May 7, 2014

அனைத்து மாநிலங்களும் வளம் பெற தேசிய அதி திறன் நீர்வழிச்சாலை


ஐந்தாண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக, பல்வேறு பாதைகள் பின்பற்றப்பட்டன. அவற்றில் வேளாண்மைக்கும், நீர் மேலாண்மைக்கும் இரண்டு அடிப்படையான பாதைகள் பின்பற்றப்பட்டன.

அவற்றில், முதலாவது பாதையில், சுதந்திர இந்தியாவின் முதல் 30 ஆண்டுகளில் நாம் பயணித்தோம். அதன்படி மிகப் பெரிய அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் ஆகியவை உருவாக்கப்பட்டன. 84 பெரிய அணைகளும், நீர்த்தேக்கங்களும் கட்டப்பட்டன. நீர் மேலாண்மையும், நீர்மின்சக்தி வசதிகளும் உருவாக்கப்பட்டன. ஆனால், அவற்றின் மூலம், ஆண்டுக்கு, 45 ஆயிரம் கோடி கன அடி தண்ணீரையே தேக்க முடிந்தது.

இரண்டாவது பாதையானது, டாக்டர் கே.வி.எல். ராவ், கேப்டன் டி.ஜே.தஸ்தூர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட, முறையான நதிகளை இணைப்பதும், கரை வாய்க்கால்களை (Contour Canal) அமைப்பதும் ஆகும். இரண்டாம் பாதை குறித்து, தேசிய அளவிலான விவாதங்கள், பல எழுந்தன. பல ஆய்வுகள் மேற்கொண்ட பின், இம்முறையில், தொழில்நுட்ப, சுற்றுச்சூழல், நிதி, அரசியல் தலைமை ஆகியவை தொடர்பான சவால்களை, எதிர்கொள்ள நேரிடும் என்பது தெரியவந்தது. தேசத்துக்கு இது முக்கிமானது, ஜீவாதாரமானது என்றாலும், மேற்கண்ட காரணங்களால், அரசின் முயற்சிகள் தடைபட்டன; இந்தப் பாதையில் நாம் முன்னேற முடியவில்லை.
வீணாகும் நீர் :


இந்தியாவின் நீர் மேலாண்மை பிரச்னையை, தற்போதுள்ள நீர் கொள்ளளவு மற்றும் நீர் சமநிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ந்தோம்.இந்தியா, தன் எல்லா இயற்கை ஆதாரங்களின் வழியிலுமாக, ஓராண்டுக்கு மொத்தமாக, 12 லட்சம் கோடி கன அடி நீரை பெறுகிறது. இதில், 2.10 லட்சம் கோடி கன அடி நீர், ஆவியாகி விடுகிறது. மேலும், 2.10 லட்சம் கோடி கன அடி நீர், நிலவழியில் செல்லும்போது வீணாகிறது. ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய அளவில், 4.5 லட்சம் கோடி கன அடி நீர், வெள்ளம் காரணமாக, கடலில் சென்று கலந்து விடுகிறது.இவ்வாறாக, நமக்கு மீதம் கிடைப்பது, 3.3 லட்சம் கோடி கன அடி நீரே. இதிலும், 1.29 லட்சம் கோடி கன அடி நீர், புவியடி நீர் மறுவூட்டத்துக்கு போய்விட, நிலத்தின் மேற்பரப்பில் தற்போது பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீரின் அளவு, வெறும், 1.11 லட்சம் கோடி கன அடி. ஆக, இவை போக, மீதம் பயன்படுத்திக் கொள்ள சாத்தியமான அளவுக்கு, மேலும், 90 ஆயிரம் கோடி கன அடி நீர் இருக்கிறது.

இந்தியா முழுவதும் நதி நீர் இணைப்பு திட்டம் நிறைவேறினாலும், இந்தியா முழுமையிலும் உள்ள, 84 பெரிய அணைகளில், இரண்டு முறை வெள்ள நீரை தேக்கினாலும், 90 ஆயிரம் கோடி கன அடி தண்ணீருக்கு மேல் சேமிக்க முடியாது. இந்தியாவில், மழைப்பொழிவில் பாதியளவு, இரண்டு வாரங்களுக்கே நீடிக்கிறது. கிட்டத்தட்ட, 90 சதவீத நதி வெள்ளம் பெருக்கெடுத்தோடும் காலம், 3 முதல் 4 மாத காலங்களுக்கே நீடிக்கிறது. அதுவும், வெவ்வேறு கால கட்டங்களில் வரும் வெள்ளத்தால், இது சாத்தியப்படாமலேயே போனாலும் போகலாம். அப்படி என்றால், கடலில் கலக்கும், 4.5 லட்சம் கோடி கன அடிநீரை, எப்படி பயன்படுத்துவது? அதற்கு, 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் சாத்தியப்படக் கூடிய திட்டம் என்ன?

இந்தியாவில், ஒரு புதிய சிந்தனை எழுந்திருக்கிறது. அந்த மூன்றாவது தீர்வை, 'தேசிய அதி-திறன் நீர்வழிச்சாலை' என்று கூறலாம். இது தொடர்பான ஆராய்ச்சிகள் அனைத்தையும் மேற்கொண்ட பின், 'இந்தியாவுக்கான சரியான தீர்வு, தேசிய அதி-திறன் நீர்வழிச் சாலை திட்ட இயக்கம்' ஒன்றை துவங்குவதே' என, நாங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்.இந்த அமைப்பு, நதிகள், அணைகள், நீர்த்தேக்கங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இணைத்து, வெள்ளம் வரும்போது, நீரை அதில் ஏற்றி, பாய வைக்கும், வறட்சி காலங்களில், தேவையான மாநிலங்களுக்கு, அதிலிருந்து கொடுக்கும். நாட்டின் எந்த பகுதியில் நீர் பற்றாக்குறை இருந்தாலும், அவ்விடத்துக்கு இது செல்லும். இந்தியாவுக்கான அதி-திறன் நீர்வழிகள் குறித்த இந்த ஆய்வுக் கட்டுரை, இந்தியாவின் நீர் மேலாண்மை விவகாரத்தில், பல தலைமுறைகளுக்கு, எல்லா சூழல்களுக்கும், சாத்தியமான தீர்வு ஒன்றை முன்வைக்கிறது.

இந்தியாவுக்கான தேசிய அதி -திறன் நீர்வழி திட்டத்தின் தன்மைகள்:
ஏ.சி.காமராஜ் தலைமையிலான ஒரு குழு ஆராய்ந்து, முன்மொழிந்த திட்டமே, தேசிய அதி- திறன் நீர்வழி திட்டம். சரிவற்ற, நேரான (zero&slope)அமைப்புடன், ஒரு நீர்வழிச்சாலை முன்மாதிரி திட்டத்தை இந்த குழு, ஏற்கனவே உருவாக்கியுள்ளது.

தேசிய அதி- திறன் நீர்வழிச்சாலை பின்வரும் தன்மைகளை உடையது:
*கடல் மட்டத்திலிருந்து, 750 அடி உயரத்தில், ஒரே மட்டத்தில், சரிவற்ற நிலையில் நாடெங்கும், இந்த வழிச் சாலை கட்டப்படும்.
*இந்த நீர்வழிச் சாலை, நாடெங்கும் உள்ள ஆறுகள், அணைகள், நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஆகியவற்றை, ஒற்றைத் தளத்தில், கிடை மட்டத்தில் இணைக்கிறது. இதற்குள் பாயும் நீர், அழுத்த வேறுபாடுகளின் காரணமாகவே பரவுகிறது.
*தேசிய அளவிலான இந்த நீர்வழிச் சாலை, போதுமான ஆழ, அகலங்களுடன் கட்டப்பட்டு, எந்த சமயத்திலும், 90 ஆயிரம் கோடி முதல் 1.80 லட்சம் கோடி கன அடி வரையிலான நீரை தேக்கி வைக்கும்படி, உறுதி செய்யப்படும்.
*நதிகளின் தலைப்பகுதிகளில் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஏற்படும் வெள்ளம், அணையில் நிரம்பும் வெள்ளம் ஆகியவை, இந்த தேசிய நீர்த் தேக்க அமைப்புக்கு, நீரைக் கொண்டு வரும்.
*இந்த நீர்வழிச்சாலை, 'தேவையான இடத்திற்கு, தேவையான அளவு' என்ற இணைப்பு அமைப்பை ஒத்திருப்பதால், பற்றாக்குறை இடத்திற்கு, நீர் கொண்டு செல்லப்படுவதும், வெள்ள காலத்தில், நீர் ஏற்றப்படுவதும் சாத்தியமே.
*வளைவுகள், கொடுவிளிம்புகள் அற்றவையாகவும், குறைந்த தளத் தடிமன் உடையவையாகவும், நீர்வழிச்சாலை இருக்கும். 24 மணி நேரமும், இதில் நீர்ப் போக்குவரத்து சாத்தியம்.
*இதில் சரக்கேற்றம், சரக்கிறக்கம் ஆகியவற்றை திறம்பட செய்யும் வசதிகளை வைக்க முடியும். நவீன நீர் போக்குவரத்து முறைகளையும், இங்கே பொருத்த முடியும்.இதன் மூலம் நீர்வழிப் போக்குவரத்து, நீர்ப் பாசனம், வேளாண் உற்பத்தித் திறன், நீர் மின்சக்தி, பல்துறை வேலை வாய்ப்புகள் பெருகும்.ரயில் போக்குவரத்தை விட, இரு மடங்கு செயல்திறனும்; சாலைப் போக்குவரத்தைவிட எட்டு மடங்கு செயல் திறனுமுள்ள நீர்வழி போக்குவரத்து, ஆற்றல் வளங்களை பாதுகாப்பதில், மிகப் பெரிய அளவு அரசுக்கு உதவும். சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு மீளும் செயல்பாடுகளுக்கும் வழிவகுக்கும்.
எனவே இதை, அரசு- - தனியார் கூட்டு முயற்சியாக மேற்கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது. இதில், மத்திய - -மாநில அரசுகள், கூட்டாக இறங்க வேண்டும்.

நதிநீர் இணைப்புத் திட்டத்தோடு ஒப்பிடுகையில், இந்தத் திட்டத்தில் நில ஆர்ஜிதம், மறுகுடியேற்ற சிக்கல் போன்ற பிரச்னைகள் உருவாவதற்கான வாய்ப்புகள், மிக மிக குறைவே. ஏனென்றால், இந்த நீர் வழிச்சாலை பெரும்பாலும் உயரமான மலைப்பகுதியில் அமைவதால், ஒரு ரோடு போடும் அளவு தான் நிலம் தேவைப்படும். எனவே, மக்கள் மறு குடியேற்றம் போன்ற பிரச்னைகள், பெரும்பாலும் இருக்காது. அகற்றப்படும் மரங்களை விட, இரண்டு மடங்கு மரங்களை உருவாக்கவும் வாய்ப்பு உருவாகும்.

இந்தியாவில் நீர் பிரச்னை, தொடர்ந்து மோசமாகி வருகிறது. 1951ல் இந்தியாவின் தனிநபர் நீர் கிடைப்பு அளவு, 15,531 கன அடியாக இருந்தது. இதுவே, 2011ல், 4,635 கன அடியாக, அதலபாதாளத்துக்கு சரிந்தது. இது, 2025ல், 4,020 கன அடியாகவும், 2050ல், 2,850 கன அடியாகவும் குறையும் என, புள்ளி விவரங்கள் கூறுகின்றன.ஆனால், மழைக் காலத்துக்குப் பிந்தைய நீர்த் தேவைக்காக, நீரை சேமிப்பது தொடர்பாக, இந்தியா இதுவரை, எதையுமே பெரிதாக செய்து விடவில்லை. அமெரிக்காவில் தனிநபர் ஒருவருக்கென கட்டி வைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க வசதியின் அளவு, 15 ஆயிரம் கன அடி. நடுத்தர வருவாய் நாடுகளான சீனா, மெக்சிகோ போன்ற நாடுகளில், 3,000 கன அடி.இப்படிப்பட்ட சூழல்களில், இந்தியாவின் நீர் தேக்க கொள்ளளவு திறனோ, தனி நபருக்கு, வெறும், 600 கன அடியாக உள்ளது.

தனிநபர் தேவைக்கான கொள்ளளவை, 2025ல், 7,500 கன அடியாகவும், 2050ல், 15 ஆயிரம் கன அடியாகவும் உயர்த்துவது எப்படி என்பது, சவாலாக இருக்கிறது.தமிழகத்தில், 17 பெரிய ஆற்று பாசனங்களும், 61 பெரிய மற்றும் சிறிய நீர் பாசன அணைகளும், 41,948 கண்மாய்கள், ஏரிகள் மற்றும் குளங்களும் உள்ளன. ஆண்டுதோறும், 13,962 கோடி கன அடி அளவு தண்ணீர் நிரம்பக்கூடிய வாய்ப்பு இருந்தாலும், அதில் பாதி கூட நிரம்புவதில்லை.

பெரும்பாலான மழையினால் கிடைக்கும் தண்ணீர் இருப்பை, முழுவதுமாக நாம் விவசாய தேவைக்கு ஏற்ப உபயோகப்படுத்தும் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டது. கிட்டத்தட்ட, 24 லட்சம் ஹெக்டேர் பாசன நிலம் பெரிய மற்றும் சிறிய நீர் அணைகளால் பாசன வசதி பெறுகிறது. 90 சதவீதம் நீர் விவசாயத்திற்கென்று உபயோகிக்கப்படுகிறது.ஆண்டுதோறும் உபயோகப்படக் கூடிய நீர், 67 ஆயிரம் கோடி கன அடி ஆக இருக்கிறது. அதில், 60 சதவீத நிலத்தடி நீர், மறு சுழற்சிக்கு சென்று விடுகிறது. 40 சதவீதம் நீர் மட்டும் நமது உபயோகத்திற்கு கிடைக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டு காலங்களில், பாதுகாப்பான நிலத்தடி நீர் இருப்பு என்று சொல்லக்கூடிய பகுதிகளில், 35.6 சதவீதத்தில் இருந்து, 25.2 சதவீதமாக, நீர் குறைந்து விட்டது. அதே போல் பாதியளவு நிலத்தடி நீர் இருப்பு பகுதிகளில், மொத்தத்தில், 35.8 சதவீத நிலங்களில், அளவுக்கு அதிகமாக, நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விட்டது. 2 சதவீத நிலம், உப்புத் தன்மையானதாக மாறிவிட்டது.

ஏனென்றால் கடல் நீர் உள்ளே புகுந்ததாலும், ஆறு மற்றும் நிலத்தடி நீர் மாசு பட்டதாலும், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததாலும். மழைநீர் தண்ணீர் சேமிப்பு சரிவர செயல் படாததாலும், வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுகளால் மூடப்பட்டதாலும், இந்த நிலைமை ஏற்பட்டு விட்டது.

துறைவாரியாக தண்ணீர் தேவையும், பற்றாக்குறையும் 
விவசாயத் துறை தான், தமிழகத்தின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் மிக முக்கிய துறையாகும். உணவு தேவையை சமாளிப்பதோடு மட்டுமல்லாமல், பெரும்பாலான மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் துறையாக விளங்குகிறது. விதைக்கப்படும் மொத்தப் பரப்பளவில், 46 சதவீதத்திற்குத்தான் நீர்பாசனம் உள்ளது. மீதம் உள்ள பரப்பளவு மானாவாரிதான். தண்ணீர் பற்றாக்குறையாலும், விவசாயத்திற்கு ஏற்ற விலையில்லாததாலும், விவசாய பொருட்களுக்கு ஏற்ற விலை கிடைக்காததாலும், விவசாயக் கூலி கட்டுபடியாகாததாலும், விவசாய உற்பத்திக்கு ஏற்ற இடங்கள், தொடர்ந்து நகரமயமாதலுக்கும், வீட்டு மனைகளுக்காகவும், தொழிற்சாலைகளுக்காகவும் பலியாகிவிட்டது.

உணவுப்பாதுகாப்புக்கு முக்கிய காரணியாக விளங்குவது தண்ணீர் இருப்புதான். தண்ணீர் ஒரு அரிதான பொருளாகிவிட்டது. மற்ற துறைகளான தொழில் துறை, நீர் மின்சார உற்பத்தி, வீட்டு தேவைகள், விலங்குகளுக்கும் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்திற்கும் தண்ணீர் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தமிழ் நாடு அரசின் தண்ணீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி, பல்வேறு துறைகளுக்கு தேவையான தண்ணீர் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.மேற்கொண்ட துறைகளில் கூடுதல் தேவையாக (2012ம் ஆண்டைய கணக்கு) - 27 டி.எம்.சி / வருடம். ஆக மொத்தம் 1,921 டி.எம்.சி / வருடம் தேவைப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் மொத்த நிலத்தடி நீர் மற்றும் தரையில் இருக்கும் தண்ணீர் அளவு 1,643 டி.எம்.சி / வருடம். 2012 ம் ஆண்டு தேவையான கிட்டத்தட்ட 1,921 டி.எம்.சி என்பது, 2020ல், 2072 டி.எம்.சி.,யாக உயரும். அதாவது வருடா வருடம் 53 டி.எம்.சி பற்றாக்குறை ஏற்பட்டால், 2020ல், 429 டி.எம்.சி பற்றாக்குறை ஏற்படும்.
இதற்கு என்ன செய்யலாம்?

டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
வெ.பொன்ராஜ் 

(தொடரும்)
நன்றி தினமலர்


நீர் நிலைகளில் உள்ள ஆபத்தும் தப்பிக்கும் வழிகளும் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

“ஆத்துல கண்டம்... அருவியில கண்டம்!” - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்
)
பிக்னிக்... டூர் என்றாலே... 'நிறைய தண்ணீர் இருக்கற ஆறு, அருவினு பார்த்துப் போடுங்க' என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே குஷியாவார்கள். ஆனால், இப்படிப்பட்ட நீர்நிலைகளைத் தேடி உற்சாகமாக ஓடுபவர்கள்... ஆவல் மிகுதியால் அவற்றிலிருக்கும் ஆபத்துகளை மறந்து குதியாட்டம் போட... கடைசியில், 'பாண தீர்த்த அருவிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினர் நீரில் மூழ்கி பலி', 'தேக்கடியில் படகு கவிழ்ந்து 30 சுற்றுலா பயணிகள் மரணம்' என்று தலைப்புச் செய்திகளாகி அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்துவிடுகிறார்கள்!
''நீர்நிலைகளில் ஏற்படும் பெரும்பாலான மரணங்களுக்குக் காரணமே... சுயதவறுகள்தான். எச்சரிக்கை பலகைகளை மதிக்கத் தவறுவது, பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றத் தவறுவது போன்றவையே உயிருக்கு உலை வைக்கின்றன'' என்று சொல்லும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் திண்டுக்கல் நிலைய அலுவலர் புருஷோத்தமன், நீர்நிலைகளில் காத்திருக்கும் ஆபத்துகளையும், தப்பிக்கும் வழிகளையும் அக்கறையுடன் அடுக்கினார்.
குளத்தில் காத்திருக்கும் ஆபத்து!
கோயில்களுக்குச் செல்வோர், அங்கிருக்கும் நீர் நிறைந்த கோயில் குளத்தைப் பார்த்ததும் உடனே இறங்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், குளத்தின் படிக்கட்டுகளில் இருக்கும் பாசி, சட்டென்று வழுக்கி ஆளையே காவு வாங்கிவிடும். பொதுவாக, அதிக பயன்பாட்டில் இருக்கும் குளம் என்றால், அதிகமாக பாசி இருக்காது. பயன்பாடு குறைவான இடமாக இருந்தால்... தனியாக இறங்க நினைக்கும்போது, பாசியால் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, குளத்தின் தன்மை, படிகள் வழுக்குமா என்பதைஎல்லாம் அங்குள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து, அதன்படி நடந்துகொள்ளுங்கள்.
தப்பிக்கும் வழி: குளம், ஏரி போன்ற தேங்கிக் கிடக்கும் நீர்நிலைகளில் ஒருவர் தவறி விழுந்துவிட்டால், பதற்றத்தில் அனைவருமே உள்ளே குதிப்பது போன்ற மடத்தனம் வேறில்லை. மேலே இருப்பவர்களில் யாருக்காவது நீச்சல் தெரிந்தால் மட்டுமே முயற்சிக்க  வேண்டும். இல்லையென்றால், உதவிக்கு வேறு யாரையாவதுதான் அழைக்க வேண்டும். மீட்பு முயற்சியில் இறங்குபவர்கள், மூழ்கிக் கிடப்பவரின் தலை முடியைக்கொத்தாக பிடித்துத் தூக்க வேண்டும். உடலின் வேறு பாகங்களைத் தொடக்கூடாது. அப்படி தொட்டால், பயத்தின் காரணமாக, காப்பாற்றுபவரையும் தண்ணீருக்குள் மூழ்கடித்துவிடுவார்கள்... ஜாக்கிரதை!
அச்சமூட்டும் ஆறுகள்!
'வெளியூர்க்காரனுக்கு ஆறு பயம்... உள்ளூர்க்காரனுக்கு பேய் பயம்' என்பார்கள். அதற்குக் காரணம், ஆறுகளின் ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்பதுதான். பொதுவாக ஆறுகளில் அதன் வேகத்தின் காரணமாக நீர்சுழல்கள் இருக்கும். அதிலும் அணையிலிருந்து தண்ணீர் வெளியேறும் பகுதி என்றால், கேட்கவே தேவையில்லை. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கல்லணை, அணைக்கரை உள்ளிட்ட பல இடங்களிலும் முதலைகள் நிறைந்திருக்கும். இதுபோன்ற இடங்களுக்குச் செல்வோர், சட்டென்று தண்ணீரில் இறங்கிவிடக் கூடாது. கோடைகாலத்தில், இந்த ஆறுகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும். அவற்றிலும் முதலைகள் காத்திருக்கக்கூடும்! முதலைகளிடம் சிக்கிய பிறகு மீள்வது சுலபமில்லை.
விழுங்கக் காத்திருக்கும் புதைகுழிகள்!
அணைகளைப் பொறுத்தவரை தொடர்ந்து தண்ணீர் தேங்கி இருப்பதால், அணைகளின் கரையோரப் பகுதிகளில் புதைமணல் இருக்கும். இது தெரியாமல் கால் வைத்தால், அதோகதிதான்! திருச்சி அருகேயுள்ள முக்கொம்பு அணைப்பகுதியில் இப்படிப்பட்ட புதைமணல் குழிகள் நிறையவே இருக்கின்றன. இதில் ஆண்டுதோறும் மரணத்தைத் தழுவுவோரின் பட்டியல் உயர்ந்துகொண்டே இருக்கிறது.
தப்பிக்கும் வழி: பொதுவாக இப்படி புதைகுழியில் சிக்கிக்கொள்பவர்கள் உடனடியாக உள்ளே போய்விட மாட்டார்கள். காப்பாற்ற அவகாசம் கிடைக்கும். நீச்சல் தெரியும் என்றாலும், நேரடியாக குதித்து காப்பாற்ற நினைக்கக் கூடாது. நீளமாக கம்பு, கயிறு போன்றவற்றை கொடுத்து காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். வேறு வழியில்லாதபோது, நீச்சல் தெரிந்தவர்கள், கயிறு ஒன்றை எடுத்து ஒரு முனையை கரையிலிருப்பவர்களிடம் கொடுத்துவிட்டு, மறுமுனையை இடுப்பில் கட்டிக்கொண்டு காப்பாற்றும் முயற்சியில் இறங்க வேண்டும். புடவை, துப்பட்டா என கிடைத்ததைப் பயன்படுத்தலாம்.
கலங்கவைக்கும் கடல் அலைகள்!
பொங்கி வரும் கடல் அலைகளைப் பார்த்ததுமே இறங்கி விளையாடத் தோன்றும். ஆனால், இது மிக மிக ஆபத்தான ஒன்று. எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருக்கும் கடல் பகுதி என்றால், கண்டிப்பாக கால் நனைப்பதைக்கூட தவிர்த்துவிடுங்கள். குளிக்கக்கூடிய கடல் பகுதி என்றாலும் உஷார்... உஷார்.
தப்பிக்கும் வழி: ஒருவேளை கடல் அலைகளில் சிக்கிக்கொண்டால் பதற்றப்படாதீர்கள். அலை வரும்போது, நீருக்குள் மூழ்கி அலைக்கு அடியில் செல்லுங்கள் அல்லது குதித்து அலையின் மேலே எழ முயற்சி செய்யுங்கள். இப்படி செய்தால் ஒரு சில அலைகளே உங்களை கரைபக்கம் ஒதுக்கிவிடும்.
படகு சவாரி... ஜாக்கிரதை!
படகு சவாரி இல்லாத  சுற்றுலா தலங்கள் மிகக்குறைவு. ஆனால், இப்படி சவாரி செல்லும்போது, உயிர்காக்கும் கவச உடைகளை அணிந்துகொள்வது முக்கியம். ஒரே பக்கமாக அனைவரும் சென்றுவிடக் கூடாது. அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏறக்கூடாது போன்றவற்றை எல்லாம் கடைப்பிடியுங்கள். ஒருவேளை படகு ஓட்டுபவர்கள் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு இஷ்டம்போல ஆட்களை ஏற்றினாலோ... உயிர்காக்கும் சாதனங்கள் இல்லையென்றாலோ... பயணத்தையே தவிர்த்துவிடுங்கள். 'இவ்வளவு தூரம் வந்துட்டு, படகுல போகலைனா எப்படி?' என்று ஏறினால், அன்றைக்கு பார்த்துகூட அங்கே படகு விபத்து நடக்கலாம்... யார் கண்டது?
தப்பிக்கும் வழி: படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டால்... உடனே பயந்துவிடக் கூடாது. தண்ணீரில் விழுந்தவுடன் பயத்தில் தண்ணீரைக் குடித்துவிடாமல், விழுந்த படகு... அல்லது லைப் ஜாக்கெட் என ஏதாவது கைக்கு அருகில் கிடைக்கிறதா என பாருங்கள். நீரில் மூழ்காமல் சற்று தாமதப்படுத்த முடிந்தால் போதும்... அதற்குள் உதவிகள் கிடைத்துவிடக்கூடும்'' என்று ஒவ்வொன்றை யும் தெளிவாக விவரித்தார் புருஷோத்தமன்.
அழகு ஆபத்து = அருவிகள்!
அருவிகள் என்றாலே அழகோடு ஆபத்தும் நிறைந்தே இருக்கும். குற்றாலம், பாபநாசம், காளிகேசம், கும்பக்கரை, ஒகனேக்கல், அதிரப்பள்ளி என்று எந்த அருவிக்குச் சென்றாலும், அவற்றின் ஆபத்தான பக்கத்தைப் பற்றி முதலில் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். இந்த அருவிகளில் எல்லாம் தண்ணீர் விழும் இடங்களில் ஆபத்தான பாறைகள் நிறைந்திருக்கும். இவற்றுக்குள் குதித்தால், பாறைகளில் சிக்கிக்கொண்டு பரலோகம் போக வேண்டியதுதான். அருவிகளின் மேற்புறத்துக்குச் சென்று குளிப்பதும் ஆபத்தானது. கொஞ்சம் தவறினாலும், பாறைகளின் வழியாக வழுக்கிச் சென்று, பல அடி உயரத்திலிருந்து கீழே விழும் அருவி நீருக்கு இரையாக நேரிடும்.
-அவள் விகடனிலிருந்து...

Oct 26, 2013

“எங்கே... எங்கே எங்க தெய்வம்?”

“எங்கே... எங்கே எங்க தெய்வம்?”
Posted Date : 11:17 (24/10/2013)Last updated : 11:19 (24/10/2013)
டந்த வியாழக் கிழமை அதிகாலை சுமார் 5 மணி இருக்கும்... சென்னை நேரு ஸ்டேடியத்தில் முதல்வரும் ஜனாதிபதியும் கலந்துகொள்ளும் 'எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் திறப்பு விழா’வுக்குச் சவுக்கு மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைத்துக்கொண்டு இருந்தனர் ஊழியர்கள். அவர்களை நோக்கி விரைந்து வந்தது ஒரு போலீஸ் வேன்... 
''வேலைகளை அப்படியே நிறுத்திட்டு எல்லோ​ரும் ராஜாஜி மண்டபத்துக்குக்கிளம்புங்க...'' என்று அதிகாரிகள் உத்தரவிட,  'சரி, விழா நடக்கும் இடத்தை மாற்றிவிட்டார்களாக்கும்...’ என்று ஒரு லாரியில் ஏறி அவர்கள் ராஜாஜி மண்டபம் வந்து சேருவதற்கும், அந்த சோகச் செய்தியைக் கேள்விப்பட்டு நாமும் அங்கு போய் நிற்பதற்கும் சரியாய் இருந்தது!
போலீஸ் உதவி கமிஷனர்கள் சிலர், ராஜாஜி மண்டபப் படிக்கட்டுகளுக்கு எதிரே ஆணி அடித்து, கயிறுகளைக் கட்டி, தடுப்புகள் அமைக்க 'மார்க்’ செய்துகொண்டு இருந்தனர். வந்த ஊழியர்கள் விஷயத்தைக் கேள்விப்பட்டுத் திகைத்து நின்றனர். சற்று நேரத்தில் ஊர் விழித்துக்கொண்டது.
'முதல்வரின் உடல், ராஜாஜி மண்டபத்துக்குக் கொண்டுவரப்பட இருக்கிறது’ என்று கேள்விப்​பட்ட சிலர், அவசர அவசரமாக ஓடி வர, ராஜாஜி மண்டபத்தைச் சுற்றிலும் போலீஸ் நிறுத்தப்​பட்டது. எம்.எல்.ஏ. ஹாஸ்டல் பக்கம் இருந்து சத்தமான குரலெடுத்து, ''யப்பா...  யப்பா..!'' என்று கதறிக்கொண்டு முதலில் ஓடி வந்தார்  அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. பஞ்சவர்ணம். மக்கள் கடலின் முதல் அலைகூட வந்து சேராத நேரம். கொஞ்ச நேரம்தான்!
ஒரு கட்டடம் சரிவதுபோல் 'டமார்’ என்ற சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து பயங்கர அலறல்... இரைச்சல்... தூரத்தில் ஒரு நுழைவாயிலின் இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு, ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் அலறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.
சில போலீஸ் அதிகாரிகள், ''இன்னும் இங்கு முதலமைச்சரைக் கொண்டுவரவில்லை, கொண்டு​வரவில்லை...'' என்று கத்தினார்கள். எதையும் காதில் வாங்காமல் விரைந்து வந்த கூட்டம், மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு மண்டபத்தை நோக்கிப் பாய்ந்து வந்தது. மிகக் குறைந்த எண்ணிக்​கையில் நின்ற போலீஸார், கண நேரத்தில் ஓரமாய் விலகிக்கொண்டனர். படிக்​கட்டின் மேலே இருந்து பார்க்கும்போது, மனிதத் தலைகளால் ஒரு புயல் கிளம்பி வருவதுபோல் இருந்தது. வந்தவர்கள், ராஜாஜி மண்டபத்தின் முன் வாசல் வழியாக மேலே ஏறிக் கதவுகளை முட்டி மோதித் திறந்தனர். உள்ளே முதல்வரின் உடல் இன்னும் வைக்கப்படவில்லை என்பதை நேரில் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்ட பின்னும், ஒவ்வொரு திசைக்கும் அழுதபடி, ''எங்கே... எங்கே எங்க தெய்வம்?'' என்று ஓடித் தேடினர். ராஜாஜி மண்டபத்தை ஒரு சுற்றுச் சுற்றிய பின்னர், ''ஐயோ, காணோமே... காணோமே...'' என்று அரற்றியபடி அவ்வளவு பேரும் அவர்களாகவே கீழே இறங்கிவிட்டனர்.
ராஜாஜி மண்டபத்தின் படிக்கட்டிலும், சுற்று வழியிலும் ரத்தச் சுவடுகளாகக் காலடித் தடங்கள் ஆங்காங்கே இருந்தன. தடுப்புகள் அமைக்க இடம் குறிப்பதற்காகத் தரையில் அடித்துவைக்கப்பட்டு இருந்த ஆணிகளின் மேல் மிதித்து, பலருடைய பாதங்கள் கிழிந்து, கொட்டிய ரத்தம் திட்டுத்திட்டாய்க் கிடந்தது. ராஜாஜி மண்டபத்தின் எதிரே இருந்த பரந்த மைதானத்தில் நின்றவர்களை போலீஸார் நயந்து ஓரம் கட்டிய பின், சவுக்குக் கட்டைகளால் தடுப்புகள் அமைக்கும் வேலை தொடர்ந்தது. அப்போதுதான் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சௌந்தரராஜன், டி.ராமசாமி ஆகிய மூவரும் ஏற்பாடுகளைக் கவனிக்க வந்து சேர்ந்தனர்.
முதல்வர் உடல் வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்டது. பிரதமர் வரும் வரை ராஜாஜி மண்டபத்தின் உள்ளே மேடை மீது வைக்க முதலில் முடிவானது.
உடலை வைக்கும் இடம் பற்றி அமைச்சர்களிடம் ஓர் அதிகாரி விளக்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரன், ''மேடையில் வேண்டாம்... ஹாலிலேயே இருக்கட்டும்!'' என்றார். பெரிய மேஜை ஒன்று இழுத்து வரப்பட்டு மண்டபத்தின் நடுவில் போடப்பட்டது.
கறுப்பு கலர் உடையில், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் முன்னால் வந்தார் ஜெயலலிதா. கண்கள் மட்டும் ரத்தச் சிவப்பில் இருந்தன. அவரை அடுத்து ஓர் அடி தூர இடைவெளியில் இணையாக ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் பல அமைச்சர்கள் வந்தனர்.
பூட்டியிருந்த ராஜாஜி மண்டபத்தின் பக்கவாட்டுக் கதவுகள் வழியாக அவர்களுடன் சேர்ந்து நுழைந்தபோது, உள்ளே... சில விநாடிகளுக்கு முன் பின் வாசல் வழியாகக் கொண்டுவந்து கிடத்தப்பட்ட முதல்வரின் உடலை, மண்டபத்தின் நடுவில் இருந்த மேஜை மீது ஒரு ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து இருந்தனர். வழக்கமான அவர் உடை... தூங்கிக்கொண்டு இருப்பதுபோல் காணப்பட்டார் முதல்வர். வயிற்றுப் பகுதிக்கு மேல் ஒரு பட்டுத் துணியால் கட்டப்பட்டு இருந்தது. முகத்தில் அதே பொலிவு... நாசித் துவாரங்களில் கொஞ்சம் பஞ்சு வைக்கப்பட்டு இருந்தது. அது தவிர, எந்த மாற்றமும் தெரியவில்லை.  வலது கையில் கட்டப்பட்டு இருந்த பெரிய கறுப்பு டயல் கைக்கடிகாரம் மட்டும் காலை 8.45 - ஐத் தாண்டி இயங்கிக்கொண்டு இருந்தது!
சில நிமிடங்கள் வரை மண்டபத்துக்குள் மலர் மாலைகூட வந்து சேரவில்லை. மிகுந்த நிசப்தம் நிலவியது. முதல்வரை அந்தக் கோலத்தில் பார்க்க சகிக்க முடியாமல் அமைச்சர்களும் அவருக்கு நெருக்கமானவர்களும் வாய்விட்டு அழுதனர். முதல்வரின் அருகே இடது பக்கமாக, அவரது வளர்ப்பு மகன் அப்பு. அவரையடுத்து சத்யா ஸ்டூடியோ பத்மநாபன்.  கே.ஏ.கே. நெருங்கி வந்து, பத்மநாபனின் தோள்களை இறுகப் பிடித்ததும், வாய்விட்டுக் கதறினார்கள் பத்மநாபனும் அப்புவும்.
ஜெயலலிதா வந்ததும்... சற்று நேரம் அப்படியே முதல்வரை உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார். கண்களில் நீர் தளும்பி நின்றது. வாய்விட்டு அழாமல் இறுக்கமாக அவர் தலைமாட்டுக்குச் சென்று நின்று​கொண்டு, யாருடைய முகத்தையும் பாராமல், எதிரே உயரத்தில் எதையோ வெறித்துப் பார்த்தபடி நின்றார் ஜெயலலிதா. அவரது கைகள், முதல்வரை வைத்திருந்த ஸ்ட்ரெச்சரின் இரும்புக் குழாய்களை இறுகப் பற்றி இருந்தன. ஜெயலலிதாவுக்கு எதிராய் முதல்வரின் கால்மாட்டில் ஆர்.எம்.வீரப்பன் நின்றார்.
முதல்வரின் உடல் ராஜாஜி மண்டபத்துக்கு வந்து சேர்ந்த பின்னும், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்​படும் சரிவான மேடை, தயாரித்து முடியவில்லை. அப்​போதும் மாலை, பூக்கள் மண்டபத்துக்குள் வந்து சேரவில்லை.
தலைமாட்டில் நின்ற ஜெயலலிதா, முதல்வர் முகத்தையே உற்றுப் பார்ப்பதும், பின்னர் எங்கோ தூரத்தில் வெறித்துப் பார்ப்பதுமாய் இருந்தார். தன் கர்ச்சீப்பால் முதல்வரின் முகத்தை அடிக்கடி சரிசெய்து​கொண்டு இருந்தார்.
ராமாவரம் தோட்டத்தில் இருந்து வந்திருந்த முதல​மைச்சரின் உறவினர்கள், மண்டபத்தின் ஓர் ஓரத்தில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தனர். சற்று நேரத்துக்குள் ஒவ்வொருவராக முண்டியடித்துக்கொண்டு ராஜாஜி மண்டபத்துக்குள் நுழையவும், நெரிசல் அதிகமானது. ஓர் அதிகாரி ஓடி வந்து அமைச்சர்களிடம், ''கூட்டம் கூடுகிறது, இந்த ஹால் தாங்காது...'' என்று முறையிட்டார். அதற்குள் பொதுமக்கள் பார்வைக்கான மேடை தயாராகிவிட்ட தகவல் கிடைத்தது. முதல்வர் படுத்திருந்த ஸ்ட்ரெச்சரைச் சுற்றி அமைச்சர்கள் சூழ்ந்து மெள்ளத் தூக்கினர். ஜெயலலிதாவும் நின்ற இடத்திலிருந்தே ஸ்ட்ரெச்சரின் தலைப் பகுதியை ஏந்திப் பிடிக்க, பொதுமக்கள் பார்வையிட சரிவான மேடையில் கிடத்தினார்கள். ஜெயலலிதா அங்கும் முதல்வரின் தலைமாட்டிலேயே நின்றார்.
முதல்வரின் உடலைப் பார்த்ததும், வெளியே காத்திருந்த கூட்டம் கொந்தளித்தது. ஆண்களும் பெண்களும் வாயில் அடித்துக்கொண்டு அலறினர். இரண்டு பெண்கள் அந்த இடத்திலேயே மயங்கிச் சரிய, காவலர்கள் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினர். அழுகையும் கூக்குரலும் ஒரே இரைச்சலாய் இருந்தது. வெள்ளை நிற பேன்ட் சட்டையில் இருந்த ஓர் இளைஞர், போலீஸ் தடுப்பை மீறி உள்ளே வர முயற்சித்தார். அது முடியாமல் போகவே, கிடத்தப்பட்டு இருந்த முதல்வரின் உடலைக் கீழே நின்றபடி சில நொடிகள் அண்ணாந்து பார்த்துவிட்டு, தடுப்புக் கட்டைகளின்மேல் தன் நெற்றியால் மாறி மாறி முட்டிக்கொண்டார். நெற்றி பிளந்து அவருடைய மார்புப் பகுதி வரை ரத்தம் பீறிட்டது. அதையும் பொருட்படுத்தாமல், கைகளை நீட்டி, ''தலைவா,! போயிட்டியா... நீ போயிட்டியா...'' என்று கதறியபடி மீண்டும் முன்னேற முயன்றார். அவரைத் தடுத்த காவலர்களின் காக்கி யூனிஃபார்மிலும் ரத்தக் கறை படிந்தது.
- தொடரும்