Jan 16, 2012

கை கொடுப்போம் ... "தானே" துயர் துடைப்போம் !

'தானே’ புயலின் கோரத் தாண்டவம் ஏற்படுத்திய அழிவுகளில் இருந்து கடலூர், புதுச்சேரி மக்களை மீட்டு எடுப்பதற்கான எண்ணங்களை கடந்த இதழில் உங்களிடம் கேட்டிருந்தோம். இதழ் வெளியான ஒரு சில மணி நேரத்தில் இருந்தே தொலைபேசிக் குரல் பதிவிலும், மின் அஞ்சல் மூலமாகவும், குறுஞ்செய்தியாகவும் உருக்கமான இதயத்தோடு பிரமிப்பான யோசனைகளை நீங்கள் குவிக்கத் தொடங்கி விட்டீர்கள்.


உலகமே திடுக்கிட்டு கண்ணீர் வடித்த சுனாமியின் அழிவுகள்

 ஒரு வகை என்றால்... கடலூர், புதுச்சேரி, நாகை மாவட்டத்தின் சில பகுதி மக்களையும் உயிரோடு நடைபிணங்களாக மாற்றிவிட்ட 'தானே’ புயலின் பேரழிவு இன்னொரு விதமான பெரும்சோகம். 'கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் ஆகும் - இந்த மக்கள் முழுமையாக மீண்டு வர!’ என்று நிபுணர்கள் சிலர் சொல்வதைக்கேட்டால், நடுக்கம் அதிகமாகிறது. புயல் முடக்கிப்போட்ட பலா, முந்திரி மரங்களை அங்கே இருந்து
வெட்டி அகற்றுவதற்குக்கூட வழி இல்லாமல் குடும்பம் குடும்பமாகத் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் கண்ணீர்க் காட்சிகள், கலக்கமூட்டுபவை.

'சூறைக்காற்று பிய்த்துப்போட்ட லட்சக்கணக்கான குடிசைகளின் உடனடித் தேவை ஓலைக்கீற்றுகளும் மூங்கில் கழிகளும்தான். மனமும் பணமும் படைத்த நல்லவர்கள் அதற்கு உடனடியாக ஏற்பாடு        செய்யலாமே!’ என்பதில் தொடங்கி, 'மின்சாரம் இல்லாத இருட்டு வாழ்க்கையில் இருந்து அவர்களை மீட்பதற்கு மெழுகுவத்திகளும் மண்எண்ணெயும் கொண்டு சேர்த்து உதவலாமே!’ என்பது வரை முதல்கட்ட யோசனைகளை அள்ளிக் குவித்திருக்கிறீர்கள் வாசகர்களாகிய நீங்கள்.
கடந்த இதழைப் பார்த்துவிட்டு உடனே தொடர்பு கொண்டார் ஓவியர் வீரசந்தானம். 'தமிழகத்தின் மிகப்பிரபலமான ஓவியர்கள் அனைவரையும் அணுகி ஆளுக்கு ஒரு ஓவியம் தரக் கேட்கலாம். அந்த ஓவியங்களை ஒரு கண்காட்சியாக விகடன் குழுமம் ஏற்பாடு செய்யலாம். பெரும் தொழில் அதிபர்களும்  முக்கியஸ்தர்களும் கலையார்வத்தோடும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மீதும் அக்கறைகொண்டு அந்த ஓவியங்களை நல்ல விலைக்கு ஏலம் எடுப்பார்கள். அந்தத் தொகையை 'தானே’ துயர் துடைப்புக்காக உபயோகிக்கலாம்’ என்று, நெகிழவைக்கும் ஒரு யோசனையை சொன்னார்.
புயலின் புதுவிளைவாக நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகி வரும் கிராமங்களைக் கண்டறிந்து மருத்துவக் குழுக்களை அனுப்பி வைக்கும் யோசனையையும் உங்களில் பலர் தந்திருக்கிறீர்கள்.
இதுபோல இன்னும் இன்னும் ஈரம்மிக்க எண்ணங்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன.
'தானே’ துயர் துடைப்புத் திட்டத்துக்கு உதவிடும் வகையில் முதல் பங்களிப்பாக விகடன் குழும நிறுவனங்கள் சார்பாக 10 லட்சம் ரூபாய் நிதியுதவி கொடுக்க முன்வந்துள்ளோம். நீங்களும் உங்களால் இயன்ற நிதியை எங்களிடம் அனுப்பத் தொடங்கி விட்டீர்கள். 'எந்தப் பெயருக்கு நிதி அனுப்ப வேண்டும்? எப்படி அனுப்ப வேண்டும்?’ என்று உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து மனிதநேயமிக்க விசாரணைகள்.
Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு நீங்கள் செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம்.  நேரடியாக நிதியை நெட்பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சேமிப்பு கணக்கு எண் 000901003381 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்:ICIC 0000009, நுங்கம்பாக்கம் கிளை, சென்னை-600034) வழியாகவும் அனுப்பலாம்.
ஆன்லைனில் பேமென்ட் கேட்வே (payment gateway) வழியாக பணம் அனுப்புவது தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் விவரங்கள் நமது www.vikatan.com-ல்வெளியிடப்படும்.
நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர் விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அதை அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.
Vasan Charitable Trust  பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் கீழே நாங்கள் அளித்துள்ள படிவத்தையும் தயவுசெய்து முழுமையாகப் பூர்த்திசெய்து, 'தானே துயர் துடைப்புத் திட்டம்’ என்று உறையின் மீது மறவாமல் குறிப்பிட்டு 'ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600002' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். உங்களுக்கான ரசீதுகளை அனுப்பிவைப்பதோடு, துயர் துடைப்புத் திட்டத்தின் அடுத்தடுத்த முன்னேற்றங்களைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம்.
ஊருக்கெல்லாம் சோறிடும் தஞ்சை மண்ணின் விவசாயிகள் பஞ்சத்தில் வாடித் தவித்தபோது, விகடனோடு பெருங்கடலாகக் கைகோத்து வாசகர்கள் திரட்டிக் கொடுத்த நிதியும்... அதன் மூலம் அடுத்தடுத்துப் பல கிராமங்களைத் தத்தெடுத்து நாம் நடத்திய அரிசி விநியோகமும் என்றைக்கும் வரலாற்றில் நிலைத்திருக்கக்கூடியது. இதோ, மீண்டும் நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு இயற்கையால் நேர்ந்துவிட்ட இந்த சோகத்திலும் கை கோர்க்கிறோம்.
அடுத்தடுத்து இதுகுறித்த நமது நடவடிக்கைகளை உங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொண்டே இருப்போம். ஒன்று சேர்ந்து முடிந்த வரையில் சாதிப்போம். புயலால் விழுந்து விட்ட நம் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையைத் தாங்கிப் பிடிப்போம். கருணை உள்ளங்கள் ஒன்று கூடினால் எந்தத் துயரையும் துடைக்கலாம் என்பதை நிரூபித்துக் காட்ட, நமக்கு மற்றும் ஒரு வாய்ப்பு இது.
வாருங்கள்... 'தானே’ துயரை நாமும் துடைப்போம்!
- ஆசிரியர்
விகடன் சேவைக்கு நன்றி

No comments: