இளைய தலைமுறையின் இணைபிரியாத ஓர் அம்சமாகிவிட்டது இணையம். உடலின் ஓர் உறுப்புப் போலாகிவிட்டது. ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், கூகுள் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்கிற அளவிற்கு அதன் மீது, ‘காதல்’ பிறந்து விட்டது.
அவர்களுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியாக இருக்கும். நீங்கள் இணையத்தில் எழுதும் ஒவ்வொரு சொல்லும் உங்களுக்குத் தெரியாமலேயே கண்காணிக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் உளவு பார்க்கப்படுகிறீர்கள்.
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அமெரிக்க உளவு நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ள ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள், தகவல்கள் போன்றவற்றை ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களிடமிருந்து பெற்று வருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இதற்காக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஏஜென்சி (National Security Agency), ஒரு தகவல்களைத் தோண்டி எடுக்கும் மென்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்படி 97 பில்லியன் (9,700 கோடி) தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
‘பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் நாங்கள், எங்கள் குடிமக்களை வேவு பார்க்கவில்லை’ என்று அமெரிக்கா நியாயம் சொல்கிறது. அது நமது கவலை இல்லை. ஆனால், வேவு பார்க்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. ஈரான், பாகிஸ்தான், ஜோர்டான், எகிப்து ஆகியவற்றையடுத்து இந்தியாவும் இடம் பெறுகிறது. இந்தியாவிலிருந்து 6.3 பில்லியன் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
இப்படி இணையவாசிகளை வேவு பார்ப்பதற்குச் சட்டம் இடமளிக்கிறது என்கிறது அமெரிக்கா. ஆனால், இந்தியச் சட்டங்களின்படி இதற்கு அனுமதியில்லை. எனவே, இதைக் குறித்து இந்தியா கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கும் என்று இணையவாசிகள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், இந்தியா இன்னொரு அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவும் அமெரிக்காவைப் போல இணையவாசிகளை வேவு பார்க்கும் அமைப்பை உருவாக்கவிருக்கிறது.
தேசிய மின்னுலக ஒருங்கிணைப்பு மையம் National Cyber Coordination Centre (NCCC) என்ற ஓர் அமைப்பு. 1,000 கோடி ரூபாயில் உருவாக்கப்படும் இந்த அமைப்பு, மின்னுலகிலிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களை அவை உருவாகும்போதே கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கத்தக்க அறிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும் என்கிறது இதைப் பற்றிய அரசின் குறிப்பு.
அரசு உருவாக்கவுள்ள இந்தப் புதிய நிறுவனத்தில் அரசின் உளவுத்துறை (IB), ரா போன்ற பல்வேறு அமைப்புகளும் பங்கேற்க உள்ளன. எனவே இதன் நோக்கம், அமெரிக்கா போல அயல்நாட்டவர்களை வேவு பார்ப்பது மட்டும்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை தெளிவுபடுத்த வேண்டிய கடமை, அரசுக்கு உண்டு.
ஏற்கெனவே சீனா ஃபேஸ்புக், கூகுள் போன்றவற்றின் வலைத்தளங்களைத் தடை செய்திருக்கிறது. ரஷ்யா, கடந்த மே மாதம் ஃபேஸ்புக்கை தடை செய்ய முயற்சித்தது. பின் அதைக் கைவிட்டு, அதற்கு மாற்றாக VK என்ற சமூக வலைத்தளத்திற்கு ஆதரவளித்தது.
இப்படி ஒவ்வொரு நாடும் தங்களுக்கான சமூக வலைத்தளங்களை உருவாக்கிக் கொள்ளுமானால், இணையம் உலகை இணைக்கும் என்ற கருத்தே பொய்த்துவிடும்,
No comments:
Post a Comment