சாப்பிடாத குழந்தைக்கு....
வாய்க்கால் வரப்பில் வேலை செய்யும் களத்துமேட்டுப் பெண்கள் முதல் வாட்ஸ்-அப் பெண்கள் வரை கவலையுடன் பகிர்ந்துகொள்ளும் விஷயம், 'என்ன செஞ்சாலும் என் குழந்தை சாப்பிடுவேனானு அடம் பண்ணுது’ என்பதுதான். 'அதட்டி, மிரட்டி, கொஞ்சி, கெஞ்சி எல்லா ஆட்டமும் ஆடிப் பார்த்தாச்சு. தட்டுல போட்டது அப்படியே கெடக்கு. ஸ்கூலுக்கு டப்பால கொண்டுபோனது அப்படியே திரும்பி வருது. என்ன சார் செய்ய?’ என மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கும் பெற்றோரின் எண்ணிக்கை இப்போது அதிகம். 'சிறுதானிய சுண்டல், பழம், காய்கறிகள்னு என்னென்னவோ சொல்றீங்க. ஆனா, குழந்தை வாயைத் திறந்தாத்தானே அதெல்லாம் கொடுக்க முடியும்’ என அம்மாக்கள் வருத்தப்பட, 'எதுக்கு இந்தக் கவலை? அதான் அத்தனை நல்ல சத்துக்களையும் நாங்க துரித உணவுல, ஊட்டச்சத்து பானத்துல ஒளிச்சுவெச்சுத் தர்றோம்ல’ என அந்த வருத்தத்திலும் வணிகம் பார்க்க நினைக்கின்றன சத்துணவு நிறுவனங்கள். அந்த உணவு மற்றும் பானங்களின் பணப்பரிவர்த்தனை இந்தியாவில் 3,000 கோடிகளைத் தாண்டுகிறதாம்.
சரி... பிரச்னைக்கு வருவோம்!
பசி வந்தால் எந்தக் குழந்தையும், 'மம்மூ தா’ எனக் கேட்டு வாங்கிச் சாப்பிடும். ஆக, குழந்தைகளுக்குப் பசியைத் தூண்டுவதே, உணவூட்டலின் முதல் செயல். ஆனால், 'பள்ளி செல்லும் குழந்தைக்குப் பசியைத் தூண்டுவது எப்படி?’ என்று திட்டமிட்டு பிரயோஜனம் இல்லை. ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பிருந்தே, அந்த அக்கறை தேவை என்கிறது நம் பாரம்பரியம்.
தமிழர் மருத்துவத்தில், வாழ்வியலில் 'மாந்தம்’ என்ற அற்புதமான ஒரு சொல் வழக்கில் இருந்தது. ஆனால், இன்றைய துரித யுகத்தில் அது ஒட்டுமொத்தமாகத் தொலைந்துவிட்டது. மாந்தத்தைச் சரிசெய்யாவிட்டால், குழந்தைகளுக்கு சுலபத்தில் பசியெடுக்காது. அதுவே, வருங்காலத்தில் பல நோய்களுக்கு வழிவகுக்கும். குழந்தை உடல் எடை குறைந்து, நோஞ்சானாக இருக்கும். பசி குறைந்திருத்தல், மலக்கட்டு, ஜீரணம் இன்றி மலம் கழிதல், நீர் அல்லது சீதமுடன்கூடிய வயிற்றுப்போக்கு... என, பச்சிளங்குழந்தைகள் மந்தமாக இருப்பதைத்தான் மாந்த நோய்களாக அடையாளம் காட்டினார்கள் நம்மவர்கள்.
குழந்தை அழுவதைவைத்தும், அதற்கு வரும் காய்ச்சலின் தன்மையைக்கொண்டும், வீசிங் எனும் இரைப்பில் அது படும் அவஸ்தைகளைக்கொண்டும் அதற்கு அள்ளு மாந்தம், போர் மாந்தம், சுழி மாந்தம் என மிக அழகாக விவரித்த 'பீடியாட்ரீஷியன்’ பாட்டிகள் அன்றே நம்மிடையே உண்டு. டயாப்பர் இல்லாத காலத்தில் ஒரு பேருந்து பயணத்தின்போது பக்கத்து இருக்கையில் அம்மா கையில் இருந்த குழந்தை ஒன்று மலம் கழித்துவிட, 'முதல்ல மாந்தத் தைச் சரிசெய்யுமா... இல்லைனா கணச்சூடு ஏறி குழந்தை வாடிப்போயிடும். அப்புறம் நீ எதைக் கொடுத்தாலும் உடம்பு பிடிக்காது’ எனச் சொல்லிய அக்காக்களை இப்போது பார்க்க முடியவில்லை. வருங்காலத்தில் கணச்சூடு போன்ற உபாதைகள் வராமல், குழந்தைகளின் மாந்தப் பருவத்திலேயே வாரம் ஒரு நாள் வேப்பங்கொழுந்து, ஓமம், மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து மிளகு அளவுக்கு உருட்டி, அதில் தேன் கோட்டிங் கொடுத்து, வயிற்றுப்புழு நீக்கும் பழக்கமும் காணாமல் போய்விட்டது.
தாய்ப்பால் கொடுக்கும் சமயம், நிலக்கடலை உள்ளிட்ட ஜீரணிக்கச் சிரமம் தரும் பொருட்களைச் சாப்பிடாதீர்கள் என நம் முன்னோர்கள் சொல்வதை, நவீனம் முன்பு மறுத்தது. ஆனால், இப்போது அதே நவீனம், 'பிரசவித்த தாய் ஒருவேளை சாப்பிடும் ஏதேனும் புரதப்பொருள், தாய்க்கு ரத்தத்தில் lgE-ஐ அதிகரித்தால் (lgE- உடலின் அலர்ஜி பாதிப்புக் குறியீடு), அது தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு வரக்கூடும். அதனால், குழந்தைக்கு மாந்தமோ, கரப்பான் எனும் அலர்ஜி தோல்நோயோ வரலாம். எனவே, நிலக்கடலை குறைச்சுக்கலாமே, சோயா வேண்டாமே’ என்கிறது. ஒரே விஷயம்தான்... வேறு மொழியில்; வேறு வார்த்தைகளில்!
குழந்தைக்கு தாய்ப்பால் வழியாக நல்ல விஷயங்களைக் கொண்டுசென்று, திட உணவு (weaning food) சாப் பிடத் தொடங்கும் சமயம் ஜீரணத்தைத் தூண்டி, நன்கு பசிக்கவைக்கவும்தான், 'பிரசவ நடகாய் லேகியத்தில்’ அத்தனை மணமூட்டி மூலிகைகளையும் சேர்த்து, பிரசவித்த பெண்ணுக்கு அன்று தாய் வீட்டில் கொடுத்தனர். வீட்டிலேயே கிளறிக் கொடுக்கப்படும் அந்தச் சிறப்பு உணவில் உள்ள தண்ணீர்விட்டான் கிழங்கும், வெந்தயமும், பூண்டும் தாய்க்கு அதிக பால் சுரப்பைக் கொடுக்கும் என்றுதான் நெடுநாட்களாக சித்த ஆயுர்வேத மருத்துவர்கள்கூட நினைத்திருந்தனர். ஆனால், சமீப ஆய்வுகள் அந்த வெந்தயமும் பூண்டும் தாய்க்கு மட்டுமல்ல குழந்தைக்கும் உரமூட்டும் என்று உணர்த்துகிறது!
ஒன்றரை, இரண்டு வயதில் மாந்தத்தினால், அடிக்கடி வயிறு உப்புசத்துடன் வயிற்றுப்போக்கும் இருக்கும் குழந்தைக்கு, மிக அதிகமாகப் பயன்படும் மூலிகைக் கீரை உத்தாமணி. 'உத்தமம்’ என மகுடம் சூட்டி நம் சமூகம் கொண்டாடிய மூலிகை அது. வீட்டிலேயே விளக்கெண்ணெயில் உத்தாமணிச் சாற்றை சேர்த்துக் காய்ச்சி, அந்த எண்ணெயைக் குழந்தைகளுக்கான முதல் கைவைத்திய மருந்தாகப் பயன்படுத்திய நெடுநாள் வரலாறு நம்மிடையே உண்டு. அதைவிட அசரவைக்கும் செய்தி, அதைக் குழந்தைக்குப் பரிமாறிய விதம்! 'டிராப்பரில்’ வைத்து வாயில் ஊற்றினால், கொடுக்கும்போது ஒருவேளை குழந்தை திமிறி, மருந்து உணவுக்குழாய்க்குப் பதில் மூச்சுக்குழாய்க்குப் போய் நிமோனியா வந்துவிடக் கூடாது என எச்சரிக்கைகொண்டிருந்தனர் அப்போதே. அதனால் உத்தாமணி எண்ணெயை, தாயின் மார்புக்காம்பில் தடவி பால் கொடுக்கும்போது முதல் துளியாக உறிஞ்சவைக்கச் செய்திருக்கிறார்கள். அதுவும் குழந்தை குளித்ததும் பசித்திருக்கும்போது, எண்ணெயின் சுவை உணராதபடி வேகமாக உறிஞ்சும் என்பதால், அந்தச் சமயமே மருந்தைத் தடவச் சொன்ன நம் பாட்டி எந்தப் பட்டமும் படிக்காத விஞ்ஞானி!
பிறக்கும் முன், பிறந்த குழந்தைகளுக்கு இதெல்லாம் சரி..? வளர்ந்த குழந்தைகளின் மாந்தத்துக்கு என்ன செய்வது? 'போக்கை அடக்குமாம் பொடுதலை; ஆற்றை அடக்குமாம் அதிவிடயம்’ என்கிறது மாந்தத்துக்கான சித்த மருத்துவ முதுமொழி. மாந்தத்தில் வரும் வயிற்றுப்போக்கை அடக்கும் குணம் பொடுதலைக்கு உண்டு. ஆறு சீற்றத்துடன் பாய்வதைப்போல நீராகக் கழியும் வயிற்றுப் போக்குக்கு அதிவிடயம் அருமருந்து. பொடுதலையைச் சாறாக எடுத்துச் சூடாக்கி சுரசம் பண்ணியும், அதிவிடயத்தைக் கஷாயமிட்டும் கொடுத்தால் மாந்தம் மறையும்.
பின்னாளில் 'கணச்சூடு’ என்று அன்று சொன்ன பிரைமரி காம்ப்ளக்ஸ் எனும் இளங்காச நோயின் வருகைக்கு, சிவப்புக் கம்பளம் விரிப்பதுகூட இந்த மாந்தம்தான். 'மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் எனும் கிருமிதானே அதைத் தருகிறது. மாந்தக் கழிச்சலுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?’ எனப் படித்தவர்கள் வினவலாம். கழிச்சலில் குறைந்த நோய் எதிர்ப்பாற்றலில் சாதாரணமாகத் திரியும் அந்தக் கிருமி உடலுக்குள் குடித்தனம் நடத்த ஆரம்பித்து, நுரையீரலில் தொடங்கி அத்தனை உறுப்புகளையும் பதம் பார்ப்பது அதனால்தான். நவீன மருத்துவத்தில் 6 - 8 மாத காலத்தில் இதனை முற்றிலுமாக ஒழிக்க மருந்து இருக்கும் நிலையிலும், 'எங்களுக்கெல்லாம் இது வருமா?’ என்ற அலட்சியத்தில் மெலிந்த பல குழந்தைகள், பசியில்லாக் குழந்தைகள் காசநோயின் கணிப்பில் இருந்து தப்பி பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
'காசம் மட்டுமல்ல... ஆட்டிச நோய் நிவாரணத்துக்குக்கூட இந்த மாந்தக் கழிச்சலை முதலில் சரிசெய்யுங்கள். அது குழந்தையின் மூளைச் செயல்சிதறலைச் சரியாக்கி மீட்டெடுக்கும்’ என ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இத்தனைக்கும் காரணமான மாந்தத்துக்குத் தடுப்பாக நம் வாழ்வியலோடு ஒட்டியிருந்த விஷயங்கள் ஏராளம். பல்லூறும் பருவத்தில் வாயில் கடிக்க கையில் வசம்பு வளையல், வைத்து விளையாட வேங்கை மரத்தில் செய்த மரப்பாச்சி பொம்மை எல்லாம் இப்போதைய பார்பி டால்களிடமும் டெடி பியர்களிடமும் தோற்றுவிட்டன.
'போர்மாந்தக் கட்டை’ என்ற ஒன்று, திருச்சி மாவட்டப் பகுதிகளில் இருந்து வந்திருக்கிறது. 'குழந்தைகள் பசி இல்லாமல் மாந்தமாக இருக்கும்போது இந்தக் கட்டையில் உரைத்தோ அல்லது உடைத்துக் கஷாயமாக்கியோ பயன்படுத்தி மாந்தம் போக்கியிருக்கின்றனர்’ என்ற குறிப்பை தமிழ் மூதறிஞர் கி.ஆ.பெ. வரை பலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இப்போது அதைக் கேட்டால் பலருக்கும் தெரியவில்லை. மாந்தத்துக்கு அதிகம் பயன்படுவது நுணா மரக்கட்டையா, வேங்கை மரக்கட்டையா எனச் சித்த மருத்துவர்கள் இப்போதும் ஆராய்ந்து வருகின்றனர்.
கருச்சிதைவு குறைந்திருப்பது, மகப்பேறு சமயத்தில் தாய்-சேய் மரணங்கள் பெருவாரியாகக் குறைந்தது, பெருமளவில் அதிகரித்துள்ள தாய்-சேய் நலம் எல்லாமுமே நவீன மருத்துவமும் பொதுச் சுகாதாரப் புரிதலும் வந்ததால்தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. அதே சமயம் கொஞ்சம் அழுக்குப் படிந்திருக்கிறது என்பதற்காக, கழுத்துச் சங்கிலியைக் கழட்டி எறிவோமா நாம்? ஆனால், மரபு விஷயத்தில் அப்படித்தான் நடக்கிறது. நவீன அறிவியலாளரும் நவீன மருத்துவத் துறையும், இணைந்து பாரம்பரிய மருத்துவத்தில் தொலைந்தும், தூசி ஏறியும், மறைந்தும் இருக்கும் பல மகத்துவங்களை மீட்டு எடுக்க வேண்டிய காலம் இது. இணைவதில் மீட்டு எடுக்கவேண்டியது, பன்னாட்டுப் பிடியில் சிக்கியிருக்கும் நலவாழ்வு மட்டுமல்ல; இந்திய மண்ணின் உற்பத்தித் திறனும்தான்!
- நலம் பரவும்...
பஞ்சமூட்டக்கஞ்சி!
'பஞ்ச காலத்தில் ஊட்டக்கஞ்சி’ என்றும், 'ஐந்து பொருட்களால் செய்யப்படுவதால்’ என்றும்... இதற்குப் பெயர்க் காரணம் சொல்வார்கள். அரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, சிறுபருப்பு, துவரம்பருப்பு எல்லாவற்றிலும் சமபங்கு எடுத்துக்கொண்டு, நன்கு வறுத்து வெள்ளைத்துணி ஒன்றில் தளர்வாக முடிந்துகொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு, நீரின் மத்தியில் இது தொங்கும்படியாக பாத்திரத்தின் குறுக்கே ஒரு கம்பியில் கட்டி நீரைக் கொதிக்கவிட வேண்டும். நீரில் மூழ்கி இருக்கும் பொட்டலத்தின் தானியங்கள் நன்கு வெந்து, புரதமும் சர்க்கரையும் பிற சத்துக்களும் நீரில் கஞ்சியாகக் கரைந்துவரும். இந்தக் கஞ்சி, உடலுக்கு மிக ஊட்டம் தந்து உடல் எடையை அதிகரிக்கவைக்கும்!
நேந்திரம்பழக் கஞ்சி
நேந்திரம் வாழைக்காயைத் தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, வெயிலில் உலரவைத்துப் பொடித்துக்கொள்ளவும். அந்தப் பொடியில் துளி சுக்கு சேர்த்து, கஞ்சி காய்ச்சுவதுபோல காய்ச்சிக் கொடுக்க எடை கூடும். இது கேரளா ஸ்பெஷல்!
பஞ்ச தீபாக்கினி சூரணம்
சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம்... இவற்றின் கூட்டணிக்கு இப்படி ஒரு பெயர் உண்டு. சுக்கை மேல் தோல் சீவியும், பின் எல்லாவற்றையும் லேசாகப் பொன் வறுவலாக வறுத்தும் பொடி செய்துகொள்ளவும். அந்தக் கூட்டணிப் பொடியின் எடைக்குச் சமமாக நாட்டு ஆர்கானிக் வெல்லம் கலந்துகொண்டால், பஞ்ச தீபாக்கினி சூரணம் ரெடி. பசியைத் தூண்டும் இந்தப் பொடியை, 3 சிட்டிகை எடுத்து, ஒரு ஸ்பூன் அளவு தேனில் கலந்து, குழந்தைகளுக்குக் காலை உணவுக்கு முன் கொடுத்து வந்தால், மதியம் லன்ச் பாக்ஸ் எப்போதும் காலியே!
சாப்பிடாமல் மெலிந்திருக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு...
1. அன்பு, அரவணைப்பு, பாராட்டு, அக்கறை, உணவில் அழகூட்டுதல் போன்றவற்றை நீங்கள் சமையலுக்கு முன்னும் பின்னும் சேர்க்காமல் இருப்பதும் பசியின்மைக்குக் காரணங்களாகும். அதில் முதலில் கவனம் செலுத்துங்கள்.
2. 'ஸ்வீட் எடு.. கொண்டாடு!’ என இருக்க வேண்டாம். கொண்டாட்டம் என்றால், 'பழம் எடு... பரவசமாகு’ என கற்றுக்கொடுப்போம். அத்தனை இனிப்புப் பண்டங்களும் பசியடக்கி கபம் வளர்க்கும். குறிப்பாக 'மில்க் ஸ்வீட்’!
3. 'எல்லாத்தையும் சேர்த்துக் கொடுத்திருக்கோம்! அது புத்திசாலியாக்கும், ஓட வைக்கும், உயர வைக்கும், அழகாக்கும்...’ என சந்தையின் பாக்கெட் உணவுகளை முடிந்தவரை அன்றாட உணவில் இருந்து நீக்கிவிடுங்கள். பசி தானாக வரும்.
4. சாதாரண கீரை சாதம், மாவடுடன் மோர் சாதம், பால் கொழுக்கட்டை, மோதகம், ராகி உருண்டை, கருப்பட்டி சோளப் பணியாரம், உளுந்தங்களி, மாலாடு, கறிகோலா உருண்டை, சுறா மீன் புட்டு... இந்த உணவுகள் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கும்!
5. 'எல்லாம் கெடக்கு... அப்படியும் வாயைத் திறக்க மாட்டேங்கிறான்’ என்போர் ஏதேனும் வியாதி இருக்கிறதா என உங்கள் குடும்ப மருத்துவரிடம் கேளுங்கள். தைராய்டு, காசம் முதல் சிலியாக் வியாதி, சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் வரை பல வியாதிகள் பசியின்மைக்குக் காரணங்களாக இருக்கலாம்!