Aug 19, 2014

நலம் '360 8






ல்வாழ்வை நம்முள் பத்திரப்படுத்த குலேபகாவலி மூலிகை, நானோ துகள் மருந்து, எட்டுக் கை அம்மன் ஆசி... இவை மட்டும் போதாது. நம்மைக் கட்டுப்படுத்தும் ஐந்து முதலாளிகளும் (மண், நீர், தீ, காற்று, ஆகாயம்) நன்றாக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு நமது ஒவ்வொரு செயல்பாட்டையும் அமைத்துக்கொள்வதே, இயற்கைக்கு நாம் செய்யும் மரியாதை. இயற்கையைச் சீண்டுவது எப்படி நமது சுற்றுச்சூழலைச் சிதைக்கிறதோ, அதேபோல நம் உடலின் உயிர்ச்சூழல் கடிகாரத்தைச் சிதைப்பதும் பல பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதில் முக்கியமானது, வயிற்று வலி!
வயிற்று வலியைப்போல் மண்டையைப் பிராண்டும் விஷயம் வேறு இல்லை. வலது விலா எலும்புகளுக்குக் கீழே அவ்வப்போது வலி, சில நேரம் எதுக்களிப்பு, கொஞ்சம் அஜீரணம்... என இருக்கும்போது அது 'வயிற்றுப் புண்ணா, குடல் புண்ணா, இல்லை வேறு ஏதேனுமா?’ என, நம்மில் பலர் குழம்புவோம். 'அலுவலகத்தில் போன வாரம் வரை ஆரோக்கியமாக இருந்த சீதாராமன், 'நெஞ்சு கரிக்குது’னு சொல்லிக்கிட்டே சரிஞ்சு விழுந்து, மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே செத்துப்போனானே...’ என்று நினைக்கும்போதே, நெஞ்சு படபடத்து முகம், உச்சந்தலை எல்லாம் வியர்த்து, மருத்துவமனைக்கு ஓடும் இளைஞர்கள் இப்போது அதிகம்.
அங்கே, 'எவ்வளவு நாளா இப்படி இருக்கு? நெஞ்சு எலும்புக்குக் கீழா, மார்பின் மையப்பகுதியிலா... எங்கே எரிச்சல் இருக்கு? சாப்பிட நேரமாகும்போது, பசி வரும்போது... வலிக்குதா, சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வலிக்குதா?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டு, வேலை, சாப்பாட்டுப் பழக்கம், இன்ஷூரன்ஸ் சங்கதிகள் பற்றி எல்லாம் தெரிந்துகொண்டு, 'இது வயிற்றுப்புண் மாதிரி தெரியலை. பித்தப்பை கல்லா இருக்குமோ... எதுக்கும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமே!’ என்பார்கள். 'ஸ்கேனா..? இது கல்லுக்கா, 'கல்லா’வுக்கா?’ என நம்மில் பலர் துப்பறியும் சாம்பு ஆவோம்.
முன்பெல்லாம், 'இது பித்தப்பை வீக்கமா இருக்குமோ?’ எனச் சந்தேகம் வந்தவுடன், டாக்டர் முதலில் நமது வயிற்றைக் கைகளால் அழுத்தி பரிசோதனை செய்வார். நோயாளியின் வலதுபக்க விலா எலும்புகள் முடியும் இடத்துக்குக் கீழாக (அங்கேதான் ஈரல், பித்தப்பை எல்லாம் இருக்கின்றன) மருத்துவர் தனது விரல்களை அழுத்தமாக வைத்துவிட்டு, நோயாளியை மூச்சை நன்கு இழுத்து நிறுத்தச் சொல்வார். அப்போது பித்தப்பை வீக்கத்துடன் இருந்தால், அது முன்வந்து... கருவில் இருக்கும் குழந்தையின் தலைப்பகுதி தாயின் வயிற்றில் உணரப்படுவது போன்ற மெல்லிய உணர்வை மருத்துவர் விரலுக்குத் தரும். ஜான் பெஞ்சமின் மர்ஃபி என்கிற அமெரிக்க விஞ்ஞானி கண்டறிந்த இந்தச் சோதனைக்கு 'மர்ஃபி சோதனை’ என்று பெயர்.
மருத்துவப் படிப்பில் மர்ஃபி சோதனை செய்யத் தெரியாவிட்டால், கண்டிப்பாக பாஸ் கிடையாது. ஆனால், நாம் மர்ஃபி ரேடியோவை ஓரங்கட்டியதுபோல, நம் மருத்துவர்களில் பலர் மர்ஃபி சோதனையையும் ஓரங்கட்டிவிட்டார்கள். 'அதான் ஸ்கேனும் சி.டி-யும் இன்னும் துல்லியமாச் சொல்லுதே...’ என்ற நினைப்பு, கூட்டம், நேரமின்மை எனப் பல காரணங்கள்.
ஆனால், பித்தக்கல்லுக்கான காரணம் என்ன என்று இன்னும் மிகச் சரியாக, துல்லியமாக நவீன மருத்துவத்தால் நிர்ணயிக்க முடியவில்லை. எதைத் தின்றால், எந்த என்சைமை, எவ்வளவு சுரந்து, ஜீரணிக்க வேண்டும் என்ற புரோகிராம், பல மில்லியன் ஆண்டுகளாக நம் மரபில் பொதிந்துவைத்திருக்கிறது நம் ஜீரண மண்டலம். ஆனால், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் எனப் புதுபுதுசாகப் பல பூச்சாண்டிகள் சாப்பாடு மூலம் வருவதால், அந்த மரபு புரோகிராம் குழம்புகிறது. தவிர, ஜீரோ சைஸ் இடுப்பு வேண்டி சாப்பிடாமல் அடம்பிடித்து மெலிவது, நார்ச்சத்து, மேக்னீசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் எனும் உயிர்ச்சத்துக்கள் ஆகிய முக்கியமான சத்துக்களை உணவில் எடுத்துக்கொள்ளாதது, கொழுப்பைக் கூடுதலாகவும், நார்ச்சத்தைக் குறைவாகவும் சாப்பிடுவது, எல்லா சாமிக்கும் ஏதாச்சும் சுயநல அப்ளிகேஷன் போட்டு வாரத்தில் நான்கு நாட்கள் விரதம் இருப்பது, மெலடோனின் சுரப்புக் குறைவு... எனப் பல காரணங்களை, பித்தப்பை அழற்சிக்கும் கல்லுக்கும் காரணங்களாகக் கூறுகிறது நவீன மருத்துவம்.
'நோய் முதல் நாடி’ பார்ப்பதுதான் வைத்தியம் என்பதில் வள்ளுவனுக்கு மட்டுமல்ல... யூகி முனிக்கும் ஹாரிசனுக்கும்கூட வேறுபட்ட கருத்துகள் கிடையாது. 'தொடர்வாத பந்தமிலாது குன்மம் வராது’ என வயிற்றுப்புண்ணுக்கு வாதத்தையும், விலாவுக்குக் கீழ் வலி தரும் இந்தப் பித்தக்கல் பிரச்னைக்குப் பித்தத்தையும் காரணமாகச் சொல்கிறது தமிழ் மருத்துவம். முதலில் மலச்சிக்கலை நீக்கி, உடலில் வாதத்தைக் குறையுங்கள். எண்ணெய் பலகாரங்களை அதிகம் எடுக்க வேண்டாம் என்பதோடு, பட்டினி முதலிய பித்தம் சேர்க்கும் விஷயங்களையும் தவிர்க்கவும் என்பதே நம் தமிழ் மருத்துவம் சொல்லும் பிரதானமான பரிந்துரைகள். கொஞ்சம் உற்றுப் பார்த்தால், யூகி முனியும் ஹாரிசனும் ஒரே புள்ளியில் நிற்பது புரியும்.
பித்தக்கல்லில் வகைகள் உண்டு. 'நிறையக் கொழுப்பு +  கொஞ்சம் உப்பு’ அல்லது 'கொஞ்சம் கொழுப்பு + நிறைய உப்பு’ எனக் கல் ஆக்கம் இருக்கக்கூடும். சிறுநீரகக் கல்லையும் பித்தக்கல்லையும் நிறையப் பேர் குழப்பிக்கொள்வது உண்டு. பித்தப்பைக்குள் இருக்கும் இந்தக் கல்லை, சிறுநீரகக்கல்போல கரைப்பது மிகக் கடினம். பித்தப்பைக்கல்லை மட்டும் உடைத்து துகளாகும் ஒலிக்கதிர் சிகிச்சை பெரும்பாலும் நடைமுறையில் இல்லை. மொத்தமாக பித்தப்பையையே எடுப்பதுதான் அதிகம் நடக்கிறது. எந்தப் பிரச்னையும் கொடுக்காமல் 1 செ.மீ-க்குக் குறைவாக 'தேமே’ என ஓரமாக இருக்கும் கல்லை அகற்றுகிறேன் என்று பித்தப்பையையே அகற்றுவது, பல நேரங்களில் அவசியம் இல்லாதது. 'அந்தப் பக்கமா குடல் ஆபரேஷன் பண்றோமே... கல் உள்ள இந்தப் பையையும் சேர்த்து எடுத்திடலாமே!’ என்பதில் எனக்கு உடன்பாடும் இல்லை. அதே சமயம், கல் கொஞ்சம் பெரிதாக இருக்கும்போதோ, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயாளியாக இருக்கும்போதோ, பித்தப்பை நாளப் பகுதியில் (DUCT) கல் சிக்கி அடைத்திருக்கும்போதோ, குடும்பத்தில் புற்றின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்போதோ அல்லது ஈரல் நொதிகள் பெரிதாக மாற்றம் பெற்றிருக்கும்போதோ, குடும்ப மருத்துவர் ஆலோசனைக்குப் பின்னர் கல்லை அகற்றுவதில் தவறும் இல்லை. 'அய்யோ... பித்தப்பையை எடுத்துட்டா, பித்தம் சுரக்காமல் போய்விடுமே!’ என்ற அச்சமும் தேவை இல்லை. ஏனென்றால், பித்தப்பை என்பது, பித்தம் சுரக்கும் பை அல்ல; ஈரல் சுரக்கும் பித்தத்தைச் சேகரித்து வைத்து, செரிமானத்துக்குத் தேவையானபோது குடலுக்குத் தள்ளிவிடும் அமைப்பு.
ஒருபக்கம் அப்பெண்டிக்ஸ், அடினாய்டு, கருப்பை, பித்தப்பை போன்றவை, அதில் ஏற்படும் சிறு சிரமங்களுக்கு எல்லாம் 'என்னத்துக்கு பிரச்னை?’ என்றோ, 'அதான் இன்ஷூரன்ஸ் இருக்கே...
எடுத்துடுவோம்’ என்ற மேதாவித்தனத்திலோ அறுவைசிகிச்சையில் நீக்கும் போக்குகள் அதிகரித்திருக்கின்றன. இன்னொரு பக்கம் வளர்ச்சியடைந்த புற்று முதலான அறுவைசிகிச்சை அவசியம் தேவைப்படும் நிலையில் தாமதித்து வருந்தும் சம்பவங்களும் பெருகிக்கொண்டே போகின்றன. எனவே, உடல் நலம் பராமரிப்பு விஷயத்தில் நிறைய அக்கறையும், விசாலமான பார்வையும் கொண்டிருப்பதே புத்திசாலித்தனம்.
சில நேரம் ஆதரவாகக் கட்டிப்பிடிப்பதன் மூலம் நோயைக் குணமாக்க முடியும். கைப்பற்றி அழுத்தி, தோள் சாய்த்துத் தட்டிக்கொடுத்தும் குணமாக்க முடியும். மடியில் உட்காரவைத்து வானம் காட்டி வாய் பிளக்கவைத்து அளிக்கும் ஒரு வாய் உணவின் மூலமும் குணமாக்குவது சாத்தியம். நெடுநாள் அனுபவ மூலிகை மருந்தின் மூலம் முற்றிலுமாகத் துடைப்பதும் சாத்தியம். நேற்றைய விஞ்ஞானம் ஆய்ந்து சொன்ன நவீனத்தின் மூலம் வீழ்த்துவதும் சாத்தியம். என்ன... 'என் நோய் இதில் எப்படிக் குணமாகும்?’ என்றெல்லாம் ஆய்வு செய்ய நேரம் இல்லாத சமூகத்தின் விளிம்பில் நிற்கும் சாமானியனின் நோயைத் துல்லியமாகக் கணித்து, கட்டிப்பிடிக்கணுமா... கத்தியை எடுக்கணுமா என்பதை புத்தியுடன் கொஞ்சம் அறத்தையும் தீட்டி தீர்மானிக்க வேண்டும் மருத்துவ உலகம். அவ்வளவே!
- நலம் பரவும்..

