Aug 19, 2014

நலம் '360 9,10,11,12,13,14

அலர்ஜி.. நலம்36*

லர்ஜி... சமீபமாக உடல்நலம் குறித்த உரையாடலில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயம்! 'எனக்குக் கத்திரிக்காய் அலர்ஜி... கருவாடு அலர்ஜி... கடலை அலர்ஜி...’ என ஆரம்பித்து, மாடிக் காற்று அலர்ஜி, பருவ மழை அலர்ஜி என ஒவ்வாமைக்கான காரணங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 'குழந்தைக்கு பால் அலர்ஜியாம். அதனால் நான் இப்போ தாய்ப்பால் கொடுக்கிறதே இல்லை..’ என்பது இந்தப் பட்டியலில் பதறவைக்கும் பயங்கரம். உலக அளவில் இந்த அலர்ஜி பிரச்னை குழந்தைகளை அதிகம்  படுத்துவதாக, குறிப்பாக வளர்ந்த நாடுகளான அமெரிக்க, ஐரோப்பிய தேசங்கள் புலம்புகின்றன.
சாதாரண மூக்கடைப்பு, தும்மல், கண்ணிமைக் கசக்கல் எனத் தொடங்கி, சில நேரங்களில் தடாலடியாக உதடு, முகம் வீங்குவது, சிறுநீர் தடைபடுவது, மூச்சிரைப்பு... என நபருடைய நோய் எதிர்ப்பாற்றலைப் பொறுத்தும், அவர் சாப்பிட்ட, முகர்ந்த பொருளைப் பொறுத்தும் அவதாரம் எடுக்கும் இந்த அலர்ஜி, சில நேரங்களில் Anaphylactic shock எனும் தடாலடி மரணத்தைக்கூட தரும் அபாயம் உடையது. இந்த ஒவ்வாமையால், பின்னாளில் ஆஸ்துமா, சைனசைடிஸ், எக்சிமா போன்ற பல நோய்களை வரவழைக்கும் வாய்ப்பும் உண்டு. ஒவ்வாமையால் வரும் தோல் நோயான ATOPIC DERMATITIS, வெளிநாட்டில் பிறக்கும் இந்தியக் குழந்தைகளை வாட்டும் மிக முக்கியமான தோல் அலர்ஜி தொந்தரவு. கடந்த 10 ஆண்டுகளில் இந்த நோய்க்கூட்டம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
துடைப்பத்தை வைத்துப் பெருக்கி, தூசி தட்டிய காலத்தில் இந்த அலர்ஜி பிரச்னை அவ்வளவாக இல்லை. 'குனியாமல் நிமிராமல் வீட்டுக் குப்பையை உறிஞ்சி சுத்தம் செய்யலாம்’ என மோட்டார் துடைப்பத்தை வாங்கிய பின், 'எங்க மிஸ் சொன்னாங்க’ என, குழந்தைகள் மணிக்கு ஒரு தடவை கைகளை சானிடைசர் வைத்துக் கழுவ ஆரம்பித்த பின், சாணம் கரைத்து முற்றம் கழுவித் துடைத்ததை மறந்து, தொலைக்காட்சி சேனல் விளம்பரங்கள் பரிந்துரைத்த கலர் கலர் ரசாயனக் கலவைகளால் தரையை மெழுகத் தொடங்கிய பின், 'நாங்க உலகத் தரக்கட்டுப்பாடுகளில் ஒன்றுவிடாமல் பின்பற்றுகிறோமாக்கும்’ என உதார்விட்டு விற்கப்படும் உணவுப் பண்டங்களால் சந்தையை நிரப்பிய பின்... 'அலர்ஜி’ அதீதப் பயம் காட்டுகிறது. ஏன்?
'சுத்தம் சோறு போடும்’ என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு 'அதிதீவிர சுத்தம் சொறி, சிரங்கை உண்டாக்கும்’ என்பதும் உண்மையோ என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறது மேலை நாட்டு அறிவியல். செயல்திறன் முடக்கப்பட்ட கிருமிகளை தடுப்பூசிகளாக உடலுக்குள் செலுத்தி, அதற்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை எப்படி உருவாக்குகிறார்களோ, அதேபோல நம்மைச் சுற்றி இருக்கும் நுண்ணுயிரிகளில் சேட்டைக்காரருக்கு எதிராக மட்டும் வேலி கட்டும் வேலையை, நம் உடல் தானாகவே செய்துவிடும். ஆனால், அது புரியாமல் நுண்ணுயிரிகளின் வாசம் படாமல், 'இன்குபேட்டர் கவனிப்பில்’ குழந்தைகளை வளர்க்கும்போது, அவர்களது நோய் எதிர்ப்பாற்றல், யார் எதிரி எனத் தெரியாமல் கன்னாபின்னாவென வாள் சுழற்றத் தொடங்குவதே அலர்ஜி பெருக்கத்துக்கான அடிப்படைக் காரணம். அதனால்தான், அமோனியாவைப் பார்த்தால் மூச்சை இறுக்கி அதனை உடம்புக்குள் நுழையாது தடுக்கவேண்டிய நோய் எதிர்ப்பாற்றல், ஆற்று மீனுக்கும், கடலை உருண்டைக்கும், காற்று, தூசிக்கும்கூட மூச்சை இறுக்கத் தொடங்குகிறது.
'அது சரி... 'அதிசுத்தமாக’ இல்லாதவர்களுக்கும் அலர்ஜி வருகிறதே’ என்று கேட்கிறீர்களா? சரிவிகித உணவு சரியாகக் கிடைக்காதவருக்கும், சாப்பிடாதவருக்கும் அலர்ஜி அட்டூழியம் அதிகம். அதற்கு மிக முக்கியமான காரணம், 'எங்கள் நாட்டுக் குப்பைகள், உங்கள் நாட்டின் ஏதேனும் ஒரு மூலையில் கொட்டப்படும்’ என வளரும் நாடுகளுடன் வளர்ந்த நாடுகள் போடும் வணிக ஒப்பந்தங்களும் ஒரு காரணம். சூழல் சிதைவைத் தரும் கண்ணாடி கம்பெனி, கார் கம்பெனி, கலர் கலரான சாயப்பூச்சைப் பயன்படுத்தும் உள்ளாடை தயாரிப்பு கம்பெனி, துருப்பிடிக்காமல் இருக்க இயந்திரங்களுக்குப் பூச்சு போடும் கம்பெனி, அணுவைப் பிளக்கும் கம்பெனி, அணுவை அளக்கும் கம்பெனி... என அத்தனை கம்பெனிகளையும், 'வேலைவாய்ப்பு வருது; அந்நிய செலாவணி வருது; அழகழகான கட்டடம் வருது’ என்று சொல்லி இங்கே செயல்பட அனுமதிப்பதும் பிரதான காரணம். விவசாய நிலங்களைப் பறித்து அவர்களுக்குக் கொடுத்து, 'இங்கே வரி கட்டாமல் நீங்க ஆட்டம் போடுங்க. காலத்துக்கும் உங்களுக்குக் கூலிக்கு வேலை பார்க்க அழுக்கு வேட்டிப் பாமரனில் இருந்து, ஆடி கார் அறிவாளி வரை நாங்கள் தருகிறோம்’ என்று சொல்லி சிவப்புக் கம்பளம் விரிக்கிறோம். அவர்களும் சத்தமே இல்லாமல் நம் தாய் மண்ணில், காற்றில், நீரில் நச்சுக்களைக் கலக்க, அது அலர்ஜியை பல வடிவங்களில் பரிசளிக்கிறது.

ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லியையும் அள்ளித் தெளித்ததில் உணவு, காய்-கனி கூட்டம் அத்தனையிலும் நச்சுத்துணுக்குகள். போதாக்குறைக்கு வாசம் தர, வேஷம் கட்ட, வணிகப் போட்டியில் பிற சின்ன வணிகர்களை நசுக்க என, ரசாயனம் கலந்த நச்சு உணவுகளை வீதிவீதியாக விற்கும் பன்னாட்டுத் துரித உணவகங்கள் வேறு. விளைவு..? அத்தனை காய்-கனிகளிலும் அலர்ஜி அளிக்கும் சாத்தான்கள்.
சூழல் அழுத்தத்தில் கடைசிக் குரங்கில் இருந்து முதல் மனிதன் வருவதற்கு, 1.2 மில்லியன் ஆண்டுகள் ஆனதாம். இத்தனைக்கும் இரண்டுக்கும் வித்தியாசம் 1 சதவிகிதத்துக்கும் குறைவான மரபணுக்களே. ஆனால், இன்று தவளையின் மரபணுவை தக்காளியிலும், விஷம் கக்கும் நுண்ணுயிரியின் மரபணுவை கத்திரியின் மரபணுவிலும் சில ஆண்டு ஆய்விலேயே ஒட்டி வெட்டி, 'புது ஜந்து’ படைக்கிறார்கள் கலியுக பிரம்மாக்கள். 'லேசாத்தான்யா அரிக்கும்... வேற ஒண்ணும் செய்யாது’ என எதிர்ப்பு எச்சரிக்கைகளையும் மீறி, 'ஓர் உலகம்... ஒரு கம்பெனி... ஒரே விதை’ என்ற கனவுடன் உழைக்கிறார்கள். வருங்காலத்தில் மரபணு பயிர்கள் என்னவிதமான அலர்ஜியைத் தரும் என்பதைப் பொறுத்திருந்து (இருந்தால்..?) கவனிக்க வேண்டும்.
இப்போதைக்கு அலர்ஜியின் பிடிகளில் இருந்து விலகி இருக்க ஒரே வழி, கொடூரத் தொழில்நுட்பத்தின் பிடியில் இருந்து கொஞ்சம் விலகி, இயற்கை விவசாயத்தில் விளையும் பயிர்களால் முடிந்த வரை பசியாற்றிக் கொள்வதுதான். எந்தக் காரணம்கொண்டும், லேபிளில் ஒட்டியிருக்கும் பெயர் தெரியாத ரசாயனப் பெயர்களைப் படித்துவிட்டு, 'டி.வி-யில இதைக் குடினு சொல்றவுக வெள்ளையா இருக்காங்க. சூட், கோட்லாம் போட்டிருக்காங்க. அவுக சொன்னா, சரியாத்தான் இருக்கும்’ என, பழக்கம் இல்லாத புதிய கலவை உணவை உள்ளே அனுப்பாதீர்கள். ரசாயனம் செறிந்த துரித உணவுகளும், கெமிக்கல் பூச்சுத் தெளிக்கப்பட்ட காய்-கனிகளும் குடலுக்குள் 'லைன் வீடு’ அமைத்து சந்தோஷமாகக் குடியிருக்கும் நுண்ணுயிர் கூட்டத்துக்குக் குண்டு வைக்கும். அதுவரை உடம்பின் பாதுகாவலனாக இருந்த அவை, குழம்பித் தெறித்து ஓடுவதில், ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் சில திடீரெனப் பல்கிப் பெருகும். அவை முகத்தின் எலும்புப் பதிவுகளில் கேம்ப் அடிக்கும்போது சைனசைடிஸ்; மூச்சுக்குழல் பாதையில் மணல் குன்றமைத்து குத்தவைக்கும்போது ஆஸ்துமா, தோலுக்கு அடியில் 'கொடி நடை’ நடத்தும்போது எக்சிமாவோ, அடோபிக் டெர்மடைடிஸோ?
காரத்துக்கு மிளகு இருந்த வரை, இனிப்புக்குப் பனை வெல்லமும் தேனும் இருந்த வரை, புளிப்புக்கு என நம் பாரம்பரியப் பழம்புளியான குடம் புளி இருந்த வரை அலர்ஜி இருந்ததாக மருத்துவ இலக்கியச் சான்றுகள் இல்லை. 'பத்து மிளகு இருந்தால், பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என மிளகைப் பாடியது அதன் நச்சு அகற்றும் உச்சவீரியத்தால்தான். எந்த அலர்ஜியாக இருந்தாலும் நம் முதல் தேடல் மிளகாகத்தான் இருக்க வேண்டும். அலர்ஜியை தடாலடியாக ஒருசில நிமிடங்களில் நசுக்கும் ஸ்டீராய்டுகள்போல் இல்லாமல், மிளகு மெள்ள மெள்ள நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். சீந்தில் கொடி, வரப்பு ஓரத்திலும் வேலியிலும் மிகச் சாதாரணமாக வளரும் கொடி. ஆனால், அசாதாரண அளவில் நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கி அலர்ஜி சைனசைடிஸை அறுத்தெரிகிறது என்று கண்டுபிடித்திருக்கிறது நவீன அறிவியல். அருகம்புல், நச்சு நீக்கி அலர்ஜியைப் போக்கும் எளிய புல். இது, கரப்பான் எனும் எக்சிமா நோய்க்கான சித்த மருத்துவத்தின் முதல் தேர்வு. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் இந்தப் புல்லின் சாற்றையும் சில மூலிகைகளையும் சேர்த்துக் காய்ச்சி எடுக்கப்படும் 'அருகன் தைலம்’ இந்திய மருத்துவ மருந்துகளில் மிகப் பிரபலமான மருந்து. ATOPIC DERMATITIS எனும் அலர்ஜியில் சருமத்தின் நிறம் மிகக் கறுத்து அதீத அரிப்பைத் தரும் தோல் நோய்க்கு அருகன் தைலம் இதம் அளிக்கும் இனிய மருந்து.
அலர்ஜி, அரிப்பு, தோல் நோய் உள்ளவர்கள் புளிப்பான உணவைக் குறைக்க வேண்டும். வத்தக்குழம்போ, வஞ்சிர மீன் குழம்போ ஆகாது. நார்ச்சத்தைக் நடுவில் குவித்து, விதவிதமான நிறமிச் சத்தை தோலில் சேகரித்து, சதைப்பற்றின் ஊடே சாமர்த்தியமாக பல உயிர்ச்சத்தை ஒளித்துவைத்திருக்கும் பழங்கள் அலர்ஜியில் கறுத்தத் தோலை மீட்கும் மீட்பர்கள். அதே சமயம் 
புளிப்பான ஆரஞ்சு, திராட்சையை தும்மல் உள்ளோர், கரப்பான் உள்ளோர் தவிர்க்கவும். நம் ஆயா அறிந்திராத சோயா, நம் பாட்டன் பார்த்திராத காளான் சில குழந்தைகளுக்கு அலர்ஜி தரக்கூடியன. அலர்ஜி உள்ளோர் இவற்றில் எச்சரிக்கையாக இருப்பது நலம். 'மிஸ் வேர்ல்டு’கள் மாறும்போதெல்லாம் குளிக்கும் சோப்பை மாற்றுவது உங்கள் சருமத்தின் இயல்பையும் மாற்றிவிடும்.
இன்றைக்கு சோயா, நிலக்கடலை, மீன், பால்கூட அலர்ஜியாகப் பார்க்கப்படுவதுபோல, நாளை நாம் அருந்தும் தண்ணீரும், சுவாசிக்கும் காற்றும்கூட அலர்ஜியாகக்கூடும். அப்போது தண்ணீர் தொட்டியை கையில் வைத்துக்கொண்டும், ஆக்சிஜன் புட்டியை முதுகில் கட்டிக்கொண்டும் திரியவேண்டி இருக்கும். அந்தத் தருணங்களில் கணக்குப் பார்த்து மூச்சுவிட முடியாது; காதல் களிப்பும் செய்ய முடியாது. 'இந்த உலகம் எனக்கானது மட்டுமல்ல. அனைத்து உயிர்களுக்குமானது. அவை அனைத்தையும் போற்றி மகிழவே மனிதனுக்கு ஆறாம் அறிவை இயற்கை வழங்கி இருக்கிறது’ என்ற சிந்தனையே ஒவ்வாமையை ஓரங்கட்டுவதற்கான முதல் செயல்!
- நலம் பரவும்...

சிறுதானியங்கள் அலர்ஜியை உண்டாக்குமா?
சிறுதானியங்களைச் சாப்பிட்டால் அலர்ஜி வருமா.. அரிப்பு வருமா.. தோல் நோய் தருமா? எனக் கேள்விகள் அதிகரிக்கின்றன.
சருமத்தில் உண்டாகும் ஒவ்வாமை நோயில் ஒரு வகையை 'கரப்பான்’ என்பார்கள். கரப்பான் இருந்தால் சோளம், கம்பு, திணை ஆகியவற்றை நோய் நீங்கும் வரை தவிர்க்கலாம். சித்த மருத்துவ நூல்கள்... சோளம், கம்பு, வரகு ஆகிய தானியங்களை, கரப்பான் நோய் உடையோரும், அரிப்பைத் தரும் பிற தோல் நோயினரும் தவிர்ப்பது நலம் என்கின்றன. நவீன உணவு அறிவியல், இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. நில உடைமைக்காரர்கள், 'புஞ்சை நில தானியம் உசத்தி கிடையாது’ என்று விதைத்த நெடுநாள் பொய்யை எடுத்துக்கொண்ட, இடைக்காலச் செய்தியாகவும்கூட இது இருக்கலாம். குளூட்டன் சத்து உள்ள கோதுமையையும் கோதுமை சேர்ந்த பேக்கரி உணவுகளையும் தோல் நோயினர் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.
அலர்ஜி பிரச்னை உள்ளோர் பொதுவாக புளிப்பு சுவை உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. முட்டை, மீன், கருவாடு, நண்டு, இறால் கூடாது. இறால், தடாலடி அலர்ஜியை சிலருக்கு வரவைக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் அப்படி ஓர் அலர்ஜி போக்கு இருந்தால், மேற்படி வகையறாக்களை அடுத்த தலைமுறை, கூடுதல் கவனத்துடன் நிறைய மிளகு தூவி பயன்படுத்திப் பழகலாம்.

அலர்ஜியைப் போக்க சில கைப்பக்குவங்கள்
 மேலுக்கு சோப்பு தேய்த்துக் குளிக்காமல், 'நலுங்கு மாவு’ தேய்த்துக் குளிப்பது சருமத்தை அலர்ஜியில் இருந்து காக்க உதவும்.
 வேப்பங்கொழுந்து (1 ஸ்பூன்), ஓமம் (1/4 ஸ்பூன்), மஞ்சள்தூள் (1/2 ஸ்பூன்), கருஞ்சீரகம் (1/2 ஸ்பூன்) சேர்த்து நீர்விட்டு அரைத்து உருட்டி, சுண்டைக்காய் அளவுக்கு, மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, வாரத்துக்கு ஓரு நாள் என மூன்று முறை கொடுக்க, வயிற்றுப் பூச்சி நீங்கி அரிப்பு குறையும்.
 அருகம்புல்லை (1 கைப்பிடி) ஒன்றிரண்டாக வெட்டி, 10 மிளகைப் பொடித்து, நான்கு வெற்றிலையைக் காம்பு நீக்கிக் கிழித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த மூன்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு குவளை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, அரை டம்ளராக வற்றவைத்து, பின் வடிகட்டி அந்தக் கஷாயத்தை இளஞ்சூட்டில் காலை, மாலை என 15 தினங்கள் பருகினால், 'அர்ட்டிகேரியா’ எனும் உடல் முழுக்க வரும் அரிப்பு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
( நன்றி-ஆனந்த விகடன்)

நலம் 360’ – 10

நலம் 360’ – 10

மருத்துவர் கு.சிவராமன்
 
தலைவலிக்கு 200-க்கும் மேற்பட்ட காரணங்கள். அதனால்தான் தலைவலிக்கான காரணம் தேடுவது, மருத்துவருக்கு தலைவலி தரும் விஷயம் என்பார்கள். ‘இளங்கலை மருத்துவப் படிப்புகளில் 4 மணி நேரம்தான் தலைவலியைப் பற்றி படிக்கிறார்கள். இன்னும் அதைப் பற்றி ஆழமாகப் படித்தால், உலகத்தில் 47 சதவிகிதம் பேருக்கு வருடத்தில் ஒருமுறையேனும் வதைக்கும் தலைவலியை விரட்ட உதவும். நண்பகல் 1 மணி ஷோவுக்குச் சென்று, செம போர் படம் பார்த்துவிட்டு வியர்வை கசிய, தியேட்டர் இருட்டில் இருந்து சுள்ளென அடிக்கும் வெயிலில் தலைகாட்டும்போது தலை வலிக்கும். கொஞ்சம் மோர் குடித்து ஒரு மணி நேரம் உறங்கினால், அந்தத் தலைவலி நீங்கும். ‘கொஞ்ச நாளாவே தலை வலிச்சுட்டே இருக்கு டாக்டர்’ என மருத்துவரிடம் சொன்னால், முழங்கையில் துணி கட்டி, பிரஷர் பார்ப்பார். அது லேசாக எகிறி இருக்க, அதற்குப் பின்னதான ரத்த சோதனையில் உப்புக்கள் ஓரவஞ்சனை காட்டியது புரியும். பிறகு, சிறுநீரக டாப்ளர் ஸ்கேன் செய்கையில் தலைவலிக்குக் காரணம், சிறுநீரகத்துக்குப் போகும் ரத்தக்குழாய் சுருக்கம் எனத் தெரியவரும். அப்போதுதான் நீண்ட மருத்துவம் அவசியப்படும்.

‘காதலிச்சப்போ ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ஜெனிலியா மாதிரி இருந்த பொண்ணு, இப்போ ‘முதல் மரியாதை’ வடிவுக்கரசி மாதிரி ஆகிட்டாளே’ என எப்போதும் மனைவி பற்றி பொருமுவார்கள் ஆண்கள். அதே சமயம், ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆர்யா மாதிரி நம்மைச் சுத்திச் சுத்திக் காதலிச்சானே… இப்போ

‘நான் கடவுள்’ ஆர்யா மாதிரி ஆகிட்டானே’ எனக் குழம்பிப் புலம்புவார்கள் மனைவிகள். ‘ஒண்ணு… உங்களுக்குக் கொடுத்த டார்கெட்டை முடிங்க. இல்லைனா பேப்பரைப் போட்டுட்டு ஒரேயடியாக் கிளம்புங்க!’ என்று அலுவலகத்தில் அல்லோலகல்லோலப்படுவார்கள் ஊழியர்கள், ‘அதுக்குள்ள ஒரு மாசம் ஆயிடுச்சா? இன்னும் ரெண்டு நாள்… வலியில செத்தேன்’ என மாதவிடாய் சமயத்தில் பதறும் பெண்கள்… என சமூகத்தின் பல தரப்புக்கும், தலைவலி என்பது அவர்களின் அன்றாடங்களைச் சிதைக்கும் பிரச்னை.

சாதாரண தலைவலிக்கு தேவை இல்லாமல் எடுக்கப்படும் சோதனைகள் இப்போது ஏராளம்.இது சாமான்யனின் புலம்பல் அல்ல. JAMA INTERNAL MEDICINE எனும் பிரபல மருத்துவ இதழும் இதே கருத்தைச் சொல்கிறது. தலைவலிக்காக எடுக்கப்படும் ஸ்கேன்களில் 13 சதவிகிதம் மட்டுமே, ஏதேனும் அசாதாரண முடிவுகளைக் காட்டுகின்றன. அந்த அசாதாரணங்களும்கூட பெரும்பாலும் மூளைக்கட்டி அல்லது மூளை ரத்தக்கசிவு போன்ற அபாயங்களைக் காட்டுவது இல்லை. சமயங்களில் தலைவலிக்குப் பார்த்த ஸ்கேனில், கொஞ்சம் சைனசைட்டிஸ் தெரியும். கொடுத்த காசுக்கு இதாவது தெரியவந்ததே எனத் திருப்தியடைகிறார்கள் அப்பாவிகள். விபத்துகளின்போது எடுக்கப்படும் மூளை ஸ்கேன்களைத் தவிர, தலைவலிக்கு என எடுக்கப்படும் ஸ்கேன்களால் பெரும்பாலும் பிரயோஜனம் கிடையாது.

‘தலைவலிக்கான காரணிகளைச் சரியாகக் கணித்து மருத்துவம் செய்ய வேண்டுமே தவிர, ஸ்கேனிங் செய்வது சரியான தீர்வு அல்ல’ என்கிறார் Headaches: Relieving and preventing migraine and other headachesஎனும் மருத்துவ நூலின் ஆசிரியரும் பிரபல நரம்பியல் மருத்துவருமான ஸ்பெய்ரிங்க்ஸ். ஆதலால், இனியேனும் ‘ஆடித் தள்ளுபடி விலையில் அட்டகாச ஸ்கேனிங்’ விளம்பரங்களுக்கு இரையாக வேண்டாம். உங்களை நன்கு அறிந்த குடும்ப மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே ஸ்கேன் செய்வது பற்றி தீர்மானியுங்கள். ஏனெனில், தேவையற்ற ஸ்கேன் விடும் எக்ஸ்ரே கதிர்கள் அநாவசியமாக மூளைக்குள் ஊடுருவது அவ்வளவு நல்லது அல்ல. ஒரு எக்ஸ்ரேயின் ஓரிரு விநாடி கதிர்வீச்சுக்கும், மூன்று நிமிட சி.டி ஸ்கேன் கதிர்வீச்சுக்கும் பெரும் அளவு வேறுபாடு உண்டு. உங்களைச் சுற்றி இருக்கும் மின்னணுப் பொருட்களின் மூலம் நீங்கள் இரண்டு வருட காலத்தில் சராசரியாக எதிர்கொள்ளும் கதிர்வீச்சின் அளவை, ஒற்றை சி.டி ஸ்கேன் தரக்கூடும்.

ரொம்பவே மூக்கு அடைத்து, தும்மலுடன், முகம் எல்லாம் நீர் கோத்து வரும் சைனசைட்டிஸ் தலைவலி சிறார்களுக்கும் யுவதிகளுக்கும் அதிகம். முக எலும்பின் சைனஸ் பகுதிகளில் நீர் கோத்து, கொஞ்ச நாளில் சீழ் கோத்து வரும் இந்த சைனசைடிஸ் தலைவலியைப் போக்க, நீர்க்கோர்வை மாத்திரையை நம்மவர்கள் பயன்படுத்திய வரலாறும் உண்டு. மஞ்சள், சுக்கு வகையறாக்களைச் சேர்த்து அரைத்து உருட்டிய அந்த மாத்திரையை நீரில் குழைத்து நெற்றியில், மூக்குத்தண்டில், கன்னக் கதுப்பில் தடவி, ஓர் இரவு தூங்கி எழுந்தால், தலைவலி காணாமல்போகும். கூடவே நொச்சித்தழை போட்டு ஆவி பிடிப்பது, இரவில் மிளகு கஷாயம் சாப்பிடுவது ஆகியவையும் தலைவலியைத் தீர்க்கும் வாழ்வியல் கலாசாரம். கூடவே, சீந்தில் சூரணம் முதலான சைனசைடிஸ் தலைவலியைப் போக்க சித்த மருந்துகள் ஏராளம் நம்மிடம் உண்டு. சீந்தில் கொடியை, சித்த மருத்துவத்தின் மகுடம் எனலாம். நீர்கோத்து, மூக்கு அடைத்து, முகம் வீங்கவைக்கும் சைனசைட்டிஸ் தலைவலிக்கு, சும்மாங்காட்டி அப்போதைக்கான வலி நீக்கும் மருந்தாக இல்லாமல், பித்தம் தணித்து மொத்தமாக தலைவலியை விரட்டும் அமிர்தவல்லி அது.

தலைவலி வராதிருக்க நம் வாழ்வியல் சொன்ன மிக முக்கியப் பக்குவம் எண்ணெய்க் குளியல். ‘அட… தலைக்குச் சும்மாவே குளிக்க முடியலை. இதுல எண்ணெய்க் குளியல் வேறயா?’ என்போருக்கு ஒரு சேதி. சைனசைட்டிஸோ, மைக்ரேனோ வாரம் இரு முறை சுக்கு தைலம் தேய்த்துக் குளித்துப் பாருங்கள். வலி மெள்ள மெள்ள மறைவது புரியும். பொதுவாக, வலிக்கு என மாத்திரைகள் அதிகம் எடுப்பது வயிற்றையும் குடலையும் புண்ணாக்கி, பின்னாளில் ஈரலும் சிறுநீரகமும் பாதிக்கும். குண்டூசியாகக் குத்தும் மைக்ரேன் தலைவலியைத் தீர்க்க முடியாமல் தற்கொலை வரை சிந்திப்போரும் உண்டு. அந்த நேரத்தில் வெளியில் கொஞ்சம் சத்தமாக அடிக்கும் ஹாரன், செல்லக் குழந்தையின் சின்னச் சிணுங்கல், கணவரின் அகஸ்மாத்தானக் கேள்வி, ஜன்னல் வழி பளீர் வெளிச்சம் எல்லாமே அவர்களை ஆங்கார ரூபி ஆக்கும்.

மைக்ரேன் எனும் இந்தப் பித்தத் தலைவலிக்கு இஞ்சி ஓர் அற்புத மருந்து. சில நேரங்களில் நவீன வலிநிவாரணிகளைக் காட்டிலும் சிறந்த தேர்வாக இருக்கும் இஞ்சி, மைக்ரேனைக் கொஞ்சிக் குணமாக்குகிறது என, பல மருத்துவக் கட்டுரைகள் சான்று அளிக்கின்றன. சனிக்கிழமையானால் சுக்கு வெந்நீர் சாப்பிட்டு வந்தவர்கள் நாம். இப்போது சனிக்கிழமையானால் புதுசாகத் திறந்த ஹோட்டலில், பழசாகச் செய்த உணவைத் தின்றுவிட்டு வருபவர்கள் ஆகிவிட்டோம். விளைவு… பித்தம் கூடி, அது மைக்ரேன் தலைவலியில் கொண்டுவிடுகிறது. இது வராதிருக்க சாதாரண இஞ்சித் தேனூறல், இஞ்சி ரசாயனம் என நம் பாட்டிகள் பேட்டன்ட் செய்யாத பொக்கிஷம் நம் கைவசம் இருக்கிறது! (செய்முறை விவரம் பெட்டிச் செய்தியில்)

மூன்று வயசு பாப்பா, ‘லைட்டா தலைவலிக்குது மிஸ்’ எனப் பள்ளியில் சொல்ல, அங்கு இருந்து வந்த தகவலில் அலுவலக வேலையைப் பாதியில் போட்டுவிட்டு அரக்கபரக்க ஓடி, குழந்தையை வீட்டுக்குக் கூட்டிவந்தால், ‘அப்பா… உன் செல்போன் குடு. கேம்ஸ் விளையாடணும்’ எனச் சொல்லும் குழந்தையைப் பார்க்கையில் நமக்கு தலைவலிக்கும். பொதுவாக குழந்தைகள் அன்பான அரவணைப்பை எதிர்பார்த்து தலைவலி, வயிற்றுவலி எனச் சாக்கு சொல்வதும் உண்டு. ‘அடடா… உன்னை தீம் பார்க் கூட்டிட்டுப் போகலாம்னு இருந்தேனே… தலை வலிச்சா வேண்டாம்’ எனச் சொல்லிப் பாருங்கள். குழந்தைகளின் தலைவலி சட்டெனக் காணாமல்போகும். ஆனால், இந்த மாதிரியான காரணங்கள் இல்லாமல் குழந்தைகளுக்கு அடிக்கடி தலை வலித்தால், பார்வைத்திறன், வயிற்றுப்பூச்சிகள், காது-தொண்டைப் பகுதிகளில் சளி என அவற்றை உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி சரிசெய்ய வேண்டியிருக்கும். இருசக்கர வாகனத்தில் அதிகம் பயணிக்கும் நபருக்கு, கழுத்து எலும்பின் தேய்வில் அல்லது அந்தப் பகுதி முதுகுத்தண்டுவடத் தட்டின் மிக லேசான விலகல் அல்லது வீக்கத்தில்கூட பின் மண்டை வலிக்கலாம். இதற்கு சரியான இயன்முறை சிகிச்சை, வர்ம சிகிச்சை, எண்ணெய்ப் பிழிச்சல் என்ற புற மருத்துவ முறைகளே போதும்.

வயதானவருக்கு வரும் நாள்பட்ட மைக்ரேன் தலைவலியை அலட்சியப்படுத்தக் கூடாது. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ரத்தக்கொழுப்பு பாதித்தவர்களுக்கு வரும் தலைவலி குறித்தும் கூடுதல் எச்சரிக்கை தேவை. மிகச் சாதாரணமாகத் தலைவலியை நாம் அலட்சியப்படுத்துவது, ரத்தக்கொதிப்பு நோயில்தான். காலையில் எழுந்தவுடன் தலை வலித்தால் ரத்த அழுத்த அளவைத்தான் முதலில் பரிசோதிக்க வேண்டும். நிறையப் பேர், வலியாகக் காட்டும் இந்த உடல்மொழியைக் கவனிக்கத் தவறவிட்டு, தடாலடியாக பக்கவாதம் வரும்போதோ, மாரடைப்பு தாக்கும்போதோதான், ‘அடடா… அப்போ அதுக்குத்தான் தலை வலிச்சதா?’ என யோசிப்பது உண்டு.

தூசி, புகை, காற்றோட்டம் இல்லாத புழுக்கம், அதிக வெளிச்சம், பசி, தண்ணீர் குறைவு, தாழ் சர்க்கரை, சோர்வு, சரியான இருக்கையில் உட்காரத் தவறுவது, மனப் பதற்றம், மன அழுத்தம், கவலை… என, தலைவலிக்குப் பல பின்னணிகள் உண்டு. ஆனால், அத்தனையும் பெரும்பாலும் முழுமையாகக் குணப்படுத்தக்கூடியவை. தலைவலி என்றவுடன் கூகுள் டாக்டரிடம் குசலம் விசாரித்தால், அது அஸ்ட்ரோசைட்டோமா, கிளையோமா போன்ற புற்றுத்தலைவலி விவரங்களைத் தந்து கலவரப்படுத்தும். பயப்படாதீர்கள். ‘போன மாசம் ப்ளஸ் டூ எழுதினானே பையன்… என்ன மார்க் வாங்கினான்? பொண்ணுக்கு எப்போ கல்யாணம்? வேலை… வேலைனு அலைஞ்சது போதும்… வீட்ல எல்லாரையும் கூட்டிட்டு நாலு ஊருக்குப் போயிட்டு வாங்க!’ எனக் கொஞ்சம் மருந்தோடு கூடுதல் கரிசனம் காட்டும் உங்களை நன்கு அறிந்த குடும்ப மருத்துவரிடம், வலியை விவரியுங்கள். உங்களின் எந்தத் தலைவலிக்கும் பூரண குணம் நிச்சயம்!

- நலம் பரவும்…

தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள்!

* 6-7 மணி நேரமாவது தடை இல்லா இரவு நேரத் தூக்கம் கிடைத்திடாதபோது…

* ‘இன்னைக்கு மதியம் 12 மணி முதல் சாயங்காலம் 6 மணி வரை தூங்குங்க. நாளைக்கு காலையில 6 மணி முதல் மதியம் 1 மணி வரை தூங்கலாம்’ என, பன்னாட் டுக் கணினி கம்பெனி சொல்பேச்சுக் கேட்டு, மாறி மாறித் தூங்கும் போது…

* காற்றோட்டமான வசிப்பிடம் இல்லாதபோது…

* தொல்பொருள் ஆய்வாளரிடம் சிக்கிய ஓலைச்சுவடிபோல, பர்ஸில் வைத்திருக்கும் 15 வருடங்களுக்கு முந்தைய பிரிஸ்கிரிப்ஷனை வைத்துக்கொண்டு, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடும்போது…

* சிங்கப்பூரில் சீப்பாகக் கிடைக்கும் என வாங்கிவந்து பரிசளிக்கப்பட்ட ‘சென்ட்’டை கக்கத்திலும் கைக்குட்டையிலும் விசிறிக்கொள்ளும்போது… 

* ஊட்டி, கொடைக்கானலில், ஊர்சுற்றலில், பொட்டிக்கடையில் விற்கும் குளிர் கண்ணாடிகளை வாங்கி மாட்டிக்கொண்டு உலவும்போது…

* பாராட்டாகக் கொஞ்சம் புன்னகை, பரவசப்படுத்தும் உச்சி முத்தம், பரிதவிப்பை ஆசுவாசப்படுத்தும் அரவணைப்பு… இவை எதுவும் எப்போதுமே இல்லாதபோது…

தலைவலிக்கான தீர்வுகள்…

*அடிக்கடி வரும் மைக்ரேன் தலைவலிக்கு, அதிமதுரம், பெருஞ்சீரகம் (சோம்பு), ஹைட்ரேஸ் சேர்க்காத நாட்டுச்சர்க்கரை கலந்த ஒரு டம்ளர் பால் உடனடித் தீர்வு தரும்.

* சீந்தில், சுக்கு, திப்பிலிப் பொடியை மூன்று சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து முகர்ந்தாலே தலைவலி போகும் என, ‘திருவள்ளுவ மாலை’ எனும் நூல் குறிப்பிடுகிறது. இந்த மூன்று பொருட்களும் சைனசைட்டிஸ், மைக்ரேன் மற்றும் மன அழுத்தத் தலைவலிக்கான தீர்வை உடையன என நவீன அறிவியல் சான்றையும் பெற்றவை. முகர்ந்தால் மட்டும் போதாது… சாப்பிடவும் செய்ய வேண்டும்.
* அஜீரணத் தலைவலி, இரவு எல்லாம் ‘மப்பேறி’ மறுநாள் வரும் ஹேங்-ஓவர் தலைவலிக்கு சுக்கு, தனியா, மிளகு போட்டு கஷாயம் வைத்து, பனைவெல்லம் கலந்து குடித்தால், தலைக்கு ஏறிய பித்தம் குறைந்து தலைவலி போகும்.

* இஞ்சியை மேல் தோல் சீவி சிறுதுண்டுகளாக்கி, தேனில் ஊறவைத்து தினமும் காலையில் அரை ஸ்பூன் சாப்பிட்டால், மைக்ரேனுக்குத் தடுப்பாக இருக்கும். இதுதான் இஞ்சித் தேனூறல்.

* இஞ்சி, சீரகம் இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து, அந்தக் கூட்டுக்குச் சம அளவு ஆர்கானிக் வெல்லம் கலந்தால், இஞ்சி ரசாயனம் தயார். சாப்பாட்டுக்குப் பின் இதை அரை ஸ்பூன் சாப்பிடுவது அஜீரணத் தலைவலியைத் தவிர்க்கும்!

நலம் 360’ – 11

போலா… உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் புதிய தொற்றுநோய். மரணித்த காட்டு வெளவால்களிடம் இருந்தும், சிம்பன்சி யிடம் இருந்தும் மனிதனுக்குள் எபோலா நுழைந்ததாகக் கருதப்படுகிறது. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் எனக் கடந்த சில வருடங்களில் கொத்துக்கொத்தாக மரணங்களைத் தந்துவிட்டுப்போன, தொற்றுநோய்களைப்போல இந்த வைரஸால் வரும் நோயும் அதிக மரணங்களைத் தரும் என, உலக சுகாதார நிறுவனம் கடுமையாக எச்சரிக்கிறது.
உலகை ஆள்வதாக நினைத்துக்கொண்டிருக்கும் மனிதனுக்கு, இதுபோன்ற தொற்றுநோய்கள்தான் அவ்வப்போது மரண பயத்தைக் காட்டிவிட்டுச் செல்கின்றன. இதற்கு முன் வரலாற்றின் பதிவுகளில் மிக மோசமாகப் பதிவுசெய்யப்பட்ட தொற்றுநோய் பிளேக். 14-ம் நூற்றாண்டின் மத்தியில் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையே 450 மில்லியனாக இருந்தபோது, 75 மில்லியன் சீன, ஐரோப்பிய மக்களை பிளேக் நோய் வாரிச்சுருட்டிக் கொண்டுபோனது. அதை ‘கறுப்பு மரணம்’ என்கின்றனர். அந்த பிளேக்தான், உலகில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய தொற்றுநோய். அதன் பிறகு காலரா, எய்ட்ஸ்… என ஏகப்பட்ட தொற்றுநோய்கள் மனிதனை மிரட்டிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும், மனிதன் அடங்குவதாக இல்லை.
சரி, வெடித்துக் கிளம்பினால் வீரியமாகப் பரவும் இந்தத் தொற்றுநோய்களை எப்படி எதிர்கொள்வது? அதை அந்தந்தச் சூழ்நிலைகள்தான் முடிவுசெய்யும் என்றாலும், பொதுவாக நமது உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை எப்போதும் உச்சத்திலேயே வைத்திருக்கவேண்டியது மிக அவசியம். சூழல் சிதைவு, மருந்து விற்பனை உத்திகள் என தொற்றுக்குப் பின்புறம் அரசியல், இன்னும் பிற இத்யாதிகள் இருக்கட்டும். நம் தினசரி வாழ்வியலையே உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை ‘ரீசார்ஜ்’ செய்தபடியே இருக்கும் வகையில் அமைத்துக்கொள்வதே நல்லது. பெருவாரியாக உடல் உழைப்பு குறைந்த நிலையில், ஒவ்வோர் உணவோடும் வணிக ரசாயனம் ஒட்டிக்கொண்ட இன்றைய நவீன வாழ்வியலில், நோய் எதிர்ப்பு ஆற்றல் வீரியம் இழக்கிறது என்பது ஊர்ஜிதமான உண்மை. அதை மீட்டு எடுக்க சில சின்னச் சின்ன அக்கறைகளே போதும்.

அனைவருக்குமான அக்கறை:
அறுசுவைகள் சேர்ந்த உணவு, அன்றாடம் அளவாக இருப்பது ஆரோக்கியத்தின் அடிப்படை. பாரம்பர்ய உணவு அப்படித்தான் பரிமாறப்பட்டது. காளமேகப் புலவர் பதிவில் வரும், ‘கரிக்காய் பெரித்தாள், கன்னிக்காய் வாட்டினாள், பரிக்காய் கூட்டினாள், அப்பக்காய் துவட்டினாள்’ என்ற செய்தியில் சொல்லப்பட்டவை வெறும் காய்கறிகள் பெயர் மட்டும் அல்ல. அன்றைய உணவில், துவர்ப்பான அத்தி, புளிப்பும் துவர்ப்புமான மாங்காய், துவர்ப்பும் இனிப்புமான வாழைக்கச்சல், கசப்பும் துவர்ப்புமான கத்திரிக்காய், இவற்றை சமைக்கையில் துளி கடல் உப்பு… என அனைத்து சுவைகளும் கலவையாக இருந்தன என்பது தெரியவருகிறது. ஆனால், இன்று அதே உணவு, ‘கேவண்டிஷ்’ வாழை, ‘கார்பைடு கல்’லால் பழுத்த அல்போன்சா மாம்பழம், ‘பி.டி’ கத்திரி, ‘அயோடைஸ்டு’ உப்பு என உருமாறிவிட்டது. இதை நாம் உண்ணும்போது நோய் எதிர்ப்பு ஆற்றல் வருமா… அல்லது நோய் வருமா… என அவற்றைப் படைத்தவர்கள்தான் பதில் அளிக்க வேண்டும்.
உணவில் கசப்பும் துவர்ப்புமான சுவைகளை நம்மில் பலர் மறந்தேவிட்டோம். இவை இரண்டும் அன்றாடம் ஏதேனும் ஓர் உணவில் இருப்பது, நோய்க்கு எதிரான இயற்கைக் கேடயத்தை எந்த நேரமும் அணிந்திருப்பதற்குச் சமம். அதிக கசப்பைத் தரும் நிலவேம்புக்குள் டெங்கு ஜுரத்தை மட்டுப்படுத்தும் கூறு ஒளிந்து இருக்கிறது. பன்றிக் காய்ச்சலுக்கு இன்றளவில் ஒரே மருந்தான டாமிஃப்ளூ தயாரிக்கப் பயன்படும் SAI அமிலம், பிரியாணிக்குப் போடும் அன்னாசிப் பூவின் கசப்புக்குள் ஒளிந்திருக்கிறது. புற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றல் தரும் கசப்பும் துவர்ப்புமான ஃபீனால்கள், பால் சேர்க்காத பச்சைத் தேநீரில் கலந்திருக்கிறது. காச நோய்க்கும், ஹெச்.ஐ.வி-க்கும் எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றல் தரும் கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு… கலந்த சத்துக்கள் நெல்லிக்காயில் நிரம்பி இருக்கின்றன. சாதாரண வைரஸ் ஜுரத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆற்றல் துளசியின் கசப்புக்கும் துவர்ப்புக்கும் இடையே இருக்கிறது.
குழந்தைகளுக்கான அக்கறை:
எந்த வெளித்தீண்டலும் இல்லாமல் ஒவ்வோர் அணுக்குள்ளும் இயல்பாகவே ஒளிந்திருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலை ‘Cell mediated immunity’ என்பார்கள். அந்த எதிர்ப்பு ஆற்றல் நன்றாக இருந்தால் தொற்றுகள் தரும் நுண்ணுயிரிகள், உடலைத் தொந்தரவு செய்வது இல்லை. ஆனால், அந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் வெள்ளை சர்க்கரை சாப்பிடும்போது, ரசாயனக்கூறுகள் சேர்க்கப்பட்ட துரித உணவுகளைச் சாப்பிடும்போது, டிரான்ஸ் கொழுப்புகள் அடங்கிய பேக்கரி, பஃப்ஸ், ஃபிங்கர் ஃப்ரைஸ் சாப்பிடும்போது செம்மையாகப் பராமரிக்கப்படுவது இல்லை என்கிறது இன்றைய அறிவியல். ஆக, குழந்தைகளை அப்படியான உணவுகளில் இருந்து விலக்கிவைப்பது தொற்றில் இருந்து காக்கும் உன்னத வழி. இயல்பிலேயே மருத்துவக் குணமுள்ள தேனில், மருத்துவக் குணமுள்ள கசப்பான, காரமான மூலிகைகளைக் கலந்துகொடுத்து குழந்தைகளை வளர்த்தவர்கள் நாம். தூதுவளைப் பழத் தேன், மாதுளைப் பழத் தேன், மிளகுத் தேன், நெல்லித் தேன்… ஆகியவை சில உதாரணங்கள். அதேபோல் குழந்தைகளுக்கு சுரசம் என மூலிகை இலைச்சாறைக் கொடுக்கும் பழக்கமும் நம்மிடையே உண்டு. கற்பூரவல்லி இலைச் சாற்றை தேனில் குழைத்து, லேசாக அனலில் காட்டி, தேன் பொங்கும்போது எடுத்து, ஆறவைத்து, அதை அவ்வப்போது அடிக்கடி சளித்தொற்று வரும் குழந்தைக்குக் கொடுக்கலாம். இதேபோல் துளசி, தூதுவளை இலையையும் கொடுக்கலாம்.
சிறப்புக் கவனிப்பு தேவைப்படுவோருக்கான அக்கறை:
சர்க்கரை/புற்று வியாதிக்காரர், சமீபமாக நோயில் இருந்து மீண்டவர்கள், கர்ப்பிணிப் பெண், குழந்தைப் பெற்ற பெண், வயோதிகர் இவர்கள்தான் தொற்றுகளுக்கு அதிகம் ஆளாகக்கூடிய ‘vulnerable group’ என்கிறது மருத்துவ உலகம். காலை/மாலை தேன் சேர்த்த, பால் சேர்க்காத தேநீர், லக்டோபாசில்லஸ் எனும் புரோபயாட்டிக் சேர்ந்த இட்லி/கம்பங்கூழ், ஆப்பத்துக்குத் தொட்டுக்கொள்ள… நோய் எதிர்ப்பு ஆற்றலை தாய்ப்பாலுக்கு அடுத்த நிலையில் தரக்கூடிய, தேங்காய்ப்பால், மதிய உணவில் ஏதேனும் ஒரு கீரை… ஆகிய உணவுப்பழக்கம் தொற்றுக்கு எதிரான பாதுகாப்புக் கவசம் ஆகும். சர்க்கரை வியாதி உள்ளவர் தவிர பிறர் இனிப்புக்குப் பதில் பனைவெல்லம், தேன் அல்லது ஆர்கானிக் நாட்டுவெல்லம் இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம். காரம் தேவைப்படும் தருணங்களில் மிளகைச் சேர்த்துக்கொள்வது, சுவையுடன் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் சேர்த்துக்கொள்வதற்கு ஒப்பானது.
வெந்தயத்தில் இருந்து 4-hydroxy isoleucine-ம், தக்காலத்தில் (அன்னாசிப் பூவுக்கான வேறு பெயர்) இருந்து SAI அமிலத்தையும், மஞ்சளில் இருந்து குர்குமினையும், தேங்காயில் இருந்து மோனாலாரினையும் உறிஞ்சி, நோய் எதிர்ப்பு ஆற்றல் மாத்திரைகள், மருந்துகளாக மாற்றி கூவிக்கூவி டாலரில் விற்கிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் பேச்சிலும் மூச்சிலும் வைத்திருந்த நாம், ‘பீட்சா ரொம்ப ஹைஜீனிக்கா தயாரிக்கிறாங்க. ரோட்டுக்கடை ஆப்பம், வடை எல்லாம் அப்படியா இருக்கு?’ எனப் பேசிக்கொண்டிருக்கின்றோம்.
அரை இடுக்கில் அரிப்பைத் தரும் பூஞ்சைத் தொற்றில் இருந்தும், அண்ட வந்த ஐந்தாறு நாட்களில் நம்மைக் கொன்றுகுவித்த பல பாக்டீரியா, வைரஸ்களில் இருந்தும் நம்மை மீட்டு எடுத்தது நவீன அறிவியலின் தடுப்பு மருந்துகளும், உயிர் எதிர் நுண்ணுயிரிகளும்தான். ஆனால், அதே எதிர் நுண்ணுயிரியை அளவு இல்லாமல், மருந்திலும் உணவிலும் தடுப்பிலும் நாம் பயன்படுத்துவது எதிர்விளைவை உண்டாக்கிவிட்டது. இன்றைக்கு காசம் முதலான நோய் தரும் பல பாக்டீரியாக்களுக்கு எதிராக எந்த ஆன்ட்டிபயாட்டிக்கும் வேலை செய்யாத DRUG RESISTANCE நிலை இந்தியா முதலான வளர்ந்த நாடுகளில் உருவாகிவருவது மிகவும் கவலைக்குரிய விஷயம்.
ஒரு இன்ச்சில் ஒரு மில்லியனுக்கும் குறைவான அளவில் உள்ள வைரஸும் சரி, கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாவும் சரி, இரை தேடித் தானாக நம்மை அணுகுவது இல்லை. சக இனத்தை அழித்து, தனது நாளைய கொண்டாட்டத்துக்கு கர்ச்சீப் போட்டுவைக்கும் காட்டுமிராண்டிக் குணமும் அவற்றுக்கு உரித்தானது அல்ல. லாபவெறிக்காக இயற்கையைச் சிதைக்கும் மனிதனின் விபரீத முயற்சிகளே அந்தக் கிருமிகளை, நுண்ணுயிரிகளைத் தீண்டித் தூண்டுகின்றன. கொள்ளை நோய் பரப்பும் கிருமிகளிடம், ‘ஏன் இந்தப் பேரழிவை உண்டாக்கு கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘அவனை நிறுத்தச் சொல்… நான் நிறுத்துகிறேன்’ என்று மனிதனைச் சுட்டிக்காட்டுமோ என்னவோ!?

நலம் 360’ – 12

முன்புபோல இளவட்டக்கல் தூக்கி, நான்கைந்து மாடுகளை விரட்டி, குதிரையில் போய் குறுக்கு சிறுத்தவளைக் கவர்ந்துவரும் கஷ்டம் எல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு இல்லைதான். ஆனாலும், சிக்ஸ்பேக் சித்ரவதை, ‘செல்லம்… தங்கம்… புஜ்ஜிம்மா’ கொஞ்சல்களுக்காக நித்திரை வதை… எனக் காதலுக்கான ஆண்களின் மெனக்கெடல்கள் இன்றும் தொடரத்தான் செய்கின்றன.
‘எனக்கு மட்டும் சொந்தம் 
உனது இதழ் கொடுக்கும் முத்தம்; 
உனக்கு மட்டும் கேட்கும் 
எனது உயிர் உருகும் சத்தம்’

போன்ற வைரமுத்து வரிகளை ‘காப்பி-பேஸ்ட்’  செய்து, வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்களில் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காதலின் சாஃப்ட்வேர் இப்படி காலமாற்றத்துக்கு ஏற்ப தரம் உயர்ந்தாலும், ஹார்டுவேர் நிறையவே பழுதாகி வருவதாக மருத்துவ ஆய்வுகள் பலமாக எச்சரிக்கின்றன.
குடும்பக் கட்டுப்பாடு பிரிவு, ஐந்து கிலோ அரிசி, 500 ரூபாய் இனாம் எல்லாம் தேவை இல்லாமலே, இயல்பாகவே மனித இனத்தின் கருத்தரிக்கும் தன்மை பல மடங்கு குறைந்துவருகிறதாம். 1 மில்லி விந்துவில் 60-120 மில்லியன் உயிர் அணுக்கள் இருந்த காலம் மலையேறி,          15 மில்லியன் இருந்தாலே பரவாயில்லை என மருத்துவம் ஆதரவு ஆறுதல் சொல்கிறது. அதிலும் பெரும்பாலானவர்களுக்கு வெளியாகும் அணுக்களில் 10 சதவிகிதம் மட்டுமே உயிர்ச்சத்து நிறைந்ததாக இருக்கிறதாம். நமக்கு முன்னால் இந்தப் பூவுலகில் பிறந்த எலி, எருமை, குரங்குகளுக்கு எல்லாம் இந்த எண்ணிக்கையும் சதவிகிதமும் பல மடங்கு அதிகமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. 31-40 வயதையொட்டிய தம்பதிகளில், 46 சதவிகிதம் பேருக்குக் கருத்தரிப்புக்கான மருத்துவ உதவி தேவை என்கிறது இந்திய ஆய்வு ஒன்று. விளைவு… தெருவுக்கு இரண்டு அண்ணாச்சிக் கடைகள் மாதிரி, ஊருக்கு ஊர் செயற்கைக் கருவாக்க மையங்கள் பெருகிவருகின்றன. என்ன ஆச்சு நமக்கு மட்டும்?
பல்வேறு காரணங்கள்… வாகனம் கக்கும் புகை, பிளாஸ்டிக் பொசுங்களில் பிறக்கும் டயாக்ஸின், இன்னும் பல காற்று மாசுக்களை கருத்தரித்த பெண் சுவாசிப்பது, அவள் வயிற்று ஆண் குழந்தையின் செர்டோலி செல்களை (பின்னாளில் அதுதான் விந்து அணுக்களை உற்பத்தி செய்யும்) கருவில் இருக்கும்போதே சிதைக்கிறதாம். ‘உணவு உற்பத்தியைப் பெருக்குகிறேன்’ என மண்ணில் நாம் தூவிய ரசாயன உர நச்சுக்களின் படிமங்கள், இப்போது நம் உயிர் அணுக்களுக்கு உலை வைக்கின்றன. பெண்கள் ஸ்ட்ராபெர்ரி இதழ் அழகு வேண்டி, தாலேட் கலந்த உதட்டுப்பூச்சு தடவுவது, முத்தமிடுவோருக்கு காதல் தந்து, கூடவே கருத்தடையும் செய்துவிடுகிறதாம்.
மறுபுறம்… சைக்கிள்ஸ்டாண்டில், குட்டைச்சுவரில், கடைசி பெஞ்சில், நண்பர்களால் நடத்தப்படும் ஆண்மை குறித்த ரகசிய டியூஷன்களில், மனசுக்குள் ஒட்டிக்கொள்ளும் விந்து குறித்த தப்பான புரிதல்களால் நொந்துதிரியும் ஆண்கள் ஏராளம்… தாராளம். ஆறரை அடி உயர ஆப்பிரிக்க ‘போர்னோ’ நடிகர்களைப் பார்த்து, ‘அவனை மாதிரி இல்லையே… எனக்கு சிறுசா இருக்கே!’ என உள்ளுக்குள் குமுறும் ஆண்மகன்கள் ஏராளம். இதுபோன்ற உளவியல் ஆண்மைக் குறைவு ஆர்ப்பரித்து வளர்வதற்கு, பாலியல் அறியாமை மிக முக்கியக் காரணம்.
இளங்காலை எதிர்பாராத முத்தத்தில் தொடங்கி, எள்ளலும், கொஞ்சலும், திமிறலும், குதூகலமும் சேர்ந்து முடிவாக நான்கைந்து நிமிடங்களில் உறவுகொள்ளும் உயிர்வித்தையை உணராது, ‘நீலப்படத்தில் அவங்க 0.45 மணி நேரமா முனகிட்டு இருக்காங்களே…  நமக்குத் துரித ஸ்கலிதம் சிக்கல் இருக்கோ?!’ எனக் குமைகிறார்கள் இளைஞர்கள். போதாததற்கு ‘சுய இன்பத்தால் சுருங்கிப்போச்சா?’ எனும் விஷ விதைகளை நள்ளிரவு டாக்டர்கள் நட்டுவைக்க, ‘அப்போ… நான் அப்பாவாகவே முடியாதா?’ என்ற கேள்விக்குள் உறைகிறார்கள். ‘ஆண்களில் சுய இன்பம் செய்பவர்கள்        99 சதவிகிதத்தினர்; மீதி  1சதவிகிதத்தினர் பொய்யர்கள்’ என்று ஆங்கிலப் பழமொழி இங்கே உங்கள் கவனத்துக்கு.
நாம் சாப்பிடும் ஒவ்வொரு வாய் உணவும் சாரம், செந்நீர், ஊன் கொழுப்பு, எலும்பு, மஞ்சை… எனப் படிப்படியாக ஆறு தாதுக்களைக் கடந்தே, ஏழாம் உயிர்த்தாதுவான சுக்கிலத்தை அடையும். அத்தனை இடர்பாடுகளையும் தாண்டி சேகரிக்கப்படும் உயிர்துளியை அநாவசியமாக வீணாக்க வேண்டாம் என்பது சித்தர்களின் கருத்து. மற்றபடி சுய இன்பம் என்பது, கொலை பாதகம் அல்ல; அன்றாட அவசியமும் அல்ல!
நள்ளிரவு தாண்டியும் மடியில் மடிக் கணினியைக் கட்டிக்கொண்டு அழும் ஐ.டி ‘இணையர்களின்’ எண்ணிக்கை எகிறிக்கொண்டேயிருக்கிறது. எப்போதுமே நெருக் கடியிலும் பயத்திலும் வாழும் அவர்களுக்கு, இரவு கண் விழிப்பால் உடலின் பித்தம் கூடி விந்து அணு உற்பத்தியைக் குறைக்கிறது. மடிக்கணினி, விதைப்பகுதிச் சூட்டை அதிகரித்து உயிர் அணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்பதையும் அவர்கள் உணர்வது இல்லை… அல்லது உதாசீனப்படுத்துகிறார்கள்.
உடலில் இதயம், மூளை போன்ற அத்தியாவசிய உறுப்புகளை எலும்புகளும் தசைகளும் பொத்திப் பாதுகாக்க, விந்து உற்பத்தி ஸ்தலமான விதைப்பையை மட்டும் உடலுக்கு வெளியே தொங்கவிட்டிருப்பதற்கு முக்கியமான காரணம், உடல் வெப்பத்தில் இருந்து 3-4 டிகிரி அது உஷ்ணம் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால், விஷயம் புரியாமல் இறுக்கமான உள்ளாடை, சருமத்தோடு ஒட்டித் தைத்ததுபோல இறுக்கமான ஜீன்ஸ்… என இயற்கையின் செட்டிங்ஸை மாற்றுவது சரியா? எள்ளு, கொள்ளுத் தாத்தாக்களின் வீரிய விருத்திக்கு, காத்தாடிய ‘பட்டாபட்டி’ உள்டவுசரும், பட்டும்படாத எட்டு முழ வேட்டியும் எந்த அளவுக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறது என்பது புரிகிறதா?
விதைப்பையில் உருவாகும் நாள அடைப்பு, சொந்த விந்துவையே பாக்டீரியாவாகப் பார்க்கும் பழுதாகிப்போன உடல் எதிர்ப்பாற்றல், பிட்யூட்டரி, ஹைபோதாலமஸ் கோளங்களின் செயல்பாட்டுக் குறைவால் நிகழும் ஹார்மோன் குறைவு… என விதவிதமான மருத்துவக் காரணங்களும் ஆண்மைக்குறைவை அதிகரிக்கின்றன.
‘அட… பிரச்னையா அடுக்காதீங்க. சிக்கல் தீர என்ன வழி? அதைச் சொல்லுங்க!’ எனப் பொங்கி எழுவோருக்கு, பாரம்பர்ய வாழ்க்கைமுறையே பதில்! அதற்காக ‘காண்டாமிருகக் கொம்பு தர்றேன், சிட்டுக்குருவி லேகியம் கை மேல் பலன் கொடுக்கும், தங்கபஸ்பம் ரெடி பண்ணிரலாம்’ என உட்டாலக்கடி வியாபாரிகளிடம் சிக்கிக்கொள்ளக்கூடாது. போலிகளிடம் சிக்காமல், ஒழுங்காக கீரை, காய்கறி சாப்பிட்டாலே, உயிர் அணு செம்மையாகச் சுரக்கும்!
உயிர்ச்சத்து… விதைகளிலும், மொட்டுக்களிலும், வேர்களிலும் பொதிந்து இருக்கும் என கருதியதாலோ என்னவோ, சித்த மருத்துவம் பல தாவர விதைகளை, மொட்டுக்களை, வேர்களை ஆண்மை அபிவிருத்திக்கான மருந்துகளில் அதிகம் சேர்க்கிறது. சப்ஜா விதை, வெட்பாலை விதை, பூனைக்காலி விதை, மராட்டி மொக்கு, மதனகாமேஸ்வரப் பூ, அமுக்குராங்கிழங்கு, சாலாமிசிரி வேர், நிலப்பனைக் கிழங்கு என அதன் பட்டியல் நீளும். வளம் குன்றிய தேரி நிலத்தில் வளரும் நெருஞ்சில் முள்ளின் சப்போனின்கள், விந்தணுக்களை உற்பத்தி செய்யும் செர்டோலி செல் பாதிப்பைச் சீராக்கும் என்கிறது மருத்துவத் தாவரவியல். அதேபோல் பூனைக்காலி விதையும், சாலாமிசிரியும், அமுக்குராங்கிழங்கும் அணுக்களை உயர்த்த, டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்களைச் சீராக்க எனப் பல பணிகள் செய்வதை, நவீன உலகம் உற்றுப் பார்க்கிறது. உடனே, ‘ஒவ்வொன்றிலும் தலா 100 கிராம் வாங்கி ஒரு கலக்குக் கலக்கி…’ என ஆரம்பித்துவிட வேண்டாம். பிரச்னை உற்பத்தியிலா, பாதையிலா, மனதிலா என்பதை, உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசி யுங்கள். அதன் பிறகு தேவைக்கு ஏற்ப உங்கள் உணவுப் பழக்கத்தைத் தீர்மானியுங்கள்.
மிக முக்கியமாக, புரிதலிலும் விட்டுக்கொடுத்தலிலும் மட்டுமே தாம்பத்ய பயிர் வீரியமாக விளையும். கருத்தரிப்பைச் சாத்தியப்படுத்துவதில், உறுப்பின் அளவைக் காட்டிலும் மனதின் அளவுக்குத்தான் ஆண்மை அதிகம் உண்டு. ஆதலால் காதல் செய்வீர்… ஆரோக்கியமாக!

