுகள்கூட முடி கொட்டுவதை நிச்சயம் நிறுத்தும். செய்துதான் பாருங்களேன்..!

- நலம் பரவும்...

பொடுகு, டை... சில நம்பிக்கைகள்!

1. பொடுகுத் தொல்லை, தலையில் உள்ள சரும உலர்வால் ஏற்படு வதே தவிர, பூச்சித் தொற்று காரணம் கிடையாது. 'பொடுதலை’ என்ற ஒரு மூலிகை நம் மண்ணில் உண்டு. அதன் சாற்றை, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வாரம் 2-3 நாட்கள் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். SCALP PSORIASIS எனும் தோல் நோயைப் பலரும் பொடுகுத் தொல்லை என தவறாக நினைத்து அலட் சியப்படுத்துகின்றனர். அதிக அளவில் பொடுகுத் தொல்லை இருந்தால் குடும்ப மருத்துவரை ஆலோசிப்பது அவசியம்.

2. 100 சதவிகித 'மூலிகை டை’ என்று ஒன்று உலகில் இல்லவே இல்லை. 'கௌரவ வேடத்தி லாவது நீங்க நடிச்சா போஸ்டர்ல உங்க படம் போட்டு பப்ளிசிட்டி பண்ணிக்குவோம் சார்!’ எனப் பிரபலத்தை 'லைட்டா’ காட்டி படம் எடுப்பது போலத்தான், மூலிகை டை விஷயமும். கறுப்பு வண்ணம் தரும் நிறமி மட்டும்தான் மூலிகை. அதைத் தலையில் நிறுத்துவது ரசாயனக் குழம்பே!

3. தலையில், தாடி, மீசை, புருவத் தில் ஆங்காங்கே மழித்ததுபோல் வரும் சிக்கலை 'புழுவெட்டு’ எனும் அலோபீசியா ஏரியேட்டா என்பார்கள். இது உடல் நோய் எதிர்ப்பாற்றல் குறைபாட்டால் முடி வளர்ச்சியைப் பாதிக்கும் நோய். ஆனால் புழு, பூச்சிகள் இதற்குக் காரணம் கிடையாது. மற்றவர் பயன்படுத்திய சீப்பைப் பயன்படுத்தியதால் பரவும் தொற்று நோயும் கிடையாது. இதற்கு தடாலடி மருத்துவம் பயன் அளிக்காது. மன அழுத்தம் காரணமாக ஏற்படும் இந்தத் தொல்லைக்கு, தொடர்ச்சியான சிகிச்சை மட்டுமே அதுவும் மெள்ள மெள்ள நிவாரணம் அளிக்கும்!

வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி?

1. தேங்காய் எண்ணெய் - 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்!)

2. வெள்ளைக் கரிசாலைச் சாறு - 0.5 லிட்டர்

3. கீழாநெல்லிச் சாறு - 0.5 லிட்டர்

4. அவுரி சாறு - 0.5 லிட்டர்

5. கறிவேப்பிலைச் சாறு - 0.5 லிட்டர்

6. பொடுதலைச் சாறு - 0.5 லிட்டர்

7. நெல்லிக்காய்ச் சாறு - 0.25 லிட்டர்

8. சோற்றுக் கற்றாழைச் சாறு - 0.25 லிட்டர்

(மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் கிராமப்புறங்களில் பரவலாகக் கிடைக்கும். அப்படிக் கிடைக்காத இடங்களில், நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.)

இலைச் சாறுகளைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இடித்தோ, மிக்ஸியில் அடித்தோ பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் களில் கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.

இந்தச் சாறுகளின் கலவையைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மெல்லிய தீயில் எரித்து, நீர் வற்றி தைலம் பிரியும் தருவாயில் (அந்தச் சமயம் அடியில் தங்கியிருக்கும் கசடு மெழுகு போல இருக்கும்) பாத்திரத்தை இறக்கி வடித்துக்கொள்ளவும்.

இது மருந்து கிடையாது. அதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் தைலம் குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். (10, 15 சொட்டுகள் தேய்த்தால் போதும்.) அதன் பிறகே தலைக்குக் குளிக்க வேண்டும். பலர் நினைப்பது போல செயற்கை கண்டிஷனர்கள் அசகாயப் பொருள் அல்ல. செயற்கை எண்ணெய் ப்ளஸ் ரசாயனங்களின் கலவைதான். எண்ணெய் தேய்க்காத தலைமுடி கண்டிப்பாக உதிரும் என்பது நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!

Jun 29, 2014

உணவு யுத்தம் 18


உணவு யுத்தம்! – 18


டூப்ளிகேட் ஜவ்வரிசி!

ஜவ்வரிசிக்குப் போடப்பட்ட தடையை சமாளித்து, தொழிலை முன்னெடுத்துச் செல்லவே 1943-ல் சேகோ உற்பத்தியாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. இந்தச் சமயத்தில் தமிழகத்துக்கு வெளியே ஜவ்வரிசியைக் கொண்டுபோய் விற்கவும் அன்றைய அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து சேகோ உற்பத்தியாளர் சங்கம் போராடவே, இந்தத் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
1944-ல் 24 பவுண்டுகள் கொண்ட குச்சிக் கிழங்கு மாவு ரூ.20-ல் இருந்து ரூ.24 வரை விற்றது. இதன் தயாரிப்புச் செலவு வெறும் நான்கு ரூபாய்தான். இதனால், ஜவ்வரிசி தொழிலில் லாபம் கொட்டியது.
ஆனால், உலகப்போர் முடிந்த பிறகு, பனையில் இருந்து தயாரிக்கப்படும் ஒரிஜினல் சேகோவை நேரடியாக இறக்குமதி செய்வதற்கு, பலருக்கும் பிரிட்டிஷ் அரசு உரிமை வழங்கியது. இந்த நிலையில் ஒரிஜினல் ஜவ்வரிசியைவிட டூப்ளிகேட் ஜவ்வரிசி சந்தை பிரபலமாகி இருந்த காரணத்தால், அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என, இறக்குமதி உரிமை பெற்றவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதோடு, இந்த நகல் ஜவ்வரிசியை சேகோ என்று அழைக்கக் கூடாது என முறையிட்டார்கள்.
‘மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசி சந்தை பெருகிவிட்டது. அதோடு, இதன் விலை மலிவு என்பதால் அதை அரசு கட்டுப்படுத்தக் கூடாது’ என்று சேகோ உற்பத்தியாளர் சங்கம் அரசிடம் முறையிட்டது.
அப்போது ராஜாஜி தொழில் துறை அமைச்சராக இருந்த காரணத்தாலும், அவர் சேலம் பகுதி வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர் என்பதாலும், வெளிநாட்டில் இருந்து ஜவ்வரிசியை இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதற்கு, தற்காலிகத் தடை விதித்தார். 1949 வரை இந்தத் தடை அமலில் இருந்தது.
1950-க்குப் பிறகு இந்தியாவுக்குள் கிழக்கிந்தியத் தீவுகளில் இருந்து அசல் சேகோ இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையானது. அசல் ஜவ்வரிசியின் நிறம், லேசான தவிட்டு நிறம் கொண்டது. ஆனால் டூப்ளிகேட் ஜவ்வரிசி பளீரென ஒளிரும் வெண்மை நிறமுடையது. அசல் சரக்கு விலை அதிகம் என்பதால், அதன் விற்பனை குறையத் துவங்கியது. வங்கத்தில் ஜவ்வரிசி அதிகம் விற்பனையானதால், அங்குள்ள வணிகர்கள் போலி ஜவ்வரிசியை வாங்கி அதன் நிறத்தை மாற்றி, ஒரிஜினல் மலேசியன் சேகோ என விற்கத் தொடங்கினர்.
இப்படி நிறத்தை மாற்றித் தருவதற்கான சாயமேற்றும் நிறுவனங்கள் உருவாகின. இவர்கள் மரவள்ளிக் கிழங்கு ஜவ்வரிசியை ரசாயனம் மூலம் நிறம் மாற்றி ஒரிஜினல் மலேசியன் ஜவ்வரிசி என விற்பனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அதிக லாபம் கிடைக்கிறது என அறிந்துகொண்ட வணிகர்கள் பலரும், நிறம் மாற்றிய போலி ஜவ்வரிசிகளைச் சந்தையில் விநியோகம் செய்ய ஆரம்பித்தனர்.
மக்களால் இரண்டு ஜவ்வரிசிகளுக்கும் பெரிய வேறுபாடு கண்டறிய முடியவில்லை என்ற ஒரு காரணத்தை வைத்து, கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கத் தொடங்கினர்.
இப்படிப் போலி ஜவ்வரிசிகள் வருவதை அறிந்த சுகாதாரத் துறை, இதனைக் கண்டறிந்து டூப்ளிகேட் ஜவ்வரிசி மூட்டைகளைக் கைப்பற்றி அழித்தனர். இதனால், சேகோ தொழில் ஆட்டம் காணத் தொடங்கியது.
‘மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசி ஆரோக்கியமான உணவுதான். அதைச் சாப்பிடுவதால் உடல்நலக் குறைவு ஏற்படாது. இதைத் தனித்த ஒரு தொழிலாக அங்கீகாரம் செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்காக மேற்கு வங்கத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில் முடிவு எட்டப்படவில்லை.
வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தபோது, டாக்டர் பி.சி.ராய் வழியாக சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டு, சாதகமான ஒரு முடிவு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, இந்தியத் தர நிர்ணயக் கழகமும் சேகோ நிபுணர் கமிட்டியும் ஒன்றுகூடி ஆய்வுசெய்து, மரவள்ளிக் கிழங்கில் இருந்து செய்யப்படும் ஜவ்வரிசியை சேகோ என்று அழைக்கலாம் என அறிவித்தது. அதே நேரம், இதில் கலப்படம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்தது.
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் தவிர, ஆந்திர மாநிலம் சாமல்கோட் பகுதியிலும் சேகோ ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
உணவாக மட்டுமின்றி, பருத்தித் துணிகளைச் சலவை செய்யும்போது கஞ்சி போட ஜவ்வரிசி உதவியது. இதனால், அதன் தேவை மேலும் அதிகரித்தது. இந்த வளர்ச்சியால் சேலத்தைச் சுற்றி வாழப்பாடி, ஆத்தூர், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு புதிய பயிராக அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தமாக 85 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி விளைவிக்கப்படுகிறது.
மரவள்ளிக் கிழங்கு, தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட தாவரம். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளிக் கிழங்கு உற்பத்திசெய்யும் நாடு. உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மில்லியன் மக்கள் மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். உலகின் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியா மட்டும் ஆறு சதவிகிதம் உற்பத்தி செய்கிறது.
இனிப்பு மரவள்ளி, கசப்பு மரவள்ளி என இரண்டு வகை மரவள்ளிகள் உள்ளன. இந்தியாவில் 17-ம் நூற்றாண்டில் கேரளாவில் போர்த்துகீசியர்களால் மரவள்ளிக் கிழங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில், 3.1 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்படுகிறது. 60 லட்சம் டன் கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கு இந்தியாவின் 13 மாநிலங்களில் பயிரிடப்படுகிறது என்றாலும், கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களில் அதிகமாகப் பயிராகிறது. நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை மரவள்ளிக் கிழங்கு அதிகம் விளைகிறது.
கேரளாவில் கப்பைக் கிழங்குடன் மீன் சாற்றைத் தொட்டு உண்பதை முக்கிய உணவாகக் கொண்டிருக்கிறார்கள். அவித்த கிழங்கை மிளகாய், உப்பு போன்ற பொருட்களுடன் சேர்த்து உண்பதும் உண்டு. கிழங்கைக் குறுக்காகச் சீவி, எண்ணெயில் இட்டுப் பொரித்து சிப்ஸாகவும் சாப்பிடுகிறார்கள்.
உற்பத்தி செய்யப்படும் மரவள்ளிக் கிழங்கில் 58 சதவிகிதம் மனிதர்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. 28 சதவிகிதம் கால்நடைத் தீவனமாகவும், நான்கு சதவிகிதம் ஆல்கஹால் மற்றும் ஸ்டார்ச் சார்ந்த துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
உணவுத் தொழில்களிலும், பசைத் தயாரிப்பிலும் ஸ்டார்ச் பயன்படுகிறது. இன்று தமிழ்நாட்டில் ஜவ்வரிசித் தொழிலில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலைகள் மூலம் வருடத்துக்கு 23 லட்சம் மூட்டை ஜவ்வரிசியும், அது தவிர ஸ்டார்ச் மாவும் தயாரிக்கப்படுகின்றன.
ஸ்டார்ச் மாவில், மக்காச்சோளம் மாவை கலப்படம் செய்து ஜவ்வரிசி தயார் செய்கிறார்கள். அதிகப்படியான வருவாயை ஈட்ட, எடை கூட வேண்டும் என்பதற்காக சுண்ணாம்பு பவுடர், சோக் பவுடர் போன்றவற்றைக் கலக்கின்றனர் எனப் பல குற்றச்சாட்டுகள் சமீபமாக எழுந்துள்ளன.
மரவள்ளிக் கிழங்கில், தோல் நீக்கிய பின்பே மாவு தயாரிக்க வேண்டும். ஆனால் பல தொழிற்சாலைகள், தோலை நீக்காமலேயே, ஸ்டார்ச் தயாரிக்கின்றன. தோல் கலந்த ஸ்டார்ச்சை வாங்கிச் செல்லும் வணிகர்கள், இதைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் உணவுப் பொருட்களில் கலக்கின்றனர். குறிப்பாக, சில ஐஸ்க்ரீம் தயாரிப்பவர்கள் பால் மூலம் க்ரீம் தயாரிக்கச் செலவு அதிகம் என்பதால், ஸ்டார்ச் மாவு கலந்த கிரீமைப் பயன்படுத்துகின்றனர்.
சில்லி சிக்கன், மீன் வறுவல் ஆகியவற்றிலும், மொறுமொறுப்பு வேண்டும் என்பதற்காக ஸ்டார்ச் கலக்கின்றனர். இதனைச் சாப்பிடும் குழந்தைகள், வயிற்று வலி, அல்சர் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உட்படுவார்கள். இந்திய உணவு பாதுகாப்புச் சட்டப்படி, ஜவ்வரிசியில் இது போன்ற கலப்படங்கள் செய்வது குற்றம். நோயாளிகளுக்கு உணவாக அளிக்கப்படும் ஜவ்வரிசியில் கலப்படம் செய்வது, மனித உயிருடன் விளையாடுவதாகும்.
உணவை நஞ்சாக்கும் இதுபோன்ற வணிக முயற்சிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் பாயசமாக இருந்தாலும் நம்பி சாப்பிட முடியாத நிலை உருவாகிவிடும். இனிப்புக்காகச் சாப்பிடும் பாயசத்தின் பின்னே இத்தனை கசப்பான உண்மைகள் மறைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. உணவுச் சந்தையின் மோசடிகளை நினைத்தால் அடுத்த வேளை என்ன சாப்பிடுவது என்பதே பயமாக இருக்கிறது.