Jan 26, 2013

புலித்தடம் தேடி...தமிழ் பிரபாகரன்-பாகம் 9

பிரபாகரனின் வன வீடு, உளவுநோக்கிகளின் (ரேடார்) கண்களுக்கே தென்படாத நிழல் பகுதியாக இருந்தது. புதுக்குடியிருப்பு நகரில் இருந்து ஒட்டுசுட்டானுக்குச் செல்லும் வழியே உள்ள காட்டிலேதான் இந்த வீடு இருந்தது.வரி உடுப்பின் கிழிசல்கள் பசுமைப் போர்வைபோல் வீட்டின் காற்றுவெளிகளில் மூடப்பட்டு உள்ளது. இந்த வனமும் போருக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு இலங்கை இராணுவம் கொடுத்துள்ள பெயர்: 'தீவிரவாதியின் நிலத்தடி மறைவிடம்’. (Terrorist Under Ground Hideout) இந்த அறிவிப்புப் பலகை அந்த இடத்தில் பளிச்சிடுகிறது.கிடைத்த தகவல்படி முள்ளிவாய்க்காலுக்கு முன்னான தீவிரவாதத் தலைவர்களின் குடும்பத்தின் இருப்பு இங்குதான் இருந்தது. புலனாய்வுப் பிரிவின் தகவல்படி ஒட்டுசுட்டான், விசுவமடு பகுதிகளை இலங்கை இராணுவம் கைப்பற்றியதற்குப் பின் தலைவர் இவ்விடத்தைக் காலி செய்து​விட்​டார் என்றும் அங்கு எழுதப்பட்டு உள்ளது.
இடமும் வலமும் துவக்கு மண்ணை நோக்கி வணங்குவதுபோல் நிற்க, ஈழ வரைபடத்தின் நடுகில் மெழுகு​வர்த்தி எரிவதுபோல் முன் அரண் கம்பிகளால் வடிவமைக்கப்பட்ட குடில் ஒன்று இருந்தது. வீட்டின் நுழைவாயிலுக்கு முன்னே இருக்கிற இந்தக் குடில்தான் பிரபாகரன், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இடம்.

மரக்குச்சிகளில் அமர்விடம், மரங்களின் அடர்த்திகள் இடையே புகுந்து வரும் ஒளிக்கீற்றுகள், இயற்கையை சீர்குலைக்காத கட்டமைப்பு, மரங்களோடு ஒன்றிய முள்வேலிகள் என அந்த வீட்டின் புவியியல் அமைப்பு அவ்வளவு கச்சிதமானது.
வீட்டைச் சுற்றியுள்ள மூன்றடுக்கு முள்வேலிகளை மீறி உள் காட்டுப்பகுதியில் இருந்து இன்று நகர்ந்தாலும்கூட இந்த வீட்டை அடைய முடியாது என்றார் ஆட்டோ ஓட்டுநர்.
சிறப்புக் காவல் அரணோடு வீட்டின் முகப்பு. உள்ளே நுழைய சாதாரண வீடுபோலதான் தெரிந்தது. 'அங்குள்ள ஒரு கதவைத் திறந்தால், மேல் இருந்து கீழே உள்ள மூன்று மாடிகளுக்குச் செல்லலாம்’ என்றார் ஓட்டுநர்.
சிங்களவர்களுக்கு இராணுவம் வீட்டின் அறிமுகத்தை கொடுத்துக் கொண்டிருக்க... திறந்தே வைக்கப்பட்டு இருக்கும் கதவின் வழியாக நுழைந்தோம்.
கீழே இறங்கும் படிகள் ஓரம் உள்ள சுவர்கள் துப்பாக்கிக் குண்டுகளால் துளை போடப்பட்டு இருந்தன. முதல் மாடி நுழைவில் உள்ள கதவு மரத்தால் ஆனதாகவும், இரண்டாவது மாடி நுழைவில் உள்ள கதவு இரும்பால் ஆனதாகவும், மூன்றாவது மாடியில் உள்ள கதவு கடும் இரும்பால் ஆனதாகவும் இருந்தன.
தரையில் இருந்து கீழே செல்லச் செல்ல, சுவாசிக்க சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஏனெனில், சுவாசிக்க ஏதுவாக வைக்கப்பட்டு இருந்த குளிர்சாதன வசதிகள் அனைத்தும் இராணுவத்தின் கைப்பற்றலுக்குப் பின் அகற்றப்பட்டு விட்டன.
இரண்டாவது, மூன்றாவது மாடிகளில் இருந்து நேரடியாகத் தப்பி மேல் வர சுரங்கப் பாதைகளும் இருந்தன. நடவடிக்கை அறை, உரையாடல் கூடம், பிரபாகரன் அறை என சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டு இருந்தன. வீட்டைச் சுற்றி துப்பாக்கிப் பயிற்சி இடம், ஜெனரேட்டர் அறை, சமையல் அறை, தண்ணீர்தொட்டி, நிலத்தடி வாகன நிறுத்துமிடம் என சகலமும் இருந்தன.
இலங்கையில் இப்படி ஒரு வீடு வேறு எங்கும் இல்லையாம்’ என்றும், 'ஜப்பான் முறைப்படி கட்டப்பட்ட வீடு’ என்றும் சிங்களவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
புலிகள் இருந்தபோது, இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்காக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பகிரப்பட்டது. புலிகள் நினைத்து இருந்தால் காட்டுக்குள்ளே மின்சார இணைப்புகளைக் கொண்டுவந்து இருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல் ஜெனரேட்டரைத்தான் மின் தேவைக்குப் பயன்படுத்தி உள்ளனர்’ என்றார் ஓட்டுநர்.
சிங்களவர்களின் முக்கியமான சுற்றுலாத்தலமாக இதுதான் இப்போது இருக்கிறது.
பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியே வந்து திரும்பும் முனையில், இராணுவத்தால் கடைசி நேரத்தில் அழிக்கப்பட்ட புலிகளின் இரும்புக் கவச வாகனம் வெற்றி அறிவிப்போடு காட்சிப் பொருளாக உருக்குலைந்து கிடந்தது.
அடுத்து, இரணப்பாலை காட்டுப் பகுதியில் இருந்த புலிகளின் நீச்சல் குளத்தை நோக்கி புதுமாத்தளன் ஊடாகச் சென்றோம். இடையில் இடிந்தும் உடைந்தும் கிடைக்கும் பள்ளிகளைப் பார்க்கும் போது மூத்த போராளி கூறிய போர்க்கால சம்பவம் ஒன்று நினைவில் சிறைப்பட்டது.
முள்ளிவாய்க்கால்ல ஒரு பள்ளிக்கூடத்தைதான் ஹோஸ்பிட்டலாக வைச்சிருந்தாங்க. என்னோடு இருந்த பொடியனோட மனைவி காயப்பட்டுட்டா. உடனே அவங்களை இந்தப் பள்ளிக்கூட ஹோஸ்பிட்டலுக்குதான் கொண்டுபோனம். அவளுக்கு வயத்துல காயம். கர்ப்பிணியா இருந்தவ.
டாக்டர்லாம் பங்கர்க்குள்ள இருந்தாங்க. நான் சொன்னன்... 'ஒரு தடவ வந்து பாருங்க’னு. டாக்டர் வரல. 'நீங்க போங்க’ என்றார். நான் எப்படியாவது காட்ட​​ணோம்னு சொல்ல, அவர் டீ குடிச்சுக்கொண்டே 'நீங்க போங்க வாரன்’ என்றார்.
அதுக்குள்ள அப்பிள்ளை செத்துடுச்சு. அந்தப் பிள்ள செத்து ஒரு நிமிஷத்துக்குள்ள டாக்டர் இருந்த பங்கர்குள்ள செல் விழுந்து, அவங்க குடும்பத்தோட இறந்து போனாங்க. நான் சொன்னதைக் கேட்டு அவர் வந்திருந்தா, தப்பி இருக்கலாமோ என்று தெரியல. அவரும் பயத்துல பங்கர்ல இருந்துட்டார்.
செத்த பிள்ள பேர் தமிழ்கவி. இயக்கத்தில் போராளியா இருந்த பெண்'' என்றார். பள்ளிக்கூடங்களைப் பார்த்தபோது இந்தச் சம்பவம்தான் எனக்கு ஞாபகம் வந்தது.

இறுதி நேரத்தில் மருத்துவ வசதி இன்றி மருத்துவமனையாக மாறிய பள்ளிக்கூடத்தையும் அம்புலன்ஸ் வான்களையும் இராணுவம் குறிவைத்துத் தாக்கியதன் வெளிப்பாடுதான் இந்தச் சம்பவம்.
