ஒவ்வொரு நாளும் காலையில் வீட்டுக் கதவைத் திறக்கும்போது வாசலில் உள்ள கூடையில் பால் பாக்கெட் கிடக்கிறது. பால் கொண்டுவந்து தருபவரின் முகத்தைக்கூடப் பார்த்தது கிடையாது. தனியார் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் இந்தப் பால் நூறு கிலோ மீட்டர் தூரத்தில் கறக்கப்பட்டு, பாக்கெட்டில் அடைக்கப்பட்டு நகரில் விநியோகம் செய்யப்படுகிறது. நகரவாழ்வில் பால்மாடுகள், ஆடுகள் போன்றவை கண்ணில் பார்ப்பதே அரிது.
குழந்தைகள், பெரியவர்கள் என வேறுபாடின்றி அருந்தும் பால்தான் இன்றைய உணவுச் சந்தையில் அன்றாடம் அதிகம் விற்பனையாகும் திரவப் பொருள். தனியார் நிறுவனங்கள் கைக்குப் போய்க்கொண்டிருக்கும் முக்கியமான உணவுப் பொருளும் பாலே.
ஒரு காலத்தில் கூட்டுறவு சங்கங்கள்தான் பால் உற்பத்தியில் முன்னணியில் இருந்தன. கடந்த 15 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்கள் மெள்ளப் பின்னுக்குத் தள்ளப்பட்டுத் தனியார் பால் பண்ணைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் பால் உற்பத்தியில் பெரிய அளவில் வளர்ந்து நிற்கின்றன.
பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி வழியாக ஆண்டுக்கு 3.6 லட்சம் கோடி ரூபாய் பணம் ஈட்டப்படுகிறது. பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது என்றபோதும், பால் விற்பனையில் உருவாகிவரும் பலத்த போட்டியும் வணிகத் தந்திரங்களும் நுகர்வோர்களை முட்டாள் ஆக்கவே செய்கின்றன.
உலகின் எல்லா உணவுப் பண்பாடுகளிலும் பாலும் பால் சார்ந்த வெண்ணெய், நெய், தயிர், பன்னீர் போன்ற உணவுப் பொருட்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உணவுக்காக மனிதர்கள் மற்ற விலங்குகளிடம் இருந்து பாலைப் பெறும் வழக்கம் கற்காலத்திலேயே தொடங்கியது என்கிறார்கள். 3,000 ஆண்டுகளுக்கு முன் ஆடுகள், மாடுகளின் பால் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. அதன்பின் பால் தருவதற்காகவே விலங்குகள் வீடுகளில் வளர்க்கப்பட்டன.
ஒரு லிட்டர் பாலில் 30 முதல் 35 கிராம் புரதம் உள்ளது. அத்துடன் கால்சியம், பாஸ்பேட், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், சிட்ரேட், வைட்டமின்கள் ஏ, பி6, பி12, சி, டி, கே ஆகியவையும் தயாமின், நியாசின், பயோட்டின், ரிபோபிளவின் ஆகிய அமிலங்களும் கலந்துள்ளன. அத்துடன் பாலில் ஏராளமான கார்போஹைட்ரேட்கள் உள்ளன. லாக்டோஸ் பாலுக்கு இனிப்புச் சுவையைத் தருகிறது.
உலகிலேயே அதிகப்படியான பால் மற்றும் அதை அடிப்படையாகக்கொண்ட பொருட்களைத் தயாரிப்பதில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகப்படுத்தும் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் வர்கிஸ் குரியன் முக்கியமானவர். கேரளாவில் பிறந்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றவர். பின்னர், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்றார்; அமெரிக்காவின் மிட்சிகன் பல்கலைக்கழகத்தில் உலோகவியல் துறையில் பட்டம் பெற்று இந்தியாவுக்கு வந்ததும், அவர் கொஞ்ச காலம் டாட்டா நிறுவனத்தில் வேலை செய்தார்.
குஜராத்தில் கைரா மாவட்டத்தில் ஆனந்த் என்ற இடத்தில், மாவட்ட கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர் சங்கத்தை 1940-ல் திரிபுவன் படேல் தொடங்கிய நாளில் இருந்து அமுல் வரலாறு தொடங்குகிறது. ஆனந்த் பால் கூட்டுறவு இணையம் என்பதே அமுல் என அழைக்கப்படுகிறது.
பொறியாளராகப் பணியாற்றி வந்த வர்கீஸ் குரியன் தனது பதவியைத் துறந்து, அமுல் நிறுவனத்தில் இணைந்து மிகப் பெரிய வெண்மைப் புரட்சி உருவாகக் காரணமாக இருந்தார். இந்தப் பணிக்கு பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும் அமிர்தா படேலும் காட்டிய ஊக்கமே முக்கிய உறுதுணையாக அமைந்தன.
சுமார் 30 ஆண்டுகள் வர்கீஸ் குரியனும் அமிர்தா படேலும் ஆற்றிய சேவையால் கூட்டுறவு இயக்கம் கொடிகட்டிப் பறந்து பால் பஞ்சம் தீர்ந்தது.
உலகெங்கும் பசுவின் பாலில் இருந்தே பால் பவுடர் தயாரிக்கப்பட்ட நிலையில், முதன்முறையாக எருமைப்பாலில் இருந்து பால் பவுடர் தயாரித்தது வர்கீஸ் குரியன்தான். இந்தியா முழுமைக்கும் பால் உற்பத்தியில் முன்னோடியாக விளங்கிய வர்கீஸ் குரியன், பால் குடிக்கப் பிடிக்காதவர் என்பது தனி விஷயம்.
குரியனின் முயற்சியால் இந்தியா முழுவதும் பால் கூட்டுறவு சங்கங்கள் வளர்ச்சி அடைந்தன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் உலகமயமாதலைக் காரணம் காட்டி பால் உற்பத்தியில் தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது. அதன் பிறகு கூட்டுறவு பால் உற்பத்தி பாதிக்கப்படத் தொடங்கியது.
சமீபத்தில் சீனாவில் கலப்படப் பால் பவுடர் விற்பனை செய்யப்பட்டதால், 53 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். விற்பனைக்கு அனுப்பப்பட்ட பால் பவுடர்களில் மெலமைன் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பால் பவுடரை உட்கொண்ட சீனக் குழந்தைகளுக்குத் திடீரென உடல் உபாதைகள் ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர். வணிகச் சந்தையின் போட்டியே இதற்கான முக்கியக் காரணம் என்கிறார்கள்.
இந்தியாவில் காலாவதியான பால் பவுடர் டின்களை விற்பதும், அதைக் கண்டுகொள்ளாமல் வாடிக்கையாளர்கள் வாங்கிப்போவதும் நடைமுறையாக உள்ளது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் காலாவதியான பால் பவுடர்கள் நூற்றுக்கணக்கில் சுகாதார அதிகாரிகளால் கைப்பற்றபடும் செய்தி நாளிதழ்களில் வெளியாகின்றன. ஆனாலும் இதுகுறித்து இன்னமும் மக்களிடம் விழிப்பு உணர்வு உருவாகவில்லை. மற்றொரு புறம் பிரபலமான பால் பவுடர் நிறுவனங்களின் போலிகள் விற்பனையாவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
சந்தையில் இன்று 10-க்கும் மேற்பட்டவிதங்களில் பால் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதில் அல்ட்ரா ஹை டெம்பரேச்சர் பிராசஸிங் எனப்படும் முறையில் மிகை வெப்பத்தால் சூடாக்கப்பட்டு தயாரிக்கப்படும் ஹிபிஜி பால், ஆறு மாதங்களுக்குக் கெட்டுப்போகாது என்கிறார்கள்.
உணவுப் பண்பாடு என்றாலே பெரியவர்களுக்கான உணவு முறைகளைப்பற்றித்தான் பேசுகிறோம். ஆனால், நாம் கவனம் கொள்ளாத, அதிகம் அக்கறைகொள்ள வேண்டிய உணவு முறை குழந்தைகளுக்கான உணவு.
இந்தியாவில் ஆண்டுக்கு 20 முதல் 25 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தைகளுக்கான உணவுச் சந்தையின் மதிப்பு ஆண்டுக்கு 19,400 கோடி ரூபாய். அதிகப் போட்டியின்றி இந்தச் சந்தையைத் தனது கட்டுபாட்டுக்குள் ஒன்றிரண்டு பெரிய நிறுவனங்கள் வைத்துள்ளன.
மற்ற உணவுப் பொருட்களைப்போல உள்ளூர் தயாரிப்புகள் குழந்தை உணவில் அதிகம் விற்பனையாவதும் இல்லை. பிரசவித்த பெண் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்தும் குழந்தைகளின் ஆரம்ப உணவுப் பழக்கம் குறித்தும் இன்னும் போதுமான விழிப்பு உணர்வு ஏற்படவில்லை.
குழந்தைகளுக்குக் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதைக்கூட விளம்பரப்படுத்தித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்களில் பலர் ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த முடிவது இல்லை. ஆண்களுக்குக் குழந்தைகள் என்பது கொஞ்சுவதற்கான விஷயம் மட்டுமே. அதன் அடிப்படை உணவுகள், உடல்நலம், உறக்கம் குறித்து அறிந்துகொள்ள விரும்பும் ஆணைக் காண்பது அபூர்வம்.
மாறிவரும் குடும்பச் சூழலில் கைக்குழந்தைகளுக்கு உணவு கொடுத்து தூங்கவைத்து வளர்த்தெடுப்பது பெரும் சவாலாக உருமாறியிருக்கிறது. அதிலும், காதல் திருமணம் செய்துகொண்டவர்களில் பலர் தங்கள் குழந்தையைப் பார்த்துக்கொள்ள அம்மா தன்னோடு இல்லையே என ஆதங்கப்படுவதும், இதற்காகத் தெரிந்தவர் யாராவது வந்து உடன் வாழ மாட்டார்களா என ஏங்குவதும் வெளிப்படையான பிரச்னை.
பள்ளிக்குச் செல்லும் வயது வரை குழந்தைகளுக்குத் தரப்படும் உணவு வகைகள் பற்றிய அடிப்படை அறிதல்கூட பலரிடமும் இல்லை. ஊடக விளம்பரங்களையும் இதழ்களில் வெளியாகிற தகவல்களையும் மட்டுமே நம்புகிறார்கள்,
தாய்ப்பால் போதவில்லை. ஆகவே, பால் பவுடர்களை வாங்கிப் புகட்டுகிறோம் என்று கூறுபவர்கள் எந்த அடிப்படையில் குழந்தைக்கான பால் பவுடர் டின்னை தேர்வுசெய்கிறார்கள் என்றால், வெறும் விளம்பரங்களின் துணையைக் கொண்டு மட்டுமே. அதில் எவ்வளவு புரதச்சத்து, கால்சியம், கொழுப்பு உள்ளது… குழந்தையின் ஆரோக்கியத்துக்கு ஏற்றதா என்பதைப் பற்றி, துளிகூட சிந்திப்பது இல்லை.
முந்தைய காலங்களில் கிராமப்புறங்களில் அரிதாக யாரோ ஒருவருக்குத் தாய்ப்பால் போதவில்லை எனப் பால்பவுடர் டின் வாங்குவார்கள். அப்படியும் பால் டின் கிடைக்காது; தட்டுப்பாடாக இருக்கும். அதற்காக மருந்துக்கடையில் சொல்லி வைத்து வாங்குவார். இன்று அப்படி இல்லை.
பல்பொருள் அங்காடியில் பால் பவுடர் விதவிதமான டின்களிலும் பாக்கெட்டுகளிலும் பல்வேறு எடைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. கூடவே, நிறைய இலவசப் பொருட்களும் தருகிறார்கள். கவர்ச்சிகரமான விளம்பரத்தால் பால் பவுடர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
முன்பெல்லாம் தாய்ப்பால் குறைவாக உள்ள பெண்கள் பசும்பாலைக் காய்ச்சி குழந்தைகளுக்குத் தருவார்கள். இன்றுள்ளதுபோல பேபி ஃபார்முலாக்கள் அன்று கிடையாது. புட்டிப்பால் குடித்த வளர்ச்சியும், தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தையின் வளர்ச்சியும் ஒன்றுபோல் இருப்பது இல்லை. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மாறுபடுகிறது என்கிறார்கள்.
தாய்ப்பாலுக்கு நிகராக எதுவும் இல்லை. புதிய புதிய ஃபார்முலா உணவுகளைத் தாய்ப்பாலுக்கு நிகரானது என்று வணிக விளம்பரங்கள் உரத்துக் கூவுகின்றன. ஆனால், தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு ஏற்ற ஒரே உணவு. குழந்தைகளுக்குப் பால் தருவதற்காகப் பிரசவித்த பெண்கள் சிறப்பு உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதற்காகப் பாலில் பூண்டுகளை மெல்லியதாக நறுக்கிப் போட்டு வேகவைத்து, அதில் கொஞ்சம் சர்க்கரை கலந்து பால்கோவா போலத் தயாரித்துச் சாப்பிடுவார்கள். அசைவ உணவுக்காரர்களுக்கு ‘பிள்ளை சுறா’ மீன் மிகவும் சிறந்தது. இது பால் சுரப்பினை அதிகமாக்கும் என்பார்கள். இப்படியான சிறப்பு உணவுகளை வீட்டில் செய்வதற்கு மாற்றாக, டின்களில் அடைக்கப்பட்ட தாய்மார்களுக்கான உணவு வகைகளைக் கடைகளில் வாங்கி உண்கிறார்கள்.
தாய்ப்பாலுக்கு மாற்றாகப் பசும்பால் இருந்த நிலை மாறி, பால் பவுடர்கள் இந்தியாவுக்குள் அறிமுகமாகி நூறு ஆண்டுகளே கடந்துள்ளன. பால் பவுடர் எப்படி உருவானது, எப்படி இவ்வளவு பெரிய சந்தையை அது கைப்பற்றியது என்பது சுவாரஸ்யமான சரித்திரம்.
No comments:
Post a Comment