இரத்தம் படிந்த வழிகளிலும் நந்திக்கடலை
ஒட்டியும் நிற்கிறேன். முல்லைத்தீவுக்கு வந்திருந்த தொண்டு ஊழிய நண்பரே
அன்றும் என்னுடன் இருந்தார்.
அவர் சுற்றுலாப் பேருந்துகளைப் பார்த்துவிட்டு, ''போரின்போது மக்கள்
எப்படிக் கொல்லப்பட்டனர் என்பது நமக்குத் தெரியும் அளவுக்குகூடச் சிங்கள
மக்களுக்குத் தெரியாது. 'புலிகள் நம் நாட்டை ஆக்கிரமித்து இருந்தனர்,
அவர்களை நாம் விரட்டிவிட்டோம்’ என்ற கதைதான் அவர்களுக்கு வரலாறாகச்
சொல்லப்படுகிறது.
உடைத்து நொறுக்கப்பட்ட நிலையில் குவிந்து கிடக்கும் வாகனங்களின் முன்
நின்று இந்த மக்கள் படம் எடுத்துக்கொள்கின்றனர். எத்தனை பேர் செத்தனர்,
எவ்வளவு மரண ஓலங்கள் கேட்டது என்பதுகூடத் தெரியாமல், இந்த மண்ணைக் கண்டு
ரசிக்க வார விடுமுறைகளில் பேருந்துகளில் கூட்டம் கூட்டமாய் சுற்றுலா
வருகின்றனர்.
புலிகளை வெற்றிகொண்ட இராணுவ பூமி இது, நம் நாட்டின் வீரம் சொல்லும் கதை
இது என்ற கற்பனை மட்டுமே அவர்களிடம் உள்ளது. எப்படிப்பட்ட நச்சுக்
குண்டுகள் வீசப்பட்டன என்றெல்லாம் இவர்களுக்குத் தெரியாது.
இராணுவத் தலைமைப் பீடத்தில் இருந்து வரும் காணொளிகள் மட்டுமே போர்க்
காலத்தில் சிங்கள மக்களுக்குக் காட்டப்பட்டன. இனரீதியான பாகுபாட்டையும்,
இலங்கை சிங்கள தேசம் என்ற நிலைப்பாட்டையும் சிங்கள மக்கள் மனதில்
திணித்துக்கொண்டே இருக்கிறது சிங்கள அரசு என்றார்.
அப்போது நாங்கள் இருந்த இடம் 'போர் அருங்காட்சியகம்’. விளக்கங்கள்
அனைத்தும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மட்டும்தான் இருந்தன. அதில்
ஆயுதங்களின் விளக்கம் சிங்களத்தில் மட்டும்தான். 'தீவிரவாதிகளின்
தற்கொலைப் படகு’ தொடங்கி நிலவன், இசையரசி, பரந்தாமன், ஊடுருவி போன்ற கடல்
புலிகளின் படகுகள் அங்கு இருந்தன.
சாதாரணமாக ஒரு என்ஜினை வைத்தாலே படகில் நிற்க முடியாது. ஆனால், கடல்
புலிகள் நான்குக்கும் மேலான என்ஜின்களை பொருத்தி நின்று செல்வார்கள்.
அந்தப் படகுகள்தான் இவை என்று கூறினார்.
இந்தப் பகுதிகள் எல்லாம் கடல் புலிகளின் கையில் இருந்த பகுதிகள்.
அப்போது பழுதான படகுகளை இங்கு சரிபார்ப்பார்கள். இங்கு
காட்சிப்படுத்தப்பட்டுள்ள எல்லாமே பழுதானவை. செயல்பாட்டில் இருந்தவை என்ன
ஆகின என்பது இராணுவத்துக்கே தெரியாது.
புலிகளின் நீர்மூழ்கி, ஆட்லறி, பீரங்கி, விமானப் பாகங்கள், குண்டுகள்,
துப்பாக்கிகள், கண்ணி வெடிகள் என்று பலவிதமான ஆயுதங்கள் இருந்தன. அதில்
ஆட்லறி, பீரங்கி போன்றவை புலிகளின் சொந்தத் தயாரிப்புகள். இதைப்
பார்க்கத்தான் கூட்டம் கூட்டமாக சிங்கள சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
தமிழர்களுக்கு சிங்களத்தின் கொடூரத்தை சொல்லும் 'வெற்றிச் சின்னம்’
நந்திக்கடலில் இருந்தது. அந்த இடத்தைப் பார்க்கும் முன், ஓர் வயல்வெளியைக்
காட்டி, 'இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதைப்பற்றிச்
சொல்கிறேன்’ என்று நண்பர் கூறி இருந்தார்.
