“எங்கே... எங்கே எங்க தெய்வம்?”
Posted Date : 11:17 (24/10/2013)Last updated : 11:19 (24/10/2013)
கடந்த வியாழக் கிழமை அதிகாலை சுமார் 5 மணி இருக்கும்... சென்னை நேரு ஸ்டேடியத்தில் முதல்வரும் ஜனாதிபதியும் கலந்துகொள்ளும் 'எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் திறப்பு விழா’வுக்குச் சவுக்கு மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைத்துக்கொண்டு இருந்தனர் ஊழியர்கள். அவர்களை நோக்கி விரைந்து வந்தது ஒரு போலீஸ் வேன்...
''வேலைகளை அப்படியே நிறுத்திட்டு எல்லோரும் ராஜாஜி மண்டபத்துக்குக்கிளம்புங்க...'' என்று அதிகாரிகள் உத்தரவிட, 'சரி, விழா நடக்கும் இடத்தை மாற்றிவிட்டார்களாக்கும்...’ என்று ஒரு லாரியில் ஏறி அவர்கள் ராஜாஜி மண்டபம் வந்து சேருவதற்கும், அந்த சோகச் செய்தியைக் கேள்விப்பட்டு நாமும் அங்கு போய் நிற்பதற்கும் சரியாய் இருந்தது!
போலீஸ் உதவி கமிஷனர்கள் சிலர், ராஜாஜி மண்டபப் படிக்கட்டுகளுக்கு எதிரே ஆணி அடித்து, கயிறுகளைக் கட்டி, தடுப்புகள் அமைக்க 'மார்க்’ செய்துகொண்டு இருந்தனர். வந்த ஊழியர்கள் விஷயத்தைக் கேள்விப்பட்டுத் திகைத்து நின்றனர். சற்று நேரத்தில் ஊர் விழித்துக்கொண்டது.
'முதல்வரின் உடல், ராஜாஜி மண்டபத்துக்குக் கொண்டுவரப்பட இருக்கிறது’ என்று கேள்விப்பட்ட சிலர், அவசர அவசரமாக ஓடி வர, ராஜாஜி மண்டபத்தைச் சுற்றிலும் போலீஸ் நிறுத்தப்பட்டது. எம்.எல்.ஏ. ஹாஸ்டல் பக்கம் இருந்து சத்தமான குரலெடுத்து, ''யப்பா... யப்பா..!'' என்று கதறிக்கொண்டு முதலில் ஓடி வந்தார் அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. பஞ்சவர்ணம். மக்கள் கடலின் முதல் அலைகூட வந்து சேராத நேரம். கொஞ்ச நேரம்தான்!
ஒரு கட்டடம் சரிவதுபோல் 'டமார்’ என்ற சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து பயங்கர அலறல்... இரைச்சல்... தூரத்தில் ஒரு நுழைவாயிலின் இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு, ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் அலறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.
சில போலீஸ் அதிகாரிகள், ''இன்னும் இங்கு முதலமைச்சரைக் கொண்டுவரவில்லை, கொண்டுவரவில்லை...'' என்று கத்தினார்கள். எதையும் காதில் வாங்காமல் விரைந்து வந்த கூட்டம், மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு மண்டபத்தை நோக்கிப் பாய்ந்து வந்தது. மிகக் குறைந்த எண்ணிக்கையில் நின்ற போலீஸார், கண நேரத்தில் ஓரமாய் விலகிக்கொண்டனர். படிக்கட்டின் மேலே இருந்து பார்க்கும்போது, மனிதத் தலைகளால் ஒரு புயல் கிளம்பி வருவதுபோல் இருந்தது. வந்தவர்கள், ராஜாஜி மண்டபத்தின் முன் வாசல் வழியாக மேலே ஏறிக் கதவுகளை முட்டி மோதித் திறந்தனர். உள்ளே முதல்வரின் உடல் இன்னும் வைக்கப்படவில்லை என்பதை நேரில் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்ட பின்னும், ஒவ்வொரு திசைக்கும் அழுதபடி, ''எங்கே... எங்கே எங்க தெய்வம்?'' என்று ஓடித் தேடினர். ராஜாஜி மண்டபத்தை ஒரு சுற்றுச் சுற்றிய பின்னர், ''ஐயோ, காணோமே... காணோமே...'' என்று அரற்றியபடி அவ்வளவு பேரும் அவர்களாகவே கீழே இறங்கிவிட்டனர்.
ராஜாஜி மண்டபத்தின் படிக்கட்டிலும், சுற்று வழியிலும் ரத்தச் சுவடுகளாகக் காலடித் தடங்கள் ஆங்காங்கே இருந்தன. தடுப்புகள் அமைக்க இடம் குறிப்பதற்காகத் தரையில் அடித்துவைக்கப்பட்டு இருந்த ஆணிகளின் மேல் மிதித்து, பலருடைய பாதங்கள் கிழிந்து, கொட்டிய ரத்தம் திட்டுத்திட்டாய்க் கிடந்தது. ராஜாஜி மண்டபத்தின் எதிரே இருந்த பரந்த மைதானத்தில் நின்றவர்களை போலீஸார் நயந்து ஓரம் கட்டிய பின், சவுக்குக் கட்டைகளால் தடுப்புகள் அமைக்கும் வேலை தொடர்ந்தது. அப்போதுதான் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சௌந்தரராஜன், டி.ராமசாமி ஆகிய மூவரும் ஏற்பாடுகளைக் கவனிக்க வந்து சேர்ந்தனர்.
முதல்வர் உடல் வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்டது. பிரதமர் வரும் வரை ராஜாஜி மண்டபத்தின் உள்ளே மேடை மீது வைக்க முதலில் முடிவானது.
உடலை வைக்கும் இடம் பற்றி அமைச்சர்களிடம் ஓர் அதிகாரி விளக்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரன், ''மேடையில் வேண்டாம்... ஹாலிலேயே இருக்கட்டும்!'' என்றார். பெரிய மேஜை ஒன்று இழுத்து வரப்பட்டு மண்டபத்தின் நடுவில் போடப்பட்டது.
கறுப்பு கலர் உடையில், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் முன்னால் வந்தார் ஜெயலலிதா. கண்கள் மட்டும் ரத்தச் சிவப்பில் இருந்தன. அவரை அடுத்து ஓர் அடி தூர இடைவெளியில் இணையாக ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் பல அமைச்சர்கள் வந்தனர்.
பூட்டியிருந்த ராஜாஜி மண்டபத்தின் பக்கவாட்டுக் கதவுகள் வழியாக அவர்களுடன் சேர்ந்து நுழைந்தபோது, உள்ளே... சில விநாடிகளுக்கு முன் பின் வாசல் வழியாகக் கொண்டுவந்து கிடத்தப்பட்ட முதல்வரின் உடலை, மண்டபத்தின் நடுவில் இருந்த மேஜை மீது ஒரு ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து இருந்தனர். வழக்கமான அவர் உடை... தூங்கிக்கொண்டு இருப்பதுபோல் காணப்பட்டார் முதல்வர். வயிற்றுப் பகுதிக்கு மேல் ஒரு பட்டுத் துணியால் கட்டப்பட்டு இருந்தது. முகத்தில் அதே பொலிவு... நாசித் துவாரங்களில் கொஞ்சம் பஞ்சு வைக்கப்பட்டு இருந்தது. அது தவிர, எந்த மாற்றமும் தெரியவில்லை. வலது கையில் கட்டப்பட்டு இருந்த பெரிய கறுப்பு டயல் கைக்கடிகாரம் மட்டும் காலை 8.45 - ஐத் தாண்டி இயங்கிக்கொண்டு இருந்தது!
சில நிமிடங்கள் வரை மண்டபத்துக்குள் மலர் மாலைகூட வந்து சேரவில்லை. மிகுந்த நிசப்தம் நிலவியது. முதல்வரை அந்தக் கோலத்தில் பார்க்க சகிக்க முடியாமல் அமைச்சர்களும் அவருக்கு நெருக்கமானவர்களும் வாய்விட்டு அழுதனர். முதல்வரின் அருகே இடது பக்கமாக, அவரது வளர்ப்பு மகன் அப்பு. அவரையடுத்து சத்யா ஸ்டூடியோ பத்மநாபன். கே.ஏ.கே. நெருங்கி வந்து, பத்மநாபனின் தோள்களை இறுகப் பிடித்ததும், வாய்விட்டுக் கதறினார்கள் பத்மநாபனும் அப்புவும்.
ஜெயலலிதா வந்ததும்... சற்று நேரம் அப்படியே முதல்வரை உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார். கண்களில் நீர் தளும்பி நின்றது. வாய்விட்டு அழாமல் இறுக்கமாக அவர் தலைமாட்டுக்குச் சென்று நின்றுகொண்டு, யாருடைய முகத்தையும் பாராமல், எதிரே உயரத்தில் எதையோ வெறித்துப் பார்த்தபடி நின்றார் ஜெயலலிதா. அவரது கைகள், முதல்வரை வைத்திருந்த ஸ்ட்ரெச்சரின் இரும்புக் குழாய்களை இறுகப் பற்றி இருந்தன. ஜெயலலிதாவுக்கு எதிராய் முதல்வரின் கால்மாட்டில் ஆர்.எம்.வீரப்பன் நின்றார்.
முதல்வரின் உடல் ராஜாஜி மண்டபத்துக்கு வந்து சேர்ந்த பின்னும், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் சரிவான மேடை, தயாரித்து முடியவில்லை. அப்போதும் மாலை, பூக்கள் மண்டபத்துக்குள் வந்து சேரவில்லை.
தலைமாட்டில் நின்ற ஜெயலலிதா, முதல்வர் முகத்தையே உற்றுப் பார்ப்பதும், பின்னர் எங்கோ தூரத்தில் வெறித்துப் பார்ப்பதுமாய் இருந்தார். தன் கர்ச்சீப்பால் முதல்வரின் முகத்தை அடிக்கடி சரிசெய்துகொண்டு இருந்தார்.
ராமாவரம் தோட்டத்தில் இருந்து வந்திருந்த முதலமைச்சரின் உறவினர்கள், மண்டபத்தின் ஓர் ஓரத்தில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தனர். சற்று நேரத்துக்குள் ஒவ்வொருவராக முண்டியடித்துக்கொண்டு ராஜாஜி மண்டபத்துக்குள் நுழையவும், நெரிசல் அதிகமானது. ஓர் அதிகாரி ஓடி வந்து அமைச்சர்களிடம், ''கூட்டம் கூடுகிறது, இந்த ஹால் தாங்காது...'' என்று முறையிட்டார். அதற்குள் பொதுமக்கள் பார்வைக்கான மேடை தயாராகிவிட்ட தகவல் கிடைத்தது. முதல்வர் படுத்திருந்த ஸ்ட்ரெச்சரைச் சுற்றி அமைச்சர்கள் சூழ்ந்து மெள்ளத் தூக்கினர். ஜெயலலிதாவும் நின்ற இடத்திலிருந்தே ஸ்ட்ரெச்சரின் தலைப் பகுதியை ஏந்திப் பிடிக்க, பொதுமக்கள் பார்வையிட சரிவான மேடையில் கிடத்தினார்கள். ஜெயலலிதா அங்கும் முதல்வரின் தலைமாட்டிலேயே நின்றார்.
முதல்வரின் உடலைப் பார்த்ததும், வெளியே காத்திருந்த கூட்டம் கொந்தளித்தது. ஆண்களும் பெண்களும் வாயில் அடித்துக்கொண்டு அலறினர். இரண்டு பெண்கள் அந்த இடத்திலேயே மயங்கிச் சரிய, காவலர்கள் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினர். அழுகையும் கூக்குரலும் ஒரே இரைச்சலாய் இருந்தது. வெள்ளை நிற பேன்ட் சட்டையில் இருந்த ஓர் இளைஞர், போலீஸ் தடுப்பை மீறி உள்ளே வர முயற்சித்தார். அது முடியாமல் போகவே, கிடத்தப்பட்டு இருந்த முதல்வரின் உடலைக் கீழே நின்றபடி சில நொடிகள் அண்ணாந்து பார்த்துவிட்டு, தடுப்புக் கட்டைகளின்மேல் தன் நெற்றியால் மாறி மாறி முட்டிக்கொண்டார். நெற்றி பிளந்து அவருடைய மார்புப் பகுதி வரை ரத்தம் பீறிட்டது. அதையும் பொருட்படுத்தாமல், கைகளை நீட்டி, ''தலைவா,! போயிட்டியா... நீ போயிட்டியா...'' என்று கதறியபடி மீண்டும் முன்னேற முயன்றார். அவரைத் தடுத்த காவலர்களின் காக்கி யூனிஃபார்மிலும் ரத்தக் கறை படிந்தது.
- தொடரும்
|
No comments:
Post a Comment