இந்தக் கதைகளைச் சொல்ல முடியாமல் அமைதியாய் நிற்கின்றன அந்தக் கட்டடங்கள்.
ஆட்டோ ஓட்டுநர், தன்னுடைய அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.
புதுக்குடியிருப்பை இயக்கம் தன் கட்டுப்பாட்டுல வெச்சிருந்த காலத்தில், நான் மளிகைக் கடை வெச்சிருந்தன். கடைப் பொருட்களை கொழும்புல இருந்து வாங்கி வந்தா, ஓமந்தை எல்லையில இயக்கத்துக்கு வரி கட்டணும். மறுபடியும் கடைக்குக் கொண்டுவந்த பிறகும் வரி கட்டணும். வரி விதிப்பு எல்லாவற்றுக்கும் அதிகம்.
ஆனா, இயக்கக் காலத்துல களவு பயம் இல்லை. களவு எடுத்தவன் பிடிபட்டால், தண்டனை பயங்கரமானதாக இருக்கும். களவு நடந்தால் 24 மணி நேரத்துக்குள்ள களவு எடுத்தவன் சிக்கிடுவான். ஆனா, இன்னைக்கு பொலீஸுக்கு சாராயப் பாட்டிலும் காசும் தந்துட்டே களவு நடக்குது.
போலீஸுகிட்டயோ ஆமிக்கிட்டயோ களவு போச்சுனு சொன்னா, எங்களைத்தான் கடுமையா விசாரிக்கிறாங்க. இயக்கக் காலத்துல சட்டம்னா எழுத்துல இல்ல, நடப்பு வாழ்க்கையில இருந்துச்சி. ஆனா, இன்னைக்கு அப்படி இல்லை'' என்று சொல்லிக் கொண்டே வந்தார்.அதற்குள் காட்டுக்குள் உள்ள புலிகளின் நீச்சல் குளத்தை வந்தடைந்தோம். 2001-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நீச்சல் குளம் 83 அடி நீளமும் 22 அடி ஆழமும் கொண்டது.
நமக்குத் தகவல் கொடுத்தவர்களின் கூற்றுப்படி, இது கடற்புலிகளின் பயற்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இலங்கை கடற்படை மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தும் கடற்புலிகளும் இங்குதான் முழுப் பயிற்சி எடுப்பார்கள்'' என்ற இராணுவத் தரப்பு விளக்கம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.ந்தக் காட்டுக்குள் அமைந்திருக்கும் நீச்சல் குளத்துக்குள் ஒரு புத்தக் கோயில் இப்போது கட்டப்பட்டு உள்ளது. அரச மரமும் மண்ணில் ஊனப்பட்டு உள்ளது. ஆளே இல்லாத காட்டில் எதுக்கு புத்த கோயில்னு புலம்பினார் ஓட்டுநர்.
புத்தக் கோயில்கள் அனைத்தும் சிங்களத்தின் வெற்றியை குறிப்பதாகவும், தமிழர்களின் தோல்வியை கேலிப்படுத்துவதாகவும் தான் விளங்கின.
நாங்கள் கிளம்பியபோது வந்த ஆமி கப் போட்ட ஒரு ஆள், 'எதுக்குப் பெரிய கமராவில் படம் எடுக்கிறீர்கள்?’ என்றார். நான் ஆங்கிலத்திலேயே பேச, மொழித் தடுமாற்றத்தில் 'ஓகே ஹரே’ (போகலாம்) என்று சொன்னார். ஆங்கி​லத்தில் பேசினால், எளிதில் தப்பிக்கலாம் என்று தெரிந்தது.அடுத்துச் சென்றது, கடற்புலிகளின் தளபதி சூசை வீடு.சுற்றியும் ஈ மொய்ப்பது போல பொம்மைக் கடைகளும் தின்பண்டக் கடைகளும் நிறைந்து இருந்தன. உள்ளே நுழையும்போது ஒருவர் இடையில் வந்து, 'எப்படி இருக்கீங்க?’ என்றார்.
நீங்கள் யார்னு தெரியலயே?’ என்றேன். 'தம்பி, நான் உங்கள ரெண்டு நாளைக்கு முன்னாடி முல்லைத்தீவு பஸ்ல பாத்தன். நீங்க பக்கத்துல ஒருத்தர்ட்ட பேசிட்டு இருந்திங்க. தமிழ்நாடு போல இருந்துச்சு. எப்படியும் இங்க வருவீங்க... பேசிக்கலாம்னு இருந்தேன். நினைச்சது​போலவே வந்திட்டங்க. நானும் இங்கதான் கடை போட்டிருக்கன் என்றார்.
புன்னகைக்க... மேலும் தொடர்ந்தவர், ''நானும் தமிழ்நாட்டுல மதுரைதான் தம்பி. மலையகத்துல இருந்து எங்கள அடிச்சுத் துரத்தன காலத்துல இந்தப் பக்கம் வந்துட்டம். எங்க சொந்தக்காரங்க நிறையப் பேர் சேலம், திருச்சி​யிலலாம் இப்பவும் இருக்காங்க'' என்றார். நம்மவர் யாராவது வருவார்களா, அவர்களிடம் ஊரைப்பற்றிப் பேசலாமா என்ற ஏக்கம் உள்ள மனிதரின் குரலாக அது இருந்தது.


அவரிடம் பேசிவிட்டு சூசையின் வீட்டுக்குள் நுழைந்தோம். வீட்டின் முகப்பில் 'எதிரிகளே நமது நல்ல ஆசிரியர்கள்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.
உள் அறையில் ஓர் கதவு பீரோ போல் இருந்தது. அதுதான் பங்கர்க்குச் செல்லும் வழி. அதைப் பார்க்க வந்த ஒரு சிங்கள மூதாட்டி தவறி விழுந்து இறந்து விட்டாராம். அதனால், இப்போது அதை மூடி விட்டார்களாம்.
போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது தமிழகத்​துக்குப் பேசிய சூசை, 'கடைசி மணித்தியாலங்கள் தாக்குதல் நடந்துகொண்டு இருக்கு. நிறைய சனம் செத்துக்கொண்டு இருக்கு. இரண்டு கி.மீ. அகலத் துண்டுக்குள்ள கடுமையான யுத்தம் நடந்துகொண்டு இருக்கு. எல்லா இடமும் பிணக் குவியல்கள்தான்.
கே.பி.பத்மநாபன் ஊடாக ஜெனிவாவோடு தொடர்பு கொண்டு வெள்ளவாய்க்கால் வழியாக காயப்பட்டுக்கொண்டு இருந்த மக்களை எடுக்கச் சொன்னம். ஆனா, எடுக்கல. அந்த மொத்தச் சனமும் இப்ப செத்திட்டுது.
நாங்களும் இராணுவத்த எதிர்த்து சண்ட பிடிச்சுக்கொண்டு இருக்கம். கடைசி வரை நாங்கள் அடிபணிய மாட்டம். ஆனா, எங்க மக்கள் செத்துக்கொண்டு இருக்கினம்.
சர்வதேசம் திரும்பிப் பாக்கையில. மக்கள் எல்லாம் பங்கர்குள்ள இருக்க வெச்சிருக்கனம். சுத்தி வளைக்கப்பட்ட பங்கர்களில் மக்கள் இருக்கினம்.
மக்களை வெளியில எடுக்கச் சொல்லி தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கம்’ என்று சொல்ல, எதிர் முனையில் இருந்தவர் அழ... 'அழாதடா, தமிழன் அழக் கூடாது. வெல்லுவம் வெல்லுவம்’ என்ற குரல் என்னுடைய ஞாபகத்துக்கு வந்தது.
அந்த வீட்டுக்குள் சூசையின் சூரிய முகம் பளிச்சிடுவதாகவே உணர முடிந்தது. மக்களை பங்கர்குள் இருக்க வெச்சிருக்கம் என்று சூசை குறிப்பிட்ட மக்களைத்தான் விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக போரில் பயன்படுத்தினர் என்று சர்வ​தேசமும் ஐ.நா-வும் குறிப்பிடுவது.
இருள் கவ்விக்கொண்டு இருந்த வேளையில் புதுக்​குடியிருப்பில் இருந்து கிளிநொச்சிக்குச் செல்கிறேன்.
கந்தசாமி கோயில் அருகே ஒரு காலத்தில் புலிகளின் சமாதானச் செயலகம் இருந்தது. அதைக் கடந்து விரைகிறேன்.
அடுத்த நாள் காலை இரணைமடு குளத்தை நோக்கி இரு சக்கர வாகனத்தில் உள்ளூர் நண்பரோடு நகர்ந்தேன். அந்த இரணைமடுவில்தான் அன்டன் பாலசிங்கம்...
ஊடறுத்துப் பாயும்.......
ஜூனியர் விகடன்




No comments: