“மதுரைனாலே அழகுதான்!”
மதுரை என்றவுடன் செம்மண் புழுதியும், காய்ந்த பனைமரமும், ‘டாட்டா’ சுமோவில் ஸ்டாண்டிங்கில் நின்றுகொண்டு ‘ஏய்...ஏய்...’ என அரிவாளை சுற்றியபடி கத்திக்கொண்டே போகும் மீசைக்காரர்கள்தான் தமிழ் சினிமா பார்ப்பவர்களுக்கு நினைவில் வரும். ஆனால், உண்மையில் சூப்பர் சிங்கர் அனந்த் சார் அணியும் சுடிதார் போல அவ்வளவு கலர்ஃபுல்லாக இருக்கும் மதுரை. அதை இந்தத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு தன் கேமரா மூலம் புகைப்படங்களாக வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருக்கிறார் புகைப்படக் கலைஞர் குணா அமுதன். அவரை போனில் பிடித்துப் பேசினால்...
‘‘நான் குணா அமுதன். வயசு 47. திருமங்கலத்தில் 20 வருடங்களா பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தொழிற்சாலை வெச்சு நடத்திட்டு இருக்கேன். 2008-ம் ஆண்டு கடுமையான மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டுச்சு. அப்போ, நான் பார்த்துட்டு இருந்த தொழிலுக்கு மாற்றாக வேறு ஏதாவது தொழில் செய்யலாம்னு யோசிச்சு, நான் கையில் எடுத்ததுதான் இந்த கேமரா’’ என மதுரைக்காரர்களுக்கே உரிய அசால்டான டோனில் ஆரம்பித்தார் குணா.
‘‘ஏன் போட்டோகிராஃபி தேர்ந்தெடுத்தீங்க?’’
‘‘மற்றவர்களைச் சார்ந்து இருக்காத, அதிக முதலீடு தேவைப்படாத, திறமையையும், திறனையும் வளர்க்கக்கூடிய வேலையா இருக்கணும்னு உறுதியா இருந்தேன். அப்போ மனசுல வந்ததுதான் போட்டோகிராஃபி. சென்னையில் மூன்று மாதங்கள் போட்டோகிராஃபியில் உள்ள அடிப்படை விஷயங்களைப் படிச்சேன். ஆரம்பத்தில், ஒரு ஸ்டுடியோ ஆரம்பிச்சு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து சம்பாதிக்கலாம்ங்கிறது என் ஐடியாவா இருந்துச்சு. ஆனால், அந்தப் பயிற்சியில் வெறும் ஒரு ஆளை நிற்கவெச்சு அவன் முகத்தில் ஃப்ளாஷ் அடிக்கிறது மட்டும் போட்டோகிராஃபி இல்லைனு புரிஞ்சுது. அப்படியே ‘ஸ்ட்ரீட் போட்டோகிராஃபி’யில் இறங்கிட்டேன்.’’
‘‘வீட்ல என்ன சொன்னாங்க?’’
‘‘ஆரம்பத்தில், நடுரோட்டில் குப்பைத்தொட்டி பக்கத்துல நாம படுத்து உருண்டு, புரண்டு போட்டோ எடுப்பதைப் பார்த்து ரொம்பவே ஃபீல் பண்ணாங்க. இப்போ ஃபேஸ்புக், மீடியா, சினிமானு ஓரளவு ஃபேமஸ் ஆகிட்டதால் வீட்ல சந்தோசப்பட ஆரம்பிச்சுட்டாங்க.’’
‘‘சினிமாவில் வாய்ப்பு கிடைச்சது எப்படி?’’
‘‘இயக்குநர் பொன்ராமின் உதவி இயக்குநர் அருண் கே.சந்திரன் மூலமாகத்தான் ‘ரஜினி முருகன்’ பட வாய்ப்பு கிடைச்சது. மதுரைனாலே வெட்டு, குத்து, அருவா, ரத்தம்னு எல்லாம் சிகப்பு கலர்லேயே படம் எடுத்துட்டு இருக்காங்க. நாம கொஞ்சம் கலர்ஃபுல்லா எடுக்கலாம்னுதான் ‘ரஜினி முருகன்’ படம் எடுக்க ஆரம்பிச்சாங்களாம். இதைத்தான் நாங்க சொல்ல வர்றோம்னு காட்ட படத்தின் டைட்டில் கார்டிலேயே கலர்ஃபுல்லான மூடில் இருக்கும் மதுரையின் புகைப்படங்களை வைக்கலாம்னு யோசிச்சுருக்காங்க. அந்த நேரம் சரியாக என்னுடைய புகைப்படங்களை அருண் கே.சந்திரன் பார்க்க, பின்னர் எல்லோருக்கும் பிடித்துப்போக நான் எடுத்த புகைப்படங்கள்தான் அந்த ‘ரஜினிமுருகன்’ டைட்டில் கார்டை அலங்கரிச்சுச்சு.’’
‘‘ஜல்லிக்கட்டு விளையாட்டை வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்துருக்கீங்கிற வகையில், ஜல்லிக்கட்டிற்கு தடை என்ற செய்தியைக் கேட்டதும் உங்களுக்கு எப்படி இருந்தது?’’
‘‘உண்மையைச் சொல்லணும்னா, கண்ணீர்விட்டு அழுதுட்டேன். ஜல்லிக்கட்டு விளையாட்டை போட்டோ எடுக்கும்போதே எனக்கும் மாடுகள், மாடு வளர்ப்பவர் இடையிலும் விவரிக்க முடியாத ஒரு நட்பு ஏற்பட்டுச்சு. தடைக்குப் பிறகு நாட்டுமாடுகள் அடிமாடாய்ப் போவதைப் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.’’
‘‘உங்களுக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரம்னா எதைச் சொல்வீங்க?’’
‘‘குற்றாலத்தில் ‘குற்றால சாரல் திருவிழா’னு நான் எடுத்த போட்டோக்களை கண்காட்சிக்கு வைத்தேன். அந்தக் கண்காட்சிக்கு மாநில அரசின் விருது கிடைத்தது. அப்புறமா, டைம்ஸ் போட்டோ ஜார்னலில் நான் எடுத்த போட்டோ அட்டைப்படமா வந்திருக்கு.’’
‘‘மதுரையில் உங்களுக்குப் பிடித்த இடம்?’’
‘‘திருமலைநாயக்கர் மஹால்தான். மஹாலுக்கு நடுவில் வெளிச்ச விழுந்து அப்படியே தெறிக்கும். அங்கே சும்மா ஒரு போட்டோ எடுத்தாலே அப்படி ஒரு ஃபீல் கிடைக்கும்.’’
‘‘உங்களின் கனவு, ஆசை?’’
‘‘அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது!’’
-ப.சூரியராஜ், படம் : ந.ராஜமுருகன்
3 comments:
அருமை
வாழ்த்துகள்
நம்ம ஊர்க்காரர் குறித்தப் பேட்டியும்
புகைப்படமும் அற்புதம்
வாழ்த்துக்களுடன்...
Post a Comment