பால் பவுடரின் கதை
மார்க்கோ போலோ தனது பயணக் குறிப்பில் சீனாவில் உள்ள போர் வீரர்கள் சூரிய வெப்பத்தில் பாலைச் சுண்டவைத்துப் பசை போலாக்கித் தங்களுடன் கொண்டு சென்றதாகக் கூறுகிறார். 1802-ம் ஆண்டு ரஷ்யாவின் ஒசிப் கிர்க்கோவ்ஸ்கி என்பவர் முதன்முதலாகப் பாலை காய்ச்சி பவுடர் செய்வதை அறிமுகப்படுத்தினார். 1832-ல் பால்பவுடர் விற்பனை தொடங்கியது.
1865, ஜஸ்டிஸ் வான் லிபெக் என்பவர் குழந்தைகளுக்கான சிறப்புப் பால் பவுடரை அறிமுகம் செய்தார். அது லிபெக் ஃபார்முலா என அழைக்கப்பட்டது. 19-ம் நூற்றாண்டின் மத்தியில்தான் பால் பவுடர் விற்பனை தனித் தொழிலாக வளரத் தொடங்கியது.
பால் டின்களில் தொடங்கி ஃபார்முலா வரை வளர்ந்துள்ள குழந்தைகள் உணவின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் முன், தாய்ப்பால் தருவது எப்படி உலகெங்கும் மரபாகப் பின்பற்றி வந்தது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது உலகெங்கும் நடைமுறையில் இருக்கும் தொன்மையான பழக்கம். இதன் பின்னால் அறியப்படாத வரலாற்றுத் தகவல்கள் இருக்கின்றன.
கி.மு 950-களில் கிரேக்கத்தில் உயர் வகுப்புப் பெண்கள் தாய்ப்பால் தர மறுத்து தாதிகளைப் பணிக்கு அமர்த்திக்கொள்வார்களாம். தாதிகள்தான் மூன்று வயது வரை குழந்தைகளுக்குப் பால் கொடுக்க வேண்டும்.
தாதிகள் ஆண்குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும். 25 வயது முதல் 35 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும் என்ற விதியிருந்தது. அதே நேரம் தாதி தனது குழந்தைக்கு ஒன்பது மாதங்கள் பால் கொடுத்த பிறகே, அவள் வேறு குழந்தைக்குப் பால் தர அனுமதிக்கப்படுவாள். அடிமைகளுக்கு இந்த விதி பொருந்தாது.
பைபிளில்கூடப் பாரோ மன்னரின் மகள் மோசஸை வளர்ப்பதற்காக ஒரு தாதியை நியமித்திருந்தாள் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. கி.மு 300-களில் ரோம சாம்ராஜ்ஜியத்தில் திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தை பெற்றுக் கொள்வது அனுமதிக்கப்பட்டது. இப்படிக் குழந்தைகள் பெற்றுக்கொண்ட பெண்கள், அதைப் பராமரிக்க வழியின்றித் தூக்கி எறிந்துவிடுவார்களாம்.
அநாதைகளாக வீசி எறியப்பட்ட குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்துக் காப்பாற்றுவதற்கு எனத் தனித் தாதிகள் இருந்தார்கள். அவர்கள் அடிமையாக இருந்த பெண்கள், இவர்கள் அநாதை குழந்தைகளுக்குப் பால் கொடுத்து வளர்த்து எடுப்பதற்கு அவர்களுக்கு அரசே ஊதியம் அளித்தது.
தாதிகள் பால் கொடுப்பதற்கு ஏற்றவர்களா எனப் பரிசோதனைசெய்ய, அவர்கள் மார்பில் விரல் நகத்தால் கீறி பாலின் தன்மை எப்படியிருக்கிறது, பால் எவ்வளவு வேகமாகச் சுரக்கிறது எனப் பரிசோதனைசெய்து பார்ப்பார்களாம். அதில் தேர்வு செய்யப்படும் பெண்ணே குழந்தைக்குப் பால் தர அனுமதிக்கப்படுவாள்.
ரோமில் மருத்துவராக இருந்த ஒரிபசியஸ், தாதிகளுக்கான உடற்பயிற்சிகளை உருவாக்கி இருக்கிறார். குழந்தைகளுக்குப் பால் தருவதற்காகத் தகுந்த உடல் ஆரோக்கியம் வேண்டும். அதற்காகச் சில அவசியமான உடற்பயிற்சிகளைத் தாதிகள் மேற்கொள்ள வேண்டும் என, சில பயிற்சிகளை வரையறை செய்திருக்கிறார்.
உலகின் பலநாடுகளிலும் தாதிகளைவைத்து பிள்ளையை வளர்ப்பது பண்பாடாகவே கருதப்பட்டது. மத்திய காலத்தில் இதற்கு எதிர்ப்புக்குரல் உருவானது. ‘பெற்ற தாயே தனது குழந்தைக்குப் பால் தர வேண்டும். தாதிகளால் பால் தரப்படும் பிள்ளைகள் அவர்களின் இயல்பைப் பெற்றுவிடுகிறார்கள். ஆகவே, அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்ற எதிர்ப்புக்குரல் உருவானது. ஆனால், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட இயலவில்லை.
17-ம் நூற்றாண்டில் பதிவு பெற்ற தாதிகள் மட்டுமே குழந்தை வளர்ப்பில் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் ஃபிரான்ஸில் உருவானது. இதன்படி தாதிகள் முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொண்டு சான்றிதழ் பெற வேண்டும். தான் வளர்க்கும் குழந்தை இறந்துபோய்விட்டால் தாதி கடுமையாகத் தண்டிக்கப்படுவாள் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது.
விக்டோரியா யுகத்தில் இங்கிலாந்தில் தாதிகளாக வேலைசெய்த பலரும், இளவயதில் முறையற்ற உறவின் காரணமாகக் குழந்தை பெற்றவர்கள். தங்களின் வாழ்க்கைப் பாட்டுக்காகக் குழந்தை வளர்ப்பில் ஈடுபட்டார்கள்.
தாதிகளை வைத்துக்கொள்வது பணக்கார குடும்பங்களின் நடைமுறையாக இருந்ததைத் தொழில்புரட்சி மாற்றியமைத்தது. தொழில்புரட்சியின் காரணமாக நகரங்களை நோக்கி ஏழை எளிய மக்கள் குடியேறத் தொடங்கியதும், வீட்டில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்காக விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைத் துணைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு மிகக் குறைவான சம்பளமே வழங்கப்பட்டது.
பால் பவுடர் அறிமுகமானதும், பால் பாட்டில்கள் விற்பனைக்கு வந்ததும், ரப்பர் காம்புகள் அறிமுகமானதும் தாதிகளின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. 17-ம் நூற்றாண்டு வரை தோல் அல்லது மரத்தால் செய்யப்பட்ட புட்டிகளே பால் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. 18-ம் நூற்றாண்டில் பீங்கானில் பால் கோப்பைகள் செய்யப்பட்டன.
கண்ணாடி தொழிற்சாலைகளின் வரவுக்குப் பிறகே குழந்தைகளுக்கான பால் புகட்டுவதற்கான பாட்டில்கள் செய்யப்பட்டன. 1851-ல் ஃபிரான்ஸில் பால் புகட்டும் கண்ணாடி பாட்டில் விற்பனைக்கு வந்தது. அப்போது அதன் முனையில் கார்க் பொருத்தப்பட்டிருந்தது.
இங்கிலாந்தில் குழந்தைகள் குடிப்பதற்கு ஏற்றார்போல வாழைப்பழ வடிவ பாட்டில் அறிமுகமானது. அது சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. 1845-ல்தான் ரப்பரில் செய்யப்பட்ட உறிஞ்சு காம்பு பாட்டிலில் பொருத்தப்பட்டது.
1894-ல் இரண்டு பக்கமும் முனை கொண்ட பாட்டில் தயாரிக்கப்பட்டது. இதன் ஒரு முனையில் ரப்பர் காம்பு மாட்டப்பட்டது. கழுவி பயன்படுத்த எளிதாக இருந்த காரணத்தால் இது உடனடியாகப் பரவியது.
18-ம் நூற்றாண்டில்தான் முதன்முறையாகத் தாய்ப்பாலில் என்ன சத்துகள் இருக்கின்றன என்பது அறிவியல் பூர்வமாக ஆராயப்பட்டது. அதன் விளைவாகவே அதற்கு இணையாக எந்தப் பால் உள்ளது என சோதிக்க பசு, எருது, ஆடு கழுதை போன்றவற்றின் பால் பரிசோதனை செய்யப்பட்டன. தாய்ப்பாலுக்கு நிகரான ஒன்றை செயற்கையாக உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இன்றும் அதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
முழுப் பால் சுமார் 87.5 சதவிகித நீர் உள்ளடக்கம் கொண்டது. பாலில் உள்ள நீர்த் தன்மையை அகற்றி, அதைப் பொடியாக மாற்றும் தொழில்நுட்பம் அறிமுகமானதால் பால் உற்பத்தியில் பெரிய மாற்றம் உருவானது.
100 லிட்டர் பாலை இப்படி நீர்தன்மை அகற்றிப் பொடியாக்கினால் 13 கிலோ பால் பவுடர் கிடைக்கும் என்கிறார்கள். இன்று பால் பவுடர் உற்பத்தியில் நியூசிலாந்து முக்கிய இடம் வகிக்கிறது. பாலை பவுடர் ஆக்குவதால் அதில் உள்ள கொழுப்பு சத்து ஆக்டைஸ்டு கொலஸ்ட்ராலாக மாறிவிடுகிறது. இது உடல் நலத்துக்கு ஏற்றது இல்லை எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கடந்த காலங்களில் குழந்தை இரண்டு வருடங்கள் வரை தாய்ப்பால் குடித்திருக்கின்றன. இன்று அதிகபட்சம் ஆறுமாத காலம் தாய்ப்பால் புகட்டுகிறார்கள். சில குழந்தைகள் வாரக்கணக்கில் மட்டும் தாய்ப்பால் குடிக்கிறார்கள். பிறகு, புட்டிப்பால்தான்.
‘ஆறு மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்குத் தோல்சீவி வேகவைத்த ஆப்பிள் தரலாம். சத்து மாவு, கோதுமை, ஜவ்வரிசி கூழ் போன்றவையும் கொடுக்கலாம். ஏழு அல்லது எட்டு மாதங்களில் மசிக்கப்பட்ட காரட், உருளைக் கிழங்கு, ரொட்டி பால் சேர்த்துக் குழைய வேக வைத்த பருப்புச் சாதம், பால் சாதம் போன்றவற்றைத் தரலாம்.
ஒன்பது அல்லது பத்து மாதங்களில் திட உணவுகளாக இட்லி, தோசை, முட்டை போன்றவற்றைத் தரலாம். அதன் பிறகு வழக்கமான வீட்டு உணவுகள் அறிமுகம் செய்யலாம். குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்கள் என எல்லா உணவையும் மிக்ஸியில் அடித்துத் தந்தால் அதுவே பழக்கமாகிவிடும். பின்பு, அது மசிக்காத உணவைச் சாப்பிடாது.
பெரும்பாலானவர்கள் தங்களது குழந்தைகள் நல்ல மொழுமொழு எனக் குண்டாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அப்படி இருந்தால்தான் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என எண்ணுவது தவறு.
குழந்தைகளுக்கு என்ன உணவு எத்தனை மணிக்கு தரப்பட்டது… அது குழந்தைக்குப் பிடித்துள்ளதா, ஒவ்வாமை ஏற்பட்டதா என்பது குறித்து ஒரு உணவு டயரி ஒன்று பின்பற்றப்பட வேண்டும். அப்படி ஒவ்வொரு வயதுக்கும் ஒரு உணவு டயரி பின்பற்றப்பட்டால், அந்தக் குழந்தையின் வளர்ச்சியைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடிவதுடன், நோய் உருவாவதற்கான காரணத்தையும் எளிதில் அறிந்துகொள்ள முடியும்’ என்கிறார் குழந்தைகள் மருத்துவர் மைக்கேல் டிராக்.
ஊரையும் உறவுகளையும் இழந்துவரும் இன்றைய பெருநகர வாழ்க்கையில் மூத்தோர் வழியாக அறிந்துகொள்ள வேண்டிய உணவுப் பழக்கம், குழந்தை வளர்ப்பு, உயிரினங்களிடம் காட்ட வேண்டிய அக்கறை, பரஸ்பர நேசம் போன்ற எதையும் நாம் கற்றுக்கொள்ளவே இல்லை. அதன் விளைவுதான் இன்றைய உணவுக் கோளாறுகளும் மருத்துவப் பிரச்னைகளும்.
ஆகவே, சரியான உணவைத் தேர்வுசெய்வது என்பது மட்டும் இதற்குத் தீர்வாகிவிடாது. ஆரோக்கியமான உணவை நமக்கு அறிமுகம் செய்த உறவுகளும் சொந்த மனிதர்களும் நமது குழந்தைகளுக்கும் வேண்டும் என்ற எண்ணமும் அன்பும் உருவாக வேண்டும் என்பதே இதற்கான மாற்று.
No comments:
Post a Comment