டெல்லி செங்கோட்டையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக கொடி ஏற்ற
பாராளுமன்றதேர்தலில் அ.தி.மு.க. 40தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற நாம்
அனைவரும் பாடுபடவேண்டும் என்று ராமநாதபுரத்தில் கழக கொள்கை பரப்பு துணை
செயலாளர் நாஞ்சில்சம்பத் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க சார்பில் அரசின் நூறாண்டு பேசும்
ஓராண்டு சாதனையை விளக்கியும், தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம்
இழைக்கும் கருணாநிதியின் கபட நாடகத்தை அம்பலபடுத்தியும் ராமநாதபுரத்தில்
பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கே.சி.ஆணிமுத்து தலைமையில் நடைபெற்றது.
கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, அமைச்சர்
டாக்டர் சுந்தரராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர்
அங்குச்சாமி வரவேற்று பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் கழக கொள்கைபரப்பு
துணை செயலாளர் நாஞ்சில்சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது:- வெற்றி
தோல்விகளை பற்றி கவலைப்படாமல் கடந்த 19 ஆண்டுகள் செயல்பட்ட
இயக்கத்திலிருந்து அ.தி.மு.க.வில் இணைவேன் என்று நான் கனவில் கூட
நினைத்தது கிடையாது. அந்த இயக்கத்தில் வாழ்க்கையின் வசந்தத்தை பார்க்காமல்
வறுமையில் வாடி, அடக்கு முறைக்கு உள்ளாகி அங்கு இருக்க முடியாத நிலைக்கு
தள்ளப்பட்டு 67நாட்கள் முடிவெடுக்க முடியாமல் பாம்பின் வாயில்
மாட்டிக்கொண்ட தேரையைப்போல் திண்டாடினேன். அதன்பின்னர் தான் தேனும் கெடாது
தன்னை சார்ந்தவர்களையும் கெடவிடாது என்று உள்ள அ.தி.மு.க.வில் சேர முடிவு
செய்தேன். முதலமைச்சர் என்னை கழகத்தில் இணைத்து எனக்கு பதவி கொடுத்து
அழகுபார்த்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் 40தொகுதிகளிலும் முதலமைச்சர்
வெற்றி பெற வேண்டும் என்பதை எனது லட்சியமாக கொண்டு மாவட்டந்தோறும்
கிளம்பிவிட்டேன். நான் எத்தனையோ மேடைகளில் பேசியிருந்தாலும் இந்த
இயக்கத்தில் சேர்ந்த பிறகு தான் அரசனுக்குரிய கம்பீரத்துடன் மேடையில்
ஏற்றப்பட்டுள்ளேன். இன்று நாடெல்லாம் அதிகம் என்ன எதிர்பார்க்கிறது.
இந்தியாவின் அடுத்த பிரதமர் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் என்ற
வார்த்தைதான் நாட்டில் அதிகம் கேட்கிறது. டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி
மன்ற கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து பேச வாய்ப்பளிக்காமல்
மணி அடித்தவர்களுக்கு சாவு மணி அடிக்கும் நாள் நெருங்கி விட்டது. காலம்
மாறும், இந்திய அரசியலின் தட்பவெட்பம் மாறும். மணி அடிக்கும் இடத்தில்
முதலமைச்சர் ஜெயலலிதா நிச்சயம் இருப்பார். மத்தியில் உணர்ச்சியற்ற பிரதமரை
வைத்துக்கொண்டு தமிழர்களின் உரிமை போராட்டத்தை நாம் நடத்தி கொண்டு
இருக்கிறோம். தமிழகத்தினை மின்மிகை மாநிலமாக முதல்அமைச்சர் ஜெயலலிதா
வைத்திருந்தார். ஆனால், தேவை கருதி மின்திட்டங்களை செயல்படுத்தாமல்
தமிழகத்தை மின்தேவை மாநிலமாக மாற்றியவர் கருணாநிதி. கருணாநிதியால் தமிழக
மின்வாரியம் திவாலாகிவிட்டது. அந்த நிலையை முதலமைச்சர் ஜெயலலிதா மாற்றி
வருகிறார். கடந்த 5ஆண்டு கால கருணாநிதி ஆட்சியில் வெறும் 206 மெகாவாட்
மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்துள்ளார். இதனால் மின்தேவை
அதிகமாகிவிட்டது. தற்போது மின்தடைக்காக கருணாநிதி பொதுக்குழு கூட்டம்
போடுகிறார். டெல்லியில் உபரியாக உள்ள மின்சாரத்தை தமிழகத்திற்கு தர
வேண்டும் என்று மத்தியில் அங்கம் வகிக்கும் கருணாநிதி ஒரு தீர்மானம்
போட்டாரா?. பிரதமருக்கு நமது கோரிக்கைக்காக கடிதம் எழுதுவது செத்தவனுக்கு
முன் தாரைதப்பட்டை வாசிப்பது போல ஆகும். இதனால் முதலமைச்சர் யாரையும்
எதிர்பார்க்காமல் உச்சநீதிமன்றத்தை அணுகி மின்சாரத்தை கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் மின்சாரம் வழங்க மின்பாதை இல்லை என்று கூறிஉள்ளனர்.
அதிகாரிகளுடன் ஆய்வு செய்து மின்பாதை உள்ளது என்று முதலமைச்சர்
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தமிழகத்திற்கு மின்சாரம்
வழங்காத பிரதமர் பாகிஸ்தானுக்கு 5ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்குகிறார்.
காவிரி தண்ணீர் இல்லாமல் இன்று தஞ்சை பகுதி வறண்டு போய்விட்டது. தண்ணீரை
தர மறுக்கும் கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் கோர்ட்டு உத்தரவை ஏற்று
சந்தித்தார். ஆனால், கர்நாடக முதல்வர் தமிழகத்திற்கு ஒரு சொட்டு
தண்ணீர்கூட தரமுடியாது என்று மறுத்துவிட்டார். இதனால் மீண்டும் கோர்ட்டு
உதவியை முதலமைச்சர் நாடி உள்ளார். காவிரி தாய் தமிழகத்தில் கால் வைக்க
காவிய தாயால் மட்டுமே முடியும். ஆனால் கருணாநிதி என்ன செய்தார். அவருக்கு
வரும் தேர்தலில் 40தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்காக குடிகாரனாக
இருந்தாலும் கூட்டணி வைக்க தயார் என்ற நிலையில் உள்ளார். முல்லை பெரியாறு
பிரச்சனையில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்தபோது அதை கருனாநிதி
அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்க
முடியாது என்று கேரள முதல்வர் அறிவித்தார். அப்போது மட்டும் தமிழக
முதல்வராக ஜெயலலிதா இருந்தால் அப்படி சொல்ல விட்டிருப்பாரா?. தமிழக
சட்டமன்றத்தில் முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை
விட்டுத்தர முடியாது என்று நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீாமானத்தை ஆதரிக்க
கருணாநிதி முன்வரவில்லை. பொறுப்புமிக்க எதிர்க்கட்சி தலைவரும்
முன்வரவில்லை. பாராளுமன்ற தேர்தல் மேகங்கள் திரண்டு வருகின்றன.
காங்கிரஸ்-பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்று தீர்க்கமாக முதலமைச்சர்
அறிவித்துவிட்டார். காங்கிரஸ் தமிழகத்தின் எந்த பிரச்சனைக்கும் ஆதரவாக
இருந்தது இல்லை என்பதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளார். இத்தாலி கப்பல்
துப்பாக்கி சூடு நடத்தி இருவர் பலியான சம்பவத்தில் ரூ.3கோடி நஷட்டு பெற்று
இத்தாலியர்களை கைது செய்தது மத்திய அரசு. இதற்கு பின்பலமாக மத்திய ராணுவ
மந்திரி அந்தோணி இருந்தார். ஆனால், தமிழக மத்திய மந்திரிகள் இந்த
மக்களுக்காக என்ன செய்தார்கள். இந்திய கப்பல் ரோந்து வரும் என்று மத்திய
மந்திரி வாசன் அறிவித்தால் சிங்களபடை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
நடத்த அருகில் வருவார்களா?. அழகிரியின் அதிகாரம் பறிக்கப்பட்டு விட்டதாக
தகவல்கள் வெளியாகி வருகின்றன. குடும்ப அரசியல் நடத்தினால் இந்த நிலைதான்
வரும். கருணாநிதி மீண்டும் வந்திருந்தால் தமிழகத்தில் மேல்சபை கொண்டு
வந்திருப்பார். அவர் தேர்தலில் ஜெயித்திருந்தால் ராஜாத்தி மேல்சபை
தலைவராகி இருப்பார். நல்லவேலை கருணாநிதி தேர்தலில் வெற்றி பெறவில்லை.
முதல்அமைச்சர் ஜெயலலிதா அந்த மேல்சபை தீர்மானத்தை ரத்து செய்து விட்டார்.
இலங்கையில் நான்காம் தமிழ் ்ழப்போர் நடத்த காரணமாக இருந்தவர் சோனியா.
ஆதற்கு ஆதரவாக இருந்தவர் கருணாநிதி. ஆனால், மக்களை ஏமாற்ற டெசோ மாநாடு
நடத்துகிறார். சாமானியர்களையும் அரியணையில் அமரவைத்து அழகு பார்க்கும்
அ.தி.மு.க.வை போல சோஷலிச கட்சி இந்தியாவில் எதுவும் இல்லை. இந்திய
அரசியலில் ஆண்மை உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க. தான். தற்போது மத்திய அரசு
கொண்டு வந்துள்ள சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்பது இந்தியாவின்
சுதந்திரத்திற்கு ஆபத்து ஆகும். தற்போது இந்தியாவின் தலைவிதியினை, தட்ப
வெட்ப நிலையை மாற்றும் சூழ்நிலை வந்து விட்டது. கேட்கும் இடத்தில் இருந்து
நாம் கொடுக்கும் இடத்திற்கு வரவேண்டும். யார் அந்த இடத்தில் இருந்தால்;
தமிழகத்திற்கு பலன் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். அதற்கான காலம்
கனிந்துவிட்டது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் கொடி ஏற்றும் முதலமைச்சர்
ஜெயலலிதா டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றும் நிலை வரவேண்டும். இதற்கு
பாராளுமன்ற தேர்தலில் 40தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெறவேண்டும். இந்த
வெற்றிக்காக நாம் அனைவரும் அயராது பாடுபட்டு வெற்றிகனியை
சமர்ப்பிக்கவேண்டும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி
தலைவர் சுந்தரபாண்டியன், மாவட்ட துணைசெயலாளர் முனியசாமி, மாவட்ட மகளிர்
அணி செயலாளர் கவிதா சசிக்குமார், முன்னாள் நகர் செயலாளர் கே.சி.வரதன்,
அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சேதுபாலசிங்கம், ஒன்றிய செயலாளர்கள் மண்டபம்
தங்கமரைக்காயர், ராமநாதபுரம் அசோக்குமார், திருப்புல்லாணி முனியாண்டி,
ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்த், போகலூர் நாகநாதன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய
தலைவர் ராஜேஸ்வரி, மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் முனியம்மாள் முனியசாமி,
மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் மருதுபாண்டியன், பட்டணம்காத்தான்
ஊராட்சி மன்ற தலைவர் சித்ராமருது, சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர்
நூர்முகம்மது, பாசறை செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், உள்பட பலர் கலந்து
கொண்டனர்.
No comments:
Post a Comment