Feb 2, 2013

புலித்தடம் தேடி...! பாகம் 11,12


புலித்தடம் தேடி...மகா. தமிழ் பிரபாகரன் -பாகம் 11

வந்தடைந்தோம், ஈழத்துக்காக உயிர் கொடுத்த​வர்களைப் புதைத்த மண்ணுக்கு!  மாவீரர்கள் புதைக்கப்பட்ட அந்த இடங்களில் இன்று எருக்கஞ் செடிகள் புதராக முளைத்திருந்தன.

நிராதரவாய் இருக்கும் அந்த மண்ணைப் பார்க்கும்போதே யாரையும் சோகம் அப்பிக்கொள்ளும். 'நடுகல்� என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடு​வதன் நீட்சிதான் 'மாவீரர் துயிலும் இல்லங்கள்�.
புலிகளின் முதல் மாவீரன் சங்கர்.

அவரின் மூச்சு அகன்றது நவம்பர் 27, 1982. நேரம் மாலை 6.05. அவர் சாவதற்கு முன் உச்ச​ரித்தது.. 'தம்பி... தம்பி� என்பதுதான். அந்த நாளைப் பற்றி பிரபாகரன் குறிப்பிடும்போது 'இறுதி வரை என் நினைவாக இருந்த சங்கரை எப்படி மறப்பேன்? அந்த நாளன்று நான் அதிகம் யாருடனும் பேசுவதில்லை.

மூன்று நேரமும் உணவு அருந்துவது இல்லை� எனக் குறிப்பிட்டார். அதன் அடையாளமாக 1989-ம் ஆண்டில் இருந்து நவம்பர் 27-ம் தேதியை மாவீரர் தினம் என்று அறி வித்தார் பிரபாகரன். அன்றைய தினம் மாலை 6.05-க்குக் கோயில்கள் எங்கும் மணிகள் ஒலிக்கும். பிரபாகரன் மாவீரர் தின உரையை வழங்குவார்.

தளபதிகள் முதல் சாதாரணப் போராளிகள் வரை எத்தனையோ பேர் இந்த மண்ணுக்காக இறந்துள்ளனர். இதில் அனைவருமே முக் கியமானவர்கள்தான். இவர் பெரியவர், இவர் சிறியவர் என்ற வேறுபாடு இல்லை. அந்த வேறுபாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அனைவருக்குமான தினமாக இது அமையும்� என்றார்.

அத்தகைய மாவீரர் கல்லறைகள் உள்ள இடம், ஈழத் தமிழ் மக்கள் எப்போதும் வணங்கும் கோயிலாக இருந்தது. இன்று, அவை முழுமையாகச் சிதைக்கப்​பட்டுவிட்டன. எங்களுக்காக உயிர ஈகம் செஞ்சவர்​களுக்குக்​கூட மரியாத செலுத்த முடியாத நிலைமையில​தான் இந்த மண்ணுல வாழறம். சிங்கள ராணுவம் தமிழ்ப் பகுதிகளை ஒவ்வொரு முறை கைப்பற்றும்போதும் துயிலும் இல்லங்கள் அழிக்கப்படும்.

புலிகளால் மீட்டு மீண்டும் சீரமைக்கப்படும். இப்போது மொத்த​மாக அழிக்கப்பட்டு விட்டது� என்று சொன்னார் நண்பர். அவர் குறிப்பிடுவதுபோல், ராணுவத்தின் கணக்குப்படி அத்தனை துயிலும் இல்லங்களும் இப்போது அழிக்கப்பட்டு விட்டன.

கிளிநொச்சியில் கனகபுரம், விசுவமடு, முழங்​காடு, யாழ்ப்பாணத்தில் சாட்டி தீவகம், கோப்பாய், எல்லங்குளம், உடுத்துறை, கொடிகாமம், முல்லைத்தீவில் முள்ளியவளை, அலம்பில், ஆலங்​குளம், வன்னிவளாங்குளம், ஜீவன்முகாம், டடிமுகாம், வவுனியாவில் ஈச்சங்குளம், மன்னாரில் பண்டிவிரிச்சான் திருகோணமலையில் ஆழங்குளம், தியாகவனம், பெரியகுளம், உப்பாறு, மட்டக்களப்பில் தாவை, தாண்டியடி, கல்லடி, மாவடி, அம்பாறையில் கஞ்சிகுடிச்சாறு என அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களின் சுவடுகளும் அழிக்கப்பட்டு விட்டன.

அனைத்து துயிலும் இல்லங்களின் நிலங்களும் இப் போது ராணுவச் சொத்து. பல பகுதிகளில் தங்கள் படைப் பிரிவுகளுக்கான நிரந்தரக் கட்டடத்தை இந்த நிலங்களில்தான் கட்டி இருக்கிறது ராணுவம். புலிகள் புதைக்கப்பட்ட இடத்தில் ராணுவம் நிலை நிலைநாட்டப்பட்டு விட்டது என்பதே உலகத்துக்குச் சொல்லும் செய்தி.

கனகபுரம் துயிலும் இல்லத்தின் எல்லைகளில் உடைந்த நடுகற்களும், இடித்து நொறுக்கப்பட்ட கற்களின் எச்சங்களும் ஆங்காங்கே கிடந்தன. அதை வேதனையோடு பார்த்தபடியே கிளம்பினேன். இந்த இடங்களைச் சுற்றி ராணுவக் கண்காணிப்பு உள்ளது.

உட்புறச் சாலையில் இருந்து 'ஏ-9� நெடுஞ்சாலையை அடைந்தேன். ராணுவத்தின் உட்புற முகாம்களை சாதாரணமாக அந்த வீதியில் காண முடிந்தது. விளையாட்டுக் கூடத்தின் கட்டுமான வேலையும் நடந்துகொண்டு இருந்தது. அங்கு ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டி உடைந்து கிடந்தது.

இந்தத் தொட்டிக்கு உள்ளும் பிரபாகரன் வாழ்ந்தார் என்று ஒரு கதை சொல்கிறது ராணுவம்� என்று நண்பர் கூறினார். ராணுவம் எறிகனையில் தாக்கி அழித்த அந்தத் தண்ணீர் தொட்டியையும் வெற்றிச் சின்னமாகவே வைத்துள்ளது. போர் வடுக்களின் அடையாளங்கள்தான், சிங்கள தேசத்தின் வெற்றிச் சின்னங்கள்.

அவர்களின் இந்தச் செயல்கள் வரலாற்றை அழித்தல் என்பதாக நீள்கிறது. என் உடனிருந்த நண்பர், புத்தகப் பிரியர். போரின்போது அவரும் கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு நகர்ந்தவர். அவரிடம் பொக்கிஷங்களாய் இருந்த 5,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களைப் போரில் இழந்தவர். அவர் எனக்கு ஒரு சம்பவத்தை நினை வூட்டினார்.

முள்ளிவாய்க்காலின் இக்கட்டுக்​குள் சிக்கவைக்க ராணுவம் நகர்த்திக்கொண்டே வந்தபோது, வீடு வீடாய்ப் புகுந்த ராணுவத்தினர் புத்தகங்களை வெளியில் வீசி எரித்தனர். படங்களை எல்லாம் கொளுத்தினர். கிடைத்தவற்றை எல்லாம் சூறையாடினர்'' என்றார். அவர் சொன்னதைக் கேட் டபடியே கந்தசாமி கோயிலை நெருங்கி​னேன்.

தமிழ் மக்கள் தங்கள் குறையை மனதிலே வைத்துப் புலம்பும் இடமாக இருப்பவை இந்தக் கோயில் கள்தான். 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல� அந்தக் கோயில்களையும் விடவில்லை இலங்கை ராணுவம். இதுகுறித்து, கடந்த மார்ச் 2012-ல் 'இண்டர்நேஷனல் பாலிசி டைஜஸ்ட்� என்ற இணையதளம் 'சால்ட் ஆன் ஓல்ட் வவுண்ட்ஸ் (Salt on Old wounds) என்ற தலைப்பில் வடகிழக்கு மற்றும் மலையகங்களில் திட்ட​மிட்ட சிங்களமயமாக்கல்� என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையின்படி, தமிழர் பகுதிகளில் இருந்த 367 கோயில்கள் இடிக்கப்பட்டு உள்ளன. உயர் பாதுகாப்பு வளையங்களில் இருந்த கோயில்கள் இடிக்கப்பட்டு புத்த விகார்கள் கட்டப்பட்டுள்ளன. புத்த விகார்கள் அதிகரித்து இருப்பதற்கான ஆதாரங்கள் ஏ- 9 சாலையில் உள்ளன.

யாழ்ப்பாணத்தில் 208 கோயில்கள், திருகோண​மலையில் 17 கோயில்கள், மட்டக்களப்பில் 61 கோயில்​கள், அம்பாறையில் 11 கோயில்கள், கிளி நொச்சியில் 46 கோயில்கள், முல்லைத்தீவில் 6 கோயில்​கள், மன்னாரில் 6 கோயில்கள், வவுனியாவில் 12 கோயில்கள் என மொத்தம் 367 கோயில்கள் அழிக்கப்பட்டு உள்ளன.

மலையகப் பகுதி ரத்னபுராவில் சிவனொளி பாதமலை (அடம்ஸ் பீக்) என்ற தமிழர்களின் வரலாற்று பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது. 1900-ம் ஆண்டு முதல் இது இந்துக்களின் புனித ஸ்தலம். ஆனால், 1970 முதல் இந்தப் பகுதி சிங்கள தரப்புக்கு முக்கியமானதாக ஆக்கப்பட்டது.

இப்போது, அதன் பெயர் ஸ்ரீபாட. இப்போது இதை அரசாங்கம் புத்தர்களின் புனித ஸ்தலமாக அறிவித்து விட்டது. மலையின் அதிகார மேற்பார்வைகளையும் இப் போது புத்த பிக்குகளே கவனிக்கின்றனர்� என்ற தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது இன்டர்நேஷனல் பாலிசி டைஜஸ்ட்.

சமீபத்தில், இந்த மலைக்கு நாமல் ராஜபக்ஷே புனித ரத யாத்திரை சென்றதை சிங்கள அரசுசார் பத்திரிகைகள் புகழ்ந்தன. ராஜபக்ஷேவோ தமிழர் பகுதிகளில் இருந்த கோயில்களை இடித்துவிட்டு, திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்க வருகிறார், புத்த கயாவுக்குப் பாவம் கழுவ வருகிறார்.

மக்களை போர் சிதைத்து விட்டது, நான் பார்த்தவரை இந்தத் தலைமுறை நிச்சயம் மீள முடியாத நிலைமையில் உள்ளது'' என, வீட்டுக்கு வந்ததும் நண்பரிடம் சொன்னேன். 'இதோடு சாதியும் இங்கு தலை தூக்கத் தொடங்கி இருக்கிறது� என்ற வேதனைச் செய்தியைச் சொன்னார் அவர்.

புலிகள் காலத்தில் சாதியப் பாகுபாடுகள் பெரும்பாலும் இல்லை. ஒரு ஆள் இயக்கத்தில் சேருகிறார் என்றால், அவர் பெயர் முதலில் மாற் றப்படும். அது எந்த சாதி, எந்த மதத்தையும் குறிக்காது. அப்படியான பிரபாகரன் தன் மகனுக்கு சார்லஸ் ஆன்டனி என்று பெயர் சூட்டினார்.

அது, 1983-ல் வீரச் சாவடைந்த போராளி சார்லஸ் ஆன்டனி நினைவாக வைத்தது. ஆனால், அதை வைத்து உங்கள் நாட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கம், புலிகளை கிறிஸ்தவ ஆதரவு இயக்கம் என்று வகுத்துக் கொண்டது. அதையே இன்று ராஜபக்ஷேவும் பயன்படுத்திக் கொள்கிறார்.

2009-க்குப் பிறகு, சாதிய ரீதியான கட்டமைப்புகள் மீண்டும் துளிர்க்கத் தொடங்கி உள்ளன. அதைக் கட்டுப்படுத்த சாதிக்கு எதிரான அமைப்போ, ஆட்களோ இங்கு இல்லை� என்று வேதனைப்பட்டார்.

கிளிநொச்சியை விட்டு வவுனியா ஊடாக மன்னார் நோக்கிக் கிளம்பினேன். ஆங்கிலேயர் காலத்தில் மலையகத்துக்கு சென்றால், 'உழைப்புக்கு மேல் ஊதியம் கிடைக்கும்� என்று ஏமாற்றப்பட்டு இழுத்து வரப்பட்ட தமிழகத் தமிழர்கள், இந்த வழியேதான் ஏக்கங்களை சுமந்தபடியே தோட்டத் தொழிலுக்காக கங்காணிகளின் பின்னால் நடந்து சென்றனர்.

ஊடறுத்துப் பாயும்...

ஜூனியர் விகடன்



புலித்தடம் தேடி...! மகா. தமிழ் பிரபாகரன் தபாகம் 12

சிங்கள ஆண் தமிழ் பெண் திருமணங்கள். இதுவே, மிச்சம் மீதி ஈழத் தமிழ் சமூகத்தின் அடையாளங்களையும் அழிப்பதற்கான புதிய ஆயுதம் என்பதை பயணத்தில் அறிய முடிந்தது.
கிழக்கு திமோர் பழங்குடிகளை அழிக்க நினைத்த இந்தோனேசிய இராணுவம், கருத்தடை ஊசிகளை திருமணம் ஆகாத பழங்குடி இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் போட்டது. அந்த வகையான சிந்தனைதான் இதுவும்.

'தமிழ்ப் பெண்களை சிங்கள இராணுவத்தில் சேர்ப்பதும், இராணுவத்தினர் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்வதும் ஆகிய இரண்டு வழிகளின் மூலமாக இதனை நிகழ்த்திக் காட்ட நினைக்கிறார்கள்’ என்று பத்திரிகையாள நண்பர் ஒருவர் கூறினார். இதை இன நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் நடத்துகிறது இராணுவம்.

தமிழ்ப் பெண்களை சிங்கள இராணுவத்தின் இச்சைக்கு இரையாக்கி, அதன் மூலம் அவர்களைத் திருமணம் செய்யும் ஏற்பாடு. அதுவும், முன்னாள் பெண் போராளிகளின் நிலைமை இதனிலும் மோசம். அவர்கள் எங்கு சென்றாலும் இராணுவம் தொடர்கிறது. அவர்களது வீட்டுக்கு இரவில் செல்கிறது. 'காதலி'க்கும்படி கட்டாயப்படுத்துகின்றனர்! இதற்கு சிங்கள அரசின் அறிவிப்பே ஆதாரமாக உள்ளது.

'தமிழ்ப் பெண்களை திருமணம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம்’ என்கிறது அரசாங்கத்தின் அறிவிப்பு. அதாவது 30 ஆயிரம் ரூபா சம்பளம் உள்ள இராணுவ ஆள், தமிழ்ப் பெண்ணை திருமணம் செய்தால் 60 ஆயிரம் ரூபா கிடைக்கும். இந்த சம்பள உயர்வு 'இனக்கலப்பின் விதைக்காக’! போர்க் காலத்தில் இராணுவத்தில் போர் நிதி என்று வழங்கப்பட்டது. அது இப்போது நிறுத்தப்பட்டு விட்டதால், இப்படியாவது சம்பள உயர்வை பெறலாம் என இராணுவ இளைஞர்கள், தமிழ்ப் பெண்களுக்கு அலை​கின்றனர்.

மன்னாரில் உள்ள ஆயர் ஜோசப்பைச் சந்திக்க நண்பரோடு கிளம்பினேன். இடையில் ஒரு மூத்த தமிழ் தொல்பொருள் ஆய்வாளரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இன்றைய நிலையில் தமிழர் பகுதிகளில் நிகழ்ந்துவரும் தொல்பொருள் ரீதியான சிங்கள ஆக்கிரமிப்புகள் பற்றிக் கூறினார்.

'என்னைப்பற்றி தெரிந்துகொண்டு வாரத்துக்கு ஒருமுறையேனும் என்ட வீட்டுக்கு அரசு தொல்பொருள் பணியாளர்கள் வந்து போகினம். நான் அவர்களிடம் கதைப்பதை இயன்ற வரை எப்படியோ தவிர்த்து விடறன். மீறி அப்படி நான் அவர்களிடம் கதைக்கும்போது, தெரியாமல் எனக்குத் தெரிந்த பழைமையான தமிழ் வரலாற்று இடத்தை உளறிட்டா, அதை எப்படியோ தேடிப்பிடித்து அங்கே புத்த சிலையை புதச்சிடுவாங்கள். மூணு மாசமோ ஆறு மாசமோ கழிச்சு அந்த இடத்தத் தோண்டி புத்த சிலைய எடுத்து, தொல்பொருள் துறைக்கு சொந்தமான காணினு அறிவிச்சிருவாங்க’ என்றார் வேதனை பொங்க.

அவரிடம் இருந்து விடைபெற்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பைச் சந்தித்தேன். அவரிடம் இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு பற்றி பேசியபோது,

''மிஷனரிக்குச் சொந்தமான காணியைக்கூட கைப்பற்றி விட்டனர். குறிப்​பிட்ட இடத்தைக் குறிவைத்து விட்டால், அதற்கான கைமாற்றுப் பத்திரத்தையும் தயார் செய்து கொண்டு வந்தே இராணுவத்தினர் காணியைக் கேட்கின்றனர். காணியைக் கொடுப்​பதா, இல்லையா என்பதை அதற்கு உரியவன்தானே முடிவு எடுக்கணும்? இராணுவம் யாரு முடிவு எடுக்க?'' என்றார் கோபக்கனல் வீச.

காணாமல் போனோர், புகலிடம் கோரியவர்​கள் பற்றி இவர் வெளியிட்ட கருத்துகளுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையும் நடத்தி உள்ளது. அரசு தரவுகள்படி 2008-09 ஆண்டு​களில் 1,46,679 பேர் காணாமல் போய் உள்ளனர். அதைக் கண்டுபிடித்துத் தருவதற்கான எந்த முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை.

அடுத்து, மன்னாரில் உள்ள இலங்கை - ஜப்பான் நட்புறவு பாலத்தை நோக்கிச் சென்​றோம். மன்னாரின் நிலப்பரப்பையும் தீவுப்பகுதியையும் இணைக்கும் பாலம் அது. 'போர் வெற்றியின் பிரதிபலனாய் இந்தப் பாலத்துக்கு ஜப்பான் உதவி செய்து இருந்தாலும், இந்தப் பாலம் நாட்டுக்கு தேவையான ஒன்றுதான்’ என்றார் நண்பர்.

தண்ணீருக்கு மேலே இரு வழிப் பாதையாக அமைக்கப்பட்டு இருக்கும் இந்த நட்புறவு பாலச் செலவுக்கு ஜப்பானும் இலங்கையும் ஒதுக்கிய தொகை 1836 மில்லியன் யென் (ஜப்பான்), 640 மில்லியன் ரூபாய் (இலங்கை) ஆகும்.

அந்தப் பாலத்தின் கீழே உள்ள மணல் திட்டை அடைந்தோம். மன்னாரில் பொருளா​தார வளர்ச்சி கடலை நம்பி மட்டுமல்ல... விவசாயத்தை நம்பியும் உள்ளது. கடல் தொழி​லுக்கு இணையான விவசாய வளங்களும் மன்னார் நிலப்பரப்பில் உள்ளது.

மன்னார் கடல் எண்ணெய் வளம் மிக்கது என அறியப்​பட்டதும்... சீனா, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, மலேசியா என பல நாடுகள் தங்கள் நாட்​டுக்கு எழுதிக் கொடுக்கும்படி முட்டி மோதின. எந்தளவு எண்ணெய் வளம் இருக்கும் என்று ஆதாரபூர்வமாக இலங்கை அரசு அறிவிப்​பதற்கு முன்னரே, இந்த முட்டல் மோதல் நடந்தது.

இறுதியில் வாய்ப்பு கிட்டியது இந்தியாவுக்கும் சீனாவுக்கும்தான். அமெரிக்கா இலங்கையை எதிர்ப்பதுபோல் காட்டிக்கொண்டு இருக்கும் செயல்களுக்குப் பின்னால் எண்ணெய் அரசியலும் இருக்கிறது.

பெற்றோலிய வள முன்னேற்ற செயலகத்தின் இயக்குநர் சலிய விக்கிரமசூரியாவின் கூற்றுப்படி - எண்ணெய் வளம் மன்னார் படுகையில் ஐந்து தொகுதிகளும், காவிரி படுகையில் ஐந்து தொகுதி​களும் உள்ளது. (இலங்கையில் காவிரி படுகையா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். தமிழகத்தில் உள்ள பல ஊர்களின் பெயர்கள் ஈழத்தில் உள்ளது போலவே, யாழ் குடா பகுதியில் காவிரி படுகையும் இருக்கிறது.)

அதன்படி, 2008-ம் ஆண்டு ஏல அடிப்படையில் கெய்ன் லங்காவுக்கு மன்னார் தேக்கத்தில் எண்ணெய் ஆராய்ச்சி செய்ய அனுமதி அளித்தது இலங்கை அரசு. இது, இந்திய தனியார் நிறுவனம். இதுவரை அந்த நிறுவனம் மூன்று எண்ணெய் கிணறுகளைத் தோண்டி உள்ளது. அதில் இரண்டில் இயற்கை எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்போது நான்காவது எண்ணெய் கிணறு அகழ்வுக்கும் இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. இதுவரை எண்ணெய் அகழ்வாராய்ச்சிக்காக 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்​பட்டுள்ளது. இத்தகைய இயற்கை வளங்களைக் குத்தகைக்கு எடுத்துக் கைப்பற்றத்தான் பல நாடுகளும் இலங்கையின் அட்டூழியங்களுக்கு துணை நிற்பதை உணர முடிந்தது.

அடுத்து, பூநகரி வழியாக யாழ்ப்பாணம் செல்வதாகத் திட்டம். அடுத்த நாள் காலை யாழ்ப்பாணத்துக்குக் கிளம்பினேன். இரவு கலந்துரையாடலின்போது, மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு காடுகளில் வசிக்கும் நிலைமையைப் பற்றிச் சொன்னார் நண்பர். '2007 யுத்தக் காலத்துல முள்ளிக்குளம் சனம் இடம்பெயர்ந்து சென்றது.

2010 மீள்குடியேற்ற வேலைகள் நடந்துச்சி. ஆனா, இப்ப சனத்தோட வீட்டில கடற்படையைச் சேர்ந்த குடும்பங்கள் வசிக்குது. அவங்களுக்கு மக்கள் நெருங்காத அளவுக்கு பாதுகாப்பும் கொடுக்குது இராணுவம். மீள் குடியேற்றம்னு பேருல தமிழ் சனத்த காட்டுக்குள்ள குடியமர்த்தி இருக்குது அரசு. சிங்கள மீனவர்களுக்கு மீன்பிடியில் முன்னுரிமை கொடுத்து மீன் பிடிக்கச் செய்கிறது இராணுவம்’ என்றார்.

இவர் சொல்வதுபோல் சிங்களக் குடியேற்றம் என்பது வெறும் வாழ்வாதார பிரச்சினை மட்டும் அல்ல. இது எதிர்காலத்தில் தமிழர்களின் உரிமைக்கு மொத்தமாக முட்டுக்கட்டை போடும் வேலை. இலங்கை அரசின் மனநிலைப்படி, 'சிங்கள குடியேற்றம் என்பது சிங்களவர்களை இலங்கையின் நிலப்பரப்பு எங்கும் பரவச் செய்வதாகும்.

வெளிநாடுகளிலும் ஐ.நா-விலும் தமிழர்களுக்கு உரிமைக் கொடுப்பதற்கான தனி வாக்கெடுப்பு பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டே இருக்கும். வாக்கெடுப்புக்கான நாளை நாம் நெருங்குவதற்கு முன், சிங்களக் குடியேற்றங்கள் முடிந்திருக்கும். சிங்களக் குடியும் தமிழ்க் குடியும் ஒன்றோடு ஒன்று கலந்து, தமிழர்களுக்கான பிரதிநிதித்துவமே இல்லாதபடிக்கு அவர்களின் உரிமைத் தேவைகள் நசுக்கப்பட்டிருக்கும்.

எப்படியோ, ஐ.நா-வின் மனசாட்சியை உலுக்க சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு நடக்​கிறது என்றே வைத்துக் கொள்வோம். முன்பு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த வடகிழக்​கிலும் வாக்கெடுப்பு நடக்கும். சிங்கள இனம் சமநிலைமைப் படுத்தப்பட்ட இடத்தில் 'தனி நாடு’ கோரிக்கைக்கு எதிராகவே அதிக வாக்குகள் விழும்.

அப்போது, சிங்கள அரசியல் இனம், 'தமிழர்களே தனி நாட்டுக்கு எதிராக இருக்​கிறார்கள். அதற்கு சான்று வடகிழக்கில் இந்த கோரிக்கைக்கு எதிராக வாக்குகள் பெரும் சதவிகிதம் விழுந்ததுள்ளது’ என பிரசாரம் நடத்தும். அதை ஐ.நா-வும், உலக நாடுகளும் தெரிந்தே தெரியாததுபோல ஏற்கக் கூடும். அப்போது தமிழர்களுக்கான உரிமை மொத்தமாக பாழ்படும்.

தமிழர்கள் வாழ்ந்த, நடைப் பிணங்களாக வாழ்ந்து​கொண்டு இருக்கிற வடகிழக்கில், சிங்கள அரசு உச்ச நிலையான ஆக்கிரமிப்புகளை செய்துகொண்டு இருக்​கிறது. அந்த வழிநிலையின் செயலாக இப்போது தமிழ் ஊர் பெயர்களை அதிகாரபூர்வமாக அரசு சட்ட ஆவணங்களில் சிங்களத்துக்கு மாற்றி இருக்​கிறது.

’பொத்துவில் - பொத்துவிலா, வாகரை - வாகரா, ஆனையிறவு - அலிமன்கடுவா, பரந்தன் - பரந்தேனா, இரணைமடு - ரணமடுவா, மணலாறு - வெலிஓயா, வவுனியா - வன்னிமவா, புளியங்குளம் - கொட்டி​யாவேவா, மாங்குளம் - மா யூ ரவேவா’ இப்படி 89 தமிழ் ஊர்ப் பெயர்கள் முதன்மையாக மாற்றப்பட இருக்கிறது.

தூக்கம் ஒரு தெளிவைத் தரும்’ என்பது ஆரோக்கியத்தின் கூற்று. ஆனால், துக்கம் கொண்ட உள்ளத்துக்கு தூக்கம் ஏது?

இருள் விடிவதற்கு முன்னரே யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டேன். லட்சம் லட்சமாக மக்களை 50 ஆண்டு காலம் தொடர்ச்சியாகக் கொன்றுவிட்டு... இன்று சமாதானம் என்ற பெயரிலும் தந்திரமாகச் சித்திரவதை செய்யும் சிங்களவர்கள் - 'ஒரே நாடு, ஒரே இனம்' என்று அறை​கூவாத குறையாக தங்களுக்குத் தாங்களே வெற்றிச் சின்னங்கள் எழுப்புவதைப் பார்த்தால் துக்கம் எப்படி தாக்காமல் இருக்கும்?

ஊடறுத்துப் பாயும்..

ஜூனியர் விகடன்


No comments: