Dec 1, 2011

ரூ.20 லட்சம் கடனுக்கு ரூ.1 1/2 கோடி சொத்து அபகரிப்பு:மதுரை சினிமா வினியோகஸ்தர் அன்புசெழியன் உள்பட 3 பேர் கைது:


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள விரிச்சான்குளத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ், படதயாரிப்பாளர். இவர் “சுந்தரா டிராவல்ஸ்”, “மீசை மாதவன்” உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இவர் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க்கிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் கடந்த 10 வருடங்களாக படதயாரிப்பு தொழில் செய்து வருகிறேன். கடந்த 2004-ல் பட தயாரிப்புக்காக மதுரை தெற்குமாசிவீதியை சேர்ந்த சினிமா வினியோகஸ்தர் அன்புசெழியனிடம் ரூ.20 லட்சம் கடனாக வாங்கினேன். அப்போது அவர் ரூ.3 லட்சத்தை வட்டியாக எடுத்துக்கொண்டு ரூ.17 லட்சம் என்னிடம் கொடுத்தார்.


இந்த கடனை வாங்குவதற்காக எனது பெயரிலும், எனது மனைவி பெயரிலும் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் காசோலைகளையும் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து லட்சக்கணக்கில் பணம் செலுத்தி வந்தேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் கொடுத்திருந்த சொத்து ஆவணங்களை பவர் எழுதி தரும்படி அன்புசெழியன் மிரட்டினார்.

அப்போது வாங்கிய கடனுக்கு உரிய தொகையை நான் செலுத்தி விட்டதாக அவரிடம் தெரிவித்தேன். அவர் நீ செலுத்தியது வட்டிதான், இன்னும் அசல் வரவில்லை என்று கூறி சொத்துக்குரிய பவரை எழுதி தரும்படி மீண்டும் மிரட்டினார்.

இதையடுத்து மதுரை துரைசாமி நகரைச் சேர்ந்த முரளி என்பவரது பெயரில் பவர் எழுதி மதுரை பீ.பி.குளத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு விற்பனை செய்து விட்டனர். இதனால் வாங்கிய கடன் ரூ.20 லட்சத்துக்கு, ரூ.1 1/2 கோடி தொகை கந்துவட்டி மூலம் என்னிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது சொத்துக்களை மீட்டதர வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் குறித்து போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் புகார் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்காக நேற்று மாலை அன்புசெழியன் மற்றும் முரளி, ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் அழைக்கப்பட்டனர். அவர்களிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து சொத்து அபகரிப்பு மற்றும் கந்து வட்டி கேட்டு மிரட்டல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சினிமா வினியோகஸ்தர் அன்புசெழியன், அவரது நண்பர்கள் முரளி, ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

நள்ளிரவு 1 மணிக்கு மாஜிஸ்திரேட்டு உமா மகேஸ்வரி வீட்டுக்கு 3 பேரையும் அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உமாமகேஸ்வரி 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சொத்து அபகரிப்பு, கந்துவட்டி வழக்கில் சினிமா வினியோகஸ்தர் அன்பு செழியன் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள் ளது.

No comments: