Aug 14, 2013

புலித்தடம் தேடி...! தமிழ் பிரபாகரன் - பாகம் 03

புலித்தடம் தேடி...!  தமிழ் பிரபாகரன் - பாகம் 03
மயான மௌனம் நிலவும் யாழ்ப்​பாணத்தில் நிற்​கிறேன். இன்று அது கட்​-அவுட் நகரம். எங்கே திரும்பினாலும் மகிந்த ராஜ​பக்ச சிரிக்கிறார், 'நீடூழி வாழ்க’ என்று வாழ்த்துகிறார். ராஜபக்ச மட்டுமே வாழ்ந்​தால் போதுமா?
காலையில் தொடங்கிய பயணத்தில் முதலில் கண்டது யாழ்ப்பாண நூலகம். தமிழனின் அறிவையும் ஆற்ற​லையும் ஆளுமை​யையும் வரலாற்​றையும் படைப்புத் திறனையும் பறைசாற்றிய கருவூலம். உலகத்தரம் வாய்ந்த நூலகம்.
ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அந்த இனம் பேசும் மொழியை முதலில் அழியுங்கள். மொழிக்கு அடித்தளமாக இருக்கும் புத்தகங்களைக் கொளுத்துங்கள்’ என்பதுதான் இனவாதத்தின் தாரக மந்திரம்.
நூல் ஒன்று எரிக்கப்பட்டால், அந்த நூலுக்​கான மொழி எரிக்கப்படுகிறது என்பார்கள். சிங்கள இன​வாதமும் அப்படித்தான் நடந்து​கொண்டது.
ஜெயவர்த்தனா இதனுடைய சூத்ரதாரியாக அன்று இருந்தார். 'சிங்கள தேசத்தில் தமிழ் நூலகமா?’ என்று கொக்கரித்தார்.
1981-ம் ஆண்டு வைக்கப்பட்ட தீயில் 97 ஆயிரம் புத்தகங்கள் எரிந்து சாம்பலாகின. தமிழனின் அடை​யாளம் அனைத்தும் அழிக்கப்​பட்டதாக அன்று கருதப்​பட்டது. தமிழ்த் தாய் கண்ணீர் வடித்த ஆண்டு அது.
அரசியல் மாற்றங்கள், பேச்சு​வார்த்தைகள் என காலம் மாறியதும் 2003-ம் ஆண்டு நூலகம் சீரமைக்கப்பட்டது. சிங்கள அரசாங்கமே ஐந்து கோடி ரூபாயைச் செலவு​செய்து மராமத்து செய்து தர​வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது.
தமிழகம் உட்பட உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை அனைத்தும் புதிய புத்தகங்கள். ஆனால், யாழ் நூலகத்தில் இருந்தவை அனைத்​தும் பழைய பனுவல்கள். உலகத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காத பொக்கிஷங்கள். ஆனாலும், இதுவாவது கிடைத்​ததே என்று தமிழன் மகிழத்தக்​கதாக அந்த நூலகம் இப்போது அமைந்துள்ளது.
ஆனால் இன்று, புத்தகங்கள் படிக்கவும் ஆராய்ச்சி செய்யவும் தேடுதலுக்காகவும் என்று இல்லாமல் அரசு விழாக்களுக்கும் மாநாடுகளுக்கும்தான், இந்த நூலகம் அதிகம் பயன்படுகிறது.
மாநாடு நடக்கும் அன்று நூலகத்துக்கு விடுமுறை. நான் சென்ற அன்றும் 15-வது ஆளுநர்கள் மாநாடு நடந்தது. அதன் காரணமாக நூலகம் மூடப்பட்டு, இராணுவம் காவலுக்கு நின்றது.
தமிழ் ஆர்வலர் ஒருவர் வந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிக்கொண்டு இருந்தார். 'ஏதோ ஒப்புக்குத் திறக்கிறாங்க... மூடுறாங்க’ என்று வருந்தினார்.
அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஒரு கண் காட்சி. 'வடமாகாண கண்காட்சி - ஒன்றிணைந்து முன்னேற்றத்தை நோக்கி’ என்று அதற்குத் தலைப்பு கொடுத்திருந்தனர்.
2009-ம் ஆண்டில் இருந்து 2012 வரை வடக்கு மாகாணம் எப்படி முன்னேறி உள்ளது என்பதை விளக்கும் கண்காட்சியாம்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வட மாகாணத்தை 2009-ம் ஆண்டுதான் இலங்கை அரசாங்கம் கைப்பற்றியது.
அதன்பிறகு கல்வியில், சுகாதாரத்தில், பொருளாதாரத்தில் வட மாகாணம் எந்த வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அரசாங்கக் கணிப்புகள் காட்டியது.
இது, டக்ளஸ் தேவானந்தா முன்னேற்பாட்டுடன் நடக்கும் கண்காட்சி என்பதால், அவரது ஆதரவாளர்கள், அதிகாரிகளை இந்தக் கண்காட்சிக்கு அழைத்து இருந்தனர்.
அங்கு இருந்து, யாழ்ப்பாணம் ஒல்லாந்தையர் (டச்) கோட்டையை அடைந்தேன். சிதிலம் அடைந்த அந்தக் கோட்டையின் புனர்நிர்மாணப் பணிகள் 2009-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தொடங்கியது.
இந்தப் பணிகளுக்காக 104.5 மில்லியன் (இலங்கை ரூபாய்) செலவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 62.1 மில்லியன் ரூபாய் நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி. 'அரசின் வாக்குப்படி புனர்நிர்மாணப் பணிகள் இந்த டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடையும். இது சுற்றுலாவாசிகள் பார்ப்பதற்காக அமைக்கப்படுகிறது. அதற்காகத்தான் நெதர்லாந்து அரசாங்கமும் நிதி உதவி செய்துள்ளது’ என்றார் அங்கிருந்த அலுவலர்.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சாலை ஆகிய பகுதிகளில் சாலை அமைப்பதற்கான நிதியை சீனா கொடுத்துள்ளது.
இலங்கையின் 90 சதவிகித சாலைப் பணிகளுக்கு சீனாதான் நன்கொடை. சாலைப் பணியில் ஈடுபடுபவர்கள் அனைவருமே இராணுவத்தினர்தான்.
குழி தோண்டுவது, பாலம் கட்டுவது, அலங்கார மேடைகள் அமைப்பது என அத்தனைக்கும் இராணுவ வீரர்கள்கள்தான் பயன்படுத்தப்படுகிறார்கள்.
ஆரம்ப காலத்தில் இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை 30 ஆயிரம்தான். சந்திரிகாவின் ஆட்சியில் ஒரு லட்சத்தைத் தொட்டது. ராஜபக்ச வந்த பிறகு இன்னும் உயர்ந்தது.
பள்ளிப் பருவத்தை முடித்த இளைஞர்கள் அனைவரையும் இராணுவத்தில் சேர்க்க ஆரம்பித்தனர். இதனால், .ராணுவத்தினர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது.
போரின்போது நேருக்கு நேரான யுத்தத்தில், முழுமையாகப் பயிற்சி பெற்றவர்கள் நிறுத்தப்பட்டனர். மற்ற அனைத்து இடங்களிலும் இத்தகைய இளைஞர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.
போர் முடிந்த பிறகு, இத்தகைய இளைஞர்களுக்கு எந்த வேலையும் இல்லை. எனவே பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறைப் பணிகளையும் இவர்களே பார்க்கிறார்கள்'' என்று சிங்களவர்கள் சிலரே வேதனையுடன் சொன்னார்கள்.
அதாவது, நம் ஊர் வழக்கப்படி சொன்னால், சாலைப் பணியாளர்கள் மற்றும் மக்கள் நலப் பணியாளர்கள் மாதிரியான வேலைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அந்த இளைஞர்கள் முறையான பயிற்சி இல்லாத, இன்னும் சிறுவர்களாகவே இருக்கிறார்கள். அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டு இருப்பதும், கண்காணிக்க கட்டளைத் தளபதிகள் நியமிக்கப்பட்டு இருப்பதும்தான் வித்தியாசம்.
கோட்டையைச் சுற்றி வருகிறேன். வீரசிங்க மண்டபத்துக்கு எதிரில், 'உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நினைவாலயம்’ என்ற எழுத்து காட்சி அளித்தது.
தமிழர் சின்னங்களில் ஒன்றாக எஞ்சி இருந்தது அது. தமிழர் மீதான கோரத் தாக்குதலின் தொடக்கத்தை கண்ணீர் சின்னமாக இன்னும் காட்டிக்கொண்டு இருக்கிறது அந்தச் சின்னம்!
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்தது. மாநாட்டின் இறுதி நாளில் சிங்களப் பொலிஸார் திடீரெனத் தாக்குதல் நடத்தியதில், ஒன்பது தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
அதற்குக் காரணமான பொலிஸ் அதிகாரிகளைப் பழிவாங்கவே தமிழ் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுத்தனர். அதுவே ஆயுத இயக்கமாக மாறியது.
அந்த இடத்தை நினைவுபடுத்தும் தூணைப் பார்த்து விட்டு, ஸ்ரீ நாக விகாரை என்ற இடத்துக்குச் சென்றேன். அங்கிருந்த புத்த பிக்குவிடம் இராணுவத் தளபதி ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார்.
மூன்றாம் நூற்றாண்டில் நாகர்களால் கட்டப்பட்ட இந்த விகாரையை தமிழ்ப் பௌத்தர்கள் தொடர்ச்சியாக வழிபட்டு வந்துள்ளனர். தேவநம்பியதீசன் என்ற சிங்கள மன்னன்தான் இந்த விகாரையை கட்டி எழுப்பினார் என்று இதற்கு இன்னொரு வரலாறும் எழுதப்பட்டு இருக்கிறது.
இந்த விகாரையைப் பராமரிக்கும் பணியை இராணுவம் செய்கிறது. அதனால் அடிக்கடி இராணுவம் வந்து மேற்பார்வையிடும்’ என்று சொன்னார்கள். அங்கிருந்து தமிழ்க் கோயிலான நல்லூர் முருகன் கோயிலுக்கு நகர்ந்தோம்.
தமிழ் முகங்களை அங்கு​தான் அதிகம் பார்க்க முடிந்தது. எப்படி இருந்த நாடு தம்பி! இன்னைக்கு இந்தச் சனம் எல்லா வலியையும் புதைச்சுக்​கிட்டு வாழுது.
குட்டித் தமிழ்​நாடு போல இருந்த யாழ்ப்பாணம் சிங்களவன் கைக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் பறிபோகுது. சிங்கள உடுப்புக் கலாசாரம் வேகமாப் பரவுது தம்பி.
இயக்கம் இருந்த காலத்​தில் காலுக்கு மேல எந்தப் பெண்ணும் பாவாடை கட்டுறது இல்லை. ஆனா இன்றைக்கு முட்டிக்கு மேல பாவாடை போயிடுச்சு.
முருகன் கோயிலுக்குக் கூட்டம் குறைஞ்சு, புத்தர் கோயி​​​லுக்கு அதிகமாயிடுச்சு. எல்லா இடங்களிலும் புத்தர் கோயில் வந்திருச்சு...’ என்று பதறியபடி சென்றார் ஒரு தமிழர்.
இடையில் வந்த பத்திரிகை நண்பர் யாழில் பரவிவரும் விபசாரம் பற்றிக் கூறினார்.
அனுராதபுரம் என்பது சிங்களக் கலாசார நகரம். போரின்போது இராணுவத்தை வீட்டுக்கு அனுப்பாமல் இராணுவப் பணியிலேயே வைத்திருப்பதற்காக, சிங்களப் பெண்களை இங்கே மொத்தமாக வைத்திருந்தனர்.
போருக்குப் பின் விதிகள் தளர்ந்து போனதால், பொலிஸ் உதவியுடன் சிங்களப் பெண்கள், தமிழ்ப் பகுதிகளில் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர். அதுவே இன்று யாழிலும் பரவி இருக்கிறது.
இவர்களைப் பற்றி நாம் எழுதினாலோ அவர்களிடம் ஏதாவது பேட்டி எடுத்தாலோ, அவர்கள் பொலிஸுக்குத் தகவல் கொடுத்து விடுகின்றனர். சுற்றுலா ஊக்குவிப்பின் ஒரு பகுதியாக இங்கே விபசாரம் பரவி வருகிறது என்றார் அவர்.
அடுத்து, கிட்டு பூங்காவுக்குச் சென்றோம். அந்தச் சாலையில் தமிழ் மன்னன் சங்கிலியன் சிலை இருந்தது. அந்தப் பூங்கா இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்ததால் சீரமைக்கப்படவில்லை.
யாழ்ப்பாணப் பழைய புகைவண்டி நிலையத்துக்குச் சென்ற போது, அங்கு ஒரு சிங்களப் பாம்பாட்டிக் குடும்பம் மட்டும் இருந்தது.
கட்டடங்கள் பாழடைந்து கிடந்தன. ''இதைச் சீரமைப்பது இந்தியாதான். ஒவ்வொரு முறை இந்தியப் பிரதிநிதிகள் இங்கு வரும்போதும், '15 நாட்களில் பணிகள் தொடங்கிவிடும்’ என்று கூறிவிட்டுச் செல்வார்கள்.
அவர்கள் அப்படிச் சொல்லத் தொடங்கியே நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால், பணிகள் மட்டும் இன்னும் தொடங்கவே இல்லை.
பளை - காங்கேசன்துறை வரை ஒரு பாதையும், மதவாச்சி - மன்னார் வரை ஒரு பாதையும் போடப்படும் என்று இந்திய அரசு அறிவித்தது. ஆனால், அதற்கான எந்தப் பணியும் நடக்கவில்லை.
வலிகாமத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்க வேண்டும் என்று அங்கிருந்த தமிழ் மக்களை சிங்கள இராணுவம் துரத்தியது. அந்த மக்கள் இந்தப் புகைவண்டி நிலையப் பாதையில் கூடாரமிட்டுத் தங்கினர். அவர்களையும் இந்தியா சீரமைப்புப் பணிகளை ஆரம்பிக்கப்போகிறது என்று சொல்லித் துரத்தினர். ஆனால், இன்றுவரை பணிகள் தொடங்கவில்லை.
உண்ண, உறங்கக்கூட உரிமை இல்லாமல் தமிழன் அலைக்கழிக்கப்படுகிறான் என்றார் ஒரு தமிழர்.
அடுத்த எனது பயணம் வல்வெட்டித்துறையை நோக்கி...
ஊடறுத்துப் பாயும்....!
ஜூனியர் விகடன்

No comments: