Nov 22, 2017

பயமா எங்களுக்கா ? எந்தப் பயமும் இல்லை! - நடராசன் அதிரடி

‘‘வாங்க... வாங்க... வெளியில என்ன பேசிக்கிறாங்க?’’ என்று நம்மை வரவேற்ற நடராசனின் கைகளில் அன்றைய நாளிதழ்கள் இருந்தன. ‘‘முட்டை விலை ஏழு ரூபாயா ஆகிடுச்சே... உற்பத்தியில எந்தப் பிரச்னையும் இல்லையே! அப்புறம் ஏன் விலையைக் கூட்டியிருக்காங்க... ஜி.எஸ்.டியா?’’ என நம்மைக் கேள்விகேட்டார்.



மரணத்தைத் தொட்டுவிட்டு மீண்டுவந்திருக்கிறார் சசிகலாவின் கணவர் நடராசன். சசிகலாவின் குடும்பம் மொத்தத்தையும் ஐ.டி ரெய்டுகள் சூறாவளியாய்ச் சுழற்றியடிக்கும் சூழலில், உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சையை முடித்துவிட்டு முழுமையான ஓய்வில் இருக்கும் நடராசனை, அவரின் தம்பி ராமச்சந்திரனின் இல்லத்தில் சந்தித்தோம். உடலில் தளர்வும் சோர்வும் தெரிந்தாலும், மனதளவில் உற்சாகமாக இருப்பது அவர் பேச்சில் தெரிகிறது. யாருக்கோ புரியவேண்டிய வகையில் அர்த்தம் பொதிந்துப் பேசுவது நடராசனின் வழக்கம். அது மாறவே இல்லை.


‘‘உடல்நிலை எப்படி இருக்கிறது?’’ 


‘‘நீங்களே சொல்லுங்க... நான் எப்படி இருக்கேன்? நல்லாத்தானே இருக்கேன். ஓய்வு உடம்புக்குத்தான். காலையில் அப்பார்ட்மென்ட்டுக்கு வெளியே வாக்கிங் போறேன். அப்புறம் செய்திகளைப் பாக்குறது, படிக்கிறது, ‘செக்கப்’புக்குப் போறதுன்னு நேரம் சரியா இருக்கு. வாக்கிங் போறப்ப நம்மள அடையாளம் கண்டுபிடிச்சுடுறாங்க. எல்லா ஃபிளாட்ல இருந்தும் ஆச்சர்யமா எட்டிப் பாத்தாங்க. மறுநாளே வந்து அறிமுகப்படுத்திக் கிட்டு சகஜமா பேச ஆரம்பிச்சுட்டாங்க. நிறைய பெண்கள் வந்து, ‘எப்படி இருக்கீங்க’ன்னு விசாரிக்கிறாங்க. ஆட்டோகிராஃப்லாம்கூட கேட்குறாங்க. ஒரு பிரியத்துல அப்படிப் பேசுறாங்க.’’  



‘‘மருத்துவமனையில் உங்கள் மனைவி சசிகலா வந்து பார்த்தபோது, உங்களுக்குச் சுயநினைவு இருந்ததா, பேசினீர்களா?’’ 



‘‘கணவன்-மனைவி பாத்துக்கிட்டா பேசாம இருப்பாங்களா? அந்த நேரத்துல ரெண்டு பேரும் சந்திச்சது ஒரு சந்தோஷம். அது ஆறுதலா, தெம்பா இருக்கும்ல! ‘என்ன பேசுனீங்க’ன்னுலாம் நீங்க கேட்கக்கூடாது. அது பர்சனல். கணவன்-மனைவிக்கு இடையில பேச ஆயிரம் இருக்கும்! ஆனா, உங்களுக்கு ஒரு போட்டோ காட்டுறேன் பாருங்க... (மொபைலில் இருந்து எடுத்துக்காட்டுகிறார். அந்த போட்டோவில், நடராசன் பெட்டுக்கு அருகில் சசிகலா உட்கார்ந்திருக்கிறார். லட்டு போன்ற பத்துக்கும் மேற்பட்ட அழகழகான குழந்தைகள் சிரித்துக்கொண்டு நிற்க, அவர்களை அணைத்தபடி சசிகலா பூரிப்புடன் காணப்படுகிறார்.) எல்லாம் பேரப் பசங்க. இது பழனிவேல் பேத்தி, இது ராமச்சந்திரனோட பேரன்...’’



‘‘உங்கள் குடும்பத்தைக் குறிவைத்து மிகப்பெரிய ரெய்டை வருமானவரித் துறை நடத்தியுள்ளதே?’’ 



‘‘நடத்தட்டும்! ரெய்டு இன்னைக்கு மட்டுமா நடக்குது! முன்னாடி ப.சிதம்பரம் சென்ட்ரல் மினிஸ்டரா இருந்தப்பவும்தான் நடந்துச்சு. அதனால என்ன ஆகப்போகுது? எங்கள் குடும்பத்தில் யாருக்கும் எந்தப் பயமும் இல்லை. ரெய்டுல என்ன கிடைச்சது? தஞ்சாவூர்ல இருக்கிற என் வீட்டுக்கு அதிகாரிகள் போயிருக்காங்க. அங்க இருந்த பையன் பிரபு, ‘ரெய்டு பண்ண ஆர்டர் இருக்கா’ன்னு கேட்டதுக்கு, திவாகரன் பேருக்கு வந்த ஆர்டரை அந்த அதிகாரிகள் காமிச்சுருக்காங்க. பிரபு அதைப் பாத்துட்டு, ‘இது நடராசன் சாரோட வீடு’ன்னு சொல்லவும்... ‘அய்யோ! மாத்தி வந்துட்டோம்’ன்னு அந்த அதிகாரிகள் சொல்லியிருக்காங்க. அதன்பிறகு, ‘வந்ததுக்கு வேணும்னா சோதனை பண்ணிக்கோங்க’ன்னு சொல்லி அந்தப் பையனும் எல்லா அறைகளுக்கும் அழைச்சுட்டுப் போயிருக்கான். என்ன கிடைச்சுச்சு அங்க? ஒண்ணும் இல்ல. எங்க அம்மா வெத்தலைப் பெட்டியில இருந்த 180 ரூபாயைப் பிடிச்சு, அதை தினகரன் கணக்குல வரவு வெச்சுட்டுப் போயிருக்காங்க. வீட்டு மாடியில ஒரு ரூம்ல இருந்த அலமாரிக்குச் சாவி தொலைஞ்சு போச்சு போல! அதனால அதைத் திறக்க முடியாம, அதுக்கு மட்டும் சீல் வெச்சுட்டுப் போயிருக்காங்க.’’



‘‘இந்தச் சோதனையை, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று நினைக்கிறீர்களா?’’ 



‘‘சென்ட்ரல் மினிஸ்டரா ப.சிதம்பரம் இருந்தப்போ, என்னோட ‘தமிழரசி’ பத்திரிகைல புகுந்து ரெய்டு பண்ணாங்க. அப்பவும் ஒண்ணும் கிடைக்கல. அது வேற பிரச்னை. அதை இப்ப நான் ஏன் சொல்றேன்னா, அதே சிதம்பரம் வீட்லயும் சமீபத்துல ரெய்டு நடந்துச்சு. அப்போ, ‘என்னைத் தாக்க என் குடும்பத்தை மோடி குறிவைக்கிறார்’னு சிதம்பரம் சொன்னார். சிதம்பரம் அப்படி சொன்னப்போ, நான் ஓர் அறிக்கை விட்டேன். அதுல, ‘உங்க வீட்ல நடந்தா பழிவாங்கும் நடவடிக்கை... நீங்க எங்க வீட்ல ரெய்டு நடத்துனா, அது நேர்மையான நடவடிக்கையா’ன்னு கேட்டிருந்தேன். நான் ஒருத்தன்தான் அவரை அப்படிக் கேள்வி கேட்டு அறிக்கைவிட்டேன். இதை நான் ஏன் இங்க சொல்றேன்னா... சிதம்பரம் என்ன சாதாரண ஆளா? சென்ட்ரல் மினிஸ்டரா இருந்தவர். அங்க உள்ள நடைமுறைகள் எல்லாம் அவருக்கு அத்துப்படி. அப்படி இருந்தும், அவர் வீட்ல நடந்த ரெய்டை ‘பழிவாங்கல் நடவடிக்கை’ன்னு அவரே சொல்றார்னா... அதுக்கும் வாய்ப்பு இருக்குன்னுதானே அர்த்தம். நடக்கட்டும்... பாப்போம்!’’  



‘‘கவர்னர் இப்போது ஆய்வுக்குப் போகிறார். அது சர்ச்சை ஆகியுள்ளதே?’’ 



‘‘அவங்களை நல்லவங்களா காட்டிக்க இந்த மாதிரி ஏதாவது பண்றாங்க; பண்ணட்டும். மக்கள் நம்பிருவாங்களா? எல்லாத்தையும் பார்த்துட்டுத்தானே இருக்காங்க. மகாபாரதத்துல துரியோதனன் கதை  வரும். துரியோதனன்கிட்ட, ‘சபையில இருக்கவங்கள்ல நல்லவங்க யார்’ன்னு கேப்பாங்க. துரியோதனன் கண்ணுக்கு அந்தச் சபையில இருக்க யாரும் நல்லவங்களா தெரியமாட்டாங்க. அதனால, ‘எல்லாரும் கெட்டவங்கதான்’னு துரியோதனன் சொல்லுவான். அதே வேலைய தர்மர்கிட்ட கொடுப்பாங்க. அவர் கண்ணுக்கு எல்லாருமே நல்லவங்களாத்தான் தெரிவாங்க. நாம பார்க்கும் விதத்துலதானே இருக்கு. நல்ல கண்களால பாத்தா... எல்லாம் நல்லதாத்தான் தெரியும். கெட்ட கண்ணால பார்த்தா... எல்லாம் கெட்டதாகத்தான் தெரியும்.’’ 



‘‘கவர்னரின் ஆய்வு நடவடிக்கையை முதல்வரும் அமைச்சர்களும் வரவேற்கிறார்களே?’’ 



‘‘அவங்க வேற என்ன செய்வாங்க? அதைத்தானே செய்ய முடியும். அவங்களுக்குச் சொந்தப் பிரச்னைகளும் இருக்கு; மாநிலப் பிரச்னைகளும் இருக்கு. எல்லாத்துலயும் இருந்து அவங்கள காப்பாத்திக்கணும்னா, அதைத்தானே செஞ்சாகணும். வேற என்ன அவங்ககிட்ட இருந்து எதிர்பார்க்க முடியும்?’’ 



‘‘நீங்கள் சிகிச்சை முடிந்துவந்த பிறகு, உங்களிடம் முதல்வர், துணை முதல்வர் தரப்பிலிருந்து யாராவது பேசினார்களா?’’ 



‘‘யார்கிட்டயும் பேசணும்னு எந்த அவசியமும் எனக்கு இல்ல; பேசி என்ன ஆகப்போகுது? ஆனா, ‘எடப்பாடிக்கும், பன்னீருக்கும் பிரச்னை இருக்குண்ணே! இப்போ கூப்பிட்டா பன்னீர் நம்ம பக்கம் ஓடிவந்துடுவார்’ன்னு பசங்க சொன்னாங்க. ‘நாம பண்ற வேலையாடா இது? அவராத்தான போனார்; அவரைப்போய் நாம ஏன் கூப்பிடணும்’னு சொல்லிட்டேன். அவ்வளவுதான்.’’



‘‘தினகரன் நிதானமாக எல்லாப் பிரச்னைகளையும் எதிர்கொள்கிறார். அதில் உங்களுக்குத் திருப்தியா?’’
(சிறிது யோசனைக்குப் பிறகு) ‘‘இப்போ அதைப் பண்ணித்தானே ஆகணும். ஆனா, ஒண்ணு புரிஞ்சுக்கணும். எல்லாருக்கும் ஒரு சுயமரியாதை உணர்வு, தனி மனித உரிமை எல்லாம் இருக்கு. அதையெல்லாம் புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கணும். அப்படி இருந்தா, யாருக்கும் எந்தப் பிரச்னையும் வராது; வந்திருக்கவும் செய்யாது!’’


‘‘நீங்கள் சொல்வதைப் பார்த்தால்... தினகரன், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பது போல் தெரிகிறதே?’’ 


‘‘ஒற்றுமையா... வேற்றுமையில் ஒற்றுமையா... ஒற்றுமையில் வேற்றுமையா... எப்படிச் சொல்றீங்க? (நம்மைக் கூர்மையாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டே இந்தக் கேள்வியைக் கேட்கிறார்). மூணு பேர் மட்டும் என்ன... எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்னுதான் சொல்றேன். சின்னச் சின்ன வேற்றுமை, மனஸ்தாபம் இருந்தாலும் அதையும் ஒற்றுமையா இருந்துதான் எதிர்கொள்ளணும். அப்படி இருந்தா, அவங்களுக்கும் நல்லது; கட்சிக்கும் நல்லது; எல்லாருக்கும் நல்லது.’’ 



‘‘வருமானவரித்   துறை  சோதனையால், குடும்பத்தினர் சோர்ந்துபோயுள்ளார்களா?’’ 



‘‘யாரும் சோர்ந்து போகவில்லை! ஒவ்வொருத்தரும் ஓர் எல்லையை நிர்ணயிச்சுக்கணும். நமக்கு எது தேவையோ, அதை எல்லையா வெச்சுக்கணும். நிம்மதியா தூங்குறதுக்கு ஒரு பாய், தலையணை இருந்தா போதும். அதை ரோட்ல, ரயில்வே ஸ்டேஷன்லன்னு எங்க வேணும்னாலும் விரிச்சுப் படுத்துடலாம்ல. நான் அப்படிப் படுத்துருவேன். உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கா? வசதி வந்தா, பெட், மெத்தைன்னு ‘கம்ஃபர்ட் லெவல்’ கூடும். அது வேற! ஆனா, ‘நமக்கு என்ன தேவை... எவ்வளவு தேவை’ன்னு அளவைச் சரியா நிர்ணயிச்சுக்கிட்டு வாழ்ந்தா, இந்த ரெய்டுலாம் நம்ம பக்கத்துல கூட வர முடியாது. இப்போ என் பக்கத்துலயே வர முடியலையே! அதைப் புரிஞ்சுக்கணும்.’’ 



‘‘இரட்டை இலைச் சின்ன வழக்கு...’’ 



‘‘1989-ல அந்தச் சின்னத்தை மீட்டுக்கொடுத்தது யாரு? இந்த நடராசன்தான். டெல்லியில அப்போ பல அ.தி.மு.க தலைவர்களும் இருந்தாங்க. வேறு ஒரு வேலைய முடிச்சுட்டுக் கிளம்புற அவசரத்துல இருந்த அந்தத் தலைவர்கள்கிட்ட, ‘எல்லாரும் வெயிட் பண்ணுங்க. இன்னொரு சஸ்பென்ஸ் செய்தி இருக்கு’ன்னு சொன்னேன். கொஞ்ச நேரத்துல இரட்டை இலை திரும்பக் கிடைச்ச செய்தி வந்தது. அப்போ ராகவானந்தம் இருந்தார். ‘இந்த லெட்டரை நானே போய் ஜெயலலிதா மேடம்கிட்ட கொடுக்கிறேன்’னு ஆர்வமா சொன்னார். நான்தான் அவர் கையில அதைக் கொடுத்து அனுப்புனேன். இப்போ திரும்பவும் அந்தச் சின்னத்துக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கு. அது யாரால வந்துச்சு? எல்லாம், இங்க இருந்தவங்க செஞ்ச வேலைகளாலதானே. எங்க சுத்துனாலும் இங்கதான வரணும்; வரட்டும். அது பெரிய பிரச்னை இல்லை!’’



- ஜோ.ஸ்டாலின், ஓவியம்: பிரேம் டாவின்ஸி
நன்றி ஜூவி

No comments: