ஆம்லெட் திருவிழா!
பிராய்லர் கோழிகளைப் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையில் வழக்கறிஞர் சுந்தரராஜன் நிறைய தகவல்கள் தருகிறார். அதில் தமிழ் இலக்கியத்தில் சங்க இலக்கியம் முதல் சமீபத்திய திரைப்பட பாடல்கள் வரை கோழிகள் குறித்து நிறைய எழுதப்பட்டுள்ளன. மதம்கொண்ட யானையை சேவல் ஒன்று வென்றதாகக் கூறப்படும் தொன்மக் கதை ஒன்றின் விளைவாக உறையூருக்கு கோழியூர் என்ற பெயர் வந்ததாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுகிறார்.
பதார்த்த குணசிந்தாமணி நூலில், ‘கோழிக் கறியானது அதை உட்கொள்வோருக்கு உடல்சூட்டைக் கொடுக்கும். மந்தத்தைப் போக்கும். உடல் இளைக்கச் செய்யும். போகம் விளைவிக்கும்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது
பிராய்லர் கோழிகளுக்குப் பறக்கத் தெரியாது. குஞ்சுகளைக் காப்பாற்றத் தெரியாது. விடியலில் கூவத் தெரியாது. அதற்கான உணவை தேடிப் பெறத் தெரியாது. குஞ்சு பொரித்த நாளிலிருந்து கூண்டிலோ, மிகக் குறைவான இடவசதி கொண்ட பண்ணைகளிலோ வளர்க்கப்படுவதால் இந்தக் கோழிகளுக்கு, நாட்டுக் கோழிகளைப்போல் நடக்கவும் ஓடவும்கூட தெரியாது ஆகவே, இவற்றை கோழி என்றே கூற முடியாது.
அமெரிக்காவின் டியூக்கேன் பல்கலைக்கழகத்தின் உயிர்ம வேதியியல் துறை பேராசிரியர் டாக்டர் பார்த்தா பாசு என்பவர் மேற்கொண்ட ஆய்வில், பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும் ரோக்ஸார்சோன் என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறார். இந்தத் தகவல்களை சுந்தரராஜன் கூறுகிறார்.
எப்படி உணவுத் தேவைக்காக மீன் உற்பத்தி செய்யப்படுகிறதோ, காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றனவோ, அதுபோலவே கோழிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகெங்கும் கோழிப் பண்ணைகள் முக்கியத் தொழிலாக வளர்ந்து விட்டிருக்கின்றன. இந்தியா கோழி உற்பத்தியில் ஐந்தாவது இடத்திலிருக்கிறது. முட்டை உற்பத்தியில் மூன்றாவது இடத்திலிருக்கிறது. ஆண்டுக்கு 55.64 பில்லியன் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 64,89,000 டன் கோழி இறைச்சி விற்பனையாகிறது. இந்தியாவில் 307.07 மில்லியன் கோழிகள் இருக்கின்றன. புரதச் சத்து கிடைப்பதற்குக் கோழிகளே உறுதுணை என்கிறார்கள் கோழி உற்பத்தியாளர்கள்.
பிராய்லர் கோழிகளின் வருகையால் நாட்டுக் கோழி இனங்கள் மெள்ள அழிந்து வருகின்றன. விவசாயம் பொய்த்துப் போனது இதற்கு இன்னொரு காரணம். நாட்டுக் கோழிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள் சூழலியல் அறிஞர்கள்.
ஒரு பக்கம் பிராய்லர் கோழிகள் உற்பத்தி பற்றி விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும்போது இன்னொரு பக்கம் கோழிக்கறியை விதவிதமான சுவைகளில் சுடச்சுட பரிமாறும் பன்னாட்டு உணவகங்கள் ஆடம்பரமான கடைகளாக பெருகி வருகின்றன.
இந்தியாவில், பொறித்த கோழிக்கறி மட்டும் விற்பனை செய்யும் வணிகத்தின் வழியே ஆண்டுக்கு 718
கோடி ரூபாய் கிடைக்கிறது என்கிறார்கள். இந்த உணவுத் தயாரிப்பில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன, எந்த அளவில் சேர்க்கப்படுகின்றன என்பது ரகசியம். இதை அறிந்து கொள்ளாமல் சாப்பிடுவது அறியாமையில்லையா? உண்மையில் சுவையூட்டுவதற்காகவும் கோழிக்கறி கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைக்கப்படுவதற்கும் ஏகப்பட்ட ரசாயன உப்புகள் சேர்க்கப்படுகின்றன. அவை நம் உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள்.
எதிர்காலத்தில் கோழிக்கறி மட்டுமே தனித்த உணவாக சாப்பிடப்படும் சூழ்நிலை உருவாகும். அதுபோலவே கோழிக்கறியை பவுடர் செய்து விற்பனை செய்வார்கள். அதை தண்ணீரில் கலந்து குடித்துக்கொள்ள நேரிடும் என்கிறார் உணவியலாளர் மார்க்கெரட்.
கிராமப்புற வாழ்க்கையில் வீட்டைச் சுற்றி நிறைய புழுக்களும் பூச்சிகளும் இருக்கும். அவை வீட்டுக்குள் வந்துவிடாமல் தடுக்கவே வாசலில் கோழிகளை வளர்த்தார்கள். சின்னஞ்சிறு புழுக்களைக்கூட கவனமாக கோழி கொத்தி சாப்பிட்டுவிடும் என்பதால், அது மனிதர்களுடன் கூடவே வாழ்ந்தது. கோழி இடும் முட்டைகளை மனிதர்கள் முழுமையாகச் சாப்பிட்டுவிட மாட்டார்கள். அதை அடைகாக்க வைத்து குஞ்சு பொறிக்கச் செய்வார்கள்.
கோழி தன் குஞ்சுகளுடன் ஒன்றாக இரை எடுக்க சுற்றுவதும் பருந்தைக் கண்டால் குஞ்சை பாதுகாப்பதும் தாய்மையின் அடையாளம். கோழி வளர்ப்பு பண்பாட்டின் கூறாகவே இருந்து வந்திருக்கிறது. இன்று எல்லாமும் வணிகமயமாகிப் போனது போலவே கோழிகளும் வணிகப் பொருள் ஆகிவிட்டன. ‘கோழி எப்படி சப்தம் போடும் என்று இன்று நகரங்களிலுள்ள குழந்தைகளுக்குத் தெரியாது. அவர்கள் கோழியை உண்ணும் பொருளாக மட்டும் பார்க்கிறார்கள். அது ஒரு பறவை என்பதேகூட ஆச்சர்யமாகத்தான் இருக்கும்’ என்கிறார் செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள்.
கோழியைப் போலவே முட்டையும் இந்த நூற்றாண்டின் முக்கியமான உணவுப் பொருளாகிவிட்டிருக்கிறது.
நாளன்றுக்கு சாலையோர புரோட்டா கடையில் 10 முதல் 15 தட்டுகள் வரையில் முட்டைகள் காலியாகின்றன. ஒரு தட்டில் 30 முட்டை இருக்கும். 15 தட்டு என்றால் 450 முட்டைகள் வரை சாதாரணமாக ஒரு புரோட்டா கடையில் காலியாகிறது. புரோட்டா சாப்பிட வருகிறவர்களில் ஆம்லெட், ஆஃப் பாயில் இல்லாமல் சாப்பிடுகிறவர்கள் குறைவு.
14-ம் நூற்றாண்டில் இஞ்சியும் மூலிகைகளையும் ஒன்றுசேர்த்து ஆம்லெட் செய்திருக்கிறார்கள். ஒருமுறை நெப்போலியன் தனது படையுடன் வரும்போது தெற்கு பிரான்ஸில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அவருக்கு இரவு உணவு கொடுத்திருக்கிறார்கள். அதில் ஆம்லெட் இடம்பெற்றிருக்கிறது. அதன் சுவையில் மயங்கிய நெப்போலியன் அந்த ஊரில் கிடைத்த ஒட்டுமொத்த முட்டைகளையும் சேர்த்து தனது படை வீரர்களுக்காகப் பெரிய ஆம்லெட் செய்து தரும்படி கட்டளை இட்டிருக்கிறார். அந்த பழக்கமே இன்றும் ஈஸ்டர் ஆம்லெட் என ஊர் ஒன்று கூடி ஆம்லெட் செய்து பகிர்ந்து உண்ணும் பழக்கமாக உருமாறியிருக்கிறது.
1651-ல் பிரான்ஸின் பியரே பிரான்கோஸ் என்பவர் முட்டைகளைக் கொண்டு 60 விதமான உணவுகளை எப்படி சமைப்பது என்றொரு புத்தகம் எழுதினார். அது பிரபலமாகியதன் காரணமாக முட்டை விற்பனை அதிகமாகியது.
1834-ல் சீனாவின் காண்டோன் துறைமுகத்துக்குள் அந்நிய நாட்டு கப்பல்கள் அனுமதிக்கப்பட்டன. இங்கிலீஷ் கப்பல் ஒன்று சரக்கு ஏற்றிக்கொண்டு காண்டோன் துறைமுகத்துக்கு வந்தது. அந்தக் கப்பல் திரும்பி வரும்போது விக்டோரியா மகாராணிக்குப் பரிசாகக் கோழிகள் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டன. அந்தக் கோழி இனம் அதன் முன்பு ஐரோப்பாவில் அறிமுகமாகாத ஒன்று. இங்கிலாந்தில் கண்காட்சியாக வைக்கப்பட்ட அந்தக் கோழியை, பல்லாயிரம் மக்கள் வேடிக்கை பார்த்துப் போனார்கள்.
கோழி வளர்ப்பில் முதல் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் சீனாவும் மூன்றாவது இடத்தில் பிரேசிலும் நான்காம் இடத்தில் மெக்சிகோவும் ஐந்தாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.
கூண்டில் அடைத்து கோழிகளை வளர்ப்பது தவறு என விலங்குநல வாரியம் எழுப்பிய குரலைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம், கூண்டு கோழி வளர்ப்பு முறையை தமது சார்பு நாடுகளில் தடைச் செய்திருக்கிறது. ஆஸ்திரியா 2004-ம் ஆண்டு முதல் கூண்டு கோழி வளர்ப்பு முறையைத் தடை செய்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
கோழி சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றாலும், அளவோடு அறிந்து சாப்பிட வேண்டும். இரவு இரண்டு மணிக்கு சாலையோரக் கடையில் கசட்டு எண்ணெய்யில் பொறித்து எடுத்த காரமான சிக்கனை சாப்பிட்டால் வயிறு உபாதை கட்டாயம் ஏற்படும். ஆனால், பலரும் அதைப்பற்றி யோசிப்பதே இல்லை. நாக்குக்கு அடிமையானவர்களைப் போலவே நடந்து கொள்கிறார்கள் என்பதே வருத்தப்பட வேண்டிய விஷயம்.
No comments:
Post a Comment