நலம் 360’ - 4
மருத்துவர் கு.சிவராமன்
புத்திசாலியாக
இருப்பதற்கும் ஞாபகசக்திக்கும் தொடர்பு இல்லை என்பதற்கு, வால்ட் டிஸ்னி,
வின்ஸ்டன் சர்ச்சில், அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்... எனப் பல உதாரணங்கள்
உண்டு. ஆனாலும், 'நேத்து படிச்சது இன்னைக்கு ஞாபகம் இல்லைன்னா எப்படி...
மண்டைக்குள்ள அப்படி என்ன ஓடுது?’ எனும் கவலை நம்மில் பலருக்கும் உண்டு.
ஒன்பது வகையான அறிவாற்றல்கள் இருப்பதாக நவீன அறிவியல் சொன்னாலும், படித்ததை
ஞாபகம் வைத்து, அப்படியே வாந்தி எடுக்கும் ஸ்கூல் இயந்திரத்தை, 'பல
தொழிலுக்கும் தகுதியானவர்’ என்று தேர்ந்தெடுப்பதுதான், அந்த ஒன்பது
அறிவாற்றல்களில் ஞாபகசக்தியை மட்டும் சமூகம் உசத்திப் பிடிக்கக் காரணம்!
எப்படியோ முக்கி முனகிப் படித்து, வேலை தேடி, உழைத்து, ஓடி, ஓயும்
சமயத்தில் மீண்டும் அந்த 'ஸ்கூல் மனப்பாடப் பிரச்னை’ தலைதூக்கினால், சின்ன
வயதில் ஸ்கேலில் வாங்கிய அடி, இப்போது மனதில் விழத் தொடங்கும். அந்த
மறதியைத்தான் 'அல்சீமர்’ என்கிறது மருத்துவ மொழி; 'வயசாச்சா... அவருக்கு
ஓர்மையே இல்லை’ என்கிறது உள்ளூர் மொழி. 'கார் சாவியை எங்க வெச்சேன்?’,
'காதலியிடம் புரபோஸ் பண்ண தேதியை எப்படி மறந்து தொலைச்சேன்?’ அவன் முகம்
ஞாபகம் இருக்கு... ஆனா, பேரு மறந்துபோச்சே’ எனும் முக்கல் முனகல்கள்,
ஆரம்பகட்ட மறதி நோய் (அல்சீமர்) என்கிறது நவீன மருத்துவம். இப்படி, கொஞ்ச
மாக மறக்கத் தொடங்கி, கடைசியாக எங்கு இருக்கிறோம், என்ன செய்ய வந்தோம்...
என்றெல்லாம் மறக்க ஆரம்பிப்பதுதான் அல்சீமர் நோயின் உச்சகட்ட அட்டகாசம்!
அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்த மறதி பற்றிய படமான 'பிளாக்’
பார்த்தவர்களுக்கு, இந்த அல்சீமர் நோயின் பிரச்னை கொஞ்சம்
புரிந்திருக்கும். 2001-2011-ம் ஆண்டுகள் வரை, 1,000 முதியவர்களைத்
தொடர்ந்து ஆராய்ந்த ஆய்வு ஒன்று, 'முன் எப்போதும் இல்லாதபடி இந்தியாவில்
இந்தப் பிரச்னை அதிகரித்துள்ளது. அதே சமயம் ஐரோப்பா, அமெரிக்கா அளவுக்கு
நாம் அதிக அளவில் அல்சீமருக்குள் சிக்கவில்லை. என்றாலும், இங்கே இருக்கும்
வயோதிகத்தின் சமூகப் பிரச்னைகள் பலவற்றை கருத்தில்கொண்டால், எதிர்காலத்தில்
அல்சீமர் நிச்சயம் மிகப் பெரிய சவால்!’ என எச்சரிக்கிறது.
ஆம்... இது நிதர்சன உண்மை! வழக்கமாக இல்லாமல், இந்த நோய் ஏன் இங்கு கொஞ்சம்
குறைவு எனப் பார்த்தால், 'APO4’ எனும் மரபணு சங்கதி என்கிறது ஆய்வு
முடிவுகள். வளர்ந்த நாட்டினரைவிட 'APO4’ மரபணு சங்கதி நம்மவர்களுக்குக்
குறைவாக இருந்து, பாதுகாப்பு அளிக்கிறது என்று மரபணு விஞ்ஞானிகள் பலர்
கூறுகிறார்கள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சூரியனை வணங்கும் சாக்கில்
உடம்பின் உள்ளிருக்கும் நாளமில்லா சுரப்பிகளைத் தட்டிக்கொடுத்து வேலை
வாங்கும் யோகாசனப் பழக்கம் போன்றவை அதற்குக் காரணமாக இருக்கலாம்
என்கிறார்கள். சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு முன்னரே 'மனசுதாம்லே முக்கியம்; அது
சரியா இருந்துச்சுன்னா, ஒரு மந்திர மாங்காயும் வேண்டாம்’ என நியூரோ
பிசியாலஜியை வேறு மொழியில் சொன்ன திருமூலரின் கூற்றை, சில பல
நூற்றாண்டுகளாவது பின்பற்றிய வாழ்வியல்தான் இந்தப் பாதுகாப்புக்குக்
காரணமாக இருக்கலாம். ஆனால், அதெல்லாம் 'ஆஹா... மெள்ள நட... மெள்ள நட...
மேனி என்னாகும்?’ காலத்தில். இந்த 'எவன்டி உன்னைப் பெத்தான் பெத்தான்...’
யுகத்தில் நிலைமை அப்படியா இருக்கிறது?
'ஏம்ப்பா... அப்பா சாப்பிட்டாங்களா?’ எனக் கேட்க பெரும்பாலும் வீட்டில்
எவரும் இல்லை. 'அவரு ஒருத்தருக்காக மூணு பெட்ரூம் உள்ள ஃப்ளாட்டுக்குப் போக
வேண்டியிருக்கு. அவரு எப்போ 'போவாரோ’ தெரியலை?’ என்ற 'எதிர்பார்ப்பு’,
தீப்பெட்டிக் குடியிருப்பு நகர வாழ்க்கையில் இப்போது அதிகம். 'நீங்க அந்தக்
கல்யாணத்துக்குப் போயி அப்படி என்ன ஆகப்போகுது? உங்களைக் கவனிக்கவே தனியா
ஒரு ஆள் வேணும். நாங்க மட்டும் போயிட்டு வந்துடுறோம்’ என்ற 'அக்கறை’யான
உதாசீனமும் சகஜம். 'அதெல்லாம் டிக்கெட் புக் பண்ணும்போதே, 'கீழ் பர்த்
வேணும்’னு கேட்டிருக்கணும். இப்போ வந்து ஏற முடியாதுனா எப்படி?
எனக்கும்தான் லோ பேக் பெயின்’ எனும் சக முதிய பயணிகளைக் கண்டிக்கும்
சுயநலம், 'யோவ் பெருசு... நீயெல்லாம் எதுக்குய்யா தியேட்டருக்கு வர்ற?
அதுதான் திருட்டு டி.வி.டி விக்கிறாங்களே. இங்கே கூட்டத்துல வந்து
எங்கேயாவது விழுந்து வைக்கிறதுக்கா? போய் ஓரமா நில்லுய்யா...’ என்ற
தீண்டாமை, 'அதுக்குத்தாம்பா, இந்தப் பிரச்னை எல்லாம் இல்லாத ஒரு ஹோமுக்கு
உங்களைக் கூட்டியாந்திருக்கேன். வருஷத்துக்கு ஒருக்கா திருப்பதிக்கு வந்து
பெருமாளைச் சேவிச்சிட்டு, தி.நகர்ல ஜட்டி, பனியன் எல்லாம் வாங்கிட்டு
அப்படியே உங்களையும் பார்த்துட்டுப் போயிடுவேன்’ எனும் 'க்ரீன் கார்டு
ஹோல்டர்’ மகனின் கரிசனம்... எனப் பல சங்கடங்களைத் தினமும்
கடக்கவேண்டியுள்ளது இப்போதைய வயோதிகம்!
இவை
அத்தனையையும் மூளையின் கார்டெக்ஸ் மடிப்புகளுக்குள் வைத்துப்
புழுங்கும்போது, இத்தனை காலம் குறைச்சலா இருந்த 'APO4’ மரபணு,
எபிஜெனிடிக்ஸ் விநோத விதிகளின்படி விக்கி, வீங்கி, அல்சீமர் நோய்,
கட்டுக்கடங்காமல் போகக்கூடிய சாத்தியங்கள் அதிகம். 'இருக்கிற வியாதியைப்
பார்க்கவே நேரம் இல்லை. இதைப் பத்தி இப்போ என்ன அக்கறை வாழுதாம்?’ என
அவசரப்பட வேண்டாம்.
2020-ல் உலக மக்கள்தொகையில் 14.2 சதவிகித 'வயோதிகர்கள்’ இந்தியாவில்தான்
இருப்பார்கள் என்கிறது ஒரு கணக்கு. அதேபோல் பென்ஷன் பேப்பர் வந்த பின்தான்
மறதி நோய் வரும் எனக் கிடையாது. முன் நெற்றி, மீசைப் பகுதிக்கு டை அடித்து,
செல்ல தொப்பையை அமுக்கி, திணித்து ஜீன்ஸ் போட்டுக் கொள்ளும் 40-களிலும்
இந்த மறதி நோய் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
'அவ்வளவா பிரச்னை இல்லை’ என்று நம்மை எப்போதோ யோசிக்கவைத்த மறதி, 'அடடா...
மறந்துட்டேனே’ என நாம் சுதாரிக்கும் மறதி, மற்றவர் 'அதுக்குள்ள
மறந்துட்டீங்களா?’ என அங்கலாய்க்கும் மறதி, 'சார்... அவரு மறதி கேஸ்.
எழுதிக் குடுத்துடுங்க’ என அடுத்தவர் எச்சரிக்கும் மறதி, 'எதுக்குக்
கிளம்பி வந்தேன்?’ என யோசித்து நடு வழியில் திணறும் மறதி, 'நான் யார், என்ன
செய்ய வேண்டும்?’ என்பதே தெரியாதுபோகும் மறதி, ஒட்டுமொத்தமாகச் செயல்
இழந்து முடங்கும் மறதி... என அல்சீமர் மறதி நோயை ஏழு படிநிலைகளாகப்
பார்க்கிறது நவீன மருத்துவம்.
சற்றே ஆழ்ந்து யோசித்தால், அவற்றில் இரண்டு, மூன்றை நம்மில் பலர்
அனுபவித்திருப்போம். ஆனால், சாதாரண வயோதிகத்துக்கும், இந்த மறதி நோய்க்கும்
நிறையவே வேறுபாடுகள் உள்ளன. மூளையில் புதிதாக முளைக்கும் அமைலாய்டு
பீட்டாவை இதற்கு முக்கியமான தடயமாகப் பார்க்கிறார்கள். சர்க்கரை,
ரத்தக்கொதிப்பு, அதிக ரத்தக்கொதிப்பு போன்ற தொற்றா வாழ்வியல் நோய்கள்தான்,
இந்த மறதி நோயைத் திரிகிள்ளித் தூண்டும் என உலகச் சுகாதார நிறுவனம் பலமாக
எச்சரிக்கிறது.
ஓர் ஆச்சர்யமான விஷயம், Mediterranean diet சாப்பிட்டால் இந்த மறதி நோய்
வருகை குறையும் என்பது! 'இது என்னப்பா புது கம்பெனி உணவு?’ எனப் பதற
வேண்டாம். மத்தியத் தரைக்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் வழக்கமாக இருந்த
பாரம்பரிய உணவுகளை 'Mediterranean diet ’ என்கிறார்கள். இந்த வகை உணவுகள்,
அதிக ஆன்ட்டி ஆக்சிடென்ட்களையும், அழற்சியைக் குறைக்கும்
(Anti-inflammatory) தன்மையையும் கொண்டவை என, அமெரிக்கா, இங்கிலாந்து
விஞ்ஞானிகளால், ஹார்வர்டு போன்ற பல்கலைக்கழகங்களில் ஆராயப்பட்டு
நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் உலகச் சுகாதார நிறுவனப் பட்டியலில்
அவற்றுக்குத் தனி இடம் கிடைத்திருக்கிறது.
அந்த மத்தியத் தரைக்கடல் சங்கதிகளுக்கு, நம் ஊர் மிளகு, சீரகம், வெந்தயம்,
பூண்டு, பெரிய நெல்லிக்காய், முருங்கை, மணத்தக்காளி கீரை, கம்பு, கேழ்வரகு
முதலான சிறுதானியங்களும், பாரம்பரிய இந்திய உணவுகளும் கொஞ்ச மும் சளைத்தவை
அல்ல. இவை எல்லாமே அதைவிட அதிக ஆன்ட்டி ஆக்சிடெண்ட்களையும், அழற்சியைக்
குறைக்கும் தன்மையையும் கொண்டவைதான். கூடுதலாக, மருத்துவக் குணம்கொண்ட பல
தாவர நுண்சத்துக்களையும் கொண்டது.
என்ன...
படிக்கப்போன நம்ம ஊர் அண்ணன்மார்கள், கம்பங்கூழையும் சோளப்
பணியாரத்தையும் பற்றி யோசிக்காமல், நாம் ஏன் கத்திரிக்காயின் மரபணுவை
மாற்றி அதில் சிக்கன் 65 சுவை கொண்டுவந்து மக்களைக் குஷிப்படுத்தி, அதற்கு
காப்புரிமை பெற்று, நாம் மட்டுமே நிறைய சம்பாதித்து, ஜாகுவார் காரில்
உல்லாசமாகப் போகக் கூடாது என தீவிரமாகச் சிந்தித்து ஆராய்ச்சிக் கட்டுரைகள்
எழுதுகிறார்கள்.
எதிர்கால மறதி சிக்கலில் இருந்து தப்பிக்க, நிகழ்காலத் தேவை, அப்போது இருந்த அக்கறை மட்டுமே.
நம் பிள்ளைகளுக்கு, நெருக்கடியிலோ அல்லது சுயநலத்திலோ உதாசீனப்படுத்தும்
உள்ளத்தை, 'எனக்கான ஸ்பேஸ் இது’ எனும் அலங்கார வார்த்தை மூலம் சுயநலமாக
வாழக் கற்றுக்கொடுக்கிறோம். அப்படி நாம் கற்றுக்கொடுக்கும் அவர்களது
'எனக்கான ஸ்பேஸ்’ வாழ்வியலில், நமக்கான 'ஸ்பேஸ்’ நிச்சயம் இருக்காது. நடைப்
பயிற்சி, மூச்சுப் பயிற்சி, அன்றாடம் ஆரோக்கியமான உணவு என வாழ்க்கையைத்
திட்டமிடத் தவறினால், பெற்ற பிள்ளை, மாமன், மச்சான் என அனைவரையும்
மறந்துபோகும் மறதி நோய்கொண்ட வயோதிகம் வரும் சாத்தியம், மிக அதிகம் என்பதை
ஞாபகத்தில் கொள்வோம்!
- நலம் பரவும்...
ஞாபகசக்தி அதிகரிக்க...
வல்லாரை
கீரையைச் சட்னியாக அரைத்துச் சாப்பிடலாம். அதிலுள்ள
Asiaticosides, மூளைச் சோர்வு தராமல் அறிவைத் துலங்கவைக்கும் என்று நவீன
அறிவியல் நம் பாரம்பரியப் புரிதலுக்குச் சான்று அளிக்கிறது. கொத்துமல்லி
சட்னி அரைப்பதுபோல் கொஞ்சம் மிளகாய் வற்றல், கொஞ்சமாக புளியைச் சேர்த்து
சட்னியாக அரைத்து தோசைக்குச் சாப்பிடலாம். வல்லாரை தோசை, வல்லாரை சூப்
இன்றைக்கு பாரம்பரிய உணவகங்களில் பிரபல உணவும்கூட.
'பிரமி’
- பாரம்பரிய மருத்துவத்தின் பிரபலமான ஞாபகசக்தி மருந்து. மறதியை
நீக்கவும், ஞாபகசக்தியை அதிகரிக்கவும் இதில் உள்ள Baccosides பயன் அளிப்பதை
பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது, நீரோடைப் பக்கம் நிற்பதால்
'நீர்ப் பிரமி’ என்றும் அழைக்கப்படும்.
சித்த
மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படும் வாலுளுவை அரிசி எனும் மூலிகையில்
இருந்து எடுக்கப்படும் எண்ணெயில், மறதிக்கு மருந்து எடுக்கும் முயற்சி
இன்றும் ஆய்வில் உள்ளது. நீதி வழங்கும் முன் அலசி ஆராய(!) அந்தக் கால
நீதிபதிகள் இதில் இரண்டு அரிசி எடுத்து வாயில் போட்டுக்கொள்வார்களாம்.
DHA -
ஞாபகமறதி நீக்க பயன்படும் சத்து மீனில் இருந்தும், ஃபிளாக்ஸ் விதையில்
இருந்தும் இதை உணவில் அன்றாடம் பெற்றுக்கொள்ள முடியும்.
வல்லாரையோ,
பிரமியோ எதுவாக இருந்தாலும் நாம் எடுக்கும் முயற்சியில்தான் பயன்
அளிக்குமே தவிர, சுவர் ஏறிக் குதித்து படம் பார்த்துவிட்டு குப்புறப்
படுத்துத் தூங்கும் பிள்ளைக்கு, சந்தனக் காப்பு அரைத்துக்
குளிப்பாட்டினாலும் எதுவும் நினைவில் நிற்காது!
யோகா அளிக்கும் ஆஹா மெமரி!
தினசரி
20 முதல் 40 நிமிடங்கள் யோகாசனப் பயிற்சிகள் மற்றும் பிராணாயாமப்
பயிற்சிகள், முதியோருக்கு மறதியைப் போக்கவும், இளைஞர்களுக்கு ஞாபகசக்தியைப்
பெருக்கவும் பெரும் அளவில் பயன்படும் என்று பல ஆய்வுகள்
உறுதிப்படுத்தியுள்ளன. யோகாசனப் பயிற்சியும், பிராணாயாமப் பயிற்சியும்,
வார்த்தைகளைத் தேடும் மறதியை, உருவ மறதியை, கவனச் சிதறலால் ஏற்படும்
மறதியை, வார்த்தைகளைச் சரளமாக உச்சரிப்பதை நிர்வகிக்கும் ஆற்றல் குறைவு,
பணியில் மந்தம் போன்றவற்றைத் தீர்ப்பதாக Trail Making Test மூலம் ஆய்வுகள்
மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள். கூகுளிலோ, பழைய
புத்தகக் கடையில் தற்செயலாகப் பார்த்த புத்தகத்திலோ கற்றுக்கொள்ளாமல்,
யோகாசனப் பயிற்சியில் தேர்ந்த ஆசிரியரிடம் இதைக் கற்றுக்கொள்வதுதான்
புத்திசாலித்தனம்!
No comments:
Post a Comment