May 22, 2013

''தண்ணி அடிக்கும் இடத்தில் யார் படம் வைப்பது என்று அண்ணிக்குத் தெரியாதா?'' வெளுத்துகட்டும் நாஞ்சில் நம்பத்


'டாஸ்மாக் கடைகளில் ஜெயலலிதா படத்தைத்தான் மாட்ட வேண்டும்’ என்று, பிரேமலதா விஜயகாந்த் கொளுத்திப் போட்டிருக்கும் தீ, அ.தி.மு.க. வட்டாரத்தைக் கொந்தளிக்கவைத்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் நடந்த கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், விஜயகாந்தை திட்டித் தீர்த்தார். அவரைச் சந்தித்தோம். 
'டாஸ்மாக் கடைகளுக்கு 'அம்மா டாஸ்மாக்’ என்று பெயர்சூட்டி முதல்வர் ஜெயலலிதா படத்தை ஒவ்வொரு கடையிலும் வைக்க​வேண்டும்’ என்று, திருப்பூர் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளாரே?'
''இதுவரை விஜயகாந்த் மட்டும்தான் பிதற்றி வந்தார். இப்போது பிரேமலதாவும் தொடங்கிவிட்டார்.
நீதியை நிலைநாட்டும் இடங்களில் எல்லாம், மகாத்மா காந்தி படம் இருக்கும். மனிதநேயம் குடியிருக்கும் இடங்களில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படம் இருக்கும். தன்மானம் உள்ள இடத்தில், தந்தை பெரியார் படம் இருக்கும். தமிழ்நாட்டை நேசிப்பவர்கள் இல்லங்களில், தமிழ்நாடு என பெயர் சூட்டிய அண்ணா படம் இருக்கும். பசித்த வயிற்றுக்கு பால் சோறுபோட்டு அன்னம் பாலிக்கும் இடத்தில் எல்லாம், எங்கள் அன்னபூரணி மாண்புமிகு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா படம்தான் இருக்கும். சரக்கு விற்கும் இடங்களில் தண்ணி அடிப்பவன் படத்தைத்தான் வைக்க வேண்டும். இதை அண்ணி புரிந்துகொள்வது நல்லது.''
'என் பேச்சு முன்ன, பின்னத்தான் இருக்கும். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு ஜெயிக்கத் தெரியும்’ என்று விஜயகாந்த் பேசியதை கவனித்தீர்களா?'
''அவர் என்ன பேசுகிறார் என்று எதிரில் இருப்பவர்களுக்கே புரியவில்லை. அவர் பேசவில்லை. அவரை ஒரு 'சக்தி’ பேசவைக்கிறது. ஓர் எதிர்க்கட்சித் தலைவர் புள்ளிவிவரங்களை அள்ளிக்கொட்டி ஆதாரங்களை அடுக்கிக்காட்டி ஆளும் அரசாங்கத்தை ஆற்றுப்படுத்த வேண்டும். வெந்ததைத் தின்று வாயில் வந்ததைப் பேசுகிற ஒரு பேட்டை பிஸ்தாவைப் போல, எதிர்க் கட்சித் தலைவர் பேசுகிறார். மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அம்மாவின் ஆட்சி மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் சொல்வதற்கு அவருக்கு வக்கும் இல்லை. துப்பும் இல்லை. இவர் எதிர்க் கட்சித் தலைவர் ஆனதே எங்கள் அம்மா போட்ட பிச்சை.

அவருக்கு ஜெயிக்கத் தெரிந்தது ஒரே ஒரு தொகுதியில்தான். அம்மாவின் கருணைப் பார்வையால் 29 இடங்களையும் எதிர்க் கட்சி அந்தஸ்தையும் பெற்றார். 'எனக்கு ஜெயிக்கத் தெரியும்’ என்று அவர் சொல்வதைக் கேட்டு, அவரது கட்சிக்காரர்களே சிரிக்கிறார்கள். நாங்கள் அதை வேடிக்கை பார்க்கிறோம்.''
'வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள்  என்கிறாரே? '
''எம்.எல்.ஏ.வாக இருந்தவர், எதிர்க் கட்சித் தலைவர் ஆனது எங்கள் அம்மாவின் விஸ்வரூபம். அகலிகை மீது ராமன் கால்வைத்ததால் சாபவிமோசனம் கிடைத்தது. காக்கையின் மீது அம்மா கால் வைத்ததால், அவர் எதிர்க் கட்சித் தலைவராகிவிட்டார். நாடாளுமன்றத் தேர்தல் இருக்கட்டும். உள்ளாட்சித் தேர்தலில் எங்கே போனார்?
இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஆளும் கட்சிக்கு 95 சதவீகித வெற்றி கிடைத்தது கடந்த உள்ளாட்சித் தேர்தலில்தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கிடைக்காத இந்த வெற்றி, அம்மா ஆட்சிக் காலத்தில் சாத்தியமானது. கட்டிய மனைவிக்காகவும் மச்சானுக்காகவும் மட்டும் கட்சி நடத்துகிற புட்டிப் பேர்வழி, விஸ்வரூபம் எடுப்பதெல்லாம் நடக்கிற காரியமல்ல. கூவம், பாவத்தைப் போக்கினாலும் போக்கும்... கள்ளிப்பால், கண் நோயை நீக்கினாலும் நீக்கும்... ஓலமிடும் கடல், ஊமை ஆனாலும் ஆகும். ஒரு நாளும் இனி தே.மு.தி.க தேறாது. அவர் அகந்தையின் உச்சியில் நின்று ஆரவாரம் செய்கிறார். இந்த மாயாஜாலப் பேர்வழி மண்ணைக் கவ்வும் நாள் வெகுதொலைவில் இல்லை.''
''எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்தின் செயல்பாடு எப்படி?''
''எதிர்க் கட்சித் தலைவர், நிழல் அமைச்சரவைக்குத் தலைமை தாங்குகிறவர். ஆளும் கட்சி கொண்டுவரும் தீர்மானங்களை நிறைவேற்ற ஆரோக்கியமான விவாதங்களை முன்வைக்க வேண்டியவர். ஆனால், இவர் அப்படிச் செய்கிறாரா? முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்று காலத்தால் அழியாத தீர்மானத்தை அம்மா கொண்டுவந்தபோது, அதைக்கூட ஆதரிக்கும் மனோபாவம் இல்லாதவர்.
கோவை கருத்திருமன், பொன்னப்ப நாடார், அகிலமே ஆச்சரியப்படும் மாண்புமிகு அம்மா ஆகியோர் உட்கார்ந்த எதிர்க் கட்சி ஆசனத்தில் எதுவுமே தெரியாத ஒருவர் உட்கார்ந்திருப்பது தமிழகத்துக்கு இழுக்கு. இந்த அழுக்கும் இழுக்கும் எப்போது விலகும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.''
- எஸ்.முத்துகிருஷ்ணன்
படம்: கே.ராஜசேகரன்

No comments: