Feb 19, 2013

புலித்தடம் தேடி.. மகா. தமிழ் பிரபாகரன்- பாகம் 14



தமிழனின் கறி இங்கு கிடைக்கும் என்று 1983 ஜூலை படுகொலைகளின்போது பலகை​யில் எழுதிவைத்து ரத்தம் குடித்த சிங்கள ராணுவம்தான், இன்று தமிழரைக் காக்கும் சமாதானத்தை நிலைநிறுத்தும் படையாகவும் காட்டிக்கொள்ள ஆரம்பித்துள்ளது.
அந்தப் படை யின் கட்டுப்பாட்டில்தான் அனைத்து ஊர்களும் இருக்கின்றன. நான் வவுனியாவை அடைந்த இந்நேரம், ஓரள வுக்குப் பழக்கப்பட்ட ஊராக கிளிநொச்சியும் புதுமாத் தளனும் எனக்கு அடையாளப்பட்டது. வவுனியாவில் இப்போது நான் இருந்தாலும், அவ்வூர்களை விட்டு பிரிந்த என் இருப்பு இன்றுவரை வெகுவாக பாதிக் கிறது. கடலைக் கண்டால் அழும் அளவுக்கு நந்திக்கடல் என்னை மாற்றிவிட்டது.

 ஏ9 மரண நெடுஞ் சாலை மீண்டும் மீண்டும் தமிழ் மண்ணில் ராணுவம் நிலைகொண்டு உள்ளதை எண்ணச் செய்து நெஞ்சில் எரிமூட்டிக்கொண்டே இருந்தது. அந்த எரிமூட்டலின் விளைவாகக் கிடைத்த ராணுவ ஆக்கிரமிப்பு ஆதாரங்கள், புலிகளோடு சமாதானம் பேச வந்த அரசாங்கங்களின் பேச்சுகளையே என் மனத்திரையில் ஒளிரச் செய்தது.

 தமிழர்களின் பிரதிநிதிகளாக நாங்கள் இருக்கி றோம் என்று சொல்லிக்கொண்ட புலிகள், நியாயமான தீர்வுகளுக்கு ஒப்புக்கொள்ளவே இல்லை - இலங்கையும் இந்தியாவும் தங்க ளுக்கு இடையேயான ஒப்பந்தங்களை புதுப்பிக்கும்போது எல்லாம் இப்பேச்சை பேசாமல் இருக்காது. இனிமேல் நான் தமிழர் களின் அபிப்ராயம் பற்றி கவலைப்படப் போவ தில்லை. அவர்களுடைய உயிர்களோ கருத்துக்களோ எங்களுக்குப் பொருட்டல்ல.

 தமிழர்களைப் பட்டினி போட்டால், சிங்கள வர்கள் சந்தோஷப்படுகிறார்கள் என்று இலங் கையின் ஜனாதிபதி ஜெயவர்த்தனே அளித்த பேட்டியே, தமிழர்களுக்கு எப்படியான தீர்வை அன்றும் இன்றும் இலங்கை அரசாங்கம் முன்வைத்திருக்கும் என்பதற்கான ஒப்புதல் ஆதாரம். இப்படி சிங்களர்களுக்கு இனவாதத்தைத் தூண்டித் தூண்டியே, இன்று வரை சிங்கள அரசுக் குடும்பங் கள் இலங்கையில் அரசியல் செய்து வருகிறது. அந்த அரசுக் குடும்பங்களின் ஏவல் படைகளாக சிங்கள ராணுவம் கொக்கரித்து ஆடுகிறது.

 இலங்கை அரசின் கணக்குப்படி ராணுவப் பலத்தின் எண்ணிக்கை 1970-ல் 8,500 பேர், 1983-ல் 12 ஆயிரம் பேர், 1986-ல் 30 ஆயிரம் பேர், 1987-ல் 40 ஆயிரம் பேர், 1990-ல் 50 ஆயிரம் பேர், 1994-ல் 1,04,000 பேர், 1996-ல் 90 ஆயிரம் பேர், 2001-ல் 95 ஆயிரம் பேர், 2002-ல் 1,18,000 பேர், 2009-ல் 2,40,000 பேர். பாதுகாப்புச் செய லகம் 2010-ல் வெளியிட்ட கணக்குப்படி 4,50,000 பேர் இலங்கை ராணுவத்தில் இருக்கின்றனர்.

 தமிழ் அரசியல் நண்பர் ஒருவர் ஒரு கணக்கீட்டைச் சொன் னார். 2012-ல் இலங்கை ராணுவம் ராணுவத்தில் இருந்து ஓடியவர்கள் பற்றி ஒரு கணக்கீட்டை வெளியிட்டு இருந்தது. அதில் 71,458 பேர் ராணுவத்தைவிட்டு ஓடி விட்டதாகவும், அவர்களைத் தேடும் பணி தொடர் கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதான் சிங்கள ராணு வத்தின் உண்மையான நிலை. அவர்கள் போராடுவது என்பது சம்பளத்துக்காக. ஆனால், தமிழர்கள் போராடு வது உரிமைக்காக.

 இப்போது வேண்டுமானால் சம்பளத்துக் காகப் போராடியவர்கள் வென்றதாக இருக்கலாம். ஆனால், தமிழர்கள் மீண்டு வருவது உறுதி. பிரபாகரனை (1983 - 2009) எதிர்த்து தமிழர்களைப் பின்னடைவு செய்ய இலங்கையின் ஐந்து ஜனாதிபதிகள் (ஜெயவர்த்தனே, பிரேமதாச, பண்ட விஜேதுங்க, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்‌ஷே) வரவேண்டி இருந்தது என்றால், அவர்களின் வீரம் எப்படிப்பட்டது என்பது உலகுக்கே தெரி யும். எல்லா நாட்டிடமும் உதவிகள் பெற்றுத்தான் தமிழர்களைத் தோற்கடிக்க முடிந்தது என்றால், இந்த உலகமே தமிழனை அழிக்க போரிட்டு உள்ளது. அப்படி என்றால் 2009-ல் புலிகளை எதிர்த்து நடந்தது மூன்றாவது உலகப் போர்தானே என்றார் அந்த நண்பர்.

 இன்று, புலிகள் மீது சர்வதேச அளவில் வைக்கப்படும் பெரும் குற்றச்சாட்டு கட்டாய ஆள்சேர்ப்பு, சிறுவர்களை படையில் சேர்த்தல். இதைப் பற்றி புலிகள் காலத்தில் இருந்தே பத்திரிகையாளராக இருந்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன். இயக்க காலத்தில் ஆள் பற்றாக்குறை காரணமாக கட்டாய ஆள்சேர்ப்பு நடந்தது உண்மைதான். ஆனால், இலங்கை அரசு காட்டுவது போல உலக நாடுகள் சொல்வது போல 10 வயதுக்குக் கீழான சிறுவர்களை எல்லாம் சேர்க்கவில்லை. அந்தக் குழந்தைகள் புலி உடுப்பு அணிந்திருந்ததை வைத்து, அவர்களை போராளிகள் என்று கணித்துக் கொண்டனர்.

 அந்தக் குழந்தை களுக்கு புலி உடுப்பு அணி வது என்பது மாவீரர் தினத்தில் தனது தந்தைக்கோ தாய்க்கோ உறவி னருக்கோ வீரத்துக்கான மரியாதையை செலுத் துவதற்காக. அதை ஒரு போர்க்குற்றமாக அடையாளப் படுத்துகிறார்கள். புலிகள் இவர்களைப் பிடித்துச் சென்றனர், அவர்களைப் பிடித்துச் சென்றனர் என்கிறதே அரசாங்கம்... அப்படிப் புலிகள் பிடித்துச் சென்று பின்னர் வீட்டுக்கே திருப்பி அனுப்பிவிட்ட பெண்ணை, ஏன் ராணுவம் தேடிப்பிடித்து கற்பழித்தது? வீட்டுக்கு ஒரு வீரன் என்ற பேரில்தான் இயக்கம் ஆட்சேர்ப்பு செய்தது.

 அப்படியே இந்தப் பெண்ணையும் அழைத்துப் போயிருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் குடும்பத்தில் அப்பா, சித்தப்பா, பெரியப்பா, மாமா, அக்கா என்ற பல விதத்தில் 13 மாவீரர்கள். வீட்டுக்கு மீதி இருப்பது அந்த ஒரு பெண் மட்டும்தான் என்றதால், புலிகள் வீட்டுக்கு திருப்பி அனுப்பி உள்ளனர். அந்தப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்த ராணுவம், நீ கொட்டியா (புலி)தானே என்று கேட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.

 18 வயது அடைந்த மனதளவில் முதிர்ச்சி இல்லாத சிங்கள இளைஞர்கள் பலர் பள்ளி முடித்ததும் இலங்கை ராணுவத்தில் சேர்க்கப்படுகிறார்கள். அப்படி என்றால் ராணுவத்தில் சேர 18 வயது ஆகிவிட்டால் போதுமா? பிரபாகரனே 16 வயதில் போராட வந்தவர். அப்படி எனில் சர்வதேச மனித உரிமை விதிப்படி பிரபாகரன் சிறுவர் போராளி என்றால் தகுமா? நாங்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். போராட வயதைப் பார்த்துக்கொண்டு இருந்தால் நாங்கள் வாழவே முடியாது. என்னடா, ஒரு பத்திரிகையாளனா இருந்து புலியப்பத்தி பேசறனு நினைக்காதீங்க. இந்த மண்ணுல வந்து வாழ்ந்து பாத்தாதான் தெரியும், நாங்க அனுபவிக்கும் வேதனை. பத்திரிகை சுதந்திரத்தில் கடைசி வரிசை நாடாக உள்ள சிங்கள தேசத்துக்கு புலிகளைப்பற்றி பேச அருகதையே இல்லை என்று வெம்பினார்.

 போரில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைத்திருந்த செட்டிக்குளத்தை நெருங்குகிறேன். அடைத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் பிள்ளைகளுக்கு பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் விதமாய் சிங்கள தேசிய கீதத்தை கற்றுக்கொடுத்து, சிங்களம் அறியா பிஞ்சுகளை சிறீலங்கா மாத அப சிறீலங்கா நமோ நமோ நமோ நமோ மாத என உளற வைத்துள்ளனர்!
ஊடறுத்துப் பாயும்...

No comments: