Aug 29, 2013

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?


 எஸ்.குருமூர்த்தி
1. பற்றாக்குறை அதிகரிப்பும் ரூபாயின் வீழ்ச்சியும்!
இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைவதை 18 மாதங்களாக மெளன சாமியாராகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்துவதற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைக்கப் போவதாக ஆகஸ்ட் 12-ம் தேதி அறிவிக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். 2012 ஜனவரியில் ரூ.45 கொடுத்து ஒரு டாலரை இந்தியர்களால் வாங்க முடிந்தது. ஆனால், ஆகஸ்ட் 12-ல் ஒரு டாலர் வாங்க ரூ.61 கொடுக்க வேண்டியிருந்தது. 2012 ஜனவரியில் இருந்து தற்போது வரை டாலரின் மதிப்பு 35 சதவீதம் உயர்ந்தது. அது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் பிரதிபலித்தது.
2004-2005 முதல் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வந்ததன் நேரடி விளைவு இது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும் சில "நடவடிக்கைகளை' ப.சிதம்பரம் ஆகஸ்ட் 12-ல் அறிவித்தார்.
ஆனால், அவர் அறிவித்த 36 மணி நேரத்துக்குள்ளாக ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ந்தது. டாலருக்கு ரூ.61.50 கொடுக்க வேண்டியிருந்தது. இந்தியாவிலிருந்து டாலர் வெளியேறுவதைத் தடுக்க வெளிநாடுகளில் முதலீடு செய்வதையும், பணம் செலுத்துவதையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு இந்திய ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையும் கைகொடுக்கவில்லை.
ரூபாய் மதிப்பு வீழ்ந்து வந்த நிலையில், உண்மையிலேயே ரூபாயின் மதிப்பு - அதாவது அதன் வாங்கும் சக்தி- டாலருக்கு வெறும் ரூ.19.75தான் என்று "தி எகனாமிஸ்ட்' (2.1.2013) குறிப்பிட்டது. அதாவது ரூபாயின் இன்றைய சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் அதன் நிஜமான மதிப்பு!
சர்வதேச சந்தையில் தகுதிக்கும் மிகக் குறைவாக மதிப்பிடப்படும் கரன்சி இந்திய ரூபாய்தான் என்றும் "தி எகனாமிஸ்ட்' குறிப்பிட்டது. உண்மையிலேயே அதிக மதிப்புடைய, ஆனால் குறைத்து மதிப்பிடப்பட்ட ரூபாயின் மதிப்பு ஏன் குறைந்து வருகிறது? இதற்கு யார் பொறுப்பு?
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004-இல் பதவி ஏற்றபோது, இந்தியப் பொருளாதாரம் வலுவாகவும், வளர்ச்சிப் பாதையிலும் இருந்தது. நிதியமைச்சராகப் பொறுப்பேற்றபோது, வலுவான பொருளாதார நிலையையே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விட்டுச் சென்றது என்று ப.சிதம்பரமே ஒப்புக் கொண்டுள்ளார்.
2004 ஜூலையில் அவரது பட்ஜெட் உரையில், "இந்தியாவின் பொருளாதார அடிப்படை வலுவாகவே காணப்படுகிறது. ஏற்றுமதியைவிட இறக்குமதி கூடுதலாக இருந்தால் ஏற்படும் பற்றாக்குறை நிலையும் இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த நிலை மாறி, 1991-ம் ஆண்டில் காணப்பட்ட இருண்ட பொருளாதார நிலை ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணம்?
2004-ல் முந்தைய ஆட்சி விட்டுச் சென்ற வளமான பொருளாதாரத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எப்படி சீரழித்தது?
நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் பாய்ச்சல்
2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றதில் இருந்து பொருளாதாரம் மோசமானது எப்படி, 2009-ல் மீண்டும் அதே அரசு ஆட்சிக்கு வந்ததும் பொருளாதாரம் எப்படி சீரழிந்தது என்பதை சில புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே புரியும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் அண்மைக்கால வரலாற்றைப் பார்ப்போம்.
1991-2001 காலகட்டத்தில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 35 பில்லியன் (ஒரு பில்லியன் - 100 கோடி) டாலராக இருந்தது. அதாவது 3,500 கோடி டாலர். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறை உபரியாக மாறியது. உபரி -ஆம், உபரிதான்- அதுவும். 22 பில்லியன் டாலராக இருந்தது. 1978-க்குப் பிறகு நடப்புக் கணக்கு உபரி என்பது அதுவே முதல்முறை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது உபரியாக இருந்த நடப்புக் கணக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு ஆட்சியில், ப.சிதம்பரம் (ஐந்தரை ஆண்டுகள்), பிரணாப் முகர்ஜியின் (மூன்றரை ஆண்டுகள்) தலைமையில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு 339 பில்லியன் டாலராக அதிகரித்தது. அவர்களது பொருளாதாரத் தலைமையின் கீழ் உபரி எவ்வாறு, ஏன் பற்றாக்குறையாக ஆனது?
