Dec 20, 2012

குஜராத் தேர்தல்; ஹாட்ரிக் வெற்றி!:நரேந்திர மோடி

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 13 மற்றும் 17-ந்தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 71.32 சதவீத ஓட்டுக்கள் பதிவானது.
 
நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வில் இருந்து பிரிந்து சென்று கேசுபாய் படேல் தொடங்கிய புதிய கட்சியான குஜராத் பரிவர்த்தன் கட்சி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது. தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு ஓட்டுக்கள் பதிவானதால், அது எந்த கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
 
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 44 ஆயிரம் மின்னணு எந்திரங்களில் பதிவு செய்யப்பட்டிருந்த வாக்குகள், 33 மையங்களில் வைத்து எண்ணப்பட்டது. சுமார் 8 ஆயிரம் பேர் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
ஓட்டுப்பதிவுக்கு முன்பும், பிறகும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதை உறுதிபடுத்துவது போல 8.30 மணிக்கு குஜராத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர்.
 
அடுத்த ஒருமணி நேரத்துக்குள் பாரதீய ஜனதா கட்சி, ஆட்சி அமைக்க தேவையான 92 இடங்களில் முன்னிலை பெற்றது. இதன் மூலம் பாரதீய ஜனதா கட்சி குஜராத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.
 
10.30 மணிக்கு 182 தொகுதிகளில் முன்னிலை உறுதியானது. அப்போது பாரதீய ஜனதா 116 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் 61 தொகுதிகளிலும், கேசுபாய் படேலின் குஜராத் பரிவர்த்தன் கட்சி 3 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தனர்.
 
குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளதால் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக முதல்- மந்திரி பதவி ஏற்க உள்ளார். 2002 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் முதல்-மந்திரி பதவி வகித்த மோடி 3-வது தடவை முதல்-மந்திரி ஆவதன் மூலம் குஜராத் அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
 
மணிநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், மீண்டும் பா.ஜ.க. ஆட்சி மலர வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். என்றாலும் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றியை பெறவில்லையே என்ற கவலை பா.ஜ.க.வினரிடம் நிலவுகிறது.
 
நரேந்திர மோடி ஆமதாபாத்தில் உள்ள சர்தார்படேல் ஸ்டேடியத்தில் நடக்கும் விழாவில் பதவி ஏற்க உள்ளார். இதற்காக அந்த விளையாட்டு மைதானம் முழு வீச்சில் தயார் செய்யப்பட்டு வருகிறது.
 
அந்த மைதானத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் முன்னிலையில் நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார். குஜராத்தில் 2002-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா 127 இடங்களிலும், காங்கிரஸ் 51 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. 2007-ல் பாரதீய ஜனதா 117 இடங்களும், காங்கிரஸ் 59 இடங்களும் பெற்றன.
 
இந்த தடவை (2012) நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டது. சில கருத்துக்கணிப்புகள் மோடிக்கு 141 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறின.
 
ஆனால் இந்த தடவை நரேந்திர மோடிக்கு வெற்றி கிடைத்துள்ள போதிலும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. கடந்த 2002, 2007-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் கிடைத்த வெற்றி போலத்தான் இந்த தடவையும் பா.ஜ.க.வுக்கு வெற்றி கிடைத்துள்ளது. பெரிய அளவில் குஜராத் தேர்தலில் மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Easy (EZ) Editorial Calendar said...

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு என் வாழ்த்துக்கள்......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)