Sep 15, 2014

உணவு யுத்தம்!-32

உணவு யுத்தம்!-32

16-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கடல் பயணிகள் உருளைக்கிழங்கை பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தினர். 17-ம் நூற்றாண்டில் இந்தோனேஷியாவின் ஜாவா தீவுப் பகுதிகளில் அறிமுகமானது. அப்போதுதான் இந்தியாவுக்கும் உருளைக்கிழங்கு வந்து சேர்ந்தது.

உலகளவில் உருளைக்கிழங்கு உற்பத்தி 315 மில்லியன் மெட்ரிக் டன்கள். இதில் நான்கில் ஒரு பகுதி, அதாவது 79 மில்லியன் மெட்ரிக் டன்களை சீனா உற்பத்தி செய்கிறது. அடுத்த இடம் ரஷ்யாவுக்கு. இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
உருளைக்கிழங்கு உற்பத்தி மற்றும் விற்பனையை முறைப்படுத்துவதற்காக சர்வதேச மையம் ஒன்று பெரு நாட்டின் தலைநகர் லிமா நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கான ஆராய்ச்சி மையம் சிம்லாவில் உள்ளது.

வேகவைத்து உப்பும் நெய்யும் சேர்த்து தரப்படும் சால்ட் பொட்டேட்டோ நியூயார்க்கில் மிகவும் பிரபலம். பிரெஞ்சு ஃபிரைஸ் மற்றும் ஹாஷ் பிரௌன்ஸ்  அமெரிக்காவின் எல்லா உணவகங்களிலும் அதிகம் விற்பனையாகின்றன.
இத்தாலியில் இதனுடன் இறைச்சி சேர்த்து, உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. உருளைக்கிழங்கு ஆம்லெட் ஐரோப்பிய உணவு வகைகளில் சிறப்பானது. இங்கிலாந்தில் அவித்துக் கூழாக்கப்பட்ட உருளைக்கிழங்கும் மீனும் விரும்பி உண்ணப்படுகிறது. ரஷ்யா, போலந்து போன்ற நாடுகளில் முழுமையாக வேகவைத்து, பின்னர் மூலிகைப் பொருட்களை சேர்த்து உணவாகப் பயன்படுத்துகிறார்கள். தோல் நீக்கி வேகவைத்து அத்துடன் சீஸ் சேர்த்து தண்ணீருடன் கொதிக்க வைத்து, சூப்பாக குடிக்கிறார்கள் உக்ரேனியர்கள்.
நேரடியாக சமைத்து உண்ணப்படுவதைவிட, சிப்ஸாக விற்கப்படும் உருளைக்கிழங்கின் அளவு அதிகம் என்கிறார்கள். 1853-ல் ஜார்ஜ் கிரம் என்பவரே முதன்முறையாக சிப்ஸ் தயாரிக்க ஆரம்பித்தார். தனது வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்த அவர் உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி பொரித்துத் தந்தார். அதுவே சிப்ஸ் ஆக மாறியது.
1910-களின் பிறகே சிப்ஸ் விற்பனைப் பொருளாக மாறியிருக்கிறது. 1930-களில்தான் இயந்திரத்தின் உதவியால் சிப்ஸ் தயாரிப்பது ஆரம்பமாகியிருக்கிறது.
இன்று இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் பேருக்கும் மேலாக சிப்ஸ் வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். உலக அளவில் சிப்ஸ் தயாரிப்பில் புகழ்பெற்ற பத்து நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக விற்பனை செய்கின்றன.
உருளைக்கிழங்கு நல்லதா கெட்டதா என வாதப்பிரதிவாதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. உடல்பருமனை அதிகரிக்கிறது, வாயுத்தொல்லையை உருவாக்குகிறது, வயிற்று நோய்கள் உருவாகின்றன என இதன் விளைவுகள் பற்றி கூறுகிறார்கள். ஆனால், ‘உருளைக்கிழங்கு மருத்துவ குணம் கொண்டது. அதை வேகவைத்துச் சாப்பிடுங்கள். ரோஸ்ட், சிப்ஸ் என்று முழுவதுமாக எண்ணெய்யில் பொரித்தெடுத்து சாப்பிடாதீர்கள்’ என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
1845-ம் ஆண்டு மேற்கு அயர்லாந்து பகுதியில் ஏற்பட்ட பெரும் உணவுப் பஞ்சம்  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போது ஏறத்தாழ ஒரு மில்லியன் மக்கள் பட்டினியாலும் நோயாலும் இறந்தார்கள். பட்டினியில் இருந்து பிழைப்பதற்காக, வாழ்வு தேடி ஒரு மில்லியன்  மக்கள் தம் நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்குக் இடம்பெயர்ந்தனர்.
12-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க மதத் தலைவரான போப், பிரிட்டன் அரசுக்கு கொடையாக அளித்த நாடு அயர்லாந்து. இதனால், இங்கிலாந்தின் நிலப்பிரபுக்கள் அயர்லாந்தில் நிறைய நிலங்களை கைவசப்படுத்தி, பெரும் பண்ணைகளுக்கு உரிமையாளர்களாக மாறினார்கள். இவர்களின் பண்ணையில் வேலைசெய்யும் கூலிகளாக அயர்லாந்தின் விவசாயிகள் இருந்தார்கள். சிலர் குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் செய்தார்கள். சோளமும் உருளைக்கிழங்கும் முக்கியப் பயிர்கள். இவர்களிடம் இருந்து நிலப்பிரபுக்கள் விளைச்சலில் 80 சதவிகிதத்தைப் பறித்துக்கொண்டார்கள். ஆகவே, அவர்களுக்கு மிஞ்சியது எல்லாம் உருளைக்கிழங்கு மட்டுமே.
அயர்லாந்து மக்களுள் பெரும்பான்மையானவர்கள் கத்தோலிக்க சமயத்தைக் கடைப்பிடித்தவர்கள். ஆனால். போப்பின் தலைமையை ஏற்க மறுத்து தனியொரு சபையாக 15-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் தொடங்கப்பட்டது. சீர்திருத்தத் திருச்சபையை ஜான் விக்கிலிஃப், ஜேன் ஹஸ், மார்ட்டின் லூதர், ஜான் கால்வின் முதலியவர்கள் முன்நின்று நடத்தினர்.
பாவங்கள் செய்தவர்கள் பணம் கொடுத்து பாவ மன்னிப்பு செய்துகொள்ளலாம் என போப் அறிவித்தார். அதை சீர்திருத்தத் திருச்சபையினர் கண்டித்தனர். அதோடு மக்களிடம் போப் நன்கொடையாகப் பணம் வசூலிக்கக் கூடாது எனவும் போராடினார்கள். அவர்களின் எதிர்ப்புக்குரலை போப் கண்டுகொள்ளவே இல்லை. ஆகவே, மார்ட்டின் லூதர் தலைமையில் புதியதொரு பிரிவாக ப்ரோட்டஸ்டன்ட் என்கிற பெயரில் சீர்திருத்தசபை உருவானது. பைபிள் மட்டுமே புனிதமானது, போப்பின் ஆணைகள் பின்பற்றபட வேண்டியது இல்லை என இவர்கள் கருதினார்கள்.
17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து ப்ரோட்டஸ்ட்ன்ட் சபையைத் தழுவியதும், அயர்லாந்தில் வாழ்ந்த கத்தோலிக்கரின் உரிமைகள் பறிக்கப்பட்டன. அவர்கள் நிலத்தை உடைமையாகக் கொண்டிருக்க தடை விதிக்கப்பட்டது. நிலத்தை வாங்கினாலோ குத்தகைக்குக் கொடுத்தாலோ தண்டனை வழங்கப்பட்டது. இதனால், அயர்லாந்து நாட்டு விவசாயி கூலிகளாக மாறினர். கத்தோலிக்கருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. அவர்களுக்கு அரசு வேலைகள் கொடுக்கப்படவில்லை. புறநகர்ப் பகுதியில்தான் வசிக்க முடிந்தது. அவர்கள் கல்வி பெறவும் அனுமதிக்கபடவில்லை.
விவசாயம் தவிர வேறு வேலை வாய்ப்புகள் கத்தோலிக்கர்களுக்கு அளிக்கப்படவில்லை. இதனால் அயர்லாந்தில் தொழில் வளர்ச்சி தடைபட்டது. அயர்லாந்து முழுமையிலும் உருளைக்கிழங்குப் பயிரிடப்பட்டது. தினசரி உணவாகவே உருளைக்கிழங்கு உண்ணப்பட்டது. அயர்லாந்தில் உள்ள காடுகளை ப்ரோட்டஸ்டன்ட்டுகள் அழித்து, மரங்களை வெட்டி லண்டன் கொண்டுசென்றனர்.
காடுகள் அழிந்துபோனதால் குளிர்காலத்தில் உருவாகும் மூடுபனி உருளைக்கிழங்கு பயிர்கள் மீது படிந்தது. இதனால், பூஞ்சணை நோய்கள் உருவாக ஆரம்பித்தது. இதன் விளைவாக அயர்லாந்து முழுமையிலும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இத்துடன் காலரா, பரவியதால் சாவு எண்ணிக்கை அதிகமானது. கூட்டம் கூட்டமாக மக்கள் பஞ்சம் பிழைக்கப்போனார்கள். கிட்டத்தட்ட 20 லட்சம் ஐரிஷ் மக்கள் வட அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்திடும் நிலை. இந்தச் சம்பவம் அயர்லாந்தின் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இதன் பின்னணியில் உருளைக்கிழங்கு இருந்திருக்கிறது.
பொரித்த உருளைக்கிழங்கு, சிப்ஸ் விற்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் விற்பனையைப் பெருக்கிக்கொள்ள தாங்களே இந்தியாவில் நேரடியாக உருளைக்கிழங்கு உற்பத்தியில் இறங்கியிருக்கிறார்கள். இதற்காக குஜராத்திலும் பீகாரிலும் நிலத்தைக் கையகப்படுத்தி உள்ளூர் விவசாயிகளைக் கொண்டு தங்களுக்குத் தேவையான உருளைக்கிழங்கை உற்பத்தி செய்ய முயன்றுவருகிறார்கள். இந்தியாவுக்கும் அந்த ஆபத்து வராது என சொல்ல முடியாது.
தமிழ்நாட்டில் திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு பகுதிகளில் இது விளைவிக்கப்படுகிறது. இதில் திண்டுக்கல் மற்றும் நீலகிரியில் 90 சதவிகிதம் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டுப்பாளையம்தான் இதன் முக்கிய சந்தை. தோண்டி எடுக்கப்பட்ட உருளைக்கிழங்கு குளிர்சாதன பெட்டகத்தில் ஆறு மாதங்கள் வரை பாதுகாக்கப்படுகின்றன.
ஃபேஸ்புக், ட்விட்டர் என பொழுதைப்போக்கும் இன்றைய வாழ்க்கை முறையை பொட்டேட்டோ சிப்ஸ் கல்ச்சர் என விமர்சகர்கள் அழைக்கிறார்கள். காரணம், எவ்வளவு சிப்ஸ் சாப்பிட்டாலும், சாப்பிட்ட திருப்தியே இருக்காது. அப்படித்தான் ஃபேஸ்புக்கில் நேரம் செலவழிப்பதும் திருப்தியே தராது என்கிறார்கள்.
‘சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளில் ஒன்று இது’ என அலட்சியமாகக்  கருத முடியாது. அது, உலகம் முழுவதுமான உணவுப் பண்பாட்டின் பிரதிநிதி!

No comments: