Sep 2, 2013

உலக அரங்கில் இந்தியா தலைகுனிந்துள்ளது. சோமாலியா நாட்டின் நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதுநாஞ்சில் சம்பத்,


வேலூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூரில் நடந்தது.
கூட்டத்தில் கட்சியின் கொள்ளை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசியபோது,  ’’தமிழகத்தில் எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு கட்சியை தொடங்கி 1977-ல் ஆட்சியை பிடித்தார். தொடர்ந்து அவர் 3 தடவை முதலமைச்சராக பதவி வகித்தார். இதுவரை எந்த தலைவராலும் இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.
எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு 89-ம் ஆண்டு அ.தி.மு.க. இரண்டாக பிளவு பட்டு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் கருணாநிதி ஆட்சியை பிடித்தார். அதன் பின்னர் அ.தி.மு.க. ஒன்றாகி இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்ட பின்னர் 1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார்.
2011-ம் ஆண்டு 3–வது முறையாக முதலமைச்சராக பதவியேற்று பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.
மத்திய அரசின் தவறான கொள்கைகளால் இந்தியாவில் தற்போது பொருளாதார நெருக்கடி உருவாகி உள்ளது. பலவிதமான அச்சுறுத்தல்கள் வருகின்றன. இப்போது லடாக் வரை சீனா ஊடுருவிவிட்டது. 5 ராணுவவீரர்களை பாகிஸ்தான் சுட்டுக் கொன்றுவிட்டனர். வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் 1 ரூபாயின் மதிப்பு ஒரு டாலராக இருந்தது. ஆனால் இப்போது 67 ரூபாய் கொடுத்தால்தான் 1 டாலர் கிடைக்கும்.
இதனால் உலக அரங்கில் இந்தியா தலைகுனிந்துள்ளது. சோமாலியா நாட்டின் நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறை, குற்றம் ஏதாவது சொல்ல முடியுமா? எல்லா பிரச்சினைக்கும் தீர்வு கண்டுள்ளோம். மத்திய அரசு 28 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியும் தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப் படவில்லை.  வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமராக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.

Aug 29, 2013

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?


 எஸ்.குருமூர்த்தி
1. பற்றாக்குறை அதிகரிப்பும் ரூபாயின் வீழ்ச்சியும்!
இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைவதை 18 மாதங்களாக மெளன சாமியாராகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்துவதற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைக்கப் போவதாக ஆகஸ்ட் 12-ம் தேதி அறிவிக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். 2012 ஜனவரியில் ரூ.45 கொடுத்து ஒரு டாலரை இந்தியர்களால் வாங்க முடிந்தது. ஆனால், ஆகஸ்ட் 12-ல் ஒரு டாலர் வாங்க ரூ.61 கொடுக்க வேண்டியிருந்தது. 2012 ஜனவரியில் இருந்து தற்போது வரை டாலரின் மதிப்பு 35 சதவீதம் உயர்ந்தது. அது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் பிரதிபலித்தது.
2004-2005 முதல் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வந்ததன் நேரடி விளைவு இது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும் சில "நடவடிக்கைகளை' ப.சிதம்பரம் ஆகஸ்ட் 12-ல் அறிவித்தார்.
ஆனால், அவர் அறிவித்த 36 மணி நேரத்துக்குள்ளாக ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ந்தது. டாலருக்கு ரூ.61.50 கொடுக்க வேண்டியிருந்தது. இந்தியாவிலிருந்து டாலர் வெளியேறுவதைத் தடுக்க வெளிநாடுகளில் முதலீடு செய்வதையும், பணம் செலுத்துவதையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு இந்திய ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையும் கைகொடுக்கவில்லை.
ரூபாய் மதிப்பு வீழ்ந்து வந்த நிலையில், உண்மையிலேயே ரூபாயின் மதிப்பு - அதாவது அதன் வாங்கும் சக்தி- டாலருக்கு வெறும் ரூ.19.75தான் என்று "தி எகனாமிஸ்ட்' (2.1.2013) குறிப்பிட்டது. அதாவது ரூபாயின் இன்றைய சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் அதன் நிஜமான மதிப்பு!
சர்வதேச சந்தையில் தகுதிக்கும் மிகக் குறைவாக மதிப்பிடப்படும் கரன்சி இந்திய ரூபாய்தான் என்றும் "தி எகனாமிஸ்ட்' குறிப்பிட்டது. உண்மையிலேயே அதிக மதிப்புடைய, ஆனால் குறைத்து மதிப்பிடப்பட்ட ரூபாயின் மதிப்பு ஏன் குறைந்து வருகிறது? இதற்கு யார் பொறுப்பு?
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004-இல் பதவி ஏற்றபோது, இந்தியப் பொருளாதாரம் வலுவாகவும், வளர்ச்சிப் பாதையிலும் இருந்தது. நிதியமைச்சராகப் பொறுப்பேற்றபோது, வலுவான பொருளாதார நிலையையே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விட்டுச் சென்றது என்று ப.சிதம்பரமே ஒப்புக் கொண்டுள்ளார்.
2004 ஜூலையில் அவரது பட்ஜெட் உரையில், "இந்தியாவின் பொருளாதார அடிப்படை வலுவாகவே காணப்படுகிறது. ஏற்றுமதியைவிட இறக்குமதி கூடுதலாக இருந்தால் ஏற்படும் பற்றாக்குறை நிலையும் இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த நிலை மாறி, 1991-ம் ஆண்டில் காணப்பட்ட இருண்ட பொருளாதார நிலை ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணம்?
2004-ல் முந்தைய ஆட்சி விட்டுச் சென்ற வளமான பொருளாதாரத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எப்படி சீரழித்தது?
நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் பாய்ச்சல்
2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றதில் இருந்து பொருளாதாரம் மோசமானது எப்படி, 2009-ல் மீண்டும் அதே அரசு ஆட்சிக்கு வந்ததும் பொருளாதாரம் எப்படி சீரழிந்தது என்பதை சில புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே புரியும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின் அண்மைக்கால வரலாற்றைப் பார்ப்போம்.
1991-2001 காலகட்டத்தில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 35 பில்லியன் (ஒரு பில்லியன் - 100 கோடி) டாலராக இருந்தது. அதாவது 3,500 கோடி டாலர். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறை உபரியாக மாறியது. உபரி -ஆம், உபரிதான்- அதுவும். 22 பில்லியன் டாலராக இருந்தது. 1978-க்குப் பிறகு நடப்புக் கணக்கு உபரி என்பது அதுவே முதல்முறை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது உபரியாக இருந்த நடப்புக் கணக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு ஆட்சியில், ப.சிதம்பரம் (ஐந்தரை ஆண்டுகள்), பிரணாப் முகர்ஜியின் (மூன்றரை ஆண்டுகள்) தலைமையில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு 339 பில்லியன் டாலராக அதிகரித்தது. அவர்களது பொருளாதாரத் தலைமையின் கீழ் உபரி எவ்வாறு, ஏன் பற்றாக்குறையாக ஆனது?
2003-2004 இல் 13.5 பில்லியன் டாலரை நடப்புக் கணக்கு உபரியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒப்படைத்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2004-05இல் 2.7 பில்லியன் டாலராகவும், 2-வது மற்றும் 3-வது ஆண்டுகளில் மூன்று மடங்காக அதாவது 10 பில்லியன் டாலராகவும் உயர்ந்தது. பின்னர், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 16 பில்லியன் டாலராகவும் (4-வது ஆண்டு), 28 பில்லியன் டாலராகவும் (5-வது ஆண்டு), 38 பில்லியன் டாலராகவும் (6-வது ஆண்டு), 48 பில்லியன் டாலராகவும் (7-வது ஆண்டு), 78 பில்லியன் டாலராகவும் (8-வது ஆண்டு), 89 பில்லியன் டாலராகவும் (9-வது ஆண்டு) அதிகரித்தது.
கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றை அதிகமாக இறக்குமதி செய்வதே நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணம் என அரசு திரும்பத் திரும்பக் கூறியது. இப்போதும் கூறி வருகிறது. இதுதான் காரணமா, இதுதான் முழு உண்மையா என்றால் நிச்சயமாக இல்லை.
உற்பத்தியை அழித்த இறக்குமதி
இறக்குமதி புள்ளிவிவரங்களை ஆய்வு செய்வதால் அதிர்ச்சிகரமான உண்மைகள் புலப்படுகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மூலதனப் பொருள்களின் இறக்குமதி விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. பொதுவாகச் சொல்வதென்றால் இது யாராலும் கவனிக்கப்படாததாகி (அல்லது மறைக்கப்பட்டதாகி) விட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது மூலதனப் பொருள்களின் இறக்குமதி சராசரியாக ஆண்டுக்கு 10 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே (2004-05) மூலதனப் பொருள்களின் இறக்குமதி 25.5 பில்லியன் டாலராக ஆனது. அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் மூலதனப் பொருள்களின் இறக்குமதி அதிகரித்தது.
2-வது ஆண்டில் 38 பில்லியன் டாலராகவும், 3-வது ஆண்டில் 47 பில்லியன் டாலராகவும், 4-வது ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும், 5-வது ஆண்டில் 72 பில்லியன் டாலராகவும், 6-வது ஆண்டில் 66 பில்லியன் டாலராகவும், 7-வது ஆண்டில் 79 பில்லியன் டாலராகவும், 8-வது ஆண்டில் 99 பில்லியன் டாலராகவும், 9-வது ஆண்டில் 91.5 பில்லியன் டாலராகவும் அதிகரித்தது. 9 ஆண்டுகளில் மொத்தம் 587 பில்லியன் டாலருக்கு மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மூலதனப் பொருள்களின் இறக்குமதி "செயல்படும்' பொருளாதாரத்துக்கான அறிகுறி. தத்துவரீதியாக, அது தேசிய உற்பத்தியை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், என்ன ஆனது என்பதைப் பார்ப்போம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் தொழில் துறை உற்பத்திக் குறியீடு ஆண்டுதோறும் சராசரியாக 11.5 சதவீதமாக இருந்தது. ஆனால், இது படிப்படியாகக் குறைந்து அடுத்த 5 ஆண்டுகளில் 5 சதவீதத்துக்கும் கீழே போனது. கடைசியாக 2012-13 இல் 2.9 சதவீதமாக ஆனது. 4 ஆண்டுகளில் மூலதனப் பொருள் இறக்குமதி அதிகரிப்பதற்கேற்ப தொழில் துறை உற்பத்தி அதிகரிக்காமல் 11.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக 56 சதவீத சரிவைக் கண்டது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 9 ஆண்டுகளில் 587 பில்லியன் டாலருக்கு மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடைசி 5 ஆண்டுகளில் 407 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இது மொத்தத்தில் 79 சதவீதமாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் சராசரியாக 45 பில்லியன் டாலருக்கும், பிந்தைய 5 ஆண்டுகளில் 80 பில்லியன் டாலருக்கும் மூலதனப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
79 சதவீதம் அதிகரிப்பு
மூலதனப் பொருள் இறக்குமதி 79 சதவீதம் அதிகரித்தபோதும், தேசிய உற்பத்தி 56 சதவீதம் வீழ்ச்சியடைந்தது மட்டுமல்ல அதிர்ச்சி. தொடர்ந்து உற்பத்தி குறைவதையும், இறக்குமதி அதிகரிப்பதையும் பிரதமரும், நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கியும், பொருளாதார ஆலோசகர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதுதான் அதிர்ச்சி.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (கரண்ட் அக்கௌண்ட் டெபிசிட்) என்றால் என்ன?
நாம் அன்னியச் செலாவணி கொடுத்து இறக்குமதி செய்யும் மொத்தத் தொகைக்கும், ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணிக்கும் உள்ள இடைவெளிதான் நடப்புக் கணக்கு உபரி அல்லது பற்றாக்குறை. ஏற்றுமதி அதிகமாக இருந்தால் உபரியும், இறக்குமதி அதிகமாக இருந்தால் பற்றாக்குறையும் ஏற்படும். அளவுக்கு மீறிய பற்றாக்குறை ஏற்படும்போது அது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்.
மூலதனப் பொருள்களின் இறக்குமதி என்றால் என்ன?
ஒரு தயாரிப்பாளர் ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்காக மூலப்பொருளை இறக்குமதி செய்வதுதான் மூலதனப் பொருள் இறக்குமதி.
அப்படி மூலப்பொருளை இறக்குமதி செய்து புதிய பொருள்களைத் தயாரித்து அதிக விலைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இறக்குமதியால் ஏற்படும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை ஈடுகட்ட முடியும்.

Aug 25, 2013

நிஜமான சம்பவங்கள் சில... உள்ளங்கையில் உலகம் வேண்டாமே!



-டி.அருள் எழிலன், 
நிஜமான சம்பவங்கள் சில... 
செங்கல்பட்டு அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், ஒரு மாணவன் வகுப்பறையில் பயன்படுத்திய செல்போனை வாங்கி ஆசிரியர் பரிசோதித்தார். அதில் முழுக்கவே ஆபாச வீடியோக்கள். அதைவிட அதிர்ச்சி, பள்ளியின் ஆசிரியை ஒருவரை மிகவும் ஆபாசமான கோணங்களில் அந்த மாணவன் வீடியோ எடுத்திருந்தான். எச்சரிக்கப்பட்டு, பிரச்னை முடிக்கப்பட்டது. விஷயம் தெரிந்ததும் அந்த ஆசிரியை, 'இந்த வேலையே வேண்டாம்’ என்று விலகிச் சென்றுவிட்டார். கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியை தேர்வுத்தாளை திருத்திக்கொண்டிருந்தார். வினாத்தாளில் கேள்வி ஒன்றுக்கு, பாலியல் தொடர்பான தன் இச்சைகளை ஆசிரியையுடன் சம்பந்தப்படுத்தி ஒன்றரைப் பக்கத்துக்குப் பதிலாக எழுதியிருந்தான் ஒரு மாணவன்.
 உயர் வர்க்கக் குழந்தைகள் படிக்கும் நாமக்கல் பள்ளி அது. சில மாணவர்கள்  கழிப்பறையில் ஆபாச அடைமொழிகளால் பள்ளியில் பணிபுரியும் பலரையும் மாணவிகளின் பெயரையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். விசாரணையில் அந்த மாணவர்களைக் கண்டுபிடித்து பள்ளி நிர்வாகம் மாணவர்களை டிஸ்மிஸ் செய்தது. தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட அந்த மாணவர்கள், இப்போது மனநல ஆலோசனையில் இருக்கிறார்கள்.
பள்ளிக்கூட வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் ஒவ்வொரு நாளையும் பதற்றத்துடன் கழிக்கிறார்கள். '15 வயதில் ஆபாசப் படம், 16 வயதில் காதல், 17 வயதில் வீட்டைவிட்டு ஓடுவது’ எனச் சீரழிகிறது சிறுவர்களின் வாழ்வு. 'தங்கள் பிள்ளைகள் நல்லவர்கள்’ எனப் பெற்றோர்களின் உள்மனது அவர்களுக்கு ஆறுதல் சொன்னாலும், இன்னொரு புறம் சமூக யதார்த்தம் அவர்களைப் பதற்றத்திலேயே வைத்திருக்கிறது.  
மாணவர்கள் மட்டும்தான் இப்படி என்று எண்ண வேண்டாம். இந்தப் படுகுழி சீரழிவில் மாணவிகளும் சிக்கியுள்ளனர்.
''சென்னையில் உள்ள மேல்தர வர்க்கக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடம் அது. வகுப்பு நடைபெறும்போது மாணவி ஒருத்தி வகுப்பறையில் மொபைலில் அடல்ட்ஸ் ஒன்லி வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதைக் கண்டுபிடித்த ஆசிரியை, 'உன் பெற்றோரை அழைத்துச் சொல்லட்டுமா?’ என்று கேட்க, 'நீங்க ஏன் இந்தக் கேள்வி எல்லாம் கேக்கிறீங்க? என்  அப்பா அம்மாகிட்ட என்ன சொல்லப்போறீங்க? நான் நல்லாப் படிக்கிறேனா, ஒழுங்கா மார்க் வாங்குறேனா.... அதை மட்டும் பாருங்க’ என்று  அலட்சியமாய் பதில் சொல்லியிருக்கிறாள். மதிப்பெண்களைத் தாண்டிய வாழ்க்கை மதிப்பீடுகளைக் கற்றுத் தராத பெற்றோர்களும் பள்ளிக்கூடங்களும்தான் இப்படியான நடத்தைகளுக்கு முழுப் பொறுப்பு'' என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி.
ஒரு மிஸ்டுகாலில் தொடங்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையிலான உரையாடல், 'உங்க குரல் ரொம்ப அழகா இருக்கு’ என்று இழுத்து, ஆறே மாதத்தில் வீட்டைவிட்டு ஓடி வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளும் அளவுக்குச் செல்கிறது.  சிறுவர்களோ, ஆபாசப் படங்களில் பார்க்கும் பெண்களைத் தேடிச் செல்வது, அதற்காகப் பணம் செலவழிப்பது, பணம் இல்லாதபோது பழகிய வீடுகளிலேயே திருடுவது, அதுவே சில நேரங்களில் கொலை வரை செல்வது என்று விபரீதமாகிவிடும். இத்தகைய சம்பவங்கள் பெரும்பாலானவற்றின் காரணங்களை ஆராயும்போது, சமூக வலைத்தளங்களும், செல்போன்களும்தான் முக்கியக் காரணமாக இருக்கின்றன. சமீபத்தில் மும்பையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று இதை உறுதிசெய்கிறது.
மும்பையைச் சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், நாடு முழுக்க பள்ளிச் சிறுவர்களிடம் நடத்திய ஆய்வில், 14 முதல் 18 வயது வரையிலான இளம் சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபட சமூக வலைத்தளங்களும், இணையம், செல்போன்களே முக்கியக் காரணம் என்று தெரியவந்துள்ளது. ஆய்வில் கலந்துகொண்டதில் 96 சதவிகித மாணவர்கள், போலிப் பெயர்களில் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்துள்ளனர். மிகவும் இறுகிய மனதுடன் சிதைந்த கூட்டுக்குள் வாழும் இளையோர், தங்களின் மனக்குறைகளை முகமே தெரியாத யாரோ ஒருவரிடம் முகநூலில் கொட்டித் தீர்க்கிறார்கள். விளைவு, இளவயது காதல், டேட்டிங், ஆடம்பரச் செலவுகளுக்காக கொலை, கொள்ளை என்று அவர்களின் வாழ்க்கை திசை மாறுகிறது. நவீன அறிவியல் புரட்சியின் சின்னங்களான இணையமும், செல்போனும் நம் பிள்ளைகளின் மனங்களை சிதைத்து வீசுகின்றன.
''நம் கற்பனைக்கு எட்டாத வகையில் தொழில்நுட்பம் உள்ளங்கைக்குள் மிக மலிவான விலையில் கிடைக்கிறது. அதன் பெரிய பக்கங்களில் அறிவுச் செல்வங்களும், அறிவியல் வியப்புகளும் கொட்டிக்கிடக்க... இன்னொரு பக்கத்தில் ஆபாச வக்கிரங்களும், அதை வடிகாலாக பயன்படுத்திக்கொள்ளும் வசதிகளும் இருக்கின்றன. இந்தத் தொழில்நுட்பங்கள் எப்படி தங்களின் குழந்தைகளைப் பாதிக்கின்றன என்பதுகூட பெரும்பாலான பெற்றோர்களுக்குப் புரிவதில்லை. அவசியத் தேவைக்கு ஒரு தொலைபேசி என்பதற்கு அப்பால், அதிநவீனத் தொலைபேசியை பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பதில் ஒளிந்திருப்பது குடும்ப கௌரவம். ஆனால், அந்த அதிநவீனத் தொலைபேசி எப்படி குடும்ப கௌரவத்தைக் காவு வாங்குகிறது என்பதைக்கூட இந்தப் பெற்றோர்கள் அறியாமல் இருப்பதுதான் அதிர்ச்சி. ஒருகாலத்தில் நடுத்தர வயதில் இருப்பவர்கள் செய்த ஆபாச சேட்டைகளை, இப்போது 12, 13 வயது சிறுவர்களே செய்கிறார்கள். மகனைப் போல், பேரனைப் போல இருக்கும் சிறுவன்கூட, தவறான எண்ணத்தோடு ஒரு பெண் மீது சாய்கிறான்!'' என்று ஆதங்கம் தெரிவிக்கிறார் அருள்மொழி.  
13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பார்க்கவோ, பயன்படுத்தவோ அனுமதி இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில் கூறியிருந்தது. விபரீத செய்கைகளுக்கு வழிவகுக்கும் சமூக இணையதளங்கள் உள்ளிட்ட 13 இணையதளங்களைத் தடைசெய்ய அமெரிக்காவிடம் இந்தியா ஒத்துழைப்பும் கோரியிருந்தது. ஆனால், 'கருத்துரிமையில் தலையிட முடியாது’ என்று அமெரிக்க உள்துறை இதை நிராகரித்துவிட்டது. இந்த நிலையில், உள்ளூர் காவல் துறையால் இத்தகைய குற்றங்களைக் கண்காணிக்க முடியுமே தவிர, கட்டுப்படுத்த முடியாது என்பதே சமூக யதார்த்தம்.
12, 13 வயதினை உள்ளடக்கிய வளரிளம் பருவத்தில் குழந்தைகள் நுழையும்போது அவர்களின் மனம் புதிய விஷயங்களைத் தேடுகிறது. அவர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பது பெற்றோர்களுக்குத் தெரிவதே இல்லை. 'தன் பிள்ளை தப்பு செய்யாது’ என்று ஒவ்வொரு பெற்றோரும் தீர்மானமாக நம்புகின்றனர். யார் பிள்ளையாக இருந்தாலும் நடைமுறை உலகத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பதே உண்மை. அவர்கள், தாங்கள் சிறுவர்களாக இருந்த அந்தக் காலத்து பழங்கதைகளை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உள்ளங்கையில் அடங்கும் செல்போனில் உலகத்தின் அத்தனை வன்மங்களையும் பாதுகாத்துக்கொள்வதும், கண்டுபிடிக்கும் சூழல் எழும் சமயம், அவற்றை ஆதாரமே இல்லாமல் அழித்துவிடுவதும் இப்போது வெகு சுலபம். பெற்றோர்களுக்கு இந்தத் தொழில்நுட்பங்கள் புரிவது இல்லை. தங்கள் பிள்ளைகள் ஸ்மார்ட்போனில் சகல அப்ளிகேஷன்களையும் பயன்படுத்துவது குறித்து அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். மாறாக, அந்தப் பிள்ளைகள் உள்ளே வேறு ஒரு வினோத வக்கிர பயங்கர  உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிதர்சனத்தைப் பெற்றோர் உணர்வதும் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் இப்போதைய அதிஅவசியப் பக்குவத் தேவை!  

சமூகத்தில் என்ன மாற்றம் தேவை?
ஜெயந்தினி, உளவியல் மருத்துவர்
 ஆண், பெண் குழந்தைகள் இணைந்து படிக்கும் பள்ளிக்கூடங்கள் இப்போது அருகி விட்டன. 2 வரை ஆண்கள் தனியாக பெண்கள் தனித்தனியாகப் படித்துவிட்டு, கல்லூரி செல்லும்போது திடீரென இருபாலரும் இணைந்து படிக்கும்போது அதிகக் கிளர்ச்சியடைகிறார்கள். எதிர்பாலினக் கவர்ச்சியைக் குறைத்து இயல்பான ஆண், பெண் நட்பை வளர்த்தெடுக்கும் விதத்தில் இருபாலர் பள்ளிகள் துவங்கப்பட வேண்டும்,
 18 வயதுக்குக் கீழானவர்கள் இணையத்தைப் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். உலகின் பல நாடுகளில் இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதை அரசே செய்ய வேண்டும். செய்யாதபட்சத்தில் அரசியல் கட்சிகளும் சமூக இயக்கங்களும் இதற்காகப் போராட வேண்டும்.
 மனிதர்கள் யாராக இருந்தாலும் ஒழுக்கம் தேவை. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஒழுக்கமின்மையை அனுமதிக்க முடியாது. சமூகச் சூழலை கருத்தில்கொண்டு, இத்தகைய வேலி நம் பிள்ளைகளுக்கு அவசியமாகிறது. அதை நெருக்கியும் போடவேண்டியதில்லை. மிகவும் விலக்கியும் போட வேண்டியதில்லை. பெற்றோர்களாகிய உங்களிடம் இருந்து அன்பு கிடைக்கவில்லை என்றால், கிடைக்கும் இடம் தேடி அவர்கள் சென்று விடுவார்கள்!

பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
நம்மால் கைவிட முடியாத எதையும் நம் குழந்தைகள் கைவிட மாட்டார்கள். நாம் கையில் ஒன்றும், பையில் ஒன்றுமாக இரண்டு செல்போன்கள் வைத்துக்கொண்டு பிள்ளைகளைப் 'பயன்படுத்த வேண்டாம்’ என்று சொன்னால் அதை அவர்கள் ஏற்கமாட்டார்கள். ஆகவே, தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவதைக் காட்டிலும் அதன் ஆபத்தான பக்க விளைவுகளை முதலில் பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதைச் சரியான முறையில், பொருத்தமான சந்தர்ப்பத்தில் குழந்தைகளுக்கும் புரியவைக்க வேண்டும்.
அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் பள்ளிக்கூடம் படிக்கும் மகனுக்கோ, மகளுக்கோ செல்போன் என்பது அவசியமாகிறது. அதுவே, யாரோ ஒருவர் வேலைக்குச் சென்று, ஒருவர் வீட்டில் இருக்கிறார் என்றால் பிள்ளைகளுக்கு ப்ளஸ் 2 முடிக்கும் வரை செல்போன் அவசியம் இல்லை. எப்படி இருந்தாலும் பள்ளிச் சிறுவர்களுக்கு செல்போன் வாங்கித் தரும்போது, அது அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட மாடல் செல்போனாக இருப்பது அவசியம். அவர்களுக்கு அது போதுமானதும் கூட. 'ஏழை வீட்டுப் பையன் வெச்சிருக்குற அதே சாதாரண செல்போனை, என் பையனும் வெச்சிருக்குறதா?’ என இதில் கௌரவம் பார்த்து, ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுப்பதும், பின்னர் நிகழும் விளைவுகளுக்கு பெரும்பாலும் காரணமாகும்!
 இன்று சமூக வலைத்தளங்களே கதி என கிடப்பதும், விட்டில்பூச்சிகளாக அதன் கவர்ச்சியில் சிக்கி சீரழிவதும் பெரும்பகுதி கல்லூரி மாணவர்களே. நண்பர்களுடனான புகைப்படங்களை பகிர்வதில் துவங்கி, குடும்பம் பற்றிய தகவல்களை பொதுவெளியில் கொட்டுவது வரை அது எல்லையற்றுப் போகிறது. ஆகவே, கல்லூரி வயதில் உள்ளப் பிள்ளைகளின் பெற்றோர் எது அந்தரங்கம், எது பொதுவானது என்பதை பிள்ளைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.றீ வீதியில் இறங்கி உடல் தசைகள் புத்துணர்வு பெற ஓடியாடுவதுதான் விளையாட்டு. வீடியோ கேம்ஸ் என்பது விளையாட்டு அல்ல, அது நோய். தங்கள் பிள்ளைகள் சிறப்பாக வீடியோ கேம்ஸ் ஆடுவதாக மகிழ்ச்சி அடைவதை நிறுத்திக்கொண்டு, அவர்களுக்கு நடைமுறை விளையாட்டுகளை பழக்கப்படுத்த வேண்டும். பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்க ஊக்குவிக்க வேண்டும்!
 எந்நேரமும் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கும் குழந்தைகளின் கற்பனைத் திறனும், மூளையின் செயல்பாடும் முழு வளர்ச்சியடைவதில்லை. கையால் எழுதுவதும், ஓவியங்கள் வரைவதும் மூளை நரம்புகளை உற்சாகப்படுத்தும்.
 பெண் குழந்தை வயதுக்கு வருவதை பெரிய விழாவாகக் கொண்டாடி, 'நீ பெரியவள் ஆயிட்டே. இனி வெளியில் போகாதே’ என முடக்கிப் போடாமல், அது பருவ வயதின் இயற்கையான மாற்றம் என்பதை உணர்ந்து அதை இயல்பாக எதிர்கொள்ளும் மன தைரியத்தை உருவாக்குங்கள்!
 குழந்தைகளின் முதல் ரோல்மாடல் அப்பா, அம்மாதான். ஆகவே, அவர்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நல்ல பல பழக்கங்களை நீங்கள் கைக்கொள்ளுங்கள். நல்ல ரோல்மாடல் பெற்றோரிடமிருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, மோசமான நடத்தைகளை கற்பூரமாகப் பற்றிக்கொள்வார்கள்... உஷார்!
- ஆனந்த விகடனிலிருந்து...

Aug 14, 2013

புலித்தடம் தேடி...! தமிழ் பிரபாகரன் - பாகம் 03

புலித்தடம் தேடி...!  தமிழ் பிரபாகரன் - பாகம் 03
மயான மௌனம் நிலவும் யாழ்ப்​பாணத்தில் நிற்​கிறேன். இன்று அது கட்​-அவுட் நகரம். எங்கே திரும்பினாலும் மகிந்த ராஜ​பக்ச சிரிக்கிறார், 'நீடூழி வாழ்க’ என்று வாழ்த்துகிறார். ராஜபக்ச மட்டுமே வாழ்ந்​தால் போதுமா?
காலையில் தொடங்கிய பயணத்தில் முதலில் கண்டது யாழ்ப்பாண நூலகம். தமிழனின் அறிவையும் ஆற்ற​லையும் ஆளுமை​யையும் வரலாற்​றையும் படைப்புத் திறனையும் பறைசாற்றிய கருவூலம். உலகத்தரம் வாய்ந்த நூலகம்.
ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அந்த இனம் பேசும் மொழியை முதலில் அழியுங்கள். மொழிக்கு அடித்தளமாக இருக்கும் புத்தகங்களைக் கொளுத்துங்கள்’ என்பதுதான் இனவாதத்தின் தாரக மந்திரம்.
நூல் ஒன்று எரிக்கப்பட்டால், அந்த நூலுக்​கான மொழி எரிக்கப்படுகிறது என்பார்கள். சிங்கள இன​வாதமும் அப்படித்தான் நடந்து​கொண்டது.
ஜெயவர்த்தனா இதனுடைய சூத்ரதாரியாக அன்று இருந்தார். 'சிங்கள தேசத்தில் தமிழ் நூலகமா?’ என்று கொக்கரித்தார்.
1981-ம் ஆண்டு வைக்கப்பட்ட தீயில் 97 ஆயிரம் புத்தகங்கள் எரிந்து சாம்பலாகின. தமிழனின் அடை​யாளம் அனைத்தும் அழிக்கப்​பட்டதாக அன்று கருதப்​பட்டது. தமிழ்த் தாய் கண்ணீர் வடித்த ஆண்டு அது.
அரசியல் மாற்றங்கள், பேச்சு​வார்த்தைகள் என காலம் மாறியதும் 2003-ம் ஆண்டு நூலகம் சீரமைக்கப்பட்டது. சிங்கள அரசாங்கமே ஐந்து கோடி ரூபாயைச் செலவு​செய்து மராமத்து செய்து தர​வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது.
தமிழகம் உட்பட உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை அனைத்தும் புதிய புத்தகங்கள். ஆனால், யாழ் நூலகத்தில் இருந்தவை அனைத்​தும் பழைய பனுவல்கள். உலகத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காத பொக்கிஷங்கள். ஆனாலும், இதுவாவது கிடைத்​ததே என்று தமிழன் மகிழத்தக்​கதாக அந்த நூலகம் இப்போது அமைந்துள்ளது.
ஆனால் இன்று, புத்தகங்கள் படிக்கவும் ஆராய்ச்சி செய்யவும் தேடுதலுக்காகவும் என்று இல்லாமல் அரசு விழாக்களுக்கும் மாநாடுகளுக்கும்தான், இந்த நூலகம் அதிகம் பயன்படுகிறது.
மாநாடு நடக்கும் அன்று நூலகத்துக்கு விடுமுறை. நான் சென்ற அன்றும் 15-வது ஆளுநர்கள் மாநாடு நடந்தது. அதன் காரணமாக நூலகம் மூடப்பட்டு, இராணுவம் காவலுக்கு நின்றது.
தமிழ் ஆர்வலர் ஒருவர் வந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிக்கொண்டு இருந்தார். 'ஏதோ ஒப்புக்குத் திறக்கிறாங்க... மூடுறாங்க’ என்று வருந்தினார்.
அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஒரு கண் காட்சி. 'வடமாகாண கண்காட்சி - ஒன்றிணைந்து முன்னேற்றத்தை நோக்கி’ என்று அதற்குத் தலைப்பு கொடுத்திருந்தனர்.
2009-ம் ஆண்டில் இருந்து 2012 வரை வடக்கு மாகாணம் எப்படி முன்னேறி உள்ளது என்பதை விளக்கும் கண்காட்சியாம்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வட மாகாணத்தை 2009-ம் ஆண்டுதான் இலங்கை அரசாங்கம் கைப்பற்றியது.
அதன்பிறகு கல்வியில், சுகாதாரத்தில், பொருளாதாரத்தில் வட மாகாணம் எந்த வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அரசாங்கக் கணிப்புகள் காட்டியது.
இது, டக்ளஸ் தேவானந்தா முன்னேற்பாட்டுடன் நடக்கும் கண்காட்சி என்பதால், அவரது ஆதரவாளர்கள், அதிகாரிகளை இந்தக் கண்காட்சிக்கு அழைத்து இருந்தனர்.
அங்கு இருந்து, யாழ்ப்பாணம் ஒல்லாந்தையர் (டச்) கோட்டையை அடைந்தேன். சிதிலம் அடைந்த அந்தக் கோட்டையின் புனர்நிர்மாணப் பணிகள் 2009-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தொடங்கியது.
இந்தப் பணிகளுக்காக 104.5 மில்லியன் (இலங்கை ரூபாய்) செலவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 62.1 மில்லியன் ரூபாய் நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி. 'அரசின் வாக்குப்படி புனர்நிர்மாணப் பணிகள் இந்த டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடையும். இது சுற்றுலாவாசிகள் பார்ப்பதற்காக அமைக்கப்படுகிறது. அதற்காகத்தான் நெதர்லாந்து அரசாங்கமும் நிதி உதவி செய்துள்ளது’ என்றார் அங்கிருந்த அலுவலர்.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சாலை ஆகிய பகுதிகளில் சாலை அமைப்பதற்கான நிதியை சீனா கொடுத்துள்ளது.
இலங்கையின் 90 சதவிகித சாலைப் பணிகளுக்கு சீனாதான் நன்கொடை. சாலைப் பணியில் ஈடுபடுபவர்கள் அனைவருமே இராணுவத்தினர்தான்.
குழி தோண்டுவது, பாலம் கட்டுவது, அலங்கார மேடைகள் அமைப்பது என அத்தனைக்கும் இராணுவ வீரர்கள்கள்தான் பயன்படுத்தப்படுகிறார்கள்.
ஆரம்ப காலத்தில் இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை 30 ஆயிரம்தான். சந்திரிகாவின் ஆட்சியில் ஒரு லட்சத்தைத் தொட்டது. ராஜபக்ச வந்த பிறகு இன்னும் உயர்ந்தது.
பள்ளிப் பருவத்தை முடித்த இளைஞர்கள் அனைவரையும் இராணுவத்தில் சேர்க்க ஆரம்பித்தனர். இதனால், .ராணுவத்தினர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது.
போரின்போது நேருக்கு நேரான யுத்தத்தில், முழுமையாகப் பயிற்சி பெற்றவர்கள் நிறுத்தப்பட்டனர். மற்ற அனைத்து இடங்களிலும் இத்தகைய இளைஞர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.
போர் முடிந்த பிறகு, இத்தகைய இளைஞர்களுக்கு எந்த வேலையும் இல்லை. எனவே பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறைப் பணிகளையும் இவர்களே பார்க்கிறார்கள்'' என்று சிங்களவர்கள் சிலரே வேதனையுடன் சொன்னார்கள்.
அதாவது, நம் ஊர் வழக்கப்படி சொன்னால், சாலைப் பணியாளர்கள் மற்றும் மக்கள் நலப் பணியாளர்கள் மாதிரியான வேலைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அந்த இளைஞர்கள் முறையான பயிற்சி இல்லாத, இன்னும் சிறுவர்களாகவே இருக்கிறார்கள். அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டு இருப்பதும், கண்காணிக்க கட்டளைத் தளபதிகள் நியமிக்கப்பட்டு இருப்பதும்தான் வித்தியாசம்.
கோட்டையைச் சுற்றி வருகிறேன். வீரசிங்க மண்டபத்துக்கு எதிரில், 'உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நினைவாலயம்’ என்ற எழுத்து காட்சி அளித்தது.
தமிழர் சின்னங்களில் ஒன்றாக எஞ்சி இருந்தது அது. தமிழர் மீதான கோரத் தாக்குதலின் தொடக்கத்தை கண்ணீர் சின்னமாக இன்னும் காட்டிக்கொண்டு இருக்கிறது அந்தச் சின்னம்!
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்தது. மாநாட்டின் இறுதி நாளில் சிங்களப் பொலிஸார் திடீரெனத் தாக்குதல் நடத்தியதில், ஒன்பது தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
அதற்குக் காரணமான பொலிஸ் அதிகாரிகளைப் பழிவாங்கவே தமிழ் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுத்தனர். அதுவே ஆயுத இயக்கமாக மாறியது.
அந்த இடத்தை நினைவுபடுத்தும் தூணைப் பார்த்து விட்டு, ஸ்ரீ நாக விகாரை என்ற இடத்துக்குச் சென்றேன். அங்கிருந்த புத்த பிக்குவிடம் இராணுவத் தளபதி ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார்.
மூன்றாம் நூற்றாண்டில் நாகர்களால் கட்டப்பட்ட இந்த விகாரையை தமிழ்ப் பௌத்தர்கள் தொடர்ச்சியாக வழிபட்டு வந்துள்ளனர். தேவநம்பியதீசன் என்ற சிங்கள மன்னன்தான் இந்த விகாரையை கட்டி எழுப்பினார் என்று இதற்கு இன்னொரு வரலாறும் எழுதப்பட்டு இருக்கிறது.
இந்த விகாரையைப் பராமரிக்கும் பணியை இராணுவம் செய்கிறது. அதனால் அடிக்கடி இராணுவம் வந்து மேற்பார்வையிடும்’ என்று சொன்னார்கள். அங்கிருந்து தமிழ்க் கோயிலான நல்லூர் முருகன் கோயிலுக்கு நகர்ந்தோம்.
தமிழ் முகங்களை அங்கு​தான் அதிகம் பார்க்க முடிந்தது. எப்படி இருந்த நாடு தம்பி! இன்னைக்கு இந்தச் சனம் எல்லா வலியையும் புதைச்சுக்​கிட்டு வாழுது.
குட்டித் தமிழ்​நாடு போல இருந்த யாழ்ப்பாணம் சிங்களவன் கைக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் பறிபோகுது. சிங்கள உடுப்புக் கலாசாரம் வேகமாப் பரவுது தம்பி.
இயக்கம் இருந்த காலத்​தில் காலுக்கு மேல எந்தப் பெண்ணும் பாவாடை கட்டுறது இல்லை. ஆனா இன்றைக்கு முட்டிக்கு மேல பாவாடை போயிடுச்சு.
முருகன் கோயிலுக்குக் கூட்டம் குறைஞ்சு, புத்தர் கோயி​​​லுக்கு அதிகமாயிடுச்சு. எல்லா இடங்களிலும் புத்தர் கோயில் வந்திருச்சு...’ என்று பதறியபடி சென்றார் ஒரு தமிழர்.
இடையில் வந்த பத்திரிகை நண்பர் யாழில் பரவிவரும் விபசாரம் பற்றிக் கூறினார்.
அனுராதபுரம் என்பது சிங்களக் கலாசார நகரம். போரின்போது இராணுவத்தை வீட்டுக்கு அனுப்பாமல் இராணுவப் பணியிலேயே வைத்திருப்பதற்காக, சிங்களப் பெண்களை இங்கே மொத்தமாக வைத்திருந்தனர்.
போருக்குப் பின் விதிகள் தளர்ந்து போனதால், பொலிஸ் உதவியுடன் சிங்களப் பெண்கள், தமிழ்ப் பகுதிகளில் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர். அதுவே இன்று யாழிலும் பரவி இருக்கிறது.
இவர்களைப் பற்றி நாம் எழுதினாலோ அவர்களிடம் ஏதாவது பேட்டி எடுத்தாலோ, அவர்கள் பொலிஸுக்குத் தகவல் கொடுத்து விடுகின்றனர். சுற்றுலா ஊக்குவிப்பின் ஒரு பகுதியாக இங்கே விபசாரம் பரவி வருகிறது என்றார் அவர்.
அடுத்து, கிட்டு பூங்காவுக்குச் சென்றோம். அந்தச் சாலையில் தமிழ் மன்னன் சங்கிலியன் சிலை இருந்தது. அந்தப் பூங்கா இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்ததால் சீரமைக்கப்படவில்லை.
யாழ்ப்பாணப் பழைய புகைவண்டி நிலையத்துக்குச் சென்ற போது, அங்கு ஒரு சிங்களப் பாம்பாட்டிக் குடும்பம் மட்டும் இருந்தது.
கட்டடங்கள் பாழடைந்து கிடந்தன. ''இதைச் சீரமைப்பது இந்தியாதான். ஒவ்வொரு முறை இந்தியப் பிரதிநிதிகள் இங்கு வரும்போதும், '15 நாட்களில் பணிகள் தொடங்கிவிடும்’ என்று கூறிவிட்டுச் செல்வார்கள்.
அவர்கள் அப்படிச் சொல்லத் தொடங்கியே நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால், பணிகள் மட்டும் இன்னும் தொடங்கவே இல்லை.
பளை - காங்கேசன்துறை வரை ஒரு பாதையும், மதவாச்சி - மன்னார் வரை ஒரு பாதையும் போடப்படும் என்று இந்திய அரசு அறிவித்தது. ஆனால், அதற்கான எந்தப் பணியும் நடக்கவில்லை.
வலிகாமத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்க வேண்டும் என்று அங்கிருந்த தமிழ் மக்களை சிங்கள இராணுவம் துரத்தியது. அந்த மக்கள் இந்தப் புகைவண்டி நிலையப் பாதையில் கூடாரமிட்டுத் தங்கினர். அவர்களையும் இந்தியா சீரமைப்புப் பணிகளை ஆரம்பிக்கப்போகிறது என்று சொல்லித் துரத்தினர். ஆனால், இன்றுவரை பணிகள் தொடங்கவில்லை.
உண்ண, உறங்கக்கூட உரிமை இல்லாமல் தமிழன் அலைக்கழிக்கப்படுகிறான் என்றார் ஒரு தமிழர்.
அடுத்த எனது பயணம் வல்வெட்டித்துறையை நோக்கி...
ஊடறுத்துப் பாயும்....!
ஜூனியர் விகடன்

புலித்தடம் தேடி...! தமிழ் பிரபாகரன் - பாகம் 04


வல்வெட்டித்துறை... வீரம் விளைந்த நிலம். பிரபாகரன் பிறந்த மண்! மதிய வெயிலில் வெறிச்சோடிக் கிடந்த வீதியின் வழியாக பிரபாகரன் வீட்டை அடைந்​தேன். ஒரு சுவர் மட்டும்தான் இருந்தது. அதில் ஏதோ எழுதப்பட்டு, அதுவும் கறுப்பு மையால் அழிக்கப்பட்டு இருந்தது.
அருகில் சென்று மிகவும் சிரமப்பட்டு வாசித்தேன். 'தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் இல்லம்’ என்று எழுதப்பட்டு இருந்தது. அதைத்தான் அழிக்க முயற்சித்து இருந்தனர். நான் கவனித்ததைப் பார்த்த முதியவர் ஒருவர், 'ஒன்றரை வருஷத்துக்கு முன் ஆமிதான் இந்த வீட்டை உடைச்சது’ என்று ஒற்றை வரி வரலாற்றைச் சொல்லிச் சென்றார்.
இன்று பாழடைந்து, உருக்​குலைந்து கிடக்கும் அந்த வீட்டில்தான் பிரபாகரன் பிறந்தார். 1972-ம் ஆண்டு மக்கள் இல்லாத அரசுப் பேருந்தை எரித்ததற்காக பிரபாகரனையும் சில தமிழ் இளைஞர்களையும் போலீஸ் தேடியது. அவரது இருப்பை அறிந்த போலீஸ், அதிகாலைப் பொழுதில் அந்த வீட்டைச் சுற்றி வளைத்தது. போலீஸ் பிடியில் சிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்ற பிரபாகரனுக்கு அப்போது வயது 16. அன்றோடு முடிந்தது, அவரின் வல்வெட்டித்துறை வீட்டு வாழ்க்கை.
பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை, மாவட்ட நில வள அதிகாரியாக இருந்தவர். அவரின் பணி... இடமாற்றல்களாலும், சிங்கள ராணுவத்தின் சித்திரவதைகளாலும் கழிந்தது. தனது மகனின் மறை​விடத்தை அறிந்துகொண்டு பார்க்கச் சென்ற வேலுப்​பிள்ளையிடம் 'இனி நான் உங்களுக்குப் பயன்பட மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார் பிரபாகரன். அந்த வீடும் ராணுவக் கண்காணிப்புக்கு இலக்காய் போனது. இதை, இன்று சிதைத்திருப்பதன் மூலமாக, கரிக்கட்டையால் அவரது பெயரை அழித்திருப்பதன் மூலமாக தனது ஆத்திரத்தைத் தீர்க்க முயற்சிக்கிறது சிங்கள இனவாதம்!
அங்கிருந்து, நெல்லியடி மகா வித்தியாலயம். இங்கு நிலைகொண்டு இருந்த சிங்கள ராணுவ முகாம் மீதுதான் 1987-ம் ஆண்டு, மில்லர் தாக்கு​தல் நடத்தினார். புலிகளின் 'முதல் கரும்புலித் தாக்குதல்’ என்று அது வரலாற்றில் பதிவானது. இன்றும் இந்தப் பள்ளியைச் சுற்றி ராணுவம் கண்காணித்து வருகிறது.
'தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன்’ என்றதும், அந்தப் பகுதியில் இருந்த ஒருவர் ஆர்வமாக வந்து பேசினார். ''போர்க் காலத்துல நாங்கள் சந்திச்ச வேதனை, போரைவிடக் கொடியது. அஞ்சு மணிக்கு மேல வெளியே வரக் கூடாதுன்னு இருந்த ராணுவக் கட்டுப் பாட்டாலதான், இப்பக்கூட சன நடமாட்டம் ஏழு மணிக்குள் அடங்கிப் போயிறது.
'தலையாட்டி விசாரணை’யை யாழ்ப்பாணத்துல தெரியாதவங்க இருக்க மாட்டாங்க. ஒரு ஆளைத் தலை​யில் கறுப்புத் துணி போட்டு கண் மட்டும் தெரியும் அளவில் மூடி, மக்கள் முன்னாடி ஆமி நிறுத்திடும். அவன் மக்களில் ஒவ்வொரு ஆளாகப் பார்ப்பான். யாரையாவது பார்த்து அவன் தலையாட்டினால், அந்த ஆளு புலிக்குத் தொடர்புடையவர், அவரை புலி என்று ராணுவம் பிடிச்சிடும். அப்புறம் அவங்களைக் காணாமல் போனோர் பட்டியலில் சேர்த்துடுவாங்க. அந்தத் தலையாட்டி, மக்களோடு மக்களாக உறவாடியவனாத்தான் இருப்பான். ராணுவத்தின் மிரட்டலுக்கோ, பணத்துக்காகவோ காட்டிக்​கொடுப்பவனாக மாறி இருப்பான். இதில் அப்பாவிகள்தான் நிறைய சிக்குவார்கள். அத்தகைய தலையாட்டிகள் இன்னைக்கும் நிறையப் பேர் இருக்காங்க. அவங்க யாருன்னு தெரியாம, யாரைப் பார்த்தாலும் நாங்க பயந்து நடுங்கிக்கிட்டு இருக்கோம்'' என்றார் வேதனையாக. இதுதான் இன்றைய யாழ்ப்பாணத்தின் உண்மையான நிலை.
முன்பெல்லாம் காலை 9 மணிக்குத்தான் தமிழர்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியும். மாலை 5 மணிக்குள் ஊருக்குள் வந்துவிட வேண்டும். வெளியிடத்தில் வேலை பார்ப்பவர்கள் மாலை 5 மணிக்குள் வீட்டுக்கு வருவது சாத்தியம் இல்லை என்றாலும் வேறுவழி இல்லை. வந்துதான் ஆக வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள்தான் கடந்த 10 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் பகுதியில் இருந்திருக்கிறது. இறுதிப்போர் முடிந்த பிறகு இந்த நிபந்தனையைத் தளர்த்தி இருக்கிறது ராணுவம். ஆனாலும், தமிழர்கள் இரவுக்கு முன்னால் வீட்டை அடைந்து விடுகிறார்கள். விசாரணையே இல்லா விட்டாலும் இரவு அவர்களைப் பயமுறுத்தும் விஷயமாக மாறிவிட்டது.
புராதன கதறுகொட விகாரைக்குச் சென்றேன். வட்ட வடிவில் பழங்காலத்து விகாரைகள் இருந்தன. தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை இருந்தது. 'இது இந்திய அரசு அன்பளிப்பாகக் கொடுத்த சிலை’ என்றார் விகாரை காவலாளி. அந்தப் புத்தரிடமும் ஆயுதம் தரித்த ராணுவம் நின்றது.
அங்கிருந்து வலிகாமம்...
இந்தப் பகுதி விவசாயத்துக்கு ஏற்ற செம்மண் கொண்ட பகுதி. கடல் தொழில்களுக்கும் உகந்தது. வலிகாம மக்களின் விவசாய நிலங்களையும் வீடுகளையும் 1990-ம் ஆண்டிலேயே ராணுவம் பிடுங்கிக் கொண்டது. அப்போது, ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் தங்களது வாழிடத்தில் இருந்து விரட்டப்பட்டனர். ராணுவம் எல்லா இடங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டது. அந்தப் பகுதியில், பார்க்கும் பக்கம் எல்லாம் இடிந்த வீடுகளும் குண்டுகள் துளைத்த சுவர்களும்தான் இருந்தன. மின்சாரம் இல்லை. கல்வி இல்லை. மருத்துவமனை இல்லை. ஊரைச் சுற்றிலும் ராணுவ வளையங்கள் மட்டுமே இருந்தன. ஆங்காங்கே தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இத்தனை வலிகளையும் சுமந்துகொண்டுதான் வாழ்கிறார்கள். சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. மனிதர்களைப் பார்ப்பதே அரிதாக இருந்தது.
மீள்குடியேற்றம் பற்றி விவரித்த தமிழ் அரசியல் பிரமுகர், ''ராணுவம் விடுதலை செய்யும் நிலப்பரப்பு என்பது 10-ல் ஒரு பங்குதான். கீரிமலை, மயிலிட்டி, வசாவிளான், குப்பிழான் போன்ற கிராமங்களில் சில பகுதிகளை விடுவித்து உள்ளனர். ஆனால், இன்றும் வலிகாமத்தின் 26 கிராமங்கள் உயர் பாதுகாப்பு வளையங்களில்தான் உள்ளன. இந்த கிராமங்களின் எல்லைப் பகுதிகளில் ராணுவம் புதைத்து வைத்த கண்ணிவெடிகள் பெரும் அளவில் இருக்கின்றன. மக்களின் நிலங்களில் ராணுவம் விவசாயம் செய்கிறது. விவசாயத்தில் கிடைப்பதை சந்தையில் கொண்டுவந்து மக்களுக்கே விற்​கிறது. வலிகாமத்தின் கடலோரப் பகுதிகளை சுற்று​லாவுக்காக அரசு மேம்படுத்துகிறது. ஆனால், சுற்றுலா மீது செலுத்தும் கவனத்தை மக்கள் மீது செலுத்தவில்லை'' என்றார்.
''பலாலி விமானத் தளத்துக்காகவும், காங்கேசன்துறைக் கடற்படைத் தளத்துக்காகவும் பெரும் நிலப்பரப்பை சிங்கள ராணுவமும் கடற்படையும் ஆக்கிரமித்து உள்ளன. இந்தியாவின் பலாலி விமானத் தளச் சீரமைப்புத் திட்டத்தை இலங்கை நிராகரித்து விட்டு தானே செய்கிறது. காங்கேசன்துறைத் துறைமுகம், இந்தியாவின் 20 மில்லியன் டொலர் உதவியோடு சீரமைக்கப்படுகிறது. அதே​போல் யாழ்ப்பாணத்தில் உள்ள அச்சுவேலித் தொழிற்​பேட்டை சீரமைப்புக்கும் இந்தியா 174 மில்லியன் ரூபாயை இலங்கைக்குக் கொடுத்துள்ளது.
காங்கேசன் துறையின் கடலோரப் பகுதியில் ஒரு பெரும் பகுதியை மின்நிலையம் அமைப்பதற்காக கே.எல்.எஸ். என்ற மலேசிய நிறுவனத்துக்கு 22 ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் குத்தகைக்கு விட்டுள்ளது. அதற்காக அந்த நிறுவனம் 250 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது.
காங்கேசன்துறையில் இலங்கை அரசுக்குச் சொந்தமான சீமெந்து ஆலைக்கு அருகே பல ஏக்கர்களை கோத்தபய ராஜபக்‌ஷவின் நண்பர் ஒருவர் சுண்ணாம்புக் கற்கள் எடுப்பதற்காக ஆக்கிரமித்து வைத்துள்ளார். அவர் ஏற்கனவே ராணுவப் பாதுகாப்போடு அங்குள்ள நிலங்களை சுண்ணாம்புக் கற்களுக்காக அழித்தவர்தான்'' என்றும் அவர் சொன்னார்.
பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் எங்கெங்கோ நடக்கின்றன என்றாலும் பசியோடு கிடக்கிறார்கள் தமிழர்கள். வெளிநாட்டு நிதி எதுவும் தமிழர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்காக செலவிடப்படவில்லை என்பதைத் தெளிவாக உணர முடிந்தது.
யாழ்ப்பணத்தின் மேற்கு கடலோரப் பகுதிதான் மாதகல். இங்கு சம்பில்துறை என்ற இடத்தில் கடற்படையால் அமைக்கப்பட்ட புத்த விகாரை உள்ளது. 2009-ம் ஆண்டு போர் முடிந்த சில தினங்களில் ராஜபக்‌ஷவின் மனைவியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த இடத்துக்கு சிங்கள அரசு வைத்துள்ள பெயர், 'டம்புகொலபட்டுன’. அங்குள்ள ஆசீர்வாதச் சொற்களில் 'சங்கமித்த மஹா றஹத் தேரணியின் இவ் உருவச்சிலை இலங்கைவாழ் மக்களுக்காக சிறீமதி ஜனாதிபதி பாரியார் கௌரவ சிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்‌ஷ அவர்களின் பூரண அனுசரனையுடன் ஜூன் 5, 2009 அன்று சிறீ மஹா போதியின் தென்கிளை சிறீலங்காவுக்கு எடுத்துவரப்பட்டு சங்கமித்த விகாரை பூமியில் பதிக்கப்பட்டு உள்ளது’ என்று வரலாறாக எழுதப்பட்டுள்ளது.
1992 முதல் இது முழுக்கமுழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி ஆகும். சம்பில்துறையில் இருந்து பொன்னாலை வரை சிங்களக் கடற்படைக்காக நிரந்தர வீடுகள் கட்டப்படுகின்றன. ராணுவத்துக்குக் கண்ணுக்கெட்டும் தூரம் வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லவே முடியாத நிலை.
20 வருடங்களுக்கும் மேலாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்ப் பகுதி​களுக்கான தேவை, கிராமச் சாலைகள்​தான். ஆனால், அரசு அதை அமைப்பதாக இல்லை. மாறாக, சுற்றுலா மேம்பாட்டுக்காக நகர்ப்புறச் சாலைகளைத்தான் விரிவு படுத்துகிறது, அதீதக் கவனமும் நெடுஞ்சாலைப் பணிகளில்தான் காட்டுகிறது. சிங்களக் கிராமங்களில் 100 பாதைகள் அமைக்கப்படுகின்றன என்றால், தமிழ்ப் பகுதிகளில் 10 பாதைகள் அமைக்கத்தான் ஒப்புதல் கொடுக்கிறது சாலை மேம்பாட்டகம். இப்படி நல்ல சாலைகளுக்குக்கூட வழி இல்லாமல் இருக்கிறது தமிழர் வாழிடம். ஊர் முழுக்க ராணுவம், அடிப்படை வசதிக்கு எதுவும் இல்லாத தமிழ் மக்கள் என்பதே அந்தப் பகுதியின் யதார்த்தம்.
'விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. இதனால் ஐ.நா. சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டு யாழ்ப்பாணத்தில் எந்த ராணுவ முகாம்களையும், பாதுகாப்பு வளையங்களையும் அகற்ற முடியாது’ என்று டிசம்பர் 31-ம் தேதி இலங்கை கட்டளைத் தளபதி அறிவித்திருப்பதைப் படித்தால், புலிப் பூச்சாண்டியைக் காட்டியே மீதம் உள்ள தமிழர்களையும் சிறுகச்சிறுக மரணிக்க வைக்க, சிங்கள இனவாதம் முடிவெடுத்துவிட்டது!
ஊடறுத்துப் பாயும்...