Sep 7, 2013

சிறு வயதிலேயே குழந்தைகளுக்கும் சேமிப்பு குறித்து சொல்லித் தருவது வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது

குழந்தைகளிடம் பணத்தைக் கொடுப்பது, இருமுனை கொண்ட கத்தி போன்றது என்பது சிலரது கருத்து.ஆனால், கத்தியை சரியான காரணங்களுக்கு பயன்படுத்த பழக்கிவிட்டால் நல்லதே!மறுபுறம், பணம் குறித்த புரிதல் இல்லாத நிலை, இன்னும் ஆபத்தானது என்பதும் கவனிக்கத்தக்கது.இன்று, நாட்டுக்கு மட்டுமின்றி, அதிகரித்துவிட்ட பண வீக்கத்தால், வீட்டுக்கும் பொருளாதாரச் சவால்கள் அதிகரித்துள்ள நிலையில், சேமிப்பின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.இதனால், சிறு வயதிலேயேகுழந்தைகளுக்கும் சேமிப்பு குறித்து சொல்லித் தருவது வீட்டுக்கு, நாட்டுக்கு என இரண்டுக்கும் நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.சுயமாக பலவற்றைக் கற்றுக்கொள்ளும் திறன்கொண்ட இன்றைய குழந்தைகள், சேமிப்பு குறித்து கற்றுக்கொள்வது ஒன்றும் இயலாத காரியமில்லை என்பதும் அவர்களது கருத்து.குழந்தைகள் வீட்டில் பெரியவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பொறுத்து செயல்படுகிறது என்பது மனோதத்துவ நிபுணர் அபிலாக்ஷாவின் கருத்தாகும்.நிதி நிலவரத்தைப் பொறுத்தவரை, ஒரு குடும்பத்தின் உண்மையான நிலையை, குழந்தைகளுக்குப் புரிய வைப்பது அவசியமும் கூட, என்பது மனோதத்துவ நிபுணர்களின் கருத்து.குடும்பத்தின் நிதிநிலவரம் குறித்து குழந்தைகளிடம் பெரியவர்கள் பேசுவதில்லை. அது ஆபத்தானது.தந்தைக்கு மிகப்பெரிய கடன் இருக்கலாம். அதை குழந்தையிடம் கூறுவதில்லை. எதுவானாலும் குழந்தையிடம் திறந்தமனதுடன் பேசுவதே நல்லதாகும் என அபிலாக்ஷா தெரிவிக்கிறார்.குடும்பத்தின் உண்மையான நிதிச்சுழல் தெரிவதால், ஆரம்ப நாட்களிலேயே குழந்தைகளிடம் சில ஆரோக்கியமான பண்புகள் உருவாகும் வாய்ப்புள்ளதாம்.அதற்கு, பெற்றோர் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
          
                 குழந்தைகள் செலவுசெய்யும் பணத்தை அதுவாகவே கணக்குவைத்துக் கொள்ளும் என்பதும் அபிலாக்ஷாவின் கருத்தாகும்.இந்த கருத்தை நிதி நிபுணர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.சித்திரமும் கைப் பழக்கம் என்பது போல, பணத்தைக் கையாள்வதும் கூட பழக்கத்தின் அடிப்படையில்தான் என சொல்லும் இவர்கள், குழந்தைகளின் செலவுக்கு ஓரளவு பணம் தருவதில் தவறில்லை என்கிறார்கள்.குழந்தைக்கு பணம் தருவதில் தவறில்லை. அது செலவு செய்வதற்குகூட நாம் உதவிபுரியலாம் என நிதி ஆலோசகர் பார்வதி தெரிவிக்கிறார்.ஆனால், இவ்வாறு தரப்படும் பணம், ஒரு வரம்புக்குள் இருக்க வேண்டியது அவசியம்.இல்லாவிட்டால், அதுவே பாதகமாக முடியவும் வாய்ப்புண்டு.சில பணக்கார குழந்தைகளுக்கு பணம் நிறைய தந்துவிட்டு பெற்றோர் அதை கண்காணிப்பதே இல்லை. அவ்வாறு இல்லாமல் அக்குழந்தைகள் செய்யும் செலவை கண்காணிப்பது அவசியம் என மனோதத்துவ நிபுணர் அபிலாக்ஷா தெரிவித்துள்ளார்.கண்காணிப்பது ஒருபுறம் இருக்க, குழந்தைகள் எதை எப்படி அணுக வேண்டும் என சொல்லித்தர வேண்டிய அவசியமும், பெற்றோரிடம்தான் உள்ளது.ஆனால், அதை மறைமுகமாக, அதாவது சர்க்கரை தடவிய மாத்திரைகளைப் போல அளிப்பதே புத்திசாலித்தனமாகும்.குழந்தைகளுக்கு விளையாட்டுகள் மூலமாக சேமிப்பு குறித்து விளக்கலாம் நிதி ஆலோசகர் பார்வதி தெரிவித்துள்ளார்.இப்படியெல்லாம் பயிற்றுவிக்கப்படும் குழந்தைகள், எதிர்காலத்தில் சந்திக்கும் திடீர் நிதி நெருக்கடிகளை திறமையாக சமாளிக்கும் திறன் பெற்றவர்களாகவும், அதில் இருந்து மீளும் தன்னம்பிக்கை பெற்றவர்களாகவும் இருப்பார்கள் என்பது பலரது கருத்து.அத்தகைய குழந்தைகள், இந்தியாவைப் பொருளாதார வல்லரசாக மாற்றுவார்கள் என்று சொன்னால், நம்ப முடிகிறதில்லையா?

1 comment:

Anonymous said...

என் அக்விகான் பையன்கள் அடிக்கடி காசு வாங்கி செலவு செய்கிறார்கள்.அதாவது காசு வாங்கி அரை மணி நேரத்தில் 5 ரூபாய் செலவு செய்து விட்டு மீண்டும் அடுத்தவர்ரிடம் காசு வாங்கி செலவு செய்கிறார்கள்.இது போல் ஒரு நாளைக்கு 25வரை செலவு செய்கிறார்கள் தரவில்லை என்றால் சூல்னிலையை பார்க்காது ரோட்டில் படுத்து அழுவது என்ன செய்து திருத்துவது இவர்களை?