Aug 7, 2014

உணவு யுத்தம்! – 28



பிஸ்கட் என்ற ஆங்கிலச் சொல் பெஸ்கட் என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து உருவானது. இதன் மூலச் சொல் லத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது என்கிறார்கள். லத்தீனில் பிஸ்க் கோட்டாமா என்றால் இருமுறை சுட்டது என்று பொருள். அதிலிருந்தே பிஸ்கட் உருவாகியிருக்கிறது. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குக்கீஸ் என்றும் மற்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் பிஸ்கட் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில் குக்கீ என்றால் ‘பன்’னை மட்டுமே குறிக்கும் என்கிறார்கள்.

பிஸ்கட் சந்தையைப் பொறுத்தவரை இன்று பெரிய நிறுவனங்களுக்குப் போட்டியாக சிறு தயாரிப்பு நிறுவனங்கள் நிறைய பெருகிவிட்டிருக்கின்றன. அதிலும் கிராமப்புற சந்தையைக் குறிவைத்து சிறிய பிஸ்கட் கம்பெனிகள் நிறைய செயல்படுவதால் அதற்கென தனிச்சந்தை உருவாகியிருக்கிறது. என்றாலும் இந்தியாவின் பிஸ்கட் தயாரிப்பில் 70 விழுக்காட்டை இரண்டு தனியார் நிறுவனங்களே கைவசம் வைத்துள்ளன.

பிஸ்கட் தயாரிப்பின் வரலாறு ரோமில் தொடங்குகிறது. கோதுமையில் செய்த சிறிய துண்டுகளான ரொட்டியை தேனில் தொட்டுச் சாப்பிடும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது. அந்த நாட்களில் பிஸ்கட்டுகளில் இனிப்பு சேர்க்கப்படவில்லை. விற்பனைப் பொருளாக மாறவும் இல்லை. வீட்டில் மட்டுமே பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டன. 16-ம் நூற்றாண்டில்தான் பிஸ்கட், விற்பனைப் பொருளாக மாறியது.
அதன் பிறகு கடற்படை வீரர்களுக்கான உணவாக பிஸ்கட் மாறியது, கடற்பயணத்தில் கெட்டுப்போகாத உணவுப் பொருளாக பிஸ்கட் இருந்ததே இதற்கான முக்கியக் காரணம். ஆனால், அந்த பிஸ்கட்டுகள் இன்று நாம் சாப்பிடுவது போல மிருதுவாக இல்லை. கடினமான பிஸ்கட்டுகளுக்கு பதிலாக இனிப்பும் முட்டையும் சேர்த்து மிருதுவான பிஸ்கட்டுகளைத் தயாரிப்பதில் பெர்சியர்கள் அக்கறை காட்டினார்கள். அதன் காரணமாகப் புதிய வகை மென் பிஸ்கட்டுகள் தயாரிப்பது தொடங்கியது.

15 மற்றும் 16-ம் நூற்றாண்டுகளில் துறவிகள் தங்களின் உணவாக பிஸ்கட்டை வைத்திருந்தார்கள். துறவிகளுக்காகவே விஷேசமான பிஸ்கட்டுகள் மடாலயங்களில் தயாரிக்கப்பட்டன. அதை விரத நாட்களில் பயன்படுத்தி வந்தார்கள். 1595-ல் டீபோல் என்ற ஆர்மீனியத் துறவி ஒருவர் தனது விரத நாட்களில் சாப்பிட்ட பிஸ்கட் பற்றி எழுதியிருக்கிறார். 17-ம் நூற்றாண்டில் யூதர்களால் உருவாக்கப்பட்ட ஜோடன் கேக் என்ற குக்கீ யூத துறவிகளின் விருப்ப உணவாக இருந்தது.

தொழில் புரட்சியின் வழியாக ஈஸ்ட் தயாரிப்பு எளிதானது. பிஸ்கட்டை எம்போஸ் செய்யவும் விரும்பிய வடிவத்தில் வெட்டுவதற்கும் உரிய இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. தாமஸ் விகர்ஸ் என்பவர் இந்த இயந்திரங்களை உருவாக்கினார். புதிய இயந்திரங்களின் வருகையால் பிஸ்கட் செய்வது தனித் தொழிலாக வளர ஆரம்பித்தது.  அதற்கான சந்தை உருவானது. ஆகவே, பிஸ்கட்டுகளை எளிய மக்களும் வாங்கி உண்ணத் தொடங்கினார்கள்.
டீயில் பிஸ்கட்டை முக்கிச் சாப்பிடும் பழக்கம் இங்கிலாந்தில்தான் பிரபலமானது. 19-ம் நூற்றாண்டில் உழைக்கும் மக்களே டீயில் பிஸ்கட்டை ஊறவைத்து சாப்பிட்டு வந்தார்கள். ஆகவே, அதை பிரபுக்கள் மோசமான பழக்கம் என ஒதுக்கி வைத்தார்கள். பணக்கார விருந்தில் டீயில் பிஸ்கட் முக்கி சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால், டீயில் ஊறிய பிஸ்கட்டின் சுவை பலருக்கும் பிடித்திருக்கவே, அது அனைவருக்குமான பழக்கமாக உருமாறியது. இதற்காகவே விசேஷ பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டன. அப்படி அறிமுகமானதே ரஸ்க். இது போர்த்துகீசிய சொல்லான ரோஸ்காவில் இருந்து உருவானது. இந்தியாவிலும் பிரிட்டிஷ் மூலமாகவே ரஸ்க் அறிமுகமானது.
பிஸ்கட்டை எவ்வளவு நேரம் டீயில் முக்கி வைத்திருப்பது என்பது ஒரு கலை. கவனம் தப்பினால் பிஸ்கட் டீயில் விழுந்து கரைந்துவிடும். இதுகுறித்து இயற்பியல் அறிஞர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள் என்கிறார் உணவியல் ஆய்வாளர் மெக்கலன்.
தானியங்களின் துகள்கள் ஒன்றுசேர்ந்தே பிஸ்கட் உருவாகியிருக்கிறது. மண்பானையில் இருப்பது போன்றே, பிஸ்கெட்டிலும் நுண்மையான துவாரங்கள் இருக்கின்றன. டீயில் ஊறும்போது பிஸ்கட்டில் உள்ள இந்த பிணைப்புகள் தளர்ந்துவிடுகின்றன. அதனால் கனம் அதிகமாகி பிஸ்கட் நெகிழ்ந்து தேநீரில் விழுந்துவிடுகிறது.
இதற்குக் காரணமான இயற்பியல் உண்மைகள் குறித்து லென் ஃபிஷர் என்கிற இயற்பியலாளர் விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர் டீயில் எப்படி பிஸ்கட்டை முக்கி சாப்பிடுவது என்பதற்கு ஒரு டிப்ஸ் தருகிறார்.
அதாவது, ‘பிஸ்கட்டை தேநீரில் செங்குத்தாக முக்குவதைவிடவும் படுக்கைவாட்டில் சாய்வாக முக்கினால், அதன் அடிப்புறம் மட்டுமே ஈரமாகும்; மேல்பகுதி அதே மொறுமொறுப்புடன் நனையாமலிருக்கும். ஆகவே பிஸ்கட் உடைந்து விழாது. சுவைப்பதற்கும் எளிதாக இருக்கும்’ என்கிறார்
பிஸ்கெட்டை ஊறவைத்து சுவைப்பதற்காகவே இந்தோனேஷியாவில் டிம்டாம்ஸ்லாம் என்றொரு விழா நடக்கிறது, அதில் பெரும்திரளாக மக்கள் கூடி பிஸ்கெட்டை டீயில் முக்கிச் சாப்பிடுகிறார்கள்
16-ம் நூற்றாண்டு வரை சந்தையில் சர்க்கரை கிடைப்பது எளிது இல்லை. அது விலை உயர்ந்த பொருள் என்பதால் இனிப்பு சேர்க்காத பிஸ்கட்டுகள் அதிகம் தயாரிக்கப்பட்டன. அதில் சுவைக்காகத் தேனை தொட்டுக்கொள்வார்கள்.
ஓட்ஸ் மற்றும் கோதுமையில் வெண்ணைய் கலந்தே பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டன. தற்போது ராகி, சோளம் உள்ளிட்ட பல்வேறு தானியங்களில் பிஸ்கட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. பிரெஞ்சு எழுத்தாளர் மார்சல் புருஸ் தனது நாவலில் தேநீரில் தனக்கு விருப்பமான சிறிய கேக்கை முக்கிச் சாப்பிடுவது குறித்த நினைவுகளைத் துல்லியமாக எழுதியிருக்கிறார்.
மனிதர்களுக்கு பிஸ்கட் பிடித்திருப்பது போலவே நாய்களுக்கும் பிஸ்கட் சாப்பிட பிடித்தேயிருக்கிறது. இன்று அதிகம் விற்பனையாகும் எலும்புத் துண்டு வடிவில் உள்ள நாய் பிஸ்கட்டுகள் இங்கிலாந்தில்தான் அறிமுகமாயின.
இங்கிலாந்தில் ஜேம்ஸ் ஸ்பிராட் என்பவர் 1890-களில் நாய்களுக்கு என மாமிசம் கலந்த விசேஷ ரொட்டிகளைத் தயார் செய்து விற்றுவந்தார். அந்த நாட்களில் நாய்களுக்கான சிறப்பு உணவு வகைகள் தயாரிப்பது காப்புரிமை பெற்றிருந்தது. அதை மீறி  ஜேம்ஸ்பிராட் நாய்கள் உணவைத் தயாரித்தார் என அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஜேம்ஸ் பிராட்டுக்கு நியாயம் கிடைக்கவில்லை, அவர் அமெரிக்காவுக்கு சென்று அங்கே தனது நாய் ரொட்டிகளை விற்பனை செய்யத் தொடங்கி பிரபலமானார்.
1908-ல் பென்னட் என்பவர் இறைச்சி கடை ஒன்றில் மீதமான இறைச்சிகளை அரைத்து அதை கோதுமை மாவுடன் சேர்த்து ரொட்டி செய்து நாய்களுக்குப் போடுகிறார்கள் என்பதை அறிந்து, அதே பாணியில் நாய்களுக்குப் பிடித்தமான எலும்புத்துண்டு வடிவ பிஸ்கட்டுகளை தயாரிக்கத் தொடங்கினார்.
வளர்ப்பு பிராணிகளுக்காகப் பணம் செலவிட விரும்பிய வசதிபடைத்தவர்கள் இந்த நாய் பிஸ்கட்டுகளை விரும்பி வாங்கத் தொடங்கினார்கள். 1910-ல் இதற்கென தனி நிறுவனத்தைத் தொடங்கிய பென்னட், உலகின் முக்கியமான நாய் உணவு தயாரிப்பு நிறுவனமாக உருமாற்றினார்.
இந்தியாவின் முதல் பிஸ்கட் கம்பெனியாக அறியப்படும் பிரிட்டானியா, 1892-ல் கல்கத்தாவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் ரூபாய் 295 முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது,  1910-ம் ஆண்டு மின்சாரவசதி கிடைக்கவே பிரிட்டானியா பிஸ்கட் தன்னை தொழில்நிறுவனமாக வளர்த்துக்கொள்ளத்தொடங்கியது. இதன் காரணமாக இரண்டாம் உலகப்போரின்போது ராணுவ வீரர்களுக்குத் தேவையான பிஸ்கட்டுகளை தயாரித்து விநியோகம் செய்வதற்கு இந்த நிறுவனத்துக்கு உரிமை வழங்கப்பட்டது. இன்று பிஸ்கட் சந்தையில் 4,000 கோடி வர்த்தகம் செய்யும் பிரமாண்ட நிறுவனமாக வளர்ந்தோங்கி நிற்கிறது.
மக்ரோன் எனப்படும் நாவில் இட்டால் கரைந்துவிடும் பிஸ்கட் வகையை அறிமுகப்படுத்தியவர்கள் பெர்ஷியர்கள். 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுப் புகழ்பெறத் தொடங்கிய மக்ரோன் பாரீஸில் புது ருசி கொண்டது. பிரபல கேக் தயாரிப்பாளரான மெய்சன் லாடுரே தயாரிப்பில் உருவான மக்ரோன்கள் ஐரோப்பா முழுவதும் புகழ்பெற்றிருந்தன. இன்றும் பிரெஞ்சு மக்கள் மக்ரோனை விரும்பி உண்ணுகிறார்கள்.
இது போலவே ஐபோன் குக்கி எனப்படும் புதுவிதமான பிஸ்கட் ஒன்று மேற்கு ஜப்பானில் இப்போது மிகவும் பிரபலமாகியுள்ளது. குமிகோ கு‌டோ என்ற பேக்கரி தயாரிப்பாளர் ஐபோன் வடிவ பிஸ்கட்டைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். ஒரு ஐபோன் பிஸ்கட்டின் விலை 33 அமெரிக்க டாலர். அதாவது 1,985 ரூபாய், இந்த பிஸ்கட்டுக்காகப் பலரும் முன்பதிவு செய்து இரண்டு மாதங்கள் வரை காத்திருக்கிறார்கள்.
முழுவதும் எண்ணெய்யில் பொறித்த சமோசா, பஜ்ஜி, வடை போன்றவற்றுக்கு மாற்று என்ற அளவில் பிஸ்கட்டுகளை நாம் ஏற்றுக்கொள்ளலாம். அதிலும் ஓட்ஸ் மற்றும் ராகியில் செய்த பிஸ்கட்டுகள் ஆரோக்கியத்துக்கு உகந்தவை என்கிறார்கள்.
பிஸ்கட் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. தொடர்ந்து பிஸ்கட் மட்டுமே சாப்பிடுகிறவர்களுக்கு வயிற்று உபாதைகள் உருவாகின்றன. டின்களில் அடைத்து விற்கப்படும் பிஸ்கட்டுகள் முறையாகப் பராமரிப்பு செய்யப்படாத காரணத்தால், அதை சாப்பிடுகிறவர்களுக்கு உடல் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மாறிவரும் உணவுச் சூழலில் பாக்கெட்டுகளில் அடைத்த பிஸ்கட்டுகளை விடவும் சிறுதானியங்களில் செய்த ரொட்டி, சுண்டல், அடை போன்றவை ஆரோக்கியத்துக்கான உறுதுணையாக இருக்கும் என்கிறார்கள். பிஸ்கட் அறிமுகமாவதற்கு முந்தைய காலங்களில் நமது மூதாதையர்கள் அவற்றைத்தானே சாப்பிட்டு வந்தார்கள்?

Aug 5, 2014

உணவு யுத்தம்!-27

பிஸ்கட் பிடிக்கிறதா?
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தபோது ஒரு அறிவிப்பைத் தொடர்ந்து கேட்டேன்… ‘ரயில் பயணத்தில் கவனமாக இருங்கள். மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து ஏமாற்றிவிடுவார்கள்’ என்றது அந்தக் காவல் துறை அறிவிப்பு.
ஒரு பக்கம் பயணம் பாதுகாப்பில்லாமல் போய்விட்டதே என்ற அச்சம் எழுந்தபோதும் மறுபக்கம் முகம் தெரியாதவர் கொடுத்தால்கூட பிஸ்கட்டை ஏன் சாப்பிட விரும்புகிறோம் என்ற எண்ணமும் கூடவே வந்தது.

இலக்கியக் கூட்டமோ, கருத்தரங்குகளோ, தொலைக்காட்சி நேர்காணலோ, அறிந்தவர் வீட்டுக்குப் போனாலோ… ஒரே மாதிரியான பிஸ்கட்தான் சாப்பிடத் தருகிறார்கள். காகிதத்தை தின்பது போல ஒரு ருசி.
பிஸ்கட் நம்காலத்தின் சகல நேர நிவாரணி. அழுகிற குழந்தையாக இருந்தாலும் அழையாத விருந்தாளியாக இருந்தாலும் பிஸ்கட்தான் ஒரே தீர்வு.
உப்பு பிஸ்கட், மிளகு பிஸ்கட், ஓம பிஸ்கட், ராகி பிஸ்கட், சாக்லேட் பிஸ்கட். க்ரீம் பிஸ்கட், வேஃபர், ஓட்ஸ் பிஸ்கட், குருவி பிஸ்கட், தேன் கலந்த பிஸ்கட், பழ பிஸ்கட், ஏலக்காய் பிஸ்கட், தேங்காய் பிஸ்கட் இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட ரகங்கள், சுவைகள். 
பேச்சிலர் வாழ்க்கையில் திருவல்லிக்கேணி மேன்ஷனில் வசித்தபோது நண்பர்கள் பிஸ்கட்டை பசிதாங்கி என்பார்கள். பசிக்கிற நேரத்தில் ஒன்றிரண்டு பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டு பசியை ஆற்றிக்கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அவசர உதவிக்காக எப்போதும் கோதுமை பிஸ்கட்டுகள் அறையில் கிடக்கும்.
இந்த பிஸ்கட்டுகளில் ஒன்றை ஒருமுறை காகத்துக்கு உணவாகப் போட்டேன். வேகமாக வந்து அதை கொத்திப் பார்த்த காகம் இதை மனுஷனால் மட்டும் சாப்பிட முடியும் என்பது போல முகத்தைத் திரும்பிக்கொண்டு காலால் உதறி தள்ளிவிட்டு கரைந்தபடியே பறந்தது. சில பிஸ்கட் ரகங்களைப் பசி இல்லாத நேரங்களில் மனிதர்களால் ஒரு துண்டுகூட சாப்பிட முடியாது என்பதே உண்மை.
எனது நண்பர்களில் ஒருவர் எப்போதும் தனது காரில் ஐந்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டுகள் நிறைய வைத்திருப்பார். எதற்கு என கேட்டதற்கு, ‘சாலை சிக்னலில் நின்று பிச்சை எடுப்பவர்களுக்குக் காசு கொடுப்பதற்குப் பதிலாக பிஸ்கட் பாக்கெட்டுகள் தந்துவிடுவேன். காசு கொடுப்பதைவிட பசியைப் போக்குவதே முக்கியம் என நினைக்கிறேன்’ என்றார். ஆச்சர்யமாகவும் புது வழியாகவும் இருந்தது.
இவரைப் போலவே இன்னொரு நண்பர் அலுவலகம் கிளம்பும்போது இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி பைக்கில் வைத்துக்கொள்வார். காரணம் கேட்டபோது, ‘சேல்ஸ்மேனாக வேலை செய்கிறேன். நாங்கள் போகிற வீடுகளில் உள்ள நாய்களை சமாளிக்கத் தினமும் இரண்டு பாக்கெட் பிஸ்கட் தேவைப்படுகிறது’ என்றார்
எப்படி எல்லாம் பிஸ்கட் பயன்படுகிறது பாருங்கள்.
சமீபத்தில் ஒரு பிரபல பிஸ்கட் கம்பெனியின் விளம்பரத்தில் நடிப்பதற்காக இந்தி திரையுலக நட்சத்திரம் ஒருவருக்கு 12 கோடி சம்பளம் என நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. எதற்காக பிஸ்கட்டை இப்படி விளம்பரப்படுத்துகிறார்கள்? ஒரு நடிகருக்கு 12 கோடி பணம் தரப்படுகிறது என்றால், அந்தச் சுமையை யார் மீது ஏற்றுவார்கள்? இன்னொரு டிவி விளம்பரத்தில் பிஸ்கட் சாப்பிடுவதை ஆர்கசம் போல காட்டுகிறார்கள்.
உணவுப் பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்த ஊடக விளம்பரங்களில் எல்லா தந்திரங்களையும் கையாளுகிறார்கள். அவர்களின் குறி சிறார்கள் மற்றும் இளைஞர்கள். ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடிக்கும் மேலாக உணவு விளம்பரங்களுக்குச் செலவிடப்படுகின்றன. இவ்வளவு விளம்பரம் செய்து ஏன் உணவுப்பொருளை விற்கிறார்கள்? இப்படி விற்கப்படும் பொருளின் தரம் மற்றும் அதன் பக்கவிளைவுகள் பற்றி ஏதாவது விழிப்பு உணர்வு நம்மிடம் இருக்கிறதா என்ன?
பீட்சா சாப்பிடுங்கள், பிஸ்கட் சாப்பிடுங்கள், நூடுல்ஸ் சாப்பிடுங்கள், சாக்லெட் தின்னுங்கள், குளிர்பானம் குடியுங்கள் என்று 24 மணி நேரமும் விளம்பரங்கள் நம் வீட்டு ஹாலுக்குள் ஒலித்தபடியே இருந்தால் பள்ளிப் பிள்ளைகளின் மனதைப் பாதிக்காமலா இருக்கும்?
அதன் விளைவு இன்று 80 சதவிகித பள்ளி மாணவர்கள் இடைவேளையின்போது ஐந்து ரூபாய் பாக்கெட் என விற்கும் பிஸ்கட்டுகள் மட்டுமே சாப்பிடுகிறார்கள். அதுதான் பிஸ்கட் விற்பனை மிகவும் உயர்ந்து போனதற்கான முக்கியக் காரணம்.
பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளின் லஞ்ச் பாக்ஸை பற்றி பெற்றோர்கள் பெரிதாக கவனம் கொள்வதே இல்லை, பெரும்பான்மை பிள்ளைகள் சத்துகுறைவான, போதுமான சரிவிகித உணவு இல்லாத மதிய உணவைத்தான் கொண்டுபோகிறார்கள். கீரைகள், பச்சைக் காய்கறிகள், சிறுதானியங்கள் உண்ணுகின்ற மாணவர்களைக் காணுவது அரிதாக இருக்கிறது.
‘டோட்டோசான் ஜன்னலில் ஒரு சிறுமி’ என்ற ஒரு ஜப்பானிய நூல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு பெற்றோரும் மாணவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது என்பேன்.
டெட்சுகோ குரோயாநாகி என்ற பெண், தான் படித்த டோமாயி என்ற பள்ளியைப் பற்றி இந்த நூலில் பகிர்ந்திருக்கிறார். இந்தப் பள்ளியில் வகுப்பறையாக ரயில் பெட்டிகள் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் பள்ளியில் பயின்ற டோட்டோசான், மாணவர்கள் மீது இந்தப் பள்ளி எந்த அளவு அக்கறை காட்டியது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறார்.
வீட்டில் இருந்து மாணவர்கள் கொண்டுவரும் மதிய உணவில் என்ன இல்லையோ, அதைப் பள்ளியே தயாரித்து மாணவர்களுக்கு வழங்குவது வழக்கமாக இருந்தது. அதாவது மாணவர்களின் ஆரோக்கியத்துக்குத் தேவையான காய்கறி, மீன், முட்டை போன்றவற்றைப் பள்ளியே சமைத்து ஒவ்வொரு மாணவரின் டிபன் பாக்ஸிலும் எது குறைகிறதோ அதை சாப்பிடப் பரிமாறுவார்கள். இதனால் மாணவர்களுக்கு சரிவிகித உணவு முறையாக கிடைப்பதுடன் பள்ளி தங்கள் மேல் எவ்வளவு அக்கறையாக உள்ளது என்பதும் உணர்த்தப்படுகிறது.
அதன் காரணமாகவே குழந்தைகள் உணவை வீணடிப்பதில்லை. ஒரு பருக்கையைக்கூட சிதறுவதில்லை. குச்சிகளைக் கொண்டு சாப்பிடப் பழக்குவது என்பது ஓவியம் வரையக் கற்றுத்தருவதற்கு இணையானது. இரண்டிலும் கவனமும் அக்கறையும் தேவை என்கிறார் யமாகுசி என்ற கல்வியாளர்.
பள்ளிக் குழந்தைகள் எடுத்துச்செல்லும் பிஸ்கட்டுகளில் அவர்கள் உடல்நலத்துக்கான புரதம், கொழுப்பு மற்றும் இதர பொருட்கள் எந்த அளவில் உள்ளன, அவை போதுமானவையா, பழங்கள், முளைக்க வைத்த தானியங்கள் ஆகியவை பிஸ்கட்டுகளுடன் கொடுத்து அனுப்பலாமா என்பதைப் பற்றி பெற்றோர் அக்கறைகொள்ள வேண்டும்.
மாணவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதைப் பற்றி எந்தப் பள்ளியும் அக்கறைகொள்வது இல்லை. அசைவம் சாப்பிடக் கூடாது, துரித உணவுகள் கூடாது என்ற கட்டுப்பாடுகள்தான் இருக்கிறது. ஆரோக்கியமான உணவைத்தான் குழந்தைகள் சாப்பிடுகிறார்களா என பள்ளிகள் கண்காணிப்பது இல்லை. அதில் அக்கறை செலுத்துவதும் இல்லை.
சில பள்ளி வளாகத்தில் செயல்படும் கேன்டீன்களும் விடுதிகளிலும் தயாரிக்கப்படும் உணவு வகைகள் மோசமான தரத்தில் இருக்கின்றன. அது மாணவர்களின் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கும் என்பதைக்கூட பள்ளி கண்டுகொள்வது இல்லை.
நாலு பிஸ்கட்டும் பாலும் கொடுத்துவிட்டால் பையன் தானே வளர்ந்துவிடுவான் என்ற தவறான கற்பிதம் நிறைய பெற்றோர்களுக்கு இருக்கிறது. மருத்துவர்கள் இதற்கு மாற்றான அறிவுரைகள் கூறும்போது கீரை, பழம், காய்கறிகள் எல்லாம் பையன் சாப்பிட மாட்டான் என பெற்றோர்களே ஒதுக்கிவிடுகிறார்கள்.
பிஸ்கட் நமக்கு பிடித்தமான உணவுதான், ஆனால் தேவையான உணவா என்று நாம் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
100 வருஷங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் வழியேதான் பிஸ்கட் நமக்கு அறிமுகமானது. ஆரம்ப காலங்களில் அதை நோயாளிகளின் உணவு என்றே வகைப்படுத்தி வைத்திருந்தார்கள். பின்பு அது பணக்காரர்களின் சிறு தீனியாக உருமாறியது… விருந்துகளில் பரிமாறப்பட்டது.
இன்றும் சென்னையில் காலை எழுந்தவுடன் பிஸ்கட் உடன் டீ சாப்பிடும் பழக்கம் அடித்தட்டு மக்கள் பலரிடமும் காணப்படுகிறது. பொறை டீ, பிஸ்கட் டீ, பன் டீ என ஏதாவது ஒன்றுடன்தான் காலையைத் தொடங்குகிறார்கள். பிரிட்டிஷ் காலத்துப் பழக்கம் இன்னமும் நம்மை விட்டுப் போகவில்லை.
சிறுவயதில் குருவி பிஸ்கட் என்ற ஒன்றை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறேன். குருவி, யானை, ஒட்டகம், சிங்கம் போன்ற வடிவங்களில் தயாரிக்கப்படும் பிஸ்கட் யாருடைய கற்பனை என அப்போது தெரியாது. வளர்ந்த பிறகே அந்த பிஸ்கட்டுக்குப் பின்னாலும் ஒரு வரலாறு இருப்பதை அறிந்தேன்.
விலங்குகளின் வடிவத்தில் பிஸ்கட் தயாரிக்கும் பழக்கம் இங்கிலாந்தில்தான் துவங்கியது. ஆரம்ப காலங்களில் யானை, கரடி, ஒட்டகம், குரங்கு, புலி, முதலை என 54 வகையான விலங்குகளின் வடிவங்களில் பிஸ்கட்டுகள் செய்யப்பட்டன. பிரிட்டனில் இருந்து அமெரிக்கா சென்ற இந்த யானை பிஸ்கட்டுகளை பெர்னாம் சர்க்கஸ் கம்பெனி தனது விளம்பரத்துக்காகப் பயன்படுத்தியது. சர்க்கஸ் பார்க்கப் போகிறவர்கள் விலங்கு வடிவ பிஸ்கட்டுகளை வாங்கிச் சாப்பிட விரும்பினார்கள். அதனால் இந்த பிஸ்கட்டுகள் புகழ்பெறத் தொடங்கின.
அதன் பிறகு கிறிஸ்துமஸ் காலங்களில் சிறார்களை மகிழ்விப்பதற்காக விலங்கு வடிவ பிஸ்கட்டுகள் கொண்ட டின்கள் பரிசுப் பொருளாக உருமாறின. இப்போதும் அது போன்ற டின்னில் அடைத்த விலங்கு வடிவ பிஸ்கட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் இதில் 54 விலங்குகளின் உருவமில்லை, 26 மட்டுமே உள்ளன. புதிதாக எந்த விலங்கின் வடிவத்தில் பிஸ்கட் தயாரிக்கலாம் என சிறார்களிடமே ஆலோசனை கேட்ட பிஸ்கட் கம்பெனிகள் சூப்பர் ஹீரோக்கள், மற்றும் ஏலியன்ஸ் உருவங்களில் தற்போது பிஸ்கட் தயாரிக்கிறார்கள்.
பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா என்ற வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. அதன் நன்மை தீமையை முடிவு செய்வது அத்தனை எளிதானது அல்ல….

Aug 2, 2014

நலம் 360' 7

நலம் 360’ – 7

‘காசு, பணம், துட்டு, மணி, மணி…’ – என ஆடவைக்கும் வாழ்க்கைச் சூழலில், அமைதியாக வளர்ந்து ஆளைக் கொல்லும் அரக்கனாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது ரத்தக் கொதிப்பு நோய். ‘இந்த நோய்க்குக் கூடுதல் கவனம் கொடுங்கள். உங்கள் நாட்டில், கிட்டத்தட்ட 25 வயதுக்கு மேல் உள்ள மக்களில் 25 சதவிகிதம் பேருக்கு பி.பி எகிறிப்போய் இருக்கிறது’ என்று இந்தியா மீது கரிசனக் கவலை தெரிவிக்கிறது உலகச் சுகாதார அமைப்பு. மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, கண் பார்வை பறிபோதல்… எனத் தீர்ப்பதற்கு மிகக் கடினமான பல பிரச்னைகள உண்டாக்கும் இந்த ரத்தக் கொதிப்பு, முழுக்க முழுக்க தவிர்க்கக்கூடியதும் கட்டுப்படுத்தக்கூடியதும்கூட. நோய்குறித்த அலட்சியமும் தவறான புரிதலும் ‘துரத்தலும் தப்பித்தலுமான’ துரித வாழ்வியலும்தான் இந்த நோய் கும்மியடித்துக் குத்தாட்டம் போடுவதற்கான முக்கியமான காரணங்கள்.

ரத்தக் கொதிப்பு நோய் வர, மரபும் ஒரு முக்கியமான காரணம். ஆனால், 60 வயதைத் தாண்டி அப்பா-அம்மாவுக்கு வந்த இந்த ரத்தக் கொதிப்பு, சூழலையும் வாழ்வியலையும் நாம் சின்னாபின்னமாக்கியதில் 25 வயதில் எல்லாம் இப்போது தலைகாட்டத் தொடங்கி இருக்கிறது. உணவைப் பக்குவப்படுத்தும் வித்தை குறித்த நம் மூத்தக்குடியின் அனுபவ முதுமொழியான ‘உப்பில்லாப் பண்டம் (சீக்கிரம்) குப்பையிலே’ என்பதைத் தப்பாகப் புரிந்துகொண்டு, மானம் ரோஷம் அதிகரிக்க வேண்டும் என்று உப்பை அள்ளி அள்ளிப் போட்டுக்கொள்வதிலும், ‘நாங்கள் கூடுதலாக எந்தச் செயற்கை கெமிக்கலும் சேர்க்கவில்லை’ என்று கூவிக் கூவி விற்கப்படும் குளிர்பானத்தையும் பாக்கெட் பழச்சாறையும் முட்ட முட்டக் குடிப்பதிலும் உப்பு தப்பாட்டம் போடத் தொடங்கிவிடுகிறது.
உப்பு, ஊறுகாயில் மட்டும்தான் இருக்கும் என்பது தப்புக் கணக்கு. இனிப்புச் சுவையோடு இருக்கும் ஜாம், ரொட்டிகளிலும் உப்பு இருக்கிறது. ‘கொஞ்சம்தானே… எப்போவாவதுதானே!’ என வயிற்றுக்குள் கொட்டப்படும் சிப்ஸ், சூப்பில் தூவப்படும் உப்பு, ‘ரெடி டு ஈட்’ எனும் அத்தனை துரித வகையறா உணவுகளிலும் உப்பு தூக்கலாகவே தூவப்படும். சுவையூட்டுவதாகச் சொல்லிவரும் மோனோ சோடியம் குளூட்டமேட், ‘உணவைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்குமாக்கும்’ எனச் சொல்லிச் சேர்க்கப்படும் சோடியம் நைட்ரேட், சோடியம் பை கார்பனேட் வகையறாக்கள் எல்லாம் உப்புச் சத்தான ‘சோடியம்’ நிரம்பியவையே. கேக், சாக்லேட், பாஸ்ட்ரி, பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பன்னீர் பட்டர் மசாலா… என, துரித உணவுகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சோடியம் உள்ளே போவதுதான் 45 வயதில் வரவேண்டிய நாய் குணம், நாலாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்புகளிலேயே வாலாட்டி வளர்கிறது.
சாது பொமரேனியனாக இளமையில் இருக்கும் இந்தக் குணம் ஆவேச அல்சேஷனாக ஆர்ப்பரிக்கும்போது, ‘சார்… நீங்க மாத்திரை சாப்பிட்டே ஆகணும்… அதுவும் காலம் பூரா!’ என்ற மருத்துவ எச்சரிக்கை மிரட்டும். அப்போது, ‘சார் உங்களைப் பார்த்தாதான் எனக்கு பி.பி ஏகிறுது. மத்தபடி நான் புத்தர் மாதிரி’ என, கொதிப்பை அளந்து பார்த்துச் சொன்ன மருத்துவரை பூச்சாண்டியாக்கித் தப்பிக்க முயற்சிப்பவர், ‘வீட்ல பொண்டாட்டி இம்சை… ஆபீஸ்ல சீனியர் தொல்லை… இதுல நான் எங்கே நிம்மதியா இருக்கிறது?’ என அலுத்துக்கொள்வோர், ‘நேற்று தூங்கலை; வரும்போது டிராஃபிக்ல வண்டி ஓட்டினேன். அதனாலயா இருக்கும்!’ என மருந்து சாப்பிட மறுப்போர் என விதவிதமான காரணங்களைச் சொல்லி, ரத்தக் கொதிப்பை அதிகரித்துக்கொள்ளும் பரந்த மனசுக்காரர்கள் இங்கே அதிகம்.
சரி, ‘அந்தக் கொதிப்பைக் குறைக்க மருந்து கண்டிப்பாக அவசியமா?’ என்று கேட்டால், ‘ஆம். நிச்சயம் அவசியம்’. இதயம் சுருங்கும்போது மிக அதிகபட்சமாக 140-ம், விரியும்போது 90-ம் தாண்டி ரத்த அழுத்த அளவு இருந்தால் ரத்தக் கொதிப்பு என்கிறது மேற்கத்திய விஞ்ஞானம். ‘136-ஐ தாண்டவில்லை. அது ஆரம்பக்கட்ட லேசான உயர்வுதான்’ எனில், உணவில் திருத்தம், நிறைய நடைப்பயிற்சி, யோகா, தியானப் பயிற்சி, சரியான தூக்கம் மூலம் நிச்சயம் அதைக் கட்டுக்குள் வைக்கலாம். கூடவே, நாம் வழக்கமாக மருத்துவரிடம் போனால் முன்கையில் பார்க்கும் பிரஷர், புற ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தத்தை மட்டும்தான் பிரதிபலிக்கும். மத்திய ரத்தக்குழாய் அழுத்தத்தையும் சோதித்தால்தான், உண்மையிலேயே நோய் கட்டுக்குள் இருக்கிறதா எனக் கண்டுபிடிக்கலாம் என்கிறது இன்றைய நவீன மருத்துவம். அதனால்தான் பல நேரம் இந்த வியாதி இருப்பது பலருக்கும் தெரியாமல் போய், ஒரு பக்கம் ஸ்ட்ரோக் பாதித்த பிறகு, ‘அடடா… இவ்ளோ பி.பி இருந்துருக்கு; அவரும் சிரிச்சுக்கிட்டேதான் இருந்தாரு. எப்படி இப்படி ஆச்சு?’ என நாம் குழம்பித் தவிப்போம்!
ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த, உலகம் முழுக்க பல மூலிகைகளை வைத்து ஆராய்கிறார்கள். சீரகம், பூண்டு, வெங்காயம், வெந்தயத்தில் தொடங்கி செம்பருத்தி, முருங்கைக் கீரை, தக்காளி, கேரட் வரை பல உணவுக் காய்கறிகளில் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இவை எல்லாம் மருந்துக்கு துணை நின்று பயனாகும் உணவே (functional food ingredient) தவிர, மருந்துக்கு மாற்று கிடையாது.
நம் சித்த மருத்துவ மரபு வெகுகாலம் பயன்படுத்தி வந்த வெண்தாமரை சூரணத்துக்கு, இதயத்தில் இருந்து வெளியாகும் ‘கரோடிட் நாடி’யின் திடத்தன்மையைச் சீராக்கி ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் குணம் இருப்பதை முதல்கட்ட ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனைப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். இன்னும் பலகட்ட ஆய்வுகளைக் கடந்து உண்மை ஊர்ஜிதமாகும்பட்சத்தில், வெண்தாமரை உலகெங்கும் உற்றுப் பார்க்கப்படும். இந்த உள்ளூர் பூக்களை சரஸ்வதிக்கு மட்டும் சமர்ப்பித்துவிட்டுப் போகாமல், அதைக் கொஞ்சம் தேநீராக்கிக் குடித்தோ, சித்த மருத்துவர்களிடம் அதன் மூலிகை சூரணத்தைப் பெற்றோ ஆரம்பக்கட்ட லேசான ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தலாம். பார்த்த முதல் நாளே பற்றிக்கொள்ளும் காதல்போல, முதல் அளவீட்டின்போதே எக்குத்தப்பாக எகிறி இருக்கும் கொதிப்புக்கு, முலிகை மருந்துகள் மட்டும் நிச்சயம் போதாது. நவீன மருத்துவமும் மிக மிக அவசியம்.
சீனாவில் ரத்தக் கொதிப்பு மருத்துவமனைக்கு நோயாளி ஒருவர் போனால், அங்கே அவரை பரிசோதிக்கும் மருத்துவர், அவர் அறையிலேயே அதை உடனே குறைக்க நவீன மருந்தும், கொஞ்சம்கொஞ்சமாக அதைக் கட்டுப்படுத்த சீன மூலிகையும், வாழ்வியல் பழக்கமாக ‘தாய்சீ’ நடனமும் கூட்டாகப் பரிந்துரைக்கிறார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலோ, நவீன மருத்துவ மாலிக்யூலும், பாரம்பரிய மூலிகையும் ஒரே சமயத்தில் பரிந்துரைக்கப்படும்போது, ஒரு மருந்தின் உயிர்செயல்தன்மையை (bio availability) மற்றது மாற்றுமா என்ற ஆய்வுகள் முடுக்கிவிடப்படுகின்றன. இரு துறைகளிலும் பன்னெடுங்காலமாக ஜாம்பவான்களைக் கொண்டிருக்கும் நம் ஊரிலோ, ‘எனக்கு அதைப் பத்தி எல்லாம் தெரியாது. அது உங்க இஷ்டம். உங்களுக்கு விருப்பம் இருந்தா என்கிட்ட பாருங்க’ எனப் பாரம்பரியமும் மேற்கத்தியமும் எந்தப் புள்ளியிலும் ஒருங்கிணைய மறுப்பதில், இந்திய இதயங்கள் மெள்ள மெள்ள துடிப்பைத் தவறவிட்டுக்கொண்டிருக்கின்றன!
உறக்கத்தைத் தொலைக்கும் பழக்கம் உள்ள நகரவாசிகளுக்கு 40 சதவிகிதமும், கிராமங்களில் எதிர்பாராத அளவாக 17 சதவிகிதமுமாக ரத்தக் கொதிப்பு நோயாளிகள் இருக்கிறார்கள் என்கிறது பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் கணக்கு. இரு தரப்பிலும் எக்குத்தப்பாக எகிறும் இதன் உயர்வுக்கு மிக முக்கியமான காரணம், மது. ‘கொஞ்சமா குடிச்சா தப்பு இல்லை, வொயின் நல்லதாமே, இது பொம்பளைங்க குடிப்பதாமே..!’ என முழுவீச்சில் நடைபெறும் பொய்ப் பிரசாரமும், ‘இந்த வருஷம் இன்னும் அதிகமா வித்துக் காட்டணும்’ என அரசாங்கமே அட்டகாசமாக நடத்தும் மது வணிகமும் இந்தப் புள்ளிவிவரம் பொங்கி எழ ஊர்ஜிதமான காரணங்கள்.
தனியே நடக்க முடியாமல், கையில் உருட்டி ஒரு வாய் சாப்பிட முடியாமல் முடங்கி இருக்கும் எத்தனையோ அம்மாக்களுக்கு, ஜேசுதாஸ் பாடல் பின்னணியுடன் தூக்கிச்செல்ல ‘சூப்பர் ஸ்டார்’ பிள்ளைகள் கிடையாது. வாரம் மூன்று நாள் டயாலிசிஸ் செய்ய வசதி இல்லாத மகனின் மீது கரிசனம் கொண்டு, ‘அவனுக்கு எதுக்குச் செலவு?’ என முக வீக்கத்துடன், ‘இருக்கிற வரை இருந்துட்டுப் போறேன்!’ எனச் சொல்லும் பெற்றோர்கள்தான் இங்கு ஏராளம். ‘நாளைக்கு கண்டிப்பா தீம் பார்க் போலாம்டா செல்லம். இப்போ சமத்தா தூங்கு’ என மகளை உறங்க வைத்துவிட்டு, மகள் விழித்துப் பார்க்கையில், மருத்துவமனைப் படுக்கையில் குழாய்களுக்கு நடுவில் மாரடைப்புக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரத்தக் கொதிப்பு கட்டுப்படுத்தப்படாததுதான் இதற்கு மிக முக்கியமான காரணம். ஆரம்பத்தில் இருந்தே முறையான வாழ்வியலும், சரிவிகித உணவும், வருமுன் காக்கும் மருத்துவமும் இருந்துவிட்டால் இத்தனையும் பெரும்பாலும் தவிர்க்கக்கூடியதே!
ரத்தக் கொதிப்புக்கு இதுவரை தடுப்பு மருந்து இல்லை என்கிறார்கள். ஆனால், வேலை முடிந்து களைத்து வீட்டுக்குச் சென்றதும் எதிர்கொள்ளும் மனைவியை, ‘அற்றைத் திங்கள் அந்நிலவில், நெற்றித்தரள நீர்வடிய, கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா?…’ எனச் சிலாகிக்க வேண்டாம். ‘என்னடா செல்லம்… கண்ணு மின்னுது. என்ன விசேஷம்?’ என்ற சின்ன விசாரிப்புகூட அவளுக்கு ரத்தக் கொதிப்பு அபாயத்தைத் தடுக்கும். பதிலுக்கு, ‘வெண்ணிறப் புரவியில் வந்தவனே! வேல்விழி மொழிகள் கேளாய்…’ என மனைவி இசைப்பாட்டு பாட வேண்டாம். கண்களால் சிரித்து, ‘உங்களைப் பார்த்தாலே உள்ளே ஆயிரம் வாட்ஸ் பாயுதுல்ல… அதனாலயா இருக்கும்!’ என்று சிரித்துக் கைபற்றினால், ரத்தக் கொதிப்பு வருகை நிறையவே தள்ளிப்போகும். அப்படியான தருணங்களே ரத்தத்தில் கொதிப்பு தித்திப்பாக மாறும் ரசவாதம் நிகழும்!
நன்றி -விகடன்

உணவு யுத்தம்!-26

பால் பவுடரின் கதை
மார்க்கோ போலோ தனது பயணக் குறிப்பில் சீனாவில் உள்ள போர் வீரர்கள் சூரிய வெப்பத்தில் பாலைச் சுண்டவைத்துப் பசை போலாக்கித் தங்களுடன் கொண்டு சென்றதாகக் கூறுகிறார். 1802-ம் ஆண்டு ரஷ்யாவின் ஒசிப் கிர்க்கோவ்ஸ்கி என்பவர் முதன்முதலாகப் பாலை காய்ச்சி பவுடர் செய்வதை அறிமுகப்படுத்தினார். 1832-ல் பால்பவுடர் விற்பனை தொடங்கியது.

1865, ஜஸ்டிஸ் வான் லிபெக் என்பவர் குழந்தைகளுக்கான சிறப்புப் பால் பவுடரை அறிமுகம் செய்தார். அது லிபெக் ஃபார்முலா என அழைக்கப்பட்டது. 19-ம் நூற்றாண்டின் மத்தியில்தான் பால் பவுடர் விற்பனை தனித் தொழிலாக வளரத் தொடங்கியது.
பால் டின்களில் தொடங்கி ஃபார்முலா வரை வளர்ந்துள்ள குழந்தைகள் உணவின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் முன், தாய்ப்பால் தருவது எப்படி உலகெங்கும் மரபாகப் பின்பற்றி வந்தது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது உலகெங்கும் நடைமுறையில் இருக்கும் தொன்மையான பழக்கம். இதன் பின்னால் அறியப்படாத வரலாற்றுத் தகவல்கள் இருக்கின்றன.
கி.மு 950-களில் கிரேக்கத்தில் உயர் வகுப்புப் பெண்கள் தாய்ப்பால் தர மறுத்து தாதிகளைப் பணிக்கு அமர்த்திக்கொள்வார்களாம். தாதிகள்தான் மூன்று வயது வரை குழந்தைகளுக்குப் பால் கொடுக்க வேண்டும்.
தாதிகள் ஆண்குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும். 25 வயது முதல் 35 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும் என்ற விதியிருந்தது. அதே நேரம் தாதி தனது குழந்தைக்கு ஒன்பது மாதங்கள் பால் கொடுத்த பிறகே, அவள் வேறு குழந்தைக்குப் பால் தர அனுமதிக்கப்படுவாள். அடிமைகளுக்கு இந்த விதி பொருந்தாது.
பைபிளில்கூடப் பாரோ மன்னரின் மகள் மோசஸை வளர்ப்பதற்காக ஒரு தாதியை நியமித்திருந்தாள் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. கி.மு 300-களில் ரோம சாம்ராஜ்ஜியத்தில் திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தை பெற்றுக் கொள்வது அனுமதிக்கப்பட்டது. இப்படிக் குழந்தைகள் பெற்றுக்கொண்ட பெண்கள், அதைப் பராமரிக்க வழியின்றித் தூக்கி எறிந்துவிடுவார்களாம்.
அநாதைகளாக வீசி எறியப்பட்ட குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்துக் காப்பாற்றுவதற்கு எனத் தனித் தாதிகள் இருந்தார்கள். அவர்கள் அடிமையாக இருந்த பெண்கள், இவர்கள் அநாதை குழந்தைகளுக்குப் பால் கொடுத்து வளர்த்து எடுப்பதற்கு அவர்களுக்கு அரசே ஊதியம் அளித்தது.
தாதிகள் பால் கொடுப்பதற்கு ஏற்றவர்களா எனப் பரிசோதனைசெய்ய, அவர்கள் மார்பில் விரல் நகத்தால் கீறி பாலின் தன்மை எப்படியிருக்கிறது, பால் எவ்வளவு வேகமாகச் சுரக்கிறது எனப் பரிசோதனைசெய்து பார்ப்பார்களாம். அதில் தேர்வு செய்யப்படும் பெண்ணே குழந்தைக்குப் பால் தர அனுமதிக்கப்படுவாள்.
ரோமில் மருத்துவராக இருந்த ஒரிபசியஸ், தாதிகளுக்கான உடற்பயிற்சிகளை உருவாக்கி இருக்கிறார். குழந்தைகளுக்குப் பால் தருவதற்காகத் தகுந்த உடல் ஆரோக்கியம் வேண்டும். அதற்காகச் சில அவசியமான உடற்பயிற்சிகளைத் தாதிகள் மேற்கொள்ள வேண்டும் என, சில பயிற்சிகளை வரையறை செய்திருக்கிறார்.
உலகின் பலநாடுகளிலும் தாதிகளைவைத்து பிள்ளையை வளர்ப்பது பண்பாடாகவே கருதப்பட்டது. மத்திய காலத்தில் இதற்கு எதிர்ப்புக்குரல் உருவானது. ‘பெற்ற தாயே தனது குழந்தைக்குப் பால் தர வேண்டும். தாதிகளால் பால் தரப்படும் பிள்ளைகள் அவர்களின் இயல்பைப் பெற்றுவிடுகிறார்கள். ஆகவே, அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்ற எதிர்ப்புக்குரல் உருவானது. ஆனால், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட இயலவில்லை.
17-ம் நூற்றாண்டில் பதிவு பெற்ற தாதிகள் மட்டுமே குழந்தை வளர்ப்பில் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் ஃபிரான்ஸில் உருவானது. இதன்படி தாதிகள் முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொண்டு சான்றிதழ் பெற வேண்டும். தான் வளர்க்கும் குழந்தை இறந்துபோய்விட்டால் தாதி கடுமையாகத் தண்டிக்கப்படுவாள் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது.
விக்டோரியா யுகத்தில் இங்கிலாந்தில் தாதிகளாக வேலைசெய்த பலரும், இளவயதில் முறையற்ற உறவின் காரணமாகக் குழந்தை பெற்றவர்கள். தங்களின் வாழ்க்கைப் பாட்டுக்காகக் குழந்தை வளர்ப்பில் ஈடுபட்டார்கள்.
தாதிகளை வைத்துக்கொள்வது பணக்கார குடும்பங்களின் நடைமுறையாக இருந்ததைத் தொழில்புரட்சி மாற்றியமைத்தது. தொழில்புரட்சியின் காரணமாக நகரங்களை நோக்கி ஏழை எளிய மக்கள் குடியேறத் தொடங்கியதும், வீட்டில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்காக விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைத் துணைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு மிகக் குறைவான சம்பளமே வழங்கப்பட்டது.
பால் பவுடர் அறிமுகமானதும், பால் பாட்டில்கள் விற்பனைக்கு வந்ததும், ரப்பர் காம்புகள் அறிமுகமானதும் தாதிகளின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. 17-ம் நூற்றாண்டு வரை தோல் அல்லது மரத்தால் செய்யப்பட்ட புட்டிகளே பால் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. 18-ம் நூற்றாண்டில் பீங்கானில் பால் கோப்பைகள் செய்யப்பட்டன.
கண்ணாடி தொழிற்சாலைகளின் வரவுக்குப் பிறகே குழந்தைகளுக்கான பால் புகட்டுவதற்கான பாட்டில்கள் செய்யப்பட்டன. 1851-ல் ஃபிரான்ஸில் பால் புகட்டும் கண்ணாடி பாட்டில் விற்பனைக்கு வந்தது. அப்போது அதன் முனையில் கார்க் பொருத்தப்பட்டிருந்தது.
இங்கிலாந்தில் குழந்தைகள் குடிப்பதற்கு ஏற்றார்போல வாழைப்பழ வடிவ பாட்டில் அறிமுகமானது. அது சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. 1845-ல்தான் ரப்பரில் செய்யப்பட்ட உறிஞ்சு காம்பு பாட்டிலில் பொருத்தப்பட்டது.
1894-ல் இரண்டு பக்கமும் முனை கொண்ட பாட்டில் தயாரிக்கப்பட்டது. இதன் ஒரு முனையில் ரப்பர் காம்பு மாட்டப்பட்டது. கழுவி பயன்படுத்த எளிதாக இருந்த காரணத்தால் இது உடனடியாகப் பரவியது.
18-ம் நூற்றாண்டில்தான் முதன்முறையாகத் தாய்ப்பாலில் என்ன சத்துகள் இருக்கின்றன என்பது அறிவியல் பூர்வமாக ஆராயப்பட்டது. அதன் விளைவாகவே அதற்கு இணையாக எந்தப் பால் உள்ளது என சோதிக்க பசு, எருது, ஆடு கழுதை போன்றவற்றின் பால் பரிசோதனை செய்யப்பட்டன. தாய்ப்பாலுக்கு நிகரான ஒன்றை செயற்கையாக உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இன்றும் அதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
முழுப் பால் சுமார் 87.5 சதவிகித நீர் உள்ளடக்கம் கொண்டது. பாலில் உள்ள நீர்த் தன்மையை அகற்றி, அதைப் பொடியாக மாற்றும் தொழில்நுட்பம் அறிமுகமானதால் பால் உற்பத்தியில் பெரிய மாற்றம் உருவானது.
100 லிட்டர் பாலை இப்படி நீர்தன்மை அகற்றிப் பொடியாக்கினால் 13 கிலோ பால் பவுடர் கிடைக்கும் என்கிறார்கள். இன்று பால் பவுடர் உற்பத்தியில் நியூசிலாந்து முக்கிய இடம் வகிக்கிறது. பாலை பவுடர் ஆக்குவதால் அதில் உள்ள கொழுப்பு சத்து ஆக்டைஸ்டு கொலஸ்ட்ராலாக மாறிவிடுகிறது. இது உடல் நலத்துக்கு ஏற்றது இல்லை எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கடந்த காலங்களில் குழந்தை இரண்டு வருடங்கள் வரை தாய்ப்பால் குடித்திருக்கின்றன. இன்று அதிகபட்சம் ஆறுமாத காலம் தாய்ப்பால் புகட்டுகிறார்கள். சில குழந்தைகள் வாரக்கணக்கில் மட்டும் தாய்ப்பால் குடிக்கிறார்கள். பிறகு, புட்டிப்பால்தான்.
‘ஆறு மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்குத் தோல்சீவி வேகவைத்த ஆப்பிள் தரலாம். சத்து மாவு, கோதுமை, ஜவ்வரிசி கூழ் போன்றவையும் கொடுக்கலாம். ஏழு அல்லது எட்டு மாதங்களில் மசிக்கப்பட்ட காரட், உருளைக் கிழங்கு, ரொட்டி பால் சேர்த்துக் குழைய வேக வைத்த பருப்புச் சாதம், பால் சாதம் போன்றவற்றைத் தரலாம்.
ஒன்பது அல்லது பத்து மாதங்களில் திட உணவுகளாக இட்லி, தோசை, முட்டை போன்றவற்றைத் தரலாம். அதன் பிறகு வழக்கமான வீட்டு உணவுகள் அறிமுகம் செய்யலாம். குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்கள் என எல்லா உணவையும் மிக்ஸியில் அடித்துத் தந்தால் அதுவே பழக்கமாகிவிடும். பின்பு, அது மசிக்காத உணவைச் சாப்பிடாது.
பெரும்பாலானவர்கள் தங்களது குழந்தைகள் நல்ல மொழுமொழு எனக் குண்டாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அப்படி இருந்தால்தான் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என எண்ணுவது தவறு.
குழந்தைகளுக்கு என்ன உணவு எத்தனை மணிக்கு தரப்பட்டது… அது குழந்தைக்குப் பிடித்துள்ளதா, ஒவ்வாமை ஏற்பட்டதா என்பது குறித்து ஒரு உணவு டயரி ஒன்று பின்பற்றப்பட வேண்டும். அப்படி ஒவ்வொரு வயதுக்கும் ஒரு உணவு டயரி பின்பற்றப்பட்டால், அந்தக் குழந்தையின் வளர்ச்சியைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடிவதுடன், நோய் உருவாவதற்கான காரணத்தையும் எளிதில் அறிந்துகொள்ள முடியும்’ என்கிறார் குழந்தைகள் மருத்துவர் மைக்கேல் டிராக்.
ஊரையும் உறவுகளையும் இழந்துவரும் இன்றைய பெருநகர வாழ்க்கையில் மூத்தோர் வழியாக அறிந்துகொள்ள வேண்டிய உணவுப் பழக்கம், குழந்தை வளர்ப்பு, உயிரினங்களிடம் காட்ட வேண்டிய அக்கறை, பரஸ்பர நேசம் போன்ற எதையும் நாம் கற்றுக்கொள்ளவே இல்லை. அதன் விளைவுதான் இன்றைய உணவுக் கோளாறுகளும் மருத்துவப் பிரச்னைகளும்.
ஆகவே, சரியான உணவைத் தேர்வுசெய்வது என்பது மட்டும் இதற்குத் தீர்வாகிவிடாது. ஆரோக்கியமான உணவை நமக்கு அறிமுகம் செய்த உறவுகளும் சொந்த மனிதர்களும் நமது குழந்தைகளுக்கும் வேண்டும் என்ற எண்ணமும் அன்பும் உருவாக வேண்டும் என்பதே இதற்கான மாற்று.