நலம் 360’ – 13

சீன மருத்துவ, சித்த, ஆயுர்வேத மருத்துவ இலக்கியங்களில் பன்னெடுங்காலத்துக்கு முன்பே தைராய்டு கோளத்தின் நோய்கள் பேசப்பட்டுள்ளன. தைராய்டு கோளத்தில் வரும் முன் கழுத்து வீக்கத்தை (Goitre) லியோனார்டோ டாவின்சியின் உலகப் புகழ்பெற்ற ‘Madonna of the Carnation’ ஓவியம் சித்திரித்திருக்கிறது. தைராய்டு என்பது, முன் கழுத்தில் மூச்சுக்குழலில் அமைந்திருக்கும் பட்டாம்பூச்சி வடிவக் கோளம். அந்த வடிவம் ‘தைராய்டு’ என்ற பழங்காலப் போர் ஆயுதம்போல இருந்ததாக உணர்ந்த தாமஸ் வார்ட்டன் என்கிற விஞ்ஞானி, அந்தக் கோளத்துக்கு ‘தைராய்டு’ எனப் பெயர் சூட்டினார். இந்தக் கோளம் சுரக்கும் சுரப்பு குறைந்தால்… ஹைப்போதைராய்டு, அளவு அதிகமானால்… ஹைப்பர்தைராய்டு, முன் கழுத்து வீங்கியிருந்தால்… ‘காய்ட்டர்’ என்கிற கோளவீக்கம் என நோய்களாக அறியப்படுகின்றன. இவ்வளவு நீண்ட வரலாறு கொண்ட இந்த நோயை, இன்றளவிலும் முழுமையாகக் குணப்படுத்தும் மருந்து ஆதாரபூர்வமாகக் கண்டறியப்படவில்லை. காலை எழுந்து பல் துலக்கியதும், முதல் வேலையாக தைராக்சின் மருந்தை விழுங்குவோர் இப்போது அநேகர்.
தைராய்டு தொடர்பான நோய்கள், பெண்களைத்தான் அதிகம் தாக்குகின்றன. எனினும், அது பெண்களுக்கான பிரத்யேக நோய் அல்ல. ஆண்களுக்கு ‘அந்த’ விஷயத்தில் நாட்டம் குறைவது, ஆண்மை குறைவது, முதியவர்களின் மறதி… போன்ற குறைபாடுகளுக்கு தைராய்டு சுரப்பு குறைவதும் ஒரு காரணம். பெண்களின் மாதவிடாய் சீர்கேடு, பாலிசிஸ்ட்டிக் ஓவரி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி உருவாவது, கருத்தரிப்பு தாமதம் ஆவது, கருமுட்டை வெடிக்காமல் இருப்பது போன்றவற்றுக்கு முக்கியமான காரணம் இந்த தைராய்டு சுரப்பு குறைவே. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தொடங்கி, 14 அல்லது 15-வது நாளில் கருமுட்டை வெடிப்பு கட்டாயம் நிகழ வேண்டும். அந்த வெடிப்பை நிகழ்த்த ஹார்மோனைத் தூண்டுவது தைராய்டு சுரப்பிதான். மாதவிடாய், 30 நாட்களுக்கு ஒருமுறை நிகழாமல், அல்லது கருத்தரிப்பு, தாமதம் ஆகும் சமயத்தில், முதலில் தைராக்சின் சுரப்பு சரியாக உள்ளதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.
மாதவிடாய் சீர்கேடு மட்டும் அல்ல, உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறைபாடு, எடை அதிகரிப்பு, அறிவாற்றல் குறைவு, முடி உதிர்தல், சரும உலர்வு… எனப் பல நோய்கள் தோற்றுவாய்க்கும் தைராய்டு சுரப்பு குறைவே காரணம். ‘இதற்குத் தீர்வே கிடையாதா? எப்போ… எப்படிக் கேட்டாலும், மாத்திரையை நிறுத்தக் கூடாது என்று டாக்டர் சொல்றாரே?’ என்று வருத்தத்துடன் கேட்போர், இந்தியாவில் மட்டும் சுமார் 4.2 கோடி பேர்!
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 150 மைக்ரோ கிராம் அயோடின்தான் நமக்குத் தேவை. அயோடின் உப்பு அதிகம் உள்ள கடலோர மண்ணின் நிலத்தடி நீரில் இருந்தும், கடல் மீன்களில் இருந்தும் இந்த உப்பு நமக்கு எளிதாகவே கிடைக்கும். ஆனால், இதுவே நன்னீர் மீன்களில் அயோடின் சத்து 20-30 மைக்ரோகிராம்தான் கிடைக்கும். தவிர, பால், முட்டை, காய்கறிகளில் இருந்தும் அயோடினை எடுத்துக்கொள்ள வேண்டும். மண்ணின் அயோடைடு சத்தைப் பொறுத்தே, அதில் வேர்விட்டு வளரும் காய்கறிகளில் அயோடின் அளவு கிடைக்கும்.
சுமார் 15 வருடங்களுக்கு முன், இந்தியாவின் கடல் ஓரத்தைவிட்டு விலகியுள்ள ஏறத்தாழ 226 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் அயோடின் சேர்க்கையையும், தைராக்சின் சுரப்பு அளவையும் இந்திய மருத்துவக்கழகம் ஆய்வு செய்தது. முடிவு, ஏராளமானோர் அயோடின் குறைவுடன் இருப்பதை உறுதிசெய்தது. இப்படியேவிட்டால், பெருவாரியான மக்கள் ஹைப்போதைராய்டு நோயால் பீடிக்கப்பட்டு சாதாரண உடல்சோர்வில் தொடங்கி, உடல் வளர்ச்சிக் குறைவு, மூளை செயல்திறன் குறைவு வரை ஏற்படக்கூடும் எனக் கருதினார்கள். உடனே அவசர அவசரமாக, இந்தியர் அனைவருக்கும் அயோடினை உணவில் அன்றாடம் கொடுக்க முடிவு செய்தது அரசு. உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி அன்றாடம் நாம் சாப்பிடும் உப்பில் அயோடினைச் செறிவூட்டிக் கொடுப்பதைக் கட்டாயம் ஆக்கினார்கள். விளைவு, உப்பை உப்பளத்தில் காய்ச்சி பல கடல்சார் கனிமங்களின் தாவர நுண்கூறு கலவையாகத் தந்த காலம் மலையேறி, செறிவூட்டப்பட்ட சோடியம் குளோரைடை சோற்றில் போட்டுச் சாப்பிடும் நிலைக்கு வந்தோம்.
அயோடினை அதிகம் பெறவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அறுசுவையில் ஒரு பிரதான சுவையான உப்புச் சுவையை அதன் இயல்பான கடல் கனிமங்களில் இருந்து பெற்றபோதுதான், நாம் உப்பின் தேவையற்ற குணங்களைத் தவிர்த்தும், தேவையானவற்றை சரியான அளவில் பெற்றும் வந்தோம். அந்த உணவுக் கூட்டமைப்பை செயற்கை உப்பு நிச்சயம் அளிக்காது.
சென்னை மருத்துவக் கல்லூரியின் ஓய்வுபெற்ற எண்டோகிரைனாலஜி பேராசிரியர் ஒருவர், ‘இந்த அயோடைஸ்டு உப்பு, மருந்து என்பதே சரி. அது எப்படி எல்லோருக்குமான உணவாகும்? முழுமையான ஆய்வுகள் நடத்தப்படாமல், அவசரகதியில் உட்கொள்ளவைக்கப்பட்ட இந்த உப்பே, நல்ல நிலையில் இயங்கும் தைராய்டுகளையும் நோய்வாய்ப்படுத்துகிறது’ என்றார். அயோடின் அதிகரித்தால் அது பெரிதாக நச்சு இல்லை எனச் சொல்லப்படுகிறது. ஆனால், சில சமயம் அதுவே காய்ட்டர் நோய்க்கு காரணமாகிவிடும் என மருத்துவ உலகின் ஓர் அச்சம் உண்டு.
சரி… இந்த நோயைத் தவிர்க்க என்னதான்  வழி? கடல்மீன் உணவுகள்தான் முதல் தேர்வு. வாரம் ஓரிரு நாள் மீன் உணவு சாப்பிடுவது அயோடினை சரியான அளவில் வைத்திருக்க உதவும். ‘மீனா… வாட் யூ மீன்?’ என அலறும் சைவர்கள், அதற்குப் பதிலாக ஊட்ட உணவாக கடல் பாசிகளை உணவில் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில உணவுகளே தைராய்டு கோளத்தில் பாதிப்புகளை உண்டாக்கும் (GOITROGENIC) எனக் குறிப்பிடுகிறார்கள். அந்த உணவுப் பட்டியலில் நம் ஊர் கடுகும் முட்டைக்கோஸும் இடம் பிடித்திருக்கின்றன. லேசாக முன் கழுத்து வீக்கமோ, ஹைப்போதைராய்டு நோயோ இருக்கும்பட்சத்தில், தாளிப்பதற்கு கடுகு, தடாலடி பொரியலாக முட்டைக்கோஸ் சமைப்பதைத் தவிர்க்கவும்.
இன்னொரு முக்கியமான விஷயம்… சந்தையில் உள்ள ஊட்டச்சத்துப் பானங்களில் அதிகமாகச்  சேர்க்கப்படுவது சோயா புரதம். ‘அட… பிள்ளை போஷாக்கா தேறி வரட்டும்’ எனக் காரணம் சொல்லி, நேரடிச் சந்தை மற்றும் மல்ட்டிலெவல் மார்க்கெட்டிங் மூலமோ  அவற்றை  மருத்துவர் ஆலோசனை பெறாமல் கொடுப்பது நிச்சயம் நல்லது அல்ல. ஏனென்றால், ‘புற்றைக் கட்டுப்படுத்தும்’, ‘இது மெனொபாஸ் பருவப் பெண்களுக்கு நல்லது’, ‘நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரும்’, ‘உடல் எடையைக் கூட்டும்’ எனக் கூவிக்கூவி விற்கப்படும் இந்தப் புரதம், சில நேரங்களில் தைராய்டு கோள வீக்கத்தையும் தரும். ‘மாதவிடாய் சரியாக வரவில்லை, மந்த புத்தியாக இருக்கிறாள், இவனுக்குப் படிப்பு ஏறவே மாட்டேங்குது’ என்போருக்கு கடல் கடந்து விற்பனைக்கு வரும் டானிக்குகளைவிட, கடல் மீன்தான் நன்மை பயக்கும். கடல் மீன் தைராய்டு சுரக்க அயோடினைத் தரும். தைராய்டு நோயில் வலுவிழக்கும் எலும்புக்கு வைட்டமின் – டி தரும். மந்தம் ஆகும் மூளை குதூகலித்து உத்வேகம் பெற டி.ஹெச்.ஏ அமிலம், ஒமேகா கொழுப்பு எல்லாமும் பரிமாறும். கடையில் விற்கப்படும் புரத உணவுகளைக் காட்டிலும், பட்டை தீட்டாத தானியங்கள், பயிறுகளைச் சேர்த்து அரைத்து வீட்டில் செய்யப்படும் சத்துமாவு போன்றவை புரதச்சத்தைக் கொடுப்பதோடு, தைராய்டு நோயை மட்டுப்படுத்தும் கால்சியம், செலினியம் போன்றவற்றையும் அளிக்கும்.
தைராய்டு சுரப்பு குறைவாக இருந்தால், சரியான சிகிச்சை மிகவும் அவசியம்.  தைராக்சின் சத்துக் குறைவு உள்ளோருக்கு நேரடியாகவே அந்தச் சத்தைக் கொடுத்து வருகிறது நவீன மருத்துவம். எந்தக் காரணம்கொண்டும் மருத்துவர் அனுமதி இல்லாமல் இந்தச் சத்து மாத்திரைகளை நிறுத்துவதும், அளவைக் குறைப்பதும் கூடாது. பாரம்பர்ய பிற மருத்துவ முறைகளைப் பின்பற்றுபவர்கள், அந்த மருத்துவ முறை மூலம் தைராய்டு கோளத்தைத் தூண்டியோ, அல்லது உடல் இயக்க ஆற்றலைச் சீராக்கியோ தைராய்டு கோளம் இயல்பு நிலைக்கு வரும் வரை, அதற்கான சத்து மருந்துகளை ஒருங்கிணைந்து எடுத்துக்கொள்வதுதான் நல்லது. தடாலடியாக நிறுத்துவது பெரும் நோய்ச் சிக்கலை ஏற்படுத்தும்.
சித்த, ஆயுர்வேதப் புரிதலில் கபத் தன்மையையும், பித்தத் தன்மையையும் சீராக்கும் மூலிகைகளை, மருந்துகளை இந்தத் தைராய்டு நோய்க்குப் பரிந்துரைப்பர். ‘அன்னபவழச் செந்தூரம்’ என்கிற பாரம்பர்ய சித்த மருந்தும், மந்தாரை அல்லது ‘கான்சனார்’ இலைகளால் செய்யப்படும் ‘காஞ்சனார் குக்குலு’ என்கிற ஆயுர்வேத மருந்தும் இந்த நோய்களில் அதிகம் ஆராயப்பட்ட பாரம்பர்ய மருந்துகள். நவீன மருந்து அறிவியல் ஆய்வும், இந்த மருந்துகள் தைராய்டு சத்தை நேரடியாகத் தராமல், தைராய்டு கோளத்தைத் தூண்டி, அதன் செயல்திறனை ஊக்குவிக்கின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது. கூடவே உடல் எடை குறைவு, மாதவிடாய் கோளாறு போன்றவற்றைச் சீர்செய்வது இந்த மருந்துகளின் தனிச்சிறப்பு.
யோகாசனமும் மூச்சுப் பயிற்சியும் தைராய்டு கோளம் சரியாக இயங்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. சூரிய வணக்கம், கபாலபாதி பிராணாயாம மூச்சுப் பயிற்சி, விபரீதகரணி யோகப் பயிற்சி… ஆகியவை உடல் இயக்க ஆற்றலை வலுப்படுத்தும் என்கின்றன ஆராய்ச்சிகள்.
ஒரு தைராய்டு சுரப்பு குறைவு நோயாளி காலையில் ஒரு மாத்திரை சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், கூட்டாக இந்த யோகாசனப் பயிற்சி, ஏதேனும் பாரம்பர்ய மருந்து, கூடவே அடிக்கடி கடல்மீன் உணவு/கடற்பாசி உணவு சாப்பிடுவது போன்றவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே, மெள்ள மெள்ள இந்த நோயின் பிடியில் இருந்து விலக முடியும். ஆனால், என்று வரும் இந்த ஒருங்கிணைப்பு?
- நலம் பரவும்…

கடல் உணவுகள் சில…

அயோடினும் புரதமும் நிறைந்த கடல் மீன்கள், தைராய்டு குறைவு நோய்க்கான சிறப்பு உணவுகள். கூடுதல் புரதமும் வைட்டமின் – டி சத்தும் இவற்றின் ஸ்பெஷல். அதிலும் குறிப்பாக வஞ்சிர மீன் குழம்பு, மிக அதிகப் புரதம் கொண்டது. இதை குடம்புளிக் கரைசலில் செய்தால், உடல் எடையையும் குறைக்கும்!

சுறா புட்டு, பாலூட்டும் பெண்ணுக்கு தைராய்டு குறைவைச் சரியாக்குவதுடன், பால் சுரப்பை மிக அதிகமாக்கும்!

பொரித்த சீலா மீனில், புரதச்சத்தும் அயோடினும் மிக அதிகம்!

‘அகர் அகர்’ என்கிற கடற்பாசியில் வட இந்தியர்கள் செய்யும் இனிப்பு, குழந்தைகளுக்கு நலம் தரும் உணவு. பால், வெல்லம், அகர் அகர், ஏலக்காய்த் தூள் சேர்த்து இதைச் செய்யலாம்!

ஸ்பைரூலினா என்கிற சுருள்பாசி மாத்திரைகள்,  ஊட்ட உணவு வகைகளில் மிகப் பிரபலம். மீன் சாப்பிடாதோர் இதைச் சாப்பிடலாம்!

புற்றுநோய்… உஷார்!
ஒட்டுமொத்த சூழல் சிதைவு, மனம் வெதும்பிய வாழ்வியல்… போன்ற காரணிகளால் பல புற்றுநோய்க் கூட்டம் பெருகிவரும் சூழலில் தைராய்டு கோளப் புற்றும் அதிகரிக்கிறது. PAPPILLARY, FOLLICULAR, MEDULLARY, ANAPLASTIC… என நான்கு வகையில் இந்தப் புற்று வரலாம். இதில் வெகுசாதாரணமாக வரக்கூடியது PAPPILLARY. தைராய்டு கோள வீக்கத்தை எப்போதும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், எளிய அல்ட்ரா சவுண்டு மற்றும் FNAC பரிசோதனைகள் மூலம் தொடக்கத்திலேயே பரிசோதித்து, இந்த வீக்கத்தின் இயல்பைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை புற்றுநோயாக இருக்கும்பட்சத்தில், ANAPLASTIC பிரிவைத் தவிர்த்து மற்றவற்றை அறுவைசிகிச்சை போன்ற சரியான ஒருங்கிணைந்த சிகிச்சைகள் மூலம், முழுமையாக நலம்பெற வாய்ப்பு அதிகம். புற்றாக இல்லாதபட்சத்தில், வெறும் வீக்கத்தைக் கண்டு கலவரப்படத் தேவை இல்லை!

நலம் 360’ – 14

திடீரென ஒரு நாள் ‘சுரீர்’ என பல் வலியெடுத்து, முகம் கோணி, காது, தொண்டை, பின்மண்டை வரை வலித்த பிறகே நாம் பல் மருத்துவரைத் தேடுகிறோம். ஆனால் பல் மருத்துவ உலகம் சொல்வதெல்லாம், ‘பற்களின் பாதுகாப்பு பிறந்தவுடன் தொடங்கியிருக்க வேண்டும்’ என்பதைத்தான்!
சிசுவுக்கு தாய்ப் பால் புகட்டியதும் மிருதுவான, சுத்தமான துணியால் மிகமிக மென்மையாக ஈறுகளைத் துடைப்பதில் இருந்து பல் பராமரிப்பு தொடங்குகிறது. நள்ளிரவில் பால் கொடுத்துவிட்டு ஈறுகளைச் சுத்தம் செய்யாமல் விடுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு அனைத்து
பற்களும் முட்டிக்கொண்டு வெளியே வந்தவுடன், தினமும் இரு முறை பல் துலக்கும் பயிற்சியைக் கற்றுக்கொடுப்பது, ‘பல்’லாண்டு கால பல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும். குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக ஃப்ளுரைடு கலக்காத பற்பசைகளைப் பயன்படுத்தலாம். இன்னொரு முக்கியமான விஷயம், ‘இப்போ ஈ காட்டப்போறியா இல்லையா?’ எனப் பயமுறுத்தி, குழந்தைகளைப் பல் துலக்கப் பயிற்றுவிக்கக் கூடாது. பல் துலக்குவதை, வாய் கொப்பளிப்பதை ஒரு குதூகல விளையாட்டுபோல் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது மிக முக்கியம். அதே சமயம் ஆர்வக்கோளாறில் பற்பசையைக் கணிசமாகப் பிதுக்கி, பற்களில் அப்பி, உப்புத்தாள் போட்டு சுவரைப் பட்டி பார்ப்பதுபோல் தேய்ப்பதும் முட்டாள்தனம். ஒரு நிலக்கடலை அளவுக்கான பற்பசையே மந்திரப் புன்னகையை அளிக்கும்.
இன்னும் நம்மில் பலருக்கு பற்களின் இடையே சிக்கியிருக்கும் துணுக்குகளை நீக்கும் DENTAL  FLOSS (பற்களுக்கு இடையே மெல்லிய இழையைவிட்டு சுத்தம் செய்யும் பயிற்சி) பழக்கம் பற்றிய அறிமுகமே இல்லை. ஆனால், கல்யாணம் நிச்சயமானவுடன் வாழ்க்கையில்  முதன்முதலாக பல் மருத்துவரிடம் சென்று, ‘கல்யாணம்… பற்களைச் சுத்தம் பண்ணணும்’ என நிற்போம். அவர் பலப் பல உபகரணங்களின் உதவியுடன் பற்களை சுத்தம் செய்யும்போது வெளியேறும் அழுக்கைப் பார்த்து, ‘இத்தனை வருஷமும் இவ்வளவும் நம்ம வாய்க்குள்ளயா இருந்துச்சு’ என நொந்துபோவோம். அதே உத்வேகத்துடன் வந்து, ‘இனி தினம் மூணு தடவை பல் தேய்க்கணும்’ என ஆரம்பித்து சில நாட்களுக்கு பிரஷ்ஷ§ம் வாயுமாகத் திரிவோம். ஆனால், எல்லாம் சில நாள் ஷோதான்!
பராமரிப்பைத் தாண்டி, பல்லைப் பாழடிக்கும் பழக்கங்களில் இருந்து விடுபடுவதுதான் பாதுகாப்புக்கான முதல் படி. சாப்பிட்ட பின் பலர் உதடுகளை மட்டும் தேய்த்துக்கொள்வார்கள். ஆனால், நன்றாக வாயைக் கொப்பளிப்பது முக்கியம். அதுவும்  ஆரோக்கியம் தரும் விட்டமின் சி சத்துள்ள பழங்களைச் சாப்பிட்டால்கூட முடிவில் வாயைக் கொப்பளிக்காமல் விட்டால், அந்தப் பழங்களின் அமிலத் துணுக்குகள் பற்களில் கறையை உண்டாக்கும்; எனாமலைச் சுரண்டும்.
‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ எனப் பலகாலம் படித்து வந்தாலும், ‘அந்த இரண்டும் எங்க ஃப்ளாட்ல இல்லையே’ என்ற பரிதவிப்புடன், ஷாருக் கான், அனுஷ்கா சொல்லும் பேஸ்ட் மற்றும் பிரஷில்தான் நம்மில் பலர் பல் துலக்குகிறோம். அந்த பேஸ்ட் மற்றும் பிரஷில்  நடக்கும் வணிக யுத்தம் எக்கச்சக்கம். சினிமா திரையரங்குகளில் மட்டுமே விளம்பரம் வந்திருந்த காலம் தொடங்கி, இன்று ஆன்லைன் விளம்பரங்கள் வரை, ‘ஆயுர்வேத மூலிகையாலே… தயாரிப்பது…’ எனப் பாடிக்கொண்டு ஒரு குடும்பமே பளிச் பற்களைக் காட்டிப் பரவசப்படுத்தும். ஆரம்பத்தில், ‘உங்கள் டூத் பேஸ்ட் வெள்ளையாக இருந்தால் மட்டுமே, பற்களும் வெள்ளையாக இருக்கும்’ எனப் பாடி வந்தன விளம்பரங்கள். இடையில், ‘கலர்கலர் கெமிக்கல்கள்தான் உங்கள் பற்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்’ என மினுங்கும் நிற ஜெல் பேஸ்ட்களை இளமையின் அடையாளம் ஆக்கினர். உப்பு, கரித்தூள் கொண்டு பல் தேய்த்துக்கொண்டிருந்த தாத்தா பாட்டிகளிடம், ‘கரித்தூள் வெச்சு விளக்க, அது பல்லா… பழைய பாத்திரமா?’ எனக் கிண்டலடித்தோம். ஆனால், இப்போது அதே கரித்தூளை ‘activated charcoal’ வடிவில் அடக்கியது என்று விளம்பரப்படுத்தி சார்க்கோல் இழைகளால் தயாரித்த பிரஷ் விற்கிறார்கள். ஆக, கூடிய விரைவில் ஆலங்குச்சி பிரஷ், வேலங்குச்சி பிரஷ் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களால் விற்கப்படலாம். ‘உங்கள் சட்டைப் பையில் இருக்கும் பணத்தை, உங்களை வைத்தே கிழித்தெறிய வைத்துவிட்டு, கூடுதல் வட்டியில் காலமெல்லாம் கடன் வாங்கவைக்கும்’ வணிக சித்தாந்தத்துக்கு இதைவிட மோசமான எடுத்துக்காட்டு இருக்க முடியாது.
ஆலும் வேலும் மட்டும் அல்ல, மருதம், இலந்தை, இலுப்பை, இத்தி, கருங்காலி… எனப் பல துவர்ப்புத் தன்மையுள்ள மூலிகைக் குச்சிகளை, அதன் பட்டையோடு சேர்த்து பல் துலக்கப் பயன்படுத்தியது  நம் பாரம்பர்யம். ஹெர்குலிஸில் இருந்து வந்தியத்தேவன் வரை அதில் ஒன்றைத்தான் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆலங்குச்சியில் குளிர்ச்சி, இலந்தையில் இனிய குரல்வளம், இத்தியில் விருத்தி, இலுப்பையில் திடமான செவித்திறன், நாயுருவியில் புத்திக்கூர்மை, தைரியம், மருதத்தில் தலைமயிர் நரையின்மை, ஆயுள் நீட்டிப்பு… என பல்குச்சி மூலம் சகல நிவாரணங்களைச் சொல்லிக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள். பல் துலக்க, துவர்ப்புத்தன்மை பிரதானமாக இருக்கவேண்டும். மேற்குறிப்பிட்ட அத்தனை குச்சிகளும் அதைத்தான் தந்தன. பொதுவாக துவர்ப்புச் சுவை தரும் தாவர நுண்கூறுகள் அனைத்தும்  நோய் எதிர்ப்பு ஆற்றலையும், எதிர் நுண்ணுயிரித்தன்மையையும், ஆன்ட்டி-ஆக்சிடென்ட் தன்மையையும் தருவன என்பது இன்றைய தாவரவியலாளர் கண்டறிந்தது.
திருக்குரானில்தான் முதன்முதலில் ‘மிஸ்வாக்’ குச்சியைப் பல் துலக்கப் பயன்படுத்தச் சொன்னார்கள். துவர்ப்புச் சுவையுடைய மெஸ்வாக் குச்சி மரத்தின் பெயர் உகாமரம். வழக்குமொழியில் குன்னிமரம் என்பார்கள். உகா குச்சியின் பயனை நாம் மறந்தாலும் பேஸ்ட் கம்பெனி மறக்கவில்லை. மூலிகைப் பற்பசையில் அதற்கு எனத் தனிச் சந்தை உண்டு. திரிபலா சூரணம் எனும் மும்மூர்த்தி மூலிகைக் கூட்டணி, வாய் கொப்பளிக்கவும், பல் துலக்கவும் மிக எளிதான மிக உன்னதமான ஒரு மூலிகைக் கலவை. பல உடல் வியாதிக்கும் பயன் அளிக்கும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கூட்டணி பல் ஈறில் ரத்தம் வடிதல், வலி, ஈறு மெலிந்து இருத்தல், கிருமித்தொற்று… போன்ற வாய் மற்றும் பற்கள் பிரச்னைக்குப் பலன் அளிக்கும் எளிய மருந்து.
பற்களுக்கு ‘ரூட் கேனால்’ சிகிச்சை இப்போது பிரபலம். பற்கள் மற்றும் அதைச் சூழ்ந்துள்ள வெளி மற்றும் உள்சதைப் பகுதிகள் அழற்சியால், கிருமித் தொற்றால் பாதிப்பு அடையும்போது, பல் முழுதாகப் பாழ்பட வாய்ப்பு உண்டு. முன்னெல்லாம் குறடு வைத்து பல்லைப் பிடுங்கிவிடுவார்கள். இப்போது, பல்லை நீக்காமல் பாதிப்படைந்த சதைப்பகுதியை மட்டும் நீக்கி, இயல்பாகப் பல்லைப் பாதுகாக்கும் சிகிச்சைதான் ரூட் கேனால். உங்கள் குடும்ப மருத்துவர் பரிந்துரைந்தால், அதை மேற்கொள்வது உங்கள் பல்லை நெடுநாள் பாதுகாக்கும்.
பல் வலி, பல் பிரச்னை மட்டும் அல்ல. பல்லின் புறப்பகுதியில் வரும் அழற்சி மற்றும் தொற்றுப் பக்கவாதம், மாரடைப்பு முதல் ஆண்மைக் குறைவு வரை ஏற்படுத்தும் என்கிறது ஆங்கில மருத்துவம். தினம் இருமுறை பல் துலக்காவிட்டால், ‘அந்த’ ஆர்வம் குறையும்  நிலை வரலாம். ‘கருப்புபூலா வேர்’ எனும் சாதாரணச் செடியில் பல் துலக்கினால், ஆண்மை பெருகும் என்கிறது சித்த மருத்துவம். PERIODONTITIS எனும் அழற்சியே பலருக்கு வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும். குறிப்பாக சர்க்கரை வியாதியினருக்கு இந்தப் பிரச்னை அதிகம். அதே சமயம் வாய் துர்நாற்றத்துக்கு பல் பிரச்னை மட்டும் காரணம் அல்ல. அஜீரணம்,  நாள்பட்ட குடல்புண், ஈரல், கணைய நோய்கள்கூட காரணங்களாக இருக்கலாம். ‘வாய் நாறுது’ எனச் சொல்லி, சந்தையில் விற்கும் விதவிதமான மணமூட்டிக் கொப்பளிப்பான்களில் வாய் கொப்பளித்தால், வாய் மணக்காது… வாஷ்பேசின் வேண்டுமானால் மணக்கக்கூடும்!
‘பல்லுன்னா அப்படித்தான் காரை ஏறும்; விழும்; பொக்கை ஆகும். அதுக்கெல்லாம் எதுக்கு இவ்வளவு அக்கறை? பொம்பளைக்கு எதுக்கு பல் கிளீனிங், பல் செட்டு?’ என மடமை பேசும் சமூகச்சூழலில் இருந்து, இன்னும் நம்மில் பலர் வெளியே வரவில்லை. ஸ்டெம் செல் உதவியுடன் டைட்டானியப் பல் வளர்க்கும் வித்தையை நவீன உலகு ஆய்வு செய்கிறது.  ஆலும் வேலும் பற்களைப் பராமரிக்கும் என 3,000 வருடங்களாக நம் இலக்கியம் அழுத்திச் சொல்கிறது. ஆனால், இதை வணிகம் மட்டும்தான் இணைக்க வேண்டுமா? சமூக அக்கறையுடன் இரண்டு அறிவியலும் இணைந்தால், அழகான அடித்தட்டு மக்களின் முகங்கள் புன்னகைக்கும்!
- நலம் பரவும்…

