Jul 3, 2012

இளமையாக இருக்க நிறைய தண்ணீர் குடிங்க!



நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவில் உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர். தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனி களில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன் மூலம், உடலில் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.

எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் தண்ணீர் உறுதிப்படுத்துகிறது. அன்றாட வேலைகளின்போது ஏற்படும் சக்தி இழப்பைக் குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதுபற்றி வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையப் பேராசிரியர்கள் கூறுகையில், ‘‘ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை தண்ணீர் ஏற்படுத்துவதும், நரம்பு மண்டலத்தை உறுதியாக்குவதும் தெரிய வந்துள்ளது. 
                                   இளமையாக இருப்பது குறித்து, இயற்கை மருத்துவர் சிவராமன்: "ஸ்கின் டிரை ஆகுதுப்பா... நீ என்ன கிரீம் யூஸ் பண்ற...?' என, குளிர்பானத்தை உறிஞ்சுக் கொண்டே கேட்கும் யுவதிக்கு, தான் உறிஞ்சும் குளிர்பானமே, தன் வயதை உறிஞ்சும் என்பது தெரியவில்லை. "காலையில் சாப்பாட்டுக்கு முன், ஒரு வருடம், மாலையில் சாப்பாட்டுக்கு அப்புறம், ஒரு வருடம், இந்த மருந்தை சாப்பிட்டால் போதும்...' என, யாராவது, உங்கள் வயதைக் குறைக்கிறேன்னு சொன்னால் நம்ப வேண்டாம். அக்மார்க், டுபாக்கூர் மாத்திரை வியாபாரம் மட்டுமே அது. மருந்து மாத்திரையால், வயதைக் குறைக்க முடியாது; வாலிபத்தை மீட்க முடியாது.ஆனால், உணவால்          இளமையை இழக்காமல் வைத்திருக்க முடியும். தண்ணீரைச் சுட வைத்து, ஆற வைத்து, தினசரி நாலைந்து லிட்டர் குடித்தாலே போதும். தோலின் ஈரத் தன்மை போகாது இருக்க அது உதவும். உடல் செல்லின் வளர்சிதை மாற்றத்தில், ஒவ்வொரு செல்லும், ஆரோக்கியத்துடன், உத்வேகத்துடன் திகழ, போதுமான நீர்ச் சத்து அவசியம். ஆதலால், இளமையாய் இருக்க, போதுமான தண்ணீர் குடியுங்கள். காலையில், நவதானியக் கஞ்சி, வரகரிசிப் பொங்கல், ராகி இட்லி என, சிறுதானியம் நிறைந்த உணவு சாப்பிடுங்கள். ஒவ்வொரு வேளை உணவிலும், சிறிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெந்தயம் இருக்க வேண்டியது கட்டாயம். இந்த சமாச்சாரமெல்லாம், வாசனை தருவது மட்டுமல்ல; வயசும் தரும்.அடுத்து, வயதாவதைத் தடுக்கும் உணவில், முதலிடம், பழங்களுக்குத் தான். நெல்லியில் உள்ள பாலிபீனால்கள், வைட்டமின் சி, இன்னும் சில நுண்ணிய துவர்ப்பிகள் எல்லாம், வயோதிக மாற்றத்தைத் தடுப்பதை, மருத்துவம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. அதேபோல், கொட்டையுள்ள பன்னீர் திராட்சை, மாதுளை, சிவப்புக் கொய்யா, அத்தி, அவகாடோ, சிவப்பு ஆப்பிள் இவையெல்லாம், இளமைக்கு வித்திடும் உணவுகள். வயதாவதைக் காட்டிக் கொடுக்கும் முகச் சுருக்கம், கண்ணுக்கு கீழான கருவளையம், தோல் சுருக்கம், வறட்சி நீங்க அல்லது வராமல் தடுக்க, தினம், ஒரு வேளை பழம் சாப்பிடுங்கள்; பொலிவு பொங்கும்.
                      

Jun 18, 2012

ஆரோக்கியத்திற்கான உணவுகள் மற்றும் முறைகள்


உணவே மருந்து உங்கள் உடல் நிலையை பாதுகாக்க நல்ல உணவை நேரத்தோடு அளவாக சாப்பிடுங்கள் 
பல சமயங்களில் நாம் என்ன உண்ணுகிறோம் என்பதை உணராமலேகூட  உண்ணுகிறோம். பொதுவாகவே நாம் சாப்பிடும்போது, பேசுவது, நடப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற மற்ற நடவடிக்கைகளில்  ஈடு  படுகின்றோமே தவிர, உண்ணும் உணவில் கவனம் செலுத்துவதில்லை. நாம் உண்ணும் உணவிற்கு சிறிய அளவே மதிப்பு கொடுக்கிறோம். பிறகு கொழுப்பு சக்தி அதிகமாக சேருவதில் ஏன் ஆச்சரியப்பட வேண்டும்.

       சைவ உணவு என்றால் அதிகமாக உண்ணலாம் என்பது மக்களுடைய எண்ணமாக இருக்கிறது. இங்கு நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சைவ உணவாகவே இருந்தாலும் தேவைக்கு அதிகமாக உண்ணுதல் என்பது தவறு.தேவைக்கு அதிகமாக உண்ணுதல் என்பது நோய்.சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி, தேவைக்கு அதிகமாக உண்ணுவது உடலில் அதிக பிரச்சினைகளை உருவாக்கும். தேவைக்கு ஏற்ப உண்ணுவது என்பதை நாம் இன்னும் கற்றுக் கொள்ளவேவில்லை.
                நாம் உண்ணும்போது, நமக்கு என்ன தேவை, எவ்வளவு தேவை என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக உண்ணுவது என்பது பேராசையால் விளைவது. அதிகமாக உண்ணுவது என்பதை நம்மால் அடைய முடியாத தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்கான ஒரு மாற்றுவழியாகப்  பயன்படுத்துகிறோம்.சைவ உணவே ஆன்மீக பயிற்சியில் ஈடுபடும் மக்களுக்கு சிறந்த உணவு. அது சுலபமாக ஜீரணிக்கப்பட்டு நல்ல சக்தியை உடலில் சேர்க்கிறது. மற்றும் மென்மையான சக்தி ஓட்டத்தை உருவாக்கி உடலில் உள்ள சக்ரங்கள் மற்றும் சக்தி மையங்களை இணைக்க உதவுகிறது.

புத்தரின் கருணையாலேயே அதிக அளவில் சைவ உணவு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.இன்னும் சற்று ஆழமாகப் பார்த்தோமானால் சைவ உணவே சாத்வீக உணவாக உணவறையில் ஆள்கிறது. சாத்வீக சைவ உணவு உண்ணும் மக்கள் பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை தவிர்க்கிறார்கள். இந்த மூன்று பொருட்களிலும் (Steroid) உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள் உள்ளது. அவற்றுள் இருக்கும் சில நல்ல மருத்துவ குணத்திற்காக அவ்வப்பொழுது உட்கொள்ளலாம். தொடர்ச்சியாக இவற்றை உட்கொள்வதால் சக்ரங்களுக்குச் செல்லும் சக்தி ஓட்டத்தை குறுக்கீடு செய்கிறது. அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்வதும் ஒரே விளைவையே ஏற்படுத்துகிறது. தேவைக்கு அதிகமாக உணவு உட்கொள்ளும்போது, நாம் நமது உடலை ஒரு குப்பைத் தொட்டி போன்று பார்க்கின்றோம். தேவையற்றப் பொருட்களைச் சேர்க்கும்போது அதனை செறிமானம் செய்வதற்கே உடம்பிலுள்ள நல்ல வேதிப்பொருட்கள் விரயப்படுத்தப்படுகிறது. உணவை உடலுக்குள்ளே செலுத்தி வீணாக்குவதை விட உணவை வெளியே விரயமாக்குவது அதனினும் சிறந்தது. ஆகையால் உணவுபரிமாரும்போது சிறுது  சிறுது தாகத்தான் பரிமாற்ற வேண்டும் 

நாம் தட்டிலுள்ள உணவை  மறுக்கும் போது தட்டிலுள்ள உணவை வெளியே மீந்து விடுகிறது. மிகையான உணவை மட்டுமே வீணடிக்கிறோம். அது மற்றவர்களுக்கு உண்ண கொடுத்து விடலாம்.ஆனால் உணவை உடலில் திணிக்கும்போது அது உடலுக்கு இரட்டை தீமையை விளைவிக்கின்றோம். அப்படி திணிக்கும்போது அது உடலுக்கு தேவையற்றதாகி விடுகிறது. மற்றும் அந்த உணவினால் நமக்கு எந்தப் பலனும் இல்லை. அதை செரிமானம் செய்வதில் நம் உடல் சக்தி (சோர்ந்து விடுகிறது) அளவுக்கு அதிகமாக செலவிடப்படுகிறது. தேவைக்கு அதிகமாக உணவு உட்கொள்ளும்போது, உணவு விரயமாகிறது. மேலும் விஷமாகவும் உருவாகிறது.தேவைக்கு அதிகமாக உணவை உட்கொள்வதைவிட, மறுப்பதே சிறந்தது. என்ன உண்கிறோம், எவ்வளவு உண்கிறோம் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் உணவிற்கு மதிப்பு கொடுக்கும் போது உங்கள் உடலும் அதற்கு இணையாக உங்களுக்கு மதிப்பளிக்கும்.

Jun 12, 2012

இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா !


 ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக குறைத்ததால், இந்தியா உள்பட 7 நாடுகளுக்கு பொருளாதார தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சர்வதேச விதிமுறைகளை மீறி அணுசக்தி திட்டங்களை ஈரான் செயல்படுத்தி வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் புகார் கூறி வருகின்றன. ஈரான் மீது பொருளாதார தடையும் விதித்துள்ளன. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய கூடாது என்று இந்தியா உள்பட பல நாடுகளுக்கு அமெரிக்கா நிர்பந்தம் கொடுத்தது. எனினும், ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. இதில் அதிருப்தி அடைந்த அமெரிக்க அரசு, இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க திட்டமிட்டது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் நேற்று கூறியதாவது: அணுஆயுதங்கள் ஈரான் கையில் கிடைப்பதை தடுக்கவும், சர்வதேச சட்ட திட்டங்களை ஈரான் பின்பற்றவும் பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது. அதற்காகதான் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப் படுகிறது. அந்த நாட்டுக்கு ஆதரவு அளிக்கும் பிற நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்க திட்டமிட்டது. ஆனால், ஈரானில் இருந்து இந்தியா, மலேசியா, கொரியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை, துருக்கி, தைவான் ஆகிய நாடுகள் கணிசமாக கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்துள்ளன. எனவே, பொருளாதார தடையில் இருந்து இந்த நாடுகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அணுசக்தி திட்டங்கள் விஷயத்தில் சர்வதேச விதிமுறைகளை பின்பற்ற ஈரான் தலைவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Jun 11, 2012

வைகோ ஆர்ப்பாட்டம்


மத்திய அரசின் ‘பிளஸ்-2’ பாடத்திட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இடம் பெற்றுள்ளது. கேலி சித்திரத்தை நீக்க கோரி ம.தி.மு.க. சார்பில் சென்னை மெமொரியல் ஹால் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து வைகோ பேசியதாவது:- 

இந்தி மொழி ஆட்சி மொழி என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து 1965-ல் தமிழ்நாட்டில் மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. 8 பேர் தீக்குளித்து உயிர் நீத்தார்கள். உன்னதமான இந்த போராட்டத்தில் மாணவர்கள் வீதியில் இறங்கி போராடினார்கள். 

இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தற்போது பாடப் புத்தகத்தில் வெளிவந்துள்ள கேலி சித்திரத்தை நீக்கவேண்டும். நீக்கும் வரை போராட்டம் தொடரும்.

Jun 8, 2012

இந்தியா வல்லரசா ? இதபடிங்க


நாணயம் இழந்த நாணயம்



ரூபாயின் வீழ்ச்சியை இப்படியும் சொல்லலாம். 2012, மே 23-ஆம் தேதி நிலவ ரப்படி கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் ரூபாயின் வீழ்ச்சி 20 சதம்.
 ஒரு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ. 55.50. ரூபாய் 45-க்கு விற்ற டாலர் இப்போது ரூ. 55.50. ஒரு டாலர் வாங்க நாம் கூடுதல் அளவில் ரூபாயைக் கொட்ட வேண்டும்.
 ரூபாயின் நாணய மதிப்பை இழந்து கொண்டிருக்கும் இந்தியா எதிர்நோக்க வேண்டிய பிரச்னை குறையும் அன்னிய முதலீடுகள். நாளுக்கு நாள் ரூபாய் நாணயம் மதிப்பிழந்து கொண்டே போவதைப் பார்த்தால் முன்பே நாம் எச்சரித்தபடி ஒரு டாலருக்கு ரூ. 65 வரை நாம் கொட்டி அழவேண்டிய நிலை ஏற்பட்டால்கூட அதிசயம் இல்லை. மிகவும் இழிவான நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம்.
 இந்த நிலையைப் படம்பிடித்துக் காட்டுவதுபோல் ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் என்ற தரநிர்ணய ஆலோசனை நிறுவனம் ஸ்டேட் பேங்க் உள்பட தேசியமயமாக்கப்பட்ட அனைத்து அரசு வங்கிகளுக்கும் பிபிபி - என்ற தரமற்ற சான்று வழங்கியுள்ளது.
 இந்தியாவின் அரசு முத்திரைக் கடன் பத்திரங்களின் நாணயம் கேள்விக்குறியாகிவிட்டது. நாணய இழப்புக்குப் பணவீக்கம், பணவீக்கத்தைச் சமன்செய்யும் அளவில் வளர்ச்சி இல்லா நிலை - அதாவது ஜி.டி.பி.யில் தொய்வு, இறக்குமதிகளின் ஏற்றம் என்று காரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
 இப்படிப்பட்ட நாணய இழப்பை வேறொரு கோணத்தில் கவனித்தால் "வெள்ளையனே வெளியேறு' என்ற 1942 ஆம் ஆண்டு இயக்கம் இன்று 2012-ல் மீண்டும் எதிரொலிக்கிறது. அன்னிய முதலீடுகள் இந்தியக் கதவுகளைத் தட்டும் என்ற எதிர்பார்ப்புகள் பொய்த்து வருகின்றன.
 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் செயல்பட்டு வந்த ஏ.ஐ.ஜி., ஏகான், டெமாசக், மெரில் லைஞ்ச் போன்ற அன்னிய நிதி நிறுவனங்கள் வந்தவரை லாபம் என்று இந்திய நிறுவனங்களிடம் பங்குகளை விற்றுவிட்டு விமானம் ஏறிவிட்டன.
 இந்தியாவில் உள்ள அன்னிய வங்கிகள் இந்திய வங்கிகளிடம் பங்குகள் வாங்குவதைக் கணிசமாகக் குறைத்துவிட்டன. இன்சூரன்ஸ் துறையில் 25 அன்னிய நிறுவனங்கள் உண்டு. இப்போது அவை ஒவ்வொன்றாகத் தங்கள் பங்குகளை விற்றுவிட்டுக் கரையேறி வருகின்றன. உதாரணமாக நியூயார்க் லைஃப் தங்களது 30 சதவிகிதப் பங்குகளை மித்சூயி சுமிடோமோவுக்கு விற்றுவிட்டது.
 அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றத்துக்குரிய முக்கியக் காரணம் போதிய அங்காடியில்லாத நிலை. அங்காடியில்லா நிலையின் அடிப்படைத் தொழில் உற்பத்தியில் தொய்வு. தொழில் ஏற்றுமதி பூஜ்ஜியமாகி வருகிறது. ஏழு வருஷமாக இந்தியாவில் உட்கார்ந்து நாங்கள் என்ன சம்பாதித்தோம் என்று கேட்கும் ஃபிடலிட்டி, அனைத்துலகத் தரத்துக்கு 8,800 கோடி என்பது அற்பமாம். நியாயமாகப் போட்ட முதலுக்கு 3 லட்சம் கோடி சம்பாதித்திருக்க வேண்டுமாம்.
 "பிரிக், பிரிக்' என்று பெரிதாகப் பேசுகிறார்களே. அந்தக் கதை இன்னமும் பரிதாபம். பிரிக் என்றால் பிரேசில், சீனா, இந்தியா, ஆப்பிரிக்கா இணைந்த வர்த்தக உடன்பாட்டுக் கூட்டம். பிரிக் செயல்பாட்டுக்குரிய சங்கமக் கட்டணமாக இந்திய வங்கிகளின் முதலீடு 810 மில்லியன் டாலர் என்றால் சீனாவின் வழங்கல் அதேகாலத்தில் 4.3 பில்லியன் டாலர், பிரேசிலின் வழங்கல் 1.5 பில்லியன் டாலர் ஆகும்.
 உலகளாவிய நிலையில் தனியார் ஈக்விட்டி நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் 1 ட்ரில்லியன் டாலர் சொத்து சம்பாதிக்கின்றன. அதில் இந்தியாவில் 5 சதவிகிதம் முதல் போட்டால் 50 பில்லியன் டாலர் சம்பாதிக்கலாம் என்பதுகூட தப்புக்கணக்காகி விட்டதாம். இந்தியாவின் சமத்துவ முதலீட்டுச் சந்தை ஆரோக்கியமாயில்லை.
 2007-இல் 17 பில்லியன் டாலருக்கு இந்தியாவில் புழங்கிய ஈக்விட்டி நிறுவனங்கள் எல்லாம் முடங்கிவிட்டன. பங்குச்சந்தை இறங்கி இறங்கிப் போவதால் ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்பும்கூட முதலீட்டாளர்களால் புத்துணர்வு பெறாமல் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளனர். வெளியேறவும் முடியவில்லை. வியாபாரம் செய்யவும் முடியவில்லை.
 அன்னிய வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனங்களும் டல்லாகிவிட்டன. மூலதனம் இல்லாமல் புதிய வியாபாரம் செய்ய இயலவில்லை. போட்ட முதலுக்கே ஆபத்து சூழ்ந்துவிட்டது. தொழில் வளர்ச்சி இல்லாமல் சொத்துகளாயுள்ள பணம் மூலதனமாக மாறவில்லை. பணவீக்கம், நாணயமிழந்த அரசுக்கடன் பத்திரம், பங்குச்சந்தை சரிவு ஆகியவற்றால் வருமானம் தொழில் முதலீடாக மாறாமல் தங்கமாகப் பதுக்கப்படுகிறது.
 கள்ளப்பணமாக சுவிஸ் வங்கிக்கு டிபாசிட்டாகி சுவிட்சர்லாந்திலும், ஜெர்மனியிலும் மூலதனம் வளர உதவுகிறது. இதுபோன்ற காரணங்களினால் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இழப்புகளை ஈடுசெய்ய சுமார் 7.5 பில்லியன் டாலர் செலவானதாக ஒரு தகவல். இது உலகளாவிய நிதி நிலை என்றாலும்கூட இந்தியாவால் எழுந்திருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
 மேலைநாடுகளின் மந்தநிலைக்கும் இந்திய மந்தநிலைக்கும் வேற்றுமை உண்டு. அவர்களுக்கெல்லாம் கையில் காயம், காலில் அடி, லேசான எலும்பு முறிவு, கட்டுப்போட்டுக்கொண்டு ஓய்வெடுக்கலாம். காயம் ஆறிவிடும். எழுந்து நடமாடலாம். இந்தியா படுத்த படுக்கையாகிவிட்டது. ஒரு நோய்க்கு வைத்தியம் செய்தால் மற்றொரு நோய் வந்துவிடுகிறது. வாதம் தலைக்கேறிவிட்டது. சக்கர நாற்காலியில் அமரும் நிலைக்குத்தான் குணப்படுத்த முடியும்.
 இந்தியப் பொருளாதாரத்தை நாடி பிடித்துப் பார்க்கும்போது, ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் உலகளாவிய முதலீட்டாளர்களின் ஆலோசனை நிறுவனம் புட்டுப்புட்டு வைக்கும் காரணங்களில் முன்னிற்பது நம்பிக்கை இழந்த நாணயமே. முதலீட்டுக் கடன் உயர்ந்த அளவுக்கு ஜி.டி.பி உயராமல் முதலீட்டுக் கடனுக்கும் ஜி.டி.பி அதாவது மொத்த தொழில் உற்பத்தி வருமான மதிப்புக்கும் இருக்க வேண்டிய விகிதாசாரம் தொய்ந்துவிட்டது.

 ஏற்றுமதி குறைந்து இறக்குமதி உயர்கிறது. அவர்களின் கணக்குப்படி ஜி.டி.பி.யில் ஏற்றுமதி மதிப்பு 40 சதம் இருக்க வேண்டும். கடன்கள் தொழில் மூலதனமாக மாறாதபோது ஏற்றுமதிக்கு வழி இல்லை. அப்படி எதுவும் சந்தர்ப்பம் வந்தாலும் சந்தையில் போட்டாப் போட்டி. நாணயத்தை மதிப்பிழக்க வைப்பதிலும் சர்வதேசப் போட்டி நிகழ்கிறது.
 இழப்பதற்கு இனி என்ன உள்ளது என்று கேட்கும் அளவில் இந்தியாவில் டாலர் மதிப்பு கூடி ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் இறங்குவதே கண்ட பலன். டங்கல் திட்டத்தை ஏற்றுக்கொண்டு உலக வர்த்தக அமைப்பு உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திட்டு உலகமயமாதல் என்ற வலையில் சிக்கி அநேகமாக 20 ஆண்டுகள் நிறைவுற்றிருக்கலாம்.
 ஜி.டி.பி.யில் ஏற்றுமதியின் ஆற்றலே உலக வளர்ச்சிக்கு அடிப்படை என்று டங்கல் புதிய வேதம் படைத்தார். ஏற்றுமதியின் ஆற்றல் அங்காடிகள் அமைந்தால்தான் மேம்படும்.
 உலகமயமாதலில் அன்னிய முதலீட்டாளர்கள் வந்து இந்தியாவில் தொழில் செய்து ஏற்றுமதி செய்தால் இந்தியாவுக்கும் லாபம் என்ற கருத்தை நாம் ஏற்றாலும்கூட, அன்னிய முதலீட்டாளர்கள் இன்று வர மறுப்பது ஏன்? இந்திய முதலாளிகளுக்குத் தங்கள் பங்குகளை விற்றுவிட்டு அன்னிய முதலீட்டாளர்கள் விமானம் ஏறுவது ஏன்?
 ""வருந்தி அழைத்தாலும் வாராதவர் வாரார்'' என்ற நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டபோது, இனி யார் வருவாரோ? இதை ஆண்டவனால் கூட கூற முடியாது. நாணயத்தை இழக்காமல் பொருளாதாரம் மேம்பட இனி நாம் எதுவும் ஒரு புதிய வழி உண்டு என்றால் ""தன் கையே தனக்கு உதவி'' என்று மகாத்மா போதித்த கீதைதான் ஒளிகாட்டும் என்று தோன்றுகிறது.

   மேலைநாடுகளின் மந்தநிலைக்கும் இந்திய மந்தநிலைக்கும் வேற்றுமை உண்டு. அவர்களுக்கெல்லாம் கையில் காயம், காலில் அடி, லேசான எலும்பு முறிவு, கட்டுப்போட்டுக்கொண்டு ஓய்வெடுக்கலாம். காயம் ஆறிவிடும். எழுந்து நடமாடலாம்.
 இந்தியா படுத்த படுக்கையாகிவிட்டது. ஒரு நோய்க்கு
 வைத்தியம் செய்தால் மற்றொரு நோய் வந்துவிடுகிறது.
ஆர்.எஸ். நாராயணன்
நன்றி தினமணி