பிரபாகரன் யாழ்ப்பாணத்துக்கு ஆப்பப்பட்ட சில தினங்களில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியான ‘ஆயுதம் அகற்றல்’ என்ற சிக்கலான கட்டத்துக்கு நேரம் வந்தது.
ஒப்பந்தப்படி ஈழ விடுதலை தொடர்பாக இலங்கை அரசு கைது செய்து வைத்திருந்தவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும். அதற்குப் பிரதிபலனாக ஈழ விடுதலைப் போராளி இயக்கங்கள் எல்லாம் தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.
இதுதான் மிகவும் சிக்கலான கட்டமாக நோக்கப்பட்டது.
ஒப்பந்தத்துக்கான ஆரம்ப கட்டப் பேச்சுக்கள் நடைபெற்றபோதே இந்த ஆயுதம் அகற்றல் விஷயத்தில்தான் இலங்கை அரசு மிகமிக ஆர்வமாக இருந்தது. அதற்குப்பல காரணங்கள் இருந்தன.
ஒப்பந்தத்தை காரணமாகக் காட்டி விடுதலை இயக்கங்களிடம் இருந்த ஆயுதங்கள் அகற்றிவிட்டால், ஒருவேளை ஒப்பந்தம் முறிந்து போனால்கூட விடுதலை இயக்கங்கள் மீண்டும் தங்களுக்குத் தேவையான ஆயுதங்களைப் பெறுவதற்கு நீண்டகாலம் எடுக்கும். அதற்குள் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்பது இலங்கை அரசு இதில் ஆர்வமாக இருந்ததன் முக்கிய காரணம்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்த பிரதமர் பிரேமதாச மற்றும் சில அமைச்சர்கள் ஆகியோரைச் சமாளிப்பதற்கு ஜே.ஆர். வைத்திருந்த துருப்புச்சீட்டும் இந்த ஆயுதம் அகற்றல்தான்.
ஒப்பந்தம் கையொப்பமாகும் தினத்தன்று காலையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்துக்கான விவாதம் மிகவும் சூடாக நடைபெற்றது. ஒப்பந்தமே வேண்டாம் என்று எதிர்த்துக் கொண்டிருந்த பிரேமதாசவையும் மற்றயவர்களையும் சமாதானப்படுத்த ஜனாதிபதி ஜெயவர்தனேவால் கூறப்பட்டது இதுதான்:
“எங்களுடைய (இலங்கை) ராணுவம் பல ஆண்டுகளாக ஈழ விடுதலை இயக்கங்களிடம் இருந்து ஆயுதங்களை அகற்றி தீவிரவாதத்தை நிறுத்த முயல்கின்றது. ஆனால் இன்று வரை வெற்றி கிடைக்கவில்லை.
இந்த ஒப்பந்தத்தில் ஒரு கையெழுத்து போடுவதன் மூலம் எமது ராணுவம் பல ஆண்டுகளாக செய்ய முடியாமல் இருந்ததை ஒரேநாளில் செய்து விடலாம் என்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை?”
“ஒப்பந்தம் ஏற்பட்டபின் அவர்கள் நிச்சயம் ஆயுதங்களை ஒப்படைப்பார்கள் என்பது என்ன நிச்சயம்?”
“அதற்கு தாங்கள் பொறுப்பு என்று ராஜிவ்காந்தி என்னிடம் நேரடியாகக் கூறியிருக்கிறார். இதோ பாருங்கள். கெட்ட காரியங்களை இந்தியர்களிடம் விட்டுவிடலாம். நாங்கள் அலட்டிக் கொள்ளாமல் அமர்ந்து பார்த்து ரசிக்கலாம். (Let Indians do the dirty work. We will sit back, relax and enjoy the show)”
இப்படி ஜே.ஆரினால் வர்ணிக்கப்பட்ட ஆயுத அகற்றலுக்கான நேரம் வந்தபோது, அதற்காக ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காரியம் முடிந்துவிடவில்லை. காலக்கெடு இரண்டு நாட்களுக்கு பிற்போடப்பட்டது.
காரணம் ஆயுதம் அகற்றல்பற்றி தனது தளபதிகளுடன் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வர அவகாசம் தேவை என்று பிரபாகரன் கூறியிருந்தார்.
விடுதலைப்புலிகள் இயக்கம் தவிர்ந்த மற்றய இயக்கங்கள் தனித்தனியாக அவர்களிடம் இருந்த ஆயுதங்களை ஒப்படைக்கத் தொடங்கினார்கள். தனிப்பட்ட போராளிகள் தமது கையிலிருக்கும் ஆயுதங்களை ஒப்படைப்பதாகவும், சிறுசிறு குழுக்களாகச் சென்று ஆயுதங்களை ஒப்படைப்பதாகவும் இந்த நடவடிக்கை நடக்க தொடங்கியது.
விடுதலைப்புலிகள் இயக்கமும் ஆயுதங்களை ஒப்படைப்பது என்று கொள்கை ரீதியான முடிவைக் கூறியிருந்தது. ஆனால் மற்றய இயக்கங்களைப்போல தனிப்பட்ட போராளிகளோ சிறுசிறு குழுக்களாக ஆயுத ஒப்படைப்பு செய்வதோ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நடைபெறவில்லை.
மாறாக, விடுதலைப்புலிகள் உறுப்பினர்களிடம் இருந்து புலிகளின் தலைமையால் நியமிக்கப்பட்ட சிலர் ஆயுதங்களை சேகரித்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.
விடுதலைப் புலிகளின் ஆயுதச் சேகரிப்பு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நடைபெறுகிறது என்ற விபரம் யாழ்ப்பாணத்துக்குள் அமைதிப் படையினருடன் கலந்து வந்திருந்து இந்திய உளவுத் துறையினருக்கு (ரா) தெரியவந்தது. அவர்கள் அதை டில்லிக்கு அறிவித்தனர்.
இதையடுத்து டில்லியில் இருந்து “புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராகின்றார்கள்” என்ற தகவல் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய ராணுவத் தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் இந்திய உளவுத்துறை ரா ஏஜென்ட்டுகளுக்கு யாழ்ப்பாணத்தில் தகவல் கொடுப்போரிடம் இருந்து மற்றுமோர் உளவுத் தகவலும் கிடைத்தது.
யாழ்ப்பாணத்திலுள்ள கடைகளில் என்றுமில்லாத அளவுக்கு பொலிதீன் பைகளும், கிரீஸும் (grease) விற்பனையாகின்றன என்பதுதான் அந்தத் தகவல்.
“யாழ்ப்பாணத்தில் உள்ள கடைகளுக்கு வரும் சில இளைஞர்கள், ஒவ்வொரு கடையிலும் இருக்கும் முழு பொலிதீன் பைகளையும், கிரீஸையும் பணம் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள். அவர்கள் எதற்காக வாங்குகிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை” என்ற தகவலை யாழ்ப்பாணத்திலிருந்த ‘ரா’வின் ஆட்கள் டெல்லிக்கு அனுப்பினார்கள்.
இந்த உளவுத் தகவல் எவ்வளவு முக்கியமானது, இதன் பின்னால் எவ்வளவு முக்கியமான ரகசியம் ஒன்று உள்ளது என்பதை, அன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட ‘ரா’ ஏஜென்ட்டுகள் யாரும் புரிந்து கொள்ளாதது ஆச்சரியம்தான்!
யாழ்ப்பாணத்தில் நடந்த இந்த நடவடிக்கை எதற்கு என்பது டில்லி அரசியல்வாதிகளுக்கும் புரியவில்லை. எனவே அதைப்பற்றி அவர்களும் கவலைப்படவில்லை.
விடுதலைப் புலிகள், “ஆகஸ்ட் 5-ம் தேதி தங்களது ஆயுதங்களை ஒப்படைக்கப் போகிறோம்” என்று பலாலி ராணுவ முகாமில் இருந்த இந்திய ராணுவத் தலைமைக்கு அறிவித்திருந்தார்கள்.
“விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்புக்காக 20 துப்பாக்கிகளையும், பிரதித் தலைவர் மாத்தையாவின் பாதுகாப்புக்காக 15 துப்பாக்கிகளையும் வைத்துக்கொண்டு மீதி ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விடுங்கள்” என்று தகவல் அனுப்பினார் இந்திய ராணுவத்தின் யாழ்ப்பாண ஆபரேஷனுக்கு பொறுப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்.
ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவின் தலைவராக இருந்த யோகி இரண்டு வாகனங்களில் ஆயுதங்களுடன் பலாலி முகாமுக்குச் சென்றார். இலங்கை அரசின் தரப்பிலிருந்து அன்றைய பாதுகாப்புச் செயலாளர் சேபால ஆடிகல, பலாலி ராணுவ முகாமுக்கு வந்திருந்தார்.
இலங்கை ராணுவ அதிகாரிகள் இந்திய ராணுவத் தளபதிகள் ஆகியோரின் முன்னிலையில் தன்னிடமிருந்த ஜேர்மன் மவுசர் துப்பாக்கியை மேசையில் வைத்தார் யோகி – ஆயுத ஒப்படைப்புக்கு அடையாளமாக.
இந்த ஆயுத ஒப்படைப்பு இலங்கை அரசுக்கு சொந்தமான ரூபவாஹினி டி.வி. சேனலிலும், இந்தியாவின் தூர்தர்ஷன் சேனலிலும் காண்பிக்கப்பட்டது. பாதுகாப்புச் செயலாளர் சேபால ஆடிகல இலங்கை ஜனாதிபதியிடம் இருந்து எடுத்துவந்த உத்தரவு ஒன்றைப் படித்தார்.
ஈழ விடுதலை தொடர்பாக இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 5400 தமிழர்களை விடுதலை செய்யும் உத்தரவு அது.
யோகியுடன் வந்திருந்த இரண்டு வாகனங்களில் இருந்த ஆயுதங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன.
அப்படி ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களில் பெரும்பான்மையான ஆயுதங்கள், சில ஆண்டுகளுக்கு முன் இந்திய உளவுத்துறை ‘ரா’வினால் விடுதலை புலிகளுக்குக் கொடுக்கப்பட்ட ஆயுதங்கள் என்பதை அங்கிருந்த இந்திய ராணுவத் தளபதிகள் புரிந்து கொள்ளவில்லை.
இதை மட்டுமா புரிந்து கொள்ளவில்லை?
யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் பொலிதீன் பைகளையும் கிரீஸையும் வாங்கியவர்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என்பதை இந்திய உளவுத்துறையும் புரிந்து கொள்ளவில்லை. அவை எதற்காக வாங்கப்பட்டன என்பதையும் புரிந்து கொள்ளவில்லை.
இவற்றில் புரிந்துகொள்ள என்ன உள்ளது?
முதலாவது, ஆயுத ஒப்படைப்பு என்று சொல்லி, தமக்கு ‘ரா’ கொடுத்த ஆயுதங்களையே, இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது, விடுதலைப் புலிகள் இயக்கம்.
இரண்டாவது, விடுதலைப் புலிகளிடம் இருந்த புதிய, முக்கிய ஆயுதங்கள் அனைத்தும் பழுதடையாமல் கிரீஸ் பூசப்பட்டு, பொலிதீன் பைகளில் பேக்கிங் செய்யப்பட்டு, இடம் அடையாளம் வைத்து தரையடியே புதைக்கப்பட்டு விட்டன.
(தொடரும்)
அப்போது இலங்கை ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றில், “விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் தங்களது முழு ஆயுதங்களையும் ஒப்படைக்கும்வரை காத்திராமல் இலங்கை அரசு ஏன் அவரசப்பட்டு எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய்கிறது?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ஜெயவர்த்தனே, “விடுதலைப் புலிகளது முழு ஆயுதங்களையும் ஒப்படைக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. அதற்கான உறுதிமொழி இந்திய அரசால் இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஆயுத ஒப்படைப்பை இந்திய அரசு கவனித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கிறோம்” என்றார்.
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரை அருகில் வைத்துக்கொண்டு இலங்கை ஜனாதிபதி இப்படி அறிவித்தது ஒரு சாமர்த்தியமான நடவடிக்கை என்றும், இந்தியர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை வேறு வழியில்லாமல் நிறைவேற்றியே ஆகவேண்டிய நிலையை ஜனாதிபதி ஜெயவர்த்தனே ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் எழுதியது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை.
இதற்கு மறுதினம் ஆகஸ்ட் 9ம் தேதி பிரதமர் பிரேமதாச தனது இரண்டு வார மௌனத்தை முறித்துக் கொண்டு வாய்திறந்தார்.
கொழும்புக்கு அருகே நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பிரேமதாச பேசியபோது “இலங்கை – இந்திய ஒப்பந்தம் நான் இலங்கைக்கு வெளியே வெளிநாடு ஒன்றில் இருந்தபோது முடிவு செய்யப்பட்டது. பிரதமர் என்ற முறையில் என்னைக் கலந்து ஆலோசிக்கவில்லை. எனவே இந்த ஒப்பந்தத்துக்கு நான் கட்டுப்படவேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
“இந்த ஒப்பந்தம் தமிழர்களுக்கு குறிப்பிட்ட சில அதிகாரங்களுடன் கூடிய தமிழ் ஈழம் ஒன்றை உருவாக்கிக் கொடுக்கும் ரகசியத் திட்டத்துடன் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கின்றேன்” என்றார் அவர்.
“எமது மூதாதையர்கள் இந்த நாட்டை ஒரு முழு நாடாக விட்டுச் சென்றார்கள். அப்படியான நாடு இப்போது துண்டு துண்டாக உடையக்கூடிய நிலையில் இருக்கின்றது. இலங்கை ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தம், நாடு உடைவதைத் தடுக்குமா அல்லது நாட்டை உடையச் செய்யுமா என்று நாங்கள் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று அவர் கூறியது பலரது புருவங்களை உயரவைத்தது.
காரணம் அவர் இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்ற வார்த்தைப் பிரயோகம் செய்யாமல், இலங்கை ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் என்றே குறிப்பிட்டிருந்தார்.
அதாவது இது தனிப்பட்ட இருவரால் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் என்றே பார்க்கப்பட வேண்டும் என்று அவர் சொல்லாமல் சொல்லியிருந்தார்.
இந்தப் பேச்சில் இருந்து பிரேமதாசா இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நேரடியாக எதிர்க்கத் துணிந்து விட்டார் என்பதை புரியக் கூடியதாக இருந்தது அவர் இப்படிப் பேசுவதற்கு முன்னர் இரண்டு வாரங்கள் மௌனமாக இருந்தார் என்று கூறியிருந்தோம் அல்லவா.
அந்த இரண்டு வாரங்களிலும் தனது ஆதரவாளர்களையும், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தவர்களையும் மறைமுகமாகச் சந்தித்து ஒன்று திரட்டியிருந்தார். ஜனாதிபதி ஜெயவர்த்தனேவுக்கு எதிராக இறங்குவதற்கு ஒரு களம் அமைத்து வைத்திருந்தார்.
இதற்குக் காரணம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களை அரசியலில் இருந்தே ஒதுக்கி வைக்கும் விதத்தில் ஜனாதிபதி ஜெயவர்த்தனே திட்டம் வைத்திருந்தார் என்பது பிரேமதாசவுக்குத் தெரிந்திருந்தது.
ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட தினத்தில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்திய ஜனாதிபதி ஜெயவர்த்தனே, அந்த விவகாரத்தை வெளிப்படையாகத் தெரிவித்தும் இருந்தார். பல அமைச்சர்களுக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுக்கும் பாணியில் இருந்தன ஜனாதிபதி ஜெயவர்த்தனே கொடுத்த சில பதில்கள்.
இதோ அன்றைய செய்தியாளர் மாநாட்டில் சில கேள்விகளுக்கு ஜனாதிபதி ஜெயவர்த்தனேவால் கொடுக்கப்பட்ட பதில்களைப் பாருங்கள் புரியும்.
கேள்வி: இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு ஒப்பந்தம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?
ஜெயவர்த்தனே: ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது என்பது இலங்கை என்ற நாட்டின் கைகளில் இருக்கின்றது. இலங்கையின் கையில் இருக்கின்றது என்றால் ஜனாதிபதியான எனது கையில் இருக்கின்றது என்றும் அர்த்தம். நான் நிறைவேற்றுவேன்.
கேள்வி: எனது கேள்வி என்னவென்றால், இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு உங்களது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. உங்களது பிரதமரே (பிரேமதாச) இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கும்போது இதை எப்படி உங்களால் நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் சென்று ஒப்புதலைப் பெறமுடியும்?
(தொடரும
(தொடரும
No comments:
Post a Comment