மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே இன்று காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானது. மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதையடுத்து அரசாணை நகல் தமிழகத்திற்கு வழங்கப்பட உள்ளது.
தமிழகம் - கர்நாடகம் இடையேயான, காவிரி நதி நீர் பிரச்னையை தீர்க்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 1989ல், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம், 1990ல், இடைக்கால தீர்ப்பை வழங்கியது.அதை, உடனடியாக அரசிதழில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்பின், 2007ல், நடுவர் மன்றம், தன் இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆனால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து, உடனடியாக, சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்தப் பிரச்னையால், இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடாமல், ஆறு ஆண்டுகளாக, மத்திய அரசு காலம் கடத்தி வந்தது.இந்நிலையில், இந்த விவகாரத்தில், சமீபத்தில் தலையிட்ட, சுப்ரீம் கோர்ட், "இன்றைக்குள், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட வேண்டும்' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.உடன், இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில், மத்திய சட்ட அமைச்சகமும், நீர்வளத்துறை அமைச்சகமும் தீவிரம் காட்டின. அதனால், சில நாட்களுக்கு முன்னதாகவே, இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகலாம் என, நம்பப்பட்டது. ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவால், அரசிதழில் வெளியிடுவது தடைபட்டது.
இந்நிலையில் இன்று காவிரி நடுமன்ற தீர்ப்பு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதற்கான அரசாணை நகல் தமிழகம், புதுச்சேரி, கேரள ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.இனி தமிழகத்திற்கு தடையின்றி 419 டி.எம்.சி. தண்ணீர் தடையின்றி கிடைக்கும்.
நீர்பங்கீடு எவ்வளவு
அரசிதழில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. ,கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி., கேரளாவிற்கு 30 டி.எம்.சி. , புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி., தண்ணீர் தடையின்றி கிடைக்கும்.
No comments:
Post a Comment