Feb 25, 2013

சத்தமே இல்லாமல் ஒரு சமூகத் தொண்டு!


துரையில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றை நடத்திவருபவர் வரதராஜன்.  சத்தமே இல்லாமல் இவர் ஆற்றிவரும் சமூகத்தொண்டு பலரையும் சலாம்போட வைக்கிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் தலைமையாசிரியர் அறையில் தேசத் தலைவர்களின் படங்கள் அலங்கரிக்கும். இவரது பள்ளியில் பெரியார் படத்தின் கீழ் சிந்தனை என்றும், காமராசர் படத்தின் கீழ் செயல் எனவும் எழுதிப் பார்ப்பவர்களை யோசிக்க வைத்துவிடுகிறார்.  
வரதராசனிடம் பேசியதில், 'தமிழகத்தின் கல்விப் புரட்சிக்குக் காரணம் பெரியார், காரியம் காமராசர் என்று ஆனந்த விகடனில் பெரியார்  நூற்றாண்டு விழாவின்போது இடம் பிடித்த வாசகத்தைத்தான் இப்படி மாற்றி எழுதியுள்ளேன்'' என்று சிரிக்கிறார்.
ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் ஆக்சிஜனைப் பரிமாறும் ஒரு கருவியாகச் செயல்படுகிறது. ஹீமோகுளோபின்  குறைபாடு உடலில் ஏற்பட்டால் 'அனிமியா’ எனப்படும் இரத்தசோகை, மூச்சுத் திணறல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கருவுற்ற காலம்முதல் பிரசவம்வரை தாய்க்கும், சேய்க்கும் இரத்தப் பரிமாற்றம் உண்டு. கருவுற்ற பெண்ணுக்கு ரத்தச்சோகை ஏற்படும்போது, குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுபற்றி கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு  விழிப்பு உணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு இலவசமாக ஹீமோகுளோபின் மாத்திரைகளை வழங்குதல், மேலும் மதுரையைச் சேர்ந்த 10 தலைசிறந்த மருத்துவக்குழுவைக்கொண்டு இலவசமாக மருத்துவச் சேவையையும் ஆற்றிவருகிறார் இவர்.
புத்தகங்களைப் படிப்பதும், அவற்றைச் சேகரிப்பதும் மக்களிடையே இன்று  குறைந்து வந்துகொண்டிருக்கும் சூழலில் இவர் 4,000 புத்தகங்களுக்கு மேல் சேமித்து வைத்துள்ளார். விபத்து, பிரசவம் முதலானவற்றில் ரத்த இழப்பு அதிக அளவில் ஏற்படுவதுண்டு. குறிப்பிட்ட வகையான இரத்தம் வேண்டும் என உறவினர்கள், நண்பர்கள்  என அனைவரும் அலைபாயும் நிலை இன்றும் நிலவுகிறது. அதற்காகவே இவர் தந்தை பெரியார் குருதி கழகம் என்ற அமைப்பை நிறுவியுள்ளார்.
'மதுரை மற்றும் அதன் புறநகர் பகுதிகள், ஆண்டிப்பட்டி, கம்பம், போடி போன்ற இடங்களில் எங்கள் பெரியார் குருதி கொடை கழகத்தை நிறுவியுள்ளோம் இதன் மூலம் வருடம் 600 பேருக்கு மேலாக ரத்த தானம் செய்யவைக்கிறோம். நான் இதுவரை 77 முறை இரத்ததானம் செய்துள்ளேன். இதற்காக  தமிழக அரசிடம் இருந்து பாராட்டு சான்றிதழ்களைப் பெற்றுள்ளேன்!' என்றார்.  
சத்தமே இல்லாமல் சேவைபுரிந்து வரும் இவர், மதுரையில் சிறந்த ரத்த தான தொண்டருக்கான விருதுகளைப் பெற்றுள்ளார்!

க.அருண்குமார்
படங்கள்: வீ.சிவக்குமார்.
நன்றி: என்விகடன் 

2 comments:

Avargal Unmaigal said...


வாழ்த்துக்கள்

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் தொண்டு மேன்மேலும் சிறக்க என் பாராட்டுக்கள்.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)