Sep 11, 2013

வாழ்க அண்ணா! வெல்க அவரது கொள்கை!


1935ல் நான் பெத்துநாயக்கன்பேட்டை காங்கிரஸ் கமிட்டிச் செயலாளராக இருந்தேன். இந்த நேரம் சென்னை வர இருந்த நேருவுக்கு வரவேற்புக் கொடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டேன். அப்போது நானும் அண்ணாவும் நல்ல நண்பர்கள். நான், செங்கல்வராயன், அண்ணா மூவரும் பெத்துநாயக்கன்பேட்டையில்தான் சந்திப்போம். நான் அண்ணாவுடன் பழகுவதைப் பல காங்கிரசு நண்பர்கள் கண்டிப்பார்கள்.அண்ணா பழகுவதற்கு இனிய நண்பர். அவர் நட்பை என்னால் இழக்க இயலாது. அதைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள் என்று கூறுவேன்.
ஒரு நாள் காலை அண்ணா அவர்கள் என் வீட்டிற்கு வந்து, என்ன உங்களைப் பார்க்கவே முடியவில்லை. நேருவுக்கு வரவேற்புக் கொடுக்கும் வேலையா? எங்கே வரவேற்பு? என்றார். பிராட்வே டாக்கீசில் வரவேற்பு என்றேன். கட்டணமா - இலவசமா என்றார்.
கட்டணம் என்றார்.
எனக்கு இலவசச் சீட்டு வேண்டுமே என்றார்.
எத்தனை வேண்டும் என்றேன்.
நாலைந்து என்றார். எனக்கு உள்ளூர ஓர் ஆசை. அண்ணா அவர்களே விரும்பி நேரு கூட்டம் கேட்க வருவதாகக் கூறுகிறாரே, ஒரு வேளை அவர் மனம் மாறி காங்கிரசுக்கு வரப்போகிறாரோ என்று எண்ணி நாலைந்து என்ன பத்து தருகிறேன் என்று கொடுத்தேன்.
மறுநாள் காலை ஒரு நன்பரை அனுப்பி இன்னும் பத்துப் பதினைந்து பாஸ் கேட்டிருந்தார். ஒரு கூட்டமாகவே வந்து காங்கிரசில் சேரப் போகிறார்கள் போலிருக்கிறது! என்ற மகிழ்ச்சியில் நான் இருபது பாஸ் கொடுத்தனுப்பினேன்.
பிராட்வே டாக்கீசில் நேரு பேசியபோது அண்ணா முன் வரிசையில் அமர்ந்திருந்தார். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் கூட்டம் முடியும் நேரத்தில் அண்ணா அவர்கள் அச்சடித்த கேள்வித்தாள் ஒன்றை நேருவிடம் கொடுக்க முயன்றபோது மேடையிலிருந்த சத்தியமூர்த்தி அதைப் பிரித்துப் படித்துவிட்டு இதற்கெல்லாம் நேரு பதில் சொல்லமாட்டார் என்று கூறினார்.
உடனே நேரு சத்தியமூர்த்தியின் கையிலிருந்த கேள்வித்தாளை வாங்கிப் படித்துவிட்டு இதற்கு நான் பதில் சொல்ல மாட்டேன் என்ற சத்தியமூர்த்தி சொன்னது தவறு. ஆரம்பத்தில் தந்திருந்தால் நிச்சயம் பதில் சொல்வியிருப்பேன். இப்போது நேரமாகிவிட்டதால் இக்கேள்விகளுக்கு இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் பதில் சொல்கிறேன் என்றார்.
கூட்டம் முடிந்ததும் அவர், அண்ணா கேள்விகள் எப்படியிருக்கும் என்று பேசிக்கொண்டே சென்றதால் நேருவின் கூட்டச் சிறப்பு கெட்டுவிட்டதாகக் காங்கிரசுத் தோழர்கள் ஆத்திரமடைந்தார்கள்.
எல்லோர்க்கும் என்மீது கோபம். எப்படி அண்ணாதுரைக்கு அத்தனை இலவசச் சீட்டு கொடுக்கலாம். அவரை ஏன் அழைத்தாய்? என்று கண்டித்தார்கள். நான், அவர் காங்கிரசில் சேர வரப்போகிறாரோ என்ற மகிழ்ச்சியில்தான் அண்ணாவை அழைத்தேன். இப்படி நடக்குமென்று உண்மையிலேயே எனக்குத் தெரியாது என்று அவர்களைச் சமாதானப்படுத்தினேன்.
மாலையிவ் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நேரு அண்ணாவின் கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறிவிட்டு, இந்த கேள்விகள் எப்படி இருந்தாலும் கேள்விகள் கேட்டவரின் சிந்தனையை - அறிவை - ஆற்றலை நான் பாராட்டுகிறேன் என்றார். இது காங்கிரசுத் தோழர்களுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்திவிட்டது. இவ்வளவுக்கும் நீர்தாம் காரணம் என்று அன்று இரவு முழுவதும் என்னைத் தூங்கவிடாமல் ஒருவர் ஒருவராக வந்து கடிந்துகொண்டார்கள்.
மறுநாள் அண்ணாவை சந்தித்து, என்ன அண்ணா இப்படிச் செய்துவிட்டீர்களே என்று கேட்டதற்கு இதுதானா - இன்னும் என்னென்ன செய்யப்போகிறேன் பார்! என்று சிரித்துக்கொண்டே பதில் கூறினார்கள்.

திரு. என்.வி.நடராசன்

No comments: