கிரீன் டீ-யில் உள்ள பாலிபீனால் நம் உடலில் உள்ள திசுக்களில் நடக்கும் ரசாயன மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கிறது. இதன் மூலம், வயதாகும் செயல்பாட்டைத்தாமதப்படுத்தி, வாழ்க்கையை நீட்டிக்கிறது.
புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும்
வைட்டமின் சி-யைக் காட்டிலும், இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் 100 மடங்கு புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக்கூடியது. இதன் மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது.
உடல் எடை குறையும்
உடலில் உள்ள கொழுப்பு செல்களை எரித்து, உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளை இயற்கையான முறையில் விரைவுபடுத்துகிறது. தோராயமாக நாள் ஒன்றுக்கு 70 கலோரி வரை இதன் மூலம் எரிக்கலாம்.
உயர் ரத்த அழுத்தம் குறையும்
கிரீன் டீ-யில் உள்ள ரசாயனங்கள் உயர் ரத்த அழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தையும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இதயநோய் வரும் வாய்ப்பு குறையும்
கிரீன் டீ குடிப்பவர்களுக்கு, உடலில் கொழுப்புக் குறைந்து, இதய நோய்க்கான வாய்ப்பு 31 சதவிகிதமாகக் குறைகிறது. மாரடைப்புக்குப் பிறகு செல்கள் இறப்பதைத் தவிர்த்து, இதய செல்கள் வளர்ச்சியை விரைவுபடுத்துகிறது. ரத்தம் உறைவதைத் தடுக்கிறது.
உணவு நஞ்சாவதைத் தடுக்கும்
பாக்டீரியா கிருமிக்கு எதிராகச் செயல்படும். பாக்டீரியா கிருமியால், உணவு நஞ்சாவது (ஃபுட் பாய்சனிங்) தடுக்கப்படுகிறது. வயிற்றில் கெடுதலை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுத்து, நன்மை செய்யும் பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதேபோல், வைரஸ் கிருமித் தொற்றையும் தடுக்கிறது.
எலும்புகளுக்கு வலு சேர்க்கும்
கிரீன் டீ-யில் அதிக அளவு ஃப்ளோரைட் உள்ளதால், எலும்புகள் உறுதிப்படும். தினமும் கிரீன் டீ பருகுவதன் மூலம், எலும்பின் அடர்த்தி பாதுகாப்பாக இருக்கிறது.
மன அழுத்தம் நீங்கும்
எல்-தினைன் (L-theanine) என்ற அமினோ அமிலம் இதில் உள்ளது. மன அழுத்தம், பதற்றத்தைப் போக்க இது உதவுகிறது. மேலும், டோபோமைன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதில் காபியைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவே காஃபைன் உள்ளதால், உடனடி புத்துணர்வைத் தந்து, மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்
கிரீன் டீ-யில் உள்ள பாலிபீனால் மற்றும் ஃபிளவனாய்ட் என்ற ரசாயனங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, நோய்க் கிருமித் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
கிரீன் டீ ரெடி:
கிரீன் டீ தூளாகவும், ஒரு கப் தேநீர் தயாரிக்கும் வகையில் பாக்கெட் வடிவிலும் கிடைக்கும். அருந்தும்போது சாதாரண தேநீர் போலச் சுவையாக இல்லாவிட்டாலும், மிகவும் ஆரோக்கியமானது என்பதால் இதைத் தினமும் பருகுவது நல்லது.
கிரீன் டீ தயாரிக்க 80 முதல் 85 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை போதுமானது. நீரை நன்றாகச் சுடவைக்கவும். அதில் ஒரு டீஸ்பூன் கிரீன் டீ சேர்த்து, நன்றாக கொதிநிலைக்குக் கொண்டுசெல்லவும். ஆனால் கொதிக்கவிடக் கூடாது. தேயிலையின் சாறு நீரில் இறங்க ஒரு சில நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். பிறகு, வடிகட்டி அப்படியே அருந்தலாம்.
பால் சேர்க்கவே கூடாது. சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது. சர்க்கரைக்குப் பதில் சிறிது தேன் சேர்த்துக்கொள்ளலாம்.
- பா.பிரவீன் குமார்
-டாக்டர் விகடனிலிருந்து...
No comments:
Post a Comment