எது சரி… எது தப்பு?
அறிவுப் பல்லை (WISDOM TOOTH) கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்பது இல்லை. அது குறுக்கே வளர்ந்தால், தாடை சதைப்பகுதியில் சீழ்க்கட்டியை உருவாக்கினால் மட்டுமே அகற்றலாம்.

பல் வலிக்கு நிவாரணமாக கிராம்புத் தைலம் தடவுவது அல்லது வலிக்கும் பல்லில் கிராம்பை வைத்துக் கடித்துக்கொள்வது பாட்டி வைத்தியமுறை. ஆனால், இன்று சந்தையில் கிடைக்கும் கிராம்பில் 100-க்கு 90 சதவிகிதம், அதன் எண்ணெய் நீக்கப்பட்ட வெறும் சக்கை மட்டுமே இருக்கிறது. கிராம்பு எண்ணெயிலும் கலப்படம் அதிகம். பல்லில் உண்டாகும் லேசான வலிக்கு, அந்த இடத்தில் இஞ்சித்துண்டு வைத்துக் கடிப்பதும், கூடவே அரை டீ-ஸ்பூன் அமுக்கரா சூரணம் சாப்பிடுவதும் நிவாரணம் தரும். அப்போதும் வலி அதிகரித்தால் அல்லது தொடர்ந்தால், பல் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

ஈறில் ரத்தக் கசிவு இருந்தால், அது பல் நோயாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அது ரத்தத்தட்டு குறை நோயோ அல்லது ஆரம்பக்கட்ட சர்க்கரை நோயாகவோகூட இருக்கலாம்.

டீன் டிக்கெட்டுகள் பற்களில் பச்சை குத்திக்கொள்கின்றனர். ‘பல் மேல் உறைபோல செய்து அதில்தான் குத்துகிறோம். அதனால் பல்லுக்குப் பாதிப்பு இல்லை’ என இப்போது சொன்னாலும், நாளை மருத்துவ உலகம் எதை மென்று விழுங்கும் என யாருக்கும் தெரியாது… எனவே, உஷார்.

சீரான பல் வரிசை அமைக்கும் அழகியல் சிகிச்சை அதிகரித்துள்ளது. ஆனால், இது பார்லருக்குப் போய் முடிவெட்டுவதுபோல இல்லை. பல் மருத்துவரின் ஆலோசனை மிக அவசியம்.

பல்லில் காரை, மஞ்சள் கறை படிவதைப் போக்க, அமில உணவுகளைச் (தேநீர், பழச்சாறுகள்…) சாப்பிடும்போதெல்லாம் வாயைக் கொப்பளிக்கலாம்.

சிலர் மாருதி காரையே பற்களால் கடித்து இழுக்க, பலருக்கு பால்கோவா கடித்தாலே பற்கள் கூசும். ‘பல் உறுதியாக இருக்க கால்சியமும் பாஸ்பரஸும் நிறைந்த பால் பொருட்கள் பயன்படும்’ என்கிறார்கள் பல் மருத்துவர்கள். மோரும் கம்பும் சேர்ந்த கம்பங்கூழ் நல்லது என்கிறார்கள் பல் போன பாட்டிகள்! 

பல் பத்திரம்
தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் 7 முதல் 10 நிமிடங்கள் வரை மென்மையான இழைகளால் ஆன டூத் பிரஷால் (mild, soft, wild, hard என்றெல்லாம் பல பிரஷ்கள் சந்தையில் உண்டு.) பல் துலக்கினால் போதும். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதிதான். ஆனால், உமிழ்நீர்பட்ட ஒரே குச்சியை ஒவ்வொரு நாளும் உபயோகிக்க முடியாது. தினம் ஒரு குச்சியை உடைத்தால், ஓர் ஊர் பல்தேய்க்க ஒரு காட்டையே அழிக்கவேண்டி வரும். அது சூழலுக்குக் கேடு. அந்தக் கால சாப்பாடு பல்லை அவ்வளவாகப் பாதித்திருக்காது. இப்போதைய சாப்பாட்டில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருக்கும் பல ரசாயனத் துணுக்குகள், பல்லையும் வாயையும் பதம்பார்ப்பதால், பேஸ்ட், பிரஷ் பரவாயில்லை. வாரம் ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுபோல், வாரம் இரண்டு நாட்கள் மூலிகை பல் துலக்குதல் நடத்தலாம்.

குளிர்பானம், சவ்வு மிட்டாய், தனி சர்க்கரை போன்றவை, பற்களின் எனாமலைப் பாதிக்கும். ஜீரணக் கோளாறால் வயிற்றில் சுரக்கும் அமிலம், வாய்ப் பகுதிக்கு வந்து பல் எனாமலை அரிக்கும்.

குழந்தைகள் ஃப்ளுரைடு இல்லாத பசையைப் பயன்படுத்துவது நல்லது. அதிகபட்ச ஃப்ளுரைடுகூட பல் அரிப்பு தொடங்கி சர்க்கரை வியாதி வரை உண்டாக்கும்.

‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ எனச் சொன்னாலும் சொல்லிவைத்தார்கள்… நம்மவர்கள் குண்டூசி, கொண்டை ஊசி, உட்பட கூர்முனைகொண்ட பல பொருட்களாலும் பல் குத்துகின்றனர். பொதுவாகப் பல் குத்துவதே தவறு. அதற்குப் பதில் சாப்பிட்டு முடித்ததும், வாயை நன்கு கொப்பளியுங்கள். அல்லது அதற்கென உள்ள மென்மையான இழைகளால் சுத்தம் செய்யுங்கள்.

எண்ணெய்க் கொப்பளிப்பு சமீபத்தில் மிகவும் பிரபலம்.  கிருமிகள் நீங்க, உடல் சூடு குறைய, வாய்ப் புண்களைத் தடுக்க… செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயால் வாயைக் கொப்பளிக்கலாம்.

நலம் '360 8






ல்வாழ்வை நம்முள் பத்திரப்படுத்த குலேபகாவலி மூலிகை, நானோ துகள் மருந்து, எட்டுக் கை அம்மன் ஆசி... இவை மட்டும் போதாது. நம்மைக் கட்டுப்படுத்தும் ஐந்து முதலாளிகளும் (மண், நீர், தீ, காற்று, ஆகாயம்) நன்றாக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு நமது ஒவ்வொரு செயல்பாட்டையும் அமைத்துக்கொள்வதே, இயற்கைக்கு நாம் செய்யும் மரியாதை. இயற்கையைச் சீண்டுவது எப்படி நமது சுற்றுச்சூழலைச் சிதைக்கிறதோ, அதேபோல நம் உடலின் உயிர்ச்சூழல் கடிகாரத்தைச் சிதைப்பதும் பல பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதில் முக்கியமானது, வயிற்று வலி!
வயிற்று வலியைப்போல் மண்டையைப் பிராண்டும் விஷயம் வேறு இல்லை. வலது விலா எலும்புகளுக்குக் கீழே அவ்வப்போது வலி, சில நேரம் எதுக்களிப்பு, கொஞ்சம் அஜீரணம்... என இருக்கும்போது அது 'வயிற்றுப் புண்ணா, குடல் புண்ணா, இல்லை வேறு ஏதேனுமா?’ என, நம்மில் பலர் குழம்புவோம். 'அலுவலகத்தில் போன வாரம் வரை ஆரோக்கியமாக இருந்த சீதாராமன், 'நெஞ்சு கரிக்குது’னு சொல்லிக்கிட்டே சரிஞ்சு விழுந்து, மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே செத்துப்போனானே...’ என்று நினைக்கும்போதே, நெஞ்சு படபடத்து முகம், உச்சந்தலை எல்லாம் வியர்த்து, மருத்துவமனைக்கு ஓடும் இளைஞர்கள் இப்போது அதிகம்.
அங்கே, 'எவ்வளவு நாளா இப்படி இருக்கு? நெஞ்சு எலும்புக்குக் கீழா, மார்பின் மையப்பகுதியிலா... எங்கே எரிச்சல் இருக்கு? சாப்பிட நேரமாகும்போது, பசி வரும்போது... வலிக்குதா, சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வலிக்குதா?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டு, வேலை, சாப்பாட்டுப் பழக்கம், இன்ஷூரன்ஸ் சங்கதிகள் பற்றி எல்லாம் தெரிந்துகொண்டு, 'இது வயிற்றுப்புண் மாதிரி தெரியலை. பித்தப்பை கல்லா இருக்குமோ... எதுக்கும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமே!’ என்பார்கள். 'ஸ்கேனா..? இது கல்லுக்கா, 'கல்லா’வுக்கா?’ என நம்மில் பலர் துப்பறியும் சாம்பு ஆவோம்.
முன்பெல்லாம், 'இது பித்தப்பை வீக்கமா இருக்குமோ?’ எனச் சந்தேகம் வந்தவுடன், டாக்டர் முதலில் நமது வயிற்றைக் கைகளால் அழுத்தி பரிசோதனை செய்வார். நோயாளியின் வலதுபக்க விலா எலும்புகள் முடியும் இடத்துக்குக் கீழாக (அங்கேதான் ஈரல், பித்தப்பை எல்லாம் இருக்கின்றன) மருத்துவர் தனது விரல்களை அழுத்தமாக வைத்துவிட்டு, நோயாளியை மூச்சை நன்கு இழுத்து நிறுத்தச் சொல்வார். அப்போது பித்தப்பை வீக்கத்துடன் இருந்தால், அது முன்வந்து... கருவில் இருக்கும் குழந்தையின் தலைப்பகுதி தாயின் வயிற்றில் உணரப்படுவது போன்ற மெல்லிய உணர்வை மருத்துவர் விரலுக்குத் தரும். ஜான் பெஞ்சமின் மர்ஃபி என்கிற அமெரிக்க விஞ்ஞானி கண்டறிந்த இந்தச் சோதனைக்கு 'மர்ஃபி சோதனை’ என்று பெயர்.
மருத்துவப் படிப்பில் மர்ஃபி சோதனை செய்யத் தெரியாவிட்டால், கண்டிப்பாக பாஸ் கிடையாது. ஆனால், நாம் மர்ஃபி ரேடியோவை ஓரங்கட்டியதுபோல, நம் மருத்துவர்களில் பலர் மர்ஃபி சோதனையையும் ஓரங்கட்டிவிட்டார்கள். 'அதான் ஸ்கேனும் சி.டி-யும் இன்னும் துல்லியமாச் சொல்லுதே...’ என்ற நினைப்பு, கூட்டம், நேரமின்மை எனப் பல காரணங்கள்.
ஆனால், பித்தக்கல்லுக்கான காரணம் என்ன என்று இன்னும் மிகச் சரியாக, துல்லியமாக நவீன மருத்துவத்தால் நிர்ணயிக்க முடியவில்லை. எதைத் தின்றால், எந்த என்சைமை, எவ்வளவு சுரந்து, ஜீரணிக்க வேண்டும் என்ற புரோகிராம், பல மில்லியன் ஆண்டுகளாக நம் மரபில் பொதிந்துவைத்திருக்கிறது நம் ஜீரண மண்டலம். ஆனால், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் எனப் புதுபுதுசாகப் பல பூச்சாண்டிகள் சாப்பாடு மூலம் வருவதால், அந்த மரபு புரோகிராம் குழம்புகிறது. தவிர, ஜீரோ சைஸ் இடுப்பு வேண்டி சாப்பிடாமல் அடம்பிடித்து மெலிவது, நார்ச்சத்து, மேக்னீசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் எனும் உயிர்ச்சத்துக்கள் ஆகிய முக்கியமான சத்துக்களை உணவில் எடுத்துக்கொள்ளாதது, கொழுப்பைக் கூடுதலாகவும், நார்ச்சத்தைக் குறைவாகவும் சாப்பிடுவது, எல்லா சாமிக்கும் ஏதாச்சும் சுயநல அப்ளிகேஷன் போட்டு வாரத்தில் நான்கு நாட்கள் விரதம் இருப்பது, மெலடோனின் சுரப்புக் குறைவு... எனப் பல காரணங்களை, பித்தப்பை அழற்சிக்கும் கல்லுக்கும் காரணங்களாகக் கூறுகிறது நவீன மருத்துவம்.
'நோய் முதல் நாடி’ பார்ப்பதுதான் வைத்தியம் என்பதில் வள்ளுவனுக்கு மட்டுமல்ல... யூகி முனிக்கும் ஹாரிசனுக்கும்கூட வேறுபட்ட கருத்துகள் கிடையாது. 'தொடர்வாத பந்தமிலாது குன்மம் வராது’ என வயிற்றுப்புண்ணுக்கு வாதத்தையும், விலாவுக்குக் கீழ் வலி தரும் இந்தப் பித்தக்கல் பிரச்னைக்குப் பித்தத்தையும் காரணமாகச் சொல்கிறது தமிழ் மருத்துவம். முதலில் மலச்சிக்கலை நீக்கி, உடலில் வாதத்தைக் குறையுங்கள். எண்ணெய் பலகாரங்களை அதிகம் எடுக்க வேண்டாம் என்பதோடு, பட்டினி முதலிய பித்தம் சேர்க்கும் விஷயங்களையும் தவிர்க்கவும் என்பதே நம் தமிழ் மருத்துவம் சொல்லும் பிரதானமான பரிந்துரைகள். கொஞ்சம் உற்றுப் பார்த்தால், யூகி முனியும் ஹாரிசனும் ஒரே புள்ளியில் நிற்பது புரியும்.
பித்தக்கல்லில் வகைகள் உண்டு. 'நிறையக் கொழுப்பு +  கொஞ்சம் உப்பு’ அல்லது 'கொஞ்சம் கொழுப்பு + நிறைய உப்பு’ எனக் கல் ஆக்கம் இருக்கக்கூடும். சிறுநீரகக் கல்லையும் பித்தக்கல்லையும் நிறையப் பேர் குழப்பிக்கொள்வது உண்டு. பித்தப்பைக்குள் இருக்கும் இந்தக் கல்லை, சிறுநீரகக்கல்போல கரைப்பது மிகக் கடினம். பித்தப்பைக்கல்லை மட்டும் உடைத்து துகளாகும் ஒலிக்கதிர் சிகிச்சை பெரும்பாலும் நடைமுறையில் இல்லை. மொத்தமாக பித்தப்பையையே எடுப்பதுதான் அதிகம் நடக்கிறது. எந்தப் பிரச்னையும் கொடுக்காமல் 1 செ.மீ-க்குக் குறைவாக 'தேமே’ என ஓரமாக இருக்கும் கல்லை அகற்றுகிறேன் என்று பித்தப்பையையே அகற்றுவது, பல நேரங்களில் அவசியம் இல்லாதது. 'அந்தப் பக்கமா குடல் ஆபரேஷன் பண்றோமே... கல் உள்ள இந்தப் பையையும் சேர்த்து எடுத்திடலாமே!’ என்பதில் எனக்கு உடன்பாடும் இல்லை. அதே சமயம், கல் கொஞ்சம் பெரிதாக இருக்கும்போதோ, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயாளியாக இருக்கும்போதோ, பித்தப்பை நாளப் பகுதியில் (DUCT) கல் சிக்கி அடைத்திருக்கும்போதோ, குடும்பத்தில் புற்றின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்போதோ அல்லது ஈரல் நொதிகள் பெரிதாக மாற்றம் பெற்றிருக்கும்போதோ, குடும்ப மருத்துவர் ஆலோசனைக்குப் பின்னர் கல்லை அகற்றுவதில் தவறும் இல்லை. 'அய்யோ... பித்தப்பையை எடுத்துட்டா, பித்தம் சுரக்காமல் போய்விடுமே!’ என்ற அச்சமும் தேவை இல்லை. ஏனென்றால், பித்தப்பை என்பது, பித்தம் சுரக்கும் பை அல்ல; ஈரல் சுரக்கும் பித்தத்தைச் சேகரித்து வைத்து, செரிமானத்துக்குத் தேவையானபோது குடலுக்குத் தள்ளிவிடும் அமைப்பு.
ஒருபக்கம் அப்பெண்டிக்ஸ், அடினாய்டு, கருப்பை, பித்தப்பை போன்றவை, அதில் ஏற்படும் சிறு சிரமங்களுக்கு எல்லாம் 'என்னத்துக்கு பிரச்னை?’ என்றோ, 'அதான் இன்ஷூரன்ஸ் இருக்கே...
எடுத்துடுவோம்’ என்ற மேதாவித்தனத்திலோ அறுவைசிகிச்சையில் நீக்கும் போக்குகள் அதிகரித்திருக்கின்றன. இன்னொரு பக்கம் வளர்ச்சியடைந்த புற்று முதலான அறுவைசிகிச்சை அவசியம் தேவைப்படும் நிலையில் தாமதித்து வருந்தும் சம்பவங்களும் பெருகிக்கொண்டே போகின்றன. எனவே, உடல் நலம் பராமரிப்பு விஷயத்தில் நிறைய அக்கறையும், விசாலமான பார்வையும் கொண்டிருப்பதே புத்திசாலித்தனம்.
சில நேரம் ஆதரவாகக் கட்டிப்பிடிப்பதன் மூலம் நோயைக் குணமாக்க முடியும். கைப்பற்றி அழுத்தி, தோள் சாய்த்துத் தட்டிக்கொடுத்தும் குணமாக்க முடியும். மடியில் உட்காரவைத்து வானம் காட்டி வாய் பிளக்கவைத்து அளிக்கும் ஒரு வாய் உணவின் மூலமும் குணமாக்குவது சாத்தியம். நெடுநாள் அனுபவ மூலிகை மருந்தின் மூலம் முற்றிலுமாகத் துடைப்பதும் சாத்தியம். நேற்றைய விஞ்ஞானம் ஆய்ந்து சொன்ன நவீனத்தின் மூலம் வீழ்த்துவதும் சாத்தியம். என்ன... 'என் நோய் இதில் எப்படிக் குணமாகும்?’ என்றெல்லாம் ஆய்வு செய்ய நேரம் இல்லாத சமூகத்தின் விளிம்பில் நிற்கும் சாமானியனின் நோயைத் துல்லியமாகக் கணித்து, கட்டிப்பிடிக்கணுமா... கத்தியை எடுக்கணுமா என்பதை புத்தியுடன் கொஞ்சம் அறத்தையும் தீட்டி தீர்மானிக்க வேண்டும் மருத்துவ உலகம். அவ்வளவே!
- நலம் பரவும்..

Aug 7, 2014

உணவு யுத்தம்! – 28



பிஸ்கட் என்ற ஆங்கிலச் சொல் பெஸ்கட் என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து உருவானது. இதன் மூலச் சொல் லத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது என்கிறார்கள். லத்தீனில் பிஸ்க் கோட்டாமா என்றால் இருமுறை சுட்டது என்று பொருள். அதிலிருந்தே பிஸ்கட் உருவாகியிருக்கிறது. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குக்கீஸ் என்றும் மற்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் பிஸ்கட் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில் குக்கீ என்றால் ‘பன்’னை மட்டுமே குறிக்கும் என்கிறார்கள்.

பிஸ்கட் சந்தையைப் பொறுத்தவரை இன்று பெரிய நிறுவனங்களுக்குப் போட்டியாக சிறு தயாரிப்பு நிறுவனங்கள் நிறைய பெருகிவிட்டிருக்கின்றன. அதிலும் கிராமப்புற சந்தையைக் குறிவைத்து சிறிய பிஸ்கட் கம்பெனிகள் நிறைய செயல்படுவதால் அதற்கென தனிச்சந்தை உருவாகியிருக்கிறது. என்றாலும் இந்தியாவின் பிஸ்கட் தயாரிப்பில் 70 விழுக்காட்டை இரண்டு தனியார் நிறுவனங்களே கைவசம் வைத்துள்ளன.

பிஸ்கட் தயாரிப்பின் வரலாறு ரோமில் தொடங்குகிறது. கோதுமையில் செய்த சிறிய துண்டுகளான ரொட்டியை தேனில் தொட்டுச் சாப்பிடும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது. அந்த நாட்களில் பிஸ்கட்டுகளில் இனிப்பு சேர்க்கப்படவில்லை. விற்பனைப் பொருளாக மாறவும் இல்லை. வீட்டில் மட்டுமே பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டன. 16-ம் நூற்றாண்டில்தான் பிஸ்கட், விற்பனைப் பொருளாக மாறியது.
அதன் பிறகு கடற்படை வீரர்களுக்கான உணவாக பிஸ்கட் மாறியது, கடற்பயணத்தில் கெட்டுப்போகாத உணவுப் பொருளாக பிஸ்கட் இருந்ததே இதற்கான முக்கியக் காரணம். ஆனால், அந்த பிஸ்கட்டுகள் இன்று நாம் சாப்பிடுவது போல மிருதுவாக இல்லை. கடினமான பிஸ்கட்டுகளுக்கு பதிலாக இனிப்பும் முட்டையும் சேர்த்து மிருதுவான பிஸ்கட்டுகளைத் தயாரிப்பதில் பெர்சியர்கள் அக்கறை காட்டினார்கள். அதன் காரணமாகப் புதிய வகை மென் பிஸ்கட்டுகள் தயாரிப்பது தொடங்கியது.

15 மற்றும் 16-ம் நூற்றாண்டுகளில் துறவிகள் தங்களின் உணவாக பிஸ்கட்டை வைத்திருந்தார்கள். துறவிகளுக்காகவே விஷேசமான பிஸ்கட்டுகள் மடாலயங்களில் தயாரிக்கப்பட்டன. அதை விரத நாட்களில் பயன்படுத்தி வந்தார்கள். 1595-ல் டீபோல் என்ற ஆர்மீனியத் துறவி ஒருவர் தனது விரத நாட்களில் சாப்பிட்ட பிஸ்கட் பற்றி எழுதியிருக்கிறார். 17-ம் நூற்றாண்டில் யூதர்களால் உருவாக்கப்பட்ட ஜோடன் கேக் என்ற குக்கீ யூத துறவிகளின் விருப்ப உணவாக இருந்தது.

தொழில் புரட்சியின் வழியாக ஈஸ்ட் தயாரிப்பு எளிதானது. பிஸ்கட்டை எம்போஸ் செய்யவும் விரும்பிய வடிவத்தில் வெட்டுவதற்கும் உரிய இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. தாமஸ் விகர்ஸ் என்பவர் இந்த இயந்திரங்களை உருவாக்கினார். புதிய இயந்திரங்களின் வருகையால் பிஸ்கட் செய்வது தனித் தொழிலாக வளர ஆரம்பித்தது.  அதற்கான சந்தை உருவானது. ஆகவே, பிஸ்கட்டுகளை எளிய மக்களும் வாங்கி உண்ணத் தொடங்கினார்கள்.
டீயில் பிஸ்கட்டை முக்கிச் சாப்பிடும் பழக்கம் இங்கிலாந்தில்தான் பிரபலமானது. 19-ம் நூற்றாண்டில் உழைக்கும் மக்களே டீயில் பிஸ்கட்டை ஊறவைத்து சாப்பிட்டு வந்தார்கள். ஆகவே, அதை பிரபுக்கள் மோசமான பழக்கம் என ஒதுக்கி வைத்தார்கள். பணக்கார விருந்தில் டீயில் பிஸ்கட் முக்கி சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால், டீயில் ஊறிய பிஸ்கட்டின் சுவை பலருக்கும் பிடித்திருக்கவே, அது அனைவருக்குமான பழக்கமாக உருமாறியது. இதற்காகவே விசேஷ பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டன. அப்படி அறிமுகமானதே ரஸ்க். இது போர்த்துகீசிய சொல்லான ரோஸ்காவில் இருந்து உருவானது. இந்தியாவிலும் பிரிட்டிஷ் மூலமாகவே ரஸ்க் அறிமுகமானது.
பிஸ்கட்டை எவ்வளவு நேரம் டீயில் முக்கி வைத்திருப்பது என்பது ஒரு கலை. கவனம் தப்பினால் பிஸ்கட் டீயில் விழுந்து கரைந்துவிடும். இதுகுறித்து இயற்பியல் அறிஞர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள் என்கிறார் உணவியல் ஆய்வாளர் மெக்கலன்.
தானியங்களின் துகள்கள் ஒன்றுசேர்ந்தே பிஸ்கட் உருவாகியிருக்கிறது. மண்பானையில் இருப்பது போன்றே, பிஸ்கெட்டிலும் நுண்மையான துவாரங்கள் இருக்கின்றன. டீயில் ஊறும்போது பிஸ்கட்டில் உள்ள இந்த பிணைப்புகள் தளர்ந்துவிடுகின்றன. அதனால் கனம் அதிகமாகி பிஸ்கட் நெகிழ்ந்து தேநீரில் விழுந்துவிடுகிறது.
இதற்குக் காரணமான இயற்பியல் உண்மைகள் குறித்து லென் ஃபிஷர் என்கிற இயற்பியலாளர் விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர் டீயில் எப்படி பிஸ்கட்டை முக்கி சாப்பிடுவது என்பதற்கு ஒரு டிப்ஸ் தருகிறார்.
அதாவது, ‘பிஸ்கட்டை தேநீரில் செங்குத்தாக முக்குவதைவிடவும் படுக்கைவாட்டில் சாய்வாக முக்கினால், அதன் அடிப்புறம் மட்டுமே ஈரமாகும்; மேல்பகுதி அதே மொறுமொறுப்புடன் நனையாமலிருக்கும். ஆகவே பிஸ்கட் உடைந்து விழாது. சுவைப்பதற்கும் எளிதாக இருக்கும்’ என்கிறார்
பிஸ்கெட்டை ஊறவைத்து சுவைப்பதற்காகவே இந்தோனேஷியாவில் டிம்டாம்ஸ்லாம் என்றொரு விழா நடக்கிறது, அதில் பெரும்திரளாக மக்கள் கூடி பிஸ்கெட்டை டீயில் முக்கிச் சாப்பிடுகிறார்கள்
16-ம் நூற்றாண்டு வரை சந்தையில் சர்க்கரை கிடைப்பது எளிது இல்லை. அது விலை உயர்ந்த பொருள் என்பதால் இனிப்பு சேர்க்காத பிஸ்கட்டுகள் அதிகம் தயாரிக்கப்பட்டன. அதில் சுவைக்காகத் தேனை தொட்டுக்கொள்வார்கள்.
ஓட்ஸ் மற்றும் கோதுமையில் வெண்ணைய் கலந்தே பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டன. தற்போது ராகி, சோளம் உள்ளிட்ட பல்வேறு தானியங்களில் பிஸ்கட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. பிரெஞ்சு எழுத்தாளர் மார்சல் புருஸ் தனது நாவலில் தேநீரில் தனக்கு விருப்பமான சிறிய கேக்கை முக்கிச் சாப்பிடுவது குறித்த நினைவுகளைத் துல்லியமாக எழுதியிருக்கிறார்.
மனிதர்களுக்கு பிஸ்கட் பிடித்திருப்பது போலவே நாய்களுக்கும் பிஸ்கட் சாப்பிட பிடித்தேயிருக்கிறது. இன்று அதிகம் விற்பனையாகும் எலும்புத் துண்டு வடிவில் உள்ள நாய் பிஸ்கட்டுகள் இங்கிலாந்தில்தான் அறிமுகமாயின.
இங்கிலாந்தில் ஜேம்ஸ் ஸ்பிராட் என்பவர் 1890-களில் நாய்களுக்கு என மாமிசம் கலந்த விசேஷ ரொட்டிகளைத் தயார் செய்து விற்றுவந்தார். அந்த நாட்களில் நாய்களுக்கான சிறப்பு உணவு வகைகள் தயாரிப்பது காப்புரிமை பெற்றிருந்தது. அதை மீறி  ஜேம்ஸ்பிராட் நாய்கள் உணவைத் தயாரித்தார் என அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஜேம்ஸ் பிராட்டுக்கு நியாயம் கிடைக்கவில்லை, அவர் அமெரிக்காவுக்கு சென்று அங்கே தனது நாய் ரொட்டிகளை விற்பனை செய்யத் தொடங்கி பிரபலமானார்.
1908-ல் பென்னட் என்பவர் இறைச்சி கடை ஒன்றில் மீதமான இறைச்சிகளை அரைத்து அதை கோதுமை மாவுடன் சேர்த்து ரொட்டி செய்து நாய்களுக்குப் போடுகிறார்கள் என்பதை அறிந்து, அதே பாணியில் நாய்களுக்குப் பிடித்தமான எலும்புத்துண்டு வடிவ பிஸ்கட்டுகளை தயாரிக்கத் தொடங்கினார்.
வளர்ப்பு பிராணிகளுக்காகப் பணம் செலவிட விரும்பிய வசதிபடைத்தவர்கள் இந்த நாய் பிஸ்கட்டுகளை விரும்பி வாங்கத் தொடங்கினார்கள். 1910-ல் இதற்கென தனி நிறுவனத்தைத் தொடங்கிய பென்னட், உலகின் முக்கியமான நாய் உணவு தயாரிப்பு நிறுவனமாக உருமாற்றினார்.
இந்தியாவின் முதல் பிஸ்கட் கம்பெனியாக அறியப்படும் பிரிட்டானியா, 1892-ல் கல்கத்தாவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் ரூபாய் 295 முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது,  1910-ம் ஆண்டு மின்சாரவசதி கிடைக்கவே பிரிட்டானியா பிஸ்கட் தன்னை தொழில்நிறுவனமாக வளர்த்துக்கொள்ளத்தொடங்கியது. இதன் காரணமாக இரண்டாம் உலகப்போரின்போது ராணுவ வீரர்களுக்குத் தேவையான பிஸ்கட்டுகளை தயாரித்து விநியோகம் செய்வதற்கு இந்த நிறுவனத்துக்கு உரிமை வழங்கப்பட்டது. இன்று பிஸ்கட் சந்தையில் 4,000 கோடி வர்த்தகம் செய்யும் பிரமாண்ட நிறுவனமாக வளர்ந்தோங்கி நிற்கிறது.
மக்ரோன் எனப்படும் நாவில் இட்டால் கரைந்துவிடும் பிஸ்கட் வகையை அறிமுகப்படுத்தியவர்கள் பெர்ஷியர்கள். 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுப் புகழ்பெறத் தொடங்கிய மக்ரோன் பாரீஸில் புது ருசி கொண்டது. பிரபல கேக் தயாரிப்பாளரான மெய்சன் லாடுரே தயாரிப்பில் உருவான மக்ரோன்கள் ஐரோப்பா முழுவதும் புகழ்பெற்றிருந்தன. இன்றும் பிரெஞ்சு மக்கள் மக்ரோனை விரும்பி உண்ணுகிறார்கள்.
இது போலவே ஐபோன் குக்கி எனப்படும் புதுவிதமான பிஸ்கட் ஒன்று மேற்கு ஜப்பானில் இப்போது மிகவும் பிரபலமாகியுள்ளது. குமிகோ கு‌டோ என்ற பேக்கரி தயாரிப்பாளர் ஐபோன் வடிவ பிஸ்கட்டைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். ஒரு ஐபோன் பிஸ்கட்டின் விலை 33 அமெரிக்க டாலர். அதாவது 1,985 ரூபாய், இந்த பிஸ்கட்டுக்காகப் பலரும் முன்பதிவு செய்து இரண்டு மாதங்கள் வரை காத்திருக்கிறார்கள்.
முழுவதும் எண்ணெய்யில் பொறித்த சமோசா, பஜ்ஜி, வடை போன்றவற்றுக்கு மாற்று என்ற அளவில் பிஸ்கட்டுகளை நாம் ஏற்றுக்கொள்ளலாம். அதிலும் ஓட்ஸ் மற்றும் ராகியில் செய்த பிஸ்கட்டுகள் ஆரோக்கியத்துக்கு உகந்தவை என்கிறார்கள்.
பிஸ்கட் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. தொடர்ந்து பிஸ்கட் மட்டுமே சாப்பிடுகிறவர்களுக்கு வயிற்று உபாதைகள் உருவாகின்றன. டின்களில் அடைத்து விற்கப்படும் பிஸ்கட்டுகள் முறையாகப் பராமரிப்பு செய்யப்படாத காரணத்தால், அதை சாப்பிடுகிறவர்களுக்கு உடல் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மாறிவரும் உணவுச் சூழலில் பாக்கெட்டுகளில் அடைத்த பிஸ்கட்டுகளை விடவும் சிறுதானியங்களில் செய்த ரொட்டி, சுண்டல், அடை போன்றவை ஆரோக்கியத்துக்கான உறுதுணையாக இருக்கும் என்கிறார்கள். பிஸ்கட் அறிமுகமாவதற்கு முந்தைய காலங்களில் நமது மூதாதையர்கள் அவற்றைத்தானே சாப்பிட்டு வந்தார்கள்?

Aug 5, 2014

உணவு யுத்தம்!-27

பிஸ்கட் பிடிக்கிறதா?
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தபோது ஒரு அறிவிப்பைத் தொடர்ந்து கேட்டேன்… ‘ரயில் பயணத்தில் கவனமாக இருங்கள். மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து ஏமாற்றிவிடுவார்கள்’ என்றது அந்தக் காவல் துறை அறிவிப்பு.
ஒரு பக்கம் பயணம் பாதுகாப்பில்லாமல் போய்விட்டதே என்ற அச்சம் எழுந்தபோதும் மறுபக்கம் முகம் தெரியாதவர் கொடுத்தால்கூட பிஸ்கட்டை ஏன் சாப்பிட விரும்புகிறோம் என்ற எண்ணமும் கூடவே வந்தது.

இலக்கியக் கூட்டமோ, கருத்தரங்குகளோ, தொலைக்காட்சி நேர்காணலோ, அறிந்தவர் வீட்டுக்குப் போனாலோ… ஒரே மாதிரியான பிஸ்கட்தான் சாப்பிடத் தருகிறார்கள். காகிதத்தை தின்பது போல ஒரு ருசி.
பிஸ்கட் நம்காலத்தின் சகல நேர நிவாரணி. அழுகிற குழந்தையாக இருந்தாலும் அழையாத விருந்தாளியாக இருந்தாலும் பிஸ்கட்தான் ஒரே தீர்வு.
உப்பு பிஸ்கட், மிளகு பிஸ்கட், ஓம பிஸ்கட், ராகி பிஸ்கட், சாக்லேட் பிஸ்கட். க்ரீம் பிஸ்கட், வேஃபர், ஓட்ஸ் பிஸ்கட், குருவி பிஸ்கட், தேன் கலந்த பிஸ்கட், பழ பிஸ்கட், ஏலக்காய் பிஸ்கட், தேங்காய் பிஸ்கட் இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட ரகங்கள், சுவைகள். 
பேச்சிலர் வாழ்க்கையில் திருவல்லிக்கேணி மேன்ஷனில் வசித்தபோது நண்பர்கள் பிஸ்கட்டை பசிதாங்கி என்பார்கள். பசிக்கிற நேரத்தில் ஒன்றிரண்டு பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டு பசியை ஆற்றிக்கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அவசர உதவிக்காக எப்போதும் கோதுமை பிஸ்கட்டுகள் அறையில் கிடக்கும்.
இந்த பிஸ்கட்டுகளில் ஒன்றை ஒருமுறை காகத்துக்கு உணவாகப் போட்டேன். வேகமாக வந்து அதை கொத்திப் பார்த்த காகம் இதை மனுஷனால் மட்டும் சாப்பிட முடியும் என்பது போல முகத்தைத் திரும்பிக்கொண்டு காலால் உதறி தள்ளிவிட்டு கரைந்தபடியே பறந்தது. சில பிஸ்கட் ரகங்களைப் பசி இல்லாத நேரங்களில் மனிதர்களால் ஒரு துண்டுகூட சாப்பிட முடியாது என்பதே உண்மை.
எனது நண்பர்களில் ஒருவர் எப்போதும் தனது காரில் ஐந்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டுகள் நிறைய வைத்திருப்பார். எதற்கு என கேட்டதற்கு, ‘சாலை சிக்னலில் நின்று பிச்சை எடுப்பவர்களுக்குக் காசு கொடுப்பதற்குப் பதிலாக பிஸ்கட் பாக்கெட்டுகள் தந்துவிடுவேன். காசு கொடுப்பதைவிட பசியைப் போக்குவதே முக்கியம் என நினைக்கிறேன்’ என்றார். ஆச்சர்யமாகவும் புது வழியாகவும் இருந்தது.
இவரைப் போலவே இன்னொரு நண்பர் அலுவலகம் கிளம்பும்போது இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி பைக்கில் வைத்துக்கொள்வார். காரணம் கேட்டபோது, ‘சேல்ஸ்மேனாக வேலை செய்கிறேன். நாங்கள் போகிற வீடுகளில் உள்ள நாய்களை சமாளிக்கத் தினமும் இரண்டு பாக்கெட் பிஸ்கட் தேவைப்படுகிறது’ என்றார்
எப்படி எல்லாம் பிஸ்கட் பயன்படுகிறது பாருங்கள்.
சமீபத்தில் ஒரு பிரபல பிஸ்கட் கம்பெனியின் விளம்பரத்தில் நடிப்பதற்காக இந்தி திரையுலக நட்சத்திரம் ஒருவருக்கு 12 கோடி சம்பளம் என நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. எதற்காக பிஸ்கட்டை இப்படி விளம்பரப்படுத்துகிறார்கள்? ஒரு நடிகருக்கு 12 கோடி பணம் தரப்படுகிறது என்றால், அந்தச் சுமையை யார் மீது ஏற்றுவார்கள்? இன்னொரு டிவி விளம்பரத்தில் பிஸ்கட் சாப்பிடுவதை ஆர்கசம் போல காட்டுகிறார்கள்.
உணவுப் பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்த ஊடக விளம்பரங்களில் எல்லா தந்திரங்களையும் கையாளுகிறார்கள். அவர்களின் குறி சிறார்கள் மற்றும் இளைஞர்கள். ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடிக்கும் மேலாக உணவு விளம்பரங்களுக்குச் செலவிடப்படுகின்றன. இவ்வளவு விளம்பரம் செய்து ஏன் உணவுப்பொருளை விற்கிறார்கள்? இப்படி விற்கப்படும் பொருளின் தரம் மற்றும் அதன் பக்கவிளைவுகள் பற்றி ஏதாவது விழிப்பு உணர்வு நம்மிடம் இருக்கிறதா என்ன?
பீட்சா சாப்பிடுங்கள், பிஸ்கட் சாப்பிடுங்கள், நூடுல்ஸ் சாப்பிடுங்கள், சாக்லெட் தின்னுங்கள், குளிர்பானம் குடியுங்கள் என்று 24 மணி நேரமும் விளம்பரங்கள் நம் வீட்டு ஹாலுக்குள் ஒலித்தபடியே இருந்தால் பள்ளிப் பிள்ளைகளின் மனதைப் பாதிக்காமலா இருக்கும்?
அதன் விளைவு இன்று 80 சதவிகித பள்ளி மாணவர்கள் இடைவேளையின்போது ஐந்து ரூபாய் பாக்கெட் என விற்கும் பிஸ்கட்டுகள் மட்டுமே சாப்பிடுகிறார்கள். அதுதான் பிஸ்கட் விற்பனை மிகவும் உயர்ந்து போனதற்கான முக்கியக் காரணம்.
பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளின் லஞ்ச் பாக்ஸை பற்றி பெற்றோர்கள் பெரிதாக கவனம் கொள்வதே இல்லை, பெரும்பான்மை பிள்ளைகள் சத்துகுறைவான, போதுமான சரிவிகித உணவு இல்லாத மதிய உணவைத்தான் கொண்டுபோகிறார்கள். கீரைகள், பச்சைக் காய்கறிகள், சிறுதானியங்கள் உண்ணுகின்ற மாணவர்களைக் காணுவது அரிதாக இருக்கிறது.
‘டோட்டோசான் ஜன்னலில் ஒரு சிறுமி’ என்ற ஒரு ஜப்பானிய நூல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு பெற்றோரும் மாணவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது என்பேன்.
டெட்சுகோ குரோயாநாகி என்ற பெண், தான் படித்த டோமாயி என்ற பள்ளியைப் பற்றி இந்த நூலில் பகிர்ந்திருக்கிறார். இந்தப் பள்ளியில் வகுப்பறையாக ரயில் பெட்டிகள் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் பள்ளியில் பயின்ற டோட்டோசான், மாணவர்கள் மீது இந்தப் பள்ளி எந்த அளவு அக்கறை காட்டியது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறார்.
வீட்டில் இருந்து மாணவர்கள் கொண்டுவரும் மதிய உணவில் என்ன இல்லையோ, அதைப் பள்ளியே தயாரித்து மாணவர்களுக்கு வழங்குவது வழக்கமாக இருந்தது. அதாவது மாணவர்களின் ஆரோக்கியத்துக்குத் தேவையான காய்கறி, மீன், முட்டை போன்றவற்றைப் பள்ளியே சமைத்து ஒவ்வொரு மாணவரின் டிபன் பாக்ஸிலும் எது குறைகிறதோ அதை சாப்பிடப் பரிமாறுவார்கள். இதனால் மாணவர்களுக்கு சரிவிகித உணவு முறையாக கிடைப்பதுடன் பள்ளி தங்கள் மேல் எவ்வளவு அக்கறையாக உள்ளது என்பதும் உணர்த்தப்படுகிறது.
அதன் காரணமாகவே குழந்தைகள் உணவை வீணடிப்பதில்லை. ஒரு பருக்கையைக்கூட சிதறுவதில்லை. குச்சிகளைக் கொண்டு சாப்பிடப் பழக்குவது என்பது ஓவியம் வரையக் கற்றுத்தருவதற்கு இணையானது. இரண்டிலும் கவனமும் அக்கறையும் தேவை என்கிறார் யமாகுசி என்ற கல்வியாளர்.
பள்ளிக் குழந்தைகள் எடுத்துச்செல்லும் பிஸ்கட்டுகளில் அவர்கள் உடல்நலத்துக்கான புரதம், கொழுப்பு மற்றும் இதர பொருட்கள் எந்த அளவில் உள்ளன, அவை போதுமானவையா, பழங்கள், முளைக்க வைத்த தானியங்கள் ஆகியவை பிஸ்கட்டுகளுடன் கொடுத்து அனுப்பலாமா என்பதைப் பற்றி பெற்றோர் அக்கறைகொள்ள வேண்டும்.
மாணவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதைப் பற்றி எந்தப் பள்ளியும் அக்கறைகொள்வது இல்லை. அசைவம் சாப்பிடக் கூடாது, துரித உணவுகள் கூடாது என்ற கட்டுப்பாடுகள்தான் இருக்கிறது. ஆரோக்கியமான உணவைத்தான் குழந்தைகள் சாப்பிடுகிறார்களா என பள்ளிகள் கண்காணிப்பது இல்லை. அதில் அக்கறை செலுத்துவதும் இல்லை.
சில பள்ளி வளாகத்தில் செயல்படும் கேன்டீன்களும் விடுதிகளிலும் தயாரிக்கப்படும் உணவு வகைகள் மோசமான தரத்தில் இருக்கின்றன. அது மாணவர்களின் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கும் என்பதைக்கூட பள்ளி கண்டுகொள்வது இல்லை.
நாலு பிஸ்கட்டும் பாலும் கொடுத்துவிட்டால் பையன் தானே வளர்ந்துவிடுவான் என்ற தவறான கற்பிதம் நிறைய பெற்றோர்களுக்கு இருக்கிறது. மருத்துவர்கள் இதற்கு மாற்றான அறிவுரைகள் கூறும்போது கீரை, பழம், காய்கறிகள் எல்லாம் பையன் சாப்பிட மாட்டான் என பெற்றோர்களே ஒதுக்கிவிடுகிறார்கள்.
பிஸ்கட் நமக்கு பிடித்தமான உணவுதான், ஆனால் தேவையான உணவா என்று நாம் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
100 வருஷங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் வழியேதான் பிஸ்கட் நமக்கு அறிமுகமானது. ஆரம்ப காலங்களில் அதை நோயாளிகளின் உணவு என்றே வகைப்படுத்தி வைத்திருந்தார்கள். பின்பு அது பணக்காரர்களின் சிறு தீனியாக உருமாறியது… விருந்துகளில் பரிமாறப்பட்டது.
இன்றும் சென்னையில் காலை எழுந்தவுடன் பிஸ்கட் உடன் டீ சாப்பிடும் பழக்கம் அடித்தட்டு மக்கள் பலரிடமும் காணப்படுகிறது. பொறை டீ, பிஸ்கட் டீ, பன் டீ என ஏதாவது ஒன்றுடன்தான் காலையைத் தொடங்குகிறார்கள். பிரிட்டிஷ் காலத்துப் பழக்கம் இன்னமும் நம்மை விட்டுப் போகவில்லை.
சிறுவயதில் குருவி பிஸ்கட் என்ற ஒன்றை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறேன். குருவி, யானை, ஒட்டகம், சிங்கம் போன்ற வடிவங்களில் தயாரிக்கப்படும் பிஸ்கட் யாருடைய கற்பனை என அப்போது தெரியாது. வளர்ந்த பிறகே அந்த பிஸ்கட்டுக்குப் பின்னாலும் ஒரு வரலாறு இருப்பதை அறிந்தேன்.
விலங்குகளின் வடிவத்தில் பிஸ்கட் தயாரிக்கும் பழக்கம் இங்கிலாந்தில்தான் துவங்கியது. ஆரம்ப காலங்களில் யானை, கரடி, ஒட்டகம், குரங்கு, புலி, முதலை என 54 வகையான விலங்குகளின் வடிவங்களில் பிஸ்கட்டுகள் செய்யப்பட்டன. பிரிட்டனில் இருந்து அமெரிக்கா சென்ற இந்த யானை பிஸ்கட்டுகளை பெர்னாம் சர்க்கஸ் கம்பெனி தனது விளம்பரத்துக்காகப் பயன்படுத்தியது. சர்க்கஸ் பார்க்கப் போகிறவர்கள் விலங்கு வடிவ பிஸ்கட்டுகளை வாங்கிச் சாப்பிட விரும்பினார்கள். அதனால் இந்த பிஸ்கட்டுகள் புகழ்பெறத் தொடங்கின.
அதன் பிறகு கிறிஸ்துமஸ் காலங்களில் சிறார்களை மகிழ்விப்பதற்காக விலங்கு வடிவ பிஸ்கட்டுகள் கொண்ட டின்கள் பரிசுப் பொருளாக உருமாறின. இப்போதும் அது போன்ற டின்னில் அடைத்த விலங்கு வடிவ பிஸ்கட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் இதில் 54 விலங்குகளின் உருவமில்லை, 26 மட்டுமே உள்ளன. புதிதாக எந்த விலங்கின் வடிவத்தில் பிஸ்கட் தயாரிக்கலாம் என சிறார்களிடமே ஆலோசனை கேட்ட பிஸ்கட் கம்பெனிகள் சூப்பர் ஹீரோக்கள், மற்றும் ஏலியன்ஸ் உருவங்களில் தற்போது பிஸ்கட் தயாரிக்கிறார்கள்.
பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா என்ற வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. அதன் நன்மை தீமையை முடிவு செய்வது அத்தனை எளிதானது அல்ல….