அதை நினைவுபடுத்திக் கேட்டேன். ''புலிகள் கடைசியாக ஓர் விமானத்
தாக்குதல் நடத்தினர். அந்த விமானத்தை அந்த வயல்வெளியில்தான் டேக்-ஆப்
செய்தனர்'' என்றார். ஆனால், அந்த வயல்வெளி ஓர் ஓடுதளம் போலவே இல்லை.
விவசாய நிலம்போலத்தான் இருந்தது.
யுத்தக் காலத்துல நானும் இங்கதான் இருந்தன். எத்தனை பிணங்கள்... கால்
தனியா கை தனியா தலை தனியா... எல்லாம் இரத்தமும் சதையுமா இருந்தன.
மூட்டையும் முடிச்சுமாக இந்த வழியேதான் நடந்தோம்.
நடந்துகொண்டு இருக்க பிடரியில் வந்து செல் விழும்... கிபீர் விழும்.
செத்த பிறகுகூட அந்தப் பிணங்களை கிபீரும் செல்லும் தாக்கிக்கொண்டு
இருந்தன'' என்று கம்மியான குரலில் சொல்லிக்கொண்டே இருந்தார் நண்பர்.
ஒவ்வொரு இடங்களுக்கும் அவர் கொடுக்கும் விளக்கம், கண்ணில் நீரைத் ததும்ப
வைத்தது.
இங்குதான் அண்மையில் விடுமுறைக் கால 'போர் சுற்றுலாத் துறை’ ஹோட்டலை
மகிந்த ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவும் திறந்து வைத்தனர். இதுகுறித்து
கருத்து வெளியிட்டுள்ள நோமடிக் தாட்ஸின் சுற்றுலா இயக்குநர் ஜுனோ வேனன்
பவல்,
ஐக்கிய நாடுகளால் கொலைகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடத்தில், சிங்கள
இராணுவம் போர்க் குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்படும் இடத்தில் சுற்றுலாவை
ஊக்கப்படுத்துவது மனிதாபிமானத்துக்கு எதிரான செயல் என்று கண்டித்துள்ளார்.
நந்திக்கடலில் உள்ள அனைத்துக் கடைகளும் விடுதிகளும் இராணுவத்துக்குச்
சொந்தமானவை. சுற்றுலாப் பகுதிகள் யாவும் இராணுவ வசமே உள்ளது. இது
இராணுவத்தை சுற்றுலாத் துறைக்குள் கொண்டுவரும் முயற்சி என்று வெளிநாட்டு
ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
நந்திக்கடல் கடற்கரைக் காயலில் 'மூன்று படுக்கை கொண்ட வசதியோடு 15 ஆயிரம் ரூபாயில் ஓய்வறைகள்’ என்றும் 'பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் விடுமுறையைக் கழிக்க வாருங்கள்’ என்றும் சிங்களப் பத்திரிகைகளில் விளம்பரங்களும் வெளியாகி வருகின்றன.
நந்திக்கடல் கடற்கரைக் காயலில் 'மூன்று படுக்கை கொண்ட வசதியோடு 15 ஆயிரம் ரூபாயில் ஓய்வறைகள்’ என்றும் 'பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் விடுமுறையைக் கழிக்க வாருங்கள்’ என்றும் சிங்களப் பத்திரிகைகளில் விளம்பரங்களும் வெளியாகி வருகின்றன.
அதாவது, புலிகளை வென்றதை தனது வீரமாகவும் புலிகள் இருந்த இடத்தை சுற்றுலாத் தளமாகவும் மாற்றிவிட்டது இலங்கை அரசாங்கம்!
கொழும்பில் விக்கிரமபாகு கருணரட்னவைச் சந்தித்தபோது அவர் இந்தக்
குற்றச்சாட்டைப் பகிரங்கமாக வைத்தார். ''இன்றைக்கு இந்த அரசாங்கத்தின்
ஒரே இலக்கு, மக்கள் அல்ல. சுற்றுலாவை ஊக்குவிப்பதுதான்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடூரத்தை முழுமையாக மறைப்பதற்கு இந்த
சுற்றுலா உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். 2009 மே மாதம் போர் முடிந்ததில்
இருந்து நான் இதை எழுதி வருகிறேன்.
முள்ளிவாய்க்காலின் கொடூரப் போரில் குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் பேர்
செத்திருப்பார்கள் என்பது என்னுடைய கணிப்பு. ஆனால், ஐ.நா-வின் அறிக்கை 40
ஆயிரம் பேர் என்கிறது. நான் சொல்லும் கணக்கு தவறு என்றால், என்னை அரசு
கைது செய்து இருக்கலாமே? என்று கொதித்தார்.
அவர் சொல்வது போல், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் என்பது
ஐ.நா-வின் கண்துடைப்புக் கணக்கு. போர் இறுதி நேரத்தில் ஐ.நா. இந்த
இடத்தைவிட்டு வெளியேறி விட்டதாகச் சொல்லும்போது எப்படி 40 ஆயிரம் பேர்
கொல்லப்பட்டனர் என்று எப்படி ஐ.நா-வால் கணக்கிட முடியும்?
ஆக, இது இலங்கை அரசின் கணக்கு. இலங்கை அரசுக்குத் துணையாக உள்ள
இந்தியாவின் மதிப்பீடு. இந்தியாவின் முடிவை வைத்தே ஐ.நா-வின் முடிவு
அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முள்ளிவாய்க்கால் எங்கும் சிதறிக்கிடக்கும் வாகனங்களைக் கண்டாலே,
லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள் என்பது
புரியும்.
மலைபோலக் குவிந்து கிடந்த வாகனங்கள். சைக்கிள், மோட்டார் சைக்கிள்,
கார், பஸ், வான், லொறி, அம்புலன்ஸ், உழவுயந்திரம் என்று எண்ணிக்கையே
லட்சத்தைத் தொடும். இன்று அத்தனை வாகனங்களும் பழைய இரும்புக்குத்தான்
போகிறது. அதையும் வந்த விலைக்கு விற்றுக்கொண்டு இருக்கிறது இராணுவம்.
பனை மரங்கள் எல்லாம் குண்டு மழைத் தாக்குதலில் முறிந்து அழிந்து கிடந்தன. கரை முள்ளிவாய்க்கால், வெள்ள முள்ளிவாய்க்காலின் அகோரங்களைக் கண்டுவிட்டு, மீண்டும் கிளிநொச்சி திரும்பினேன்.
பனை மரங்கள் எல்லாம் குண்டு மழைத் தாக்குதலில் முறிந்து அழிந்து கிடந்தன. கரை முள்ளிவாய்க்கால், வெள்ள முள்ளிவாய்க்காலின் அகோரங்களைக் கண்டுவிட்டு, மீண்டும் கிளிநொச்சி திரும்பினேன்.
அங்கு செல்லும் வழியில் ஓர் மூத்த ஆண் போராளியைச் சந்தித்தோம். அவர் தனது போர் வாழ்க்கை, புனர்வாழ்க்கையைப் பற்றி விபரித்தார்.
புனர்வாழ்வுல ஒன்டுமே பண்ணல ஆமி. நாங்களாகத்தான் எங்களைத்
தயார்படுத்திக்கொண்டமே ஒழிய, அவங்களாக எதையும் செய்யவில்லை. நான் இரண்டு
ஆண்டு காலம் புனர்வாழ்வுல இருந்தன். எங்களையே தயார்படுத்திக்கொள்ள ஓவியம்
தீட்டுவம், கவிதை எழுதுவம், பூந்தோட்டம் செய்வம். பின் எங்களுக்கு என்ன
வேல தெரியும் என்று கேட்டு செய்ய வைத்தனர்.
கண்டல் காடு பகுதிக்குக் கூட்டிச்சென்று சில காலம் விவசாயம் செய்ய
வைத்தனர். மரணக் குழிக்குள் இருந்து பிழைத்து வந்த எங்களுக்கு அப்போது
தேவையாக இருந்தது உளவியல் ரீதியான புனர்வாழ்வு.
ஆனால், அதை ஆமி செய்யலை. மாறாக அவர்களின் வீர தீரச் செயல்களைப்
புகழ்ந்தும், 'நாங்க அடிச்சு நீங்க தோல்வி கண்டிங்க’ என்று கேலி செய்தும்,
அடிமையாக நடத்தும் மனநிலைதான் அவங்களிடம் இருந்தது. நாங்க உடுப்பு
கழுவிக் காயப்போடுவதைக்கூட அவர்கள் விரும்பலை. தினம் ஏதோ ஒரு விதத்துல
பிரச்சினை வரும்.
2009-ம் வருஷம் மே 18-தான் எங்களப் பிடிச்சாங்க. 16, 17-ம் தேதி
எல்லாம் கடைசி நிலைமைக்கு வந்துட்டோம். அந்த நேரத்துல ஐ.நா-வோ அமெரிக்காவோ
உதவி செய்யும்னு எதிர்பார்த்திருந்தம். தமிழ்நாட்டு அழுத்தத்துல இந்தியா
நிலைமை மாறும்னுகூட நினச்சம். ஆனா, எதுவும் நடக்கல.
கனரக ஆயிதம் பயன்படுத்த மாட்டோம்’னு ஆமி சொன்ன நேரத்துல பயங்கரமான
யுத்தம் நடந்து கொண்டிருக்கு. நாங்க இருந்த பங்கரில் நாலா பக்கமும் செல்
அடிச்சுக்கொண்டிருக்கான் ஆமி. செய்தித் தொடர்புகள் சட்டலைட் போன் வழியாக
இருந்துகொண்டே இருந்தன.
யார் யார்கிட்ட செய்தி அனுப்பணுமோ அனுப்பிக் கொண்டேயிருந்தது எங்களோட
தலைமைப்பீடம். ஆனா எதும் நடக்கல. சனமும் போராளிகளும் கொத்துக் கொத்தா
செத்துக்கொண்டுதான் இருந்தனம். எங்களுக்கு வெளியுலகத் தொடர்பு இருந்ததே
ஒழிய, உள்ளகத் தொடர்பு முழுமையா துண்டிக்கப்பட்டுருச்சி.
செல் குண்டுகள் மழைபோல் கொட்டிக்கொண்டே இருந்தது. போரின் கடைசி
நேரத்துல வரி உடுப்புலாம் (சீருடைகள்) இல்ல. தலைவரோட இருந்தவங்க
மட்டும்தான் வரி உடுப்புல இருந்தாங்கள்.
எனக்கு அருகால இருந்த பங்கரில் இசைப் பிரியா இருந்தவள். அவள் எனக்கு
நன்கு அறிமுகம். என் மணிக்கூடு பழுதானததால மணிக்கூடு வாங்குவதற்கு அவளிடம்
போனேன். 'நீங்க போயிட்டு நாளைக்கு வாங்கள். நான் தேடி எடுத்து வைக்கறன்’
என்றாள்.
நான் அடுத்த நாள் போனபோது, 'மணிக்கூடு கிடக்கலைன்ணா’ என்றுபோட்டு
கொஞ்சம் அவுல் பிரட்டி தந்தாள். 'அடுத்து என்ன செய்யப் போறீங்கள். நிலவரம்
மோசமாகிட்டு வருது... வாங்க, எல்லோரும் சேர்ந்து போகலாம்’ என்றேன். 'அவர்
(இசைப்ரியாவின் கணவர் சிறீராம்... தளபதி) வந்து முடிவு சொல்லும் வரை
பாத்திருக்கிறன்’ என்றாள். நான் என் பங்கருக்குள் வந்து விட்டேன்.
இசைப்பிரியாவின் மூன்று மாதக் குழந்தை சுகவீனம் காரணமாக மூன்று
மாதத்துக்கு முன் மாத்தளனில் இறந்துபோனது. அவள் அக்காவின் கணவரும் இரண்டு
மாதத்துக்கு முன் கிபீர் தாக்குதலில் செத்துட்டார்.
நான் இசைப்பிரியாவைக் கண்டது மே 18 தேதின்னு நினைக்கேன். ஒரு
கொட்டிலிடம் பின்னுக்குக் கையை குத்திக்கொண்டு கால் முன் நீட்டிக்கொண்டு
கட்டப்பட்டதுபோல் உட்கார்ந்து இருந்தவள். பின், அவளை நான் கண்டது 'சனல்
4’-ல்தான்...'' அதற்கு மேல் அவரால் பேசவே முடியவில்லை.
ஊடறுத்துப் பாயும்...
ஜூனியர் விகடன்