2003-2004 இல் 13.5 பில்லியன் டாலரை நடப்புக் கணக்கு உபரியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒப்படைத்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2004-05இல் 2.7 பில்லியன் டாலராகவும், 2-வது மற்றும் 3-வது ஆண்டுகளில் மூன்று மடங்காக அதாவது 10 பில்லியன் டாலராகவும் உயர்ந்தது. பின்னர், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 16 பில்லியன் டாலராகவும் (4-வது ஆண்டு), 28 பில்லியன் டாலராகவும் (5-வது ஆண்டு), 38 பில்லியன் டாலராகவும் (6-வது ஆண்டு), 48 பில்லியன் டாலராகவும் (7-வது ஆண்டு), 78 பில்லியன் டாலராகவும் (8-வது ஆண்டு), 89 பில்லியன் டாலராகவும் (9-வது ஆண்டு) அதிகரித்தது.
கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றை அதிகமாக இறக்குமதி செய்வதே நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணம் என அரசு திரும்பத் திரும்பக் கூறியது. இப்போதும் கூறி வருகிறது. இதுதான் காரணமா, இதுதான் முழு உண்மையா என்றால் நிச்சயமாக இல்லை.
உற்பத்தியை அழித்த இறக்குமதி
இறக்குமதி புள்ளிவிவரங்களை ஆய்வு செய்வதால் அதிர்ச்சிகரமான உண்மைகள் புலப்படுகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மூலதனப் பொருள்களின் இறக்குமதி விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. பொதுவாகச் சொல்வதென்றால் இது யாராலும் கவனிக்கப்படாததாகி (அல்லது மறைக்கப்பட்டதாகி) விட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது மூலதனப் பொருள்களின் இறக்குமதி சராசரியாக ஆண்டுக்கு 10 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே (2004-05) மூலதனப் பொருள்களின் இறக்குமதி 25.5 பில்லியன் டாலராக ஆனது. அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் மூலதனப் பொருள்களின் இறக்குமதி அதிகரித்தது.
2-வது ஆண்டில் 38 பில்லியன் டாலராகவும், 3-வது ஆண்டில் 47 பில்லியன் டாலராகவும், 4-வது ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும், 5-வது ஆண்டில் 72 பில்லியன் டாலராகவும், 6-வது ஆண்டில் 66 பில்லியன் டாலராகவும், 7-வது ஆண்டில் 79 பில்லியன் டாலராகவும், 8-வது ஆண்டில் 99 பில்லியன் டாலராகவும், 9-வது ஆண்டில் 91.5 பில்லியன் டாலராகவும் அதிகரித்தது. 9 ஆண்டுகளில் மொத்தம் 587 பில்லியன் டாலருக்கு மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மூலதனப் பொருள்களின் இறக்குமதி "செயல்படும்' பொருளாதாரத்துக்கான அறிகுறி. தத்துவரீதியாக, அது தேசிய உற்பத்தியை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், என்ன ஆனது என்பதைப் பார்ப்போம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் தொழில் துறை உற்பத்திக் குறியீடு ஆண்டுதோறும் சராசரியாக 11.5 சதவீதமாக இருந்தது. ஆனால், இது படிப்படியாகக் குறைந்து அடுத்த 5 ஆண்டுகளில் 5 சதவீதத்துக்கும் கீழே போனது. கடைசியாக 2012-13 இல் 2.9 சதவீதமாக ஆனது. 4 ஆண்டுகளில் மூலதனப் பொருள் இறக்குமதி அதிகரிப்பதற்கேற்ப தொழில் துறை உற்பத்தி அதிகரிக்காமல் 11.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக 56 சதவீத சரிவைக் கண்டது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 9 ஆண்டுகளில் 587 பில்லியன் டாலருக்கு மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடைசி 5 ஆண்டுகளில் 407 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இது மொத்தத்தில் 79 சதவீதமாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் சராசரியாக 45 பில்லியன் டாலருக்கும், பிந்தைய 5 ஆண்டுகளில் 80 பில்லியன் டாலருக்கும் மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
79 சதவீதம் அதிகரிப்பு
மூலதனப் பொருள் இறக்குமதி 79 சதவீதம் அதிகரித்தபோதும், தேசிய உற்பத்தி 56 சதவீதம் வீழ்ச்சியடைந்தது மட்டுமல்ல அதிர்ச்சி. தொடர்ந்து உற்பத்தி குறைவதையும், இறக்குமதி அதிகரிப்பதையும் பிரதமரும், நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கியும், பொருளாதார ஆலோசகர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதுதான் அதிர்ச்சி.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (கரண்ட் அக்கௌண்ட் டெபிசிட்) என்றால் என்ன?
நாம் அன்னியச் செலாவணி கொடுத்து இறக்குமதி செய்யும் மொத்தத் தொகைக்கும், ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணிக்கும் உள்ள இடைவெளிதான் நடப்புக் கணக்கு உபரி அல்லது பற்றாக்குறை. ஏற்றுமதி அதிகமாக இருந்தால் உபரியும், இறக்குமதி அதிகமாக இருந்தால் பற்றாக்குறையும் ஏற்படும். அளவுக்கு மீறிய பற்றாக்குறை ஏற்படும்போது அது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்.
மூலதனப் பொருள்களின் இறக்குமதி என்றால் என்ன?
ஒரு தயாரிப்பாளர் ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்காக மூலப்பொருளை இறக்குமதி செய்வதுதான் மூலதனப் பொருள் இறக்குமதி.
அப்படி மூலப்பொருளை இறக்குமதி செய்து புதிய பொருள்களைத் தயாரித்து அதிக விலைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இறக்குமதியால் ஏற்படும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை ஈடுகட்ட முடியும்.

No comments: