மதுரை சித்திரைத் திருவிழா அருள்மிகு மீனாட்சி- சுந்தரேசுவரர்
திருக்கல்யாணத்தில் பக்தர்கள் நேரிடையாகப் பங்கேற்க, முதன்முறையாக
அதிகளவில் இலவச அனுமதி வழங்கப்பட உள்ளது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் சித்திரைத் திருவிழா
உலகப் பிரசித்தி பெற்றதாகும். ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் இத் திருவிழா
தொடங்குகிறது. வரும் 14 ஆம் தேதி கொடியேற்றமும், 21 ஆம் தேதி மீனாட்சி திக்
விஜயமும், 23 ஆம் தேதி காலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர்
திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன.
திருக்கோவில் மேற்கு-வடக்காடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண
மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்று
வருகிறது. இதற்காக, திருக்கோவிலுக்குள் சுமார் 15 ஆயிரம் பேர்
அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சிறப்பு அனுமதிக்கான அட்டை பெற்றவர்கள் மட்டுமே இதுவரை திருக்கல்யாண
வைபவத்தைக் கண்டு வந்தது வழக்கமாக உள்ளது. இதற்காக, 3 வண்ணங்களில் அனுமதி
அட்டை அச்சிடப்படும். அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அட்டைகள்
பக்தர்களுக்கு கட்டண அடிப்படையில் கொடுக்கப்படும். முக்கியப் பிரமுகர்கள்,
அரசியல் பிரமுகர்கள், உயரதிகாரிகள், காவல்துறையினர், திருக்கோவில்
பணியாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அட்டைகள் இலவசமாக வழங்கப்படும்.
இந்நிலையில், வரும் 23 ஆம் தேதி நடைபெறும் மீனாட்சி சுந்தரேசுவரர்
திருக்கல்யாணத்தில் பங்கேற்க விரும்புவோரை அனுமதிப்பதில் புதிய நடைமுறை
பின்பற்றப்படவுள்ளது. அதனடிப்படையில், அனுமதி அட்டை இன்றி இலவசமாக 4 ஆயிரம்
பேர் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ரூ. 500 கட்டணத்தில் 9 ஆயிரம்
பேரும், வி.ஐ.பி.க்கள் பெயர் விலாசத்துடன் 1000 பேரும் அனுமதிக்கப்பட
உள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருக்கல்யாணத்துக்கு வி.ஐ.பி. அனுமதி சீட்டு பெறுவோரின் பெயர்
விவரம் அதில் குறிப்பிடப்படுவதால், சம்பந்தப்பட்டவர் மட்டுமே அனுமதி சீட்டை
பயன்படுத்த முடியும். இம்முறையானது, கோவில் பாதுகாப்பைக் கருத்தில்
கொண்டு செயல்படுத்தப்படுவதாகவும், காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீதிமன்ற வழக்கை அடிப்படையாகக் கொண்டே திருக்கல்யாணத்தில் பங்கேற்க
பொதுமக்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுவதாகவும், காவல்துறையினர்
தெரிவித்தனர்.
1 comment:
Post a Comment